ஒரு காவியம் நிறைவு பெறுகிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 21,746 
 

(1975 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேய்க்காற்றாகச் சுழற்றியடித்த சோளகம்,முதுவேனிற் காலத்து வெப்பத்தையும் புழுக்கத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, இலையசையாப் பம்மலிலும் பொருமலிலும் அடங்கிற்று. கடலில் மூழ்கவிருந்த கதிரவனைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்திற் தன்னை இரணகளமாக்கிக் கொண்டிருந்த மேற்கு வானம், தன் போராட்டத்திற் தோல்வி கண்டு கரும்போர்வையை எடுத்து மூடத்தொடங்கிற்று.

சற்று முன்னே வீட்டினுள்ளே வெடித்த அவலக் குரல்கள் பிலாக்கணமாக நீண்டு ஊரையே நிறைக்கிறது.

புதுமைப்பித்தனின் நினைவுப் பாதை என்ற கதையில் வரும் வைரவன் பிள்ளையைப் போல நான் உன்னைத் தோற்றுவிட்டு வெளியே திண்ணைக்குந்தில் அமர்ந்திருக்கிறேன்.

என் நெஞ்சிலே நினைவுகள் சரக்கூடம் அமைக் கின்ற ன.

இன்றைக்கல்ல; நேற்றே நான் உன்னை இழந்து விட்டேன்.

நேற்று திங்கட்கிழமை. வழக்கம்போல அதிகாலை யிலேயே நான் படுக்கையை விட்டு எழுகிறேன்.

சாப்பாட்டு மேசையிற் கோப்பியை வைத்துக் காத்தபடி, செபப்புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு செபித்தவண்ணம் இருக்கும் உன்னை என் கண்கள் காணவில்லை.

அன்று உன் அம்மாவும் இல்லை. அயற்கிராமத்துச் சாவீடு ஒன்றிற்குப் போனவள் இனிமேற்தான் வர வேண்டும். நான் அவசர அவசரமாக, அறைக்குள்ளே உன் படுக்கையடிக்கு வருகிறேன். என்றைக்குமில்லாத வாறு நீ அந்த அதிகாலையிற் கட்டிலிற் படுத்துக் கொண்டிருக்கிறாய்.

உன் நெற்றியைத் தொட்டுப் பார்க்கிறேன்’ அனலாகக் கொதிக்கிறது.

அப்மாவும் இனிமேற்தானே வரவேண்டும். நான் லீவு எடுத்துக் கொண்டு நிற்கவா?”

“சும்மா காய்ச்சல் தானே. நீங்கள் பாடசாலைக்குப் போங்கள். கொஞ்ச நேரத்தால அம்மா வந்திருவா” என்கிறாய் நீ.

நீ அதிபராகப் பணியாற்றும் புனித அந்தோனியார் வித்தியாலயத்தைத் தரமுயர்த்துவதற்காகக் கௌரவ கல்வியமைச்சர் வரவிருந்தார். அதன் காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களாக உனக்கு ஓய்வு ஒழிச்சலில் லாத வேலை. உடல் சோர்ந்திருந்தது. அமைச்சர் வரமாட்டார் என்று கேள்விப்பட்டதும் உன் உள்ளமும் சோர்ந்து விட்டதா? என்று எண்ணிக் கொண்டே நீ பாடசாலைக்காக உன்னை மறந்து ஊனும் உறக்கமும், ஓய்வும் ஒழிச்சலும் அற்று, நோயை வரவழைத்துக் கொண்டாய். உனக்கு ஓய்வுதான் இப்போது வேண்டும்” என்று குறைப்பட்டுக் கொள் கிறேன் நான்.

”பாடசாலை வேலையைச் செய்யத்தானே வேண்டும். இப்போது அமைச்சர் வரமாட்டாராமே… இந்த வாரமே நான் லீவு எடுத்துக் கொண்டு சங்கானை அக்காவிடம் போகிறேன். அங்கேதான் எனக்கு ஓய்வு கிடைக்கும்” என் கிறாய் நீ.

நான் மீண்டும் கேட்கிறேன். “இன்றைக்கு நான் லீவு எடுத்துக் கொண்டு நிற்கவா?”

“இல்லை. எனக்கொன்றுமில்லை. நீங்கள் பாட சாலைக்குப் போங்கள்” எனச் சொல்லிக் கொண்டே. நீ, எழுந்திருக்கிறாய்.

“வேண்டாம், அமைதியாகப் படுத்திரு” என்று விட்டு, நான் என வேலைகளைக் கவனித்துக் கொண்டு அரை மனதுடன் பாடசாலைக்குப் புறப்படுகிறேன்.

“வசந்தி உன்னைக் கவனித்துக் கொள்வாள். அவள் இன்று பாடசாலைக்கு வரவேண்டாம்” என்று கூறி விட்டுப் புறப்பட்ட நான், வழமையைவிடச் சற்று முன்ன தாகப்பாடசாலையிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்டு வருகிறேன்.

வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் என்னை இடைமறித்த உன் பெறாமகன் ஆனந்தன் சொல்கிறான். “பெரியப்பு. உங்களைச் சிப்பிரியான் ஐயா ஆஸ்பத்திரி யடிக்கு வரட்டாம்.”

“ஏன்?”

ஆனந்தன் மௌனஞ் சாதிக்கிறான். இருவரது சைக்கிள்களும் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன.

‘அப்பாவுக்கா சுகமில்லை? அடிக்கடி ‘ஆஸ்த்மா ‘ வியாதியாற் கஷ்டப்படுபவன் அவன் அப்பா தாசன்’ என்றெண்ணிக் கொண்டே நான் மீண்டும் அவனைக் கேட்கிறேன்.

“இல்லை. பெரியம்மாவைத்தான் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்காங்க” என்று சொல்கையிலேயே அவன் கண்கள் கலங்குகின்றன. நான் துடித்துப் பதைத்து ஆஸ்பத்திரிக்கு விரைகிறேன். அங்கே நோயாளிகளைச் சந்திக்கும் நேரமாத லால் ஒரே கூட்டமாக இருக்கிறது.

உன் கட்டிலடியிலும் சனத்திரள்!

நான் அவர்களை விலக்கிக் கொண்டு உன் கட்டி லடிக்கு வருகிறேன். என்னைக் கண்டதும் நீ முகம் மலர்ந்து சிரிக்கிறாய்.

ஆனாற் சூழநின்றவர் முகங்களிற் கவலை படர்ந்து அவர்கள் கண்கள் கலங்கியிருப்பதை நான் காண்கிறேன் உனக்கு என்ன வந்து விட்டது?

எல்லாருமே மௌனஞ் சாதிக்கிறார்கள். நான் என்னவென்று அறிந்து கொள்வதற்காக டக்ரரிடம் ஓடு கிறேன்.

ஒடுங்கி நீண்டு கிடக்கும் ஆஸ்பத்திரிக் கொரிடோரிலே ஒரு தூணருகில் நின்று கொண்டிருந்த டக்ரர் நமது உற வினர் ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

‘It is a matter of time’ – சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென என் தலை யைக் கண்டதும் திகைக்கிறார். அவர் கண்கள் கலங்கு கின்றன.

நான் டக்ரரிடம் ஏதும் கேட்காமலேயே திரும்பு கிறேன். அவர் வார்த்தைகள் என் நெஞ்சிற் சம்மட்டியடி யாக விழுந்து கொண்டிருக்கின்றன.

It is a matter of time உனக்கு வந்திருக்கும் வியாதி ஹைட்ரோபோபியா! நாட்டு வைத்தியந்தான் செய்யவேண்டும்” சிங்கள வைத்தியமே நல்லது” – “மட்டக்களப்புக்குக் கொண்டு போகலாம்” “ஹபரணையில் நல்ல வைத்தியன் இருக்கிறான்”

என் காதுகளில் வீழ்ந்த பல்வேறு குசுகுசுப்புக்களுக் கும் மேலால் என் நெஞ்சிலே சம்மட்டியடியாக வீழ்ந்து கொண்டிருக்கிறது அந்த ஒலி.

It is a matter of time

மட்டக்களப்பென்ன? ஹபரணையென்ன? இந்த நாட்டின் எந்த மூலைக்கும் உன்னைக் கொண்டு செல் வதற்கு அம்பலவாணரின் கார் அடுத்த வீட்டிலேயே தயா ராக நிற்கின்றது. குடும்ப நண்பர்களையெல்லாம் உற வினர்களாகவே ஆக்கி உபசரிப்பதில் நீ எத்தனை சாமர்த்தி!

இரண்டு மூன்று வீடுகளுக்கப்பால் உன் தம்பி ஜீவ’ ரத்தினத்தின் காரும் தயாராகவே நிற்கிறது!

உன்னைக் காரிலே எடுத்துச் செல்கையில் இடை வழியிலே… நடுக்காட்டிலே…

அந்தக் கொடூரமான தினைவு என்னைச் சித்திரவதை செய்ய ‘ஐயோ; அப்படி ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாதே’ என்று என் இதயம் பிரலாபிக்கிறது. எல்லாமே வல்ல வனைக் கெஞ்சுகின்றது.

அந்த முடிவு உனக்கு ஏற்படுவதானாற்கூட, அது நீ. கட்டியெழுப்பிய உன் வீட்டிலே, வீடு நிறைத்த பிள்ளை கள் மத்தியிலே, ஊர் நிறைந்த உறவினர்கள் மத்தியிலே, தாடு நிறைந்த நண்பர் கள் முன்னிலையில் அமைதியாக…

வைத்தியனிடம் உன்னைக் கொண்டு போவதைவிட, வைத்தியனையே இங்கு வரவழைத்தால்…

உதவி வைத்திய அதிகாரி எங்கிருந்தோ அவசர அவசரமாக வந்து கொண்டிருக்கிறார். அவரைக் கண்ட தும் “கடித்த நாயின் மூளையைப் பரிசோதித்துக் கொழும்பிலிருந்து வந்த முடிவு nagative என்று சொன்னீர் களே. நாம் ஏமாந்து விட்டோமே டக்ரர்” என்று அங்க லாய்க்கிறேன்.

என் இலக்கிய நண்பரான உதவி வைத்திய அதிகாரி யும் கண்ணீ ர் வடிக்கிறார்.

அவரை ஆமோதிப்பது போல ஆயுள் வேத வைத்தி யனான உன் தம்பி-உன் சித்தப்பாவின் மகன்-தான் வைத்தியன் என்பதையே மறந்து, உன் தம்பியாகவே நின்று என்னைக் கட்டிக்கொண்டு தேம்பி அழுகிறான்.

“மடையா! நீ ஒரு வைத்தியனா? நோயாளியின் முன்னால் இப்படியா அழுவது?” என்று நான் அவனைக் கடிந்து கொள்கிறேன்.

இந்த டாக்குத்தர்மார் ஒருவரும் நோயைக் கண்டு பிடிக்கல்ல. இது குளிர் சன்னிக் காய்ச்சல்” என்று தீர் மானமாகச் சொல்கிறார் வயோதிபரான அயற் கிராமத் தார் ஒருவர்.

நான் மீண்டும் கட்டிலை நெருங்குகிறேன். உன் கட்டிலடியிலே சுவாமியார் நீளமான நீலப் பட்டியைத் தரித்துக்கொண்டு நிற்கிறார்.

அவஸ்தைப் பூசுதல். ‘அந்தக் கடைசித் தேவதிரவிய அனுமானம், நோயாளிக்கு ஆத்தும நன்மைகளோடு சரீர சுகத்தையும் கொடுக்கக்கூடும்’ என எப்போதோ நான் படித்திருந்த ஞானோபதேசப் பாடம் நினைவுக்கு வருகிறது. மீண்டும் என் மனது எல்லாம் வல்லவனைக் கெஞ்சுகிறது.

சுவாமியார் அந்தச் சடங்கை முடித்துக் கொண்ட போது வெளியே கார் ஒன்று வந்து நிற்கிறது. உன்னை எங்கே கொண்டு போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் உன் கட்டிலை அணுகி உன்னைக் காருக்குக் கொண்டு போக முயல்கிறேன்.

நீ போ தம்பி” என்று நம் பெரியண்ணா என்னைக் கள்ளி விட்டுவிட்டு, உன் கொடியுடலைத் தூக்கிகொண்டு காருக்குப் போகிறார்.

‘உன் கொடியுடல், தூய்மையுடன் மென்மையுமாய் என்னைப் பரவசத்திலாழ்த்திய உன் தளிருடல், இனி உனக்குச் சொந்தமில்லைத் தம்பி’ என அவர் எனக்குச் சொல்லாமற் சொல்லி விட்டாரா?

கார் பறக்கிறது. – ஆஸ்பத்திரியில் நான் அனாதையாக நிற்கிறேன்.

உன் தம்பி, அந்த ஆயுள்வேத வைத்தியன் என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். அவன் கண்ணீர் என் தோள்களில் விழுந்து சுட்டுக் கொண்டி ருக்கிறது.

வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஒரே சனத்திரன். நாட்டு வைத்தியன் உனக்கு வைத்தியம் செய்கிறான், தண்ணீர் மருந்தைக் கூட நீ குடிக்கிறாய்.

என் மனதிலே நம்பிக்கை பிறக்கிறது. என் நம்பிக்கையை வலுப்படுத்துவதாய் விறாந்தை மூலையில் அமைதியாக யோசித்துக்கொண்டிருந்த என் மச்சான் நீக்கொலஸ் பண்டிதரிடம் வைத்தியர் சொல் கிறார். இது குளிர் சன்னிக் காய்ச்சல். கவலைப் படுவதற்கு ஒன்றுமில்லை .”

வீட்டுக்கு வெளியே நின்ற நம் குடும்ப நண்பனும் உறவினனுமாகிய கதிர்காமத்தம்பி சொல்கிறான்,

இப்படித்தான் என் மச்சானையும் ஆஸ்பத்திரிக் காரர்கள் நம்பிக்கையிழந்து வீட்டுக்குக் கொண்டு போகச் சொன்னார்கள். இதே வைத்தியரின் மருந்தில் அவர் பிழைத்து ஒரு வீடும் கட்டி முடித்து ஆறு ஆண்டு களின் பின்னர் தான் அவர் செத்தார்.

ஆனாலும் அந்த நம்பிக்கையின் மேலால் டக்ரரின் குரல் என் நெஞ்சிலே சம்மட்டியடியாக விழுந்து கொண் டிருக்கிறது.

It is a matter of time

அந்த அடியின் உபாதையோடு நான் பெரியண் ணனைக் கூப்பிட்டுச் சொல்கிறேன். ”அண்ணா ! முதலில் வீட்டுக்குள் இருக்கும் கூட்டத்தை வெளியேற்றுங்கள் அண்ணா . உங்களால் முடியாவிட்டால் நான் வெளி யேற்றவா?”

என் குரலில் ஆத்திரமும் பதட்டமும் நிறைந்திருப் பதைக் கண்ட லீயோ அண்ணன் ”நீ கொஞ்சம் அமைதியாக இரு தம்பி.” என்று என்னைச் சாந்தப்படுத்திக் கொண்டே, காலில் விழாக்குறையாகக் கெஞ்சிச் சனக்கூட்டத்தை வெளியேற்ற முயல்கிறார். ஆனால் அது இலகுவான காரியமாக இல்லை .

“உள்ளே செபமாலைக் கிழவி செத்துக் கொண்டிருக்கிறாள். போர்க்களத்திலே குற்றுயிராய்க் கிடக்கும் போர் வீரனைத் தங்கள் வயிற்றுட் சமாதி யாக்கக் கருதிய பிணந்தின்னிக் கழுகு களைப் போல, அவள் கட்டிலைச் சுற்றி அவள் செத்தவுடன் அழுவதற்கென்று ஊர்க் கிழவிகள் எல்லாரும் காத்துக்

கொண்டிருந்தார்கள். என்று ஐம்பத்தி மூன்றாம் ஆண்டிலே பிரிவுபசாரம் என்ற கதையில் எழுதினேன் அல்லவா? அந்தக் கழுகுக் கூட்ட மாகத்தான் உன் கட்டிலைச் சுற்றி எந்தத் தேவையுமின்றி நிற்பவர்களும் எனக்குத் தோற்றமளிக்கிறார்கள்.

வீட்டுக்கு வெளியே நமக்கு உறவினரே அல்லாத வங்கி முகாமையாளர் சிங்கள வைத்தியனை வரவழைக் கும் முயற்சியில் தன் மோட்டர் சைக்கிளிற் பம்பர மாகச் சுழன்று கொண்டிருந்தார். உன் சின்னண்ணா உதவி வைத்திய அதிகாரியான என் தம்பியை அழைத்து வரச் சைக்கிளிற் பறக்கிறான்.

வைத்தியர் தியாகராசாவின் வைத்தியத்தில் அபார நம்பிக்கையோடு, பண்டிதர் மிக அமைதியாக விறாந்தை மூலைக் கதிரைக்குள் அமர்ந்து கொண்டிருக்கிறார்.

எங்கும் இருள் கவிந்து விட்டது. வீட்டினுள்ளே இருந்த மின்சாரக் குமிழ்களில் மின் கம்பிகளை இணைத்து, அந்த இணைப்பின்மூலம் வீட்டின் வெளிப்புறத்தையும் ஒளிரச் செய்யும் முயற்சியில் முனைந்து கொண்டிருந்தவர்களின் வேலை முடிந்தபோது என் வீட்டு வட்டாரம் முழுமையுமே ஒளிபரவுகிறது.

ஆனால் என் மனதிலே நிரந்தரமாகக் கவிந்து விட்ட இருளை யார் போக்குவார்கள்? எப்படிப் போக்கு வார்கள்?

அடுத்த வேளைச் சோற்றுக்கே தன் தந்தையாரை நம்பியிருந்த புதுமைப்பித்தன், தந்தையாருடன் மனக் கசப்புக் கொண்டு இருளிலே வீட்டை விட்டு வெளியேறு கையிற் பாடினானாம்.

செல்லும் வழி இருட்டு செல்லும் இடம் இருட்டு சிந்தை தனிலும்

தனி இருட்டு நானோ அந்திக் கருக்கலில் நீ என்னைக் கைவிட, கைக்கோலை இழந்த குருடனாக என் மன இருளே எனக் குத் துணையாக புதுமைப்பித்தனின் சிருட்டியான வைரவன் பிள்ளையாக வெளித் திண்ணையிலே கால் களை முடக்கிக் கைகளாற் கட்டிக் கொண்டு குந்திக் கொண்டிருக்கிறேன்.

என் மன இருளிலே இறந்த கால நினைவுகள் வெளிச் சம் போடுகின்றன. நிகழ்காலம் குழப்பமாகி, எதிர்காலம் இருட்டாக, இறந்த காலம் ஒன்றே தெளிவாகத் தெரி கின்றது.

இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னே, அந்தத் திகதியைக் கூட என்னால் மறக்க முடியுமா? அன்று ஜனவரி மாதம் நான்காந் திகதி.

நத்தாரும் அதனையொட்டிய புதுவருடக் கொண் டாட்டங்களும் ஊரிலே இன்னமும் ஓயவில்லை. சிறுவர் கள், ஏன் பெரியவர்களும் கூடத் தாயக்கட்டை உருட்டு வதை இன்னமும் நிறுத்தவில்லை. ஆறாந் திகதி மூன்று இராசாக்கள் திருநாளும் கழிந்த பின்னர் தான் அவை

‘ஓயும்.

ஆனால் அதற்குள் அரசாங்கப் பாடசாலைகள் புது வருடத்திற்காக மீண்டும் :தொடங்கி விட்டன. நீ உன் ஆசிரியர் தொழிலுக்காகக் கிண்ணியாவிற்குப் போக வேண்டும்.

“இரண்டு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு அடுத்த திங்கட்கிழமை போகலாமே” என்று நீ அழுகிறாய். இருபத்திரண்டு வயது இளங்குமரியான உன் மனதில் என் னென்ன ஆசைகளோ! என்னென்ன கனவுகளோ!

ஆனால் உன் அக்கா தீர்மானமாகச் சொல்கிறாள். “நிச்சயமாக இன்று போகத்தான் வேண்டும். போய் விட்டு ஐந்தாந் திகதி வெள்ளிக் கிழமையே திரும்பி விட லாம். வருடத் தொடக்கத்தில் லீவு எடுக்கக் கூடாது.”

அவள் ஏன் அப்படிச் சொல்கிறாள் என்பது எல்லோ ருக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.

கடைசியில் உன் அக்காதான் வெற்றியடைகிறாள், எல்லாருமே கிண்ணியாவிற்குப் போய்விட்டு அடுத்த நாளே திரும்புவது எனத் தீர்மானமாயிற்று. தீர்மானத் திற்கு வந்ததும் அக்கா என்னைக் கெஞ்சுகிறாள்.

“நீயும் வாடா தம்பி”

நான் கடைசியாகச் சம்மதிக்கிறேன். எனக்குப் பாடசாலை தொடங்க இன்னமும் பத்து நாட்களுக்கு மேல் இருந்தன.

நான்காந் திகதி அதிகாலையிலேயே உன் அம்மா அக்கா, தங்கை, உன்னோடு வளர்ந்து கொண்டிருக்கும் உன் மச்சான்-எனக்கும் மச்சான் தானே-மனோகரன், நீ, நான், எல்லோருமே ஒரு காரிற் கிண்ணியாவிற்குச் செல்கிறோம். உன் அப்பா வீட்டிலேயே தங்கி விடுகிறார்.

மாரிக்காலத்து மழைநீரை எல்லாம் தன்னுள் ஏற்று நுங்கும் நுரையுமாகப் பிரவாஹிக்கும் மூதூர் ஆற்றையும் மஹாவலி கங்கையையும் தாண்டிக் கார் கிண்ணியாவை அடைந்தபோது காலை ஒன்பது மணியாகிவிட்டது. காரி லிருந்து இறங்கி நீ பாடசாலைக்குச் செல்கிறாய். நம்மூரவரான அபூபக்கர் மாஸ்ரர் இன்னமும் உனக்காக இடாப் படையாளம் பண்ணாமல் இருப்பார்!

அம்மா வீட்டைத் துப்புரவு செய்து சமையல் வேலையில் ஈடுபடுகிறாள். நானும் அக்காவும் அயற் கிராமமான ஆலங் கோணிக்குச் செல்கிறோம். அதற்காகத் தானே அக்கா வந்தாள்.

அன்று இராச்சாப்பாடு முடிவடைந்தபோது இரவு ஒன்பது மணிக்குமேல் ஆகிவிட்டது. நீயும் உன் அம்மாவும் மட்டுமே வாழ்வதற்காக எடுத்துக் கொண்ட சிறிய அறையிலே நாம் எல்லோரும் இரவைக் கழிக்க வேண்டும். ”நான் வெளியிலே படுக்கிறேன்”

வேண்டாம். இந்தத் தைக்கூதலில் வெளியில் படுக் கிறதா? மழையுந் தூறிக்கொண்டேயிருக்கிறது. இதற்குள் ளேயே சமாளிப்போம்” என்று வற்புறுத்துகிறாள் அக்கா ,

எல்லோரும் அந்த அறைக்குள்ளேயே படுக்கிறோம். நான் சுவர் ஓரமாகப் படுக்கிறேன். எனக்குப் பக்கத்தில் மனோகரன். அப்பால் நீ, அக்கா…

பத்து வயதினனான மனோகரன் படுத்ததுமே நித்திரையாகி விட்டான். மற்றவர்களுக்கும் பிரயாணக் களை, விளக்கை அணைத்துவிட்டு எல்லோருமே படுத்துக் கொள்கிறோம்.

வெளியே சிணுசிணுத்து மழை பெய்து கொண்டி ருக்கிறது.

மழையின் சிணுசிணுப்புக்குப் பகைப்புலமாக என் மனதிலே பேரிரைச்சல்!

செல்லையா அண்ணன் விதைத்த வித்து என் நெஞ் சிலே முளை கொள்ளும் பிரசவ வேதனை… . அந்த விதை….

1948ம் ஆண்டு கனவு காணும் வாலிப வயது. தெற்கு மலை நாட்டின் ஆங்கிலப் பாடசாலை ஒன்றிற்கு ஆசிரியனாகச் செல்கிறேன். பால்ய வயதிற் தந்தையை இழந்து பல கஷ்டங்களை அனுபவித்த என் குடும்பம் இப்போது சற்று வசதியுள்ளதாகவே இருக்கிறது. இளைய தம்பியை மட்டும் படிப்பித்து விட்டாற் போதும். குடும்பத்தில் மூத்த ஆண் மகனான நான் யாரையும் எந்த நேரத்திலும் மணஞ் செய்து கொள்வதற்கு எந்தத் தடையும் இருக்க நியாயமே இல்லை

என் வாலிபக் கனவுகளுக்கேற்ற அழகு, இலக்கியக் கனவுகளுக்கேற்ற இரசிகத்தனம், ஆசிரியத் தொழிலால் வரும் மாதச் சம்பளம் ஆகியவைகளைக் கொண்ட ஒருத்தியை நான் மலை நாட்டிற் சந்திக்கிறேன்.

என் ஒன்றரை வருடப் ‘பிளாட்டோனிக் காதலை’ ஐம்பதாம் ஆண்டு ஆவணி விடுமுறையின்போது செல்லையா அண்ணனிடம் சொல்கிறேன்.

குருநாகலில் ஆசிரியனாக இருந்த அவன் எனக்குத் தெரியாமலே அவளைச் சந்திக்கிறான். கதைக்கிறான், கடிதங்கள் பல எழுதுகிறான்.

முடிவு! அவள் குழம்பி விட்டாள்! பாடசாலையிலி ருந்து மாற்றம் பெற்றுக்கொண்டு சொல்லாமலே சென்று விட்டாள்.

எனக்குச் செல்லையா அண்ணன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. துணைக்கு அழைத்தவன் ‘வில்லன்’ ஆகிவிட்டானே என்று.

ஆனாற் செல்லையா அண்ணன் அமைதியாகவே சொன்னான். “நீ நாம் பிறந்த மண்ணைவிட்டு வேறிடத் துக்குச் செல்வதை அனுமதிக்கவே முடியாது!”

”நான் விரும்புவதுபோல, நான் தேடுவதுபோல ஊரிலே எவள் இருக்கிறாள்?” நான் ஆத்திரத்தோடு கேட்கிறேன்.

“இருக்கிறாள்”

“யார்?”

“யோசித்துப் பார்”

“எனக்கு எவருமே தெரியவில்லை .”

“பிறகு சொல்கிறேன்” என்கிறான் செல்லையா, அண்ணன் அமைதியாக.

இந்த நத்தாரின்போதுதான், மிகுந்த போதையிலிருத் தாலும், வலுத்த போதத்தோடு என் காதோடு காதாகச் சொல்கிறான்.

“லில்லி ” நான் திகைத்தேன்!

”உனக்கென்ன பைத்தியமா அண்ணா! பத்து ஆண்டு களுக்கு முன்னர் அவள் அக்காவோடும் உன்னோடும் ஒரே வகுப்பற் படித்த காலந்தொட்டு நான் அந்த வீட்டிலே ஒட்டிப் பழகுகிறேன். இத்தகைய எண்ணமே எனக்கு ஏற் படவில்லை. உறவு முறையிற்கூட அவள் என் தங்கை. இருவரும் மட்டக்களப்பு ஆசிரிய கலகசாலையிற் படிக் கையில், சக மாணவர்கள் எம் இருவரையும் உடன்பிறந்த சகோதரங்களாகக்கூட எண்ணிக்கொண்டு இருந்தார்கள். . “அண்ணனும் தங்கையும்! உடன்பிறந்த அண்ணன் தங்கை பிள்ளைகளுக்கே கல்யாணம் நடக்கிறது திருச் சபை தடுக்கும் அந்த முதலாங் கால் இரத்த உறவைவிட இது எவ்வளவோ மேல்.”

ஆனாலும் அவன் சொன்னதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நான் தூய்மையும் பாசமும் கொண்ட அண்ணனாகவே இருந்தேன். — இப்போது அவன்விதைத்த வித்து முளைவிடும் பிரசவ வேதனையில் என்னுள்ளே ஒரு ஊழிக்கூத்தே நடைபெறு கின்றது.

என்னுடைய முன்னைய காதல் விவகாரங்களைக்கூட நீ நன்கு தெரிந்தவள், எந்த விபரீத எண்ணமுமின்றி என்னோடு பழகியவள் நீ.. உன்னை நான் தொட்டால் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நீ நினைப்பாய்!

ஆனால் இந்த ஊழிக் கூத்தின் பிரளய இரைச்சலை மீறிக்கொண்டு என் உடலின் வேட்கையும் ‘ தசையின் பிடுங்கலும் வெற்றியடைகின்றன.

செத்த பின்னும், சாகாத புன்னகை தவமும் உன் முகத்தை இருளிலே தடவுகின்றேன்.

சில வினாடிகளில் நீ என் கைகளைப் பிடித்தபடி எழுந்து உட்கார்ந்து கொண்டாய்.

அந்த அடை மழைக் காலத்து வெடுவெடுக்கும். குளிரிலும் என் சர்வாங்கமுமே வெயர்த்துக் கொட்டு கிறது. என் சடலம் முழுதும் பதைக்கிறது.

என் புறங்கையிலே உன் கண்ணீர் விழுந்து தீய்க் கிறது.

நான் உன் கண்களைத் துடைத்துக் கொண்டே. சொல்லத்தகாத ஒரு கனவைக் கண்டது போல இதை மறந்துவிடு தங்கம்.”

“இனி மேலுமா?” பின்னர் தான் எனக்குத் தெரிகிறது. செல்லையா. அண்ணன் உன்னிடமும் இந்த எண்ணத்தை ஊட்டியிருக்” கிறான் என்று. அதை நன்றாக உணர்ந்து கொண்டு நான் சொல்லுகிறேன்.

“அக்கா பாவம். ஆழந் தெரியாமற் காலை விட்டுக் கொண்டாள். அவளது காரியம் விரைவில் நடக்கும் என எனக்குத் தோன்றவில்லை. சுமுகமாக நடக்கும் எனவும் எனக்குப் படவிலலை. ஆலங்கேணியில் இருந்து வரும் வரைக்கும் அழுது கொண்டே வந்தாள். அவளது கனவு நனவாகும் வரை-அது எத்தனை வருடங்களானாலும் நம் உள்ளத்தை மறைத்துக் காத்துக் கொண்டி ருப்போம்.”

”நான் இருப்பேன். ஆனால் நீங்கள் இருப்பீர்களா? உங்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியுமே…”

உன் நியாயமான சந்தேகத்தை உணர்ந்துகொண்டே உ.ன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நான் உறுதி கூறுகிறேன். ‘அக்காவின் காரியம் முடியும்வரை நான் காத்திருப்பேன். உனக்காகக் காத்திருப்பேன்.”

நீ அமைதி காண்கிறாய். அன்று உள்ளத்தாற் கணவனும் மனைவியுமாக இணைந்த நாம் உடலாற் சகோதரர்களாகவே இருந்தோம்.

– நான் அரிச்சந்திரன் பரம்பரையினன் அல்ல. சாதா ரண-உலகின் மிகச் சாமான்யமான மனிதன். ஆனாலும் அன்று உனக்குத் தந்த உறுதியுரையை என்றைக்காவது மீறினேனா? எல்லாரையும், எல்லாவற்றையும் திரண மாக மதித்துத்தானே தன்னந்தனியனாக உன்னிடம் வந்தேன். இருபத்தினான்கு ஆண்டுகளாக உன்ளத்தால் ஏக பத்தினி விரதனாகவும், உடலால் ஏகபத்தினி வெறி யனாகவுந்தானே உன்னோடு வாழ்ந்தேன். அப்படியிருந் தும் நீ ஏன் என்னைவிட்டுப் போய் விட்டாய்?

வெளிப்படையாக அழுதாற் பிள்ளைகள் கதறுவார் களே என்ற பயத்தில் தான் மௌனமாகக் கண்ணீர் வடிக் கிறேன்.

வீட்டு முற்றத்திற் பந்தலுக்குக் ‘கிடுகு’ பரவிக் கொண்டிருந்த செல்லையா அண்ணன் அவ்வேலையை அப்படியே விட்டுவிட்டு என்னிடம் வந்து “தனியே இருந்து யோசிக்கதடா. எழும்பு” என்று என் தோளைப் பிடித்தவன் பொறுக்கமாட்டாமல் விம்மி அழுகிறான்.

நானும் அவனைத் தழுவிக்கொண்டு ஓலமிடுகிறேன், ”தோற்றுப் போனோம் அண்ணா “

வீட்டினுள்ளேயிருந்து சொர்ணம் மாமி ஒப்பாரி சொல்கிறாள்.

நாங்கள் சூதில் இழந்து விட்டோம்-மகளே.

உன்னைச் சூதாடித் தோற்று விட்டோம்.

***

ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. “மரணச் செய்தியை ஒலிபரப்புகிறார்களா? என்று பக்கத்து வீட்டு ரேடியோவிற் கேட்போம்” என்று என்னை அழைக்கீறான் தாசன். அவனைத் தட்டிக் கழிக்க முடியுமா? இரு வரும் எவருக்கும் தெரியாமல் மணம் முடித்துக் கொண் டோமென்பதைக் கேள்விப்பட்டதும் ஊரிலிருந்து நம்மைச் சந்திக்கச் சீருடன்’ வந்த முதலாவது உறவினன் அவன்.

நான் அவன் பின்னால் நடக்கிறேன். துரை ரத்தின சிங்கமும் பின்னால் வருகிறான்.

வழமையைவிட நீண்ட செய்திக்குப் பின்னால், செய்தியின் பின்னணி என்ற நீண்ட பொலிஸ் அறிக்கைக் கும் பின்னால் வானொலி உன் இழவுச் செய்தியைச் சொல்கிறது. |

மூதூர் புனித அந்தோனியார் வித்தியா லய அதிபரும் எழுத்தாளர் வ அ. இராச ரத்தினத்தின் அன்பு மனைவியுமான லில்லி இராசரத்தினம் காலமானார். மரணச்

சடங்குகள்…. அந்தச் செய்தியைக் கேட்டதும் நான் துரைரத்தினத் தின் கைகளைப் பிடித்துக் கொண்டே கதறுகிறேன். இல்லை அவள் சாகவில்லை. வானா ஆனா என்ற எழுத்தாளன்தான் செத்துப் போனான்.”

என்னைச் சமாளிக்க முடியாது துரைரத்தினமும் கதறியழுகிறான். அழாமல் என்ன செய்வான்? எனக்குத் தெரியாத தத்துவங்களையா என் மகன் எனக்குச் சொல்லி விடப் போகிறான்?

என் மனம் எங்கோ படர்கிறது. நான் எழுத்தாளனாக இருப்பதில் உள்ளூரப் பெருமைப்பட்டவள் நீ! உன் ஒழிச்சலில்லா வேலை களிடையே – என் எழுத்துக்களை வரிக்கு வரி படித்து, நான் எதிர்பார்த்திராத நேரத்தில் நறுக்குத் தெறித்தாற் போல விமர்சிப்பவள் நீ! என்னை எழுத்தாளன் ஆக்கு வித்தவளே நீதான்.

எனக்குத் தேவையான தெல்லாம், உமர்கயாம் பாடியது போல

ஒரு கவிதை நூல் மதுக்கிண்ணம் நீ! இந்த மூன்றையும் எனக்குக் குறைவறத் தந்து கொண்டு சீட்டுக்கட்டிப் பணம் சேர்த்து வீட்டைக் கட்டி, எழுப்புகிறாய்!

என் மாதச் சம்பளத்தை உன்னிடம் கொடுத்து விடு வதையும், குற்றாலக் குறவஞ்சியின் மேல் உள்ள பற்றுத்த லால் வீட்டிற்கு (கூனலிளம் பிறை முடித்த வேணியலங் காரர் குற்றால)த் ‘திரிகூடம்’ என்று பேரிட்டதையும் தவிர வேறு ஏதுமே எனக்குத் தெரியாது! நம் குடும்ப நண்பர் செய்யது நானாவிற்கே வீடு கட்டிய கதை தெரியும்!

சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னே, நீ படுக்கை யில் விழுந்த இதே செப்டம்பர் மாதம் முதலாந்திகதிதான் நாம் திரிகூடத்திற் குடி புகுந்தோம்.

கையிலே நவதானியங்கள், நகைப்பெட்டி, இன்னும் ஏதேதோ பொருட்களை ஒரு தட்டிற் சுமந்துகொண்டு சித்திரப்பதுமையாய் நீ நடக்கிறாய்.

விலை மதிப்புள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு உன்னோடு என்னையும் போகும்படி ‘பெரியவர்கள்” பணிக்கிறார்கள்.

நான் ‘விலை மதிப்புள்ள’ பொருட்கள் இருக்கும் றாக்கையில் இருந்து அவசர அவசரமாக இரண்டு புத்தகங்களை-சிலப்பதிகாரமும், மு. தளையசிங்கத்தின் ‘புதுயுகம் பிறக்கிறது’ என்ற சிறுகதைத் தொகுதியுந் தான் என்கையிற் சிக்கின-எடுத்துக் கொண்டு உன் னோடு இணைந்து நடக்கிறேன்.

நான் கொண்டு வரும் ‘விலைமதிப்புள்ள’ பொருட் களைக் கண்டு நமது உறவினர்களுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.

ஆனா நீ மட்டும் அமைதியாகச் சிரிக்கிறாய்.. சிரித்துக் கொண்டே கேட்கிறாய். – “உங்கள் பேனையைக் கொண்டு வருகிறீர்களா?”

“அதை விடுவேனா? இதோ என் சட்டப்பையில் இருக்கிறது.”

“அதையும் புத்தகங்களோடு சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்.”

உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நான் பையிலிருந்த பேனையைக் கழற்றித் தட்டிலே புத்தகங்களோடு வைத்துக் கொள்கிறேன்.

நாதஸ்வர இசை முழங்க இருவரும் திரிகூடத்திற் காலடி எடுத்து வைக்கிறோம்.

என் நினைவுகள் முறிந்து வேறோர் நினைவு முறி மனதில் நெளிகிறது.

சென்ற மாதம் பதினோராந் திகதி கலாச்சாரப் பேரவையின், தமிழ் இலக்கியக் கூட்டத்திற்கு வரும்படி எனக்கு அழைப்பு வருகின்றது. பதினைந்தாம் திகதி கூட்டம் நடைபெறும். பதினான்காந்திகதி நான் கொழும்புக்குச் செல்லவேண்டும்.

நான் கடிதத்தை உன்னிடம் காட்டிவிட்டு, ஏற்கனவே அடிககொப்பி எழுதி வைத்திருக்கும் கிரௌஞ்சப் பறவைகள் என்ற சரித்திர நாவலைப் பிரதி எடுக்கிறேன். கொழும்புக்கு அதைக் கையோடு எடுத்துச் செல்லவேண்டும் என்ற வேகத்தோடு என் புத்தக அறையைத் தாளிட்டுக் கொண்டு எழுத்துப்பணியில் மூழ்குகிறேன்.

சில நிமிடங்களில் எனக்குச் சிகரட் பக்கற்றைக் கொண்டு வந்து வைக்கிறாய். கோப்பியும் வருகிறது

என்னைத் தேடிவந்து என் எழுத்துப் பணியைக் குழப்பும் சின்னவனைக்கூட என் பக்கம் வரவிடாது தடுக்கிறாய். ஏற்கனவே அந்த நாவலைப் படித்துவிட்டு நல்ல நாவல் என்று அபிப்பிராயம் தெரிவித்தாய் அல்லவா?

பிரதி எடுக்கும்போதும் அடிக்கடி சரித்திர நூல் களைப் புரட்ட வேண்டியிருப்பதால் நான் எதிர்பார்த்த வேகத்தில் எழுத்து ஓடவில்லை.

பதினான்காந்திகதியும் எழுத வேண்டியே இருக் கிறது. –

அன்று காலை நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கை யில் நீ சொல்கிறாய் நீங்கள் குழந்தைப் பிள்ளை மாதிரிப் பிடிச்சாப் பிடிச்சதுதான். இன்றைக்குக் கொழும்புக்குப் போகாட்டா என்ன?’ – போகாட்டியா? கட்டாயம் போக வேண்டியிருக்கு. இன்றைக் கூட்டத்திற்தான் சென்ற ஆண்டு சாஹித்யப்” பரிசுக்கான நூல்களைத் தெரிவு செய்ய வேண்டும். நம்ம அருள் சுப்பிரமணியத்தின் புத்தகமும் இம்முறை இருக்கு.”

”கையில இருந்த காசையெல்லாம் பாடசாலைத் திருத்தத்தில் விட்டிற்றன். இப்ப கையில் ஒரு சதக் காசு மில்ல ” |

”அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் இன்று போகத்தான் வேண்டும்” என்று நான் சொல்லிவிட்டு எழுந்து, என் அறையைப் பூட்டிக்கொண்டு என் எழுத்துப் பணியில் மூழ்குகிறேன்.

ஒரு மணியாகிவிட்டது. இன்னமும் நீ எனக்குக் காசு தரவில்லை . ”சாப்பிட வாருங்கள்” என்று தான் அழைக்கிறாய். “எனக்கு வேண்டாம்” நான் எரிந்து விழுகிறேன். “என்ன எழுத்தாளர் கோவிக்கிறார்.” என்று கேலி செய்கிறான் உன் உதவி ஆசிரியனான கவிஞன் கனகசிங்கம். விபுணசேகரமும் அவனை ஆமோதித்துச் சிரிக்கிறான். . நான் என் அறைக்குள்ளிருந்தபடியே சொல்கிறேன்.

“இந்த எழுத்தாளர் இன்றைக்குக் கொழும்புக்குப் போகா விட்டால் மூன்று மணி லாஞ்சிக்கு ஊரைவிட்டே போகிறார்”

“லோஞ்சுக்குக் காசிருக்கா?” கவிஞன் கேட்கிறான். “மூணு மணிக்குக் கோப்பரேட்டிவ் லாஞ்சு.. அவருக்குக் காசு தேவையில்லை” என்று சிரிக்கிறான் விபுணசேகரம். நீயும் அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொண்டே “சாப்பிட வாருங்கள்” என்கிறாய்.

வேண்டாம்” என்று எரிந்து விழுகிறேன் நான். “நீ வெளியே எங்கோ புறப்பட்டுச் செல்வது ஜன்னலூடாக எனக்குத் தெரிகிறது. சற்று நேரத்தில் – என்னிடம் வந்து ஐம்பது ரூபாயை நீட்டிக்கொண்டே “வந்து சாப்பிடுங்கள்” என்கிறாய்.

நான் எழுந்து வந்து சாப்பிடுகிறேன். கனகசிங்கம் சிரிக்கிறான்.

நீ என் பிரயாணத்திற்கான ஏற்பாடுகளைச் செய் கிறாய்.

நான் சாப்பிட்டு முடிந்ததும் மாற்றுடைகளும் சாப்பாட்டுப் பார்சலுமடங்கிய பிரயாணப் பையை எடுத்து என்னிடம் தருகிறாய். நான் என் நாவலையும் எடுத்துக்கொண்டு புறப்படுகிறேன். மூன்று மணி லாஞ்சிற்கு இன்னமும் சொற்ப அவகாசந்தான் இருக் கிறது.

நான் புறப்பட்டுக் கொண்டிருக்கையில் நீ என்னிடம் சொல்கிறாய். “நாளைக்குக் கடன் திருநாள். கொழும்பில இறங்கியதும் பிலிப் நேரியார் கோயிலில் பூசையைக் கண்டிற்றுப் போங்க”

திருக்கரசைப் புராணம் இரண்டு தா. இலட்சுமண ஐயருக்குக் கொடுக்கவேணும்” என்கிறேன்.

நீ அதையும் எடுத்துத் தருகிறாய். நான் அவசர அவசரமாக லாஞ்சைப் பிடிக்க ஓடுகிறேன்.

திருக்கரசைப் புராணம்!

தமிழுணர்வு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்ட கவிஞன் கனகசிங்கம், தன்னுார் இந்து இளைஞர் மன்றத்தைக் கொண்டு அதை வெளியிடத், துடிக்கிறான்.

கட்டை பறிச்சான் இந்து இளைஞர் மன்றம் தம்மிடமிருந்த அறு நூறு ரூபாயை அவனிடம் கொடுத்

எப்படியோத்து விட்டார்கள்பாவு மற்ற அவர்கள்

பின்னால் எந்த இலக்கிய உணர்வு மற்ற அவர்கள் கையை விரித்து விட்டார்கள்! ஆனாற் கவிஞன் எப்படியோ புராணத்தைவெளிக்கொணர்ந்து விட்டான்.

ஆடி அமாவாசையன்று நூல் வெளியீட்டு விழா விழாவிங் பேசுவதற்காக முல்லை மணி, அருள்சுப்பிர மணியம், பண்டிதர் வைரமுத்து ஆகியோர் நம் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். 4 சாயந்தரம் நான்கு மணிக்கு – நாங்கள் கங்கைக் கரைக்குப் போவதற்காக பஸ்ஸிற்குப் புறப்படுகிறோம்.

நீயும் எங்களுடன் வருகிறாய். “நாளைக்காலையில் ஆறாம் வகுப்புக்களுக்கு மேல் அரசாங்கத்தின் அரை. யாண்டுப்பரீட்சை இருக்கிறது. அதற்கு நான் திரும்பிவிட வேண்டும்” என்கிறாய்,

”பஸ் வசதியிராது, இருந்தாலும் கங்கைக்கரை யிலிருந்து பஸ்ஸிற்கு இரண்டு மைல் தூரம் நடக்க வேணும். நீ திரும்பிப் பரீட்சைக்கு வர முடியாது” என்று சொல்லி உன்னைத் தடுத்து நிறுத்த முயற்சிக் கிறேன்.

கங்கைக்கரைக்கான ஸ்பெஷல் பஸ்சும் வரவில்லை. கடைசியாக நாம் எல்லோருமே கிளிவெட்டி பஸ்ஸில் ஏறிக் கொள்கிறோம்.

கிளிவெட்டியிலிருந்தும் கங்கைக்கரைக்குப் பஸ்ஸைக். காணவில்லை. இரவு பத்து மணியாகி விட்டது!

குமாரதுரையின் கார் வருகிறது. அதில் இன்னம் நால்வர் தான் ‘வில்லங்கமாக’ ஏறலாம்.

நான் தயங்குகிறேன்.

‘வெளியீட்டு விழாவிற்காக உங்களைக் காத்துக் கொண்டிருப்பார்கள். நீங்கள் போங்கள். நான் என் ”மாணவன் கேசவராசாவும் மனைவியும் வருகிறார்கள் தானே. அவர்களோடு வந்து கொள்கிறேன்” என வற் புறுத்தி நீ எங்களைக் காரில் அனுப்பி வைக்கிறாய். 1. கார் ஓடிக் கொண்டிருக்கையில் நான் உன்னை இடை யில் விட்டு வந்ததைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கனகசிங்கம் தான் ஆசிரியர் முல்லை மணியிடம் சொல்லிக் கொள்கிறான். “லில்லி அக்கா இல்லாவிட்டிற் கரைசப் புராணப் பதிப்பே இல்லை .”

”ஏன்?” நான் ஆச்சரியத்தோடு கேட்கிறேன்,

“ஏனா? என்னிடம் பணமா இருந்தது? உங்களுக் கென்ன தெரியும்? புத்தகத்துக்குரிய மீதிப் பணமெல்லாம் அவ மாறித் தந்ததுதானே”

நான் சிருட்டி எழுத்தாளனாக மட்டும் இருந்தாற் போதாது. நமக்குப் பிடித்தமான எழுத்தாளன் கு. அழகிரி சாமியைப்போல பதிப்பாசிரியனாகவும் நான் இருக்க – வேண்டும் என்று விரும்பினாயா? அதற்குத்தான் எனக்குத் தெரியாமலே கரைசைப் புராணப் பதிப்பிற்குப் பணங் கொடுத்தாயா?

இத்தகைய வசதிகளும் வாய்ப்பும் இந்த ஜன்மத்தில் இனி எனக்குக் கிட்டுமா? அவைகள் கிடைக்காதபோது வானா ஆனா இராசரத்தினம் எழுத்தாளன் சாவதைத் தவிர வேறு வழி!

இந்த ஐம்பது வயதுக் குழந்தையின் அம்மா செத்துப் போய் விட்டாள் என்ற யதார்த்தமான உண்மை மனதிற் கல்லாய்க் கனத்து அழுத்த அந்த மனப்பாரத்தோடு என் குழந்தைகளைத் தேடிச் செல்கிறேன்.

ஒரே வளவிற்குள்ளிருக்கும் அடுத்த வீட்டு விறாந்தை யில் என் குழந்தைகளும், தம்பியின் குழந்தைகளும் பிடுங் கிக் கிடத்தப்பட்ட வாழைக் குட்டிகளைப் போல அயர்ந்து கிடக்கிறார்கள்.

இளவாலை என்றியரசர் கல்லூரியிற் பத்தாம் வகுப் புப் படித்துக் கொண்டிருக்கும் நம் மகன் ஜெயா மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறான்.

நான் அவன் பக்கத்தில் அமர்கிறேன். உன் ‘கஷ்ட’ புத்திரன் ஜெயா என்னிடம் சொல்கிறான். “அப்பா சிலர் என்னைக் கட்டிப்பிடித்துக் கத்துகிறார்கள். நான் அவங் களைப் பேசிப் போட்டன். இவங்க எல்லாம் நமக்கு உதவவா போறாங்க?”

“யார்?”

என் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “அப்பா: நான் இன்னமும் போடிங்கிற்குப் போறதா?” என்று கேட்கிறான் ஜெயா.

‘போகத்தானே வேணும். அப்பா இருக்கிறேன்டா” என்று தேம்புகிறேன் நான்.

“உங்கட ஐந்நூறு ரூபாச் சம்பளத்தில ரெண்டு பேருக்கு போடிங்காசு கட்டுவீங்களா? நான் இனி இங்கயே படிக்கிறன்”

அந்தக் கவல உனக்கேன். நீ நல்லாய்ப் படிக்க வேணும் என்பதற்காகத்தானே அம்மா உன்னை மட்டும் உன் பெரிய மாமா படிச்ச இளவாலைப் பாடசாலைக்கு அனுப்பியிருக்கிறா. நீ நல்லாப் படிச்சு அம்மாவின் கனவை நனவாக்க வேண்டும் மகனே’

”நான் படிப்பேன் அப்பா. ஆனா நீங்க இனிக் குடிக் கக் கூடாது”

”சரிடா கண்ணே . குடிக்க மாட்டேன்ரா’ ‘ ஐம்பது வயது வரையும் எந்தக் கவலையும் இல்லாமல் என்னை வளர்த்த உன் அம்மா இந்தப் பிஞ்சு வயதிலே உன்னைக் கவலைப்பட வைத்து விட்டாளே’ என்று அவனை இறுக அணைத்துக் கொண்டு அழுகிறேன்.

அவன் நித்திரையானதும் நான் மீண்டும் வீட்டுக்கு வருகிறேன்.

நடு நிசிக்கு மேலாகி விட்டது. வீட்டு மண்டபத்திலே நீ அமைதியாக முகத்திற் புன்னகை நெளியத் துயில் கொள்கிறாய். உன்னைச் சூழ இருப்பவர்கள் அழுது தீர்த் துக் களைத்துச் சோர்ந்து கிடக்கிறார்கள். உன் அம்மா மட்டும் தலைமாட்டிற் தன்னையே அழித்து எரிந்து கொண்டிருக்கும் மெழுகு திரியைப்போலக் கண்ணீர் வடித்துக் கரைந்து கொண்டிருக்கிறாள்.

நான் மெதுவாக உன்னிடம் வருகிறேன். உன் முகத்தை மூடிக் கிடக்கும் வெண்பட்டு ‘நெற்றை’ நீக்கி உன் முகத்தையே அதில் நெளிந்தோடும் புன்னகையையே பார்க்கிறேன். கண நேரந்தான்!

அதன்பின்பும் என்னைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை .

உன் மகன் ஜெயா கேட்டவைகளையெல்லாம் உன்னிடம் முறையிட்டுப் பைத்தியக்காரனாக உனமேற் புரண்டு அழுது புலம்புகிறேன். அரைத் தூக்கத்திலிருந்த எல்லோரும் விழித்துக் கொண்டு ஓவென்று புலம்பு கிறார்கள்.

அழுது சோர்ந்த என்னைச் செல்லையா அண்ணனும். தாசனும் வெளியிலே கொண்டு வருகிறார்கள். திண் ணைக் குந்தில் மீண்டும் வைரவன் பிள்ளையாக குந்திக் கொள்கிறேன்.

என் பக்கத்திலிருப்பவர்கள் யார் யாருக்குத் தந்தி கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை எனக்குச் சொல்கிறார்கள். “யோசப் வாசுக்கு அறிவித்தீர்களா?” “ஆம். யோனாஸ் சொன்ன விலாசத்திற்குத் தந்தியடித்திருக்கிறோம். சம்லின் போஸ்ற் மாஸ்ரர் இர வோடிரவாக எல்லாத் தந்திகளையும் தானாகவே கொடுத்திருக்கிறார்.

“சங்கானை அக்காவிற்கு நேற்றே போன் பண்ணி யிருக்கிறாராம் டி. ஓ.” என்கிறான் யோனாஸ். சங்கானை அக்கா! என் மனம் மீண்டும் கிண்ணியாவிற்குத் தாவுகிறது. உன் அறைக்குப் பக்கத்து அறையில் உன் சக ஆசிரிய ரான சுன்னாகம் சண்முகம் மாஸ்ரர். அவர் மனைவிதான் உன் சங்கானை அக்கா,

அந்த உறவை இருபத்தினான்கு ஆண்டுகளாக நீ எப்படி, வளர்த்துக் கொண்டாய்!

“நானோ எவருக்கும் கடிதங்கூட எழுத மாட்டேன். தெரிந்தவர்களைக் கண்டாற்கூட எங்கேயோ எத னையோ யோசித்துக் கொண்டு பேசாமலே இருந்து விடு வேன்” என்று நீ சொல்வாய்.

நீயோ அறிமுகமாகும் எல்லாரையும் நண்பர்களாக் கிக் கொள்வாய். அந்தத் தொடர்புகளை அறுத்துக் கொள்ள அவர்களால் முடியாமலிருக்கும்.

மூன்று வாரங்களுக்கு முன்னாற்கூட நீ சங்கானை அக்காவின் மருமகளின் கல்யாணத்திற்காகச் சுன்னாகம் சென்றாய்.

என்னையும் வருந்தி அழைத்தாய். ” இன்னும் சில நாட்களில் நான் கரசைப்புரா ணத்தை எடுத்துக் கொண்டு வர யாழ்ப்பாணம் போக வேண்டியிருக்கும். அப்போது அங்கும் போய்க் கொள் கிறேன். இப்போது நீ போய்வா” என்கிறேன் நான்.

”யாழ்ப்பாணம் போனாலும் நீங்கள் அங்கு போவீர் களோ என்னவோ, போன மாதம் சென்ற போதுகூட நீங்கள் போகவில்லையே!”

“இம் முறை கட்டாயம் போகிறேன். சென்ற தடவை ஒரே ஒரு தாள் தானே யாழ்ப்பாணத்திற் தரிக்க முடிந்தது. நான் அடுத்த வாரம் வருவதாக அவர்களிடம் சொல்!”

“நான் சொல்ல மாட்டேன்” என்று விட்டு நீ மூத்த மகன் ரவியையும் அழைத்துக்கொண்டு கல்யாண வீட்டிற் குச் செல்கிறாய்.

கல்யாண வீட்டிலிருந்து வந்ததும், அங்கு நடந்தவை களையெல்லாம் கதை கதையாக எனக்குச் சொல் கிறாய்.

”சோதியனுக்குக் கொஞ்சம் சுப்பா. மனைவி இல்லாமற் தனியாகத்தான் வந்தான். என்னைக் கண்ட தும் கட்டியணைத்துக் கொண்டு “லில்லி மாமி வந்திற்றா. லில்லி மாமி வந்திற்றா’ என்று கொஞ்சினான்” என்று எத்தனை பெருமையோடு குறிப்பிட்டாய்

அத்தனை பெருமைகளையும் இழந்து விட்டேனே என்ற துயரிலும் பசிக்களையிலும் என் உடல் சோரு கிறது. வழக்கமாக எனக்கிருக்கும் வாய்வுச் சேட்டை மேலோங்கும்போலத் தோன்றுகிறது. அதன் சூசகமாக வலது புறத் தோள்மூட்டு இலேசாகக் கடுக்கிறது.

வெளியே இருந்தாற் குளிரில் அது இன்னமும் கூடுதலாகும் என்றெண்ணிய நான், அலங்கோலமாகக் கிடக்கும் என் புத்தக அறைக்குள் மெதுவாகச் சென்று கட்டிலில் உடலைச் சார்த்துகிறேன் எனது சேனையூர் வித்தியாலய உயர்வகுப்பு மாணவர்களான சுகுமார், ரெத்தின சிங்கம் ஆகியோரும் அங்கே கிடக்கிறார்கள்.

வெளியிலே லீயோ அண்ணனும், செல்லையா அண்ணனும் “ரெட்ணம் எங்கே?” என்று என்னைத் தேடு கிறார்கள். அது எனக்குக் கேட்டாலும் நான் மௌன மாகவே கிடக்கிறேன்.

ஆனால் அறையைத் திறந்து கொண்டு வந்த பெரியண்ணா லீயோ, ”தம்பி, தனிய கிடந்து யோசிக் காத” என்று என் கையைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டு வருகிறார். முற்றத்துப் பந்தலின் கீழே கதிரை ஒன்றில் என்னை அமர்த்திவிட்டுச் சிகரட்டை நீட்டிக் கொண்டே “இப்படி எல்லோரோடும் இருந்து பேசிக் கொண்டிரு. தனிமையாக இருக்காதே” என்கிறார். – தனிமை! |

கல்யாணமான புதிதில், கல்யாணமாகாத உன் தங்கை, அக்கா என்ற கூட்டுக் குடும்ப வாழ்க்கை. பின்னர் வீடு நிறைந்த பிள்ளைகள். ஒரு தலைமுறை வாழ்விலே நாம் என்றைக்குமே ஒரே கூரையின் கீழ்த் தனிமையாக வாழ்ந்ததில்லை.

ஆனால் முந்தா நாட் சனிக்கிழமை. எனது பாடசாலைக்கும் கௌரவ கல்வி அமைச்சர் வருகை தரவிருக்கிறார் என்ற பிந்திக் கிடைத்த செய்தி யைக் கேட்டு, அவர் வருகைக்கான ஒழுங்குகளைக் கவனிக்க அன்றும் நான் பாடசாலைக்குச் செல்கிறேன்,

சாயங்காலம் ஐந்து மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்புகிறேன்.

நமது வீட்டிலே உன்னைத் தவிர வேறு எவருமே இல்லை. சின்னவன் மேரியன்கூட இல்லை. ”எல்லாருமே அம்மாச்சியுடன் கூடிக்கொண்டு கங்கைத் திருநாளைக்குப் போய்விட்டார்கள்” என்று நீ சொல்கிறாய்.

”பாடசாலை வேலைகளாற் கங்கைத் திருநாளைக்கு நாம் போவதில்லை என்று சொல்லியிருந்தோமே”

“ஊரே போகும்போது பிள்ளைகள் இருப்பார்களா? எல்லாரும் அம்மாவோடு போய்விட்டார்கள். “தாசனும் போய்விட்டானா? “இல்லை. றீற்றாவும் போகவில்லை. ஆநந்தனும் அம்மாச்சியோடு போய்விட்டான்” “இன்று நானும் வராமலிருந்தால்…?

“நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.” “எப்படித் தெரியும்?” ”உங்கள் பாடசாலையில் இன்று கல்விக் கந்தோரிவிருந்து வந்தவர்களுக்கு விருந்து. குறைந்தது நீங்களும் எதிரி சூரியாவுமாவது குடித்திருப்பீர்கள். குடித்தவுடன் என்னைத் தேடி வருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்” , ‘இல்லை. இன்றைக்குக் குடிக்கவேயில்லை. புதிய டிறெக்டர் எப்படிப்பட்டவரோ என்று எவருக்குமே தெரி யாது. அவருக்குப் பயத்தில் எவருமே குடிக்கவில்லை .”

”நான் நம்ப மாட்டன், குறைந்தபட்சம் உதவி டிறெக்டர் எதிரி சூரியாவோடு இரகசியமாகவாவது குடித்துவிட்டு, இலக்கியமும் சரித்திரமும் பேசியிருப் பீர்க ள்”

”அந்த வாய்ப்பு இன்றைக்குக் கிட்டவில்லை. ‘ திவ்யாவதான’ என்ற நூலைப் பற்றி அவரோடு பேச லாம் என இருந்தேன். முடியாமற் போய்விட்டது” என்ற நான் என் படிப்பறைக்குட் புகுந்து ‘வியத்தகு இந்தியா’ (the wonder tnat was India) என்ற நூலை விட்ட இடத்தி லிருந்து ஆழ்ந்து படிக்கத் தொடங்குகிறேன்.

தாசனையும் கூட்டிக்கொண்டு வெளியே போகலாம் என எண்ணினேன். ஆனால் நீ தனியாக இருக்கிறாய் என் பதாற் போகவில்லை.

கோயிலில் ஏழரை மணி அடிக்கிறது. உனக்கு அலுத்து விட்டது போலும். “சாப்பி.. வாருங்கள். நாலு மணிக்குக் கட்டுச் சோற்றுக்காக ஆக்கிய சோறு” என்று அழைக்கிறாய்.

நான் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வந்து சோற் றைக் கொறிக்கிறேன். மதியம் பலமான சாப்பாடு. இப்போது சாப்பிடவே முடியவில்லை

இருவரும் சாப்பிட்டு முடித்ததும் நான் வந்து செற்றி யில் அமர்கிறேன்.

நீ கழுவ வேண்டியவைகளைக் கழுவி வைத்துவிட்டு என் பக்கலில் வந்து அமர்கிறாய். நான் முன் கதவை தாளிட்டுவிட்டு வருகிறேன்.

“முருகேசு மாஸ்ரர் வருவார். கதவு திறந்தே இருக் கட்டும்.”

“அவர் வரும்போது திறக்கலாம்” என்றுவிட்டு நான் விறாந்தையின் லைற்றையும் அணைக்கிறேன்.

என் மடியில் நீ கொடியாய்த் துவள்கிறாய்.

ஓவென்ற தனிமை நம்மிருவரையும் இருபது வருடங் கள் பிந்திய இளைஞர்களாகவே ஆக்குகிறது.

என் கண்ணே ! எதிரே நீண்டு கிடக்கும் என் வாழ்க்கை முழுவதும் அந்தக் கடைசி இரவை’ நினைத்து, உன் நினைவோடே நான் வாழவேண்டும் என்றெண்ணித் தான் நீ அந்த ‘ஓ’வென்ற தனிமையைச் சிருட்டித்து வைத் தாயா? நான் உன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் உனக்கு அத்தனை கரிசனமா? அல்லது ஆண் பெண்ணின் முதற் காதலையும், பெண், ஆணின் கடைசிக் காதலையும் விரும்புகிறார்கள்’ என ஒஸ்கார் வைல்ட் எழுதியதுபோல நீயும் என் கடைசிக் காதலை விரும்பி ஏற்றுக் கொள்ளத்தான் அத்தனிமை யைச் சிருட்டித்து வைத்தாயா? கணமே யுகமாக இனித்த அந்த இரவு விடிகிறது.

அன்று விடிந்ததும் நீராடிவிட்டு, ஒரு தேவதைபோல என் முன் நின்று கொண்டு சொல்கிறாய். “கங்கைக்குப் பூசைக்காவது போய்விட்டு வருவோம். நீங்களும் வாருங்கள்”

“சாயந்தரம் இங்கே பூசை இருக்கிறதுதானே. அதற் குள் ஏன் அங்கே போக வேண்டும்?” என்று படுக்கையிலி ருந்தபடியே கேட்கிறேன்.

“ஒவ்வொரு வருடமும் அங்கே போனோம். இந்தத் திருநாளைக்கும் போகத்தான் வேணும். வாருங்கள்” என்றுவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமலே நீ பக்கத்து வீட்டு றீற்றாவிடம் போகிறாய். சற்று நேரத்தில் உன் தாசன் அத்தான் வந்து சொல்கிறான். “இந்த வருஷம் பேதுருவானவரிட்டப் போ றல்ல என்றுதான் நானும் நினச்சிருந்தன். ஆனா உங்கட மனுஷி வந்து என்ர மனுசியையும் கூட்டிற்றுப் போறா, உங்களை யும் எப்படியாவது கூட்டிற்று வரச் சொன்னா, எழும் புங்க போவம்” ”வீட்டில எவரும் இல்லயே”

“வீட்டப் பூட்டிற்றுப் பக்கத்து வீட்டில திறப்பைக் கொடுத்திற்று வரச் சொன்னா” என்கிறான் தாசன்.

நான் என்ன தான் மறுத்தாலும் தாசன் விடுவதா யில்லை. அவனோடு கங்கைக் கோயிலுக்குப் புறப்படு கிறேன்.

என் கண்ணே! மோட்சத்தின் திறவுகோலைக் கைக் கொண்டிருக்கும் நம் குல தெய்வமான அந்த மீனவனிடம் “வானுலகக் கதவைத் திறந்து விடு” என்று வேண்டிக் கொள்ளத்தான் நீ உன் வாழ்க்கையிலே கடைசித் தடவை யாக கடைசிப் பூசையான அப்பேதுருவின் பூசைக்கு அவசர அவசரமாகப் போனாயா?

“இன்று தொடக்கம் உன்னை மனிதரைப் பிடிக்கிற வனாக்குவேன்” என்று இரட்சகரிடம் வரம் பெற்ற நம்பிதாமகர், தாம் பிடிப்பதற்கான பக்குவத்தை அடைந்துவிட்டாய் நீ என்று எண்ணி, உன்னை அங்கேயே பிடித்துக்கொண்டாரா?

தன் மேய்ப்பன் யூதர் கையிற் பிடிபட அந்த மேய்ப்ப னைத் தொடர்ந்து குளிர் காலத்துக் கடைஜாம அந்தலையிலே என்புக்குள்ளிருக்கும் குழலட்டையையும் திடமாக உறையப் பண்ணும் சீதளத்தில் குளிர் காய்ந்து கொண்டு தன் மேய்ப்பனை மறுதலித்ததை எண்ணி மன முருகி அழுத அந்தப் பிதாமகர் பேதுருவைப்போல, நானும் இந்த அதிகாலையில் உனக்காக மனமுருகி அழு கிறேனே, என் அழுகை அந்தப் பேதுருவிற்குக் கூடக் கேட்க வில்லையா?

கேட்காது! அவர் பெயரே கல். மனமும் கல்லாகி விட்டதோ?

காலைத் திருந்தாதி மணி ஒலிக்கிறது. தொடர்ந்து ‘இளைப்பாற்றி’ மணியும் கேட்கிறது.

நமது ஒழுங்கை முகப்பிற் ‘கார்’ ஒன்று வந்து தரிக் கிறது. அதிலிருந்து என் நண்பர்களான எஸ். பொவும், ரகுவும், உதவி மந்திரி மஜீதும் இறங்குகிறார்கள்.

போனிற் செய்தி கிடைத்ததும் எஸ். பொவையும், ரகுமானையும் தன் காரிலேயே ஏற்றிக் கொண்டு இரவோடிரவாகப் புறப்பட்டு வந்திருக்கிறார் உதவி அமைச்சர். யார் யாருக்கோ அவர் பிரதியமைச்சராக இருந்தாலும் எனக்கு நண்பன், மந்திரி சபையில் மாறுதல் நடக்கும் என்று தெரிந்திருந்தும் எதையுமே பொருட்படுத் தாது ஓடோடி வந்திருக்கிறான்.

வந்தவன் என்னை ஏறிட்டுப் பார்க்கவே சகிக்காத வனாக நேரே மண்டபத்துள் இருக்கும் உன்னிடமே வருகிறான். நான் எஸ். பொவை அணைத்துக் கொண்டு ஓலமிடுகிறேன். “நீ தேடி வந்த எழுத்தாளன் செத்துப் போனான்”

என்றைக்கும், எப்போதும் கலகலப்பாகப் பேசும் எஸ். பொ. மகாமசான அமைதி சாதிக்கிறான்.

உன்னைப் பார்த்துத் தன் இறுதி மரியாதையைத் தெரிவித்து விட்டு வந்த உதவி அமைச்சர், பந்தலில் ஒரு கதிரையில் அமர்ந்து கொள்கிறார்.

நான் அவன் பக்கலில் அமர்கிறேன்.

“இனி நீ அழக்கூடாது. தைரியமாக இருக்க வேணும்.

“உன் மனைவி வகித்த அதிபர் பதவியை இனி நீரே வகிக்க வேண்டும்.”

அவன் சொல்வதெல்லாவற்றையுங்கேட்டுக் கொண்டு ஏதுமே பேசாமல் நான் மௌனமாக இருக்கிறேன்.

என் பக்கலிலிருந் ஹசன் விதானையார் சொல்கிறார். ”எல்லாவற்றையும் நாம், செய்வது தானே. மாஸ்ரரிடம் என்ன சொல்றது இப்ப”

எட்டு மணியாகிவிட்டது. திருக்கோணமலையிலிருந்து புறப்படும் முதலாவது மோட்டார்ப் படகு மூதூருக்கு வந்துவிட்டது. வெளியூர்களிலிருந்தும் அயற் கிராமங்களி லிருந்தும் நண்பர்களும், உறவினர்களும் சாரி சாரியாக வந்து கொண்டிருக்கிறார்கள். பிணப்பறை தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

தம்பலகாமத்துச் சித்திரவேலையும், கணேச பிள்ளையையும் கண்டதும், அக்கா, ”உன் மச்சான் மாரெல்லாம் வந்திருக்காங்க மகளே” என்று தலையி லடித்துக் கொண்டு ஓவென்று புலம்புகிறாள்.

அப்புலம்பலிடையே அருள் சுப்பிரமணியம் என்னிடம் சொல்கிறார். ”பன்னிரண்டு மணி லாஞ்சிற்குக் கவ்விக் கந்தோர் முழுமையுமே வருகிறது.”

உன் தம்பி அந்தோணி டக்ரர் அங்கலாய்க்கிறான். “தங்கத்துரையண்ணனுக்குப் போன் பண்ணினன். அவர் தேராகக் கதைக்கவில்லை. அவருக்குச் செய்தி கிடைத்தி ருக்குமோ என்னவோ.”

“தண்ணியாவது குடி தம்பி” என்று யாரோ என் கையைப் பிடித்து இழுக்கிறார்கள்.

தண்ணீர்!

என் நினைவுகள் எங்கோ தாவுகின்றன. திங்கட் கிழமை சாயந்தரம்.

பருத்த உடம்போடு கூடிய வாதக்காரியான உன் அக்கா உன்னைத்தான் நெஞ்சிலே சாாத்தி வைத்துக் கொண்டு கட்டிலின் தலைமாட்டில் இருக்கிறாள். உன் இருபக்கலிலும் ஆயுள் வேத வைத்தியனான உன் தம்பி யும், ஆங்கில உதவி வைத்திய அதிகாரியான என் தம்பி யும் அமர்ந்திருக்கிறார்கள்.

நீ அவர்களிடம் சொல்கிறாய். என்னால ஒண்ணை – யும் குடிக்க முடியாம இருக்கு. நீங்க ரெண்டு பேரும் ஏதாவது ஊசியைப் போட்டு என் நெஞ்சுக்க அடைப் பதை எடுத்து விடுங்களன்.”

அந்த வேதனைக் குரல் இப்போதும் என் நெஞ்சைப் பிழிகின்றது. நேற்று மத்தியானம் சிங்கள வைத்தியன் மந்திரித்துத் தந்த தண்ணீரைக் குடித்தாய் எனக் கேள்விப் பட்டு அசட்டு நம்பிக்கை கொண்டிருந்தேனே. நீ தண்ணீரைக் குடித்தாய் என்று எல்லாருமே என்னிடம் பொய் சொன்னார்களா?

நேற்றுச் சாயந்தரம் சின்னஞ்சிறு கரண்டியால் நான் உன் வாயிலிட்ட தண்ணீர் கூட உன் குடலுக்குட் சென்று இருக்குமா?

துரைலிங்கம் மாஸ்ரர் என்னிடம் சொல்கிறார், “அக்காவைப் பாடசாலையிற் கொண்டு போய் வைக்க வேணும். எங்கள் மாணவர்களும் பெற்றோர்களும் எத்தனையோ முஸ்லிம் பெண்களும் அவரைப் பார்க்க விரும்புகிறார்கள்.”

நான் மௌனமாக இருக்கிறேன்!

பெரியண்ணன் சொல்கிறார். ”மூணு மணிக்குக் கோயிலுக்குக் கொண்டு போவோம். அரை மணித் தியாலம் அங்க பூசை நடக்கும், அங்கிருந்து பாடசாலைக் குக் கொண்டு போகலாம். அங்க வைத்திருந்து ஐஞ்சரை மணியளவில் சவக்காலைக்குக் கொண்டு போவம்.”

“கடைசி லோஞ்சு வரும் வரையும் ஆறு, ஆறரை மணி மட்டும் பாடசாலையில் வைத்திருக்க வேண்டும்” என்று திருத்தஞ் சொல்கிறான் என் தம்பி ஸ்ரனிஸ்லாஸ்.

மூத்த மகள் வசந்தி என் கையைப் பிடித்து ”அப்பா கோப்பியாவது குடிக்க வாருங்கள்”

‘என் மகளே! இந்தச் சின்னஞ்சிறு வயதிலே இந்தப் பென்னம் பெரிய குழந்தையை அம்மா உன்னிடம் கையளித்துவிட்டுப் போய்விட்டாளா? நேற்று உன்னிடம் ‘நீ அழாதே. நீ அழுதால் அப்பாவும் அழுவார். அப்பாவை அழாமற் பார்த்துக் கொள்!’ என்று உன் அம்மா சொன்னாளாமே’ என்றெண்ணிக் கொண்டே என் இதயம் அழுது வடிக்கிறது. –

ஆனாலும் நான் வெளிப்படையாகச் சொல்கிறேன், “கோப்பி குடிக்கத்தான் வேணும், சாப்பிடவும் வேணும். உன் அம்மா நான் பட்டினி கிடப்பதை என்றைக்குமே சகித்துக் கொண்டிருக்க மாட்டாள். அத்தோட எனக்கு சட்டையும் வேட்டியும் கொண்டு வா. நான் இப்படி அலங்கோலமாக இருப்பதை உன் அம்மா பொறுக்க மாட்டாள்.”

வீட்டினுள்ளே ஓலமும் புலம்பலும் உரத்துக் கேட் கிறது. உன் உடன்பிறவா அக்கா கணேஸ்வரியும் அவள் மச்சாளும் சுன்னாகத்திலிருந்து வந்து விட்டார்கள் என்பது எனக்குத் தெரிகிறது.

“மட்டக்களப்பிலிருந்து ராசேந்திராவும் வந்து விட்டான்” என்கிறான் தாசன். வீட்டிலோ தெருவிலோ எங்கே சந்தித்தாலும் ‘எண்ட மச்சாளே’ என்று உன்னை அணைத்துக் கொள்வானே. அவன் அழுவது எனக்குக் கேட்கிறது.

பகல் இரண்டு மணிக்கு உன்னைக் குளிப்பாட்டிக் கூறைச் சேலையும் அணிவித்து மண்டபத்திலே கிடத்தியிருக்கிறார்கள்.

உன்னைக் கோயிலுக்குக் கொண்டு போவதற்காகச் சுவாமியாரும் கோயிலிலிருந்து புறப்பட்டு விட்டாராம்.

பங்குக் குரு சொய்சா மட்டும் வருகிறார். அவர் பின்னால் அரச ரத்தினம், காமினி, சந்திரா, ஜோசப் மேரி. இவர்களெல்லாம் எங்கிருந்து வந்தார்கள்? எப்போ வந்தார்கள்?

தன் கூட்டாளியான காமினியைக் கண்டதும் உன் அழகு மகனான சின்னஞ்சிறு நோயெல் very good, good morning father என்று தன் கிண்டர்காடின் ஆங்கிலத்தில் வரவேற்கிறான்.

“என் பிரெண்டுக்கு ஏதுமே விளங்காதே” என்று மழலைத் தமிழ் பேசிக் கண்ணீர் வடிக்கிறார் காமினி பெர்னாண்டோ அடிகளார்.

“என்னிடம் ஐந்து விருந்தினர்கள் வந்திருக்கிறார் கள்” என்று வேலிக்கப்பால் நின்று சொன்னால் பத்துப் பேருக்கே விருந்துச் சாப்பாடு அனுப்பி விடுவாவே லில்லி ரீச்சர்” என்று கண்ணீர் வடிக்கிறார் அரசரத்தினம் அடிகளார்.

“என்னடாப்பா நடந்தது?” உரிமையோடு என்னை அணைத்து விசாரிக்கிறார் ஜோசப் மேரி அடிகளார்.

உறவினரான சந்திர பெர்னாண்டோ அடிகளார் ஏதுமே பேசாது அமைதியாய்க் கண் கலங்குகிறார்.

வெளியிலே நின்ற என்னை யார் யாரோ உள்ளே இழுத்துச் செல்கிறார்கள். என் மச்சான் அடைக்கலம் என்னை அசையவிடாமற் பிடித்துக் கொண்டிருக்கிறார். சனக் கூட்டத்தை விலக்கி உன் முன்னால் என்னை நிறுத்துகிறார்கள்.

“தாலியைக் கழற்று தம்பி” லீயோ அண்ணன் அழுகிறார்.

நான்கைந்து கைகள் என் வலக்கையை உன் தாலியருகே இழுத்துச் செல்கின்றன.

என்ன செய்வது என்று தெரியவில்லை. என்ன செய் தேன் என்பதும் தெரியவில்லை. தலையிலடித்துக்கொண்டு அழும் என் சகோதரர்கள் ஐவரோடும் என் சகோதரி யோடும் சேர்ந்து அழத்தான் முடிந்தது. அது தான் செய்யக் கூடியதாய் இருந்தது.

அந்தச் சடங்கு முடிந்ததும் நான் மீண்டும் வெளியே இழுத்து வரப்படுகின்றேன். குழந்தைப் பருவத்திலிருந்து, நம்மோடு நமது பிள்ளையாகவே வளர்ந்த நம் சகோத ரங்களின் மகள் காமலின் ‘பெரியம்மாவைப் பார்க்கப் போறன்” என்ற வார்த்தைகளையே திருப்பித் திருப்பிச் சொல்லித் திமிறிக் குமுறிக் கொண்டு உன்னிடமே வர முயல்கிறாள்.

சனக் கூட்டத்தை விலக்கி, அவளை உன்னிடம் கொண்டு போகவென்று நானும் முயல்கிறேன். அடைக் கலம் மச்சாள் என்னை இன்னமும் பலமாகத்தான் பிடித்துக்கொண்டு இருக்கிறாள்!

என் மகளே! இந்த நிமிடந்தொட்டு உன் பெரியப்பா எதையுமே செய்யத் திராணியற்றவன் என்பதை நீ விளங்கிக் கொண்டாயா?

ஒன்றுக்கும் உதவாதவனாக நான் வீட்டுக்கு வெளியே தள்ளிவிடப் படுகிறேன். வெளியே நிர்க்கதியாக விடப்பட்ட என்னை நான் மகனாகவே நேசிக்கும் துரைரத்தின சிங்கம் இறுகத் தழுவிக்கொண்டு விம்மிவிம்மி, விம்மி விம்மி அழுகிறான்.

இருவரதும் அழுகை ஓய்ந்தபோது என் மனம் எங்கோ தாவுகிறது,

தாலியும் கூறையும்! நான் உனக்குத் தாலி வாங்கி வந்தேனா? கூறைவாங்கி வந்தேனா? கூறைச் சீலையோடு நீ போக, தாலியை நான் வைத்துக்கொள்ள…. அந்த ஜனவரி மாதம் நான்காந்திகதி, உனக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த நம் பிணைப்பை எப்படியோ ஊர் தெரிந்து கொள்கிறது.

உன் அக்காவுக்கு ஆத்திரம்! என்னை விரும்பாததால் அல்ல நீ அவளை முந்திக் கொண்டு குடும்பத்திற் குழப் பத்தை உண்டாக்கி விடுவாய் என்று.

ஊரிலேயும் நம்பிணைப்புக்குச் சாதக பாதகமான கருத்துக்கள்.

நானோ எதையும் பொருட்படுத்தாமல் அமைதி யாகவே இருக்கிறேன். நானும் என் எழுத்தும்!

அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஈழகேசரியில் ‘அந்த விருந்து’ என்ற என் சிறுகதை பிரசுரமாகிறது.

‘கொழும்பிலே உத்தியோகம் பார்க்கும் ஒருவர் நத்தாருக்கு நத்தார் ஊருக்கு வரு கிறார். ஒவ்வொரு முறையும் ஊருக்கு வரும்போது, அவருக்கு மணம் பேசியிருப் பவளின் வீட்டில், அவ்வுத்தியோகத் தருக்கு விருந்து நடக்கிறது. என்னென் னவோ காரணங்களைச் சொல்லி அவர் திருமணத்தைக் கடத்திக்கொண்டு வரு கிறார். ஒவ்வொரு விருந்துக்கும் அவர் வந்து போன பின்னால், அப்பெண் அழு

கிறாள். என்பதாகக் கதை அமைந்திருந்தது.

அக்கதையைப் படித்தவர்கள் சிலர் நான் உன் அக்காவைக் கேலி பண்ணவே இக்கதையை எழுதியதாகத் ‘திரி’ வைக்கிறார்கள். உன் அக்கா எரிமலையாகிறாள்!

அந்த வருடம் வைகாசி மாதம் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வருகிறது. நம் இருவர் குடும்பத்தினரும் எதிர்எரர் அணிகளில் நிற்கிறார்கள். இடையிலே உள்ள வர்கள் அவர்களை மேலும் பிளவு படுத்துகிறார்கள்.

“நீ எவருக்காகவும் காத்திருக்க வேண்டாம். வேறு யாரையாவது உடனடியாக மணம் செய்து கொள்” என்று நெருக்குகிறார்கள் என் வீட்டினர்.

ஆவணி மாத விடுமுறையில் நிலைமை மோசமடை கின்றது! நான் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை மனதிற் சிந்தித்துக்கொண்டே என் வீட்டார் சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டி வைக் கிறேன்.

உனக்கும் எனக்கும் விடுதலைக் காலத்தில் நேரடித் தொடர்பு இல்லாததினால் நீயும் என்னைச் சந்தேகிக் கிறாய். யோசப் வாஸ்தான் உனது சந்தேகத்தைத் தூதனாக நின்று தெளிவிக்க முயல்கிறான்.

விடுதலை முடிவடைந்தபோது, நீ உன் தந்தையும் மனோகரனும் மட்டுமே துணைவரக் கிண்ணியாவிற்குப் போகிறாய. சங்கானை அக்கா இருக்கிறாள் என்ற தைரியம் உனக்கு! நானும் மொறட்டுவா விற்குப் போகிறேன்.

‘மொறட்டுவா’விற்குப் போகும் வழியில் நான் கிண்ணியாவிற்கு வருவேன் என்து நீ எதிர்பார்த்தாய். என் வீட்டாருக்குப் ‘பிடி’ கொடுத்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டே நான் கிண்ணியாவிற்கு வராமலே மொறட்டுவா விற்குப் போகிறேன். நான் உன்னை மறந்து விட்டேன் என்று என் வீட்டாரும் திருப்தியடை கிறார்கள்.

உன் சந்தேகம் வலுக்கிறது! நீ கிண்ணியாவிலிருந்து உன் பேனாவைக் கண்ணீரிற் தோய்த்து எனக்குக் கடிதம் எழுதுகிறாய். தற்கொலை செய்துகொள்வேன் என்று பய முறுத்துகிறாய்..

அப்போது அகிலனின் ‘நெஞ்சின் அலைகள்’ என்ற பரிசு பெற்ற நாவல் கலைமகளில் வெளியாகிக் கொண்டு இருந்தது என எண்ணுகிறேன். அந்நாவலின் கதா நாயகன் கூறிய வார்த்தைகளை நான் உனக்கு எழுது, கிறேன்.

இந்த உலகிலே எத்தனையோ நயவஞ்சகர் களும் கயவர்களும் வாழ்கிறார்கள். அயோக்கியர்களும் உலுத்தர் களும் வாழ் கிறார்கள். நீயும் நானுமா வாழக்கூடாது?

வாழ முடியாது? என் வீட்டாருக்குப் பயந்து இதுவரை ‘அஞ்ஞாத வாசம்’ புரிந்த செல்லையா அண்ணனும் குருநாகலில் இருந்து எனக்கு உருக்கமான கடிதங்கள் எழுதுகிறான்.

உனக்குக் கடிதத்தை எழுதிவிட்டு அந்த வாரக் கடைசியிலேயே நான் – உன்னிடம் வந்தேன்.. அதன் பின்னர் ஏறத்தாழ ஒவ்வொரு வாரமுமே நான் கிண்ணி யாவிற்கு வந்தேன்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் உள்ளத்தால் இணைந்த நாம் ஐப்பசி மாதத்து இரண்டாம் சனிக் கிழமை உடலாலும் இணைகிறோம்.

இரகசியமாக மணம் முடிக்க முடிவு செய்து கொள் கிறோம். அதற்கு மூதூரின் பங்குக் குருவரான ஹமில்ரன் அடிகளாரோடு கடிதத் தொடர்பு கொள்கிறேன். ‘

இரு குடும்பங்களும் ஒற்றுமையில்லாத நிலையில் நீ இங்கும் நான் அங்குமாய் எப்படி வாழ்வது? என்ற கவலையும் என்னைப் பீடிக்கின்றது.

என்னைத் தமிழிற் பேசிக் குழப்பிவிட முடியாது. ஆங்கிலத்திற் பேசித்தான் குழப்ப வேண்டும் என்று திட்ட மிட்டுக் கொண்டோ என்னவோ ஒரு பக்க வாதம் பேசும் ஆங்கிலந் தெரிந்தவரும் அடிக்கடி என்னிடம் வருகிறார். அவர் என் தொட்டப்பா’ (ஞானத் தந்தை).

அவரது ஆங்கிலப் பேச்சையும் என் குழப்பத்தையும் கண்ட, நான் போடராக’ இருந்த வீட்டுக்காரி ஒல்கா பெர்னாண்டோ தெம்பு சொல்கிறாள்.

“மாஸ்ரர், நீங்க ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். ஊரிலே இல்லாவிட்டாலும் எங்களூரான சிலாபத்துக்குக் கூட்டி வாருங்கள். அங்கேயே மணம் முடிக்கலாம். சிலாப மேற்றிராசனத்திலேயே உங்களிருவரும் ஒரே பாட சாலையிலேயே உத்தியோகம் எடுத்துத் தரவும் என்னால் முடியும்.”

ஆனால் அதற்குள் மூதூரிலிருந்து ஹமில்ரன் அடிகளார் எழுதிய கடிதம் எனக்கு வழியைக் காட்டு கிறது. அவர் எழுதியிருந்தார்.

“நீங்கள் இருவரும் வயது வந்தவர்கள். மணம் முடிக்க எந்தத் தடையும் இல்லை. உன் விருப்பப்படி இரகசியமாக மனம் முடிக்க எல்லா ஒழுங்குகளையும் செய் வேன். அத்தோடு மிக விரைவிலேயே உம்மைத் திருக்கோணமலை புனித சூசை யப்பர் கல்லூரிக்கு மாற்றவும் ஒழுங்குகள் செய்வேன். என் கடிதத்தோடு கொழும்பு அதிமேற்றிராணியாரைச் சந்திக்கவும். என்ன காரணம் பற்றியும் பதிவுத் திருமணம் செய்வதைப் பற்றிச் சிந்திக்

கவும் வேண்டாம்” அவரது கடிதத்தைக் கண்ட பின்னர் விடயங்கள் துரிதமாக நடைபெறுகின்றன.

டிசம்பர் மாதத்து எட்டாந்திகதி, அமலோற்பவத் திருநாளன்று நான் சல்பிட்டி கோறளை விவாகப் பதிவு காரனிடம் நோட்டீஸ் போடுகிறேன்.

தம்பலகாமத்தில் நீ அதைச் செய்கிறாய். ஆனாலும் கல்யாணம் என்றால் பணம் வேண்டாமா? அது எந்தக் காலத்தும் என்னிடம் இருந்ததில்லை கடன் வாங்குவ தென்பது எனக்குத் தெரியவே தெரியாத ஒரு விடயம்!

என் மாதச் சம்பளத்தில் என் விடுதிச் செலவுகளை செலுத்திவிட்டுச் சில புத்தகங்களையும் வாங்கி விட்டால் என்னிடம் மீந்தியிருப்பது சில ரூபாய்களே.

அதையிட்டு நான் கவலைப்பட்டதும் இல்லை. நிம்மதியாகப் புத்தகங்களில் மூழ்குவேன். அல்லது எழுதுவேன்.

இந்த லட்சணத்தில் தான் டிசம்பர் மாதம் இருபத்தி ரண்டாந்திகதி காலையிற் தம்பலகாமத்தில் புகை யிரத்தை விட்டிறங்கிக் கிண்ணியாவுற்கு நடந்தேன்.

என் கையிலே சின்னஞ்சிறிய சூட்கேஸ். இரண்டு சோடி உடுப்புக்கள். சாறன், துவாய் இரண்டு புத்த கங்கள், சல்பிட்டி கோறளை விவாகப் பதிவுக்காரரிடம் இருந்து பெற்றுக் கொண்ட கல்யாண நோட்டீசின் பிரதி, எந்தக் கோயிலிலும் மணம் முடிப்பதற்காகக் கொழும்பு அதிமேற்றிராணியாரிட மிருந்து பெற்றுக் கொண்ட விசேட அனுமதிக் கடிதம், மூன்று பத்து ரூபாய், நோட்டுக்களும் சில்லறைகளும்…

காலையிற் பாவுற்கு நட. இரண்டி கல்யாணத்திற்கு வரும்போது என்னிடமிருந்த தாவர சங்கமச் சொத்துக்கள் எல்லாமே இவைகள் தான்.

தாலியையும் கூறையையும் பற்றி நான் சிந்திக்கக் கூட இல்லை .

அடுத்த நாட்காலை திருக்கோண மலை மேற்றி ராசனக் கோயிலில் ஆடம்பரமான பாடற் பூசையில் எளிமையாகவே நம் திருமணம் நடைபெறுகின்றது.

இன்று மூதூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் உனக்காகத் துக்கப் பூசை பாடப் படுகின்றது.

பூசை முடிவடைந்ததும் உன் சடலம் புனித அந்தோனியார் பாடசாலைக்குக் கொண்டு செல்லப் படு கின்றது.

உன் சடலத்தைச் சுமந்து செல்ல என் உள்ளம் துடிக் கிறது. ஆனால் துரைரத்தினம் என்னைப் பிடித்த பிடியை விடமாட்டேன் என்கிறான். ஊர்வலம் வீதியை அடைகின்றது! ஒரே சனத்ட்ர ள்! அரை மைல் தூரத்திற்குமேல் ஊர்வலம் நீள்கிறது! நான் பிரமிக்கிறேன்!

என் ஐம்பதாண்டு வாழ்க்கையிலே, திருக்கோண மலை வட்டாரத்திலேயே, நான் கண்டிராத மிகப் பிரமாண்டமான பிரேத ஊர்வலம்!

அக்கூட்டத்தைக் கண்டு, நான என் துயரங்களை எல்லாம் மறந்து பெருமைப் படுகின்றேன்.

தங்கம்! நீ என் இதயத்தில் மட்டுமல்ல, ஆயிரக்கணக் கானவரின் இதயங்களிலே நீ ஒரு காவிய நாயகியாகவே. இடம் பெற்றாயா?

எழுத்தாளனின் மனைவி என்பதற்காக நீ உள்ளூரப் பெருமைப்பட்டதை நான் அறிவேன். இப்போது ஒரு, காவிய நாயகியின் கணவன் என்பதற்கல்லவா நான் பெருமைப்பட வேண்டியிருக்கிறது!

ஊர்ந்து சென்ற பிரேத ஊர்வலம் அந்தோனியார் பாடசாலையை அடைந்ததும், உன் சடலம் அப்பாட சாலையில் நீ கட்டியெழுப்பிய புதிய மண்டபத்தில் மக்க ளின் பார்வைக்காக வைக்கப்படுகின்றது. மூதூரில் புதிய சரித்திரத்தையே நீ எழுதுவிக்கிறாய்.

சனக் கும்பல் வரிசையாக வந்து உன்னைப் பார்த்துச் செல்கிறது. பெற்றார், பிள்ளைகள், மாணவர்கள், முக்காடிட்ட முஸ்லிம் பெண்கள்…..

பார்த்துச் செல்கையிலேயே பலர் கதறியழுகிறார்கள். சாவகச்சேரியிலிருந்து அப்போது தான் வந்து சேர்ந்த விக்ரர், தன் கைப்பையை எங்கேயோ வீசி எறிந்துவிட்டு விம்மியழுகிறான்.

ஆனால் நான் இப்போது அழவில்லை. அழவும் மாட் டேன். நீ கட்டியெழுப்பிய விஞ்ஞான கூடத்தின் தண்ணீர்த் தாங்கியிற் சாய்ந்து கொண்டு பெருமையோடு நிற்கிறேன்!

“வானா ஆனா என்ற எழுத்தாளன் செத்துப் போனான் என்று சொன்னேன் அல்லவா? அவன் சாகவே மாட்டான். ஏனென்றால் ஒரு காவிய நாயகியாக இடம் பெற்ற லில்லியின் கதையை அவன் எழுத வேண்டும்” என்று என் அருகில் நின்ற எஸ். பொவிடம் சொல்கிறேன்.

ஒரு பகல் முழுக்க மகா மசான அமைதியைக் கடைப் பிடித்த எஸ். பொ. என் முதுகிற் தட்டிக் கொண்டே “ஆம். அது தான் சரி. நீ மட்டும் எழுத்தை மறந்தா யானால் அது உன்னை எழுத்தாளனாக வளர்த்து விட்ட வளுக்கு நீ செய்யும் துரோகமாகவே முடியும்” என்கிறான் தன் மௌனத்தைக் கலைத்து.

“இல்லை. மறக்க மாட்டேன், ஒஸ்கார் வைல்டின் வானம்பாடி ரோஜா முட்களிற் தன் இதயத்தை அழுத்திக் கொண்டு சாவிலே பூர்த்தியாகும் காதலையும், சமாதி யிலும் சாகாத காதலையும் பாடிற்றாமே. நானும் அவள் ‘பிரிவு’ என்ற கோரமான முட்களில் என் இதயத்தை அழுத்திக் கொண்டு அவள் கதையை எழுதியே தீருவேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கும் தமிழ் , இலக்கியத்திலே புலவர்களுக்கும் எழுத்தாளர்கட்கும் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறதே தவிர அவர்களை உருவாக்கிவிட்ட அவர் மனைவியர் கட்குச் சரித்திரமே கிடையாது. தமிழ் இலக்கியத்துக்கே முற்றிலும் புதுமையான அக்கலைப் படைப்பை நான் படை.த்தே தீருவேன்!”

என் சிருட்டி காலத்தாற் சாகாது. காலத்தின் ஏலத் தால் மலியாது!

லில்லி சிருட்டித்து விட்ட ‘வானா ஆனா’ என்ற எழுத்தாளனும் காலம் காலமாய்க் கற்பாந்த காலம் வரை வாழுவான்.

– வீரகேசரி 1975

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *