எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 30, 2024
பார்வையிட்டோர்: 8,569 
 

(1993ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-25

19ஆம் அத்தியாயம் 

இன்ப நினைவுகள் இனிமையானவை என்ற தத்துவம் ரகுவைப் பொறுத்தவரை அநுபவ ரீதியான ஒன்றாகி விட்டது. உமாவுடன் அவன் கழித்த காலம் குறுகியதான தாக இருந்தாலும் அந்த நினைவுகள் உள்ளத்தில் நீங்கா மல் நிலை பெற்றுவிட்டன. அந்த நினைவுகள் அளித்த இதமான இன்பத்தில்தான் அவனால் தன் கவலைகளை ஓரளவுக்கு மறக்க முடிந்ததென்று கூறவேண்டும். 

மயங்கி விழப்போன பவானியை அவன் அணைத்துக் கொண்ட போது உமாவின் எண்ணந்தான் அவன் மனக் கண்ணிற் கொழுந்துவிட்டெரிந்தது. ஒருநாள் இரவு ஏகாம் பரம் குடும்பம் யாருடையவோ திருமணத்திற்காகச் சென் றிருந்த சமயம் உமா மட்டுந்தான் வேலைக்காக அமர்த்தப் பட்டிருந்த பெண்ணுடன் அந்த வீட்டில் தங்கியிருந்தாள். அந்தப் பெண் நன்றாகத் தூங்கிய பின் ரகுவும் உமாவும் வெளியில் தனியாகச் சந்தித்துக் கொண்டனர். விடியும் வரை அவர்கள் இருவரும் அந்தக் கொய்யா மரத்தின் அடியில் நிலவு தந்த போதையிலும் தென்றல் அளித்த சுகத்திலும் தம்மை மறந்திருந்த வேளையில் உமாவும் இப் படித்தான் மயங்கிய நிலையில் அகன்ற அவன் மார்பில் அழகிய தன் முகம் புதைத்துப் படுத்திருந்தாள். அவன் அவள் நெளி நெளியான கூந்தலை வருடிக் கொடுத்தபோது அவள் ஸ்பரிசம் கொடுத்த இன்பத்தில் அவள் நிஜமாகவே தன்னை மறந்து உறங்கியும்விட்டாள். அவள் தூக்கத்தைக் கலைக்காமல் அன்று இரவு முழுவதும் அவளைத் தன் மார்பில் தாங்கியபடி அந்தப் பட்டுக் கன்னத்துடன் தன் முகம் பதித்து அவள் அழகைப் பருகிக் கொண்டிருந்தான் அவன். அந்தச் சூழ்நிலையில்கூட அவர்கள் நெறி தவற வில்லை. அவர்கள் அன்பு அவ்வளவு உயர்ந்ததாகயிருந்தது. 

பவானி மெல்ல மெல்ல ரகுவின் தோள்மீது வேரறுந்த கொடிபோல் துவண்டு வீழ்ந்தாள். கையில் உமாவைத் தாங்கியபடி மறுகையால் பவானியை அணைத்தபடி ரகு வீட் டுக்குட் சென்று குழந்தையைக் கீழே இறக்கிவிட்டுப் பவானி யைப் படுக்கையிற் கிடத்தினான். சில நிமிடநேரம் அவனை அலைக்கழித்த உமாவின் நினைவு சிறிது சிறிதாக அவனை விட்டு நீங்கிக்கொண்டிருந்த சமயம் அவன் குழந்தையைத் தூக்கிக்கொண்டான். ரகுவின் பிரயத்தனத்தால் அறிவு தெளிந்தவள் சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு அமைதி யாகக் கிடந்தாள். ரகுவும் அவளைக் குழப்பாமல் குழந்தை உமாவோடு கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தான். 

‘உமா…என் ராஜாக்கண்ணு உமா…நீ கூட என்னைவிட்டுப் போய்விடத் துணிந்துவிட்டாயா?. உன்னைப் பிரிந்து என்னால் எப்படிடா இருக்கமுடியும் …. என் உயிரே நீ தான். உயிராகிய உன்னைப் பிரிந்தால் நானும் உன்னைத் தேடி வந்துவிடுவேன். ரகு குழந்தை யிடம் கூறிவிட்டுத் தன் பாட்டுக்குப் பாடுகிறான். எங்கே நீயோ….நானும் அங்கே, அந்தப் பாட்டைக் கேட் டுக் கேட்டுக் பழக்கப்பட்ட குழந்தை கெக்களச் சிரிப்பு சிரிக்கி றான். அந்தச் சிரிப்பில் ரகு தன்னை இழந்துவிடுகிறான். 

‘நீங்கள் எங்களை விட்டுப் போய்விட்டீர்கள் என நினைத்தேன். இன்னும் நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்களா. இனி எங்களைவிட்டுப் போக மாட்டீர்களே. பவானி ஈனஸ்வரத்தில் கேட்டபோது ரகுவின் இதயம் துன் பத்தில் வேகமாக அடித்துக்கொண்டது. ஒப்புக்காக அவன் பவானியைவிட்டுப் போய்விடப் போவதாகச் சொன்னானே தவிர அவனால் அது முடியுமா? பவானியே அவனைப் போ என்று சொன்னாற்கூடப் போகமுடியாத அளவுக்குக் குழந்தை உமா அவனைத் தன்னுடன் பிணைத்துவிட்டான். முடியாது தங்கச்சி. . உன்னையும் குழந்தையையும் விட்டு ஒரு நிமிடம்கூட இனி என்னால் பிரிந்திருக்க முடியாது. இனிமேல் நீ அழுவதாக இருந்தால் நானும் உன்னுடன் சேர்ந்தே அழுவதாகத் தீர்மானித்துவிட்டேன். உன்னையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்து செல்வதைவிட இப்படியே அழுதழுது சாவது மேலென்று நினைக்கிறேன். ஆமாம் ! அவரைக் கண்டேன் என்றாய்…. அவனைப் பற்றி ஏதாவது விசாரித்து அறிந்துகொண்டாயா ? திருமண மாகிவிட்டால் என்ன தங்கச்சி. உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவன் மட்டும் குடியுங் குடித்தனமுமாக வாழ் வதா….? கூடாது அவனைப் பழிக்குப் பழி வாங்கியே தீரவேண்டும் ‘ தன் உணர்ச்சியை மீறிவந்த வார்த்தைகளை ரகு தாராளமாகப் பரிமாறிய போது பலயீனமான நிலை யிலுங்கூட பவானி திடுக்கிட்டாள். 

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற மரபில் ஊறி வளர்ந்த அவளுக்கு ரகுவின் வார்த்தைகள் திகிலூட்டின. தனக்கு எது நேர்ந்தாலும் தன் கணவன் சுகமாக வாழவேண்டும் என்ற தியாக உள்ளம் படைத்த தமிழ்க்குலப் பெண்ணாக இருந்தபடியால் ‘அண்ணா ‘ என அலறினாள் அவள். 

என்னைவிட்டு நீங்கள் பிரிந்து போவதாக இருந்தாலும் பரவாய் இல்லை அவருக்கு மட்டும் எந்தவிதமான நீங்கும் செய்துவிடாதீர்கள். அவர் வாழட்டும்…. எனக்காக அல்லாவிட்டாலும் உங்கள் கையில் இருக்கும் என் குழந்தைக் காக வாழட்டும். என் கணவர் என்று உரிமையுடன் அழைக்கும் பாக்கியம் எனக்கில்லாவிட்டாலுங்கூட ‘அப்பா’ என அன்புடன் அழைக்கும் பாக்கியம் என் குழந்தைக்காவது; கிட்டட்டும். அந்த ஒரு நிம்மதியாவது என்னை வாழ வைக் கட்டும் ” என்று தொடர்ந்து பவானி அங்கலாய்த்த போது ரகு சிந்தித்தான். 

‘தான் கெட்டாலுந் தக்கார் கெடற்க’ என்று கூறு வது தமிழ்முதுமொழி. அதை வரவேற்கலாம். ஆனால்- ஒருவன் அநியாயம் செய்கிறான் என்று தெரிந்த பின்பும் கூட அவன் வாழட்டும் என்று வாழ்த்துவதாக இருந்தால் நாம் எமக்கு மட்டுமல்ல எங்கள் சமூகத்திற்கே துரோகஞ் செய்தவர்காளாகிறோம். இப்படியான நச்சுப் பாம்புகள் சமூகத்தினிடையே உலாவுவதால் இன்னும் எத்தனை எத்தனை பேதைப் பெண்கள் பலியாகப் போகின்றனரோ என்ற எண்ணந் தோன்றிய போது பவானியின் கூற்றை அவனால் முற்றாக ஒத்துக்கொள்ள முடியவில்லை. ஆயினும் இருக்கும் நிலையில் அவளை எதிர்த்துப் பேசுவதும் சாத்திய மாகாது என எண்ணி தங்கச்சி என அழைத்து அவளை நெருங்குகிறான். 

‘நீ கூறுவதை நான் ஒத்துக்கொள்கிறேனம்மா. உன் பெரிய மனதைப் போற்றுகிறேன். இருந்தாலும் என் மனதிற் குப் படும் ஒன்றிரண்டு புத்திமதிகளை உனக்கு எடுத்துச் சொல்லவேண்டும். அது என் கடமை. தமிழ்ப் பெண்களின் சமுதாயம் இன்று இவ்வளவு தூரம் கெட்டுக் கிடப்பதற்கு முதற் காரணம் உன்போன்றவர்களிடம் அளவுக்கதிகமாகக் காணப்படும் இந்தத் தியாக உணர்ச்சிதான் பவானி. அதனால்தான் சில ஆண்கள் அதைத் துர்ப்பிரயோகஞ் செய்ய வேண்டிய நிலைமை கூட ஏற்படுகிறது. பெண்குலம் இழைக்கும் இப்படியான தவறுகள் ஆண் சமூகத்திற்கே ஒரு அழியாப் பழியைத் தேடித் தந்துவிடுகிறது. இந்த அவலநிலை மாறவேண்டும். உன் கணவனை நான் எதுவும் செய்துவிடமாட்டேன். உனக்கு அந்தப் பயமே வேண் டாம் தங்கச்சி. அவனை ஒருமுறை நேரில் கண்டு உன் நிர்க்கதியை அவனுக்கு எடுத்துக்கூறிப் பார்க்கிறேன். னுக்கு ஒரு மனச்சாட்சி இருக்கிறதா என்று பரீட்சித்துப் பார்த்தால்தான் உன்மகன் அவனை அப்பா என அழைக்கும் உன் ஆசை நிறைவேறும். இதற்கு மட்டும் என்னை அனுமதி என்று ரகு இடைமறித்துக் கூறியபோது பவானிக்கும் அது சரியெனப்பட்டது. அதனால் அவள் சரி என்பதற்கொப்பாகத் தன் தலையை மட்டும் அசைத்துக் கொண்டாள். 

அவள் சம்மதம் அளித்தது ரகுவுக்கு எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அவனை எப்படியாவது கண்டு பவானியையும் குழந்தை உமாவையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டால் தனக்கு ஒரு பெரிய கடமை முடிந்து விடும் என நினைத்தான். குழந்தை உமா பிறந்து அவனது பெயர்ப் பதிவின்போது ஒருபடியாகப் பெயரை மட்டும் ஜெகநாதன் என அறிந்துகொண்டான். ஆனால் இந்தப் பெரிய கொழும்புப் பட்டணத்தில் பெயர் மட்டும் தெரிந் தால் போதுமா ? அவனது முகவரி வேலை செய்யும் கந்தோர் ஆதியனவும் தெரிந்திருக்கவேண்டும் என்பது அவ னுக்குத் தெரிந்ததே. அதனால் பவானியிடம் சென்று தங்கச்சி ஜெகநாதன் தற்போது எங்கிருக்கிறான் என்று கூறமுடியுமா….? என்று கேட்டுவிட்டு அவளை ஆர்வத் துடன் நோக்கினான். 

சில நிமிட நேரம் ஏதோ யோசிப்பதுபோல் இருந்த யவானி திடீர் என ஏதோ நினைத்துக்கொண்டு அவர் தன் குடும்பத்துடன் கண்டியில் தங்கி இருப்பதாகக் கதைத்துக்கொண்டார்கள். கொழும்பில் எங்கே தங்கியிருக்கிறார் என்று தெரியாது. கார் நம்பர் மட்டும் ஈ.எல். 604 என்பதைக் கவனித்தேன் என்று பவானி கூறியபோது அவள் குரல் கம்மிற்று. 

‘கார் கூட வைக்கும் அளவுக்குப் ணக்காரனாகி விட்டானா அவன். அவ்வளவு பணம் வந்தபடியால்தான் அவன் குணம் மாறியிருக்கவேண்டும். சரிசரி நீ பயப் படாதே தங்கச்சி. அவன் எங்கிருந்தாலும் தேடிப்பிடித்து உன் பிரச்சனையை அவனோடு அலசி ஆராய்ந்து போட்டுத் தான் இனி மறு வேலை பார்ப்பன் நான். உனக்காக இல்லாவிட்டாலுந் தங்கச்சி இந்தப் பொடிப்பயல் உமாவிற்காகவாவது அவனைத் தேடிப்பிடிக்கவேண்டியது என் கடமையம்மா. இந்தக் குழந்தையின் எதிர்காலமே அவன் கூறப்போகும் பதிலில்தான் தங்கியுள்ளது. இவன் பெரியவனாகிய பின்பு எனக்கு ஒரு மாமா இருந்தார். அவராவது என் அப்பாவைத் தேடி எங்களை ஒன்று சேர்த். திருக்கலாம் என்று குறைகூறக் கூடாது. இல்லையடா கண்ணு என்று உமாவைக் கொஞ்சியபடி பவானியை விளித்துக் கூறினான். 

‘இரண்டு நாள்களின் பின் டாக்டர் ராஜனோடு சம்பாஷிக்கும் போது கதையோடு கதையாக ஜெகநாத னின் கார் நம்பரையும் பெயரையும் கூறி அவன் பவானி வேலை செய்யும் எஜமானருக்கு என்ன உறவாக வேண் டும் என்றுங் கேட்டுவிட்டான். அவனது மனக்கருத்தை அறியாத டாக்டர் சாதாரணமாகவே அவன் ஒரு பெரிய கம்பனிக்குச் சொந்தக்காரர் என்றும் பவானியின் எஜமான ருக்கு உற்ற நண்பராக வேண்டும் என்றும் கூறினார். அதன் பின்பு டாக்டரிடம் இடையிடையே பேசி இன்னும் சில விவரங்களைச் சேகரித்துக் கொண்டான் ரகு, ஜெகநாதன் கண்டியில் உள்ள ஒரு கம்பனிக்குச் சொந்தக்காரன் என்றும் பம்பலப் பிட்டியில் ஒரு வாடகை வீடு அமர்த்தி இடையிடையே அங்குத் தனியாகவும் குடும்பத்துடனும் தங்கிச் செல்வதாகவும் அறிந்து கொண்டான். கூடவே பம்பலப்பிட்டி வீட்டு முகவரியையுஞ் சாதுரியமாகப் பெற்றுக் கொண்டான். 

அன்றுதான் அவன் ஜெகநாதன் வீட்டுக்குப் போகத் திட்டமிட்டிருந்தான். அதனால் டிஸ்பென்சரி வேலை களைச் சீக்கிரமாக முடித்துவிட்டு வீடு திரும்ப இருந்த சமயம் நிர்மலா அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அவன் அவளைக் காணாதவன் போலப் போக முயற்சித்த போது என்ன இன்றைக்கு நேரத்துடனேயே புறப்பட்டி உமாவுக்கு ஏதாவது சுகயீனமா. ? என்று கேட்டபடி அவன் அருகில் வந்தாள் நிர்மலா. 

‘அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நான் முதல்ல விரும்பிய பெண்…. அது தான் உமா… இன்று கொழும்பிற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டன். ஒருக்கால் போய்ப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப் பட்டன் ‘ ரகு வேண்டுமென்றே ஒரு பொய்யைச் சொன் னான். அந்தப் பொய் எப்படி அவன் வாயில் வந்தது என்பது அவனுக்கே புதினமாயிருந்தது. 

‘ஓ …தென் ஐ ஆம் சாறி.. என்னை மன்னித்துவிடுங்கள்…. உங்களுக்கு என் வாழ்த்துகள்’ இன்றுதான் அவர்களைப் பார்க்கப் போவதாக ஒரு சாட்டு. நாளைக்காவது என்னுடன் கதைக்க நேர மிருக்குமல்லவா ….? கூறிவிட்டுச் சடார் என்று நடந்து செல்லும் நிர்மலாவையே பார்த்து நின்றான் ரகு. அவன் உதடுகளில் ஒரு புன்னகை மிளிர்கிறது. நிர்மலாவை இப்படி ஏமாற்றியதற்காக அவன் உள்ளம் வேதனைப்படுகிறது. அதே சமயம் பெரிய ஏமாற்றமாக மாறுவதற்கு முன்பு இப்படியான சின்ன ஏமாற்றங்களை நினைத்து அவன் மனஞ் சாந்தியடைகிறது. அவன் சிரித்தபடியே அவ்விடத்தைவிட்டு நகர்கிறான். பவானியிடம் அன்று தான் திரும்பிவரத் தாமதமாகும் என்று கூறப் பவானி அவனைக் காரணங் கேட்பது அவனுக்குச் சங்கடமாக இருக் கிறது. பல நாட்களாகப் படம்பார்த்து வரப் போவதாக அவன் விடை அளிக்கும்போது பவானி சிரிக்கிறாள். ‘என்னண்ணா திடீர் என இப்படிப் புது ஆசை. ஆமாம்! இன்று என்ன படம் எந்தத் தியேட்டருக்குப் போகப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்கும் அவளை அவன் புன்னகையோடு பார்க்கிறான். 

‘தங்கச்சி…. என்ன படம் எந்தத் தியேட்டருக்குப் போகிறாய் என்று ஒரு குடும்பஸ்தனிடம் கேட்டால் அது பொருந்தும். நானோ கட்டைப் பிரமச்சாரி பஸ் வண்டியில் ஏறி அமர்ந்தால் எந்தத் தியேட்டருக்கு அருகில் இறங்க வேண்டும் என்று மனங் கூறுகிறதோ அந்தத் தியேட்டர் முன் வண்டியை நிறுத்தி இறங்க வேண்டியதுதான் என்று கூறிவிட்டு அவன் பலமாகச் சிரித்தான். அந்தச் சிரிப்புச் சத்தத்தைக் கேட்டுப் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அவன் காலடியில் தவழ்ந்து வந்தான். ரகு அப் படியே அணைத்துத் தூக்கிக் கொண்டான். 

‘பார்த்தீர்களா அண்ணா..மாமா நீங்கள் தனி யாளல்ல இதோ உங்கள் பொறுப்பில் தான் நாங்கள் இருக் கிறோம் என்று கூறத்தான் உமா உங்களிடம் அவ்வளவு வேகமாகத் தவழ்ந்து வந்தான் இனிமேல் நீங்கள் எங்களை ஏமாற்ற உமா விடமாட்டான். பாருங்களேன். இவன் இன்னுங் கொஞ்சம் வளரட்டும் என்று கூற உமா தன் இரண்டு தங்கக் கைகளாலும் ரகுவின் மார்பில் ‘பொத் பொத்’ என்று குத்தினான். பவானி அவன் கைகளை இறுகப் பற்றி உமா மாமாவுக்கு அடிக்கக் கூடாதடா, கண்ணு. எங்கே மாமாவுக்கு ஒரு முத்தம் கொடு..ம்.. கண்ணல்ல’ என்று கூறக் குழந்தை ரகுவைக் கட்டிக்கொண்டு கன்னத்தோடு கன்னம் பதித்துக் கொஞ்சினான். 

பொல்லாத சுட்டிப்பயல்.. டேய் வாடா உன்னை உன் அப்பனிடம் கொண்டு போய் விடுகிறேன். நீ எனக்கு அடித்த அடியை அவனுக்கு அடி. அப்போதாவது அவன் திருந்துகிறானா பார்ப்பம்? என்று ரகு செல்லமாகக் -கூற ‘அண்ணா…. இதென்ன பேச்சு’ என்ற பவானியின் குரல் அவனைத் திடுக்கிடவைத்தது. அப்போதுதான் அவன் தான் விட்ட பிழையை உணரத் தொடங்கினான். 

ஒரு பெண்ணுக்குத் தன் கணவன் எவ்வளவு கெட்ட வனாக இருந்தாலும் அதைப் பிறர் சொல்லிக் காட்டும் போது அவளால் பொறுக்க முடிவதில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. அதைத்தான் பெண்மை என்ற புனிதமான பெயர் கூறி அழைப்பார்கள். அந்தப் பெண்மை தான் இன்று பவானிக்கும் ஏற்பட்டது என்பதை அவன் ஒரு நொடிப்பொழுதில் உணர்ந்துகொண்டான். அதனால் அவன் மெதுவாக அவள் பக்கந் திரும்பி என்ன தங்கச்சி நீ.. சும்மா இவனோடு விளையாடினால் நீ அதைப் பெரிது படுத்திக் கொண்டு கோபிக்கிறாயே…. உன் கணவனைப் பற்றி இப்படி இரண்டு வார்த்தை விளையாட்டாகச் சொல் லக் கூட எனக்கு உரிமையில்லையாக்கும்…. எல்லாப் பெண்களும் உன்னைப்போல் இருப்பதால்தான் இந்த ஆண்கள் சமுதாயமே இப்படிக் குட்டிச் சுவராகிறது…’ என்றான். 

பெண் குலத்தின் பெருமையே அதில்தானே தங்கி யிருக்கிறது அண்ணா ! அன்று கண்ணகி கோவலனை மன்னித்தபடியால்தான் இன்று மாபெரும் காப்பியமாகிய சிலப்பதிகாரமே தோன்றியது. அதன் காரணமாகத்தான் பெண் குலம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது அண்ணா. சரி சரி நேரமாகிறது. நீங்கள் போற இடத் துக்குப் போய்விட்டுச் சீக்கிரமாகத் திரும்பி விடுங்கள். இந்த உமா பையல் இரவு இடைநேரத்தில் விழித்துக் கொண் டால் அவனைத் தாக்காட்ட முடியாது. உமாக்கண்ணு எங்கே மாமாவுக்கு விடை கொடு என்று கூற குழந்தை தன் பட்டுக்கன்னத்தில் முத்தமிட்டான். 

தெருவில் இறங்கிய ரகு நேராகப் பஸ் நிலையத்தை அடைந்து போக வேண்டிய இடத்துக்கு டிக்கற் பெற்று பஸ்வண்டியிலும் ஏறி அமர்ந்து விட்டான். அசட்டுத் துணி* வில் செல்வதற்கு ஆயத்தமாகி விட்டானே தவிர என்ன காரணத்தோடு ஜெகநாதனைச் சந்திப்பது என்ற பிரச்சனை அவனிடையே உருவாகத் தொடங்கியபோது அதற்கோர் தீர்வு காண முடியாதவனாய்த் தத்தளித்தான். அவன் மூளையை எல்லாம் பலமாகப் போட்டு உருட்டிய பின் ஜெகநாதன் ஒரு முதலாளி என்று டாக்டர் கூறிய ஞாபகம் வந்தது அவனுக்கு. கூடவே ஒரு நல்ல யோசனையும் பிறந்தது. ஆமாம், அவன் வேலை கேட்டு ஜெகநாதனிடம் செல்வதாகத் தீர்மானித்துக்கொண்டான். ஜெகநாதனிடம் நேரடியாகப் பேச்சை ஆரம்பிப்பதற்கு முன் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்வதற்காகவே அவன் இப்படி ஒரு முடிவு எடுத்தான். 

20ஆம் அத்தியாயம் 

மனச்சாட்சியுள்ள மனிதனிடம் எத்தனைதான் துணி விருந்தாலும் ஒரு தீய செயலைச் செய்ய எத்தனிப்பது அவ்வளவு சுலபமானதன்று. அதை ரகுவும் உணர்ந்து கொண்டான். அவன் குறிப்பிட்ட இடத்தில் இறங்கி விட்டான். செல்ல வேண்டிய முகவரியும் அவன் கையி லேயே இருந்தது. கொழும்பில் இத்தனை மா தங்களைக் கழித்த பின் இப்படிப் பிரபலமான ஒரு நபரின் வீட்டைக் கண்டுபிடிப்பது அவனுக்குப் பெரிய கஸ்டமல்ல, ஆனால் அவன் பொய் சொல்லி ஒருவரை ஏமாற்ற விரும்பவில்லை. அதனால் சிந்தித்தபடியே அவன் அவ்விடத்திலுள்ள தெருக் களை எல்லாம் சுற்றித் திரிந்தான். 

ஒருவித குறிக்கோளுமின்றிச் சுற்றித் திரிந்தபின் அவன் திரும்பவும் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து தன் மணிக்கட்டைப் பார்த்தான். இரவு ஒன்பது மணிக்கு. மேலாகிவிட்டிருந்தது. பவானி கூறியது அவன் நினைவுக்கு. வந்தது. எதுவிதப்பட்டும் சீக்கிரமாக வீடு திரும்பிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டே குறிப்பிட்ட முகவரி யைத் தேடிச் சென்றான். வழியில் இரண்டொருவரிடம் விசாரித்து வீட்டையும் கண்டு பிடித்துவிட்டான். இனி அந்த வீட்டுக்குள் என்ன காரணத்தைக் கொண்டு உட்செல்வது என்பதுதான் அவனது அடுத்த பிரச்சனையாக இருந்தது. 

அந்த வீட்டடியில் சில நிமிட நேரம் நின்று சிந்திக்கத் தொடங்கினான் ரகு. வீடு பார்ப்பதற்குப் பெரிதாக இருந்தது. ஆயினும் ஜனசந்தடி குறைவாகவே தெரிந்தது. வழமையாகப் பணக்கார வீடுகளில் காணப்படும் காவற் காரனாகிய நாயைக்கூடக் காணவில்லை. அதற்குப் பதிலாக வீட்டில் மயான அமைதி குடிகொண்டு இருந்தது. ரகு மெதுவாகத் தெருக்கதவைத் திறந்துகொண்டு பதுங்கிப் பதுங்கி உள்ளே நுழைந்தான். வெளி முற்றத்தில் மரங்கள் சோலையாக வளர்ந்திருந்ததால் யாராவது வந்தால் அந்த மரங்களினூடே மறைந்துகொள்ளலாம் என நினைத்துக் கொண்டு அவன் துணிவாக நடக்கத் தொடங்கினான். 

வீட்டுத் திண்ணையை நெருங்கியபோது அங்கே யாரோ விசும்புங் குரல் கேட்டு அங்கிருந்த ஜன்னலினூடாக அவன் உள்ளே பார்த்தான். சத்தங் கேட்டதே தவிர அந்த அழுகைக்குரிய நபரை அவனால் கண்டு கொள்ளமுடிய வில்லை. ஆயினும் அந்தக் குரலுக்குரியவள் ஒரு பெண் என்பதை மட்டும் அவனால் உணர முடிந்தது. அதைத் தொடர்ந்து திடீரெனக் குடிவெறியில் யாரோ உளறுவது போன்ற ஓசை கேட்க அவன் தன் காதுகளைச் சற்றுக் கூர்மையாக்கிக் கேட்கத் தொடங்கினான். 

யாரோ ஆண் பிள்ளை நல்ல குடிபோதையில் பிதற்று கிறான் என்பது நிச்சயமாகியதும்தான் வேறு யாருடை யவோ வீட்டுக்கு மாறி வந்துவிட்டதாக நினைத்து வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்று தெருவோரமாக நடக் கத் தொடங்கினான். அப்போது யாரோ ஒரு முதியவர் அவ்வழியாக வரவே அவரிடம் சென்று அது ஜெகநாதனின் வீடுதானா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளத் துணிந்தான். 

அவன் கேட்ட வினாவுக்குப் பெரியவர் சிரித்துவிட்டு நீ யாரப்பா இந்த ஊருக்குப் புதிய ஆள்போல் தெரிகிறது. அல்லது இந்த நேரங்கெட்ட நேரத்தில் அந்த வீட்டுக்குப் போயே இருக்கமாட்டாய். காலை ஆறுமணி தொடக்கம் மாலை ஐந்து மணி வரையும்தான் அந்த ஆள் மனிதனாக நடமாடும் நேரம். இரவு முழுவதும் அவன் மிருகமாக மாறி விடுவான். அவ்வளவு குடி… பணம் இருக்கு அழகான மனைவி இருக்கிறாள். என்ன இருந்தும் என்னப்பா. மனிதன் மன நிம்மதி யற்றுத் தவிக்கிறான். அந்தப் பெண். அதுதான் அவன் மனைவி. என்ன பாவஞ்செய்து அவனுக்கு. மனைவியாச்சுதோ …. ? ஒரே அடியும் உதையும்தான்… ம்…. என்ன செய்வது…ஒவ்வொருவரும் செய்த வற்றை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். நல்ல காலம் நீ புத்திசாலித்தனமாக வெளியேறிவிட்டாய். பொறுத்த தோடு பொறுத்து நாளைக்குக் காலையில் வந்து பார் மனி தன் நல்லவன். என்ன உதவி கேட்டாலும் செய்வான் எனக்கு நேரமாகுது நான் வாறன் என்று கூறிவிட்டுச் சென்றான். 

ரகுவுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. ஜெகநாதனைச் சென்று காண்பதா விடுவதா என்ற புதியதோர் பிரச்சனை அவன் மனதில் உருவாகியது. பவானியையும், குழந்தையையும் இப்படியான ஒரு குடிகாரனிடம் ஒப்புவிக்க அவன் மனம் உடன்படவில்லை. அதைவிட அவள் இப் போதிருக்கும் நிலையில் இருப்பதே மேலாகப்பட்டது அவனுக்கு. புழுதி படாமல் தன் மார்பிலுந் தோளிலுமாக வளர்ந்த குழந்தை உமா இந்தக் குடிகாரனிடம் வந்து என்ன துயர்ப்படவேண்டிவருமோ என்பதை நினைத்துப் பார்க்கவே அவன் மனம் புண்ணாகியது. பேசாமல் திரும்பிவிடுமோ என்று எண்ணியவன் சிந்திக்கத் தொடங்கினான். 

தந்தை பெயர் தெரியாத தனயன் என்ற அவப்பெய ரோடு வாழ்வதைவிடக் குடிகாரப்பயல் ஒருவனின் மகன் என்ற பெயர் தேவலை போல் தோற்றியது அவனுக்கு எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் அவனுடன் மனம்விட்டுப் பேசினால்தான் பவானியின் வாழ்வுக்கு ஒரு விடிவு ஏற்படும் என அவன் நிச்சயமாக நம்பினான். அந்தப் பெரியவர் கூறியது போல் ஜெகநாதன் நல்லவனாக இருந் தால் எதற்காக அவன் இப்படிக் குடிக்கவேண்டும் ? ஒரு வேளை பவானியைப் பிரிந்த துயர்தான் அவனை இப்படிக் குடிக்கவைத்ததோ….? அப்படியும் இருக்கலாம். உமாவைப் பிரிந்தபோது நான் எவ்வளவு துன்பப்பட்டேன் வளர்த்தவரை மறந்து ஊர் தேசத்தை மறந்து உற்றாரைத் துறந்து வரவில்லையா? ஏன் உயிரைக்கூடத் துறந்துவிட முயற்சித்தேன். பவானியின் அன்பு மட்டும் எனக்குக் கிடைத்திருக்காவிட்டால் என்னைப் புதைத்த இடத்தில் இதுவரை புல் முளைத்திருக்கும். ஜெகநாதனின் வாழ்க்கை யிலும் கூட இப்படி ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க லாம். எதற்கும் அவனைப் பார்க்காமல் இன்று போவ தில்லை என்று நிச்சயித்துக்கொண்டு திரும்பவும் அந்த வள வுக்குள் காலடி எடுத்து வைத்தான். 

இம்முறையும் அவன் அடர்ந்திருந்த சோலைகளின் நடுவே மற்றவர்கள் தன்னை எளிதாகக் கண்டுகொள்ள முடியாதபடி மறைந்துகொண்டான். சற்று முன்னர் அவன் அங்கே வந்த போது அழுகைக்குரல் மறைந்து இப்போது ஓர் ஆண்பிள்ளையின் அணுக்கமான குரலே கேட்டுக்கொண் டிருந்தது. அந்தக் குரலுக்குரியவன் ஜெகநாதனாகத்தான் அது குடி இருக்க வேண்டுமென அவன் தீர்மானித்தான். வெறியால் களைத்துப்போயிருப்பவனின் பரிதாபக் கதற லாக அவனுக்குப்பட்டது. 

திடீர் எனப் பவானியின் தோற்றம், அவன் கண்முன்னே தோற்றமளிக்கிறது. என்னண்ணா நீ வந்த விடயத்தை மறந்து விட்டாயா….? என்று அறிவுறுத்துவது போல இருக்கிறது. அவன் தன் நினைவு பெற்று இம்முறை சற்றுத் துணிவுடன் வீட்டுத் திண்ணையில் காலடி எடுத்து வைத்துவிடுகிறான். திடீர் என அங்கே பெரிய ஓங்காளங் கேட்க அதைத் தொடர்ந்து சத்தி எடுக்கும் ஆரவாரமும் கேட்கிறது. பக்கத்தில் இருந்த தூணோடு தூணாக ரகு தன்னை மறைத்துக் கொள்கிறான். திரும்பவும் அங்கே குடிவெறிப் பிதற்றலும் அதைத் தொடர்ந்து ஒரு பெண் ணின் விசும்பலும் கேட்கின்றன. இப்போது ஜெகநாதன் மேல் ரகுவுக்குக் கோபம் கோபமாக வருகிறது. அவனால் காதலித்த பெண்ணுக்கும் நிம்மதியில்லை கைப்பிடித்த பெண்ணுக்கும் நிம்மதியில்லை என்ற எண்ணம் எழுந்ததும் அவனைக் கொலை செய்துவிட்டாற் கூடத் தேவலை போலத் தோன்றியது ரகுவிற்கு. தான் நின்ற இடத் திலேயே சிறிது நேரம் நின்று பார்த்த ரகு ஒரு பெண் அழுதுகொண்டே உட்புறமாக வெளியே செல்வதைக் கண்ட தும் மிகவும் விரைவாக ஜெகநாதன் படுத்திருந்த இடத்தை அடைந்தான். 

ஜெகநாதன் படுத்திருந்த இடத்தை நெருங்கியபோது அங்கே வீசிய துர்நாற்றத்தைத் தாங்கமுடியாமல் ரகு தன் மூக்கை இறுக்கமாகப் பொத்திக்கொண்டான். அந்த இடம் முழுவதும் கால் வைக்க முடியாதபடி சத்தி தேங்கிப் போயிருந்தது. தன் நினைவற்று வந்ததையெல்லாம் பிதற்றிக் கொண்டு படுத்திருந்தான். அவனை அப்படியே பிடித்துக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவோமா என்று யோசித்த ரகு தன் இரு கரங்களையும் இறுக்கிக் கசக்கிக் கொண்டான். இப்படியான ஒரு கேவலமான நிலையில் மிருகத்தைவிட இழிவாக ஒரு மனிதன் சீவிப்பதைவிட அவன் இறந்துவிடுவதில் தப்பில்லை என்று தோற்றியது அவனுக்கு. ஆனால் அவனை எப்படிச் சாகடிப்பது. ஏற்கெனவே நினைத்தது போல அவனது கழுத்தை நெரித்துக் கொன்றுவிடலாந் தான்…. ஆனால் கொலைசெய்வது அவ்வளவு சுலப மல்லவே…. அவன் கிடக்கும் நிலையில் அவனுடன் எதை யும் பேசித் தீர்த்துக்கொள்ள முடியாது என்பதும் ரகுவுக்குப் புரிந்தது. அவனுக்கு எல்லாமே குழப்பமாக இருந்தது. இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்ப்பதென அவன் யோசித்தான். 

நீண்ட நேர சிந்தனைக்குப் பின் அவனால் ஒரே யொரு முடிவுக்குத்தான் வரமுடிந்தது. வீட்டுக்குச் சென்று பவானியை அழைத்து வந்து இவன் இருக்கும் நிலையைப் பவானிக்குக் காட்டினால் அதன் பின்பாவது இவனை அவள் மறக்க முயற்சிப்பாள். மறக்கமுடியாவிட்டாலுங் கூட அவன் மேல் வைத்திருக்கும் உயர்ந்த அபிப்பிராயத்தை யாவது மாற்றிக்கொள்ளலாமென யோசித்துவிட்டுத் திரும்பிச் செல்ல நினைத்தபோது உள்ளேயிருந்து யாரோ வரும் காலடியோசை கேட்டு அவன் விரைவாகச் சென்று” தான் முதலில் ஒளிந்து நின்ற இடத்திலேயே நின்றுகொண்டான். 

எங்கும் இருள் கவிந்துகொண்டு வந்தாலும் அந்த வீட்டில் அதுவரை ஒரு கைலாம்பு கூட ஏற்றப்படாமல் இருந்தாலும் ரகுவுக்குத் தன்னை மறைத்துக் கொண்டு அங்கே நடப்பவற்றைக் கவனிப்பது மிகவும் சுலபமாக இருந். தது. அங்கே வந்துகொண்டிருந்தவள் ஒரு பெண் என்பதும் அவள்தான் முதலில் அங்கே அழுது கொண்டிருந்தவளாக இருக்கவேண்டும் என்பதும் அவள் விட்ட பெருமூச்சில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. 

இருட்டில் அவளை நன்றாகப் பார்க்கமுடியாவிட் டாலுங் கூட அவள் தேகம் மிகவும் மெலிவுற்றிருந்ததை. அந்த இருட்டிலும் அவனால் கவனிக்க முடிந்தது. தலை வாரப்படாமல் கலைந்திருக்க அவள் உடலை ஒரு பழம் சேலை அலங்கரித்திருந்தது. அவள் அங்கு வந்த சில நிமிட நேரத்திற்கெல்லாம் திண்ணையில் தண்ணீர் ஊற்றப் படும் சத்தங் கேட்டது. அடுத்து விளக்குமாற்றால் சுத்தஞ் செய்யும் சத்தம் கேட்டது. பாவம் யார் பெற்ற அப்பாவிப் பெண்ணே இந்தக் குடிகாரப்பயலைக் கட்டிக்கொண்டு இப்படி உத்தரிக்கவேண்டியிருக்கிறதே என அந்தப் பெண் ணுக்காகக் கவலைப்பட்டான் அவன். அதே நேரம் அவன் பவானியையும் நினைத்துக் கொள்ளாமல் இல்லை. 

பவானியைப் போன்ற ஒரு அப்பாவிப் பெண்ணை இப்படியான ஒரு குடிகாரனிடம் ஒப்படைத்தால் அவள் நிச்சயமாகத் தற்கொலைதான் செய்துகொள்ள வேண்டி வரும். அதனால் அவள் வாழா வெட்டியாக இருந்தாலுங் கூட இப்படியான ஒரு குடிகாரனுக்கு மனைவியாகியிருக்க வேண்டாமெனத் தன் மனதைச் சாந்தப்படுத்திக் கொண் டான். ஆயின் குழந்தை உமாவின் வருங்காலத்தை உத் தேசித்து எப்படியாவது இந்த மனித மிருகத்தைச் சந்தித்து இரண்டொரு வார்த்தை சுடச்சுடப் பேசினால்தான் நிம்மதி ஏற்படும் போலிருந்தது அவனுக்கு. 

ரகுவின் கவனம் முழுவதும் தற்போது அந்த அறை யிலேயே பதிந்து கொள்கிறது. அங்கே வந்து கொண் டிருந்த பெண் இவனுடைய மனைவிதானா என்பதைக் கண்டு கொள்ள அவன் உள்ளந் துடிக்கிறது. கழுவும் வேலை முடிந்ததும் அவள் அந்த மனிதன் படுத்திருந்த பக்கமாகச் சென்று சிலநிமிட நேரம் அவனையே உற்றுப் பார்ப்பது போல ரகுவுக்குத் தெரிகிறது. அவனது கலைந்த கேசத்தை அவள் தடவிக் கொடுக்கும் போது ரகுவின் சந்தேகம் அறவே தெளிந்துவிடுகிறது. 

தொட்டுத் தாலி கட்டிய மனைவியைவிட வேறு எந்தப் பெண்ணுக்கும் இவ்வளவு பொறுமையிருக்க முடியாது என அவன் மனம் முடிவு செய்யும் போது அப்படியே ஓடிச் சென்று அந்தப் பெண்ணின் காலடியில் விழுந்து அவளைத் துதித்துப் போற்ற வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆனால் திடீரெனத் தன்னைப் போன்ற ஓர் இளைஞன் இந்தச் சூழ்நிலையில் அவள் முன்சென்று நிற்பதாக இருந் தால் அவனைப் பற்றி மிகவும் கேவலமாகத்தான் அப் பெண்ணால் நினைக்க முடியுமே தவிர அவனது நல்லெண்ணத்தை அவளால் புரிந்து கொள்ளவே முடியாது என நினைத்துத் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். 

அந்தப் புனித உள்ளம் படைத்த பெண்ணினது முகத்தையாவது ஒருமுறை பார்க்கலாம் என்றால் அந்த வீட்டில் இன்னும் வெளிச்சம் ஏற்படாததால் அந்த ஆசை யைக் கூட அவனால் நிவர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருந்தது. இன்னுஞ் சிறிது நேரம் இருந்துதான் பார்ப் போமென அவன் பொறுத்திருந்த வேளை மீண்டும் அந்த மனிதனின் முனகல் கேட்டது. கூடவே ஏதோ சில வார்த்தைகளும் குளறுபடியாகக் கேட்டன. ஆனால் அந்த வார்த்தைகளை எளிதாக ரகுவினால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

சிறிது சிறிதாக அந்த ஆண் குரல் உச்சஸ்தாயியில் எழுந்து கொண்டே இருந்தது. அதன் பின் அந்த வார்த் தைகள் ஓரளவுக்கு அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. ‘டீ …. எடயே அவன் … இண்டைக்கு வரவில்லையா… நீ… எ…ப்.. போ.. போய் தொலையது என்ர. ப… வா.. னி…. எப்போ வாறது… அ.. வ ள் இல்லாமல்.. நான். வாழ… முடியாது… இப்படியே … குடித்துக் குடித்துச் செத்.. துப் போவனடி நான் ..சா…கிறது உனக்கு விரு… ப்பமா…. போ….நீ… போ…. போ..ய என்…. பவானியை வரச் சொல்லு…. ம்…. போடீ….’ 

அதைத் தொடர்ந்து ‘பட்பட்’ என அடியின் ஓசையும் அந்தப் பெண்ணின் விம்மலும் கேட்கின்றன. ரகுவின் நரம்புகள் எல்லாம் புடைத்தெழுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு தான் மிருகத்தனமாக நடந்துகொண்டாலும் ஒரு பெண்மேல் கைவைத்து அடிக்கும் அளவுக்கு அவன் துணிவு பெறுவதாக இருந்தால் அவனை மிருகம் என அழைப்பதை விட மிருகத்தைவிடக் கேவலமானவனாகத்தான் நினைக்க வேண்டும் என்று அவன் உள்ளம் குமுறுகிறது. 

அந்த உள்ளக் குமுறலின் இடையிலும் குடிவெறியில் இருக்கும் ஜெகநாதனுக்காக அவள் மனம் இரங்கிக் கொள் கிறது. ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனுந் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற வள்ளுவர் குறள் அவன் ஞாப கத்திற்கு வருகிறது. அந்தக் கற்புநிலைதான் பெண்ணைத் தெய்வமாக மதிக்கச் செய்கிறது. அப்படியான புனிதமான கற்பை ஒரு பெண்ணானவள் போற்றிக் காக்க முடியாவிட்டால் அங்கே பெண்மைக்கே மாசு படிந்துவிடுகிறது. அப்படி யான ஒரு நிலைக்குத் தன் மனைவி வருவதை எந்த ஆண் மகனும் விரும்பவும் மாட்டான். அப்படியொரு குற்றத்தை அவனால் மன்னிக்கவும் முடியாது. 

அப்படியான ஒரு மாபெரும் தவற்றைத்தான் இந்தப் பெண்ணுஞ் செய்திருக்கவேண்டும். அது தான் குடிவெறியில் கூட அவன் இவளைப்பற்றி இவ்வளவு கேவலமாகப் பேச வேண்டியுள்ளது. இண்டைக்கு அவன் வரவில்லையா என்று அவன் கேட்டதிலிருந்து யாரோ ஒருவன் இந்தப் பெண்ணை நாள்தோறும் சந்திக்க வருவதாக இருக்கவேண்டும். அல்லது ஒரு கணவன் அப்படிக் கேட்டிருக்க மாட்டான். இவற்றின் மத்தியிலும் ரகுவுக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சி. ஜெகநாதன் இன்னும் பவானியை மறக்கவில்லை என்பதே. அந்த மகிழ்ச்சிக்குரிய அடிப்படைக் காரணமாகும். 

பவானி அவன் மனதில் நீக்கமற நிறைந்துவிட்டாள் என்ற அந்த ஒரு நம்பிக்கை அவனுக்கு ஒரு திருப்தியை அளித்தது. அங்கே அவன் கண்ட சூழ்நிலையில் பவானியை ஜெகநாதனிடம் ஒப்புவிப்பது அவ்வளவு சிரமமாக இருக்கு மென அவன் எண்ணவில்லை. ஆயினும் அவனது தற் போதைய மனைவியை நினைத்த போது அவனுக்குக் கவலை யாக இருந்தது. பவானியை ஜெகநாதன் ஏற்றுக்கொண் டால் இந்தப் பெண்ணின் கெதி என்னாவது ? ஏற்கெனவே திருமணவாழ்வில் எதுவித சுகத்தையும் அனுபவித்தறியாத. இந்த அபலைப்பெண் கணவன் என்கிற உரிமையையும் இழக்க நேரிட்டால் நிச்சயமாக அவன் தற்கொலைதான் செய்து கொள்ளவேண்டும் அல்லது பைத்தியமாக மாற வேண்டும். இந்த இரண்டு அசம்பாவிதங்களையும் தடுக்கவேண்டு மானால் பவானியும் அந்தப் பெண்ணும் ஒருமித்து வாழ்க்கை நடாத்த வேண்டும். அது நடக்கக் கூடிய ஒன்றா…? ஒரு வேளை பவானி அதற்கு உடன்பட் டாலும் இந்தப் பெண் உடன்பட வேண்டுமே…. கடவுளே என் பவானிக்கு எப்படியாவது தாலிப் பாக்கியம் அளித்து விடு. ஜெகநாதன் வீட்டு வேலைக்காரியாக என்றாலும் அவள் வாழட்டும். இராமர் சீதைக்கு அயோத்தியாக. இருந்தால் ஜெகநாதன் பவானிக்கு சுவர்க்கமாக இருக்க. வேண்டும். 

பலவாறாகச் சிந்தித்த ரகுவுக்கு ஒரேயொரு முடிவுக்குத். தான் வரமுடிந்தது. அடுத்தநாட் காலை எப்படியாவது பவானியை அழைத்து வந்து ஜெகநாதனிடம் ஒப்புவித்துவிடு வதே அது. ஜெகநாதன் குடிபோதையில் பேசிய வார்த்தை களில் இருந்து அவன் இன்னும் பவானியை மறக்கவில்லை என்பது தீர்மானமாய்விட்டது. ஆகவே, அந்தப் பெண்ணி டம் இதுபற்றி ஒரு வார்த்தை கூறிவிட்டால் அவள் அந்தத் தாக்குதலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்வாள் என நினைத்தான். அந்தப் பெண்ணிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என யோசித்தவன் இரண்டு மூன்றடி முன் வைத்து…இந்தாங்க… அம்மா… அம்மா… உங்களைத்தான் என்று அழைக்க அந்தப்பெண் ஓடிச்சென்று மின்சார விசையை அமுக்கினாள். அங்கே வெளிச்சம் பரவியபோது அவள் திரும்பி அவனைப் பார்த்தாள். பீதியும் பயமும் நிறைந்திருந்த அந்த முகத்தைப் பார்த்து ‘உமா நீயா?’ என்று அலறினான் ரகு. 

21ஆம் அத்தியாயம் 

எதிர் இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சந்திப்பு ரகு-உமா இருவரையும் சிலநிமிட நேரந் திகைக்க வைத்தது. இருவர் கண்களிலும் நீர் முட்டிக் கன்னம் வழியே வடிய உணர்ச்சி நிரம்பியவர்களாய்ப் பேசும் சக்தியற்று ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர். “உமா நீயா…? உனக்கா இந்தக் கதி….? மீனவ வகுப் பைச் சேர்ந்த எனக்கு நீ மனைவியானால் உன் அந்தஸ்தும் அருமையும் குறைந்துவிடுமெனப் பயந்து எம்மைப் பிரித்த உன் அப்பா இந்தக் காட்சியைக் காணவில்லையா…? உமா..எங்கே உன் அழகு.. ? எங்கே உன் வனப்பு…உன் குறும்பு. முத்துவெண்நகை எல்லாமே உன்னை விட்டுப் பிரிந்து விட்டனவா ஐயோ உமா. நீஎங்கோ நல்லபடியாக வாழ்கிறாய் என்ற நிம்மதியில் தான் நான் இதுவரை மனிதனாக வாழமுடிந்தது. இப்போது தான் தெரிகிறது எண்ணங்கள் கூடப் போலியானவை. யென்று. இந்தக் குடிவெறியனுடன் நீ எப்படியம்மா வாழ்க்கை நடத்துகிறாய்” என்று ரகு அங்கே நிலவிய மௌனத்தைக் கிழித்த போது உமா வாய்விட்டுக் கதறி’ யழுதாள். அவளால் பேசமுடியவில்லை. அவள் தேக மெல்லாம் நடுங்கியது. விழுந்து விடாமல் இருப்பதற்காக- ஏதாவது ஒரு தூணை நாட வேண்டும் போல் இருக்கவே அவள் விரைவாக முன்னேறி ரகுவின் மார்பில் முகம் புதைத்து விம்மினாள். அவளை ஒரு கையால் இறுகத் தன் மார்போடு அணைத்துப் பற்றிய ரகு மறு கையால் அவளின் முதுகையும் தலையையும் வருடிக் கொடுத்தான். 

தங்களை மறந்த நிலையில் சில கணப்பொழுதைக் கழித்த பின் ‘ உமா என அழைத்தான் ரகு. ஆனால் அவளிடம் இருந்து எதுவித பதிலும் இல்லாமற் போகவே தன் பிடியைச் சிறிது தளர்த்தி அவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தபோதுதான் அவள் மூர்ச்சையடைந்துள்ளாள் என் பதை அவனாற் புரிந்து கொள்ளமுடிந்தது. அதனால் அவன் அவளை மெதுவாக அணைத்தபடியே கொண்டு சென்று அறைக்குள் இருந்த படுக்கை ஒன்றின் மீது கிடத்தி னான். எங்காவது நீர் கிடைக்குமா என்று பார்ப்பதற்காக அவன் அந்த அறையை நோட்டம் விட்டபோது அவன் தலை சுற்றியது. ஆமாம் ! அந்த அறைமுழுவதும் காலி யான சாராயப் போத்தல்களும் புதிய சாராயப் போத்தல் களும் நிறைந்து கிடந்தன. பல நாள்கள் சுத்தப்படுத் தாததால் அது பாழடைந்த அறைபோல் கஞ்சலும் குப்பையு மாக மலிந்து கிடந்தது. அந்த அறையின் பின்புறத்தால் ரகு உட்பக்கஞ் சென்று ஒரு பாத்திரத்திற் சிறிது நீர் எடுத்து வந்து உமாவின் முகத்திலே தெளித்த போது உமா வின் கண்கள் சாடையாகத் திறந்து கொண்டன. 

அங்கே வீடிருந்த நிலையும் அங்கே காணப்பட்ட அலங் கோலமும் வீசிய துர்நாற்றமும் உமா ஜெகநாதனுடன் வாழ்ந்து கொண்டிருந்த முறையை அவனுக்குப் படம் பிடித் துக் காட்டியது. உமாவின் அவல வாழ்வை நினைத்துப் பார்த்தபோது ரகுவுக்கு ஒரு பாட்டம் அழவேண்டும் போல இருந்தது. பிள்ளையார் பிடிக்கக் குரங்காக மாறிய கதை போலப் பவானிக்கு வாழ்வு கொடுக்க வந்து உமாவின் வாழ்க்கையைக் குலைத்துவிடப் போகிறோம் என்ற கவலை அவனை வாட்டியது. உமாவின் வாழ்க்கை ஏற்கெனவே குலைந்த வாழ்க்கை தான் என்றாலும் அந்த ஒரு காரணத் தைக் கொண்டு அதைச் சின்னாப் பின்னப்படுத்தவும் அவன் விரும்பவில்லை. அதனால் அவன் முதலில் உமா விடம் பேச்சுக்கொடுத்து விடயங்களை அறிந்து கொள்ளத் துடித்தான். அவன் பார்வை உமாவின் மேற் பதிந்த போது உமாவும் சோர்வடைந்து குழிவிழுந்த கண்களால் அவனைப் பாசத்தோடு பார்த்து நின்றாள். ரகு. நான் இங்கு வாழ்வது உங்களுக்கு எப்படித் தெரிந்தது ? எத்தனை நாள்கள் என்னைத் தேடி அலைந்தீர்கள்….? எப்படியும் ஒரு நாள் என்னைத் தேடி நீங்கள் வருவீர்கள் என நான் எதிர்பார்த்துத்தான் இருந்தேன். என் ஆசை வீண் போகவில்லை. ஆனால். . . . ஆமாம் ரகு. . . . ஆனால் உடல் யாருக்கோ சொந்தமாகிவிட்டது. கூறிவிட்டு அவள் சிறிது நேரம் மௌனமானாள். ‘.. உமா உமா….நீ என்ன சொல்கிறாய்….? அப்போ நீ கூட இன்னும் என்னை மறக்கவில்லையா…. இப்படியான ஒரு படுபாதகனுக்கு நீ எப்படி வாழ்க்கைப்பட்டாய்’ என்று ரகு கேட்ட போது அவள் உடல் உணர்ச்சியால் நடுங்கியது. உமா என் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருக்கிறாள். தன்னைத் தேடித்தான் நான் இங்கு வந்ததாக அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். அதற்கு நான் மறுப்பு கூறவிரும்பவில்லை. உன்மேல் உள்ள அன்பினால் உன் னைத் தேடி நான் வரவில்லை உமா. நீ சென்ற பின்பு எனக்குத் தங்கை உறவில் வந்த ஒரு பெண்ணுக்காகத் தான் நான் இங்கு வந்தேன். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாகத்தான் உன்னைச் சந்தித்தேன். நான் இங்கு வந்த காரணத்தைக் கூறினால் நீ என்னைப் பற்றி மிகக் கேவலமாக நினைத்துக் கொள்வாய். ஆயினும் நான் வந்த காரணத்தைக் கூறித்தான் ஆக வேண்டும். ஆமாம் நான் உன் கணவனை உன்னிடம் இருந்து பிரித்துச் செல்வதற் காகத்தான் வந்தேன். உன் கணவன் ஒரு குடிகாரன் மட்டுமல்ல உமா. அவன் ஏற்கெனவே ஒரு கன்னிப் பெண் ணைக் கெடுத்து அவளைத் தாயாக்கிவிட்டு வந்த கொடிய பாவி. அப்படிப்பட்ட துரோகிக்கு ஒரு நல்ல பாடங் கற்பித்து அவனை மீட்டுக்கொண்டு போகத்தான் வந்தேன் என்று கூறத்தான் அவன் உதடுகள் துடித்தன. ஆயினும் அவன் தன்னை அடக்கிக் கொண்டான். 

ரகுவினது வினா உமாவின் இதயத்தைத் துளைத்திருக்க வேண்டும் போலும் இப்படியான ஒரு படு பாதகனுக்கு நீ எப்படி வாழ்க்கைப்பட்டாய்’ என்று அவன் கேட்ட வினா அவள் உள்ளத்தைத் சித்திரவதை செய்தது. காதலித் தவன் கணவனாகியிருக்க வேண்டியவன் இப்படியொரு வினாவைக் கேட்டதை அவளால் பொறுக்க முடியவில்லை. சாதியையுங் குலத்தையும் மட்டும் பிரதானமாக நினைத்து அன்பே உருவமான ஒரு புனிதமான இதயம் படைத்தவ னான ரகுவுக்குத் தன் அப்பா இழைத்த துரோகத்தின் விளைவுதான் இது என எண்ணிப் புழுங்கினாள். அவருக் கென்ன…? இந்தச் சீர்கேட்டைப் பார்க்காமல் அந்தப் புண்ணியவான் இந்த உலகவாழ்வையே நீத்துவிட்டார். யாரை அவர் எளியவன் என்று கருதி தன் மகளுடைய வாழ்வு வளம் பெறுவதற்காக அவனை ஊரைவிட்டுக் கலைத் தாரோ அவனே இப்போது அவள் எதிரே நின்று அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் அவல வாழ்வைப் பார்த்துப் பரி தாபப்படுவதாக இருந்தால் அவள் மனம் எப்படி அமைதி பெற முடியும் ? 

அவன் அப்படிக் கேட்டுவிட்டானே என்பதற்காக அவள் அவன்மீது கோபப்படவில்லை. மற்றவர்கள் துணிந்து கேட்க மறுப்பதை அவன் தன்மேல் உள்ள அன்பால் துணிந்து கேட்டுவிட்டான் என்றுதான் அவள் கருதினாள். அவனுடைய கபடமற்ற உள்ளத்தை அவள் புரிந்து வைத் திருந்தபடியால் அவன்மீது அவளுக்கு ஆத்திரமே உண்டாக வில்லை. இருந்தும் ஏற்கெனவே வெதும்பிப்போய் இருந்த தால் அந்தச் சிறிய அடியைக் கூட அவளால் பொறுத்துக். கொள்ள முடியவில்லை. அதனால் அவள் தன் இதயக் குமுறல் ஆறும்வரை மௌனம் சாதித்தாள். 

இடையில் ரகு தொடர்ந்து ஏதாவது பேசுவான் என்ற அவள் யூகம் பிழைக்கவே அங்கு நிலவிய மௌனத்தைக் கலைத்து ஆமாம் அதுதான் என்விதி ரகு. வாழ்க்கையில் நாம் கற்பனை செய்வது அதிகம் அவை எல்லாம் கனவாகவே நிலைத்துவிட நாம் கற்பனைகூடச் செய்து கொள்ள முடியாதவைதாம் வாழ்க்கையில் அநேகமாக இடம் பெற்றுவிடுகின்றன. ஆரம்பத்தில் அப்படியான வாழ்க்கை சிறிது சிரமம் போலத் தோற்றினாலும் பழகப் பழக ஏதோ ஓர் பாசத்தால் நாமும் கட்டுண்டு விடு கிறோம். அநுபவப்பட்டவர்கள் இதைச் சுலபமாக அறிந்து கொள்வார்கள். உங்களைப் போன்றவர்கள் இன்னும் கற்பனையிலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப் பவர்கள் இதைப் புரிந்துகொள்வது சிரமமாகத்தான் இருக் கும். நான் கூட ஆரம்பத்தில் இந்தத் திருமணத்திற்கு எவ்வளவோ எதிர்ப்புக் காட்டியவள் தான். இருந்துமென்ன அப்பாவைத்தான் நீங்கள் நன்றாக அறிந்தவராயிற்றே.. அவரது பிடிவாதத்தின் முன் என் எதிர்ப்புத் தூசியாகியது. கடைசியில் இவருக்கு நான் மனைவியானேன். ஒருவர் எவ்வளவுதான் கெட்டவராக இருந்தாலும்கூட எம்மைத் தொட்டுத் தாலி கட்டிய பின் அந்த மங்கல நாண் இருக் கிறதே அதற்கு இருக்கும் சக்தி உலகத்தில் வேறு எந்த விஞ்ஞான சக்திக்குக்கூட இருக்க முடியாதென்று தான் கூறுவேன். ரகு என் கழுத்தில் இருக்கும் இந்த மங்கல நாண் அப்படியொரு தொடர்பை அவருக்கும் எனக்கும் உண்டாக்கிவிட்டது. இனி அவர் குடிகாரனாயிருந்தா லென்ன வெறியனாக இருந்தாலென்ன இந்த உமாவின் கணவர் என்ற நிலை எப்போதும் மாறப்போவதில்லை. 

ரகு நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை நான் உணர்கிறேன். அதற்காகப் பெருமைப்படுகிறேன். இருந் தாலுங்கூட என் கணவரைப் பற்றி நீங்கள் ஒரு சிறு வார்த்தைகூடக் கேவலமாகப் பேசுவதை என்னால் பொறுக்க முடியவில்லை. நாங்கள் திருமணஞ் செய்து கொண்ட முதலிரவு மிகவும் அபூர்வமானது. புதுமணத் தம்பதிகள் முதலிரவைப்பற்றிக் கதை கதையாகக் கூறு வார்கள். என்னால்கூட ஒரு கதை கூற முடியும். ஆனால் ஒரேயொரு வித்தியாசம் நான் கூறப்போகும் கதையைப் போன்ற சுவையான நிகழ்ச்சியை இதற்கு முன்பும் யாரும் கூறியிருக்கமுடியாது. இனிமேலும் கூறமுடியாது. பொது வாக முதலிரவு நிகழ்ச்சிகளை யாரும் யாருக்கும் கூறும் வழக்கம் இல்லை. அதைக் கூறவும் முடியாது. ஒரு வேளை ணைபிரியாத நண்பர்களாக இருந்தால் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். இதுவரை அப்படியான அத்யந்த தோழிகள் யாருமே எனக்குக் கிடைக்கவில்லை ரகு. நான் என் வாழ்நாளில் கண்ட முதலாவதும் கடைசியானதுமான அத்யந்த நண்பர் நீங்கள்தான். அதனால் எனது முதலிரவு அநுபவத்தை உங்களிடம் கூறுவதில் எதுவித தப்புமிருக்காது” என்றே நம்புகிறேன். அதனால் கேளுங்கள் ரகு. 

எனக்குத் திருமணமான முதல் நாள் இரவு தன் ஆசை மகள் முதலிரவை விமரிசையாகக் கழிக்க வேண்டும் என நினைத்த என் அப்பா நாங்கள் முதலிரவைக் கழிப்பதற்காக ஒழுங்கு செய்திருந்த அறையை மிகவும் தடபுடலாக ஆயத்தப்படுத்தி இருந்தார். என் இதயம் நிறைந்திருந்த உங்கள் நினைவைக்கூட வேரோடு அகற்றிவிட்டு வரப்போகும் என் கணவருக்காக என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த வேளை. அந்த நேரத்தில் என் இதயக் குமுறலை யாருக் கெடுத்துக் கூறினாலும் அவர்கள் நம்பப் போவதில்லை. ஒருவரை மனதால் கணவராக வரித்து விட்டு மாலையிட்ட இன்னொருவருக்கு என்னை மனைவியாக்குவதற்குத் தயார் படுத்திக்கொண்டிருந்த போது காலடியரவங் கேட்டுத் தலை நிமிர்ந்தேன். எனக்கு மாலை இட்டவர் கம்பீரமாக வந்து என்முன் நின்றார். என் உடலின் அணுக்கள் ஒவ் வொன்றும் துடித்தன. முதலிரவைப்பற்றி நிறையப் படித் திருந்தேன். ஆயினும் அன்று அதை அனுபவிக்கப் போகும் ஒரு துடிப்பு என்னை உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. துடிப்பு ஒருபுறமும், காதலில் ஏற்பட்ட தோல்வியின் துயர் ஒருபுறமுமாக வாட்ட என் சுய ஆசைகளை எல்லாம் குழி தோண்டிப் புதைத்துவிட்டுத் தன்னை என்னிடம் முழுதாக அர்ப்பணிக்கும் ஒருவருக்காக நடந்ததை மறந்து புதியதோர் அத்தியாயத்தைத் தொடங்குவோம் என்றிருந்த நேரத்தில் ‘உமா’ என்ற குரல் கேட்டது. 

குரலுக்குரியவர் அவர் தான். ஆனால் கூப்பிட்ட விதம் அந்த அழைப்பு கர்ணகடூரமாக இருந்தது. அடிக் கொருதரம் அன்பொழுக உமா உமா என அழைக்கும் உங்களைப் போன்றுதான் அவரும் அழைப்பார் என எதிர் பார்த்திருந்த எனக்கு அவர் அழைத்த விதம் மனதில் ஒரு பயத்தையும் திகிலையும் உண்டாக்கியது. அவர் அன்பாகத் தான் அழைத்திருப்பார். ஏதோ ஒரு பிரமைதான் அப்படி என்னை எண்ணத் தூண்டியிருக்க வேண்டும் என்று நினைத்து முதன் முதலாக அவரை நிமிர்ந்து பார்த்தேன். புதியதோர் ஆசிரியரின் கொடூரப் பார்வையைப் பார்த்துப் பயப்படும் மாணவிபோல் என்னுள்ளங் கலங்கியது. என் கண்களில் நீர் முட்டக் கன்னத்தின் வழியே வடிவதற்கு. ஆயத்தமாக நின்றது. 

பயந்த சுபாவமுடைய மாணவியைப் போல் அவரை நான் நிமிர்ந்து பார்த்தேன். என் நாடியில் இரண்டு விரல் களைப் பதித்து என் முகத்தைச் சற்று நிமிர்த்திப் பார்த்து விட்டு ஓ நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாகத்தான் இருக் கிறாய். இன்றைய அலங்காரம் உனக்கு வெகு ஜோர் ஆனால் எவ்வளவு கொள்ளை அழகு இருந்தும் என்ன….? உன் அழகை ரசித்து அதை அணுவணுவாகச் சுவைக்கக் கூடியவன் இங்கில்லை. அவன் உனக்குக் கணவனாக வரும் பாக்கியத்தை இழந்து விட்டான். அவருடைய வார்த்தைகள் என்னை உயிரோடு வதைத்தன. அவர் கூறியதை மறுக்கவோ மறைக்கவோ சக்தியற்று வெறி பிடித்தவள் போல் நான் நின்ற போது அவர் தொடர்ந்தார். ஆமாம் ரகு ! எனக்கு மாலை இட்டவர் தான் தொடர்ந்தார். 

‘உமா என்ன விழிக்கிறாய்…? ஏதடா உண்மையைப் பணத்தினால் மறைத்துவிடலாம் என அப்பா எவ்வளவோ முயற்சி எடுத்தும் இவர் எப்படி என் கடந்த கால ரகசியத்தைத் தெரிந்து கொண்டார் என்று யோசிக் கிறாயாக்கும். உண்மையை ஒன்றாலும் மறைக்க முடியாது. உண்மை உண்மையாக வாழவேண்டியது தான். அது மறைக்கப்பட்டாலுங்கூட அதன் சுயரூபம் என்றோ ஒரு நாள் வெளிப்பட்டே ஆகவேண்டும். பரவாயில்லை எனக்கு இது ஏமாற்றமாகவுமில்லை. ஏனெனில் நான் உன்னைப்பற்றிய உண்மைகளை அறிந்த பின்பே உன்னைத் திருமணஞ் செய்ய முன்பு உன்னுடன் வாழ்க்கை நடத்த லாம் என்று தான் நம்பினேன். ஆனால் இப்போது உன்னை என் கண்முன் கண்ட பின்புதான் அது எவ்வளவு-சிரமமானது என்பதை உணர்கிறேன். ஒரு ஆணாக இருந் தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முதற் காதலை மறக்க முடியாது உமா..அதனால் என்னை மன்னித்து விடு. மானசீகமாக என்னால் உனக்கு வாழ்வளிக்க முடியாது. என் மனச்சாட்சி மரத்து நான் மிருகமாகும் போது என் தாபத்தைத் தணிக்க உன்னை எப்போதாவது உபயோகிக்கலாம். அந்த மனநிலையைக் கொடுக்கக்கூடிய ஒரு நண்பனை நான் அண்மையில் தான் தேடிக் கண்டு கொண்டேன். அவனை நீயும் அறிந்திருக்க வேண்டாமா அவனை உனக்கும் அறிமுகஞ் செய்கிறேன் பார்” என்று கூறிவிட்டு அவர் தன் பெட்டியைத் திறந்து எடுத்த பொரு ளைப் பார்த்தபோது நான் திடுக்கிட்டேன். நான் நின்ற அறையே சுற்றியது. கீழே விழுந்து விடாமல் இருப்பதற் காகக் கட்டில் விளிம்பை இறுகப் பற்றிக்கொண்டேன். 

என்ன உமா பயந்து விட்டாயா. ? என்று சர்வ சாதாரணமாகக் கூறிக் கொண்டே அவர் அந்தப் பாத்திர மொன்றில் வார்த்துக் குடிக்க எடுத்த சமயம் நான் அவர் கையைப் பிடித்துத் தடுத்தேன். வேண்டாம். தயவு செய்து இந்தக் கெட்டப் பழக்கத்தை ஆரம்பிக்காதீர்கள். எனக்கு நீங்கள் வாழ்வளிக்க வேண்டாம். மற்றவர்கள் கண்ணுக்கு மட்டும் நாம் கணவன் கணவன் மனைவியாக நாடக மாடிவிடுவோம். என்னால் நீங்கள் ஒரு குடிகாரர் ஆவதை என்னால் பொறுக்க முடியாது என்னையும் மீறிப் பிறந்தன வார்த்தைகள். 

அவர் சிரித்தார் ‘பைத்தியம்…. நான் இன்று தான் இந்தப் பழக்கத்தை ஆரம்பிப்பதாக இருந்தால் அதற்கு நீ காரணமாய் இருக்கலாம். எனக்குத்தான் இப்பழக்கம் ஏற்பட்டுப் பல மாதங்கள் கடந்துவிட்டன. ” என்று கூறிக் கொண்டே அவர் பாத்திரத்தில் ஊற்றப்பட்ட மதுவைச் சுவைத்துக் குடித்தார். போத்தலில் இருந்த மது முடியும் வரை அவர் குடித்தார். போதை நிறைந்ததும் தன்னை மறந்து அவர் பிதற்றத் தொடங்கினார். உமா நீ கவலைப் படாதே. என்றாவது உன் காதலன் திரும்பி வரநேர்ந்தால் நானே முன்னின்று அவனிடம் உன்னை ஒப்படைத்துவிடுவேன். அதுவரை நீ எனக்கு மனைவியாக இரு என்று கூறிக் கொண்டே அவர் மிருகத்தனமாக என் கைகளைப் பற்றினார். புலியிடம் அகப்பட்ட மான்கன்றும் ஆந்தை யிடம் அகப்பட்ட கோழிக் குஞ்சும் பாம்பின் வாயில் அகப் பட்ட தேரைக் குஞ்சும் தப்புவதில்லை. என் கெதியும் அப்படித்தான் ஆயிற்று ரகு. அவரது மிருகத்தனமான ஆசை நிறைவேறியதும் அவர் நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார். நான் என் துன்பம் ஓயும் வரை கண்ணீர் விட்டேன். விடியும்வரை என்னால் கண் மூடமுடியவில்லை. விடிந்து அந்த அறையின் கோலத்தைக் கண்டு என் அப்பா வின் நெஞ்சம் வெடித்து விடக் கூடாதே என்பதற்காக விடியுமுன் அந்த அறையைச் சுத்தப்படுத்தினேன். ஆங் காங்கே தெறித்துக் கிடந்த மதுத் துளிகளையும் சிகரெட் சாம்பலையும் அப்புறப்படுத்தி என் மல்லிகை மாலையில் இருந்து சில இதழ்களை அவ்விடத்தில் உதிர்த்து விட்டேன். கசங்கிய மலர்கள் என் அப்பாவுக்கு நிம்மதியைத் தேடித் தந்தன…’ 

என்னடி உன் பிரசங்கம் முடிந்ததா? என்ற குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பினர். அங்கே ஜெகநாதன் குடிவெறியில் நின்று கொண்டிருந்தான்.

– தொடரும்…

– எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு… (நாவல்), முதற் பதிப்பு: 1993, காந்தளகம், மறவன் புலவு, சாவகச்சேரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *