உறவு சொல்ல ஒரு கடிதம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 16,687 
 
 

‘என் இனிய தோழருக்கு,

நான் உங்களை பலமுறை பார்த்தும், பேசியும் இருக்கிறேன்… ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்தது என் வாழ்க்கையில் மிகப்பெரியதொரு திருப்பம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நான் பல குழப்பங்களும், பிரச்சனைகளும் சந்தித்திருந்த தருணம் அது. மேலும் ஒரு வாரமாக உங்களிடம் நான் பேசாததால் நீங்கள் என்னிடம் கோபமாக இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஆனால், அதற்கு பதிலாக உங்களிடம் இருந்து நான் எதிர்ப்பார்க்காத பதில் வந்தது. நீ வருவாய் என்று எனக்கு முன்னாடியே தெரியும் அப்படி இல்லை என்றால் ஒரு எஸ்.எம்.எஸ். ஸாவது வரும் என்று சொன்னீர்கள். அந்த நிமிடம் என்னிடம் சொல்வதற்கு வார்த்தையே இல்லை அப்படியே உங்களை கட்டிப் பிடித்துக் கொள்ளவேண்டும் என்று தோணியது… ஏனென்றால் நாம் பழகி எப்படியும் ஒரு ஆறு வருட காலம் இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்னை, (என்னை விட) நன்றாக புரிந்துள்ளீர்கள்… நானும் அப்படித்தான் உங்களை புரிந்து கொண்டு உள்ளேன் என்று நினைக்கிறேன்? நான் உங்களிடம் பொய் வார்த்தைகளைச் சொல்லத் தேவையில்லை. என் ஆழ் மனதில், இந்த தருணத்தில் உள்ள உங்களைப் பற்றிய நினைவுகளைச் சொல்கிறேன். நீங்கள் என்னுடைய கையைப் பிடித்தவுடன், ஏதோ கிடைக்காத ஒன்று, கிடைத்த மாதிரியான மகிழ்ச்சி… (அதற்கு வார்த்தைகளே இல்லை….), என்னுடைய நீண்ட நாள் ஆசை நான் எப்பொழுது எல்லாம் பிரச்னைகளின் விளிம்பில் உள்ளேனோ அப்பொழுது எல்லாம் தோணுவது.. உங்களின் நெஞ்சில் சாய்ந்து.. உங்களை அணைத்துக் கொள்ள வேண்டும் என்று… நீங்கள் என்னை சாய்த்து கொண்டது.. அந்தத் தருணத்தில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. இந்த ஜென்மம் இப்படியே இருக்கக் கூடாதா என்று? அந்த வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தையில்லை… மேலும் நாம் விடைபெறும் தருணத்தில் உங்கள் கண்ணில் நான் கண்ட அந்தப் பிரிவின் வலி இன்னும் நான் சுமந்து கொண்டு இருக்கிறேன்… ஏனென்றால் இந்தப் பயணம் இப்படியே இருக்க கூடாதா? என்று நீங்கள் அடிக்கடி சொன்னீர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ இறங்க வேண்டும் என்று என்னை அடிக்கடி அச்சுறுத்தி கொண்டே இருந்தீர்கள்.. நான் என்ன தவம் செஞ்சுப்புட்டேன் உங்களை நண்பனாக என் உயிரின் மேலாக கிடைக்க? நான் உங்களை மிஸ் பண்ணுறேன் என்பதை இப்ப அடிக்கடி உணர்கிறேன்… இதில் ஏதாவது விட்டு இருப்பேன் என்று நினைக்கிறேன்.. அதற்கு என் உள்ளத்தில் இப்பொழுது வார்த்தைகளே இல்லை.. அதற்கான வரிகளைத் தேடிக்கொண்டு இருக்கேன்.’

தோழமையுடன்,

சரஸ்.

அப்பு என்கிற சரவணனின் வாழ்க்கையில் அக்கடிதம் ஒரு அழகிய காதல் அத்தியாயம் என்று சொல்லிக் கொள்ளலாம். அது இப்போது ஒரு துருப்புச் சீட்டாக அவனுக்குத் தோன்றியது. சரஸ் என்ற துரோகியின் வாழ்க்கையைச் சீர்குலைக்க இது போதும்!

அவன் மேனேஜராக வேலை பார்த்த கம்பெனிக்கு ஒருநாள் பார்க்க ‘துறு துறு’வென்றிருந்த ஒரு இளம்பெண் வந்தாள். ‘‘ஸார், என் பெயர் சரசு. சொந்த ஊர் கடலூர். வேலை தேடி சென்னைக்கு வந்தேன். வயதான அப்பா அம்மா, தங்கைன்னு மூன்று பேர்களைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கு. சம்பாதித்துப் போடுவதற்கு வேறு யாரும் வீட்டில் இல்லை. மேம்பாலத்து அருகில் இருக்கும் நட்சத்திர ஓட்டலின் ஆபீஸில் வேலை செய்து வந்தேன். அங்கே எனக்கு மானத்தோடு வேலை பார்க்க முடியாதபடி தொல்லைகள்… புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்… எனக்கு இங்கே ஒரு வேலை, எவ்வளவு சின்ன வேலையா இருந்தாலும் கொடுத்து, மானத்தோடு நான் வாழ்ந்து என் ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்ற உதவுவீங்களா?’’ பேசிக் கொண்டிருக்கும்போதே, அவள் விழிகளில் நீர் துளிர்த்தது.

ஒல்லியாக இருந்தாள்…சிவநத நிறம், ஊடுருவும் விழிகள், பளீர் அழகு…அவள் பேச்சில் ஒரு உண்மை சுடர் விட்டது. மனதின் வேதனை, வார்த்தைகளில் அப்பட்டமாகத் தெரிந்தது.

அப்பு தன் சுருக்கெழுத்தரை அழைத்தான். ‘‘மேகலா, இந்தப் பெண் டிகிரி படிச்சிருக்காம். கம்ப்யூட்டர் பழக்கம் இருக்காம். ஏதாவது பேப்பரைக் கொடுத்து, கீ இன் பண்ணச் சொல்லுங்க. பார்க்கலாம்!’’ என்றான்.

எதிர்பார்த்ததை விட, அவள் கணிணியில் திறமை வாய்ந்தவளாக இருந்தது தெரியவந்தது. ஆரம்பத்தில் கொடுக்கக் கூடிய கணிசமான சம்பளத்தில், தற்காலிகமாக சரசு நியமனம் செய்யப்பட்டாள். ஆர்டர் கைக்கு வந்ததும், அப்புவிடம் வந்தாள் சரசு. சட்டென்று எதிர்பாராதவிதமாக அவன் கால்களில் விழுந்தாள். ‘‘எந்தச் சிபாரிசும் இல்லாம, முன் பின் தெரியாத எனக்கு நல்ல வாழ்க்கை கொடுத்துட்டீங்க. இதை நானும் என் குடும்பமும் என்னிக்கும் மறக்க மாட்டோம் ஸார்!’’ என்று கண்ணீர் வழியச் சொன்னாள்.

இது ஆரம்பம். அப்புவின் உதவியாளராகவும் ஸ்டெனோ வாகவும் வேலை பார்த்த மேகலா திடீரென்று திருமணம் ஆகி, வேலையை விட்டுவிட நேர்ந்ததும், அந்த இடத்தில் தற்காலிகமாக சரசு அவனுக்கு உதவியாளராக ஆனாள். சரசுவின் சுறுசுறுப்பும், ஞாபக சக்தியும் திறமையும் அப்புவின் அலுவலக்ப் பணியில் மிகவும் உதவியாக அமைந்தன.

நிறைய அவர்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவன் தாய் தந்தை இல்லாதவன், ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்தபடி படித்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தவன். அன்புக்கு ஏங்கினவன். ஓட்டல் சாப்பாடுதான் அவனுடைய உணவு. ஒருநாள் தன் வீட்டிலிருந்து சரசு கேரியரில் சாப்பாடு எடுத்து வந்து மதியம் அவனுக்குப் பரிமாறினாள். அந்த ருசி அவனுக்கு அதுவரை கிட்டாதது. கேரியர் சாப்பாடு அவ்வப்போது தொடர்ந்தது.

சரசு மெல்ல அவன் இதயத்தில் இடம் பிடித்தாள்.

அலுவலகத்தில் ஸ்டோர்ஸ் பிரிவு மல்லிகாவுக்குத் திருமணம் நடந்தது. அந்த வரவேற்புக்கு திருவேற்காடு போக வேண்டியிருந்தது. ‘‘சரசு, நீ போகலையா?’’ என்று அப்பு கேட்டான். ‘‘போகணும்தான். இரவு ஏழு மணிக்கு ரிசப்ஷன். அவ்வளவு தூரம் போய்விட்டு, திருவான்மியூரில் இருக்கும் என் வீட்டுக்குத் தனியாக பஸ் பிடித்துத் திரும்ப ரொம்ப நேரமாகிவிடும்… துணைக்கு யாருமில்லை. அதுதான் யோசனையாக இருக்கு ஸார்!’’ என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள் சரசு.

மனசுக்குள் மல்லிகை முகிழ்த்தது. ‘‘டோண்ட் ஒர்ரி சரசு. ஆபீஸ் முடிஞ்சதும் காரில் நான் போகும்போது நீயும் வா. நாம் ரிசப்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு, திரும்பும்போது உன்னை உன் வீட்டில் கொண்டு விட்டுவிட்டுப் போறேன்… எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லை!’’ என்றான் அப்பு.

அவள் விழிகள் மகிழ்ச்சியால் விரிந்தது. ‘‘உங்களுக்கு எதுக்கு ஸார் வீண் சிரமம்?’’

‘‘நோ, நோ!.. எந்தச் சிரமமும் இல்லை. நாம் போகிறோம்!..ஓக்கே?’’

சரசு சம்மதித்தாள்.

அந்தத் திருமண வரவேற்பு முடிந்து காரில் திரும்பும்போது, ‘‘அவள் வலது கையைத் தன் இடது கையோடு பிணைத்து, ‘‘ஐயாம் ஸோ ஹேப்பி சரஸ்!’’ என்றான். ‘‘நானும்!’’ என்று மெல்லச் சொன்னாள் சரசு.

அன்றைக்குத் திருவான்மியூரை அடுத்த கண்ணப்ப நகரில் ஒரு வீட்டுப் போர்ஷனில் குடியிருந்த அவள் வீட்டுக்கு அவளைக் கொண்டு விட்ட போது, வாசலில் நின்று சரசுவின் அம்மாவும் அப்பாவும் வீட்டுக்குள் வரும்படி வருந்தி அழைத்தார்கள். போனான். சூடான பால் கொடுத்து உபசரித்தார்கள்.

சின்ன போர்ஷன் தான். ஒரு முன் அறை, படுக்கையறை, சமையல்கட்டு… சுத்தமாக இருந்தது. ஆனால் ஒரு டி.வி.பெட்டி, மின் விசிறி என்று எதுவும் இல்லை.

‘‘டி.வி. சீரியல் எதுவும் பார்ப்பதில்லையா?’’ அப்பு கேட்டான்.

‘‘ஓ, பார்ப்போமே, பக்கத்து போர்ஷனுக்குப் போய்ப் பார்த்து விடுவோம்!’’ என்றாள் சரசுவின் தங்கை உமா. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸில் சில நாட்கள் முன்புதான் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறாள்.

அடுத்த வாரமே, சரசுவின் வீட்டுக்கு ஒரு டி.வி. வந்து இறங்கியது. மின் விசிறியும் வந்தது. ஆட்கள் வந்து அதையெல்லாம் பொருத்தி விட்டுப் போனார்கள்.

‘‘ஓ.கே.தானே?’’ என்று மறுநாள் ஆபீசில் சரசுவை அழைத்துக் கண்சிமிட்டினான் அப்பு. ‘‘ஸார், இதெல்லாம் அதிகம். உங்க கடனை நான் எப்படி அடைக்கப் போறேன்?’’ என்று தழுதழுப்புடன் சொன்னாள் சரசு.

நெருக்கம் அதிகமாயிற்று. அடிக்கடி அப்பு சரசுவை அலுவலகம் முடிந்து அவள் வீட்டுக்குக் காரில் கொண்டு விடும் சாக்கில் போனான். சரசுவின் தாய், சூடாக தோசை வார்த்து,.

வளர்த்துவானேன்? அதன்பிறகு தீபாவளியென்றால் பிரபல துணிக்கடையில் சரசுவின் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் டிரஸ்கள், அடிக்கடி நகைக்கடை விஜயம்… சரசுவுக்கு தங்க வளையல்கள், நெக்லஸ், பிரேஸ்லெட், காதுக்கு கம்மல்கள் என மாதம் ஒன்று வீதம் அப்பு சரசுவை அழைத்துப் போய் வாங்கிப் போட்டு அழகு பார்த்தான்…

ஒருநாள் தனக்கு வைத்தீஸ்வரன் கோயிலில் ஒரு நேர்த்திக் கடன் இருப்பதாக சரசு சொன்னாள். இருவரும் காரில் வைத்தீஸ்வரன் கோயில் போனார்கள். தரிசனம் முடிந்து திரும்பி வரும்போது காரை ஒரு இடத்தில் நிறுத்தினான் அப்பு. ‘‘எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு சரசு. எப்பவும் நீ இப்படியே எனக்குத் துணையா இருப்பியா?’’ என்று கேட்டான். அவளைத் தன் தோளோடு சாய்த்துக் கொண்டான். ‘‘இந்த அன்பு எப்பவுமே மாறாது ஸார்!’’ என்றாள் சரசு.

இதைத் தொடர்ந்து அவள் எழுதிய கடிதம்தான் ஆரம்பத்தில் நீங்கள் வாசித்த கடிதம்! அதை ஒரு பொக்கிஷமாகவே மதித்தான் அப்பு.

வாழ்க்கை என்றால் மனிதர்கள் நினைக்கிறபடி இருக்குமா? அடுத்த சில தினங்களில் அப்புவுக்கு மதுரைக் கிளைக்கு ஜெனரல் மேனேஜராகப் பதவி உயர்வும் மாறுதலும் வந்தது.

சரசு அழுதாள். ‘‘சீக்கிரமே இந்த ஊருக்கு மாறுதல் பெற்றுத் திரும்பி விடுவேன். நாம் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்…’’ என்று அவளுக்கு ஆறுதல் கூறினான் அப்பு.

மதுரைக் கிளைக்குப் போனதும் கடுமையான வேலை காத்திருந்தது அப்புவுக்கு.

ஒருநாள் நண்பரின் மோட்டார் சைகிளில் போக நேர்ந்தது. எதிர்பாராத விதமாக எதிரில் கண்மூடித் தனமாக வந்த பேருந்து மோதி, பலத்த அடி இருவருக்கும். அப்புவுக்கு இடது கால் உடைந்தது. ஆபரேஷன் செய்து காலையே அகற்றும்படி ஆயிற்று…

மருத்துவ மனையில் அநாதை போலக் கிடந்தான் அப்பு. அலுவலக நண்பர்கள்தான் வந்து பார்த்தார்கள். சரசு..? சரசு எங்கே?

ஏன் அவள் வரவில்லை?…

போன் செய்தான். ரிங் போனது. அவள் எடுக்கவில்லை. பலமுறை… பல நாட்கள்… சரசுவுக்கு உடல் நலம் ஏதும் சரியில்லையா? மெயில் அனுப்பினான். தொடர்ந்து மெசேஜ் அனுப்பினான்.

‘‘உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்…’’ மெசேஜில் சுருக்கமான பதில்.

அதற்கப்புறம் அவன் பல தடவை போன் செய்தான். அவள் எடுக்கவேயில்லை.

சென்னை அலுவலக நண்பர் ஒருவர் போனில் தெரிவித்த தகவல் அப்புவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சரசு, அதே அலுவலகத்தில் வேலை பார்க்கும் மாதவனுடன் சேர்ந்து நெருக்கமாக அடிக்கடி வெளியிடங்களில் தென்படுவதாக. அடிப்பாவி!

‘‘உனக்கு நான் எவ்வளவோ செய்தேன். நீ எனக்குத் திருப்பிச் செய்யும் உபகாரம் இதுதானா?’’ என்று மெசேஜ் அனுப்பினான்.

பதில் வந்தது. ‘‘செய்ததைச் சொல்லிக் காட்டுகிறீர்கள். .இது தான் நீங்கள். மேலும், எனக்கு நீங்கள் வாங்கிக் கொடுத்தது என்னை ஒரு விலைமகள் என்று நினைத்துக் கொண்டுதான் என்று எனக்கு நன்றாகப் புரிகிறது. நீங்கள் கொடுத்தவைகளுக்கான விலை எவ்வளவு என்று சொல்லுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்!’’

என்ன இது? ‘‘நீ எதையும் திருப்பிக் கொடுக்க வேண்டாம். இன்னும் ஏதாவது உனக்கு வேண்டுமென்றால் சொல். வாங்கித் தருகிறேன்.. என் அன்பு உண்மையானது. என்னோடு பழகியபோது நீயும் உன்மையாக்வே இருந்தாய் சரஸ். ஆனால், நீ ஏன் இப்படி மாறி விட்டாய்?’’ என்று மெசேஜ் கொடுத்தான்.

பதில் இல்லை.

ரொம்பத் தாமதமாகத் தெரிந்தது. கணக்குப் பிரிவு மாதவனுடன் சரசுவுக்குத் திருமணம் ஆன விஷயம்!

அப்பு ஆபரேஷனில் வெட்டி எடுக்கப்பட்ட தன் காலை நினைத்தான். ‘ஒரு கால் இல்லாத ஒருவனை எந்தப் பெண்தான் திருமணம் செய்து கொள்ள முன்வருவாள்? சரசுவின் முடிவு நியாயமானதே..’ என நினைத்துக் கொண்டான்.

அவள் எடுத்த முடிவு பிராக்டிகலானது. நம்மைப் பொறுத்தவரை, அவளை மனதிலிருந்து அடியோடு அகற்றி, ஒரு கனவாக நினைத்து அவளை மறந்து விட வேண்டும் என்று எண்ணினான்.

தங்கள் உறவுக்கு சாட்சியாக இருந்த அந்தக் காதல் கடிதம் முன்னே இருந்தது. அதை சரசுவின் இப்போதைய கணவனுக்கு அனுப்பலாமா என்று ஒரு கிரிமினல் புத்தி முளைத்தது. சேச்சே!.. அப்புறம் அவளுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?..

‘என்னோடு பழகியவரை அவள் எனக்கு உண்மையாகவே இருந்தாள். நான் மாறுதலில் சென்றபின், விபத்துக்கு ஆளாகி வேலையை விட நேர்ந்தபிறகுதான் மனம் மாறிவிட்டாள். ‘சரசு, நீ எங்கிருந்தாலும் வாழ்க!’ என்று சொல்லிக் கொண்டான்.

சரசுவுக்கும் தனக்கும் நெருங்கிய உறவு இருந்ததை சாட்சியாகச் சொல்லத் தன்னிடம் இருந்த அந்த ஒரு கடிதத்தைச் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்தான் அப்பு..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *