ஒரு கோலமயிலின் குடியிருப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 15, 2018
பார்வையிட்டோர்: 11,263 
 

ஒரு இலட்சிய நாயகியின் உண்மைச் சம்பவம்

சுமார் 40 ஆண்டுகள் கழிந்து விட்டன! எனது இளமைப் பருவம் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். வாழ்க்கையின் கொடூர சோதனைகளை அலட்சியமாக சந்தித்து, கண்ணுக்குப் புலப்படாத நாமே கிழித்துக்கொண்ட வருமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்தும், சற்றும் சலிக்காமல், கவலையின்றி கழிந்த அந்தக் காலம், இப்பொழுது நினைக்கையில் பகீர் என்கிறது முதுமை எய்திக்கொண்டிருக்கும் என் உள்ளம். மிகச் சுருக்கமாக சொல்வதென்றால், காலம் செய்த கோலத்தில் வேலையிழந்த அருமைத் தந்தையார், அனைத்து சுக துக்கங்களையும் சாந்தியுடன் சந்தித்து, சகித்துக்கொண்டிருந்த அம்மையார், என்ன நடக்கிறது என்றே அறியாத இளஞ்செல்வங்களான உடன் பிறப்புக்கள், அன்னிய நகரம், தனித்து நிற்கும் குடும்பத்திற்கு நம்மவர் என்று கூறிக்கொள்ள யாருமே இருந்ததில்லை. பிழைக்க வந்த இடத்தில் வேலையிழந்த தந்தையார் வேலை தேட, எனது பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. “காலத்தை ஏசாதே மகனே, அது சரியில்லை, இறைவனால் பிறப்பிக்கப்பட்ட காலம் என்றைக்கும் கெட்டதாகாது. அவரவர் செய்கைகளினால் அதன் பலனும் மாறுபடும். தீங்கு நமக்கு நாமே தேடிக்கொள்கிறோம். சிலருக்கு நல்லது நடக்க வில்லை என்றால், பலருக்கு அது நன்மை பயக்கிறது பார். காரணமும் விளைவும் ஒரு விதிமுறை என்றால், தலைவிதி அதற்கு ஒரு விதிவிலக்கு.” இது என் தந்தையின் அறிவுரை.

உருண்டு புரண்டு பல இன்னல்களை கண் கலங்காமல் சந்தித்து நானும் ஒரு நிறுவனத்தில் வேலையைத் தேடிக்கொண்டேன். அன்று ஒரு நாளுக்கு ஒரே ருபாய்தான் கொடுக்கப்பட்டது. தொழிற்பேட்டைக்கு வெளியில் இருந்த ஒரு கேன்டினில் ஒரு பருத்த தோசை பத்தே பைசாவுக்கு கிடைத்தது. மாலை வேலை முடிந்து ஓவர் டைம் வேலையை தொடங்கும் முன்னர் அந்த கேன்டினில் ஒரிரு தோசைகளை உண்பதுண்டு. ஓவர் டைம் வேலை செய்ய வயிற்றை ரீசார்ஜ் செய்வது போல. இளம் பருவத்தில் சில மாதங்கள் மாலை டிபன் இல்லாமல் கூனிக் குன்றி நிற்கும் நிலையை அன்றும் இன்றும் உணர்ந்து கொண்டேயிருக்கிறேன். தந்தையும் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அமர்ந்தார். தடம் புரள தத்தளித்துக்கொண்டிருந்த வாழ்க்கையின் இரயில் பெட்டி, சற்று நிதானம் கண்டது. பிரயாணித்துக்கொண்டிருந்த என் குடும்பத்திற்கு சற்று மூச்சு வாங்க வாய்ப்பு கிட்டயதுடன், நிம்மதியாக பகலிலும் துயில் கொள்ள என் அன்னைக்கு நேரமும் கிடைத்தது. கவலையே அறியாதவனாக இருக்க நான் பழகிக்கொண்டிருந்தேன். நித்தமும் ஒரு புன்னகை தவழ்ந்த வண்ணமே இருக்கும் என் சுபாவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அரவணைத்துக்கொண்ட இன்னல்கள் பல இருந்தும், இங்கே அவசியமானவற்றை மட்டும் எழுதி, நான் கண்ட ஒரு கோலமயிலின் குடியிருப்பைப் பற்றி விவரிக்கப் போகிறேன்.

பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்ட எனக்கு படிக்க மிகவும் ஆசை. நிறுவன வேலையின் காரணத்தால் பள்ளிக்கூடத்திற்கு செல்ல இயலவில்லை. மாலை நேர பள்ளிகளே அந்நகரத்தில் அப்பொழுது கிடையாது. மெட்ரிக் பரிட்சைக்கு தபால் மூலம் டியூஷன் மேற்கொண்டேன். மதுரையில் ஒரு ஐயர் நடத்தி வந்த இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து அவர் தபால் மூலம் பாடங்களை அனுப்பி வைத்தார். புத்தகங்களே இல்லாமல், வெறும் நோட்ஸ் படித்து எந்த டெஸ்டும் இல்லாமல் ஒரே ஒரு இறுதி பரிட்சை, பாஸ் செய்தாக வேண்டும். பகல் வேலை மற்றும் தினமும் நான்கு மணி நேர ஓவர் டைம் வேலை செய்து கொண்டு படித்து ஒரே ஒரு இறுதி பரிட்சையில் தேற நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு அளவே இல்லை. என்னுடன் பரிட்சை எழுதிய மாணவ மாணவிகள் பலர், வயதானவர், பரிட்சையில் தேராதவர், அரசாங்க வேலையில் இருப்பவர்கள் புரொமோஷன் பெற மெட்ரிக் பாஸ் செய்தாகவேண்டும் என்ற கண்டிஷன் இருந்ததால், பெரியவர் பலரும் எழுதினர். பரிட்சைக்கு வந்தவர்களில் டவுனிலிருந்தும் பலர் வந்திருந்தனர். சிலருக்கு மற்றவருடன் பழக்கம் ஏற்பட்டு, பாட நோட்ஸ்களை பரிமாரிக்கொண்டனர். சிலர் ஆங்கில இலக்கண விவரங்கள் கேட்க, நான் இரு மாணவிகளுக்கு கணக்கும் ஆங்கிலமும் சொல்லிக் கொடுத்தேன். பழகிய 5 நாட்களில் நண்பர்களாகி விட்டோம். அதில் ஒருவர் அனுராதா என்றும், மற்றவர் மல்லிகா என்றும் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டனர். பரிட்சைகள் முடிந்து கடைசி நாள் ஹோட்டலில் காப்பி அருந்தி, விலாசங்களையும் ரெஜிஸ்டிரேஷன் நம்பர்களையும் பரிமாரிக்கொண்டோம். அனுராதா ஒல்லியான அழகான உடல் கொண்டவராகவும், சுருட்டு முடியுடனும் தென்பட்டார். நல்ல உயரம். சுத்தமான தமிழ் பேசுபவராகவும் இருந்தார். பட்டர் குடும்பத்தை சேர்ந்தவரானாலும், உயர்ந்த எண்ணங்களைக் கொண்டவராக இருந்தார். அவருக்கு சற்று ஹிந்தியும் தெரிந்திருந்தது. ஏனெனில் அனுராதாவுடைய தாயார், ஒரு ஹிந்தி டீச்சராக அப்பொழுது ஏதொ ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக வேலை இழந்து, வீட்டிலேயே ஹிந்தி படிக்க விரும்பி வந்த சிலருக்கு ஹிந்தி கற்றுக்கொடுத்து வந்தார். எனக்கு ஹிந்தி அத்துபடி, ஒரு சில வாக்கியங்கள் பேசியவுடன், அதை அனுராத தனது அம்மாவிடம் கூற அவர் என்னை வீட்டிற்கு அழைத்து வரும்படி அனுராதவிடம் சொல்லியனுப்பியிருந்தார். ஆகவே அவர் தனது விலாசம் என்னிடம் கொடுத்து அழைப்பும் விடுத்தார். மல்லிகா மிக அழகான, உருண்ட முகம் கொண்டவர், புன்னகை புரியும் முக பாவனை, மை தீட்டிய கண்கள் அளந்து வைத்தார்போல பருவச் சிமிழ்கள், நீண்ட கருத்த கூந்தல், நெத்தியில் ஒரு ஸ்டைலான பொட்டு, கண்டவரை காமம் கொள்ளும் கச்சிதமான உடல் கட்டு, ஆனால் சேலை முந்தானியை தோள்களிலிருந்து நகர்த்தியதே இல்ல. மிகவும் அடக்கத்துடன் காட்சியளித்தார். அவர் தனது விலாசத்தை என்னிடமோ அனுராதவிடமோ கொடுக்கவுமில்லை, நமது விலாசங்களை நம்மிடம் கேட்கவுமில்லை. ஏதோ, அதில் அவருக்கு விருப்பமில்லாதவர் போலவே இருந்து விட்டார். நாமும் அதை ஒரு பெரிய விஷயமாக எண்ணவில்லை.

ரிசல்ட் வந்தது, என் நம்பரைக் காணவில்லை. கவலையையே அறியாத எனக்கு வயிறு கலைத்தது. மற்ற மாணவிகளின் நம்பரும் இல்லை. சரி அடுத்த அக்டோபரில் பரிட்சை எழுதலாம் என்று முகம் சுளித்தேன். எனது படிப்பில் அக்கரை கொண்டு எனக்கு பல வகையில் உதவிய எனது ஏழை நண்பர் மாலையில் என்னை சிரித்த முகத்துடன் சந்தித்தார். எனது ரிசல்ட் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் வந்தவர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் சிறிது நேரம் பேசாமல் இருந்து, இருவரும் மீண்டும் பேப்பர் பார்க்க கிளம்பினோம், லைப்ரேரியை நோக்கி, ரிசல்ட் கண்டவுடன் அவர் முகம் மீண்டும் மலர்ந்தது. “நீங்கள் சரியாக கவனிக்கவில்லை, அவசரத்தில் மெட்ராஸ் யூனிவர்சிடி ரிசல்ட்தான் பார்த்திருக்கிறீர்கள். நீங்கள் எழுதியது மதுரை யூனிவர்சிடியின் பரிட்சை”, என்றதும் நான் மீண்டும் புத்துயிர் பெற்றேன். சில நாட்களில் மதுரை யூனிவர்சிடியின் ரிசல்ட் வந்தது. அதில் எனது இலக்கம் இருப்பதைக்கண்டு நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒரு நொடியில் பறந்துவிட்ட இன்பத்தை அனுபவித்தேன். சகா மாணவிகளில் அனுராதா தேரவில்லை. மல்லிகா தேர்ச்சி பெற்றிருந்தார்.

அடுத்து வந்தது, என் நண்பரால் எனக்கு அறிமுகம் செய்யப்பட்ட சுருக்கெழுத்து பாடம். அவர் பலமுறை அதைப்பற்றிக் கூறியும் நான் சிறிதும் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சில சுருக்கெழுத்துக்களை எழுதி அதை ஆங்கிலத்திலும் எழுதிக்காட்டினார். உருது மொழி எழுதப்படிக்க தெரிந்த எனக்கு அது சுலபமாக தோன்றியது. ஆகவே இருவரும் சேர்ந்து இன்ஸ்டிடியூட்டில் சேராமலேயே சுருக்கெழுத்து என்னும் ஷார்ட் ஹேண்ட் கற்றுக்கொண்டிருந்தோம். வேலையில் அமர்ந்து 3 வருடங்களாகிவிட்டதனால், சம்பளம் சற்று கூடி கிடைக்கவே, ஓவர் டைம் செய்வதை சற்று குறைத்து, சுருக்கெழுத்து பரிட்சைக்கு அமரவும் தட்டெழுத்து கற்றுக்கொள்ளவும் ஒரு இன்ஸ்டிடியூட்டை தேடி நான் மட்டும் சேர்ந்து கொண்டேன். எனது நண்பர் ஏதோ ஒரு சிறு வேலையில் அமர்ந்து விட்டபடியால், அவரால் சேர இயலவில்லை.

5 மணிக்கு வேலை முடிந்து, 6 மணி முதல் 8 மணி வரை தினமும் 2 மணி நேரம் மாலையில் சைக்கிளில் டவுனுக்கு சென்று விடுவேன், படித்து திரும்பும் வரை மணி 9 ஆகி விடும். டியூட்டர், எனது எழுத்துக்களை கவனித்து “….3 வருடம் பிராக்டீஸ் செய்தவர் போலல்லவா இலாவகமாக எழுதுகிறீர்கள், நீங்களோ மூன்று மாதமும் ஆகவில்லை என்கிறீர்களே…” என அதிசயத்துப்போனார். அவருடைய பாராட்டுக்கள் எனது வகுப்பில் படித்து வந்த மற்ற மாணவர்களையும் கவர்ந்தது, பல மாணவிகள் உட்பட. நாட்கள் கடந்தன. மாணவர்களின் வெறும் பழக்கங்கள் பல உருவங்களைக் கொள்ள ஆரம்பித்தன. என்னைப்போன்று குறிக்கோளுடன் உள்ளவர் தானுண்டு தன் பாடமுண்டு என படித்து வந்தாலும், சில சமயங்களில் உள்ளத்தில் சலனங்கள் உண்டாகாமலில்லை. சிலர் டவுனில் ஒரே தெருவைச் சேர்ந்தவர்களாக இருந்ததினால், பிரச்சினையின்றி பழகி வந்தனர். பாடங்கள் குறைந்து அரட்டைகள் அதிகமாயின. ஒருவரை மற்றொவர் நோக்கும் சம்பவங்கள் கூடிவிட்டன. கை கால் தவறி பட்டுவிட்டால், சட்டை செய்யும் காலம் மலையேறிவிட்டது. உணர்ச்சிவசப்பட்டவர்கள், வேண்டுமென்றே இடிபாடுகளில் சிக்கி, ஒருதருக்கொருத்தர் தொட்டுக்கொண்டனர், இதமாக. மேஜையைச் சுற்றி அமர்ந்திருக்கும் மாணவ மாணவிகள் பலர் தமக்கு பிடித்தவரின் கால் களுடன் தமது கால்களை கோர்த்துக்கொள்ளத் தவறவில்லை.

டியூட்டர் வராத நாட்களிலும், அவர் தாமதமானாலும், சங்கர் என்ற ஒரு சீனியர் நண்பர் பாடத்தை நடத்துவார். என் செயல்திறன் அவரை மிகவும் கவர்ந்தது. அத்துடன் ஆங்கிலம் திக்காமல் பேசுவதும் எனக்கு ஒரு பிளஸ் பாய்ன்ட். பள்ளிக்குப் போகாமலேயே மெட்ரிக் பாஸ் செய்த எனக்கு ஆங்கிலம் எப்படி தெரியும் என்ற விஷயம் எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. தானும் ஆங்கிலம் பேசி என்னுடன் பழக விருப்பப்பட்டார். அவருக்கும் ஸ்போகன் இங்லிஷ் பாய்ன்ட்ஸ் கள் குறித்துக் கொடுத்து வந்தேன். நாட்கள் கழிந்தன. ஒரு நாள் ஒரு மாணவி புதிதாக சேர்ந்திருக்கிறார். அவர் வந்த முதல் நாள் நான் வகுப்பிற்கு செல்லவில்லை. மறு நாள் சென்ற பொழுது சங்கர் நாற்காலியில் அமர்ந்திருக்க அவருக்கு எதிரே உள்ள மேஜைக்கு இப்புறம் ஒரு மாணவி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். நான் வகுப்பில் நுழைந்தவுடன் என்னை வரவேற்றி அப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினார், சங்கர். “நான் நேற்று கூறினேனே, அவர் தான் இவர்” என்றார். அவர் என்னைப் பார்த்ததும், ஓஹ், இவர் எனக்கு ஏற்கனவே தெரியுமே என்று கூறி புன்னகைத்து, பாஸ் செய்ததற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார் என்னைப் பார்த்து . இது யாராக இருக்கும் என்று குழப்பத்துடன், குனிந்த தலையுடன் இருந்த நான் ஏறெடுத்துப்பார்த்தேன். என் கண்களில் ஒரு மினுப்பு, முத்துப்போன்று வரிசையாக கோர்க்கப்பட்டிருந்த அவருடைய அழகான பற்களை எண்ணியபடி நானும் “மல்லிகாவா ஹெலோ? சேம் டு யூ” என்றேன். சங்கருக்கோ குழப்பம். அது எப்படி! என்றார். மல்லிகா நமது முதல் சந்திப்பைப் பற்றி சங்கரிடம் கூற, மூவரும் சற்று அமர்ந்து பேசி மற்றவர் வந்த பின்னர் வகுப்பு ஆரம்பமாகியது.

நாட்கள் ஓடின. நமது சுருக்கெழுத்து வேகமும் அதிகமாயிற்று. ஸ்போகன் ஆங்கிலமும் வளர்ச்சியடைந்தது. வகுப்பு வரை இருந்த நமது நட்பு இப்பொழுது வெளியிலேயும் தொடர்ந்தது. டீ, காப்பி, சிற்றுண்டி உண்ணுவது, பாடங்கள், சினிமா படங்கள், அரசியல் என்று கருத்துக் கணிப்பும் இருந்தது. நாம் இருவரும் மல்லிகாவுடன் கண்ணியமாக பழகி வந்தமைக்கு அவர் பெருமைப்பட்டார். அவர் மீது நாம் கொண்ட அன்பு, அக்கறைக்கு அவர் மிகவும் மகிழ்ந்து காணப்பட்டார். “எனக்கு ஆண்கள் மீதிருந்த வெறுப்பையும் சந்தேகத்தையும் தீர்த்து என் அபிப்ராயத்தை பொய்ப்பிக்கும் விதமாக இருக்கும் உங்கள் நடத்தை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது”, என்று கூறினார். ஒரு நாள் அவர் இன்ஸ்டிடியூட்டிற்கு வரவில்லை. மனதிற்கு கஷ்டமாக இருந்தது. பாடத்தில் கவனம் குறைந்தது. எழுதும் பேப்பரிலும், டைப் செய்த பேப்பரிலும் அவர் புன்னகைத்த முகமே தெரிந்தது. என்ன இது, எனக்கு என்னவாகி விட்டது? நான் கொண்ட இலட்சியத்திற்கு கேடு விளைவிக்கும் நினைவுகளல்லவா இவை? அவருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கலாம் ஒரு நாள் வரவில்லையெனில் மறு நாள் வருவார்தானே? என்று பலவகையில் என்னை நானே தேற்றிக்கொண்டேன். சங்கரும் மௌனமாகவே இருந்தார். மல்லிகாவைப்பற்றி அவர் ஒன்றும் சொன்னதுமில்லை, விசாரித்ததுமில்லை. ஆனால், மறு நாளும் மல்லிகா வரவில்ல, ஒரு வாரம் ஆகியும் அவர் வகுப்பிற்கு வரவில்லை. எனக்கு வயிற்றைக் கலைத்தது. இந்த நெஞ்சம் இருக்கிறதே, அது மறக்க மறுத்து விட்டது. ஒரு இரவு எனக்கு தூக்கமே வரவில்லை. எப்படியும் இன்று வருவார், அவரைக்காண விலாசமும் இல்லையே, எப்படி போவது, யாரிடம் கேட்டால் அவர் விலாசம் கிடைக்கும் என பல கேள்விகள் தத்தளிக்கும் என் மனதில் எழுந்தன. மறு நாளும் அவரைக்கணவில்லை. உற்சாகத்துடன், சங்கரிடம் அவரைப்பற்றி கேட்டேன். தெரியாது என்றார். ஆனால், இது போன்று அவர், வாரக்கணக்கில் வராமலிருப்பது சகஜம் என்றார். அவருடை விலாசமும் தெரியும் என்றார். பின்னர் ஏன் நீங்கள் விசாரிக்கவில்லை என்று கேட்டேன். எப்பொழுதும் அவருடய தாயாருக்கு உடல் நலம் குன்றி விடுவதாக கூறுவார். ஆனால் முழு விவரமும் எனக்குத் தெரியும் என்றார். அவர் பேச்சு என் குழப்பத்தை அதிகரித்தது. அதைக்கண்ட சங்கர், நாளை சென்று விசாரித்து வருகிறேன் என்றார். அந்த மறு நாள் வருவதற்குள், பல்லாயிரம் நாட்கள் கடப்பது போன்று உணர்ந்தேன். அவசரமாக வேலை முடித்துக்கொண்டு இன்ஸ்டிடியூட்டிற்கு கிளம்பினேன். சங்கர் கைகுலுக்கி என்னை வரவேற்றார். அவர் முகத்தில் புன்னகை இருந்தது… என் எதிர்ப்பார்ப்பை புரிந்து கொண்டவர் “நான் இன்று காலை மல்லிகாவின் வீட்டிற்கு சென்றேன். அம்மாவுக்கு குணமாகிவிட்டது, நாளை நிச்சயம் வருகிறேன் என்று கூறினார். உங்களைப்பற்றியும் விசாரித்தார்” என்றார். ஆயிரம் மைல் ஓடி வந்து படபடத்த இதயத்தைப்போன்று தோன்றிய எனக்கு ஒரே நிமிடத்தில் ஆறுதல் கிடைத்தது. “என்ன ஆச்சு அவர் அம்மாவுக்கு?” என்று வினாவிவேன். “அதை உங்களிடம் நாளை அவரே சொல்வதாகக் கூறியுள்ளார். “உங்களுக்குத் தெரியாதா சங்கர் சர்”, என்றேன். “தெரியும், ஆனால் அவரே சொல்வதாக சொன்ன பின்னர் நான் கூறுவது சரியில்லை” என்றார். இது என்னடா மர்மமாக உள்ளது? என்று நினைத்துக்கொண்டு நமது பாடத்தை கவனித்தோம். பாடம் முடிந்த பின்னர், சங்கரிடம் நான் நைசாக பேசி, என்னையும் நாளை மல்லிகாவின் வீட்டிற்கு அழைத்து போகும் படி கேட்டுக்கொண்டேன். அவர் தாயாரையும் பார்த்து ஆறுதல் கூறி வரலாமே என்றேன். அரை மனதுடன் ஒப்புக்கொண்ட சங்கர், காலை 10 மணிக்கு போகலாம் என்றார். எனக்கு சந்தோஷம் தாளவில்லை. சீக்கிரம் எழுந்து, காலை கடன்களை முடித்துக்கொண்டு, நிறுவனத்தில் ஒரு நாள் விடுமுறை பெற்றுக்கொண்டு, டவுனுக்கு கிளம்பினேன். சரியாக 10 மணிக்கு சங்கர் எனக்காக காத்துக்கொண்டிருந்தார். டவுனிலிருந்து சற்று தூரம் தான். நடந்தே சென்றோம். டவுனைக் கடந்தவுடன், காட்டுப்பூக்களின் நறுமணம் வீசத்தொடங்கியது. வண்டுகள் ரீங்காரம் பாட, வண்ணத்துப்பூச்சிகள் குறுக்கும் நெடுக்கமாக கிரிஸ்-க்ராஸ் முறையில் வயல்களின் மீது பறந்து கொண்டிருந்தன. சங்கர் திடீர் என்று மௌனத்தை முறித்தார். “உங்களுக்கு மல்லிகா மீது…. இல்லை ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் ….. எதாவது லவ், இது அது என்று…. இருந்தால் சொல்லுங்கள், நான் யாரிடமும் கூறப்போவதில்லை….” என்றார். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. இவர் என்ன கஷ்டமான கேள்வியைக் கேட்டு விட்டாரே! என்ன பதில் என்னிடம் உள்ளது? ஆனால் சுதாரித்துக்கொண்டு, ‘…அப்படி ஒன்றும் இல்லை சங்கர்…” சும்மா அத்தனை மாணவிகளில் மல்லிகா மட்டும்தானே நம்முடன் நன்றாக பழகி வருகிறார். ஆகவே….” என்று இழுத்தேன். உங்களுக்கு சங்கர்? என்று நான் எதிர் கேள்வி கேட்கவே, அவரும் திக்கு முக்காடி போனார். “… நோ நோ நோ, எனக்கும் உங்களைப்போலத்தான். ஆனால் உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் எனக்குத் தெரியும் என்றார். என்ன இது? மீண்டும் குழப்புகிறாரே? என்று அவர் முகத்தை பார்க்கும் பொழுது, “…இல்லே, உங்களுக்கு ஒரு சில மாதங்கள் தானே ஆகியிருக்கு, எனக்கு அவர் ஒரு வருடத்திற்கு மேல் தெரியும். அவருடைய அம்மா தானே அவரை அழைத்து வந்து நமது இன்ஸ்டிடியூட்டில் சேர்த்தார். நம்முடைய சர் தான் அனைத்து உதவிகளைச் செய்து அவரை மெட்ரிக் பரிட்சைக்கும் அனுப்பி வைத்தார்.”

சற்று தூரத்தில் சில ஓலை வீடுகளும், ஓடுகள் கொண்ட வீடுகளும் தெரிந்தன. ஓரிருத் தெருக்களும் இருந்தன. நான்கைந்து கடைகள், ஒரு ஹோட்டல், வெற்றிலை பாக்கு கடை, ஒரு பெட்டிக்கடை எல்லாம் இருந்தன. அருகில் சென்ற உடன், ஒரு தெருவிற்குள் நுழைந்தார் சங்கர். அதோ அந்த கடைசி வீட்டிற்கு இப்புறம் இரண்டு வீடுகள் முந்தி..” என்று அவர் வீட்டை அடையாளம் காண்பிக்கும் பொழுது, தூரத்தில் ஒரு பெண் காலி தாண்ணீர் குடத்துடன் ஒரமாக நடந்து அருகிலுள்ள குழாயடிக்கு வந்துகொண்டிருந்தார். நம் இருவரையும் கண்டதும் குடத்தை கீழே போட்டு எங்களை நோக்கி ஓடி வந்தார். அவர் மல்லிகா தான்! அவரை மெதுவாக வரச் சொல்லி, சங்கர் சைகை செய்து, அங்கேயே நின்று விட்டார். நிமிடத்தில் எங்களிடம் வந்த மல்லிகா மூச்சு வாங்கி, சங்கரைப் பார்த்து “ஏன் சார் இவரை இங்கே அழைத்து வந்தீர்கள். ஒரு நல்ல உள்ளத்திடம் எனக்கு இருக்கிற மானம் மரியாதை அனைத்தையும் நான் இழக்க நேரிடுமே” என்று கவலையுடன் கூறினார். எனக்கோ ஒன்றும் விளங்கவில்லை. மல்லிகா, என்ன சொல்கிறீர்கள், நீங்கள் ஓகே தானே, என்றேன். நான் ஒகே சர், ஆனால் என் தாய் நேற்றுதான் குணம் அடைந்துள்ளார். அக்கம் பக்கத்தார் அவருடன் இருப்பதால், நீங்கள் போய் விடுங்கள், நாளையிலிருந்து நான் நிச்சயமாக இன்ஸ்டிடியூட்டிற்கு வருவேன், அப்பொழுது அனைத்தயும் நானே கூறுகிறேன், என்றார். “அம்மாவை பார்த்து விட்டு போகிறோமே” என்றேன். “இன்னொரு நாளைக்கு பார்க்கலாம், அவர் தலையில் பலத்த அடி பட்டிருக்கிறது, தூங்கிக் கொண்டிருக்கிறார்.” என்றார் மல்லிகா. அருகில் என்னுடன் கை கோர்த்து நின்ற சங்கர் மெதுவாக என் கை விரல்களை அழுத்த, சூழ்நிலையை புரிந்து கொணடவன் போல, “…சரி மல்லிகா, உங்களைக் காணவேண்டும் போல் தோன்றியது, அதனால் தான் இன்று வேலைக்கு விடுப்பு எடுத்து இங்கே வந்தேன்.” என்றேன். தலையை திருப்பி தன் வீட்டை நோக்கிய மல்லிகாவின் கண்கள் கலங்கியதை நான் கவனித்தேன். சுதாரித்துக்கொண்டு எங்களிடம் பிரியாவிடை பெற்றுச் சென்று விட்டார், மல்லிகா.

பெரு மூச்சுடன் திரும்பினோம், வழியில் பல எண்ணங்கள், பல கேள்விகள், நீண்ட மௌனம். இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. பின்னர் இன்ஸ்டிடியூட்டிற்குப் போய் மாலைப் பாடங்களை அப்பொழுதே முடித்துக் கொண்டு 3 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

தற்சமயம் சற்று நிம்மதி தெரிந்தாலும், மனம் முழுசாக தேரவில்லை. எதோ ஒன்று நெஞ்சை உறுத்திக்கொண்டேயிருந்தது. சங்கர்!, இவர் என்னுடன் இவ்வளவு பழகியும் என்னிடம் எதையோ மறைக்கின்றாரே. அவருக்கு என்ன கட்டாயமோ, அப்படி என்ன இரகசியம் இருக்குக் கூடும். சரி நாளை மல்லிகா வரும் பொழுது தெரிந்து கொள்ளலாமே. நிம்மதியாக தூக்கம் வந்தது. மறு நாள் வழக்கும் போல் மாலை 5.00 மணிக்கு உற்சாகமாக நல்ல டிரஸ் உடுத்தி, இன்டர்வியூக்கு போவது போல டிப் டாப்பாக சென்றேன். ஏற்கனவே எனக்காக காத்துக்கொண்டிருந்த சங்கரும் மல்லிகாவும் புன்னகைத்து என்னை வரவேற்றனர். இன்ஸ்டிடியூட்டிற்கு இன்று லேட்டாக போவோம், வாருங்கள் ஏதாவது சிற்றுண்டி சாப்பிட்டு வரலம் என்றார் சங்கர். சரி என்று ஒப்புக்கொண்டு மூவரும். சற்று தூரத்தில் இருந்த ஒரு விஜிடேரியன் ஹோட்டலுக்குப் போய் ஓரமாக இருந்த மேஜை பக்கம் அமர்ந்தோம். நிசப்தம் ! சற்று நேரம் யாரும் பேசவில்லை. மல்லிகா தானே முன் வந்து பேச ஆரம்பித்தார் :

“சர், நான் கூறுவதை கவனமாக கேளுங்கள். இன்றுவரை என் வாழ்வில் எந்த ஆடவரையும் நான் வர அனுமதித்ததில்லை. என்ன காரணம் என்று இப்பொழுது கூறப்போகிறேன். எனக்கும் பாசம், நேசம், உணர்வுகள் இருக்கிறது. ஆனால், என் வாழ்வில் நடக்கும் நிகழ்சிகள் ஆண் வர்கத்தின் மீது என் வெறுப்பைத் தான் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன. நான் உங்களை சொல்ல வில்லை, தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், ஆண்களைப்பற்றிய என் அபிப்ராயத்தை மாற்றியமைத்ததே நீங்கள் இருவரும் தான். இதை நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளேன். சிலர் செய்யும் தவறுக்கு முழு வர்க்கமும் பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். எனக்கு தந்தை கிடையாது. “இறந்து விட்டாரா?” என்று நான் குறுக்கிட்டேன். “…..இல்லை, தெரியாது…” என்றார் மல்லிகா. “..காணாமல் போய் விட்டாரா..” என்றதும், அவர் கண்கள் கலங்கின. “…அதுவும் இல்லை…. வீட்டில் இருக்கிறாரே, அவர் என் சொந்த அம்மா இல்லை. வளர்ப்புத்தாய்தான், சொந்த தாயைவிட பாசமாக என்னை ஊட்டி வளர்த்து, படிக்க வைத்திருக்கிறார். சர், நான் ஒரு அனாதை, பெற்றோர் யார் என்று தெரியாது, நான் ஒரு கலைக்கப்பட்ட கோலமயில். என்னை என் அம்மா குப்பை மேட்டிலிருந்து எடுத்து வளர்த்து வருகிறார். அது தான் என் குடியிருப்பு. சர், நான் ஒரு தே…….யாவுக்கு பிறந்தவள், ஒரு வேசியின் பிள்ளை. என்னைப்பெற்றெடுத்தவள், தன் பாரத்தை சுமக்க சங்கடப்பட்டு என்னை தூக்கி குப்பைத்தொட்டியில் எறிந்து விட்டாள் போலும். ஒரு நாள் இரவு இப்பொழுது இருக்கிறாளே இந்தத் தாய், ஒரு தாசியான அவளும் தன் பணியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது குப்பைத்தொட்டியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கே போய் பார்த்திருக்கிறாள். துணியில் சுற்றி விசப்பட்ட ஒரு பச்சிளங் குழந்தையை ஒரு நாய் கவ்வி இழுத்துக்கொண்டிருந்ததாம். அதை விரட்டி விட்டு கையில் எடுத்துதிரும்பிப் பார்க்குக் பொழுது, இன்னும் நான்கைந்து நாய்கள் கூட்டமாக நின்றுகொண்டிருப்பதைக்கண்டு, பயந்து போய், என்னை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு சுமந்த வண்ணம் தனது வீட்டிற்கு ஓடி வந்துவிட்டாள், யாருடைய குழந்தை என்று அக்கம் பக்கம் கேட்பதற்கும், அந்த நாய்கள் அவளை அனுமதிக்கவில்லை. என்னை பெற்றெடுத்தவள் எந்த எண்ணத்துடன் என்னை வீசி எறிந்தாளோ, அது நியாமானதாக இருந்தால் நான் அவளை மன்னித்தேன். இன்பம் அனுபவிப்பது மட்டும் குறிக்கோளாக இருந்து, என் தாயை கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தால், என் தந்தையையும் மன்னித்தேன். இதைக்கேட்ட சங்கர், சற்று நிமிர்ந்து அமர்ந்தார். “…..அவர்தான் உங்கள் அம்மா என்று நான் நினைத்தேன், இந்த சம்பவங்களெல்லாம் எனக்குத் தெரியாது. கேட்பதற்கே பயங்கரமாக உள்ளதே”, என்றார் சங்கர். “….அது மட்டுமல்ல…” மல்லிகா தொடர்ந்தார் “….இந்த நகரத்திற்கு வந்து நமக்கு 10 வருடங்கள் ஆகின்றன. இதற்கு முன்னர் நாம் திருச்சியில் இருந்தோம். அப்பொழுதும் என் அம்மாவுக்கு இதே தொழில்தான். ஒரு நாள் மூவர் குடித்து விட்டு வந்து, அம்மாவை கட்டிப்போட்டு இன்னொரு அறையில் உறங்கிக்கொண்டிருந்த என்னை மூவரும் கன்னி கழித்தனர். கதறி அழுதும் விடவில்லை, 12 வயதில் என் விர்ஜினிடி பறி போய்விட்டது. அன்று முதல் ஆண்களைக் கண்டாலே எனக்கு பயத்தால் உதறித்தள்ளும். யாரோ அம்மாவுடைய ஆட்களில் ஒருவர், இந்த வீட்டு விலாசத்தைக் கொடுத்து நாம் இங்கே குடியேறி விட்டோம். இங்கேயும் அடிக்கடி இதே பிரச்சினைகள் தான், சங்கருக்கும் தெரியும், நான் அடிக்கடி ஏன் 8 நாள் 10 நாள் லீவு போடுகிறேன் என்று. என்னைக் கண்டுகொண்ட குடிகாரர்கள் வந்து என்னை விலை பேசுவர். அம்மாவுக்கு ஆத்திரமாக வரும், அவள் சண்டை பிடிப்பாள், என்னை ஒரு அறையில் பூட்டி, சாவியை தன் முந்தானியில் கட்டி வத்திருப்பாள். யார் என்ன செய்தாலும் என் அறையை திறப்பதில்லை. இந்த ரகளையில் யாராவது பலத்த காயத்தை அம்மாவிற்கு உண்டாக்கி ஓடி விடுவர். அந்தக் காயம் ஆறுவதற்கு 8 அல்லது 10 நாட்கள் ஆகும். சாவித் துவாரத்திலிருந்து நடப்பதை சில நேரம் நான் நேராக காண்பேன். ஆண் வர்க்கம் பொல்லாதது, கேவலம் ஐந்து ரூபாய்க்காக எப்படியெல்லம் என் தாயை புரட்டி எடுக்கிறார்கள் என்பதை நான் பல தடவைகள் கண்கூடாக பார்த்திருக்கிறேன். போலிசில் சொன்னால், அனைவருடைய பிழைப்பும் போய் கம்பி எண்ண நேரிடுமே என்று யாரும் புகார் செய்வதில்லை. கண் கலங்கும் என்னை அம்மா ஆறுதல் கூறி, அம்மாவுக்குப் பதிலாக நான் தொழில் செய்கிறேன் என்று கூறும் பொழுது, “அடி பைத்தியம், இத்தொழில் என்னோடு போகட்டும், நான் உயிருடன் இருக்கும் வரை உன்னை யாரும் சீண்ட விடமாட்டேன்” என்று சபதம் செய்தாள் என் தாய். “ஆண் வர்க்கம் பொல்லாதது, உன்னை கிழித்து உன் அங்கங்கள் ஒவ்வொன்றையும் பிய்த்து எடுத்து சின்னாபின்னமாக்கி விடுவார்கள்…” என்று கூறி அத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு என் தாய் என்னை படிக்க வைத்து ஆளாக்கி, பாம்பே சென்று அங்கு ஒரு வேலை எனக்கு வாங்கித்தர வேண்டும் என்பதுதான் அம்மாவின் ஆசையும் அவருடைய வைராக்கிய இலட்சியமும். “அப்பொழுது அவள் தொழிலை விட்டு நிம்மதியாக என்னை யாருக்காவது மணமுடித்து ஒன்றாக தங்கலாம் என்ற அவளுடைய திட்டத்தை நிறைவேற்றுவது தான் என் இலட்சியம், அதுதான் என்னுடைய கோட் ஆஃப் கன்டக்ட், என் நடத்தைக் கோட்பாடு. இருப்பினும், நான் உங்கள் மனதை படிக்காமலில்லை. எனக்கும் ஐம்புலன்கள் நன்கு பணியாற்றுகின்றன, உணர்வுகள், உணர்ச்சிகள் எல்லாம் எனக்கும் உண்டு. ஆண்களை வெறுத்தாலும், உணர்ச்சிகள் பொங்கி வரும் பொழுது நானும் ஒரு பெண்தானே. இருப்பினும், உங்களை தூண்டி விடும் படி நான் என்றைக்காவது நடந்துகொண்டேனா என்று யோசித்துப்பாருங்கள். என் மீது ஆசையோ காதலோ கொண்டிருந்தால், தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.” இக்காரணத்தால் தான் நான் யாருக்கும் என் விலாசம் கொடுப்பதில்லை, யாரையும் அழைப்பதில்லை, நீங்கள் வரவேண்டிய இடம் அது அல்ல, அது ஒரு “கலைக்கப்பட்ட கோலமயிலின் குடியிருப்பு.’

அவர் இதையெல்லாம் சொல்ல சொல்ல கயல்விழிக் கண்களிலிருந்து சிவந்து உருண்ட அவர் கன்னங்களின் மீது கண்ணீர் உருண்டோடிக்கொண்டிருந்தது. நான் மெதுவாக எழுந்து என் கைக்குட்டையால் அவர் கண்களைத் துடைத்தேன். “அழாதீர்கள் அத்தனை கொடுமைகளுக்கும் உங்களுக்குப் பரிகாரமின்றி போகாது. இதை எல்லாம் கேட்டு எனக்கு உங்கள் மீதுள்ள மரியாதை இன்னும் கூடி விட்டது, மல்லிகா” என்று ஆறுதல் கூறி அமர்ந்தேன்.

சூடான தோசைகள் வந்த பின்னர், அதை மூவரும் உண்டுக்கொண்டேயிருக்க, மல்லிகா தொடர்ந்தார்…

“ஒரு வேளை நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள துணிந்து விட்டால், உங்கள் வீட்டார் உங்களுக்காக பாடுபட்டதை நினைவில் கொள்ளுங்கள், என் நிலை அவர்களுக்கு தெரிந்தால் அவர்களுடை மனம் எந்த அளவிற்கு புண்படும் என்று நினைத்துப்பாருங்கள். எனக்கோ அல்லது உங்களுக்கோ உங்கள் சொந்தங்களில் மரியாதை என்று ஒன்று இருக்குமா என்று யோசியுங்கள். நாம் இருவரும் அவர்களிடமிருந்து கட் ஆஃப் ஆகி விடுவோம், அந்த பாவம் எனக்கு வேண்டாம். நீங்களும் பாம்பே செல்லத்தான் ஷார்ஹேண்ட் டைபிங் பழகுவதாக சங்கர் என்னிடம் கூறினார். அப்படி நான் முதலில் சென்றால், சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி என் விலாசம் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் வந்தால் என்னை சந்தியுங்கள். எப்படியும் 3 அல்லது 4 மாதங்களில் பாம்பே போய் விடுவோம். உங்கள் பிளான் என்ன என்று நான் போவதற்குள் எனக்கு தெரிவியுங்கள்.”

இத்தனை விஷயங்களையும் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு, மனதில் உள்ளுக்குள் உதிரம் கொட்டிக்கொண்டிருந்தது. திகைத்துப் போய் சிறிது நேரம் பேச்சு மூச்சின்றி அமர்ந்திருந்தேன். வைத்த கண் எடுக்காமல் மல்லிகாவையே பார்த்துக்கொண்டிருந்தேன் சங்கர், என் கண் முன்னால் கையை அசைத்து என்னை உயிர்ப்பித்தார்.

“எனக்கு நிச்சயமாக என்ன ஆனது என்று தெரியவில்லை மல்லிகா, நான் விரும்பியும் விரும்பவில்லை. விரும்பாமலும் விரும்பினேன். காதலுமில்லை ஆனால் விவரிக்க முடியாத ஒரு அக்கறை ஏனோ என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது. நானும் என் இலட்சியம் கைக்கூடும் வரை திசைத்திரும்புவதாக இல்லை. அதற்காக நான் உணர்வற்றவனாகவும் இருக்கப்போவதில்லை. நான் ஏதாவது தவறாகப் பேசியோ, உங்களுடன் நடந்துகொண்டு இருந்தால், என்னை மன்னித்து விடுங்கள், நிச்சயம் அது ஒர் ஏதேச்சான செயலாகத்தான் இருக்குமே ஒழிய, நானாக விரும்பி செய்ததாக இருக்காது.” என்றேன். அதற்கு அவர் உடனே, ஐயோ, நீங்கள் இது வரை என்ன தொட்டதே கிடையாதே, இன்று நான் உங்களிடம் கைகுலுக்க ஆசைப்படுகிறேன் என்று கூறி என் இரு கைகளையும் இருக்கமாக பிடித்துக்கொண்டார். “சரி, இனி பாம்பேயில் சந்தியுங்கள்…” என்று சங்கர் கூற, “…நான் போகும் வரை, இன்ஸ்டிடியூட்டிற்கு வந்து கொண்டுதான் இருப்பேன். படிக்க இல்லை என்றாலும் சாரைப் பார்க்க…” என்று மல்லிகா கூற மூவரும் சிரித்து மகிழ்ந்தோம்.

அடுத்த பாகம்: சேற்றில் மலர்ந்த தாமரை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *