எனக்கொரு காதலி இருந்தாள்(ல்) !!??

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 18,372 
 
 

என்ன சுத்தி இருக்குறவங்க எல்லாருமே லவ் பண்றாங்க. அதெப்படி நான் மட்டும் சிங்கிளா இருக்கேன். நம்மக்குன்னு யாராவது இருந்தா நல்லாத்தான இருக்கும். இதுக்காக விளம்பரமா கொடுக்க முடியும்?

இரவு வீட்டுக்கு போக பேருந்தில் உட்காந்திருக்கும் போது தான் இப்படி யோசனை. எனக்கும் ஒரு காதலி இருந்தால் இப்படி இருக்கும்.

சும்மா ஒரு கற்பனை செய்து பார்க்கலாமே, இன்னும் வீடு போய் சேரத்தான் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகுமே என்று பேருந்தின் ஜன்னலில் சாய்ந்தபடி கனவுகளின் அடுக்குகளில் பயணிக்க துவங்கினேன். அவள் எப்படி இருக்க வேண்டும் என்று கற்பனை செய்ய துவங்கினேன்

முதலில் அவளுக்கு தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும், அப்புறம் அவள் உயரத்தில் என்னை விட சற்று குறைவாக இருக்க வேண்டும். புத்தகம் வாசிக்க வேண்டும். இசையை ரசிக்க வேண்டும். இப்படி நிறைய வேண்டும்(கள்) வரிசை கட்டி நிற்க. எண்ணத்திரையில் கற்பனை தூரிகையுடன் நான், அவளை தீட்ட துவங்கினேன்.

அவளது உடைகள் துத்தனாக கலரில், கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலி ,வலப்புற தோளில் ஒரு சிறிய பை, வலது கையில் மெல்லிய பிளாஸ்டிக் வளையல்கள், விரலில் ஒரு சிறிய மோதிரம் சிறிய பூ வேலைப்பாடுடன். இடது கையில் செல்போன், அதில் வெள்ளை நிற ஹெட்போன். மாட்டப்பட்டு அவள் காதுகளில் தவழ தவம் இருந்து கொண்டு இருந்தது.

உருவம் கொடுத்தாகிவிட்டது பெயர் வைக்க வேண்டாமா?? அதையும் யோசிக்கலானேன்.

தம்பி டிக்கெட் எடுத்தாச்சா?? என தோள் தட்டி கனவை கலைத்தார் அசால்ட் சேது, மன்னிக்கவும்.பேருந்து நடத்துனர். எடுத்தாச்சு என செய்கைமொழி கூறி அவரை வழி அனுப்பினேன்.

பார்ப்பதற்கு ஒரு சாயலில் “ஜிகிர்தண்டா” பாபி சிம்ஹா போலவே இருந்தார். நடத்துனர் ஆகாம இருந்தா இன் நேரத்துக்கு ஒரு தாதா ஆகியிருப்பார் என உள் மனம் சொல்லியது.

மீண்டும் அவளுக்கான கனவில் இணைந்தேன், இன்னும் பெயர் வைக்கவில்லை. அவள் உருவத்துக்கு எந்த பெயரும் சரியாக வரவில்லை.நான் செய்த தவறு இது தான் பெயரை முதலில் வைத்திருக்க வேண்டும்.இடுகுறி பெயராக போயிருக்கும் இப்போது காரணப்பெயர் வைக்க வேண்டிய சூழ்நிலை.

ஏற்கனவே வேலை பார்த்து மூளை சோர்ந்திருக்கும் நேரத்தில் எப்படி பெயர் யோசிக்க அப்புறம் வைத்து கொள்ளலாம். இப்போது மற்றதை பார்ப்போம் என முடிவு செய்தேன்.

இவள் என் காதலியாக என்னோடு நடந்தால், பேசினால் எப்படி இருக்கும்?? மனம் துள்ளி குதித்தது.
அவள் என் அலுவலகத்திலேயே வேலை செய்தால்??

ம்ம்ம்ம்ஹும் நல்ல இருக்காது.

எப்பவும் இவளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இருக்கும்.இல்ல நான் ஏதாவது தப்பு பண்ணி அவகிட்ட மாட்டிகிற மாதிரி இருக்கும். எப்படி இருந்தாலும் பாதிப்பு எனக்கு தான். அதனால் அவள் என்னுடம் சேர்ந்து வேலை பார்க்கவில்லை.

வேறு ஒரு அலுவலகத்தில் அவளுக்கு பிடித்தமான ஏதோ ஒரு வேலை பார்க்கட்டும்.

அவளுக்கான செக்லிஸ்ட் தயாரானது எனது மூளையின் ஒரு பகுதியில் இசை பிடித்திருக்க வேண்டும், புத்தகமும் இவை இரண்டும் எனக்கு ரொம்ப பிடிக்கும். நடப்பதற்கு யோசிக்க கூடாது. (எங்கனாலும் கால் டாக்ஸின்னு சொல்லவே கூடாது,அவசியம் இல்லாமல்) நிறைய பேசனும் அவள், நான் கேட்கனும். நான் சொல்றத அவ கொஞ்சமாது கேட்கனும். (இப்படியெல்லாம் பொண்ணு நேர்ல எங்க கிடைக்கபோறா அதான் இந்த கற்பனை).

“நீங்க நல்லா இருக்கனும் நாடு முன்னேர” என பாடல் பாடி மீண்டும் கனவு கலைக்கப்பட்டது. பக்கத்தில் இருந்த எம்.ஜி.ஆர் ரசிகரின் செல்போனால்..சுய நினைவு வந்து பார்த்தால், பாபி சிம்ஹா என்னை எழுப்பியதில் இருந்து பேருந்து வெறும் 200 மீட்டர் மட்டுமே நகர்ந்திருந்தது.ஏதோ கோவிலில் தீ மிதி திருவிழா என ட்ராஃபிக் ஜாம்.
போலீஸ் என்ன செய்றாங்க ட்ராஃபிக் ஆகும்னு தெருஞ்சும் ஏன் அனுமதி தர்றாங்க. அப்படி கொடுத்த பிறகாவது முறைப்படுதலாமே எதுவும் கிடையாது.

ஹெல்மெட் போடலைனா மட்டும் பிடிக்குறாங்க. எங்க தான் நிக்குறாங்கன்னே தெரியல கொள்ளகாரங்க மாதிரி பதுங்கி நின்னு மடக்கி பிடிக்குறாங்க. இந்திய இராணுவத்துக்கே இவங்க பயிற்சி கொடுக்கலாம் போல.
எல்லாம் யோசுச்சு என்ன செய்ய.ஒன்னும் செய்ய முடியாது என நினைத்து கொண்டு அப்படியே மீண்டும் ஜன்னலில் சாய்ந்தேன் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் இசை காதுகளில் பாய.

பாடலில் ஏனோ மனம் ஒன்றவில்லை ஹெட்போனை கழட்டினேன். மீண்டும் வேடிக்கை பார்க்க துவங்கினேன்.
இதோ அங்கே யாரும் சாமி கும்பிட வந்தமாதிரி தெரியவில்லை. முக்கால் வாசி பேர், இருவராக மதுவின் மயக்கத்தில் தள்ளாடினர்கள். கால்வாசி பேர் சாமி பாக்குறாங்க.அவங்களும் கும்பிடுகிறமாதிரி தெரியவில்லை. கண்கள் வெறித்திருக்க தங்கள் கவலைகளை சுமந்துகொண்டு பயத்துடன் அலங்கரிக்கப்பட்ட சிலையை கைகூப்பி பார்க்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் பலித்தால் நன்றாக இருக்கும். ஆனால் நடக்க வேண்டுமே.
தள்ளாடிய முக்கால் வாசி பேர் தங்கள் ஆடைகளை கூட சரியாக உடுத்தமுடியாத நிலையில் தள்ளாடுகிறார்கள். ஏதோ அருள் வந்தவர்கள் போல. அவர்கள் என்ன அம்பானிகளா??

அவர்களுக்கும் கவலைகள் அதை மறக்க அல்லது மறைக்க குடியை நாடுகிறார்கள்.

கால்வாசி பேருக்கு கடவுள் நம்பிக்கை என்றாள் முக்கால்வாசி பேருக்கு குடி நம்பிக்கை என சமாளிக்க முடியாத அளவுக்கு தமிழ் நாடே தள்ளாடுது.

இந்த கூட்டம் தமிழ் நாட்டிற்கு சின்ன உதாரணம். எல்லா ஊரிலும் எல்லா திருவிழாகளிலும் இப்படி ஒரு குடி கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அரசே குடியை ஊக்குவிப்பதால் யாரும் எதுவும் சொல்ல முடியாது.
இப்பலாம் போராட்டம் நடத்துறாங்க, யார் போராடுவா? குடும்பம் குட்டின்னு இருக்குறவனா வந்து போலீஸ்ட அடிவாங்குவான்.தனிக்கட்டைகளும், குடும்பத்தை துறந்தவர்களும் தான் வருவார்கள்.

அதுவும் எத்தனை நாளைக்கு, ???? குடி இருக்கத்தான் செய்யும் அத அபரிமிதமா ஆக்குனது தான் இப்ப பிரச்சனையே என எனக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் பேசி முடித்தார். அவருக்கு வயது 45 – 50 இருக்கலாம்.

நான் அவரிடம் பேச்சு கொடுத்தேன், சார் அப்போ நீங்க குடிய அழிக்க முடியாதுன்னு சொல்றீங்களா??
அவர் சிரித்து கொண்டே, ஆமாம் முடியாது. ஆனா நான் இப்ப இருக்குற நிலைமைய ஆதரிக்கவும் இல்லை
என்ன சார் கமல் மாதிரி பேசுறீங்க தெளிவா சொல்லுங்க. தம்பி நீங்க சொல்ற குடி வேற நான் சொல்ற குடி வேற.“கள்” இத நீங்க கேள்வி பட்டு இருக்கீங்களா?? சொந்த ஊர் சென்னைன்னா தெருஞ்சிருக்காதே
ம்ம்ம். தெரியும் எனக்கு சொந்த ஊரு திருநெல்வேலி பக்கம் என்றேன்.அந்த குடி யெல்லாம் ஆதி காலத்துல இருந்தே இருக்கு. ராமன் கூட “கள்ளுக்கு குளம் வெட்டுனதா” ஒரு கதை இருக்கு.

ஆதில குடி மருந்தா இருந்தது. எதுவுமே அளவா இருந்தா மருந்து தான..!

எப்போ, கள் ஒழித்து சாராயம் விக்க ஆரம்பிச்சாங்களோ அப்பவே எல்லாம் மாறிடுச்சி என்று தொடர்ந்தார். இந்த அரசியல் கொஞ்சம் எனக்கு அறிமுகம் ஆகியிருந்தாலும், அவரின் குரலில் உள்ள உறுதி ஏதோ செய்தது. நாங்கள் பேசியதை சுற்றி இருந்தவர்காள் சுற்றி பார்த்தார்கள், அதற்கு காரணம் எங்கள் தோற்றம்.

நான் ஒரு ஊதா நிற டீ-சர்ட் அடர் நீல நிறா ஜீன்ஸ், கறுப்பு வெள்ளை கலந்த ஷூ. அவர் நீட்டாக ஃபார்மல் ட்ரஸில்.இப்படி இருவர் கள்ளு சராயம் குடின்னு பேசிட்டு வந்த இப்படி தானே பார்ப்பார்கள்.

மீண்டும் தொடர்ந்தார்,இப்படி லட்சகணக்கா குடி அடிமைகள் இருக்கும் போது கடைய மூடிட்டா எப்படி இருப்பாங்க. ஃபிட்ஸ் வந்தே செத்துருவாங்க. இப்போ குடி அத்தியாவசியமானதாக மாறிவிட்டது.. உடனே தடுக்க முடியாது தடுத்தாலும் பிரச்சனைதான்.

முதலில் கடைகளை முறைப்படுத்தலாம், நாலு கடை இருக்குற இடத்துல ஒன்னு வைக்கனும். அதையும் சுத்தமாக வைக்கனும்.அப்புறமா நேரத்த குறைக்கனும். அப்புறம் மொத்தமா நிறுத்தலாம். எனக்கும் அவர் கருத்தில் உடன்பாடு ஏற்பட்டது.

நாங்கள் பேசி முடிக்கவும் தீமிதி திருவிழா முடியவும் சரியாக இருந்தது. அவர் ஐ.ஐ.டி யில் சமூகவியல் துறை தலைவர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னை நான் சாஃண்ட்வேர் எஞ்சினீயர் என்று சொன்னேன்.
சிறிய அதிர்ச்சி அவர் முகத்தில் தோன்றி மறைந்தது. அதிர்ச்சிக்கு காரணம் கேட்டேன் ?

பொதுவா சாஃப்ட்வேர் பீல்ட் ல இருக்குறவங்க social issues பத்தி கவல பட மாட்டாங்களே அதான் என்றார்.

இரண்டு வருஷம் தான் சார் ஆகுது. போக போக எப்படி இருக்கேன்னு சொல்ல முடியாது என்றேன்.

இருவரும் சிரித்துவிட்டு, ஃபேஸ்புக் ஐ.டியை பகிர்ந்து கொண்டோம்.

அவர் இறங்க வேண்டிய இடம் முதலில் வந்தது.

நான் மீண்டும் அவளுக்கான கனவில், இவ்வளவு பேசிய பின்பு செக்லிஸ்டில் புதிதாக ஒன்று சேர்ந்தது
அவளுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். நிச்சயம்.

அப்போது தான் இருவரும் வருங்காலத்தில் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தால் சரியாக வரும் . அதற்கு நான் இப்போது போலவே இருக்க வேண்டும்.

இங்கிருக்கும் சூழ்நிலை என்னை மாற்றாமல் இருக்க வேண்டும். இப்படி ஒருத்தி வந்தாள் எனில் அவள் என்னை மாற்றாமல் இருக்க வேண்டும்.

அடுத்து அவள் இருக்கும் இடம், என் இடத்தில் இருந்து மிக அருகிலோ அல்லது மிகத் தொலைவிலோ இருக்க கூடாது. நினைத்தால் பார்த்து விடும் தூரத்தில் இருக்க வேண்டும். அது தான் நல்லதும் கூட.

இப்படி யோசிக்கையில் ஒரு வெடி சத்தம் கேட்டு மீண்டும் நிகழ் உலகில். இம்முறை பஸ் டயர் வெடித்திருந்தது. அனைவரும் இறக்கிவிடப்பட்டோம். சாலையில் நின்று கொண்டு கனவை தொடர்ந்தேன்.

அவளிடம் ஸ்கூட்டி இருந்தால் நன்றாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் அவளை அழைத்து. என்னை கூட்டிப்போகச் சொல்லலாம். ஹெட்போனை மாட்டியபடி இந்த காட்சியை நினைத்து மெலிதாக சிரித்துக் கொண்டிருந்தேன்.

அடுத்த பேருந்து வந்துருச்சு எல்லாரும் வாங்க என பாபி சிம்ஹா இரண்டாவது முறையாக கனவை கலைத்தார். நிஜத்துல தான் லவ் பண்ணல கற்பனைலையும் விட மாட்டாங்க போல என நினைத்துக்கொண்டேன். வீட்டிற்கு சென்ற பிறகு தான் நியாபகம் வந்தது அவளுக்கு பெயர் வைக்கவில்லை என்று.

Print Friendly, PDF & Email

1 thought on “எனக்கொரு காதலி இருந்தாள்(ல்) !!??

  1. படிக்க ரொம்ப நல்லா இருக்கு, கதையில் முடிவு தான் இருக்க வேண்டுமென்று இல்லை, அந்த கதை நம்மோடு பேசுவதாக இருந்தாலும் நன்றாக இருக்குமென்பதை உணர்ந்தேன், நல்ல சிந்தனை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *