என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: April 26, 2013
பார்வையிட்டோர்: 26,910 
 
 

“ஐ அம் கோயிங் டு கெட் மேரீட்…. ப்ளீஸ் டோன்ட் ட்ரை டு காண்டக்ட் மீ…. பை பார் எவர்…. சாரி” யாருக்கு வேண்டும் இவளது மன்னிப்பு. என்னை பிரிவதற்கான காரணம் சொல்லாமல் என்னை விட்டு பிரிகிறேன் என்பதை மட்டும் சொல்லி கடைசியில் மன்னிப்பு கோரினால் எல்லாம் முடிந்துவிடுமா இல்லை நான் தான் அவளை மன்னித்து விடுவேனா. ஒருவேளை இதை முகத்திற்கு நேராய் சொல்லியிருந்தாலோ அல்லது அலைபேசியில் பேசி புரிய வைத்திருந்தாலோ மன்னித்திருக்க கூடும் ஆனால் அவள் சொன்னதோ குறுஞ்செய்தியில். என்னிடம் ஒரு வார்த்தை கூட பேச தைரியம் இல்லாமல் அதை குறுஞ்செய்தியில் அனுப்பும்போது எப்படி மன்னிக்க தோன்றும். அவள் கேட்ட மன்னிப்பில் உண்மை இருக்கிறது என்பதில் என்ன அங்கீகாரம்.

மென்மையான நினைவு!இன்று காலையில் நண்பன் ஒருவன் மூலமாய் வந்த அவளது திருமண நிச்சய செய்தி கேட்டு அவளது அலைபேசிக்கு அழைத்ததில் அதனை துண்டித்து இந்த குறுஞ்செய்தியை மட்டும் அனுபபினாள். இப்போதும் அவளுக்கு என் அலைபேசியில் இருந்து எத்தனையோ அழைப்பை விடுத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அவள் அலைபேசியை எடுக்க மறுக்கிறாள்.

எங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கடந்த மூன்று மாதங்கள் பேசாமல் இருந்தோம். அவள் பேசுவாள் என்று நான் இருந்தேன் ஆனால் நான் பேசுவேன் என அவள் இருந்தாளா தெரியவில்லை. அவள் அனுப்பிய இந்த குறுஞ்செய்தி பார்த்தால் அவள் அப்படி இருந்திருப்பாள் என்கிற நம்பிக்கை இல்லை. இந்த மனஸ்தாபம் இப்பொழுது ஏற்பட்டதல்ல கடந்த இரண்டு வருடங்களாய் எங்களுக்குள் புகைந்து கொண்டிருந்த விஷயம் தான். எங்களுக்குள் இந்த இரண்டு வருடங்களாய் சண்டையே அதிகம் இருந்தது. அச்சண்டைகளை ஊடல் என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனால் மூன்று மாதம் முன்பு வரை அவள் அனைத்தையும் ஊடலாய் பார்த்தாள் என்பது மட்டும் உண்மை.

சென்னையின் எக்மோர் ரயில் நிலையம் தான் எங்களை அறிமுகப்படுத்தியது. “எக்ஸ்க்யுஸ் மீ…. ப்ளீஸ் கொஞ்சம் அர்ஜண்ட்.. நுங்கம்பாக்கம் ஸ்டேஷனுக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொண்டுங்களேன்….” டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசை க்யூவில் இரண்டாவதாக நின்றிருந்த என்னிடம் கேட்காமல் வேறெவரிடமாவது கேட்டிருந்தாலோ இல்லை நான் எடுத்து தர மறுத்திருந்தாலோ அன்றோடு முடிந்துருக்கும். ஆனால் அவள் அழகின் காரணத்தாலும் நான் இரண்டாவதாய் நின்ற காரணத்தாலும் இது இப்படி தான் நடக்க வேண்டும் என்ற விதி இருந்ததாலும் அவளுக்காக நான் டிக்கெட் எடுத்தேன். அவள் மேல் காதலில் விழுந்தேன்.

அதன் பின் நடந்ததெல்லாம் காலத்தின் கோலங்கள் தினசரி எக்மோர் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பயணங்கள், பரிமாறிக்கொண்ட குறுஞ்செய்திகள், தூக்கம் மறந்து அலைபேசி ஊடே பேசிய இரவுகள் அவ்வப்போது நண்பர்களின் உதவிகள் மெதுமெதுவாய் என்னுள் அரும்பிய காதலை அவளுக்குள்ளும் அரும்ப செய்தது. இருவருக்கும் வெவ்வேறு வாழ்வியல் சூழ்நிலைகள் வெவ்வேறு பணிபுரியும் அலுவலகம் வெவ்வேறு பழகும் மனிதர்கள் இருந்தும் எங்களுக்குள் காதல் அழகாய் அரும்பியது.

அவளுக்காக நான் எனக்காக அவள் என்பதை இருவரும் புரிந்து கொண்ட கட்டத்தில் கூட்ட நெரிசல்களுக்கு இடையேயான ரயில் பயணத்தில் என் காதலை அவளிடம் சொன்னதும் அவள் அதை ஒப்புக்கொண்டதும் மறுநொடியே அவளுக்கு நான் கொடுத்த முத்தங்களின் விளைவால் எனக்கு கிடைத்த அவள் கழுத்தோர சுவையும் இன்னும் மறக்கவில்லை. சுற்றி இருந்தவர்கள் அனைவரும் எங்களை கவனிக்கிறார்கள் என்கிற எண்ணம் சிறிதும் இல்லாமல் இருந்தது எனக்கு ஆனால் அவள் சங்கோஜம் அடைந்தாள் என்னை தள்ளி விட முயன்றாள். ஆனாலும் அவள் செய்த செய்கையால் என் முகம் சிறுப்பதை பார்த்ததும் தள்ளி விட முயன்ற கைகள் தளர்ந்தன. நான் செய்த அந்த முத்த சேட்டைகளுக்கு ஏற்றவாறு இசைந்தாள். அவ்வப்போது சில முத்தங்கள் அவளும் தொடுத்தாள்.

“ஏண்டா இப்படி கூட்டத்துக்கு நடுவுல பண்றோமே தப்பா நெனைக்க மாட்டாங்களா….” என்று சிறு குற்றுனர்வுடன் அவள் கேட்ட கேள்விக்கு “நீ என் பக்கத்துல இருக்கும்போது நான் மத்தவங்கள் பத்தி நான் யோசிக்கறதே இல்ல… அப்புறம் அவங்க தப்பா நெனச்சா என்ன… நெனைக்காம இருந்தா என்ன….” என்று மேதாவித்தனமாய் காதல் வேகத்தில் நான் பதில் கூறினேன். அவளும் அதே வேகத்தில் நான் கூறிய வார்த்தைகளில் அவளுக்கு இருந்த முக்கியத்துவத்தில் மயங்கிப்போனாள்.

அன்று ஆரம்பித்த எங்கள் காதல் பெரும்பாலும் ரயில் பெட்டிகளின் கூட்டங்களுக்கு நடுவிலேயே அரங்கேறியது. விடுமுறை நாட்களில் வள்ளுவர்கோட்டம் எங்கள் காதல் வளர்க்கும் ஸ்தலமாய் மாறிப்போனது. காலையில் உள்நுழையும் நாங்கள் வெளிவருவது மாலையில் தான். அவள் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகள் வயிற்றை நிரப்பும். சிறு நேரம் உதடுகள் பேசித்தீர்க்கும். பெரும் நேரம் முத்தங்கள் தரும் இன்பத்தை பருகும். எங்கள் நெருக்கம் எவ்வளவு வேகமாய் வளர்ந்ததோ அதே அளவு எனக்கான பாசமும் அன்பும் அவளிடம் வளர்ந்தது.

“பைசா கைல இல்லேன்னா சொல்ல வேண்டியது தான” என கடிந்துகொள்வதாகட்டும் “டேய் இந்த ஷர்ட் உனக்கு ரொம்ப நல்லா இருக்கு டா….” அவள் வாங்கி தந்த சட்டையில் என்னை அழகு பார்ப்பதில் ஆகட்டும் “நீ இன்னைக்கு இல்லாம ஒரே போர் டா…” என நான் சந்திக்காமல் போன நாட்களின் தனிமையில் வருந்துவதாகட்டும் “பைவ் மினிட்ஸ் டா…..” எப்போது எங்கு நான் அழைத்தாலும் மறுப்பேதும் சொல்லாமல் அவளது வருகையை சொல்வதிலாகட்டும் “இப்படியே உன்கூட இருக்கணும்போல இருக்கு டா….” வள்ளுவர்கோட்டத்தின் ஒரு மூலையில் என் தோள் சாய்ந்து காதல் பேசுவதாகட்டும் “………………………..” ஒன்றுமே பேசாமல் என்னை கட்டி அணைத்துக்கொண்டு முத்தங்கள் மட்டும் தருவதில் இருக்கும் நெருக்கமாகட்டும் அவளுக்கு நிகர் அவளே தான்.

ஒரு கட்டத்தில் உடம்பு சரி இல்லாமல் இருந்த என்னை என் அறைக்கு பார்க்க வந்தவள் அவளையே மருந்தாய் தந்தாள். உடலின் சூட்டில் காய்ச்சலின் சூடு தனித்தாள். அதற்குப்பிறகு காய்ச்சல் இல்லாமலே வாரம் ஒருமுறை உடல் சூடு தந்தாள். விடுமுறையில் இருவரும் வள்ளுவர் கோட்டம் மறந்தோம் என் அறையில் காமத்தை காதலுடன் கலந்தோம்.

எல்லாம் நன்றாய் தான் போனது ஒரு வருட காலத்திற்கு அதற்குபின் தான் முளைத்தது பிரச்சினை. பிரச்சினை எங்கு எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. அதற்கெல்லாம் காரணமும் நான் தான் என்பதுன் எனக்கு விளங்காமல் போனதில் தான் ஆச்சரியமே.

கனிந்துருகி காதல் செய்து எனக்காக தன்னை ஒப்படைத்து அவளது தோழிகள் மறந்து என்னோடே தனது நேரம் கழித்து நான் சொல்வதை மறுக்காமல் கேட்டு எனக்கானவளாய் தன்னை மாற்றிக்கொண்டவளை பார்த்து சந்தோஷம் கொண்ட நான் அவளுக்காக என்னை மாற்றிக்கொள்ள சொன்ன அதுவும் என் நன்மைக்காக சொன்ன சிறு சிறு உபதேசங்களில் எரிச்சல் ஆனேன்.

“ப்ளீஸ் டோன்ட் ஸ்மோக்..” “அதிகமா குடிக்காத டா…” “டேய் ஏன்டா காலைல ஒழுங்கா சாப்டறத விட என்ன வேல உனக்கு….” இதையெல்லாம் அவள் சொல்லும்போது எங்கே என்னை அடக்க முயற்சிக்கிறாளோ என்று தான் நினைத்தேனே தவிர என் மீதுள்ள அக்கறையில் சொல்கிறாள் என புரியவில்லை. ஏன் காதல் அரும்பிய புதிதில் கூட இதையெல்லாம் சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் அதை செய்யமுடியாவிட்டாலும் அவள் சொன்னதை கேட்பது போலே நடித்திருக்கிறேன். ஏன் அந்த நடிப்பை இப்போது செய்ய தவறினேன் புரியவில்லை.

“இங்க பாரு என்ன கண்ட்ரோல் பண்ண நெனைக்காத… எனக்கு எப்ப தோணுதோ அப்போ தான் செய்ய முடியும்… நீ சொன்ன உடனே எல்லாம் முடியாது….” மூஞ்சியில் அடித்தாற்போல் பேசி அவள் வாய் அடைப்பேன். பதிலுக்கு அவளும் இதையே சொல்லியிருக்க முடியும் ஆனால் ஒருபொழுதும் சொன்னதில்லை தனக்குள்ளேயே அழுது தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள்.

எனது பிறந்தநாளுக்கு நான் என்ன உடை கேட்டாலும் வாங்கி தந்து சந்தோஷப்படுத்துவாள். அவள் தேர்ந்தெடுத்து தருவதை விட நான் தேர்ந்தெடுப்பதை வாங்கிதருவதில் அலாதி பிரியம் அவளுக்கு. ஒரு வேளை தான் வாங்கி தரும் உடை எனக்கு பிடிக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் அதை செய்தாள். அதே வேளை எனக்கு பிடித்தது அவளுக்கு பிடிக்காமல் போனால் எங்கே கஷ்டப்படுவேனோ என்றெண்ணி தனக்கும் பிடித்ததாய் மாற்றிக்கொள்வாள்.

இதே நான் அவளது பிறந்தநாளைக்கு அவள் கேட்கும் உடையை வாங்கிதருவதாய் உறுதி அளிப்பேன். ஆனால் அங்கே போனால் அது நொட்டை இது நொட்டை என்று சொல்லி எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து கொடுப்பேன். உண்மையில் அவள் எடுத்த அனைத்தும் நன்றாய் தான் இருக்கும். ஆனால் அவள் பாக்காத ஒன்றை நான் பார்த்தேன். அவள் எனக்கு வாங்கித்தரும்போது காதலில் எச்சரிக்கையாய் இருந்தாள் நானோ அவளுக்கு வாங்கி தரும் உடையின் விலையில் எச்சரிக்கையாய் இருந்தேன். அவளுக்கும் இதெல்லாம் புரியாமல் இருந்திருக்காது. இருந்தும் வழக்கம்போலே பிடிக்காததை பிடித்ததாய் மாற்றிக்கொண்டாள்.

எனக்கு அவளை பார்க்க வேண்டும் என சொன்னால் போதும் அந்நேரம் அவள் அவள் எங்கு இருந்தாலும் யாரையும் பொருட்படுத்தாமல் கிளம்பிவருவாள் . ஆதலால் அவள் நட்பு வட்டத்திற்குள் ஒதுக்கியும் வைக்கப்பட்டாள். ஆனால் அதை பற்றி சிறிதும் கவலைகொண்டதில்லை. நான் இருக்கும்போது என்னை தவிர அவளுக்கு யாரும் பெரிதாய் தோன்றவில்லை.

அதேநேரம் அவள் என்னை பார்க்க நினைத்தால் அதை அவளால் அவ்வளவு எளிதில் அடைய முடியாது. வேறு வேலை ஏதும் இல்லை என்றால் மட்டுமே போவேன். இல்லையேல் சாக்குபோக்கு சொல்லி தட்டிக்களிப்பேன்.

“டேய் மச்சா… எதோ பிரச்சனைன்னு கூப்டறா…. போயிட்டு வா டா.. நாளைக்கு கூட நாம படத்துக்கு போகலாம்” நண்பர்கள் அனைவரும் படம் பார்க்க நினைத்து புறப்பட்ட சமயம் அவள் என்னை அலைபேசியில் அழைத்ததால் என் நண்பன் ஒருவன் இதை சொல்ல “மச்சா… டெய்லி அவளுக்கு பிரச்சன தான் டா…..எனக்கு மொத ப்ரெண்ட்ஸ் தான் டா முக்கியம்…” என அவனிடம் நண்பன் புராணம் பாடினேன்.

அவள் காதல் முக்கியம் என்றாள் நானோ நண்பன் முக்கியம் என்றேன். உண்மையில் அவள் என்னை கணவனாய் பார்த்தாள் நான் அவளை காதலியாய் மட்டுமே பார்த்தேன். அவள் தான் என் வருங்கால மனைவி என்பதில் உறுதியாய் தான் இருந்தேன் இருக்கிறேன். ஆனால் எப்போது காதலை பகிர்ந்தோமோ அப்போதே இருவரும் கணவன் மனைவி பந்தத்தில் உள்ள காதலர்கள் என்பதை ஏன் உணராமல் போனேன். அதை உணர்ந்திருந்தால் என் மனைவி அழைத்தபோதே சென்றிருப்பேனே இன்னும் காதலியாய் மட்டுமே எனக்கு தெரியப்போய் தானே அவள் மீது இவ்வளவு இளக்காரம் எனக்கு. இதே என் அம்மா அழைத்திருந்தால் என் தந்தை மருத்துவரை பார்க்க அழைத்திருந்தால் என் தம்பி அவனது கல்லூரி சம்பந்தமாய் அழைத்தால் அப்போது இதே நண்பன் புராணம் பாடியிருப்பேனா கண்டிப்பாய் மாட்டேன்.

நான் மட்டும் அல்ல காதலிக்கும் பெரும்பாலானோர் அவர்களை கணவன் மனைவியாய் பாவிப்பதில்லை. குடும்பத்தில் தன்னை காதலிக்கும் உயிரும் ஒரு அங்கம் என நினைப்பதில்லை. அந்த பெரும்பாலானொரில் நானும் ஒருவனாய் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருந்துவிட போகிறது. ரயில்வே நிலையத்தில் அவளை பார்த்த நொடியில் இருந்து அவளை கவர எவ்வளவு செய்திருப்பேன் ஏன் இப்போது செய்ய மறந்தேன். அனைத்து இச்சைகளும் நிறைவேறியது தான் காரணமோ. அவளின் உடலின் போதை பருகி சலித்துவிட்டதோ.

ரயில் பயணங்களில் கூட்ட நெரிசலில் கூட யாரும் கண்ணுக்கு தெரியாமல் இருந்த காலம் போய் இப்போது கூட்டமே இல்லை என்றாலும் தெரிய ஆரம்பித்தார்கள். இப்போதெல்லாம் முத்தங்கள் எங்களுக்குள் மலிந்துபோயின. என் தோள் மீது அவள் தலை சாய்த்தால் கூட தட்டி விட்டேன் “எல்லோரும் பாக்குறாங்க டி….” என பதில் கூறினேன். “இப்போ என்ன விட அவங்க எல்லாம் முக்கியமா ஆயிட்டாங்க இல்ல….” எதோ வெறுமையுடன் அவள் கூறியபோது எனக்கு வலிக்கவில்லை. “ஆமா ஏதாவது சொல்லி சண்ட போட ஆரமிச்சிரு” என்திரு சம்பந்தம் இல்லாத பதில் தான் தந்தேன்.

சிறிது சிறிதாய் காதல் எனக்கு கசக்க ஆரம்பித்தது. ஏதோ கட்டாயத்தின் பேரில் நண்பர்க்கூட்டம் என்னை தவறாக சித்தரிக்குமோ என்ற பயத்தில் காதல் செய்து திருமணம் செய்தால் நண்பர்கள் கூட்டத்தில் நான் தனித்து தெரிவேன் என்ற ஆசையில் அவளை காதலித்து கொண்டிருக்கிறேனோ என்கிற சந்தேகம் என்னுள் அடிக்கடி எழ ஆரம்பித்தது.

இருவருக்கும் மூளும் சண்டையில் அவள் அழுவாள் நான் கோவத்தில் பேசாமல் அவ்விடம் நகர்வேன். சிறு நேரத்தில் தன்னை அவளே சமாதானம் செய்துகொண்டு என்னிடம் பேசுவாள் செய்யாத தவறுக்கு மன்னிப்பு கோருவாள் நானோ நான் செய்த தவறுக்கு அவளை மன்னிக்க மறுப்பேன். அப்புறம் போனால் போகிறது என்று மன்னிப்பேன்.

ஆனால் அவள் தான் என் வாழ்க்கை துணை என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தேன். நான் சொல்வதை மட்டும் கேட்க எவ்வளவு சண்டை வந்தாலும் திரும்பி திரும்பி வருகிற எனக்கு வேண்டியதை மறுமொழியின்றி நிறைவேற்ற இவ்வளவு அழகான பெண் எனக்கு மட்டுமே வாழ்க்கை துணையாய் வேண்டும் என்ற ஆணாதிக்க திமிர் என்னுள் கொழுந்து விட்டு எரிந்தது.

எங்களுக்குள் எவ்வளவு தூரம் நெருக்கம் வேகமாய் வளர்ந்ததோ அதே வேகத்தில் பின்னோக்கி சென்றது அனைத்தும். இருவரும் சிரித்துக்கொண்டு பேசியது குறைந்தது.
ஆனால் அவள் விடவில்லை ஏதேதோ திட்டம் வகுத்தாள். என்னை மறுபடியும் மறுபடியும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல எவ்வளவோ முயன்றாள். தோல்வியே பெரும்பாலும் கண்டாள். என் அறையில் நாங்கள் தனிமையில் இருக்கும்போது மட்டும் சிறு வெற்றிகள் அவளுக்கு கிடைத்தன. உண்மையில் அது எனக்கான வெற்றி என் காம பசிக்கான வெற்றி.

ஆனால் அதிலும் போகப்போக தோல்விகள் தர ஆரம்பித்தேன். எங்களுக்குள் ஏற்படும் சண்டையினால் ஏற்படும் பிரிவின் காலங்கள் மெதுமெதுவாய் அதிகமாகியது. சில நொடிகள் போய் சில மணி நேரங்கள் போய் ஒரு நாள் போய் சில நாட்கள் போய் ஒரு வாரம் வரை அவள் என்னை சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் நானாய் சென்று அவளை ஒருதடவையேனும் சமாதானம் செய்திருப்பேனா என்றால் இல்லவே இல்லை ஒருமுறை கூட இல்லை. ஏன் அதற்கான முயற்சிக்கூட மேற்கொள்ளவில்லை. என்னை விட்டால் அவளுக்கு வேறு யார் என்கிற கர்வம் திரும்பி என்னிடம் தானே வர வேண்டும் என்கிற அகந்தை கிட்டத்தட்ட அவளை என் அடிமையாய் தான் பார்த்தேன்.

இதையெல்லாம் பொறுத்தவள் “ஏன் டி இப்படி உடம்புக்கு அலையுற…” ஏதோ ஒரு சூழ்நிலையில் வழக்கம்போல் என்னை சமாதானம் செய்ய என் அறையில் என்னை கட்டிபிடித்தவளை நான் இப்படி சொன்னதும் முழுதும் ஒடைந்துபோனாள். என் மீதிருந்த தனது கைகளை நெருப்பை தொட்டது போல சடாரென விலக்கினாள். “ஏன் டா என்ன பாத்து இப்படி சொன்ன… என்ன பாத்தா அப்படியா டா தெரியுது….” கண்ணீரும் கம்பலையுமாய் அவள் சொல்லி எனக்கான பதிலுக்கு காத்திருக்காமல் என் அறை விடுத்து சென்றாள். இது தான் எங்களுக்கான கடைசி சந்திப்பு என்பதை சொல்லாமல் சென்றாள்.

இன்றோடு மூன்று மாதங்கள் ஆகிறது வழக்கம் போல் ஒரே ரயிலில் தான் பயணம் செய்தோம் ஆனால் அவள் பெண்களுக்கான பெட்டியில். என்னை நேருக்கு நேர் பார்க்கும்போதெல்லாம் எதோ அருவருப்பாய் பார்ப்பது போல் பார்த்தாள். நானும் எங்கே போய்விட போகிறாள் என்றாவது ஒரு நாள் வருவாள் என்ற நம்பிக்கையில் இருந்தேன் ஆனால் அதை எல்லாம் குழியில் போட்டு அடைத்ததற்கு அறிகுறியாய் அவள் அனுப்பிய குறுஞ்செய்தி இருந்தது.

எனக்கான சந்தோஷத்தை மட்டும் அவளிடம் இருந்து எடுத்துக்கொண்டு அவளுக்கு தர மறுத்து அவளை எவ்வளவு நோகடிக்க முடியுமோ அவ்வளவும் செய்து இன்று அவள் என்னை பிரிகிறாள் என்று சொல்லியதற்கு வருத்தமும் கொள்ளாமல் அவள் மீது கோபம் அடைந்தேன். அவளும் எவ்வளவு தான் பொறுப்பாள் அவளது எதிர்ப்பார்ப்புகள் எவ்வளவு சிதைத்திருப்பேன். என்னை கணவனாய் நினைத்தவள் இன்று மற்றொருவனை கணவனாய் ஏற்பதில் எவ்வளவு சங்கடம் அவள் மனதை நிறைத்திருக்கும். இன்று குறுஞ்செய்தியில் அவள் என்னை விவாகரத்து செய்ய நான் தானே காரணம் நான் செய்த தவறுகள் தானே காரணம் ஆனால் ஏன் அது மட்டும் இன்னும் எனக்கு புரியவே மாட்டேன் என்கிறது.

வழக்கம்போல் செய்யாத தவறுக்கு குறுஞ்செய்தியில் அவள் மன்னிப்பு கூறுகிறாள் நானோ நான் செய்த தவறுக்கு அவளை மன்னிக்க மறுக்கிறேன். அவளை சிறிதேனும் புரிந்திருந்தாலும் அவளை மன்னித்திருப்பேன் அவள் வருங்காலத்திலாவது நன்றாக இருக்கட்டும் என நினைத்திருப்பேன். தவறுகள் எதுவும் தவறாய் தெரியாமல் போனதன் விளைவு அவளை மன்னிக்க மறுத்தேன் எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்க கூடாதென நினைத்தேன் ஆதலால் கடைசியாய் பெரிய தவறொன்று செய்ய இப்போது எக்மோர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் எனக்கு கிடைக்காமல் போன அவள் முகம் சிதைக்க தோளில் ஒரு பையுடன் அதற்குள் கண்ணாடி குவளை நிறைய த்ராவகத்துடன்.

Print Friendly, PDF & Email

5 thoughts on “என் தவறுகளும் அவள் கேட்கும் மன்னிப்புகளும்

  1. மிகவும் அழகான அற்புதமான கதை …வாழ்த்துக்கள் ஐயா …

  2. உண்மையில் கதை மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள் . அனுபவத்தின் உச்சம் . நிதர்சனம் இதை எபபடி புகழ்வதென்று தெரியவில்லை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *