இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டு யார் என ராஜேஷ் கேட்டை பார்க்க வந்தது அவர் எதிர்பார்த்ததை போல அவர் மகன் வருண் தான். அவரோ தோட்டத்தின் அருகில் இருக்கும் மரநாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். வருண் உள்ளே நுழைந்ததும் அப்பா சாப்டிங்களா? என கேட்க இல்லை என்றவாறு தலையசைத்தார். ஏன் என கேட்டான், பேப்பர் படித்து கொண்டு அப்படியே உக்காந்து விட்டேன். மாவு இருக்கு தோசை ஊத்தி தரேன் சாப்பிடுங்க என்றான். நீயும் வா சாப்பிடலாம் என ராஜேஷ் கூற சரிப்பா பத்து நிமிசம் ஃப்ரஸ் ஆயிட்டு வந்தரேன்பா என கூறி விட்டு தனது போனை டேபிளில் போட்டுவிட்டு குளிக்கச் சென்றான். அவனின் போன் அவன் குளிக்கச் சென்ற இரண்டு நிமிசத்தில் அதிர ஆரம்பித்தது. வருண் குளித்து விட்டு வந்தான், உனக்கு போன் வந்துச்சு என ராஜேஷ் கூறினார் யாருன்னு பாத்தீங்களா? என கேட்டான். இல்லை என தலையசைத்தார். மை லவ் என பெயர் தெரியவே உடனே அழைத்தான், தம்பி என்ன செய்ற சாப்டியா? என்ற குரல் வருண் உதட்டில் புன்னகை பூத்தது. புன்னகை மாறாத தோற்றத்தோடு பதில் கூறினான் இல்லம்மா இனிமேதான் நீங்க சாப்டிங்களா? மா தண்ணி மாத்தி மாத்தி குடிக்காதிங்க அப்புறம் சளி புடிச்சிரும்.
சரி எப்ப வருவிங்க என கேட்கிறான். நாளைக்கு வந்துருவேன் வருண் டைம்க்கு சாப்டு ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடுங்க சரியா அம்மா போனை வைக்கிறேன் என அவள் சொல்ல அம்மா ஒரு நிமிடம் என்கிறான் என்ன என கேட்கிறாள் நீங்க இல்லாம ஒரு மாறி இருக்குமா சீக்கரமா வாங்க என்கிறான். சீக்கிரமா வந்தரேன், பாத்து இருங்க ரெண்டு பேரும், என கூறிவிட்டு வைத்துவிட்டாள். வருண் சமையறைக்கு சென்று தோசை கல்லை அடுப்பில் வைத்துவிட்டு சாமி அறைக்கு சென்று நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு மீண்டும் சமையறைக்குச் சென்று மாவை எடுத்து தோசை ஊற்றி டேபிளில் வைத்து அப்பாவை சாப்பிட அழைத்தான். நீயும் வா சேர்ந்து சாப்பிடலாம் என அழைக்கிறார். தோசையை நீங்க சாப்பிட்டுட்டே இருங்க நான் வந்து ஜாயிண்ட் பண்ணிக்குறேன் என கூற, அவரும் மெதுவாக சாப்பிட தொடங்க அவனும், வருகிறான். இருவரும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள், போன்ல யாருப்பா என ராஜேஷ் கேட்க என் நான் ரொம்ப லவ் பண்ற ஒரு ஆளு என கூற சொல்லவே இல்ல எப்ப இருந்துப்பா லவ் பண்ற என கேட்கிறான்.
18 வருஷமா லவ் பண்றேன் என கூற அதிர்ந்து போகிறார், அப்பா ஷாக் ஆகாதீங்க அந்த பொண்ண காட்டுறேன் என கூறி அவனது போனை எடுத்து போட்டைவை காட்டுகிறான். அதில் வருணின் மீது சாய்ந்தவாறு அவனுடைய அம்மா லெட்சுமி. நான்கூட பயந்துட்டேன் வருண் என்றார் ராஜேஷ். பயப்படாதீங்கப்பா அம்மா இருக்குற வரைக்கும் எனக்கு அப்படி ஒரு எண்ணம் வராது என்கிறான். எனக்கு போன் பண்ணி பேசல உங்கம்மா உனக்கு மட்டும் கூப்டு பேசிக்குற என ராஜேஷ் கூற நீங்க எத்தன தடவ அம்மாவுக்கு போன் பண்ணியிருக்கீங்க என கேட்க அவரிடம் முறையான பதில் வரவில்லை. நான் ஆம்பள நான் ஏன் கூப்பிட்டு பேசனும் அவ பேச வேண்டிதான என்று ராஜேஷ் கேட்க வருண் கோபத்தோடு அங்கிருந்து எழுந்து நீங்க ஒரு அப்பாவா ஜெயிச்சுருக்கலாம் ஒரு கணவராக நீங்க தோத்துடீங்கப்பா என கூறிவிட்டு லெட்சுமியை அறைக்குச் சென்று ஒரு புளுகலர் டைரியை எடுத்து வந்து அப்பாவிடம் நீட்டி இத படிங்க இது அம்மா எழுதுனது என தருகிறான். இதனை பற்றி நிறைய உரையாடி இருக்கிறோம் ஆனால் அதனுள் என்ன இருக்கிறது என எனக்கு தெரியாது என கூறிவிட்டு தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் படிக்க தொடங்கிவிட்டான் வருண். ராஜேஷ் அந்த டைரியை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று கண்ணாடியை போட்டுக் கொண்டு படிக்க தொடங்குகிறார்.
நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தேன். சுத்தி இருங்க சொந்தபந்தம் இருக்கே இன்னுமா கல்யாணம் பண்ணல காலம் கெட்டு கிடக்கு எவனையாவது கூட்டிட்டு வந்துர போறா பாத்துக்க அப்படின்னு சொல்லிட்டு வந்த வேல முடிஞ்சு போச்சுன்னு கிளம்பிடாங்க. எங்க அம்மா சும்மாவே அப்படி இதுக்கு அப்பறம் சொல்லவா வேணும் தீவிரமா இறங்கிடாங்க. உங்கள கல்யாணம் பண்ணேன்.
ஸ்கூல் காலேஜ் ரெண்டும் பொண்ணுங்க மட்டும் ஆண் வாடையே பட்டதில்ல உங்க கூட பேசுனதும் இல்ல சரி நமக்கு நல்ல பிரெண்டா ஒரு நல்ல கணவரா நல்ல பாதுகாவலரா நீங்க இருப்பீங்கன்னு நம்பி வந்தேன். நீங்க என்ன மட்டும் விட்டுட்டு வேலைக்கு போயிருவீங்க நான் மட்டும் தனியா டிவியையும் எவ்ளோ நேரம் பாக்குறது. வேலை விட்டு வந்தாலும் என்ட எதுவும் பேச மாட்டீங்க. திருமண வாழ்க்கையவே உங்களால நான் வெறுத்தேன். நான் போன் பண்ணா பிஸின்னு வரும் மீண்டும் கூப்டு பேசுவீங்க என நினைப்பேன். ஆனால் நீங்கள்தான் வினோத பிறவி ஆச்சே வீட்டுக்கு வந்து ஏன் கூப்ட என கேப்பீங்க. எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு ஏதாவது உங்களுக்கு தெரியுமா. ஆனா நான் மட்டும் உங்களுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்கணும். எனக்கு பிடிச்சத செய்யணும் இம்ரஸ் பண்ணணும் தோணவே தோணாதா அத நான் எதிர்பார்க்க மாட்டேன்னு நினைச்சுட்டிங்களா இல்ல இவளுக்கு எதுக்கு செய்யணும் செய்யாம இருக்கீங்களா எனக்கு தெரியல. நைட் நீங்க நாளைக்கு சினிமாக்கு போலாம், ஹோட்டலில் சாப்பிட போலாம், ஸ்விம்மிங் பூல் போலாம் அங்க போலாம் இங்க போலாம் என்று சொல்லிட்டு மறுநாள் நீங்க மட்டும் ஊர் சுத்த கிளம்பிருவீங்க. நான் ஒரு டிசர்ட் வாங்கி தாங்கன்னு மேரஜ் ஆன ரெண்டாவது நாள் கேட்டேன். மறந்திருந்தாலும் பரவால்ல சொன்னீங்களே ஒரு வார்த்த என் தங்கச்சியே என்ட நூறு தடவ கேட்டா தான் கிடைக்கும்ன்னு. அவளும் நானும் ஒண்ணா நீங்களும் ஏதாவது கேட்டு நான் இந்த வார்த்தய சொன்னா ஒத்துக்குவிங்களா. கின்னஸ் புக்ல உங்களுக்கு ஒரு இடம் கொடுக்கலாம் அதிக ஞாபக மறதி கொண்ட நபர் என்று நைட் சொன்னதை அடுத்த நாளே மறக்க உங்களால் மட்டுமே முடியும்.
நான்கு மாதம் கடந்த நிலையில் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தெரிவிக்க அதில் இருந்தாவது அக்கறை கிடைக்கும் என எதிர்பார்க்க ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. அதனாலயே ஏழாவது மாசமே வளைகாப்பு போட்டு அம்மா வீட்டுக்கு போய்டேன். ஆனா அங்க போயும் நீங்க போன் பண்ணி விசாரிக்கல நான் தான் பண்ணேன் நீங்க தான் மாசமா இருக்கீங்க பாருங்க. கிப்ட் வாங்கி தரவும் தெரியாது வாங்கி குடுத்தாலும் மதிக்க தெரியாது. நானும் பொருத்து பொருத்து போய்டு இருக்கேன் என்னைக்கு பொங்கி எழ போறேன்னு தெரியல. வேற ஒருத்தன நினைச்சவல கூட தன் லவ்வால மாத்திடாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்களும் மாத்திருகீங்க என்னய வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிருந்தா நல்லா இருந்திருப்பேனோ என. பலமுறை எங்காவது சென்று விடலாமா என நினைத்திருக்கிறேன் அவ்வெண்ணத்தை வருண் தடுத்திருக்கிறான். என்னைப் போலவே அவனும் அப்பா இருந்தும் அவர் அன்பு கிடைக்காமல் போய்விட கூடாது என்பதற்காகதான். பிறரை போலவே குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்ற எண்ணம்தான் உங்களுக்கு கிடையாதே. நான் நிறைய பேசுவேன் நீங்க பேசவும் மாட்டீங்க நான் பேசுறத கேக்கவும் மாட்டீங்க. ஏன் கூட வெளிய போக கூட விரும்பிவில்லை என்றால் உங்களுக்கு எல்லாம் எதற்கு கல்யாணம். உடலை அடைந்தால் மட்டும் போதுமா? எனக்கும் ஒரு உள்ளம் உள்ளதே அதை அடைய நீங்கள் நினைத்ததே இல்லையா? ஒரு மாசத்துல சண்ட போட்டு நல்ல கணவரா நீங்க தோத்துடீங்க. என்ன புரிஞ்சிக்க முயற்சியே பண்ணாம ஒரு பிரெண்டா தோத்துடீங்க. என்ன பாதுகாக்க வேண்டிய நீங்களே அசிங்கப்படுத்தி ஒரு மனுசனாவே நீங்க தோத்துடீங்க. இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு எனக்கு எப்போது கிடைக்கும் ராஜேஷ் என எழுதியிருந்தாள் அவள். டைரியை மூடினான். வருண் என அழைத்தான், வெளியே செல்லலாமா என்று கேட்டான். இருவரும் துணி கடைக்கு சென்றனர், புடவை வாங்குகிறார் முதன்முதலில் அவர் மனைவிக்காக, ஆச்சரியமாக பார்க்கிறான் வருண்.