எனக்கான முத்தம்

3
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 4, 2015
பார்வையிட்டோர்: 36,896 
 
 

ஊரில் நான் படித்த பள்ளியை, என் மகளுக்குச் சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தேன்.

”இங்கதான் என் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூம் இருந்தது” என்ற இடத்தில், இப்போது எட்டாம் வகுப்பு B செக்ஷன் செயல்படுவதாக கரும்பலகை சொன்னது. அரை சுவரும் அதற்கு மேல் ஓட்டுக் கூரையுமாகக் கட்டடம் அப்படியே இருந்தது.

”இதுல நீ எங்க உட்காந்திருந்த… ஃபர்ஸ்ட் பெஞ்சா?”

”அப்பல்லாம் பெஞ்ச் இல்லை, தரையிலதான் உட்காருவோம்.”

”அப்ப உன் ஃப்ரெண்ட் யாரு?”

எவ்வளவு யோசித்தும் நினைவுக்கு வரவில்லை. என் ஞாபகத்திறனின் போதாமையை அவள் அறிவாள். மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.

”கால் வலிக்குது… போலாமா ப்ளீஸ்?”

அவளைத் தூக்கிக்கொண்டு நடக்கும்போதுதான் கவனித்தேன். நாளை மறுநாள், கோயிலில் கொடியேற்றப்போவதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

சித்திரை மாதம்தானே திருவிழா நடைபெறும். இதென்ன வைகாசி மாதத்தில்? வீட்டில் நுழைந்ததுமே இதைத்தான் கேட்டேன்.

”நீ இங்க இருந்து போய் ரெண்டு வருஷம் கழிச்சு ஒரு சித்திரையில ஊருக்குள்ள சண்டை வந்துதுல்லா… அப்ப வைகாசியில மாத்தினது. அப்புறம் வைகாசின்னே ஆகிப்போச்சு. அடிக்கடி ஊருக்கு வந்தாத்தான இதெல்லாம் தெரியும்” – தோளில் தூங்கிப்போயிருந்த மகளை வாங்கிப் படுக்கையில் கிடத்தியபடியே பதில் சொன்னாள் கவிதா.

”தூக்கிட்டு வார… கை வலிக்கலியா?”

”பிள்ளையைப் பெத்துட்டு கை வலிக்குதுனு சொன்னா முடியுமா?”

”அதுவும் சரிதான்” – சிரித்தாள்.

கவிதாவும் நானும் பள்ளித் தோழிகள். ஆறாம் வகுப்பில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரி இறுதி ஆண்டிலேயே நான் வேலைக்காக ஊரில் இருந்து பெட்டியைக் கட்டிவிட, இதே ஊரில் திருமணம் ஆகி இங்கேயே நிலைகொள்ளும்படியான வாழ்க்கை அவளுக்கு.

”ஆமா… சுசீந்திரம் தேருகூட வருஷத்துக்கு ரெண்டு தடவை நகருது. எனக்கு எங்க..? கன்னியாக்குமரியைத் தாண்டினா கடல்லதான் போய் விழணும். இங்கேயே நிலைச்சாச்சு ஒரேயடியா… சாப்பிடலாம் வா!” – சிரித்தபடியே போனாள். கவிதா இப்படித்தான். நூற்றாண்டு சலிப்பைக்கூட வாய் ஓரத்தில் சிரிப்பு இல்லாமல் அவளால் சொல்ல முடியாது.

”இப்பத் திருவிழா இருக்கும்னு நினைச்சே பார்க்கலை கவிதா!”

”என்னத்தத் திருவிழா… அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கிறதே கிடையாது. பத்தாநா திருநாக்கு சப்பரம் வரும்போது, தேங்கா, பழத்தை வாசல்ல குடுக்கிறதோட சரி. கோயில்ல போய் கும்பிட்டதுக்கெல்லாம் கோபுரம் கட்டியாச்சு!”

”ஏன் நாடகம்லாம் கிடையாதா இப்ப?”- கேட்டதுமே விழுந்து விழுந்து சிரித்தாள்.

”ஓ… அப்படிப் போகுதா கதை!” – அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தாள்.

”பார்த்து… சோறு விக்கிக்கப்போகுது.”

”எனக்கு விக்காது… அங்க விக்கியிருக்கும் இந்நேரம்!”

”யாரைச் சொல்ற?”

”நீ யாரை நினைக்கிறியோ… அவனைத்தான்!”

எனக்குமே சிரிப்பு வந்தது. அவனை நினைத்தாலே முகத்தில் ஒளி கூடுவதை, மறைக்க முடியவில்லை. வாழ்க்கையின் ஒரு பகுதியில் என் கூடவே வந்தவன். கனவு மட்டுமே காணத் தெரிந்த அந்த வயதில், என் இரவுகளை பார்வைகளாலும் முத்தங்களாலும் நிறைத்தவன்.

”என்ன இப்பவே கனவுல போயாச்சா?”

”நாடகம் இல்லியானு கேட்டனே?”

”அவன் போனதோட நாடகமும் போச்சுதே?”

”ம்…”

”அவனை இன்னும் மறக்கலியா?”

”உன்னையே மறக்கலை. அவனை எப்படி மறப்பேன்?”

”அட நாயே” – இடுப்பில் கிள்ளிச் சிரித்தாள்.

”ஒண்ணு சொன்னாக் குதிப்ப பார்த்துக்க… காலையிலே சொல்ல வந்தேன். இவோ அப்பா இருந்ததுனால சொல்லலை. உன் ஆளு வந்திருக்கான்ல!”

”யாரு பாபுவா?!” – நம்பவே முடியவில்லை. தலை நிஜமாகவே ஒரு முறை சுற்றி நின்றது.

”அவன் சைனாவோ எங்கயோ இருக்கிறதா சொன்னாங்க!”

”எங்கப் போனாலும் இதான அவன் ஊரு. வந்து ஒரு வாரம் இருக்கும்னு நினைக்கிறேன்.”

அந்த நொடியே அவனைப் பார்க்க வேண்டுமென மனம் பரபரத்தது.

”போய் ஏழெட்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். இடையில ஒருக்கா வந்து கல்யாணம் பண்ணிட்டுப் போனவன் மறுபடியும் இப்பத்தான் வந்திருக்கான்.”

”நீ பார்த்தியா, பேசினியா?”

”கோயிலுக்குப் போயிட்டு இப்படித்தான் ரெண்டு நாளும் போனான். என்னதோ கேக்க வந்து நிறுத்துனான் பார்த்துக்க. உன்னையத்தான் இருக்கும்னு நினைக்கேன். பொண்டாட்டி இருந்ததுனால கேக்காம விட்ருப்பான். மூணு வயசில ஒரு பொண்ணும் இருக்கில்லா?”

”ம்…”

”என்ன… குரலு இறங்குது? அவனுக்கு மூணு வயசுல புள்ளைன்னா, உனக்கு அஞ்சு வயசுல இருக்கில்லா… அப்புறம் என்ன?”

”அய்யே… மூடு நீ!”

”நீங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணுவீங்கனு நினைச்சேன்… பார்த்துக்க!”

”நாங்களே நினைக்கலை.. நீ ஏன் நினைச்ச?”

”உங்கிட்ட பேசினா எனக்குத்தான் பைத்தியம் பிடிக்கும். வேலையத்தவ நீ!” – சாப்பாட்டை எடுத்துவைக்கத் தொடங்கினாள்.

”அவன் பொண்டாட்டியும் நல்லாத்தான் இருக்கா. சிரிக்கச் சிரிக்கப் பேசுறா பார்த்துக்கோ.” – கரண்டியை ஒவ்வொன்றாக சிங்க்கில் போட்டபடியே சொன்னாள்.

”அவன் பொண்டாட்டி மேக்க உள்ளவளா… பேச்சு அப்படியே இழுக்குது…” – சாப்பிட்ட இடத்தில் தண்ணீர் தெளிக்கத் தொடங்கினாள்.

”நீ எதுக்கு ‘அவன் பொண்டாட்டி, அவன் பொண்டாட்டி’னு இத்தனை தடவை சொல்ற. நான் கேட்டனா?”

”அந்த அநியாயம் வேறயா?” – அவள் துடைப்பம் எடுத்து பெருக்கத் தொடங்கினாள்.

”நான் பார்க்கணும் அவனை.”

”வீட்டுக்குப் போய்ப் பாரு.. ஆனா, அவன் பொண்டாட்டி இருப்பா அங்க!” – கடுப்பேற்றினாள்.

இரவு மொட்டை மாடியில், கவிதாவும் நானும் குழந்தைகளோடு படுத்துக்கிடந்தோம். குழந்தைகள் கதை கேட்டு நச்சரிக்க, நான் என் கதையைச் சொல்லத் தொடங்கினேன். கதையின் வாயிலாக கடந்து சென்ற வாழ்க்கையைப் பிடித்து இழுத்து நிறுத்த முயற்சித்தேன். கதை தொடங்கிய சில விநாடிகளில் மொட்டை மாடி, கவிதா, குழந்தைகள் யாவரும் மறைந்துபோக… பாபு மட்டுமே எங்கும் நிறைந்திருந்தான்.

”உனக்கு நினைக்கணும்னா குப்புறப் படுத்துக்கிட்டு நினை. அதை எதுக்குப் புள்ளைகளுக்குச் சொல்லிக்கிட்டு…” என காதில் கடித்த கவிதாவை மொட்டை மாடியில் இருந்து தள்ளிவிட்டால் என்ன என்று தோன்றியது. நான் சொல்லிக்கொண்டிருந்தேன், எல்லாவற்றையும் ஒரு கதைபோல சொல்லிக்கொண்டிருந்தேன்.

அப்போதெல்லாம் திருவிழா தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே திடல் களை கட்டும். கதாகாலட்சேபம், வில்லிசை, சினிமா, ஆர்கெஸ்ட்ரா எனத் தொடரும் நிகழ்ச்சிநிரலில், நாங்கள் பரபரப்பாகத் தேடுவது நாடகங்களைத்தான். அதிலும் பாபுவின் நாடகங்களுக்கு ரசிகைகள் அதிகம்.

முதல் அரை மணி நேரம் சரித்திர நாடகம். அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு சமூக நாடகம். இரண்டிலுமே ஹீரோ பாபுதான். நடிப்பு, எழுத்து, இயக்கம் என எதில் பாபுவின் பெயரைக் கண்டாலும் போஸ்டருக்கே விசில் அடிக்கும் அளவுக்கு, அவன் மேல் பைத்தியமாக இருந்தோம். பாபுவின் நாடகம் ஒன்பது மணிக்கு என்றால், ஏழு மணிக்கே பிளாஸ்டிக் சாக்கு விரித்து முன் வரிசையில் இடம் பிடிக்கத் தொடங்கினோம்.

நாடகத்தில் நடிப்பவர்கள், தங்களுக்குள் காசு பிரித்து நாடகச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். பெண் வேடங்களையும் ஆண்களே ஏற்றுக்கொள்ள, கதாநாயகியை மட்டும் வெளியூரில் இருந்து அழைத்து வருவார்கள். நாடகம் போடும் அன்று காலை கதாநாயகி செந்தில்குமாரி வந்து இறங்கும்போது ஊரே பரபரப்பாகும். ரிகர்சல் நடக்கும் குமாரியின் வீட்டைச் சுற்றி தலைகளாக இருக்கும். அந்தப் பெண்ணோடு ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் ஆட, நாடகத்தின் மொத்த செலவையும் ஏற்கத் தயாராக இருப்பார்கள். ஆனாலும், எல்லா நாடகங்களிலும் அந்தப் பெண்ணோடு பாபுதான் ஆடினான். பச்சை, சிகப்பு, மஞ்சள் என மாறும் ஒளியில் அந்தப் பெண்ணை அவன் தூக்க, எங்கள் பற்கள் நறநறவெனக் கடிபடும் ஓசையை ஒருவருக்கொருவர் கேட்கவே செய்தோம்.

மேடையில்தான் ஆட்டம் எல்லாம். பகலில் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் தலையை லேசாகக் குனிந்தபடி முடி காற்றில் அலைய அவன் வேகமாக நடக்கும்போது, கை கோத்து உடன் நடந்தால் எந்தப் பிரச்னையையும் எட்டி மிதிக்கலாம் எனத் தோன்றும். ஏற்றிக் கட்டிய லுங்கியோடு பைக்கில் அவன் செல்லும்போது, அவன் இடுப்பில் அணைத்தபடி பின்னால் உட்கார்ந்து அலட்சியமாகப் பறக்கத் தோன்றும்.

ஊரெல்லாம் பெண்கள் அவனுக்காகக் காத்திருக்க, எதிர்பாராத ஒரு மதியத்தில் நூலகத்தில் என் முன் வந்து நின்றான். என்னிடம் பேசுவதற்காக வெகுநேரம் காத்திருப்பதாகக் கூறினான்.

இரண்டு புத்தக அடுக்குகளின் இடையே வழிமறித்தபடி, ‘உன் பேர் என்ன?’ என அவன் கேட்டபோது, பயத்தில் கை விரல்கள் ஆடத் தொடங்கின. ஒரு தடவை பார்க்க மாட்டானா என ஏங்கவைத்தவன், ‘உன்னைப் பிடித்திருக்கிறது’ என எதிரே நின்று சொல்கிறான். யாராவது பார்க்கிறார்களா எனச் சுற்றிலும் பார்த்தேன். இந்த வார்த்தைகள் எங்கே போய்த் தொலைந்தன. எதற்காக இத்தனைப் பதட்டம்.

”எனக்குப் பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிச்சிருந்தா பேர் சொல்லு” – முகத்தை வெகு அருகில் வைத்து, கண்களை நேராகப் பார்த்துக் கேட்டான். அன்றுதான் அவ்வளவு அருகில் அவனைப் பார்த்தேன்.

”உன் பேரு எனக்குத் தெரியும். ஆனாலும் நீ இப்ப உன் வாயால சொல்லணும்!” – முகம் இன்னும் நெருக்கமாக இருந்தது. எவ்வளவு அழகாகச் சிரிக்கிறான்.

”ஏன்… என்னைப் பிடிக்கலையா?”

”வழி விடுங்க.. நான் போகணும்!”

”முடியாது” – அதே சிரிப்போடு நின்றான். அவன் வெகுநேரம் அப்படியே நிற்கவேண்டும் நகரவே கூடாது எனத் தோன்றியது. நான் மீண்டும் சொன்னேன்.

”வழி விடுங்க… ப்ளீஸ்!”

”போகணும்னா அப்படித் திரும்பிக்கூட போகலாமே?” – என் பின்னால் கை காட்டினான்.

”என் பேர் ராகினி.”

”அப்பப் பிடிச்சிருக்கு” – கண்களை நேராகப் பார்த்துச் சிரித்தான். அதை எதிர்கொள்ள முடியாமல் என் தலை கவிழ்ந்துகொண்டது. பச்சை நிற ஜீன்ஸ், வெள்ளை நிறச் சட்டையில் கால் வளைத்து நின்ற அவனது தோற்றம் அப்படியே சித்திரமாக மனதில் பதிந்துகிடக்கிறது.

அவன் என்னோடு பேசுகிறான் என அறிந்ததும் தோழிகள் பேச்சை நிறுத்தினர். ”நானும் அவனும் ஒரே ஜாதி. எப்படியாவது கல்யாணம் நடக்கும்னு நினைச்சேன். அவனுக்கு ஏண்டி உன்னைப் பிடிச்சுது?” – கோயிலில் வைத்து கவிதா கதறிக் கதறி அழுதாள்.

கோபத்தில் வீட்டில் போய் சொல்லிவிடுவாளோ எனப் பயமாகக்கூட இருந்தது.

”நான் வேணாப் பேசலை. நீ அழாத!”

”நடிக்காத போடி” – கோபித்துக்கொண்டு போய்விட்டாள். மறுநாளே சமாதானமானாள்.

கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு, வேலைக்காக அவன் காத்திருந்த நாட்கள் அவை. நான் முதல் ஆண்டு கல்லூரிக்குப் போக ஆரம்பித்ததும், பஸ் ஸ்டாப் வரை பின்னால் வருவது, பஸ்ஸில் ஏறி பார்த்தபடியே நிற்பது, கோயிலில் உடன் நடந்து வருவது, நூலகத்தில் எனக்காகக் காத்திருப்பது… எனப் பெரும்பாலான நேரங்கள் பாபு என்னோடு இருக்கத் தொடங்கினான். ஆனால், நாங்கள் மொத்தமாகப் பேசிய வார்த்தைகளை ஏ-4 காகிதத்தின் ஒரு பக்கத்தில் அடக்கிவிடலாம். தனியாகப் பேசவோ, பார்க்கவோ வாய்ப்பற்ற அந்த ஊரில் மினி பஸ்களும் கோயில்களும் இல்லாவிட்டால் ‘காதல்’ என்ற வார்த்தையே இல்லாமல் போயிருக்கும்.

ஆலம்பாறைப் பேருந்தில் டிரைவரின் இடதுபக்கம் இருந்த நீளமான இருக்கையில் நான் உட்கார்ந்திருக்க, பாபு பின்னால் நின்றிருந்தான். அவன் கண்களால் பேசியவற்றை எனக்கு ஏற்றமாதிரி நான் புரிந்துகொண்டிருந்தேன். தினமும் பயணிக்கும் பேருந்து என்பதால் கண்டக்டர் என்னைப் பார்த்துச் சிரிக்க, நான் பதிலுக்குச் சிரித்தேன். ஒரு முறையோடு நிறுத்தாமல் அவர் மீண்டும் மீண்டும் சிரிக்க, பாபு இருவருக்கும் இடையே வந்து நின்றுகொண்டான். ”ஆளுங்க ஏற வேண்டாமா? உள்ள போய் உட்காருங்க” – கண்டக்டரை ஒரு பார்வையில் அடக்கினான்.

”யாரைப் பார்த்தாலும் பல்லைக் காட்டாத. இனி இந்தச் சீட்ல உட்காந்தா கொன்னுடுவேன்” என்று என்னை மெதுவாக மிரட்டினான். எனக்கு எரிச்சல் வந்தது.

”நீங்க மட்டும் செந்தில்குமாரியைத் தூக்கித் தூக்கி ஆடுவீங்க. நான் சிரிச்சா தப்பா?” – கடுப்பாகச் சொன்னேன். அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. வண்டி போய்க்கொண்டு இருக்கும்போதே இறங்கிப் போய்விட்டான். சொல்லியிருக்க வேண்டாமோ, இனி பேசுவானா? படபடப்பாக இருந்தது.

”பொறுக்கிப் பசங்க” – கண்டக்டர் முணுமுணுத்தார்.

”அவன் ஒண்ணும் பொறுக்கி இல்லை” – வேகமாகப் பதில் சொல்லிவிட்டு, நாக்கைக் கடித்துக்கொண்டேன்.

பேருந்தில் இருந்து இறங்கும்போது கலுங்குப் பாலத்தில் உட்கார்ந்திருந்தான். அது ஒரு மழை மாதத்தின் இருட்டத் தொடங்கியிருந்த ஒரு மாலை. என்னோடு இறங்கியவர்கள் இடது புறம் சென்றுவிட, நான் என் வீட்டுக்குச் செல்லும் வழியைத் தவிர்த்து கலுங்குப் பாலம் வழியாக நடக்கத் தொடங்கினேன் மிகவும் மெதுவாக. அசையாமல் உட்கார்ந்திருந்தவன், நான் அவனைக் கடக்கும் நொடியில் கையைப் பிடித்தான்.

”உக்காரு!”

”அய்யோ..! நான் மாட்டேன். யாராவது வந்திடுவாங்க” எனப் பதற, இழுத்து உட்கார வைத்தான்.

”நான் யாரு உனக்கு?”

”பாபு…”

”அது தெரியாதா… உனக்கு நான் யாருன்னு சொல்லு!”

”நீயே சொல்லேன்!”

ஒன்றும் சொல்லாமல் என் முகத்தையே பார்த்தான். ஏதோ செய்யப்போகிறான் எனத் தெரிந்ததும், அதை மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்க்கத் தொடங்கினேன். யாராவது பார்ப்பார்கள், வீடு அருகே இருக்கிறது என்ற பயங்கள் விலகத் தொடங்கின. வலது கையால் தோளோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். ஏன் நெற்றியைத் தேர்ந்தெடுத்தான் எனத் தெரிய வில்லை. ஆனால், ரொம்பப் பிடித்திருந்தது. பதிலுக்கு முத்தமிடத் தோன்றியது. எழுந்து கொண்டேன். சிலிர்த்துக் குளிர்ந்திருந்த உடல், குளிர் காற்றில் நடுங்கத் தொடங்கியது.

”சும்மா இப்படியே பார்த்துட்டு இருப்பேன்னு நினைக்காத. தூக்கிட்டுப் போயிடுவேன்.. பார்த்துக்க!”

”யார் வேண்டாம்னு சொன்னது” – கேட்டுவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். வெறும் பார்வை, சின்ன ஸ்பரிசம், பேரன்பு எனத் தொடர்ந்த எங்கள் உறவுக்கு, நாங்கள் ‘காதல்’ என்று பெயரிட்டுக்கொண்டோம். என் நினைவின் எல்லா நொடியிலும் அவனே நிறைந்திருந்தான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் தொடர்ந்த எங்கள் காதல், அந்தத் திருவிழாவோடு முடிவுக்கு வந்தது. வழக்கத்துக்கு மாறாக அந்தச் சித்திரையில் மழை வெளுத்து வாங்கியது. ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டன. அதிசயமாக நான்காம் திருவிழா அன்று வானம் வெளுக்கத் தொடங்கியது. அன்றைக்குத்தான் பாபுவின் நாடகம். ஈரமாக இருந்ததால் மணலில் உட்கார முடியாமல் ஆங்காங்கே கடை வராந்தாக்களிலும் சுவர்களிலும் உட்கார்ந்து நாடகம் பார்க்கத் தொடங்கினார்கள். நான் ஒரு வீட்டுச் சுவரில் சாய்ந்து நின்றுகொண்டேன்.

பார்வையாளராக நான் மட்டுமே இருப்பதாக எண்ணிக்கொண்டு என்னைப் பார்த்தே வசனங்களைச் சொல்லிக்கொண்டிருந்தான் பாபு. எனக்கு மட்டுமேயான அவனது மனதின் குரல் என்றே நானும் அதை உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அன்றைய மகிழ்ச்சியின் உச்சமாக அவன் செந்தில்குமாரியோடு ஆடவோ, அவளைத் தூக்கவோகூட இல்லை.

நாடகம் முடிவதற்கு முன்பாகவே அதே மேக்கப்போடு மேடைக்குப் பின்னால் வந்து நான் நின்றிருந்த சுவர் அருகே வந்தான். சுற்றிலும் ஆட்கள் நிற்க ஏதாவது சொல்லிவிடுவானோ எனப் பயமாக இருந்தது. ”குமரேஷைத் தேடி வந்தேன்” என யாரிடமோ சொல்லிவிட்டு என் காதுக்கு அருகே வந்து, ”லவ் யூ” என சொல்லிப்போனான். முதன்முதலாக ‘லவ் யூ’ என்று அவன் சொன்னது அன்றுதான். அந்த இரவில் என்றென்றைக்குமாக அவனைப் பிடித்துப்போனது.

மறுநாள் காலை, ‘பாபு, செந்தில் குமாரியோடு ஓடிப் போய்விட்டான்’ என்ற செய்தியோடு தான் விடிந்தது. கூடுதல் தகவலாக பாபு அங்கங்கே வைத்து என்னோடு பேசுகிற விஷயமும் வீட்டுக்குத் தெரிந்தது. எல்லாம் முடிந்துபோக அந்த வதந்திகள் போதுமானதாக இருந்தன. ‘அந்த நாடகக்காரிக்கு காலேஜு போற பையன் இருக்கானாம். வெக்கம் இல்லாமப் போயிருக்கான் பாரு’ – ஊர் என்னென்னமோ பேசியது. ‘ஒழுங்காப் படிக்கப் போறியா… இல்ல இப்படியே ஊர் சுத்திக்கிட்டுத் திரியப்போறியா?’ என்ற வீட்டின் கேள்விக்கு, நான் யோசிக்காமல் ‘படிக்கிறேன்’ என்று பதில் சொன்னேன்.

‘வேற ஆள் இல்லாமத் தேடிருக்கா பாரு ஒருத்தனை’ என்றரீதியில் திட்டுகள் நிறைய விழுந்தன. எந்தப் பேச்சும் என் மனதில் இருந்து அவனுடைய நினைவுகளையோ, பிம்பத்தையோ மாற்றவில்லை. பேருந்தில், சாலையில் என எதிர்ப்படுபவர்கள் எல்லாம் அவன் சாயலைக்கொண்டு இம்சிக்கத் தொடங்கினார்கள். படிப்பை விட்டுவிட்டு அவனோடு போக வேண்டும் என்றோ, அவனைத் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும் என்ற கனவுகளோ எனக்கு இல்லை. அவனோடு பேசப் பிடித்தது, அவனோடு நடக்கப் பிடித்தது, அவன் சிரிப்பு பிடித்தது… மொத்தத்தில் அவனைப் பிடித்திருந்தது. அவ்வளவுதான். அதன் பிறகு பாபுவை அவனது அப்பா வெளியூர் அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

”நீ வந்திருக்கனு சொன்னதும் அப்படி ஒரு சந்தோஷம் அவனுக்கு. பாவம் நல்ல பையனை ஊர் எப்படியெல்லாம் பழி போட்டுச்சு.

அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான். இனி பார்த்து என்ன பண்ணப்போற?” – கவிதா புரியாமல் கேட்டாள். நான் பதில் சொல்லாமல், தயாராகத் தொடங்கினேன்.

கல்லூரிக்குச் சென்ற காலத்தில் அவனுக்காகப் பார்த்துப் பார்த்து தயாராவது போல், பத்து வருடங்களுக்குப் பிறகு அவனுக்காக பிரத்யேகமாகத் தயாராகத் தொடங்கினேன். அவனைப் பார்க்கப்போவது தெரிந்தால், ‘புடவை கட்டேன் ஒரு நாள்’ – அவன் எப்போதோ கேட்டது நினைவுக்கு வந்தது. நீல நிறப் புடவையில் நான் நன்றாக இருப்பதாக கவிதா சொன்னாள்.

”ஐ ப்ரோ பென்சில் இல்லையா உங்கிட்ட?”

”உன்னைப் பொண்ணா பார்க்க வர்றான்… போதும் இதெல்லாம்!”

”குடுறி ஒழுங்கா…”

”ஒண்ணும் சரியாப் படலை” சிரித்துக் கொண்டே எடுத்துத் தந்தாள்.

மொட்டை மாடியில் இதோ பக்கத்தில் பாபு. இடைப்பட்ட வருடங்கள் அவனில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. அதே சிரிப்பு, அதே மீசை, அதே உடல்.

”அப்படியே இருக்க பாபு.”

”நீ நிறைய மாறிட்ட… வெயிட் போட்டுட்டல்ல. ஆனா, அழகா இருக்க. புடவையில இன்னிக்குத்தான் பார்க்கிறேன்!”

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல், வழக்கம்போல் கண்கள் நிலம் நோக்கின.

”உன்னைப் பார்ப்பேன்னு நினைக்கவே இல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கு” – இப்போதுதான் பாபுவை ஒருமையில் அழைக்கிறேன்.

”எப்பவும் நினைப்பேன் உன்னை. உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான் சந்திக்க முயற்சிக்கல!”

நான் அமைதியாக இருந்தேன்.

”உனக்காவது புரிஞ்சுதா என்ன?” – குரலில் சின்னப் பதட்டம் இருந்தது.

”எனக்குத்தான புரியும்!” – என் பதில் அவன் முகத்தில் நிம்மதியைத் தந்தது. அவன் எதைக் கேட்டான், நான் எதைப் புரிந்ததாகச் சொன்னேன்? யோசித்தெல்லாம் பேசவில்லை. ஆனால், அப்படித்தான் பதில் சொல்ல முடிந்தது.

அவன் இயல்பாக அருகில் வந்து என் வலது கையை தன் இரு கைகளுக்குள் எடுத்து வைத்துக்கொண்டான். வருடங்கள் பின்னோக்கிப் போய்… நானும் அவனும் மட்டுமேயான ஓர் உலகத்தில் இருப்பதாகத் தோன்றியது.

”பஸ்ல கூட வருவல்ல… அப்ப ஒரு மாதிரி கம்ஃபர்ட்டா ஃபீல் பண்ணுவேன். நாம பேசவே மாட்டோம். ஆனாலும் அந்த ஃபீல் இருக்கும். அதை அப்புறம் நான் நிறைய நேரத்துல வேற எங்கெங்கயோ, யார் யார்கிட்டயோ எதிர்பார்த்து ஏமாந்திருக்கேன். இப்ப நீ வந்ததும் டக்குனு அந்த ஃபீல் வந்து ஒட்டிக்குது!” – இவ்வளவு நீளமாக அவனிடம் பேசுவது இதுவே முதன்முறை.

”இத்தனை வருஷத்துல ஒருநாள்கூட உன்னை நினைக்காம இருந்தது இல்லை. எவ்ளோ நல்லா இருந்தது அப்பல்லாம். உனக்காக வெயிட் பண்ணி, உன்னைப் பார்த்த அந்த சந்தோஷம்லாம் அப்புறம் வரவே இல்லை ராகி” – சிரித்தான். அவன் கைகளுக்குள் இருந்த என் கையை அழுத்தினான்.

”நாடகம் எல்லாம் இனி இல்லையா பாபு?”

”நீ பார்க்கிறேன்னா சொல்லு… உனக்காகப் போட்டுடலாம்!”

”நீ போடுறேன்னா சொல்லு… முதல் வரிசையில உக்காந்து பார்க்கிறேன். இப்ப விசில் அடிக்கக்கூட நல்லாத் தெரியும்.”

சிரித்தான்.

”இனிதான் உனக்காகப் போடணுமா என்ன? போட்ட நாடகம் எல்லாமே உனக்காகத்தானே! உன்னைத் தவிர எதிர்ல வேற யாரைக் கவனிச்சேன்னு நினைக்கிற?” என்றதும், எனக்கு பறப்பது போல் இருந்தது. வருடங்கள் கடந்தும் எனக்கான வார்த்தைகளை பத்திரமாகச் சேமித்து என்னிடம் ஒப்படைக்கிறான். அந்த சந்தோஷத்தை இங்கே வார்த்தைகளில் நான் எப்படிச் சொல்ல?

கவிதாவின் மகளோடு என் மகள் மேலேறி வந்தாள். ”பொண்ணு… அக்‌ஷயா..!” – மகளை அறிமுகப்படுத்தினேன்.

தூக்கிக்கொண்டான்.

”என்ன படிக்கிற?”

”ஸ்கூல் போறேன்.”

”அங்கிள் பேரு பாபு…”

”என் பேரு அக்‌ஷயா.”

”அக்ஷயா எப்ப வந்தீங்க?”

”எப்ப வந்தோம்மா?” – என்னிடம் கேட்டாள். நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.

”அக்‌ஷயாவோட அப்பா பேர் என்ன?”

உன் புருஷன் பேர் என்ன என்று என்னைக் கேட்காமல், மகளிடம் அவள் அப்பா பற்றிக் கேட்டது பிடித்திருந்தது. காற்றில் அலைந்த அவன் முடியைக் கலைத்துவிட வேண்டும் போல் இருந்தது.

என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம். நிறையப் பேசியது போலவும், எதுவும் பேசாதது போலவும், எவ்வளவு பேசினாலும் தீராதது போலவும் இருந்தது அந்த மாலை. இருட்டத் தொடங்கியதும் கிளம்பினான்.

”இனி என்னிக்குப் பார்ப்போம்?”

”இதுமாதிரி என்னிக்காவது பார்ப்போம்.”

”பார்க்கணும்… பார்ப்போம்!” எனச் சொல்லிவிட்டு குழந்தையைத் தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டான். ”வர்றேன்” என என் தலை கோதி விடைபெற்றான்.

தொலைபேசி எண்ணைக் கேட்கவோ, கொடுக்கவோ இல்லை. அதெல்லாம் தேவையும் இல்லை எனத் தோன்றியது.

இதேபோன்ற ஒரு நாளுக்காக, இந்தத் தலைகோதலுக்காக, இனியும் காத்திருப்பதை நினைத்தபோதே உடல் சிலிர்த்தது. எதிரே நீண்டு கிடக்கும் வாழ்க்கைக்கு, மேலும் ஓர் அர்த்தம் சேர்ந்திருப்பதாகத் தோன்றியது. தெருவை எட்டிப் பார்த்தேன். தெருமுனையில் திரும்பும் இடத்தில் நின்று கை காண்பித்தான். தெரு விளக்கின் மங்கிய ஒளியில் அவன் இன்னும் அழகாக இருப்பதாகத் தோன்றியது.

சந்தோஷத்தில் மகளைத் தூக்கி அவள் நெற்றியில் முத்தமிட்டேன். அப்படியாக… எனக்கான அவன் முத்தத்தை நான் திரும்ப எடுத்துக்கொண்டேன்!

– பெப்ரவரி 2014

Print Friendly, PDF & Email

3 thoughts on “எனக்கான முத்தம்

  1. அருமை….காலங்கள் கடந்து போனாலும் காதல் கடப்பதும் இல்லை. . கசப்பதும் இல்லை…

  2. Wow! Very nice. En kankalin orathil oru thuli kanneer eddi parthathu. Evvalavu azhakana oru kiramathu kathal. En vazhkkain mun pakuthiyei oru murai thirumbi parkka vaithathu. Kanyakumari district i viddu vegu thooram vantha enakku oorin ninavukal mendum en manathil migavum inimaiyai nizhaladiyathu. Thanks to priyathambi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *