ஐ லவ் யு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 21, 2024
பார்வையிட்டோர்: 1,696 
 
 

அந்த வினாடியின் நிர்பந்தத்திற்கு உட்பட்டு, நிகழ்ந்தே ஆகவேண்டிய ஒரு விதியைப்போல் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது!.

ராம், கோப்பையிலிருந்த பானத்தின் சூட்டை ஊதித் தணித்து, மெல்ல உறிஞ்சியபடி நிமிர்கிறான். அவனுக்கு வலதுபுறமிருந்த மூன்றாவது மேசையிலிருந்து அவளும், அவன் பார்வையின் அழைப்பைக் கேட்டவள்போல் நிமிர்ந்து பார்க்கிறாள். அவர்களின் பார்வை சந்தித்துக்கொண்ட மறுகணம், இமைகள் இமைக்க மறந்தன!.

‘அவள்?.’

‘அவளேதான்!.’

நினைவில், பள்ளிச் சீருடையில் உறைந்து கிடந்தவளை நிஜத்தில் சுடிதாரில் பார்க்கிறான். நீண்டு, பிருஸ்டத்தைத் தொட்டக் கூந்தல் தோள்பட்டைக்குக் குறைந்து போயிருந்தது. வளர்ந்திருந்தாள்!. அவளின் அழகை முற்றுப்புள்ளியிட்டு தக்கவைத்துக்கொண்டதுபோல், சுடிதாரின் நிறத்திலேயே நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு!. கழுத்தில் தோல், தளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், நிறம் மேலும் மென்மையாகி மெருகேறியிருந்தாள்!. வயதின் கணக்கு தோற்றத்தில் தெரியவேயில்லை! தூரமாய் சோகம் கவிந்த பார்வை, கண்களில் தெரிந்தது.

அவன்,பதின்ம வயதுப் பையனைப்போல் பதற்றத்திற்குள்ளாகிப் போனான். கைகளின் நடுக்கத்தை மறைக்க மேசைமேல் வைத்துக் கொண்டான். ‘அவளும் அப்படியே செய்தாளே!.’

‘பால்பீர் கோர், நீயா!.’

அந்தக் கேள்வியைக் கேட்டுவிடத்தான் ராம்மின் இதயம் அப்படித் துடித்துக் கொள்கிறதா?.

‘அன்று, கடைசி நாள்!.. ஒரு சாபத்தை விட்டதுபோல் என்னைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் போனாயே?. நான் பட்ட வேதனை, நீ விட்ட சாபந்தானா?.’

கேசத்தை முழுவதும் இழந்தவிட்ட நீள்வட்ட தலையும், அவனுக்கு அழகாகவே இருந்தது. பூனை முடியில் பதிந்திருந்த முகம், முற்றாக மழிக்கப்பட்டிருந்ததால் கண்கள் இன்னும் பெரியதாய்த் தோன்றின. அந்த வயதிலேயே அவளை மிகவும் வசீகரித்த அந்த உதடுகளைப் பார்த்ததும், பார்க்க விரும்பாமல் தவிர்த்தாள். வெயிலைக் காணதவன்போல் முகம் வெளுப்படைந்திருந்தான். வயதை நம்ப முடியாத இளமையில் இருந்தான்.

‘ராம் சிங், நீயா?.’

அவளுக்கும் அதே சஞ்சலமா?. அவளாலும் பார்வையை மீட்டுக்கொள்ள முடியவில்லையே!.

‘ராம் சிங், கடைசி நாளன்று நான் உன்னைத் திரும்பிக்கூட பார்க்காமல் நடந்துவிட்டேனே என்று ரொம்ப வருத்தப்பட்டாயோ?. ‘ஐ லவ் யூ’ என்று கடைசி வரை நீ சொல்லாமலே இருந்த கோபம்டா எனக்கு..’

‘ஆமாம், நாமேதான்!. தோற்றத்தால் நாம் எவ்வளவோ மாறித்தான் போனோம்!. 44 வருடங்கள் ஆகிவிட்டனவே!. அடையாளம் கண்டவை கண்களாக இருந்தால் தடுமாறித்தான் போயிருப்போம். கண்டுக்கொண்டவை நமது பதின்ம வயது இதயங்களாயிற்றே!.’

இதயத்தின் தவிப்பு அவர்களை 1969-ம் ஆண்டிற்குக் கொண்டுச் சென்றது.

ராம், ஆறாம் வகுப்புவரைத் தமிழ்ப் பள்ளியில் படித்ததால் நேரடியாக ஏழாம் வகுப்பிற்கு போக முடியாமல் ஒரு வருடம் (1)‘ரிமூவ் கிளாஸ்சில்’ ஆங்கில மொழிப் பயிற்சி பெற்று பின்னர் (2)படிவம் ஒன்று, (3)படிவம் இரண்டு, முடித்து (4)படிவம் மூன்று போனபோது வயது 16. பால்பீருக்கு வயது 15!. ஆங்கிலப்பள்ளியிலிருந்து வந்திருந்தாள். அவர்கள் இருவருமே படிவம் மூன்று B-ல் படித்தார்கள். ஒரே மேசை, பக்கத்து பக்கத்து இருக்கை, ஓர் இணையைப் போல!.

பால்பீர், ரவாங் பட்டணவாசி!. ராம், எட்டு மைல் தூரத்திலிருந்து வந்த ஒரு தோட்டபுறத்தான். வாயிற்குள் வார்த்தைகள் ஊற்றெடுப்பதுபோல் அவள், சரளமாக ஆங்கிலம் பேசினாள். அவனுடைய ஒரு வருட ‘ரிமூவ் கிளாஸ்’ ஆங்கிலத்தால் அவளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை!. அவளிடம் பேச மிகவும் தயங்கினான். மலாய் மொழியின் பயன்பாடு பாட நேரத்தோடு நின்றுப் போன காலமது. மொழியின் போதாமையில் மௌனமாய் இருப்பதே அவனுக்கு வசதியாய் இருந்தது. பால்பீரோ, பேசவே

பிறந்தவள்போல் பேசிக்கொண்டே இருந்தாள். கையைத் தொட்டுப் பேசுவது அவளின் இயல்பாய் இருந்தது, அவனை மிகவும் சஞ்ஜலப்படுத்தியது. அதற்கு நல்லதும் கெட்டதுமாக என்னென்னவோ காரணங்களையெல்லாம் கற்பித்துக்கொண்டு நிம்மதி கெட்டுத் தவித்தான்!.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்து, அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துக்கொண்டது!.

அன்று, சையின்ஸ் டீச்சர் மிஸஸ் லிம் கொடுத்திருந்த பிரொஜெக்டை சமர்பிக்க வேண்டிய நாள்!. டீச்சர் வகுப்பறைக்குள் நுழைந்ததும் ராம் புரோஜக்ட்டை எடுத்து மேசைமேல் வைத்தான். உடனே பால்பீர், கையைப் பிடித்து மேசை டிராயருக்குள் தள்ளினாள். அவன், அவளை ஒருவாறாகப் பார்த்துக்கொண்டே அதை மீண்டும் மேசைமேல் வைத்தான். அவள், மறுபடியும் கையைப் பிடித்து டிராயருக்குள் தள்ளி,அப்படியே பிடித்துக்கொண்டாள்.

“நான் புரோஜக்டை செய்யவில்லை..” என்று தலையைக் குனிந்துக்கொண்டு முணுமுணுத்தாள்.

அடுத்த வினாடி அவளுக்கு என்னவோ ஆனது?. ராமின் நாடித் துடிப்பில் எதையோ உணர்ந்தவள்போல் பிடியைத் தளர்த்தி, அவனது விரல்களைத் தனது விரல்களால் கோர்த்து, இறுகப் பற்றிக்கொண்டாள். ‘யாருடைய பிடிக்குள் யார் சிக்குண்டது?.’ சொல்லிக் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்த பாடம் புரியாததுபோல் அதுவும் புரியவில்லை!. ஆனால், அப்போது அங்கு துடித்துக்கொண்டிருந்தது ஓர் இதயம் மட்டுமே என்ற போதை மட்டும் இருவருக்குமே தெளியவில்லை!.

‘நமது கரங்களைப் பற்றிக்கொள்வதில் இவ்வளவு பரவசம் இருக்கிறதா?.’

அவள், பிடியைத் தளர்த்தி தன் விரல்களை விடுவித்துக் கொண்டாள். ஆனால், அவளின் கை அவனின் கை மேலேயே கிடந்தது. சில வினாடிகளில் அவளின் விரல்கள் மீண்டும் அவன் விரல்களைக் கோர்த்துப் பிடித்து, அழுத்தியணைத்து, விலகிப் பிரிந்தன.

அவன் பாவம், விரல்களின் ஊடலை உணர்ந்துகொள்ளும் நிதானத்தில் இருக்கவில்லை. பிடிக்கப்படாததால் விரல்கள் இன்னும் அதிகமாகவே நடுங்கின..

“மக்கு..” என்று முனகி, தனது எரிச்சலை உணர்த்துவதுபோல் அவனது உள்ளங்கையைக் கிள்ளி, மீண்டும் விரல்களைக் கோர்த்துப் பற்றி, நாணத்தின் பாரம் தாங்காதவள்போல் தலையைக் குனிந்து கொண்டாள்!.

அந்த உயிர் ஸ்பரிசத்தில் இதயங்கள் ஆள் மாறிப் போனதுபோல் அவர்கள் தடுமாறிப் போயினர். பள்ளி நேரம் பரவசத்திற்குரியதானது!. வீட்டிலிருப்பதோ வேதனைக்குள்ளானது!.

மறுநாள்!.

“ஏன், முகம் இப்படி இருக்கு?. சரியாக தூக்கம் வரவில்லையா? நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?.” என்று கேட்டு பால்பீர் நிஜத்திலும் அதையே தொடர்ந்தாள்.

“எனக்கும் சேர்த்து நீயே நன்றாக தூங்கியதுபோல் தெரிகிறது!..”

“ஆமாம், நான் நன்றாகவே தூங்கினேன். நிஜத்தில் நீ தைரியமாக ஏதாவது செய்தால்தானே கனவில் வந்து மீதியை செய்வதற்கு?..” என்று சொல்லி, வாயைப் பொத்திக்கொண்டாள். .

ஒரு நாள், அவனுடைய பிறந்த நாளைக் கேட்டவள், கேட்காமலேயே அவளுடைய பிறந்த நாளையும் சொன்னாள். பிறந்த நாளிலும் அவள்தான் முந்திகொண்டிருந்தாள்.

பிறந்த நாளன்று, ‘A & W’ ரெஸ்டாரண்டிற்கு போனார்கள். ஒரு ரூட் பியர் இரண்டு ஸ்டிராக்களுடன் வந்தது. பால்பீர், ஒரு ஸ்டிராவை எடுத்து கசக்கி கைக்குள் வைத்துக்கொண்டு, ரூட் பியரை முதலில் குடித்துவிட்டு ராமிடம் தந்தாள். அவனது இதயம் கோப்பையிலிருந்த ரூட் பியரைப்போல் பொங்கி நுரைத்துக் கொண்டிருந்தது. அவள் ஸ்டராவில் வாய் வைத்துக் குடித்த இடத்தை ரகசியமாய் நாவால் தடவிக்கொண்டே பானத்தைப் பருகினான். பியரைக் குடித்ததுபோல் போதைக்குள்ளாகிக் கிறங்கினான்.

‘மெமோரி லேன்’ கார்டில் வாழ்த்துச் சொல்லி, அழகிய கைக்குட்டை ஒன்றைப் பரிசளித்தான். ‘மை டியர்’ என்று தொடங்கி, ‘வித் லவ்’ என்று முடிக்க ஆசைதான்!. ஆமாம், ஆசைதான்!..

பாவி, தனது தோழிகளான பரிபூரணசுந்தரி, வசுந்திரா தேவி, தனலட்சுமி, ஹெலன் போ, பாத்தீமா ஆகியோரிடம் என்ன சொல்லி வைத்தாளோ?. இப்போது, அவர்கள் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் வாயைப் பொத்தி, தொண்டையைச் செருமிக் கொண்டனர். வேறு சில சமயங்களில், ‘பால்பீர் எங்கே?..’ என்று அவனிடம் கேட்டுச் சிரித்துக் கொண்டனர்.

ராமின் பிறந்த நாளுக்கு அவள் பர்ஸ்சும், வெள்ளிக் காப்பும் பரிசளித்தாள்.

1969-ல் இனக்கலவரம் வெடித்தது. சில வாரங்களுக்குப் பள்ளிகள் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டன. ‘L C E’ அரசாங்க பரீட்சையும் முடிந்து, விடுமுறை ஆரம்பமான கடைசி வாரம்.

வெள்ளிக்கிழமை!. பள்ளி இறுதி நாள்!..

மனதில் ஏறியிருந்த பாரத்தாலோ என்னவோ அவள் பேச முடியாமல் தத்தளித்தாள். அதற்கேற்றார்போல் முகமும் வாடிக் கிடந்தது. விடுமுறையால் பார்க்கமுடியாமல் போகப் போகின்ற நாட்களுக்கு ஈடு செய்துக்கொள்வதுபோல் அவனை அடிக்கடி பார்த்துக்கொண்டாள். ஆனால், அப்பார்வையில் ஆசைத் தீரப் பார்த்துக்கொள்ளும் ஆவலைவிட அடுத்து எப்போது பார்ப்போமோ என்ற ஏக்கமே எஞ்சியிருந்ததால் கண்கள், கலக்கத்தைக் காட்டும் விளிம்பில் பளபளத்துக் கொண்டிருந்தன.

“L C E பாஸ் ஆகிவிடுவாய் அல்லவா?..” பால்பீர் ஏக்கத்துடன் கேட்டாள். அவன் தலையை ஆட்டி ஆமோதித்தான். அவள் நிச்சயம் பாசாகிவிடுவாளென்று அவனுக்குத் தோன்றியது.

அவள், அவனது இடது கையைத் தனது மடியில் வைத்து, உள்ளங்கையில் சிவப்பு மையில் இதயம் ஒன்றை வரைந்து, நடுவில் ‘RB’ என்ற எழுத்துக்களை எழுதி வைத்தாள்.

பதிலுக்கு அவனிடமிருந்து எதையோ எதிர்ப்பார்த்து ஏங்கினாள். அவனோ எப்போதும் போலவே இருந்துவிட்டான்.

இருவரும் பிரிந்தனர்!.

பிரியும் போது அவள் பார்த்த அந்தப் பார்வையில் தெரிந்தது, கோபமா? ஏமாற்றமா? வெறுப்பா?. ஏக்கமா? அவள், அவனைத் திரும்பிக்கூட பார்க்காமல் நடந்தாள்!.

பரீட்சை முடிவுகள் வெளியாகின. பால்பீர் பாசாகியிருந்தாள். ராம், பெயிலாகிவிட்டான். அவர்கள், தொடர்புகள் ஏதும் இல்லாமல் தொலைந்து போயினர்.

மேசை மேலிருந்த ஒற்றைக் கோப்பையிலிருந்து அவள் தனியாகவே வந்திருப்பது தெரிந்தது. ‘அவளைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன?’. அவளுடன் பேச மனம் ஏங்கித் தவித்தது.

அவன், தன்னுடைய கோப்பையை எடுத்துக்கொண்டு அவளின் மேசைக்கு போனான்.

‘கைகள் நடுங்குவது முதுமையினால் அல்ல என்று அவளுக்கு நான் எப்படிச் சொல்வேன்?.’

“பால்பீர் கோர்?..” என்றான். அவனது குரல் 44 வருடங்களுக்குப் பின்னால் போய் அதே தயக்கத்துடனேயே ஒலித்தது.

‘பாவி, இன்னும் நீ மாறவே இல்லையாடா..’ என்பதுபோல் அவள் அவனுடைய நடுங்கும் கைகளைப் பார்த்தாள். இடது கரத்தில், வெள்ளிக் காப்பு!. ‘இதை எங்கள் பாஷையில் ‘Kara’ என்று சொல்லுவோம். இனி, நீ எனக்குரியவன்.. என்பதுபோல் அவள் அவனுக்கு அணிவித்த அதே காப்பு!’ பால்பீரின் முகத்தில், வெளியில் தெரிந்துவிடக்கூடாத எச்சரிக்கையுடன் படர்ந்தது நாணத்தின் சாயல்!. அந்தக் கணத்திலேயே அப்போது அவனும் வாழ்ந்துகொண்டிருந்ததால் அந்த நாணத்தை அவன், உடனே அடையாளம் கண்டுக்கொண்டான்.

“ராம் சிங்!..” அவள் கேட்கவில்லை, அடையாளம் படுத்திக்கொண்டாள்!. கண்கள் மலர்ச்சியில் மின்னின.

“ராம் சிங்?.. நான் ராமு.” என்றான்.

அவள், தன் கண்னெதிரே விரல்களை வீசி, காற்றை விலக்கி எதையோ அழித்துவிட்டு சொன்னாள்.

“பரவாயில்லை. எப்படி இருக்கிறாய்?..”

“நன்றாக இருக்கிறேன் பால்பீர். வாவ், வாட் எ பிலசண்ட் சப்ரைஸ்!..?” அவன் பூரித்துப் போனான்.

பின் தொடர்ந்த சில விநாடிகளில் அவள் உடனே தூரத்து சிந்தனையில் ஆழ்ந்து போய், அவனையும் அதற்குள் இழுத்துக் கொண்டாள். நினைவுப் பாதையில் அவர்கள்!.

ரெஸ்டாரண்டின் இரைச்சல் அவர்களின் பயணத்திற்கு இடைஞ்சலாய் இருந்தது போல.

“ஏதாவது ‘A & W’ ரெஸ்டாரண்ட் அருகில் இருந்தால் அங்கு போகலாமா?” பால்பீர்தான் கேட்டாள்!. அவன், அவளைப் பார்த்தான். அவள், அவனின் பார்வையைத் தவிர்த்துக் கொண்டாள்.

‘Mid Valley Megamall’-லில் இருந்த ‘A & W’ திறந்தவெளி ரெஸ்டாரண்டிற்கு போயினர். அடுத்தவரின் தொந்தரவிலிருந்து ஒதுங்கி இருப்பதுபோல் ஓர் ஓரமாக விலகியிருந்த இருக்கையை பால்பீர்தான் தேர்ந்தெடுத்தாள்.

“பார்த்து எத்தனை வருடங்கள் ஆகி விட்டன ராம் சிங்? எப்படி இருக்கிறாய்? உன்னைப் பற்றி சொல்லேன்” பதின்ம வயது ஆவல் முகத்தில் பொங்கியது. அவள், மீண்டும் தன்னை ராம் சிங் என்றே அழைத்ததில் அவனுக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது.

‘பால்பீர், நீ எப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறாய்?.’

“நன்றாக இருக்கிறேன் பால்பீர். என்னைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கப் போகிறது?. எல்லோரையும் போலத்தான் கல்யாணம், குழந்தைகள், பேரப்பிள்ளைகள் என்று காலம் ஓடிவிட்டது. ஆயினும், வசதிகளைத் தேடிக்கொள்ளும் போராட்டத்தில் பிடித்த எதையெல்லாம் செய்ய முடியாமல் போனதோ அதையெல்லாம் இப்போதுதான் செய்துக்கொண்டிருக்கிறேன். இப்போதாவது செய்ய முடிந்ததே என்ற சந்தோஷம் மனசுக்கு நிம்மதியாகவே இருக்கிறது” என்றான்.

மேற்சொன்ன விஷயம் எதுவுமே தனக்குத் தேவையில்லை என்பதுபோல் அவள் கேட்டாள்.

“காதல் கல்யாணமா?..”

“இல்லை பால்பீர். புரோபோஸ் மேரேஜ்தான்”.

அவள், சத்தமில்லாமல் எதோ முணுமுணுத்துக் கொண்டாள்.

அவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டாளோ!.

“ஏன், யார் மேலேயும் உனக்கு காதல் பிறக்கவில்லையா?”

“முதல் காதலையே வெளியில் சொல்ல தைரியமில்லாமல் போன மக்கு நான். அதனால் அந்த நினைப்பே இல்லாமல் போய்விட்டது”.

அவன், அவளைப் பார்த்தே அதைச் சொன்னான். அவள், சட்டென அவனை ஏறேடுத்துப் பார்த்தாள்.

அவள் விழிகள் ஏன் அவன் கண்களை அப்படி மாறி மாறிப் பார்க்கின்றன?. தன் பார்வையில் இருக்கும் வலியை அவள் பார்க்க வேண்டும் என்றா அவனும், அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். எதையோ பார்க்க விரும்பாதவள்போல் அவள்தான் முதலில் பார்வையை மிட்டுக்கொண்டாள்.

“எந்த வித நவீன தொடர்புச் சாதனங்களும் இல்லாத கற்காலத்தில் பிறந்த துரதிருஸ்டசாலிகள் நாம்..” என்று பெருமூச்சுடன் சொல்லி, அவளே தொடர்ந்து சொன்னாள்.

“நீ எப்படி ‘எல் சி இ’யில் பாஸ் ஆகாமல் போனாய்?. நோட்டீஸ் போர்ட்டில் உன் பெயரைத்தான் நான் முதலில் தேடினேன் தெரியுமா? அன்றெல்லாம் நீ ஃபெயில் ஆகிவிட்டதை நினைத்து நான் எவ்வளவு வருத்தப்பட்டேன்!. நீ, நிச்சயமாக (5)ஜூலை பேப்பருக்கு உட்கார்ந்து மறுவருடம் நாம் மீண்டும் பள்ளியில் சந்தித்துக்கொள்வோம் என்றே என்னை நான் தேற்றிக்கொண்டேன். வசுந்திரா தேவி, பரிபூரணசுந்தரி என்று யாருக்குமே உன்னைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. நீ என்னதான் செய்தாய்?”

அவன், கொஞ்ச நாள் எஸ்டேட்டிலேயே வேலை செய்து பின்னர், ஹோட்டல் ஒன்றில் ஆபீஸ் பாயாகச் சேர்ந்து படிப்படியாக ஆடிட்டர் வரை முன்னேறியது; திருமணம் செய்துக்கொண்டு நான்கு பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டது; பிறகு நான்கு பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டது என்று எல்லாவற்றையும் சொன்னான்.

“உன் மனைவி?..” அவள் அவன் மனைவியைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாய் இருந்தாள்.

“அவள் இப்போது இல்லை..”

எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக அவன் அப்படிச் சொன்னது அவனுக்கே அதிர்ச்சியாய் இருந்தது. காலையில் எழுவதிலிருந்து இரவில் உறங்க போகும்வரை மனைவியின் உபசரிப்பில் திளைப்பவன் அவன். பால்பீரைப் பார்த்த மறுவினாடி அவனுக்கு என்னவோ ஆனது. இப்படி ஒரு அபாண்டத்தைச் சொன்னதை நினைத்து அவன், உள்ளுக்குள் கூசிக் குறுகிப் போனான்.

‘இனி மனைவியைப் பார்க்கும் போதெல்லாம் நானல்லவா செத்துக்கொண்டிருப்பேன்..’

“எப்படி?..’

ஒரு மரணத்தை வேறு எப்படியும் எதிர்க்கொள்ள முடியாத அதிர்ச்சியில் அனுதாபம் தோய்ந்த குரலில் அவள் கேட்டாள்.

மனசாட்சியின் ஹிம்சையை அவனால் சகிக்க முடியவில்லை. இன்னொரு கொடூரத்தைச் சொல்ல மனசு ஒப்பவில்லை.

“பால்பீர், உன்னைப் பற்றி சொல்லேன். எங்கே இருக்கிறாய்? என்ன செய்கிறாய்?”

அவன் பதில் சொல்லாமல் பேச்சை மாற்றியதை அவள், மிகுந்த பரிதாபத்துடன் புரிந்துகொண்டாள்.

‘ராம் சிங், இந்தத் தனிமையை நீ எப்படி தாங்கிக்கொள்கிறாய்?..’

“கல்யாணத்தைத் தவிர வேறு எந்த மாற்றங்களுமே இல்லாத வாழ்க்கைக்கு சபிக்கப்பட்ட துரதிர்ஷ்டசாலி நான்!. பெற்றோரின் வற்புறுத்தலால் ஒரு விபத்தைப்போல் நடந்த கல்யாணம் இருபது வருடங்களுக்கு முன்னர் ஒரு விபத்திலேயே முடிந்து போனது. கருத்தரிப்பதில் எனக்கிருந்த பாக்கியம் அவருக்கு இல்லாததால் குழந்தைப் பேறும் இல்லையென்றானது. இப்போது, ஒரு கிண்டர்கார்டன் டீச்சராக ஊரார் பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.”

கரங்களைப் பற்றி அவனுடைய மனதில் முதல் முதலாக காதலைத் தூண்டிய அன்பிற்குரியவள் அவள். அவளின் துயர வாழ்க்கை அவன் இதயத்தைப் பிழிந்தது. ‘பால்பீர், உனக்கு இப்படியொரு சோகமா?.’ அவன் அனுதாபம் பொங்க அவளைப் பார்த்தான்.

அவனிடமிருந்து எந்த அனுதாபமும் தேவையில்லை என்பதுபோல் அவள் உடனே அவனைக் கேட்டாள்.

“ராம் சிங், நீ குடிப்பியா?..”

அதைக் கேட்க அவனக்கு விநோதமாக இருந்தது.

“நான் குடிப்பதில்லை பால்பீர்.. நீ ஏன் அதைக் கேட்கிறாய்”

‘அடப் பாவி!. எப்படிப்பட்ட வாழ்க்கையையடா எனக்கு வாய்க்காமல் செய்தாய்?..’

அவள், வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டது அவனுக்குத் தெளிவாகக் கேட்கவில்லை..

“என்ன சொன்னாய் பால்பீர்?.”

அவன் அதைத் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல் ‘ஒன்றுமில்லை..’ என்று விரல்களால் காற்றை வீசியடித்தாள்.

“பால்பீர், நீ எப்போதாவது பள்ளி வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதுண்டா?..”

இந்தக் கேள்வி அவசியமா என்பதுபோல் அவள் அவனைப் பார்த்தாள். பிறகு சொன்னாள்.

“அதுவும் இல்லையென்றால் நான் எப்போதோ பைத்தியமாகியிருப்பேன்”

“ஆமாம், கடைசி நாளன்று உனது உள்ளங்கையில் ‘ஹார்ட்’ படமொன்றை வரைந்து வைத்தேனே ஞாபகம் இருக்கிறதா?” அதைக் கேட்டபோது அவளின் அதரங்கள் ரகசியமாய் நாணிக் கனிந்தன. பற்கள், கீழுதட்டை கவ்விப்பிடித்து நாணத்தை மறைக்கப் பார்த்தது.

“எப்படி மறப்பேன்!. இப்போதும் உள்ளே துடித்துக்கொண்டிருப்பது அந்த இதயமே என்றுதான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்.”

தனது ரூட் பியரை கலக்கி உறிஞ்சிக் கொண்டிருந்தவள் உடனே நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

‘ராம் சிங், நீயாடா இப்படி பேசுகிறாய்? இப்படியெல்லாம் பேச உனக்கு இந்த வயது தேவைப்பட்டதா?.’

அவன், அந்தப் பார்வையைத் தவிர்ப்பவன்போல் அவளின் பானத்தைப் பார்த்தான். பானம், சுழன்படி குழைந்து கொண்டிருந்தது.

உலர்ந்து, தளர்ந்துபோன தோல்தான், கிள்ளினால் வலிக்கிறதே!.

“அது சரி, நீ பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று நிறைவாய் வாழ்பவன். நீ பள்ளி வாழ்க்கையை எப்போதாவது நினைத்துக்கொள்வதுண்டா?”

“ஆமாம், நிறைவான வாழ்க்கைதான். ஆனால், சொல்லாமல் விட்ட பாரத்தை எப்படி மறப்பேன்?. அதை எண்ணி நான் கலங்காமல் இருந்ததே இல்லை. நீ பரிசளித்த பர்ஸ், காலத்தால் பழசுபட்டுப்போய்,

ஒட்டப்பட்ட தோலின் ஓரங்கள் பிரிந்து விட்டன. ஆனால், அந்த ஓரங்கள் காதலின் பசையைப்போல் இப்போதும் பிசுபிசுத்துக் கொண்டிருக்கின்றனவே!. கையிலிருக்கும் காப்போ, மேலும் கீழும் சரிந்து, என்னை நிஜத்திற்கும் நினைப்பிற்கும் இடையே இழுக்கடித்துக் கொண்டிருக்கிறதே..”

“நாம் இருவருக்குமே நன்றாகத் தெரியும். நமது இதயங்கள் கேட்கத் தவித்த வார்த்தைகள் அவை. ஏனோ, நீயும் சொல்லவில்லை. நானும் சொல்லவில்லை. அப்படியே சொல்லியிருந்தாலும் பெரிதாக ஏதும் செய்துவிடமுடியாத வயதுதான் நமக்கு. இருந்தாலும், காதலை சொல்லாமல் விட்டால் இவ்வளவு வலிக்குமா?. தெரியாமல் போய்விட்டதே!. நீ எப்படியோ? ஆனால் நான், எத்தனை நாட்கள் எப்படியெல்லாம் தவித்திருக்கிறேன் தெரியுமா?. நீ கூட ஒரு நாள், என் முகம் ஏன் அப்படி இருக்கிறதென்று கேட்டாயே? தூக்கம் கொள்ளமுடியாமல் பட்ட அவஸ்தையால்தான் நான் அப்படித் துவண்டுப் போனேன்! ஒத்திகையில், என்னில் உன்னைப் பார்த்துக்கொண்டு எவ்வளவு தைரியமாக நான், என் காதலை உன்னிடம் சொல்லிக்கொண்டேன். ஆனால், உன் முகத்தைக் கண்ட மறு வினாடியோ வீட்டுப் பாடம் செய்யாத மாணவனைப் போல் வெலவெலத்துப் போனேன். அதனாலேயே உன் நினைவு வரும்போதெல்லாம் சொல்லாமல் விட்ட வேதனைத் தாங்காமல் தத்தளித்தேன். கடவுளே, எனது கோழைத்தனத்தால் காலத்திற்கும் அந்தப் பாரத்தைச் சுமக்கும் சாபத்தை நான் தேடிக்கொண்டேனே!. முடியவில்லை பால்பீர்!. உன் நினைவுகள் எனக்கு சுகமென்றால், உன்னிடம் காதலைச் சொல்லாதது ஒரு சாபம்!.

பால்பீர், ராம்மைப் பார்த்தாள்.

‘இப்போது இவ்வளவு பேசுகிறாயேடா?..’

“ராம் சிங், உனக்கு மட்டுந்தான் அந்த சாபமா?”

அவர்கள் இருவருமே பதிம வயதுப் பள்ளிப் பிராயத்திற்குள் புகுந்து கொண்டவர்கள்போல் உணர்ச்சிமயமாகிக் கிடந்தனர். பால்பீரின் அதரங்களில் அவளின் இதயம் துடித்தது. அவர்களின் உடல்கள் வேண்டுமானால் வயதிற்கே உரிய அடையாளத்தில் உலர்ந்து தளர்ந்திருக்கலாம். ஆனால், அப்போது உள்ளே துடித்துக்கொண்டிருந்த இதயங்கள் அந்த வயதிற்குரியவை அல்ல!.

‘நானும் ‘L C E’-யில் தேர்ச்சி அடைந்திருந்தால் அடுத்த மூன்றாண்டுகளில் நிச்சயமாக என் காதலைச் சொல்லி, 19 வயதில் உலகையே எதிர்த்துக்கொண்டு ஏதோ ஒரு மூலைக்கு இவளைக் கூட்டிக்கொண்டு ஓடிப் போயிருப்பேனே!..’

அப்போது, கொஞ்ச நேரமாகவே அங்கேயே வட்டமடித்துக்கொண்டிருந்த ஈக்கள் இரண்டு, பால்பீரின் ரூட் பியருக்குள் விழுந்ததை இருவருமே பார்த்தனர். உடனே அவற்றை வெளியில் எடுக்க நினைத்த பால்பீர், அந்தப் பானத்தை இனி குடிக்க முடியாதென்பதால் அப்படியே விட்டு விட்டாள். ஈக்களின் இறகுகள் முழுமையாக நனைந்து விட்டதால் பானத்தில் அடித்துக்கொண்டு தத்தளித்தன.

ராம், தன் பானத்தை தயக்கத்துடன் அவள் பக்கம் நகர்த்தி வைத்தான்.

“சாப விமோசனம் வேண்டுமா?..” – கருத்தெல்லாம் பள்ளி நினைவுகளில் ஆழ்ந்திருக்க. கேட்டது அவளில்லை என்பதுபோல் அவள், தன்னை மறந்து கேட்டாள்.

“ஆமாம்..” நினைவுகளின் கருணைக்கு முழுமையாகத் தன்னை ஒப்பு கொடுத்துவிட்ட நிலையில், இதயத்தின் யாசகம்போல் அவனுடைய குரல் ஒலித்தது.

“சொல்லிவிடேன்..” இனியும் தாமதிக்க இயாலாத அவசரத்தில் கெஞ்சும் குரலில் வேண்டி, ராம் சொல்லப்போகும் அந்தத் தருணத்தைக் கண்களுக்குள் பொத்தி, கருத்திற்குள் புதைத்துவிட விரும்புவதுபோல் அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பால்பீர்.

“பால்பீர், ஐ லவ் யு..”

அதைக் கேட்டதும் அந்தக் கணத்தை அப்படியே உள்வாங்கி நினைவிற்குள் புதைத்துக்கொண்டதுபோல் அவள், இமைகளை மூடினாள்.

என்றோ உலர்ந்துபோன வார்த்தைகள்தாம்!. ஆனால், ஈரப்பசை இல்லாமல் அவனால் சொல்ல முடியவில்லை. பால்பீர், ராமின் கண்களைப் பார்த்தாள். காதல் கனிந்து, கலங்குவதை கண்டாள். அதை நீண்ட நேரம் பார்க்கும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை.

அவனுடைய காதலுக்கு மரியாதை செய்யத்தான் அவள் எவ்வளவு நாட்கள் காத்திருந்தாள்?.

“ராம் சிங், ஐ லவ் யு டூ.” காதலில் குழைந்த குரல், உணர்ச்சியின் மிகுதியில் உடைந்து தடுமாறியது. கூடவே கண்களும் சேர்ந்து கொண்டன.

ராம், பால்பீரைப் பார்த்தான்.

‘பால்பீர், காதலைச் சொன்னாய் சரி!. அதை இப்படியா ஈரம் சொட்டச் சொட்டச் சொல்வாய்? இதை நான் எப்படி தாங்கிக் கொள்வேன்.’

அவர்கள், அந்த நினைவுகளினின்று மீட்சி பெற முடியாது தத்தளிப்பவர்கள்போல் தம்மை மறந்து கிடந்தனர். அவன், குனிந்திருந்த நெற்றியை விரல்களால் ஏந்தியபடி கண்கள் மூடி இருந்தான். அவளோ, மேசையில் வைக்கப்பட்டிருந்த ரோஜாப் பூவில் தன்னைத் தொலைத்திருந்தாள்.

‘ஓ, இந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லக் கண்ணீர்த் தேவைப்படாத காலத்தில் சொல்லாமல் போனோமே நாம்!..’

அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த மௌனவதைக்கு அஞ்சலி செலுத்துவதுபோல் நேரம் அமைதியாய்க் கடந்து கொண்டிருந்தது.

மழை வரக்கூடிய அறிகுறி தெரிய, மின்சாரக் கூரை இரைச்சலுடன் மடக்கிக் கிடந்த தன் கரங்களை நீட்ட ஒரே நேரத்தில் அவர்கள் இருவரும் தன்னுணர்வு பெற்றனர். பால்பீர், தான் இருக்கும் இடத்தை முற்றாக மறந்துவிட்டவள்போல் தன்னைச் சுற்றிப் பார்த்துக்கொண்டாள்.

எதிரே, ராம் சிங்!.

கடிகாரத்தைப் பார்த்தாள். நம்பமுடியாத நேர அளவை அது காட்டியது. தனது ரூட் பியரில் விழுந்து கிடந்த ஈக்களிரண்டும் இப்போது, எப்படியோ மீண்டு, கோப்பையின் ஓரங்களில் ஊர்ந்து, இறக்கைகளைச் சிலிப்பிக்கொண்டிருந்தன.

அவளின் குறிப்பறிந்ததுபோல் ராம் சொன்னான்.

“நேரமாகிறது. புறப்படலாமா?.”

அவனுக்குப் பதில் சொல்ல அவளுக்கு குரல் இல்லை. தலையை மட்டும் அசைத்துவிட்டு எழுந்தாள். அந்த வயதிலும் அவள் தன்னைப் பராமரித்துக்கொள்ளும் அழகு, அவள் தோற்றத்தில் தெரிந்தது.

அவனுக்கு வீட்டின் ஞாபகம் வந்தது. மனைவியைவிட எட்டு வயது மூத்தவளான பார்பீரின் கண்களில் தெரிந்த காதல், ஏக்கம் அவனை என்னவோ செய்தது. இப்போது, இன்னொரு சாபத்தை உள்ளே ஏற்றிக்கொண்டதுபோல் அவனுடைய இதயம், கனத்து வலித்தது. உடனடியாக வீட்டிற்கு போகாமல் எங்கேயாவது கொஞ்ச நேரம் சுற்றிக்கொண்டு திரிய வேண்டும்போல் அவனுக்குத் தோன்றியது.

வாகனத்தை நோக்கி போகும்போது பால்பீர் கேட்டாள்.

“ராம் சிங், மறுபிறப்பில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?..”

“நிச்சயமாக பால்பீர். உனக்கு?..”

“எனக்கும்தான்..”

அவளுடைய குரலில் தொனித்த உறுதியில் நம்பிக்கையை விட உரிமையே மேலோங்கி இருந்தது!.

வட்டாரச் சொல் விளக்கம்

(1) ரிமூவ் கிளாஸ் – தமிழ் மற்றும் சீன பள்ளிகளில் ஆரம்ப கல்வி கற்றவர்களை ஏழம் வகுப்பு ஆங்கில ‘syllabus’-ற்குத் தயார் செய்ய நடத்தப்படும் ஒரு வருட புகுமுக வகுப்பு.

(2) படிவம் ஒன்று – ஏழாம் வகுப்பு

(3) படிவம் இரண்டு, – எட்டாம் வகுப்பு

(4) படிவம் மூன்று அல்லது L C E – ஒன்பதாம் வகுப்பு / Lower Certificate of Education. இந்த அரசாங்க பரீட்சையை பாஸ் செய்யாமல் Form Four/பத்தாம் வகுப்பு போகமுடியாது.

(5) ஜூலை பேப்பர் – எல் சி இ-யில் பெயில் ஆன பாடங்களை மட்டும் மீண்டும் ஜூலையில் எழுத உதவும் ஏற்பாடு.

– டிசம்பர் 2023.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *