எங்கிருந்தோ வந்தான்…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 22,270 
 
 

வேப்பம் பூ வாசம் ஸ்மெல் பண்ணிருக்கியா ??

வெயில் கால இரவின் நிலா பார்த்திருக்கியா ???

உதிர்ந்து கிடக்கிற மாம் பூவ எப்பவாது பொறுக்கி எடுத்த அனுபவம் இருக்கா உனக்கு ???

கலர் கலரா சேமியா ஐஸ் உறிஞ்சி இருக்கியா ???

வரிசையாக கேட்டு கொண்டே போகிறான்.

“இல்லை” என்ற என் ஒற்றை தலையாட்டலுக்கு பின் சொன்னான்…. “இதெல்லாம் தெரிஞ்சுக்கனும்னா வெயில் பழகனும். வெயில் அப்படி, வெயில் இப்படின்னு புலம்ப கூடாது. ஓகே வா ? என்று மெல் புன்னகையிட்டவன்… சட்டென்று சொன்னான் “வெயில்தான் அழகு. வெயில்தான் நம்மோட அடையாளம். வெயில் ஒரு இனத்தின் குறியீடு. வெயிலை பழகு…. சரியா ???? என்று.

அவன் தலையில் தட்டி சொல்ல தோன்றியது “பக்கி…..மழை படிடா முதல்ல” என்று. அனால் சொல்லவில்லை.

அவனுடனான முதல் சந்திப்பே எனக்கு முற்றிலும் வித்தியாசமாகத்தான் நடந்தது. பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் பெண் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, நண்பர்கள் முழுவதும் அங்கு குவிந்திருந்தோம். பரபரப்பான அந்த சூழ்நிலையை மேலும் பதற்றமாக்குவது போல, உண்ணாவிரதம் தொடங்கிய சில நொடிகளிலேயே அரசின் உதவியால் அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. மெழுகுவர்த்திகள் வாங்க ஒரு கூட்டம் திரிந்து கொண்டிருந்த நேரத்தில், ஹரிதான் அறிமுகபடுத்தினார்.

செல்போன் ஒளி கற்றைகளின் நடுவே ஒரு தேவ தூதனை போல நின்று கொண்டிருந்தான் அவன். அண்ணாந்து பார்க்க வைக்கும் உருவமும், கழுத்து வரை நீண்ட முடியும், அழுக்கை பற்றி சற்றும் சற்றும் கவலைபடாத ஒரு மல்டி கலர் டி ஷர்ட்டும், கார்கோ பேன்ட்டுமாக. நிஜமாகவே ஒரு தேவ தூதனை போல. அவனுக்கு இரண்டு சிறகுகளை காணோமே என்று தோன்றியது அத்தனை பரபரப்பிலும். “மீடியா கவரேஜ் பண்ணனும். சட்டுன்னு உன் மீடியா பிரண்ட்ஸ் நம்பர் எல்லாம் இவர் கிட்ட சொல்லு. அதுக்கப்பறம் இவர் ஆர்கனைஸ் பண்ணிக்குவர்” என்று என் கவனம் சிதறி, அங்கிருந்து நகர்ந்தார் ஹரி.

அதன் பின் அன்றைய நாளின் சில மணி நேரங்கள் அவனுடன் செலவிட வேண்டி இருந்தது. மீடியா நண்பர்களின் எண்களை வாங்கினான். போன் செய்து அத்தனை பேரையும் வரவழைத்தான். பத்திரிகை புகைபடங்களுக்கான foot note எழுதினான். பேனர் அடித்து கொண்டு வந்தான். டியூப் லைட் கட்டினான். உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கான கொசுவலை வாங்கி வந்தான். எல்லாமும் எல்லாமும் செய்தான். அப்போதும் அவனுடைய தேவ தூத சிறகுகள் விரிந்தே தெரிந்தது எனக்கு. டெல்லியின் மிக பிரபலமான AIIMS மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் PG படித்து கொண்டிருப்பதாக, உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த தருணத்தில் சொல்லி என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கினான். ஈழமும், தமிழும் அவனிடம் மருத்துவத்தை விட, இன உணர்வை அதிகமாக்கியதாக எதோ நொடியில் சொல்லி கண் சுருக்கி சிரித்தான். கைகளில் புலி கொடி குத்தி இருந்தான்.

எனக்கு பிடித்த கருப்பில், எனக்கு பிடித்த உயரத்தில், எனக்கு பிடித்த புன்னகையில், வெள்ளந்தி பார்வை மட்டுமே வெளிப்படுத்தும் எனக்கு பிடித்த கண்களும், அவனுக்கு பிடித்த கொள்கைகளில் அவன் காட்டிய தீவிரமும் அவனுடைய தேவ சிறகுகளை விரிய வைத்து கொண்டே போனது. உண்ணாவிரத நாட்களில் அவனுக்கு சிறு சிறு உதவிகள் செய்ததாலோ என்னவோ, உண்ணாவிரதத்தின் முடிவில் எங்கள் இருவருக்கும் இடையே இடையே பட்டு நூல் போன்ற ஒரு சிநேகம் உருவாகி இருந்தது. ஆனால் இடையூராத பணிகள், போராட்டம், உண்ணாவிரதம் என்று தொடர் பரபரப்பு, பணிகள், அலைச்சல், பதற்றம் என்று பல பல காரணங்களினால்….விடைபெற்ற நாளில் மொபைல் எண், ஈமெயில் ஐடி, முகநூல் கணக்கு…என்று எதையும் வாங்கவோ பெற்று கொள்ளவோ செய்யவில்லை இருவரும்.

அவன் சென்னையா வெளியூரா என்று தெரியாது. அவனுக்கு என்னை பிடித்திருக்கிறதா இல்லையா என்று துளியளவும் தெரியாது. அவன் பெயர் கூட கேட்டு கொள்ளவில்லை. “என்ன பொண்ணு நீயி” என்று என்னை நானே திட்டி கொண்டேன் அவன் நினைவுகள் அதிகரித்த ஒரு தருணத்தில். அவனை பற்றி ஹரியிடம் போன் கேட்கவும் தயக்கமாக இருந்தது. இப்படியாக ஒரு குழப்பமான மனநிலையில் மெது மெதுவாக அவனை மறக்க தொடங்கி இருந்த ஒரு நாளில் என் மொபைலுக்கு தெரியாத முன் பின் தெரியாத எண்ணில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.

Tu te rappelles de moi என்று.

அதை பார்த்ததுமே வடிவேலு பாணியில் “ஆவ்வ்வ்வ்” என்றுதான் இருந்தது எனக்கு, தமிழே ஒழுங்காக வராத எனக்கெல்லாம் எதற்க்காக இத்தனை சிரமம் எடுத்து வேற்று மொழியில் குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள் என்று தோன்றியது. இருந்தாலும் அதை அனுப்பிவர்கள் யாராக இருக்கும் என்ற லேசான ஆர்வத்தில் எனக்கு தெரிந்த ஹிந்தியில் குறுஞ்செய்தி அடித்து அனுப்பினேன்.

“ஆப் கோன் ஹேஜி” என்று. பதில் உடனடியாக வந்தது.

“Hey I’m Tamizh” என்று.

“அதை ஏங்க இங்கிலீஷ்ல சொல்றீங்க” இது நான்.

“தமிழை, எந்த மொழியில சொன்னாலும் தமிழ்தான சொல்லணும்” என்ற பதிலோடு, கூடவே ஒரு ஸ்மைலியும் 🙂 வந்திருந்தது.

அட யாருங்க நீங்க. முதல்ல அதை சொல்லுங்க – என்று ரிப்ளை அடித்தேன்.

அதான் சொல்லிருகேன்ல தமிழ் அப்படின்னு- என்று மீண்டும் அதே பதில்.

பாஸ் கடுபடிக்காதீங்க. யாரு நீங்க. எதுக்கு எனக்கு மெசேஜ் பண்ணிருக்கீங்க. என்ன விஷயம் என்று உச்சகட்ட எரிச்சலை கக்கினேன் அந்த மெசேஜில்.

Ok Ok Coolllllll. கோயம்பேடு உண்ணாவிரதம் அப்போ ஒரு பொண்ணு எனக்கு Assitant-அ கொஞ்ச நாள் வேலை பாத்துச்சு. அந்த பொண்ணு எங்க இருக்கு ? எப்படி இருக்கு ? அது போன் நம்பர் என்ன ? அப்படின்னு எல்லாம் கஷ்டப்பட்டு தேடி கண்டு புடிச்சு ஒரு மெசேஜ் அனுப்பினா அந்த பொண்ணு இப்ப “லொள் லொள்” என்று ஒரு ஸ்மைலியுடன் பதில் மெசேஜ் வந்தது.

Uffffffffffffff. அந்த குறுஞ்செய்தி அளித்த உணர்வை விளக்க, வார்த்தைகளை தேட வேண்டி இருந்தது. கட்டுக்குள் அடங்கா ஒரு வாசனை அறை முழுதும் பரவியது போல் இருந்தது. பிரியத்தின் வாசனையாக இருக்கலாம் என்று தோன்றியது. சில புன்னகைகள் என்னை சுற்றிலும் உதிர்ந்து கிடந்தது. சிறு வெட்கம் என் அருகில், வரவா வேண்டாமா என்கிற கேள்வியுடன் நின்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் ஒரு ஓரமாக ஒளித்து வைத்து, நிதானமாக ஒரு பதில் அனுப்பினேன்.

“ஹே…எப்படி இருக்கீங்க. Nice 2 c you. எப்படி என் போன் நம்பர் கண்டு பிடிச்சீங்க. Any way tnx.” என்று போட்டு மறக்காமல் “Miss you lot” என்கிற ஒரு வரியையும் சேர்த்து அனுப்பினேன்.

உடனடியாக கால் செய்தான் எனக்கு. ப்ரியம், வெட்கம், கூச்சம், என்று சகலதையும் ஒரே நொடியில் அடித்து விரட்டி, மிக பரிச்சயமான ஒருவனிடம் பேசுவது போல் பேசினேன். உண்ணாவிரதம் முடிந்து உடனடியாக டெல்லி சென்று விட்டதாகவும், அந்த அவசரம் காரணமாக என்னிடம் எதுவும் சொல்லி கொள்ள முடியவில்லை என்றும் விளக்கம் சொன்னான். ஹரியிடம் என்னுடைய மொபைல் எண் வாங்கியதாகவும் சிரித்தான். இரண்டு நாட்களில் சென்னை வர இருப்பதாகவும் என்னை பார்க்க முடியுமா என்றும் வேண்டுகோளினான்.

அவனே என்னை பார்க்க வேண்டும் என்று கேட்டவுடன், “பெருமாள்…” என்று கத்த தோன்றியது.

“கண்டிப்பா பாக்கலாம் தமிழ். தினத்தந்தி பக்கத்துலதான் என் அலுவலகம். நீங்க வந்தவுடனே எனக்கு கால் பண்ணுங்க. நாம பாக்கலாம்” என்றபடி போனை வைத்தேன். அடுத்த நொடி யாருமற்ற என் அறையில், உச்சகட்ட டெசிபலில் நான் கத்தியதை கேட்ட என் சமயல்கார அம்மா ஓடி வந்து அதிர்ச்சியுடன் பார்த்தார். என்னாச்சு பாப்பா என்றபடியே.

ஷிட். சாரி ஜெயாம்மா ! சும்மா கத்தணும் போல இருந்துச்சு அதான்…! என்று ஏகத்துக்கும் வழிந்து அனுப்பி வைத்தேன்.

அடுத்த நாளில் என்னுடைய FACEBOOK பக்க நண்பனாக ஆகி இருந்தான் தமிழ். விவாதங்கள், சண்டைகள், விளக்கங்கள், என்று 24 மணி நேரமும் போர் களமாக காட்சி அளித்தது அவனுடைய பக்கம். கவிதைகளும், பெண்ணியமுமாக காட்சியளிக்கும் என்னுடய FACEBOOK பக்கத்தை பார்த்தால் என்ன நினைப்பானோ ??? அறிவில்லாதவள் என்று முடிவு கட்டிவிடுவானோ என்றெல்லாம் சம்மந்தமில்லாத நினைவுகள் பயங்கள் வந்து சென்றது.

ஒரு வார இடைவெளியில், கருப்பு வெள்ளை சுடிதார் அணிந்த என்னுடைய ஒரே ஒரு போட்டோவுக்கு மட்டும் லைக் செய்திருந்தான். அப்போதே முடிவு செய்திருந்தேன். இவனை பார்க்க போகும் போது இந்த டிரஸ்தான் போட்டு செல்ல வேண்டும் என்று.

அந்த மாத இறுதியில் அவன் சென்னை வந்திருந்தான். கிரீம்ஸ் சாலையில் உள்ள ப்ரூட் ஷாப்பில் சந்தித்தோம். முதல் தடவை இல்லை என்றாலும், ஏனோ அவனை முதல் தடவை பார்க்க போவது போன்ற பதற்றமே எனக்குள் இருந்தது. அவன் மிக இயல்பாக என்னை எதிர்கொண்டான். அதே கண்கள் சிரிக்கும் புன்னகையுடன்.

ஒரு மேங்கோ ஜூஸ், Fresh Straw Berry Milk shake ஆர்டர் செய்தான். நிறைய பேசினான். சாதியற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவது அவனது கனவாக இருந்தது. படித்து முடித்து அதற்கான வேலைகளில் மட்டுமே ஈடுபட போவதாக சொன்னான். அவனுக்கு கிடார் வாசிக்க தெரியும், பாட தெரியும் என்பதையும் பேச்சினூடே தெரிந்து கொண்டேன்.

என்னளவில், மீடியாவில் நான் என்னவாக குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன் என்பதை தமிழுக்கு சொன்னேன். எழுத பிடிக்கும் என்பதையும் நான் ஒரு strong feminist எனபதையும் அவனுக்கு மெல்லிசாக புரிய வைத்தேன்.

எல்லாம் முடிந்து கிளம்புகையில் கேட்டான். “இன்னும் உங்க கிராமத்துல வேப்பெண்ணைதான் யூஸ் பண்றீங்களா ?” என்று.

என்ன கேட்கிறான் என்று புரியவில்லை என்பதை என் நெற்றி, கண்கள், மூக்கு என்று முகத்தின் அத்தனை இடங்களிலும் விழுந்த சுருக்க கோடுகள் சுட்டி காட்டி இருக்க வேண்டும்.

எண்ணை வைத்து வாரிய என் தலையை தட்டி “ஒரு லிட்டர் வேப்பெண்ண இருக்கும் போலியே உன் தலைல” என்று கிண்டல் அடித்தான்.

அட. அது கண்டிஷனர்ங்க. என்றேன்.

இங்க பார்ரா வேப்பெண்ண, கண்டிஷனர் பத்தி எல்லாம் பேசுது என்றான்.

சட்டென்று கோவம் வந்தது எனக்கு. வேப்பெண்ணை பத்தி விளக்கெண்ணெ யூஸ் பண்றவங்க எல்லாம் பேச கூடாது என்றேன்.

“கெக்க பிக்க” என்று அவன் சொல்லியதும் எங்கள் இருவருக்கிடையில் ஒரு கூடை புன்னகை வந்து அமர்ந்தது.

அவன் டெல்லி சென்றதும் கிடைக்கும் நேரங்களில் மொபைல் குறுஞ்செய்திகள், ஜிமெயில், facebook என்று அத்தனை டெக்னாலஜி வழியாகவும், நட்போ , பிரியமோ, காதலோ, இல்லை பெயர் சொல்ல முடியாத எதோ ஒன்றோ…. எங்கள் இருவரிடையில் அதனுடைய முதல் தளிரை விடுமளவிற்கு வளர்ந்தது.

நீலம் புயல் சென்னையை கடக்க உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்க பட்டிருந்த நாள் ஒன்றில் கால் செய்தான் எனக்கு.

என்ன தமிழ் ???? என்று கேட்டதற்கு

“இந்த புயல்ல இந்த மழைல உனக்கு walk போகனும்னு ஆசையா இல்லையா என்றான்.

இருக்கு. ஆனா பயமாவும் இருக்கே. துணைக்கு கூட யாரும் வர மாட்டாங்களே என்றேன்.

நான் வந்தா வருவியா என்றான்.

விளையாடாத தமிழ். டெல்லில இருந்து சென்னைக்கு வர்ற பிளைட்ஸ் கூட கேன்சல் பண்ணியாச்சு தெரியுமா என்றேன்.

ஆபீஸ்ல இருந்து கீழ இறங்கி வர்றியா என்றான்.

இவன் விளையாடுகிறான் என்று கீழ் இறங்கி போனால் வாசலில் நின்று கொண்டு, கண்களில் சிரிக்கிறான்.

“ஏ…எப்படி இப்படி ?? எப்படா டெல்லில இருந்து வந்த ? பிளைட் கூட கிடையாதே??? வரிசையாய் கேள்வி மட்டுமே வந்தது எனக்கு.

நேத்து ஒரு போராட்டத்துக்காக லீவ் போட்டுட்டு வந்தேன். அப்பறம் இன்னைக்கு புயல் வேற. அதான். புயல் பாக்க பீச் போலாம் வர்றியா என்றான்….

என்ன ஒரு exciting thought என்று தோன்றியது. அலுவலகம் ஏற்கனவே நண்பகலுக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் இருவரும் பீச் போய், நீலம் கடலை கடக்கும்போது, ஆடை பறக்க, முடி பறக்க, கேட்காது என்ற போதும் “ஒ”வென்று கத்தி புயலை வழி அனுப்பி வைத்தோம்.

புயல் முடிந்து வருகையில் உண்மையிலேயே ஏதோ ஒன்றை சாதித்தது போன்ற அதீதத்தின் அமைதி நிலவியது எங்களுக்கிடையில்.

காற்றுடனும் மழையுடனும் என்னை விட்டுவிட்டு மீண்டும் டெல்லி சென்றான்.

அதன் பின் எங்கள் இருவரிடையே அந்த பட்டு நூல் நெருக்கம் அதிகரித்திருந்தது. சில நேரங்களில் விடிய விடிய பேசினோம். மறுநாள் நான் அலுவலகத்திலும், அவன் மருத்துவமனையிலும் தூங்கி விழும் கதைகள் தொடங்கின. ஆச்சர்யமாக கவிதைகள் எழுதினான். கடிதம் அனுப்பினான். கடிதத்தின் உள்ளே எனக்கு பிடித்த பூக்களை பாடம் செய்து அனுப்பி வைத்தான்.

ஒரு விடுமுறைக்கு நான் ஊருக்கு போக இருப்பதாக தமிழிடம் சொல்லிவிட்டு, வர்றியா என் வீட்டுக்கு என்று ஒரு விண்ணப்பத்தையும் போட்டு வைத்தேன். கொஞ்சமும் தயங்காமல் கூட்டிட்டு போ என்றான்.

எதிராபாராதவன் அவன் எப்போதுமே. இன்னதுதான் செய்வான் என்று எதிர்பார்க்கும் நேரத்தில் அது அற்ற எல்லைக்கு சென்று வேறு எதாவது செய்வான். “கூட்டிட்டு போ” என்பதும் நான் எதிர்பாராத ஒன்று. “வர்றியா” என்பது ஒரு பேச்சுக்காகத்தான் அவனிடம் கேட்டேன். இருந்தாலும் அவன் பதிலில் இருந்த உறுதியில்….மெதுவாக அப்பாவிடம் கேட்டேன். மறு வார்த்தை சொல்லாமல், அவனை அழைத்து வர முழு சம்மதம் அளித்தார்.

அம்பாசமுத்திரம், தாமிரபரணி, மேற்கு தொடர்ச்சி மலை என்று எல்லாமும் சுற்றினோம் அப்பாதான் கூட்டி சென்றார். அப்பாவுடன் தீவிரமாக பேசினான். விவசாயம் செய்வதற்கு அம்பாசமுத்திரத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி தர முடியுமா ” என்று வேண்டுகோள் வைத்தான். போராட்டம் பற்றி, நாட்டில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் பற்றி நிறைய பேசினான். அப்பா ஒரு தீவிர தலித்தியவாதி, கம்யூனிசவாதி என்பதால் அவனை அவருக்கு அத்தனை பிடித்து போனது.

ஊருக்கு அழைத்து சென்ற பின் நிறைய மாறி இருந்தான் தமிழ். அதீத ரசனையோடு இருந்தான். எனக்கான அவனுடைய வார்த்தைகளில் அந்த ரசனை தெரிந்தது. ‘blue moon” தருணத்தில் இந்தியாவே டெலஸ்கோப்புடன் அலைந்த போது, கன்னியாகுமரியில் நிலா பார்க்க அழைத்து சென்றான்.

அதன் பின் வந்த ஒரு ஞாயிறு காலை என்னுடைய மெயில் பாக்சில் ஒரு பாடலின் யூ டியூப் லிங்க் வந்து விழுந்திருந்தது. தமிழ் அனுப்பி இருந்தான். அத்துடன் ஒரு சிறு குறிப்பும் எழுதி இருந்தான். “ஹே வேப்பெண்ணை…இந்த பாட்டை அதோட 2 நிமிட 59 நொடியில் கேளு. அதுதான் நீ. அந்த வரி உனக்காக மட்டும் நான் டெடிகேட் பண்றேன்” என்று முடிந்திருந்தது அந்த குறிப்பு.

லிங்க்கை கிளிக் செய்தால், ராஜாவின் அதி அற்புத இசையில் பிரபு நதியா நடித்த “சின்ன தம்பி பெரிய தம்பி” படத்தில் வரும் “ஒரு காதல் என்பது” பாடலை பாடியது. அந்த 2 நிமிட 59 நொடிக்காக ஒரு மாதிரியான…படபடப்பான பட்டாம் பூச்சி பறக்கிற இன்னும் இது மாதிரியான அத்தனை உணர்வுகளுடன் காத்திருந்தேன். “உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்றவில்லை” என்ற அந்த பாடலில் அவன் குறிப்பிட்ட அந்த நொடியின் வரிகளின் உண்மையிலேயே கரைந்துதான் போனேன். அவன் என்னளவுக்கு உணர்வுகளை வெளிபடுதுபவன் இல்லை என்றாலும் அவனிடமிருந்த இந்த ஒரு விஷயத்துக்கு வேரெதுவும் அந்த நொடியில் இணையாக தோன்றவே இல்லை.

ஒரு வருட காலம் எனக்கும் அவனுக்குமான அந்த பட்டு நூலிழையிலான அன்பு, ப்ரியம், காதல் என்று எந்த வார்த்தைகள் போட்டு நிரப்பி கொள்கிற அந்த சிநேகம் ஏற்பட்டு. திரும்பி பார்க்க கூட நேரமில்லாத அளவுக்கு எனக்கும் அவனுக்குமான நாட்கள் மைக்ரோ நொடிகளில் கடந்திருந்தது. கடந்து கொண்டும் இருந்தது.

ஒரு டிசம்பர் பனியில் மீண்டும் அதே தேவ தூதன் போல சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றான். முதலில் பார்த்த அதே ப்ரூட் ஷாப்பிற்கே போனோம். நெடு நேரம் பேசாமல் இருந்தான்.

பின் “உனக்கு தெரியும் இல்லையா. எனக்கு என் அப்பா, அம்மா, நீ, என் பிரண்ட்ஸ் இப்படி எல்லாரையும் விட என்னோட கொள்கைகள் முக்கியம் அப்படின்னு ???” என்று கேள்வி எழுப்பினான்.

எனக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது லேசாக புரிந்தது. அவன் வழக்கமாக எனக்கு தந்து செல்லும் அதே படபடப்பை, அதே பட்டாம்பூச்சி பயத்தை, இப்போதும் தந்து கொண்டிருந்தான்.

தொடர்ந்தான். “இந்த ஒரு வருஷமா உன் கூட பழகினதுக்கு பின்ன நான் நிறைய distract ஆகி இருக்கேன் அப்படின்னு ரொம்ப strong-அ பீல் பண்றேன். எந்த போராட்டத்துலயும் கலந்துக்க மாட்டேங்கிரேன். விவாதங்களின் பங்கேர்க்க மாட்டேன்றேன். எந்த விசயத்துக்காகவும் என்னுடைய பெரிய….இல்ல… சின்ன பங்கேர்ப்பு கூட இல்லாம போய்கிட்டு இருக்கு. என்னோட எல்லா கவனமும் உன் மேல தான் இருக்கு. கிடைக்கிற சின்ன விடுமுறையை கூட உன் கூட செலவு பண்ணனும் நினைக்கிறேன். எல்லா நேரமும் உன்னை பற்றிய நினைப்பு என்னை occupy பண்ணிட்டே இருக்கு. ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றான்.

“அவனை விரும்ப எது காரணமாக இருந்ததோ அது குறைவதற்கு நான் காரணமாக இருக்கிறேனோ என்கிற குற்ற உணர்ச்சி அந்த நொடியில் வந்து போனது.

நாம இந்த ரிலேஷன break up பண்ணிக்கலாமா. Friends-ஆ இருக்கலாமா என்று என் காதலை என் முன் சிதறி போட்டு கேட்டு கொண்டிருந்தான்.

எனக்கு சரி என்று சொல்வதை தவிர வேறு பதில் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. சரி என்று அழுகையை கட்டுபடுத்தி புன்னகைத்து சொன்னேன்.

வருத்தமில்லையா என்றான்.

இல்ல…உன் போராட்ட குணத்துக்காகத்தான் உன்ன லவ் பண்ணினேன். அதுவே என்னால காணாம போகுது அப்படினா நான் உன்ன லவ் பண்ணினதுக்கு அர்த்தமே இல்ல என்றேன்.

இந்த வார்த்தைகள் எல்லாம் எங்கிருந்து என்னை மீறி வந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு புரியவே இல்லை.

வேறு எதுவும் சொல்லனுமா என்று கேட்டான்.

“நீண்ட நாட்களாக நீ கேட்ட, நீ கெஞ்சிய, உன்னை பற்றிய, உன் மீதான என் காதலை பற்றிய ஒரு கவிதை என் கையில் இருக்கிறது. அதற்குள் உனக்கு பிடித்த ஒரு குட்டி போன்சாய் செடி கூட வைத்திருக்கிறேன்” என்று சொல்ல நினைத்து, பின் “எதுவும் இல்லை” என்று சொல்லி சிரித்தேன்.

அடுத்து எப்ப பார்க்கலாம் என்று கேட்டான்.

எப்போதும் பார்க்க போவதில்லை என்று அவனுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். இருப்பினும் அந்த கேள்வியை அவமானபடுத்த தைரியமில்லாமல்…. “நீ எப்ப விரும்புறியோ அப்ப” என்று சொல்லி அவனிடம் இருந்து விடைபெற்றேன். இப்போதும் அவனுடைய தேவ தூத சிறகுகள் நீண்டு கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்த பட்டு நூல் அறுந்திருந்தது.

– 2013-ம் ஆண்டு “ஃபெமினா (தமிழ்) மாத இதழின் ஜூன் மாத இதழில் வெளியான கதை

Print Friendly, PDF & Email

3 thoughts on “எங்கிருந்தோ வந்தான்…

  1. //அருந்திருந்தது// சிறிய திருத்தம் :
    //அறுந்திருந்தது//
    அருமையான கதை. மென்மையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியது எழுத்து நடை .
    வாழ்த்துகள் கவிதா !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *