ஒரு காதல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 17,856 
 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காதலித்துக் கல்யாணம் செய்யக் கொடுத்துவைக்கவில்லை எனக்கு என் நண்பன் ராகவனுக்குத்தான் கிடைத்தது அந்தப்பாக்கியம்.

சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணம் செய்து வைத்துவிட்டார் கள். அப்பொழுது என் மனைவிக்கு அறியாப்பருவம். அவள் என் தாய் மாமன் மகள். பிறந்த உடனேயே எங்கள் தாய்தந்தையர்கள் எங்களுக் குக் கல்யாண நிச்சயதார்த்தம் செய்துவிட்டார்கள். எங்களுடைய கல்யாண வைபவங்கள் கூட எனக்கு ஞாபகம் இல்லை. ஒன்றே ஒன்று தான் தெளிவாக இருக்கிறது.

திருப்பூட்டல் முடித்தபின், எங்களை ஒரு பானை இருக்கும் இடத் துக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அதில் நிறையத் தண்ணீர் இருந்தது. அந்தப் பானையின் மேல் வெளிப்பக்கம் வெள்ளையடிக்கப் பட்டிருந்தது. அதன்மேல் ஒரு பூங்கொடி சுற்றிக் கிடப்பது போல் செம்மண்ணால் கோலம் வரைந்திருந்தார்கள். இலைகளுக்குப் பச்சை நிறம் தேய்த்திருந்தார்கள், புளிச்சை தாரினால் சுற்றப்பட்ட புத்தம்புதிய பிரிமணையின்மேல் அந்தக் கோயப்பானை வைக்கப்பட்டிருந்தது.

புரோகிதரும், சுற்றத்தாரும் எங்களை அதன் அருகே அழைத்துக் கொண்டு போனார்கள். பானை மத்தியில் இருக்க, நாங்கள் இருவரும் எதிர் எதிராக உட்கார்ந்தோம். புரோகிதர் ஒரு சங்கை எடுத்துத் தண்ணீருக்குள் போட்டார். உடனே நாங்கள் சங்கை எடுக்க முத்தி னோம், எங்கள் கைகள் துளாவுகிற வேகத்தில் பானைக்குள் சங்கு இருக்கும் இடமே பிடிபடமாட்டேன் என்றது. சபையிலுள்ளவர்கள் ‘விடாதே, விடாதே’ என்று உற்சாக மூட்டினார்கள், பெண்கள் பகுதி தான் இந்த விளையாட்டில் அதிகம் உற்சாகம் காட்டியது.

‘எச்சுமி! விடாதே எச்சுமி! விடாதே’ என்று கீச்சுக்குரலில் கத்தினார்கள். ஆண்கள் பகுதியிலிருந்து ஒரு கனமான குரல், ‘அவள் கையைத் திருகிப் பிடுங்கு” என்று கேட்டது. அந்தக்குரல் யாருடையது என்று எனக்கு ஞாபகம் இல்லை. ஒருவேளை அது லட்சுமியினுடைய தகப்பனாரின் குரலாகவேகட இருக்கலாம். தான் துனாவுகிறதை விட்டுவிட்டு லட்சுமியின் கையைப் பிடித்தேன். சங்கு அவள் கையில் தான் இருந்தது. என்னை எச்சரித்த குரலுக்குத்தான் எவ்வளவு அனுபவம்!

அதைப் போட்டவுடனே எடுத்துக்கொண்டு, இப்போது அகப் படாதது போல என்கூடவும் சேர்ந்து கொண்டு அவளும் துளாவிக் கொண்டிருந்திருக்கிறாள். அவள் கையிலிருந்து நான் சங்கைப் பிடுங்க முயன்றேன். அவன் விடுவதாக இல்லை. என் பெருவிரலின் கனமான நகத்தைக்கொண்டு வசமாக அவளுடைய கைவிரலில் பதித்தேன், சங்கு என் கைக்கு வரவில்லை; அதற்குப் பதிலாக லட்சுமிக்கு கண்ணீர் வத்தது. அவள் அழுவதைப் பார்த்துச் சூழ இருந்தவர்கள் சிரித்தார்கள் சந்தோசப்பட்டு.

நான் மேலும் மேலும் நகத்தை ஆழமாகப் பதித்துக்கொண்டேயி குந்தேன். வலிக்க ஆரம்பித்துவிட்டது என் கை என்னால் இனி முடியாது என்று கையைத் தளரவிட்டதும், என் கைக்குள் சங்கு வந்தது. லட்சுமிக்கு அப்போது ஏழு வயக.

இப்பொழுது எப்போதாவது லட்சுமியிடம் நான் அதை ஞாபகப் படுத்தினால், தன் இரண்டு கைகளாலும் முகத்தைப் பொத்திக் கொண்டு ‘களுக்’ என்று சிரிப்பாள்.

அவளுடைய ஆள்காட்டி விரலில் இன்னமும் அந்த நகக்குறியின் தமும்பு மாறாமல் இருக்கிறது.

என்னுடைய நண்பன் ராகவனின் திருமணத்தில் இந்தமாதிரி யான அநாகரிகங்கள் கிடையாது. அது வெகு ‘சிம்பிள்’.

நான் என் மனைவியைப் பார்க்கவும் பேசவுமே ‘தவம்’ இருந்து தான் பெறவேண்டும். ஆனால் ராகவனுக்கு அப்படியா, அவன் கொடுத்து வைத்தவன். அவன் மட்டுமென்ன, உலகத்தில் காதலித்துக் கலியாணம் செய்துகொண்டவர்கள் எல்லாருமே கொடுத்து வைத்தவர்கள் தான்.

எங்கள் கலாசாலையிலேயே ஆண் அழகன் என்று பரிசு வாங்கியவன் ராகவன். அவனை அழகு ராணியான மேரி காதலித்ததிய எங்களுக்கு ஆச்சரியமே இல்லை.

ஒருநாள் மாலை.

ஹாஸ்டல் ரூமில், நான் அப்பொழுதுதான் தூங்கி விழித்திருந்தேன், ராகவன் வந்தான். அப்பொழுது அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. காய்ச்சலில் அடிபட்டவனைப்போல் உதடுகள் வறண்டு போயிருந்தன. வந்ததும் கதவை அடைத்துத் தாளிட்டான். படுக்கை யில் என் பக்கத்தில் நெருங்கிவந்து உட்கார்ந்தான். ஒரு நாளும் அவன் அவ்வளவு நெருங்கி உட்கார்ந்ததில்லை..

‘என்ன ராகவா, உடம்புக்குச் சுகமில்லையா? என்று அசுவாரஸ் யமாகக் கேட்டேன்.

‘ம்ஹும் ஒன்றுமில்லை’ என்ற பாவனையில் தலையசைத்தான். நான் மேலும் வற்புறுத்தவில்லை. ஆனாலும் விஷயம் ஏதோ நடத் திருக்கிறது என்று மட்டும் பூகித்துக்கொண்டேன். அவன் எதையோ நினைக்கிறது போலவும், சொல்லுவமா வேண்டாமா என்று தயங்குவது போலவும் பட்டது. அவனைவிட எனக்குத்தான் இது சங்கடமாக இருந்தது. கடைசியில் ராகவனே அந்தத் தேக்கத்தை உடைத்தான்.

சட்டையின் கை மடிப்பிலிருந்து ஒரு மணம் வீசும் கடிதத்தை எடுத்துக்கொடுத்தான். எழுந்திருந்து உட்கார்ந்து ஆவலோடு பிரித்தேன். தலைப்பில் சிலுவைக் குறி போட்டிருந்தது. கடிதம், ‘டிம்மி சைசுக்கு’ இரண்டு பக்கம் வரைந்து தள்ளியிருந்தது. ‘என் பிரபு அவர்களுக்கு’, என்று ஆரம்பமாகியிருந்தது. “உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்க்கும், ராணி மேரி என்று முடிவடைந்திருந்தது.

எனக்கானால் சந்தோஷம் பிடிபடவில்லை. ‘சபாஷ், பேஷ்’ என்று அவன் முதுகில் ரெண்டு குடுப்புக்கொடுத்தேன். விரித்த கடிதத்தோடு அவனைச் சுற்றிச்சுற்றி வந்து, நாட்டியம் ஆடினேன். என் செய்கை எதுவும் அவன் மனசைத் தொடவில்லை. அப்புறம் உட்கார்ந்து கடிதத்தை மௌனமாக வாசித்தேன். இடையிடையே கடிதத்தில் உணர்ச்சியான கட்டம் வரும் போது அவனைப் பார்ப்பேன். கடிதத்தை இப்பொழுது அவனால் பார்க்காமல் ஒப்பிக்கமுடியும் என்று தெரிந்தது; அதாவது, அத்தனை தடவை அதை அவன் வாசித்திருந்தான்.

அதில் சுற்றிச்சுற்றி ஒரே விஷயம் மாறிமாறி சொல்லப்பட்டிருந்தது. “நான் உம்மைக் காதலிக்கிறேன்; நாம் இருவரும் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும்; எப்படியாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்.’ – இதுதான் விஷயம்.

“ராஜா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

“நிளைக்கிறதாவது, முதல் காரியம் கல்யாணம்” என்று சொன்னேன்.

“இல்லை” என்பது போல் அவன் தலையை அசைத்துவிட்டு, “நீ தமாஷ் பண்ணாதே என்னை; நான் என்ன செய்ய என்கிறதைச் சொல்லு. எனக்கு ஆறுதலாக ஏதாவது சொல்லு” என்றான்.

இருவரும் வெகுநேரம் யோசித்தோம், யோசித்தோம்; எவ்விதமான முடிவுக்கும் வரமுடியாமல், இன்னதான் செய்கிறது என்று தெரியாமல் தவித்தோம். இரவு வந்துவிட்டது. அதோடு இன்னொரு கடிதமும் வந்தது.

‘பெண்ணாகிய நானே வெட்கத்தைவிட்டுக் கடிதம் எழுதியிருக்கிறேன்; நீங்கள் ஆண்பிள்ளை, என்ன தயக்கம்? விரைவில் உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்’ என்பது அந்தக் கடிதத்தின் சுருக்கம்.

‘சரி; சம்மதம். சீக்கிரமே கல்யாணத்தை முடித்துக்கொள்வோம்’ என்று கடிதம் எழுதி ராகவன் மேரிக்கு அனுப்பினான்.

கடிதத்தின் பெரும்பாலான வாசகங்களின் பிரயோகங்கள் நான் கொடுத்தவையே. அதை ராகவன் ‘ஆயிரம் தடவை’ படித்துப் படித்து ஆனந்தப்பட்டான்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ராகவனும் மேரியும் இதுவரை தனியாகச் சந்தித்து அளவளாவியது கிடையாது! தான்கு பேருக்கு நடுவில், வகுப்பில், வாசகசாலையில், கலையரங்கில், மேடை யில் பழகியதுதான். தன்னைப்பற்றி இப்படி ஒரு அபிப்பிராயம் மேரி கொண்டிருப்பாள் என்று ராகவன் கனவிலும் கருதியிருக்கவில்லை. அவ்வளவு உயாந்தவள் அவள்.

மறுநாள் காலை, நானும் ராகவனும் கலாசாலையிலுள்ள வாசகசாலைக்குப் போகிற பாதையில் தோட்டத்திலுள்ள ஒரு மரத்தடியின்கீழ் நின்று இரவு ராணிச் செடியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தற்செயலாக அங்கு வந்துவிட்ட மேரி சற்றுத் தயங்கினாள். ஆனாலும் எங்களை நோக்கி வந்தாள். வந்துகொண்டே என்னைப் பார்த்து, ‘நண்பர்கள் இருவருக்கும் பணிவான என் காலை வந்தனங்கள்’ என்று ஆங்கிலத்தில் சொன்னாள்.

அவள் அருகில் வந்ததும், கிருஸ்தவர்களுக்கே உண்டான ஒருவித வாசனை அவளிடமிருந்து வீசியது. கண்களைப் பார்த்ததும் இரவில் அவள் தூங்கவில்லை என்று தெரிந்தது. ஈரத்தலையை தொங்காரமாக விட்டு முடித்திருந்தாள், கத்தரிப்பூக் லரில் பளபளக்கும் அரைக்கை சோனி. அழுத்தமான ஜரிகைக் கரையிட்டது. தும்பைப்பூவைப்போல் வெருமையான சேலை, கழுத்தில் ஒரு லாய் செயின்; அதன் கீழே ஒரு சிலுவைத் தொங்கட்டாம். ஆரோக்கியமான கழுத்து. ஐந்து சிறிய முத்துக்கள் பதிக்கப்பட்ட தோடு. ரோஜாப்பூவைப்போல் சுத்தமான வாய், அவள் அணிந்திருந்த காலணிதான் அந்தச் சிறிய பாதங்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருந்தது!

ஒரு தடவை தான் விடுமுறையில் ஊருக்குப் போயிருந்தேன். அது உயர்நிலைப்பள்ளியின் கடைசி வருஷம், லட்சுமி ‘மனுஷியானதுக்குப் பிறகு அப்போதுதான் முதலில் கனருக்கு வருகிறேன். என்னுடைய வீட்டுக்கு நாலு வீடுகள் தள்ளித்தான் அதே தெருவில் வட்சுமியின் வீடும். வந்த காலோடு அவளுடைய வீட்டுக்குப் போனேன். அப்பொழுது காலை தேரம். ஈரத்துணியால் அப்போது தான் துடைக்கப்பட்ட கொல்லம் செங்கலின் மண்வாசனை இதயப் பைகளுக்குச் சுவாசிக்க இதமாக இருந்தது. பட்டகசாலையிலுள்ள பெஞ்சில் உட்கார்ந்தேன். மஞ்சக் கடம்பையில் அகலமான ஒரே பலகையில் செய்யப்பட்டிருந்தது அந்தப் பெஞ்சின் மேல்பாகம். சுண்டுவிரல் தண்டி கருங்காலிச் சில்லுகளால் நாலு புறமும் விளிம்பு கட்டியிருந்தார்கள். உபயோகித்த தேய்மானத்தினாலேயே அந்தப் பலகைக்கு ஒரு மிறுமினுப்பு உண்டாகியிருந்தது.

என் எதிரே ஒரு மறைப்புப் பலகை தன்மீது நீல வர்ண த்தைப் பூசிக்கொண்டிருக்கும் அந்த மறைப்புப் பலகை வீட்டினுள் நடமாடு கிறவர்களுக்கும் இங்கிருக்கிறவர்களுக்கும் மத்தியில் ஒரு “திரை’. தரையை ஒட்டி ஒரு முக்கால் அடி இடைவழி அதற்கு உண்டு. ‘எங்கே ஒருத்தரையும் காணோம்?

மல்லிகைப்பூவும் மரிக்கொழுந்தும் கலந்த வாசனை வந்தது. முதன்முதலில் அந்த வாசனையை நான் நுகர்ந்தது அந்த இடத்தில் தான். இந்தக் கலவை மணத்தை தான் எங்கெல்லாம் நுகர தேருமோ அக்கணமே வட்மியின் ஞாபகம் வந்துவிடும் எனக்கு

வாசனையைத் தொடர்ந்து சரசரவென்ற புதுப்பட்டின் உராய்த லொலி கேட்டு நின்றது. அந்த மறைப்புப் பலகையின் தரையிடை வழியில், ஒன்று சேர்ந்த இரண்டு பாதங்கள் காட்சியளித்தன. அவை மஞ்சள் குளித்திருந்தாலும், நிற்பதால் பிதுங்கும் இரத்த ஓட்டத்தின் செம்மை நிறம் தெளிவாகத் தெரிந்தது. மருதாணியின் கருஞ்சிவப்பு நிறத்தினால் கோலங்கள் பூண்டிருந்த அந்தப் பாதங்கள்… அரக்குச் சிவப்பில் ஜரிகைக்கரை கட்டியிருந்த சேலையின் விளிம்பு லேசாகத் தெரிந்தது. கண்கள் இமைக்காமல் அந்தப் பாததரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்,

சிறு சிரிப்புச் சத்தம் கேட்டுச் சுதாரித்தேன். ராகவன் என் தோள் மீது கையை வைத்தான். மேரியின் காலணி அணிந்த அந்தச் சிறிய பாதங்கள் தயங்கியபடி மௌள அடியெடுத்து வைத்து அந்த இடத்தை விட்டுச் சென்றுகொண்டிருந்தன.

ராகவன் – மேரி திருமணம் முடிந்தது. பதிவுப்பத்திரத்தில் தான் சாட்சிக் கையொப்பமிட்டேன்.

ராகவன் வீட்டில் இந்தத் திருமணம் பெரும் புயலை உண்டாக்கி விட்டது. அவன் தன்னுடைய வீட்டிற்கே போகமுடியாதபடி ஆதி விட்டது. கட்டிய வேஷ்டியோடு மேரியின் வீட்டில் அடைக்கலம் புகுவதைத்தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

மேரியின் தகப்பனார் ஒரு பாதிரியார். அவர் இந்த நிலைமைகளை மௌனமாகப் பார்த்து வெகுவாக ரஸித்து மகிழ்ந்தார்.

எங்கள் கலாசாலை வாழ்க்கை முடித்து, உத்தியோக வாழ்க்கை தொடங்கியது. எனக்கு வியாபாரமே உத்தியோகம்; ராகவன், மேரி இருவரும் உத்தியோகம் பார்த்தார்கள். அவர்களுடைய கலகலப்புக்கு அளவே கிடையாது. கை கோர்த்துக்கொண்டு பறந்தார்கள்; வானத்தில் மிதந்தார்கள். அவர்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும்போது எனக்கு ஜோடிப்புறாக்களின் நினைவுதான் வரும். அவர்கள் இருவரையும் விட உண்மையில் அதிக சந்தோஷம் அடைந்தது நானேதான். வாய்க்குவாய் லட்சுமியிடம் அவர்களின் இணை வாழ்க்கையைப்பற்றித் தாளித்துக் கொண்டேயிருப்பேன், அவளும் சலிக்காமல், ‘அப்படியா’ ‘ஓமோ’ ‘ஹம்,’ என்று மண்டையை ஆட்டிக்கொண்டே பற்கள் தெரியச் சிரித்துக் கேட்பான். சிலசமயம் அவள் ஆமோதிப்பது வேடிக்கைக் காகவோ என்றுகூடத் தோன்றும் எனக்கு என் எண்ணத்தின் கயிற்றை நான் எட்டிப் பிடிப்பதற்குள் லட்சுமி உஷாராகிக்கொண்டுவிடுவாள்!

கல்யாணமாகிப் பலதாள் கழித்து, அந்தக் காதல் தம்பதிகளை எங்கள் வீட்டுக்கு அழைத்திருந்தேன். அழைத்ததற்கு மேலும் முக்கிய மான காரணம் ஒன்று உண்டு, நாங்கள் குடும்பம் ஆரம்பித்து இத்தளை வருஷங்களாகியும் லட்சுமி என்னோடு வெளியில் இணை சேர்ந்து திரிய வரமாட்டாள். இது எனக்கு மிகவும் மனசைப் பாதித்தது. பட மாளிகைகளில் என்னோடு சமமாக உட்கார மறுத்துப் பெண்கள் பகுதிக்கே சென்றுவிடுவாள். பொது இடங்களில் மட்டும் என்போாடு அவள் தெருங்கி இருப்பதே கிடையாது. எனக்கு இது பெரிய குறை, இந்த ஒரே விஷயத்தில் மட்டும் அவளைச் சரிக்கட்ட முடியவில்லை என்னால்.

பஸ்ஸில் பக்கத்தில் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்துகொண்டு சிரித்துப் பேசி மகிழும் தம்பதிகளையும், தெருவழியாக கைகோர்த்துக் கொண்டு போகிற தம்பதிகளையும், கடற்கரையில் தோளில் கை போட்டுக்கொண்டும், சந்தோஷத்தால் தொண்டியடித்துக்கொண்டே ஓடுகிற ஜோடிகளையும் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கும். ஆனால் லட்சுமியோ இவைகளையெல்லாம் பார்த்துத் தன் றுடைய கோணல் சிறு செம்புன்னகையால் ஒதுக்கிவிடுவாள்.

ஒருதரம், ராகவன் தம்பதிகளோடு நான் ரயில் பிரயாணம் செய்ய தேர்த்தது. திடிரென்று ராகவன் மேரியின் துடையில் தலைவைத்துப் படுத்துக்கொண்டுவிட்டான். இதைப் பார்த்த நான் என் உள் மனசில் ‘சபாஷ்’ என்று சொல்லிக்கொண்டேன்.

அங்கிருந்த யௌவன ஸ்திரிகள் பொறாமையால் திரு திரு என்று முழித்தார்கள். சிலருக்கோ, என்ன தடத்திருக்கிறது என்று புரிந்து கொள்ளவே கொஞ்சநேரம் பிடித்தது! வயதான ஒரு வைதீக மனிதர் மேலே பார்த்துக்கொண்டு ‘உஷ்ஷ்’ என்று வாய்வழியே சுவாசத்தை வெளியே விட்டு அங்கவஸ்திரத்தின் நுனியால் வேகமாகச் சுழற்றி விசிறிக்கொண்டார். இதை நான் லட்சுமியிடம் சொன்னபோது அவள் மூக்கு விரியச் சிரித்தாள். அவள் சிரிக்கும்போது மூக்கு விரித்து துடிக்கும். அது பார்க்க அழகாக இருக்கும். அன்று வியாழக்கிழமை. அது என்னுடைய பிறந்த கிழமை. அதனால் அதுதான் லட்சுமிக்கு வெள்ளிக்கிழமை

தம்பதிகளை லட்சுமி ஆரத்தி சுற்றி வரவேற்றாள். இது மேரிக்குப் புதுசாகவும் வேடிக்கையாகவும்கூட இருந்தது. ஆரத்தியைவிட வாசல் முற்றத்தில் இட்டிருந்த கோலம் தான் மேரியை வெருவாகக் கவர்ந்தது. துனிக்கடத் தவறாமல், திருத்தாமல், நினைத்ததைப் போட்டுவிடுகிற மாதிரி எப்படி இந்தக் கோடுகளைப் போடமுடிகிறது என்று ஆச்சரியப்பட்டாள். அவளை மிகவும் அதிசயத்தில் மூழ்கடித்தது எங்கள் வீட்டுச் சுத்துமுறுக்குதான்! ‘கையால் எப்படி இந்த முறுக்கைச் சுற்ற முடியும். எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னை முட்டாளாக் காதீர்கள், நோ தோ’ என்று ராகவனைப் பார்த்துச் சொன்னாள். ‘உண்மைதான் அது’ என்று தான் சொன்னபிறகுதான் மேரி தம்பினாள். வட்சுமியின் கையை அவள் ஒரு அதிசயத்தோடு பார்த்தாள்,

பட்டகசாலையில் எங்களோடு சேர்ந்து உட்காரும்படி லட்சுமியை வற்புறுத்தினாள் மேரி

‘உங்களோடு நாறும் உட்கார்ந்து கொண்டால் மத்தியானம் இன்றைக்குப் பட்டினிதான் நீங்கள்’ என்றாள் லட்சுமி.

‘நீங்கள் சமையலுக்கு ஆள் வைத்துக்கொள்ளவில்லையா? ஒண்டர் புலr என்றாள் மேரி.

‘சமையலாளா, லெச்சணம் பொங்கும்! என்று கிராமியமாகப் பதில் சொன்னாள் லட்சுமி. ராகவன் இந்த பதிலை வெகுவாக அனுபவித்ததாகத் தெரித்தது. அவளை இங்கே சமதையாக உட்கார வைக்கமுடியாது என்று எனக்குத் தெரியும். வேறுவழியில்லாமல் மேரியும் லட்சுமியோடு சமையல்கட்டுக்குப் போக வேண்டிய தேற்பட்டது.

ராகவனுக்குப் பக்கத்தில் மேரி இல்லாதது கையிழுத்தது மாதிரி இருந்தது போலும், தான் அவனோடு எவ்வளவோ விஷயங்கள் பேசலாம் என்றிருந்தேன், ஸ்டூல்மீது கால்களைத் தூக்கிப்போட்டுப் பின்னுக்கு ஈவிசேரில் சரிந்து சாய்ந்தான். தெற்றியின் மேல் கைகளைக் கட்டிக்கொண்டு கண்ணை மூடிச் சுகமாகத் தூங்க ஆரம்பித்து விட்டான். என் பார்வையால் அவனைத் தடவிக் கொடுத்தேன்.

எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. மெள்ள எழுத்து சமையல் கட்டுக்கு தடையைக் கட்டினேன். சமையல் புரையில் லட்சுமி மேஜை அடுப்பிலிருந்து குடான பாத்திரங்களைக் குறடைப் போட்டு லாவக மாக ஏற்றுவதும் இறக்குவதும், அகப்பையால் வளைவாகக் இண்டுவது மாக இருந்தான். மேரி நாட்டியத்துக்குத் தயாராய் நிற்பது போல் கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள், லட்சுமி அடிக்கடி மேரியின் பக்கம் திரும்பி எதை எதையோ சிரித்த முகத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள், நிலை படியில் நின்ற எனக்கு அவள் என்ன சொல்லிக்கொண்டிருந்தாள் என்று கேட்கமுடியவில்லை. பக்கத்தில் மூன்றாவது நபர் இருந்தால்கூட லட்சுமியால் எதிராளியிடம் குரலால் ரகசியம் பேசிவிட முடியும். அவளின் குரல் அமைப்பு அப்படி இப்பொழுது, நான் நின்றிருப்பதைப் பார்க்காமலேயே அவருக்கு நான் நின்றிருப்பது தெரியும். அவளு டைய கண்ணின் அமைப்புகூட அப்படி!

உணவு, சிற்றுண்டி முடித்து, மாலை வேளையை எப்படிக் கழிப்பது என்ற பிரச்சனை வந்தது.

நாடகத்துக்குப் போகலாம் என்றாள் மேரி. நாடகம் என்றால் அவளுக்கு உயிர். ராகவன் கடற்கரைக்கு போகலாமே என்றான், ஒருத்தராலும் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை . இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், ராகவன் அவன் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்; மேரி அவள் சொன்னதையே வற்புறுத்திக் கொண்டிருந்தாள். என்ன முயற்சி எடுத்தும் என்னால் இதில் சமரசம் செய்துவைக்க முடியவில்லை! வட்சுமி வத்தாள். என்ன சமாச்சாரம் என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.

‘யாரும் எங்கேயும் போகவேண்டாம். இங்கேயே பேசிப் பொழுதைக் கழிக்கலாம். கப்பல் மாதிரி இருக்கு வீடு, பின்னால் தோட்டத்துக்குப் போங்கள். இன்றைக்கு நிலாச்சோறு சாப்பிடலாம் எல்லாரும் என்று சொல்லி முடித்துவைத்தாள். எங்களுடைய பால்யத்தில் ஒரு நான்.

அனேகமாக எங்கள் கல்யாணம் நடப்பதற்கு முன்னால் என்று நினைக்கறேன். அப்பொழுதுதான் மழை பெய்து வெறித்திருந்தது. ஒரு ஓட்டு சில்லின் மூக்கால் ஈரத்தரையில் லட்சுமியும், நானும் ரைட்டாப் பாண்டிக்குக் கோடு கிழித்து விளையாடிக்கொண்டிருந்தோம்

ஆட்டையில் அவளே மெத்திக்கொண்டு போனாள். எல்லாக் கட்டங்களும் பழம் ஆகிவிடும் போல் தோன்றியது. முகத்தைச் களித்தேன். ‘சரி, நீ ஆடு’ என்றாள். அப்படி விட்டுக்கொடுத்தது எனக்கு எரிச்சலை உண்டுபண்ணியது அடக்கிக்கொண்டு ஆடினேன். ஓட்டை வீசி ஆடி முடித்ததும், கண்களைப் பொத்திக்கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் அடி எடுத்துவைத்து எடுத்துவைத்த ஒவ்வொரு எட்டுக்கும் ‘ரைட்டா? என்று கேட்டேன், ‘ரைட்டு; ரைட்டு” என்று சொல்லிக்கொண்டு வந்தாள். நடுக்கட்டத்தில் காலெடுத்து வைத்து ‘ரைட்டா? என்று கேட்டேன். முதலில் தயங்கிப் பின் வேகமாக ‘ரைட்டு என்றான். என் கைகளால் தான் என் கண்களைப் பொத்திக் கொண்டிருந்தாலும், கால்விரல்களின் நுகர்ச்சியால் கோட்டில் மிதித்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தெளிவுக்காகத் திரும்பவும் ‘ரைட்டார் என்று கேட்டேன். ‘ரைட்டு” என்று சொன்னாள்! சந்தோஷம் வந்துவிட்டது எனக்கு கட்டத்துக்கு வெளியே குதித்துக் ‘குடையா; பூவா? என்றேன். குடையுந்தான்; பூவுத்தான்’ என்றானே பார்க்கலாம்!

இன்றைக்குப் பூரணச் சந்திரன் என்று எங்களுக்குத் தெரியாது. நிலவைப் பார்த்துவிட்டு மேரிதான் கேட்டாள், ‘இன்றுதான் பௌர்ணமியா! என்று. ‘யார் கண்டார்கள் இதையெல்லாம்; தமக்குப் பௌர்ணமி, அமாவாசைகூடத் தெரியாமல் போய்விட்டது. அப்படிப் புத்தி பேதலிச்சிப் போய்க்கிடக்கு’ என்று சிரிக்காமல் சிரித்துக்கொண்டு சொன்னான் ராகவன்.

உத்தியோக மாற்றம் என்ற கைகள், ராகவனையும் மேரியையும் எங்களிடமிருந்து எட்டாத்தொலைவில் கொண்டுபோய் வைத்து விட்டன. வரைவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முதல்நாள் லட்சுமியும் நானும் அவர்களுடைய வீட்டுக்கு விருந்தாளியாய்ப் போய்த் தங்கினோம்.

லட்சுமிதான் அந்த வீட்டுக்கு வந்ததேயில்லை. ஆதலால் நான் அவளுக்கு வீட்டைச் சுற்றிக் காண்பித்தேன். வீட்டில் பெண்மைக்குரிய சோபிதங்களைப் பார்க்கமுடியாதது அவளுக்கு அதிர்ச்சி தந்தது.

‘என்ன, இந்த வீட்டில் லஷ்மி கனையே இல்லையே!’ என்று என் காதில் குசுகுசுத்தாள், யாவற்றுக்கும் சிகரம் வைத்தது போலிருந்தது அவர்களுடைய படுக்கை அறை அந்த அறைக்குள் காலடி எடுத்து வைக்கவே மறுத்துவிட்டாள் லட்சுமி. நல்லவேளை மேரியோ, ராகவனோ பக்கத்தில் இல்லை.

அவளை அப்படித் திடுக்கிட்டுப் பின்னடையச் செய்தது வேறொன்றுமில்லை; படுக்கையறையில் இரண்டு கட்டில்களை நெருங்கிச் சேர்ந்தாற்போல் போட்டு வைத்திருந்தது தான்!

‘சை; இது என்ன வெட்கங்கெட்ட தனம்” என்றாள் அதைப் பார்த்து, இந்தப் படுக்கைகள் இரண்டும் இளை சேர்ந்து பகலிலும் இடந்ததானது பண்புக்குப் புறம்பான ஒன்றைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருப்பதைப்போலத் தோன்றியதுபோலும், ரொம்பதான் வரைக்கும் அதைப்பற்றிச் சொல்லியும் நினைத்தும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தாள் இவள்.

இப்பொழுது ராகவனிடமிருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. எப்போதாவது அபூர்வமாக அவர்கள் இருக்கும் ஜில்லாவுக்கு என் வியாபார விஷயமாகப் போனால் அவர்களைச் சென்று பார்த்துவிட்டு வருவேன்.

ராகவனுடைய கடிதங்களைக் கடிதங்கள் என்று சொல்லமுடியாது. “காவியம் என்றுதான் சொல்லவேண்டும். கடிதங்கள் அப்படியே பேசும்.

வாரத்திற்கு ஒரு கடிதம் கட்டாயம் வந்துவிடும். லட்சுமியும் நானும் அதைப் பிரியமாகப் படிப்போம். அவைகளில் வேறு ஒன்றுமில்லை; மேரியைப்பற்றியும் காதலைப்பற்றியும் தான் சொட்டச் சொட்ட எழுதப்பட்டிருக்கும்;

என்னை நினைக்கும்போதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. என் பிறந்தவீட்டையும், மண்ணையும் உடன்பிறப்புக்களையும் மறந்து நிற்கும்படியான என்ன மாயம் நிகழ்த்துவிட்டது பார்! இப்படி ஒரு பெண் வந்து என்னூடே புகுவாள் என்று எப்பவாவது நினைத்தேனா?

என்னை ஆட்கொண்ட போதை சதா என் இதயத்தில் தம்புரா ஸ்ருதிபோல் இயங்கிக்கொண்டே இருக்கிறது; தூக்கத்திலும்கூட கனவு களும் அந்தமாதிரியே காணும்படி இருக்கிறது. போன ஜென்மத்தில் அவளும் நானும் ஜோடிப்பட்சிகளாகப் பிறந்திருப்போம், தூக்கத் திலும் அதெல்லாம் ஞாபகத்துக்கு வருகிறது.’ – இப்படி ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இந்தப் பொன்மை இப்படியெல்லாம் செய்யும் தான். இப்போதுகூட, என்றுடைய லட்சுமியின் வீட்டிலுள்ள ஜன்னல்கள், நிலை, கதவுகள் இவைகளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு அவைகளில் லட்சுமி யின் சாயல் தெரியும். ஜன்னல், நிலை, கதவுப் பக்கங்களிலாவது அவள் நின்றிருந்து நான் பார்த்ததனால் இவளது சாயல் தெரிகிறது என்று சொல்லலாம். பிரோ, அலமாரிகளுக்குள்ளிருந்துமா அவள் என்னைப் பார்த்தாள்? அவைகளைப் பார்க்கும்போதும் அவைகளில் என் லட்சுமியின் சாயல் தெரியும்!

கொஞ்சதான் கழித்து வந்த ஒரு கடிதத்தில்,

ராஜா
இந்த ஒருவாரமாக தான் படுக்கைதான். உடம்பு என்னவெல் லாமோ செய்கிறது. ஆகார விஷயத்தில் தான் மிகவும் சங்கடமடை இறேன். உனக்குத்தான் தெரியுமே எனக்குக் காரம் என்பது துளிக்கூடப் பிடிக்காது என்று அவளுக்கோ காரம்தான் உயிர். தினமும் சாப்பாட் டுக்கு உட்காரும்போதெல்லாம் என் முணுமுணுப்பு அவளை கலக்க மடையச் செய்கிறது.

சமையல் புரைக்குள்ளும் நுழையாமல் கலகலப்பு புரையின் வாசல் படியோடு நின்று கொள்கிறது. இரண்டு விதமான பக்குவங்கள் தினமும் செய்ய முடிகிறதில்லை. அனுஷ்டானத்தில் வரும்போதுதான் காரியங் களின் கஷ்டம் தெரியவருகிறது, என்றிருந்தது.

இதைப் படித்துவிட்டு வெகுநேரம் சங்கடப்பட்டேன், இந்தத் தீராத கணக்கைத் தீர்ப்பது எப்படி?

ஆரம்பத்தில் எங்களுக்குள்ளும்தான் இந்த குசி வித்தியாசம் இருந்தது உண்டு. அது எப்படித் தீர்ந்தது என்று இப்போது நூபகத்தில் இல்லை, லட்சுமி அதை எப்படி விடுவித்தாள்?

இன்னும் கொஞ்சநாள் கழித்து வந்த கடிதத்தைக் கண்டதும் திடுக்கிட்டுவிட்டேன்,

‘ராஜா’
மேரி எனக்கு ஒரு பிரச்னை ஆகிவிட்டாள். அவளைப் பொறுக்க வரை தானும் அப்படியே தோன்றுகிறேன் அவளுக்கு.

எந்தச் சைத்தான் வந்து என்ன செய்தது என்று தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியாத ‘வில்லன்’ வந்து ஊடாடிவிட்டான் எங்களில், இவனைத்தான் விதி என்று அழைக்கிறோமா?

பல நாட்கள் ஒருவரோடு ஒருவர் பேசாமலேயே பொழுதைக் கழித்தது உண்டு.

மேரியும் நானும் தனிமையில் ஒருவருக்குத் தெரியாமல் இருவரும் கண்ணீர் விடுகிறோம். தண்ப, ஏதோ ஒரு பிசகு நடத்திருக்கிறது. அது என்னது என்பதைத்தான் கண்டுகொள்ள முடியவில்லை இருவருக்கும்.

முந்தாநாள் இரவு, மொட்டைமாடிக்குச் சென்று கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு, பொருள் எதிலும் பார்வை பதியாமல் வெகுநேரம் நின்று கொண்டிருந்தேன். மேரியும் வந்து அதேபோல் தின்றுகொண்டிருந்தாள். சிலமணி தேரம் இப்படி நின்று கொண்டிருந் தோம். மரங்களில் ஒரு இலைகூட அசையவில்லை . சமுத்திரத்தில் பெய்யும் மழைபோல் நிலவு விருதாவாய்க் காய்த்து கொண்டிருத்தது. மேரி அப்பொழுது பாட ஆரம்பித்தான். அழுகைக்குரல் வருவதுபோல அவனிடத்திலிருந்து தொளி வந்தது முதலில், உன்னைப்போல் ராக ஞானம் எனக்குக் கிடையாது. அவள் என்ன ராகம் பாடினாள் என்பது வும் எனக்குத் தெரியாது. அது என்னவோ செய்தது என்னை . துயரத்தை வெளியிட பாஷை கிடையாதபோது அதை இசையொலி யில் சொல்லலாம்போலும், அவளுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கைப்பிடிச் சுவரில் சாய்த்து, கைகளைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டே அந்த ராக இசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். கண்ணீரைத் துடைக்கக் கைகளை எடுத்தால் அந்தச் சலனத்தில் இசை தின்று போய்விடுமோ என அச்சம் கொண்டேன்.

அந்த இசை காதின்வழியே சென்று இதயத்தைப் போய்ப் பிசைந்தது. ரோம துவாரங்களின் வழியெல்லாம் உட்சென்று ரத்தத் தைச் சூடேற்றிக் கொதிக்க வைத்தது. மூளையின் நரம்புகளெல்லாம் விண்விண்ணென்று தெறித்தள. உடம்பு தன் அவஸ்தையைத் தானே தாளாமல் வாய் என்னை அறியாமலே மேரி’ என்று கூவியது. கை களை விரித்து முன்நீட்டிக்கொண்டு, ஒருவரை தோக்கி ஒருவர் மெது வாகக் கனவினால் தூக்கத்தில் நடந்து வருவது போல நடந்து வந்தோம். வந்து, அப்படியே ஆவி சேர்த்துக் கட்டிப்பிடித்துக்கொண்டு வெகு தேரம் குலுங்கி அமுதோம்….

இந்தக் கடிதத்தைக் கண்டு திகைத்தோம். ஒன்றும் ஓடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. லட்சுமி ஏதாவது யோசனை சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். ஏதோ ஒரு வாக்கியம் அவளு டைய தொண்டைக்குழி வரையும் வந்தது. அதை அடக்கி மௌனியாகி விட்டாள். என்ன அது என்று வற்புறுத்திக் கேட்டும், ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டான்.

தான் அவர்கள் இருக்கும் ஊருக்குப்போய் வருவது என்று தீர்மானித்தேன். புறப்பட்ட அன்று சவத்தடையாக அமைந்தது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முக்கியமான நபர் அன்று பார்த்து இறந்து வைத்தார். பிடித்திருக்கும் தீயை ஆரம்பத்திலேயே போய் அணைத்துவிடவேண்டுமே என்று துடித்த தான் இங்கே தியாற்றுதல் கருமாதிகளெல்லாம் முடியக் காத்திருக்கவேண்டியதாயிற்று.

புறப்பட்டு வருவதேன் அங்கே’ என்று எழுதிய காயிதத்துக்கு ராகவனிடமிருந்து தாமதமாக வந்தது பதில்:

“உன்னை எதிர்பார்த்தேன். எதிர்பார்க்கிறபடியெல்லாம் நடக்காது இனி” என அறிந்தேன்.

மிகுந்த மோசமாகிவிட்டது. எங்கள் இருவருள் பைத்தியம் யாருக்குப் பிடித்திருக்கிறது என்று தீர்மானிக்க முடியவில்லை. தேற்று அவளை அடித்துவிட்டேன்.

காயங்கள்தான் அவளுக்கு வேதனையெல்லாம் எனக்கு எந்த நிமிஷத்திலும் என்னமும் நடக்கலாம். எதுவும் தம் கையில் இல்லை .’

அலுப்பையும், உடம்பின் நிலையையும் பொருட்படுத்தாமல் பிரயாணமானேன்.

திருச்சி சந்திப்பில் வண்டி வந்து நின்றதும் இரவு உணவுக்காக இறங்கியபோது தற்செயலாக மேரியின் தகப்பனாரைச் சந்தித்தேன்.

நான் யூகித்தது சரியாகிவிட்டது. அவர் மேரியின் இடத்திலிருந்து தான் வருகிறார். என் இருகைகளையும் பிடித்துக்கொண்டு மௌனமாக நின்றார். பேசமுடியவில்லை அவரால், அவரையும் இட்டுக்கொண்டு உணவுவிடுதியை நோக்கி மெதுவாக நடந்தேன். வாங்கிய பதார்த் தங்கள் அவர்முன் அப்படியே இருந்தன.

இரவு திருச்சியிலேயே தங்கப்போவதாகச் சொன்னார். கூடுமான வரை மேரி – ராகவனைப்பற்றிய பேச்சை அவர் தவிர்க்க விரும்புவது போல் பட்டது. வலிய என்னுடைய கேம லாபங்களைப்பற்றியே விசாரித்தார். லட்சுமியைப்பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார்.

இந்தச் சமயத்தில் என்னை மிகவும் வாட்டுவது, காலஞ்சென்ற என் மளைவி இப்பொழுது என் அருகில் இல்லையே என்பதுதான்’ என்று பேச்சின் மத்தியில் ஒருதரம் சொன்னார்.

திடீரென்று அவர் பத்து வயசு அதிகமாகிவிட்டவாபோலக் காளாப்பட்டார். ரயில் புறப்படும் போது, கண்ணீர் மல்கக் கீழ்க் கண்டவாறு ஆங்கிலத்தில் சொன்னார். குரல் தழுதழுத்தது.

‘அருமை நண்பர் அவர்களே, உங்களை நண்பனாக அடைத்ததற்கு தான் உட்பட அவர்களும் சேர்ந்து ஆண்டவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். உங்களுடைய சமாதானத் தூது வெற்றியடைய நான் ஆண்டவரைப் பிரார்த்திப்பேன். அன்னை லட்சுமி அவர்களுக்கு என் ஸ்தோத்ரங்களைச் சொல்ல வேணும்.”

ரயில் மறுதாள் சாயந்தரம் வந்து நின்றது. விடுமுறை நாளாக இருந்தும் ராகவன் ரயிலடிக்கு வரவில்லை என்பதை அறிந்து கொண்டேன்,

தான் அவர்களுடைய வீட்டுக்குள் துழைத்தபோது இருட்டி விட்டது. மெழுகுவர்த்திகளின் ஒளியில் மேரி தொழுகை நடத்திக் கொண்டிருந்தாள். பிரார்த்தனையில் மேரி இவ்வளவு தீவிரம் கொண்டு விளங்குவதை இப்பொழுதுதான் நான் பார்க்கிறேன். வீட்டில் ராகவன் இருப்பதற்கான அறிகுறிகளே தட்டுப்படவில்லை. ஒருவேளை அவன் வீட்டைவிட்டே போய்விட்டிருப்பானோ? பிரார்த்தனை முடிகிற வரைக்கும் தான் மௌனமாக நிலைப்படி அருகில் காத்துக்கொண்டி குந்தேன். ஒரு வேலைக்காரக் கிழவி மடியில் எதையோ மூடி மறைத்துக் கொண்டு என்னைக் கடந்து வெளியே சென்றாள். வீடே அருள் வாங்கிப் போயிருந்தது.

மேரி என்னைக் கண்டதும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாள். பின்பு அங்கிருந்து நின்றபடியே கைகள் இரண்டாலும் முந்தானையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள்.

தாங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது ராகவன் வத்தான். ஏதோ வேத்து ஆளைப் பார்க்கிறமாதிரிப் பார்த்துவிட்டு, “வந்தாயா’ என்ற பாவனையில் தலையை அசைத்துக்கொண்டான். பிறகு அங்கிருந்து மறைந்துவிட்டான். மேரி ஏதோ பூனை வந்துவிட்டுப் போனது போல் நினைத்து ராகவனுடைய வருகையை அவ்வளவு அலட்சியமாகப் பாவித்தாள். அவளுடைய மெலிவு, அழகுக்குப் பதிலாக அசிங்கமாகவும், பெண்மை வெருண்டால் எவ்வளவு விகார மாகவும் இருக்கமுடியும் என்பதையும் கண்டேன்.

பரஸ்பரம் இருவரும் ஒருத்தர்மேல் ஒருத்தர் ஆளுக்கு ஒரு வண்டிப் புகார் சொன்னார்கள். இருவர் சொன்னதும் நியாயமாகவும் அதே சமயத்தில் தப்பாகவும் பட்டது. என்ன வேடிக்கை! இவர்கள் ராகவறும் மேரியும் தானா, அல்லது வேறு யாராவதா. இருவரும் மனம் வெத்து போயிருந்தார்கள். இனி உலகமே இல்லை என்றார்கள். என்ன செய்ய என்று எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. இந்தச் சமயம் என் லட்சுமி என்கூட இருக்கக்கூடாதா என்று ஏங்கினேன்.

வெள்ளரிப்பழம் வெடிக்காமல் புண்கட்டியதுமாதிரி என்னால் எவ்வளவு சொல்லமுடியுமோ அவ்வளவும் சொல்லிச் சண்டை பிடித்துச் சமாதானப்படுத்தினேன்.

இருவரும் வந்து கூடஇருந்து என்னை ஊருக்கு லேற்றி அறுப்பினார்கள். வழியெல்லாம் அவர்களைப் பற்றிய சிந்தனைதான். வண்டி லயம் தப்பாமல் ஒரு கதியில் போய்க்கொண்டிருந்தது. கலகலவென்ற ஒரு பெண்களின் சிரிப்புச் சத்தம் கேட்டுத் திரும்பிளேன். ஓ! புத்தம் புதிய காதல் தம்பதிகள்போலும்! ஒருக்கால் அவர்கள் தேன்நிலவு அனுபவிக்கப் பிரயாணத்தை மேற்கொண்டிருக் கலாம். ஒரு குழந்தை திடீரென்று விடாமல் அழ ஆரம்பித்தது. புருஷன் மனைவி இருவரும் மாறிமாறி அந்தக் குழந்தையை வாங்கிச் சமாதானப்படுத்த மிகவும் பொறுமையோடு முயன்று கொண்டிருத் தார்கள். ஒரு கிழத் தம்பதிகள் வடக்கே தீர்த்த யாத்திரை போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருப்பவர்கள் – தங்களுக்குள் பரஸ்பரம் ஏதோ மனம் விட்டுச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருக்கும் மருந்துக்குக்கூட ஒரு பல் இடையாது.

முன்பு ஒருதாள் தான் ராகவனைப் பார்க்க மேரியின் வீட்டுக்குப் போயிருந்தேன். மேரியின் படிப்பறையில் அவர்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டு, ஒருவர் படிக்க மற்றவர் கேட்டுக்கொண்டு இருக் தார்கள். மேரியின் படிப்பு அறையில் அருமையான புத்தகங்கள் இருக்கும். ரோமியோ ஜூலியத், ‘அனார்க்கலி’, ‘அம்பிகாபதி, ‘லைலா மற்று’ இப்படி எத்தனையோ.

ஆனால், அன்று மேரி லட்சுமியின் அறைக்கு வந்து பார்த்தபோது, இது என்ன, ராமாயணம் ஒரே ஒரு புத்தகம் மட்டுத்தானே வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டது என் ஞாபகத்துக்கு வந்தது.

நான் வீடு திரும்பும்போது இரவு மணி பத்து இருக்கும். அப்பொழுது நல்ல குளிர்காலம். கை கால்கள் எல்லாம் ஜில்லிட்டுப் போய்விட்டது. வீட்டின் படி ஏறி, கதவில் தட்டக் கை வைப்பதற்கும் லட்சுமி வந்து கதவைத் திறப்பதற்கும் சரியாக இருந்தது. பெட்டி படுக்கைகளையெல்லாம் முன்பகுதியிலேயே போட்டுவிட்டு, அவள் கொண்டுவந்த பெரிய செம்பு நிறைய வெந்நீர் முகம் கால் கை கழுவ இதமாக இருந்தது. ஆடைகளைக் களைந்து அங்கே விட்டுவிட்டு லட்சுமி கொடுத்த துவைத்த துணிகளை உடுத்திக்கொண்டேன். வெளுத்த துணிகளைவிட இவள் துவைத்து உலர்த்திய துணிகள் தான் உடுத்திக்கொள்ள எவ்வளவு சுகமாய் இருந்தன!

என் முகத்தில் எழுதி ஒட்டி இருந்ததை இவள் வாசித்துத் தெரிந்து கொண்டுவிட்டாளோ என்னமோ நான் போன காரியம் என்ன ஆச்சு என்று கேட்கவே இல்லை! நானும் அது நல்லது என்று நினைத்துப் பேசாமலிருந்துவிட்டேன். சொன்னால் இவளுடைய ஏழை மனசு சங்கடப்படுமோ என்ற ஐயரவு எனக்கும். பழமும் ஊறவைத்த சிறிது கம்பம்புல் அவலும், கொஞ்சம் பாலும் கொண்டுவந்து வைத்தாள். பிரயாணத்தின்போது காரமாகக் கண்டது கழியதுகளைத் தின்ற வயிற்றுக்கு இந்த ஆகாரம் மிகவும் அருமையாக அமைந்தது.

படுக்கப் போகும்போது லட்சுமி சொன்னாள்; ‘முந்தாநாள் நம்முடைய பசு ஒரு அருமையான காளைக்கன்று போட்டிருக்கிறது. என்ன அழகாக இருக்கிறது என்கிறீர்கள்; அப்படியே நம்முடைய காளையை உரித்து வைத்திருக்கிறது.’

லட்சுமிக்கு என்னைத்தவிர இன்னொரு ‘உலக’மும் உண்டு, வீட்டோடு, வீட்டுக்குப் பின்புறமுள்ள தோட்டமும் அவளுடைய தனி சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தது. அங்கே ஜோடி மயில்கள் உண்டு. அவை கள் வெண்ணிறமானவை. அவளுடைய தகப்பனார் ஒரு கருங்குரங்கு வளர்த்து வந்தார். காலையில் அவர் எழுந்திருந்ததும் படுக்கையிலிருந்து கண்களை மூடிக்கொண்டே நடந்துவந்து அந்தக் குரங்கு இருக்கும் இடம் வந்துதான் கண்ணைத் திறப்பார்! அந்தக் கருங்குரங்கு ஒரு குட்டி போட்டது. அதைத் தன் மகளுக்குச் ‘சீதனமாக’க் கொடுத்திருக் கிறார். லட்சுமி அதைப் போஷித்துக் காப்பாற்றி வருகிறாள். இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், லட்சுமி தவிர வேறு யார் கொண்டுபோய் உணவைத் தந்தாலும் அது சாப்பிடாது. ஐந்து நாளானாலும் சரி, தான் கொலைப்பட்டினி யாகத்தான் கிடக்கும். அவள் வந்துதான் அந்தச் ‘செடி’க்கு உணவு கொடுக்கவேண்டும். இதுபோக அங்கே அணில் களின் கெச்சட்டம் வேறே, கையில் கடலைப்பருப்புகளைக் கொண்டு போய் நீட்டுவாள். அவை கிளைகளிலிருந்து வேகமாக இறங்கி வந்து பயமில்லாமல் கடலைப் பருப்புகளை எடுத்துக் கொறித்துத் தின்கிற காட்சி யிருக்கிறதே, அது தனிதான். அவளுடைய தோள்களின் மேலெல்லாம் அவை சர்வசாதாரணமாய் ஏறியிறங்கி விளையாடும். நான் கிட்டப்போனால் அவ்வளவுதான். ஒரே ஓட்டமாய் ஓடிவிடும். நாமெல்லாம் ‘பாவிகள்’; அவைகள் நம்மிடம் சருகாது!

ஒரு காரியம் சீரில்லாமல் முடிந்தால் அதற்கு உதவியவர்கள் மேலெல்லாம் அந்த வெறுப்புப் படருமோ என்னவோ, ராகவன் மேரி இருவரிடமிருந்தும் நாளது வரை எந்தவிதமான கடிதமோ, தாக்கலோ இல்லை எனக்கு.

ரொம்ப நாள் கழித்துத் தகவல் மாத்திரம் கிடைத்தது. மேரியின் தாப்பனாரிடமிருந்து ராகவனும், மேரியும் விவாகரத்துச் செய்து கொண்டார்கள் என்று.

இந்தச் செய்தி என்னைப் பிழித்தெடுத்துவிட்டது. லட்சுமிமாத்திரம் பாதிக்கப்படாமல் வழக்கம்போல் இருத்துவத்தாள். இப்படி ஆதி விட்டதே; இப்படி ஆகிவிட்டதே’ என்று புலம்பிக்கொண்டே இருந்தேன் நான். வாய் திறக்காமல் இருந்த லட்சுமி ஒரு தடவை மட்டும் சொன்னாள். இது இப்படித்தான் போய் முடியும் என்று எனக்கென்னவோ தோன்றிக்கொண்டே இருந்தது.’

லட்சுமி ஏன் இப்படி. அபிப்பிராயம் சொன்னாள் என்று ஆகிவிட்டது எனக்கு. ஆனால் இந்த அதிர்ச்சி, அதிலிருந்து என்னை மீட்டுக்கொள்ளக் கொஞ்சம் கை கொடுத்தது.

ராகவன் தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்து இரண்டாவதாகக் கல்யாணம் செய்துகொண்டு மீண்டும் ஹிந்துவாகிவிட்டான்.

மேரி கடைசிவரைக்கும் வேறு கல்யாணமே செய்துகொள்ள வில்லை. அவள் கலாசாலையில் படிக்கும் போது, முன்பு கட்டிக் கொண்டமாதிரியே இப்போதும் வெள்ளைச் சேலைகளையே கட்டிக்கொள்கிறான்,

எப்பவாவது அபூர்வமாகவே ராகவனும் மேரியும் சந்திப்பார்கள். சந்தித்தவுடன் இருவரும் கண்ணீர் விட்டுக்கொள்வார்கள். வெகுநேரம் தனித்தனியே விலகி உட்கார்ந்தபடி இருவரும் தரையைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்புறம் இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு மீண்டும் பிரிவார்கள், கண்ணீர் சிந்திக்கொண்டே.

– கதிர் நவம்பர், 1966

Print Friendly, PDF & Email
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *