எனக்கு பிரமச்சாரி ராசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,759 
 
 

எங்கள் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி. பெண்கள் எட்டிக் கூட பார்க்காத எங்கள் பாலைவனத்திற்கும் வேறு பள்ளி பெண்கள் குவிவார்கள் என்றால் எப்படி எங்களை எல்லாம் கையில் பிடிப்பது? எங்களுக்கு எல்லாம் அப்பொழுது அரும்பு மீசை மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்த பருவம். புதிய கதாநாயகர்கள் தமிழ் சினிமாவில் நுழைந்து கொண்டிருந்தார்கள்.

என்னைப்போன்ற பையன்களும் எங்களை அவர்களுக்கு இணையாக நினைத்துக் கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தோம்.

எல்லோரும் கதாநயகர்கள் ஆன சமயத்தில் எனக்கும் அதற்கான தருணம் வந்தது.கலைநிகழ்சியில் நடனமாடிய அவளைப் பார்த்து.தூணின் மீது சாய்ந்து கரங்களை கட்டிக் கொண்டு லுக் விடுவது, மெலிதாக சிரித்துக் கொள்வது, ‘நீ அழகன்டா’ என நினைத்துக் கொள்வது என ஒரே மயக்கம். சினிமா நடிகர் செந்தில் தோற்றார் போங்கள்.

அப்போது நான் என்ன படித்துக் கொண்டிருந்தேன் என்பதனைச் சொல்லவில்லையே? ஒன்பதாம் வகுப்பு.(யாரோ பிஞ்சில பழுத்த கேஸ்னு சொல்வது கேட்கிறது) அந்த நடனக் குழு அமலா ஸ்கூல் என்று தெரிந்துவிட்டது. ஆனால் என்ன பெயர்,என்ன படிக்கிறாள் என்பதெல்லாம் தெரியாதே! அதற்கென்ன? அதைவிடுத்தால் வேறு என்ன பெரிய வெட்டி முறிக்கும் வேலை காத்துக் கிடக்கிறது?

அதுவரை அந்தப் பள்ளி ஒன்று இருப்பது தெரியும் அவ்வளவுதான். அவள் வந்து நடனமாடிச் சென்ற பின்னர் பின்னர் அந்தப் பள்ளியில் படிப்பவர்களை விட எனக்கு நிறையச் செய்திகள் தெரியும். அத்தனை விஷயங்களை சேர்த்து வைத்துக் கொண்டேன். அப் பள்ளியின் முதல்வர் பெயர், அவளின் எட்டாம் வகுப்பு தமிழ் டீச்சர் பையன் எங்கள் பள்ளி மாணவன் என்ற விவரம் எல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்தேன் என்று தெரியவில்லை.

எனக்கு 4.30 க்கு பள்ளி முடியும். ஆனால் அவளுக்கு 3.30க்கு. தவியாய் தவித்துவிட்டேன். நான் போவதற்கு முன்பாக அவள் சென்றுவிடுவாள் என்றுதான். முதல் வேலையாக அவளின் பள்ளி அருகே தங்கி இருக்கும் ஏதாவது ஒருவனை நண்பனாகப் பிடித்தால் தேவலாம் என்று தோன்றியதால்,பல்குமார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட சக்திக்குமாரை பிடித்துக் கொண்டேன்.

அவன் வீடு இதன் பிறகு எனக்கு போதிமரம் ஆகிப் போனது. நல்ல வேலையாக அவளுக்கு சனிக்கிழமை பள்ளி இருக்கும். எனக்கு விடுமுறை அல்லது ஒரு மணிவரைதான். அடித்து பிடித்து சென்றுவிடுவேன் போதிமரம் நோக்கி. தவமாய் தவமிருந்து பல்லுக்கு என் தேவதையை காட்டிவிட்டேன்.

பல் சொன்னது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. “அவள் எனக்கு பேமிலி பிரன்ட். அவுங்க வீட்டில தான் நான் எப்பவுமே இருப்பேன். கவலைப் படாதே அவளை நீ கல்யாணம் பண்ணுற, நான்தான் உனக்கு துணை மாப்பிள்ளை. ஆனால் சர்ச்ல துணை மாப்பிள்ளை இருப்பாரான்னு தெரியலை” எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி. அவனே சொன்னான். அனிதாவுக்கு கல்யாணம் சர்ச்சுலதாண்டா நடக்கும் என்று. கிறிஸ்தவப் பெண் என்பதால் கொஞ்சம் அதிர்ச்சி ஆனேன். ஆனால் காதலுக்குத்தான் கண் இல்லையே. தலைவரே தொடர்ந்தார். “இது எல்லாம் சகஜம்டா.இப்போ எல்லாம் ஒரு முறை சர்ச்சிலயும் அப்புறம் கோவில்லையும் கல்யாணம் பண்ணி வைப்பார்கள். நீ உங்க வீட்ட பார்த்துக்க, அவுங்க வீட்டுக்கு நான் பொறுப்பு.” என்னை பிஞ்சில் பழுத்தவன் என்று நினைத்த பெருமக்களே, பல்லனை என்ன நினைப்பீர்கள்?

நான் பறக்க ஆரம்பித்துவிட்டேன். எப்படியாவது அவள் வீட்டுக்குப் போகவேண்டும் எல்லோரிடமும் நல்ல பெயர் எடுத்து அவர்கள் வீட்டில் என்னை மிகவும் பிடித்துப் போய்விட வேண்டும். ஆனால் எப்பொழுது போகலாம் என்பதைப் பல்தான் தெரிவிக்க வேண்டும். நச்சரிக்க ஆரம்பித்துவிட்டேன். அவன் இந்த சனிக்கிழமை போகலாம் என்று சொல்லி ஐடியா ஒன்று கொடுத்தான்.

“என் வீட்டுக்கு வந்து விடு. இருவரும் கிளம்பிப் போகலாம். நான் முன்னதாகப் போய்விடுவேன் சிறிது நேரம் கழித்து நீ அந்தப் பக்கமாக வா. நான் உன்னை அழைப்பேன்”

“சைக்கிள் பெல் அடிக்கட்டுமாடா?” இது நான்.

“உனக்கு அறிவே இல்லைடா. ஐயோ உன்னை எல்லாம் எப்படி தேத்தறதுனு தெரியலை. பெல் அடிச்சா அவுங்க வீட்டில சந்தேகம் வந்துடும். நீ அங்க வா மத்தது எல்லாம் நான் பார்த்துக்கிறேன்”

எப்பொழுது சனிக்கிழமை வரும் என்று தவிப்புடனே திரிந்தேன். காலையில் அம்மா அப்பா அலுவலகம் சென்றவுடன் அப்பாவுடைய ஷேவிங் செட்டை தேடிப் பிடித்து எடுத்தேன். ஆனால் ஷேவ் செய்யும் அளவுக்கு தாடி மீசை எல்லாம் இல்லை. எசகு பிசகாக இழுத்ததில் ஒரு அழமான கீறல். இரத்தம் ஒழுக ஆரம்பித்துவிட்டது. அது குறித்து பிறிதொரு நாளில் கவிதை எழுதினேன்.

“எப்படியென்றே தெரியாமல்
கோணலாய்ப் பிடித்து
இழுத்துக் கிழித்த வடு
இன்னும் இருக்கிறது.

உனக்கு
மீசையில்லாத நடிகர்
பிடிக்கும்
என்றசெய்தியால்”.

அந்த பல்லவராயன் தான் ஒரு நாள் சொன்னான். ஷாருக்கானை அனிதாவுக்கு மிக பிடிக்கும் என்று.

முகம் நிறைய கோகுல் சேன்டல் பவுடரைப் பூசிக் கொண்டு-அப்பிக் கொண்டு என்பது பொருத்தமாக இருக்கும். முதன் முறையாக டக் பண்ணிக் கொண்டு அதுவும் அரைஞான்கயிறை பேண்ட் மீது ‘பெல்ட்’க்கு பதிலாக போட்டுச் சென்றேன். சைக்கிள் மிதித்த வேகத்தில் வியர்வை வழிந்து, பவுடர் கரைந்து அழகு கூடிக் கொண்டே வந்தது.

அதற்கும் காரணமிருக்கிறது. அவன் வரச் சொன்ன நேரம் நான்கு மணி. நான் சாப்பிட்டவுடன் 1.30 க்கெல்லாம் கிளம்பிவிட்டேன். வெய்யில் கருக்கி எடுத்தது. என்னை பார்பதற்காக ‘வப்புஸ்'(பப்ஸை என் அமத்தா அப்படிதான் சொல்வார்) எல்லாம் வாங்கி வந்திருந்த அமத்தாவிடம் நண்பன் வீட்டுக்கு படிப்பதற்குச் செல்வதாக சொல்லிச் சென்றேன். அமத்தா பாவமாக ஒரு பார்வை பார்த்தார்.

பல்லு வீட்டில் இல்லை. சரி அவன் சொன்ன நேரத்தில் இருப்பான் என்று நினைத்தேன். ஆனால் அவன் வருவதாக இல்லை. அனிதா வீட்டின் முன்பாக இரவு எட்டு மணி வரைக்கும் அலைந்து கொண்டிருந்தேன். ஒன்பதாவது படிக்கும் பொடியன் என்று யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நான் கொடுத்த ‘பில்ட் அப்’ இருக்கிறது பாருங்கள். சீதையை சிறை எடுக்க வந்த ராவணன் என்ற நினைப்பில் சந்தனக் கடத்தல் வீரப்பன் அளவிற்கு அல்லது அதற்கும் அதிகமாக திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை.

அடுத்த நாள் பொறுமையாக வந்து, பல்லன் என்னிடம் கேட்டான் “ஏண்டா அங்கு வரவில்லை” என்று. தூக்கி வாரிபோட்டது. ஆனால் அடிக்கவோ திட்டவோ தைரியமில்லை. இவன் இல்லை என்றால் என் காதலை கரையான் அரித்துவிடக்கூடும். அவனே தொடந்தான் “சரி அவளின் வீட்டுப் பக்கத்தில் ஒருவன் இருக்கிறான். எனக்கு நண்பன் தான். அவனைப் பிடித்தால் காரியம் ஆகும்”. அது பல்லவராயனாக இருந்தால் என்ன, காத்தவராயனாக இருந்தால் என்ன? எனக்கு காரியம் ஆனால் போதும்.

இப்பொழுதே சந்தித்து விடலாம். “அவனுக்கு ஐஸ் போடணும்டா. டைரி மில்க் வாங்கிக்க”

“நானே டைரி மில்க் சப்பிட்டதில்லை டா”

“அதனால? லவ் சக்ஸஸ் ஆகணுமில்ல? வாங்கு டா!” கிட்டத்தட்ட உத்தரவிட்டான். என்ன இருந்தாலும் நம்ம ஆளுக்குதானே என்று திருப்திபட்டுக் கொண்டேன்.

டைரி மில்க் வாங்கிக் கொண்டு வசந்தைப் பார்க்கப் போனோம்(வசந்த்- புதுத் தூதுவரின் பெயர்). அப்பொழுது அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அறிமுகப் படுத்திய பல் கிளம்பும்போது சொன்னது “நான் கொஞ்சம் பிஸி.உன் ஆளை அவனிடம் காண்பித்துவிடு. மத்ததெல்லாம் அவன் பார்த்துக் கொள்வான்.நான் தெளிவா சொல்லிவிட்டேன்”

“டேய் ப்ளீஸ்டா நீயும் இருடா”

“கவலைப் படாதடா. இவன் நம்ம பையன். வசந்த் வரட்டுமா?”

வசந்த்தின் அப்பா என் ஊரில் உள்ள வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் என்பதால் நம்பிக்கை கூடியது. நம்பிக்கை கூடியதற்கான காரணம் இப்போது யோசித்தால் புலப்படவில்லை.

சரியாக அரைமணி நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. அவனுக்கு பொறுமையில்லை. “அண்ணா(இதுதான் முதலும் கடைசியுமாக அவன் சொன்ன‌ அண்ணா) அனிதாதானே? நான் பார்த்துக்கிறேன். நீங்கள் தைரியமாக வீட்டிற்கு போங்க” என்றான். எனக்கு நம்பிக்கையில்லை என்றாலும் அவனே தொடர்ந்து பேசினான். “அவுங்க பேர் அனிதா.எட்டாவது படிக்கிறாங்க. அப்பா டீச்சர். அம்மா வீட்டில்தான் இருக்காங்க‌” என வரலாறு ஒப்பித்தான். சரி என்று தூதுவரிடம் இரண்டு டைரி மில்க் கொடுத்தேன். ஒன்று உனக்கு மற்றொன்று அனிதாவுக்கு.

என் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது முதல் எழுத்தை தவிர்த்தால் அடுத்த மூன்று எழுத்துக்களும் அனி என இருக்கும். என் பெயரில் அனி என்னும் மூன்று எழுத்தை மட்டும் அழுத்தமாக எழுதுவது என எல்லாம் அலும்பல் செய்தேன்.

அடுத்த நாள் வஸந்திடம் கேட்டேன். டைரி மில்க் வாங்கிக் கொண்டாளா என்று. முதலில் முறைத்ததாகவும் பின்னர் வாங்கிக் கொண்டதாகவும் சொன்னான்.

“பல்லுக்கு அனிதா ரொம்ப பழக்கமா வஸந்த்?”

“அப்படியா சொன்னான் அவன் கதை விடுறான்.நம்பாதே”எப்படியாவது வஸந்தாவது கிடைத்தானே. நிறைய டைரி மில்க் அதுவும் இரண்டு இரண்டாக கொடுக்க வேண்டி இருந்தது.

ஒரு நாள் வஸந்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது “உன் ஆள் வருது பார்” என்றான்.

“அது அனிதாவோட பிரண்டுடா”

“என்கிட்டயேவா.அதுதான் அனிதா”

“அடப் பாவி நான் சொன்னது வேறடா”

“ஓ! அப்ப அது ஷீபாவா இருக்கும்” என்றான். அந்த தோரணையில் அத்தனை இளக்காரம் இருந்தது. இப்பொழுதாக இருந்தால் எட்டு சக்கர லாரியின் பின்பக்கமாக வைத்து நசுக்கி இருப்பேன். ஐயோ! என் பெயரில் இருந்த மூன்று எழுத்து மட்டும் சிதற ஆரம்பித்தது.

ஒன்னும் கவலைப்படாதே. நான் அனிதாகிட்டதான் சொல்லி இருக்கேன். அனிதாவையே காதலி.

“டேய் நீ என்னடா சொல்றது. என்னோட காதல் தெய்வீகக் காதல்.ஆளை எல்லாம் மாத்த முடியாது.ஷீபாவைத்தான் காதலிப்பேன் உதவ முடியுமா முடியாதா?”

“யோசிக்கலாம்” பெரிய மனுஷர் சொன்னர். பிறகு கண்டு கொள்ளவே இல்லை.

நானாக முயல வேண்டியதாகி விட்டது. அவள் டியூஷனுக்கு வரும்போது நண்பர்களிடம் சொல்லி வைத்து என் பெயரை சத்தம் போட்டு கத்தச் சொல்வது, டூயட் படத்தில் வரும் “சித்தத்தினால்” கவிதையை மனனம் செய்வது, எப்பவாவது அமலா ஸ்கூலில் பேச்சுப் போட்டியோ கவிதை போட்டியோ வராதா?(நமக்குதான் டான்ஸ் எல்லாம் வராதே)என்று வ‌ருந்திக் கிடப்ப‌து.

77 எண் பதித்த(அவள் வண்டி எண்) டி.வி.எஸ் 50 ஐ சைக்கிளில் துரத்துவது, அவளின் அப்பா பெயர் வண்டியின் பின்புறம் எழுதி இருக்கும். அதனை வைத்து தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அடிக்கடி ரிங் கொடுப்பது, தனி ஒரு நோட் வைத்து கவிதை எழுதுவது என பலவிதங்களில் முயன்றும் வெற்றி பெற முடியவில்லை.

எல்லவற்றையும் விட காமெடி(எனக்கு டிராஜடி) அவளுக்கு இப்படி ஒருவன் அவளைக் காதலித்தான் என்பதாவது தெரியுமா என்பதுதான்.

எனக்கு காதலர் தினம் இப்படித்தான் இருக்கிறது. எனக்கு பிரமச்சாரி ராசி.

– நவம்பர் 1, 2007

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *