(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
நான் தான் வேங்கடரமண ஐயர். ஆமாம், இதற்கு முன்பே என்னை உங்களுக்குத் தெரியும். நன்றாகவே தெரியும். ‘மலய மாருத’ப் பத்திரிகையில், என்னுடைய பெயரை அடிக்கடி பார்த்திருப்பீர்கள். தவிர, சமீபத்தில் வெளியான என்னுடைய ‘அதிகப் பிரசங்கி’ என்கிற உண்மையான சரித்திரத்தைப் படித்து அதிசயித்திருப்பீர்கள். ஆகையால் என்னைக் குறித்து மேலும் சொல்லிக்கொள்ள அவசியமில்லை.
நேற்றைக்கு, ‘மலய மாருத’த்தின் இருபதாம் ஆண்டுவிழா. அதன் காரியாலயத்தைச் சேர்ந்த பெரிய தோட்டத்தில், ஒரு ‘டீ – பார்ட்டி’ நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், பெரியோர், சிறியோர், எல்லோருமே வந்திருந்தார் கள். உல்லாசப்பேச்சும் ஹாஸ்யங்களும், இருட்டில் காணும் மின்மினிப்பூச்சிகளைப்போல், மேஜைக்கு மேஜை பறந்துகொண்டிருந்தன. அப்பொழுது பத்திராசிரியர் மார்க்கண்டேயர் எழுந்து இவ்விதம் பேசினார் :
மார்க்கண்டேயர் : ‘மலயமாருத’ப் பத்திரிகையை அறியாதவர் தமிழ்நாட்டில் இல்லை. எழுத்துக் கூட்டியாவது படிக்கக் கூடியவர்கள் எல்லோரும் அதைப் படிக்கிறார்கள்; அதுகூடத் தெரியாதவர்கள் அதிலுள்ள சித்திரங்களைக் கண்டு களிக்கிறார்கள் என்று ஏற்கனவே ஒருவர் எழுதியிருக்கிறார். நீங்கள் இன்று இவ்விடம் கூடி, தயை புரிந்ததே, பத்திரிகையின் மகிமைக்கு ஓர் உயர்ந்த மேற் சாக்ஷி. ஆகையால் அதைக் குறித்து இந்த விழாவில் ஒருவரும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை.
“தவிர, எப்பொழுதும் நூதன வழிகளையே உண்டாக்கிச் சென்று, மனோராஜ்யத்தின் புது நாடுகளைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதே ‘மலய மாருத’த்தின் மாறாக் கொள்கை. ஆகையால், இதரரைப் போல், அலுப்புண்டாக்கும் வண்ணம் வெறும் ஸ்தோத்திர பாடத்தைப் படிப்பதற்குப் பதிலாக, இச்சுபதினத்தில் நாம் ஒரு நூதன விதத்தில் சிறந்த சந்தோஷத்தை அனுபவிப்போம். அதன் பொருட்டு இந்தச் சிறிய ஏற்பாட்டை செய்திருக்கிறேன்.
இதோ, மூன்று பைகள் இருக்கின்றன. இரண்டில், இங்குள்ள அதிதிகளின் பெயர்களைத் தனித்தனியாகத் துண்டுக்கடிதங்களில் எழுதிவைத் திருக்கிறது. முப்பத்தாறு புருஷர்களுடைய பெயர்களை ஒரு பையிலும், மற்றொரு பையில் இருபத்து நாலு ஸ்திரீகளுடைய பெயர்களையும், மூன்றாவது பையில், பொறுக்கின விஷயங்களாகப் பன்னிரண்டு விஷயங்களின் பெயர்களையும் குறிப்பிட்ட கடிதங்கள் இருக்கின்றன. முதலில் இந்தப் பை யையே நன்றாகக் குலுக்கிவிட்டு அதிலிருந்து ஒரு கடிதத்தை என்னுடைய சிறு பெண் பொறுக்கி எடுத்து வாசிப்பாள். (அந்தச்சிறுமி அங்ஙனமே செய்து’, ‘காதலும் கதைகளும்’ என்று படித்தாள்.)
“சரி. இப்பொழுது இந்தப் பெரிய பையிலிருந்து ஒரு பெயரை எடுப்பாள். (அவள் அவ்விதம் ஒரு கடிதத்தை எடுத்து, விதிவசாத், என்னுடைய பெயரைப் படித்தாள்.)
“வெகு சந்தோஷம். இப்பொழுது, வேங்கடரமண ஐயரை, அன்பு கூர்ந்து, ‘காதலும் கதைகளும்’ என்கிற விஷயத்தைக் குறித்துப் பிரசங்கம் செய்யக் கேட்டுக்கொள்ளுகிறேன். கணக்காக ஐந்து நிமிஷம் பேசினால் போதும். இவ்விதம், எதிர்பாராமல், திடீரென்று ஒரு விஷயத்தைக் குறித்து உபந்நியாசம் செய்யும்பொழுது, நம்முடைய நண்பரின் அபூர்வ சக்திகள் நன்கு சோபிப்பதை நாம் காணப் போகிறோம். கரகோஷம்) எழுத்தாளர்களுக்கு இதைக் காட்டிலும் உயர்ந்த ஆனந்தம் என்ன கிடைக்கக்கூடும்? (மீண்டும் கரகோஷம்) (என்னை நோக்கி) தயவு செய்து உடனே ஆரம்பிக்க வேண்டும். சரியாக ஐந்து நிமிஷமே உண்டு.
இவ்விதம் பேசிவிட்டு, அவர் உட்கார்ந்து கொண்டார். அவருக்கு என்ன? மேற்சொன்ன சிறு பேச்சைக்கூட அவர் வீட்டிலே தயார் செய்து பத்துத் தடவை உருப் போட்டுக்கொண்டுதான் வந்திருப்பார். அப்படிப்பட்டவர் தாம் ஸ்வஸ்தமாய் உட்கார்ந்துகொண்டு, ஒரு பெரிய விஷயத்தைக் குறித்த பிரசங்கத்தில், என்னை முன்னறிவிக்கை யில்லாமல், மாட்டிவிட்டார்.
ஆனால் இதற்கு அஞ்சுகிறவனா நான்? உலகத் லுள்ள எந்தச் சங்கதியைப் பற்றியும் ஓர் ஆழ்ந்த அபிப்பிராயம் இல்லாதவனா? அல்லது மனசில் உள்ளதை உடனே வெளிப்படுத்தத் தெரியாதா, பயமா? ஆண்அல்லது, பெண் என்று சொல்ல வேண்டியிருந்தால் ஆண் அல்லது பெண் என்று சொல்லுவது என்னுடைய வழக்கமேயொழிய, சில ரைப்போல், ஆடுஉ, மகடூஉ என்று சொல்லி விட்டு, நீங்கள் அகராதியில் அர்த்தத்தைத் தேடிப் பிடிப்பதற்குள், தப்பித்து ஓட எண்ணுகிற வனல்ல. ஆகையால் இரண்டே விநாடியில்
தொண்டையைச் சீர்படுத்திக்கொண்டு, (பின்வரப் போவதைச் சிறிதேனும் அறியாமல்) பிரசங்கத் தைத் தொடங்கினேன்.
நான் : நண்பர்களே, வெகு காலத்திற்குமுன் ஜீவித்திருந்த ஒரு சிறந்தஞானி சொல்லியிருக்கிறார்: கப்பலில் பிரயாணம் தொடங்குமுன், தெய்வத் திற்கு வேண்டிக்கொள். யுத்தத்திற்குப் போகு முன், இரண்டு தெய்வங்களுக்கு வேண்டிக்கொள், விவாகம் செய்துகொள்வதற்கு முன், மூன்று என்று. தெய்வங்களுக்கு என்று வேண்டிக்கொள் ஆனால் எந்த மூன்று தெய்வங்களுக்கு அவர் விவரித்துச் சொல்லவில்லை.-
கொனஷ்டை: வீரன், இருளன், காட்டேறி.
நான் : (அவரைச் சட்டை செய்யாமல்) ” இந்த ஸ்திதியில், தகுந்த தெய்வங்களுக்குப் பிரார்த்தனையு மில்லாமல், தகுந்த தெய்வங்களின் உதவியுமில்லா மற் போவதால்தான், நாம் அனுபவத்தில் அறிய வரும் கல்யாணங்கள் ஒன்றிலாவது கா தலைக் காண முடியவில்லை.
“ஆனால், இதற்குப் பரிகாரமாகவே-என்று எனக்குத் தோன்றுகிறது- ஆசிரியர்கள் எல்லோ ரும் ஒற்றுப் பேசிக்கொண்டாற்போல் ஒவ்வொரு கதையிலும் காதல் சம்பவத்தை நடத்திவைக்கிறார் கள். கதைகளை விட்டால் காதலைக் காண முடியாது என்பது நிற்க, காதல் இல்லாத கதைகளைப் புஸ்த கங்களில் காண முடியவில்லை.
“இதில் என்ன நியாயம் இருக்கிறது? வாழ்க் கையில் காதல் ஒன்றே பிரதானமா? வடை, பாய சம் சேராமல் விருந்து போஜனமே கிடையாதா? நாட்டில் மாம்பழம் இல்லையா, பாதம் ஹல்வா இல்லையா என்று நான் உங்களை வணக்கமாய்க் கேட்கிறேன். எல்லாக் கதைகளும் ஒரு கல்யா ணத்தில் முடிவதற்குப் பதிலாக, எந்தக் கதை யிலாவது, ஆரம்பத்திலே ஒரு விவாகம் நடக்கப் போவதாக நாம் பயமுறுத்தப்பட்டு, முடிவில் காதலர்கள் சாமர்த்தியமாகக் கல்யாணத்திலிருந்தும் காதலிலிருந்தும் தப்பித்துக்கொண்டு போய், தனித்தனியே சௌக்கியமாய் வாழ்ந்தார்கள் என்று நாம் படிக்கமாட்டோமா என்று ஏங்குகிறேன்.
“தவிர, கதைகளில், காதல் ஜனிக்கும் வேகமும் வளரும் வேகமுந்தான் என்ன? இருவர், சென்ட்ரல் ஸ்டேஷனில், வண்டியில் ஏறின பின்பே, முதல் தரம் சந்திப்பதாக வாசிக்கிறோம். ரேணுகுண்டா ஸ்டேஷனில் அவர்கள் கை கோத்த வண்ணம் இறங்கி, அங்குள்ள விற்பனைசாலையில், பழம் பாக்கு வெற்றிலைக்கு வேண்டிய சாமான்களை வாங்குகிறார்கள். சில சமயம், அப்படியே திருச்சா னூருக்கோ திருப்பதிக்கோ போய்விடுகிறார்கள்.
“ஆனால், அவ்வளவு தூரந்தான் போவானேன்? இருக்கும் ஊரிலே இரண்டு தடவை சந்திப் பதே போதும். அதே பெண்ணின் தகப்பன், வீட்டில் பை பையாகப் பணத்தைச் சேர்த்து வைத்து, ஊர் ஊராக வரனைத் தேடித் திரிந்துத் திண்டாடிக் கையைப் பிசைந்துகொண்டிருக்கையில், சிறுமி என்ன செய்கிறாள்? பண்டைக்காலத்துச் சம்பிரதா யப் பிரகாரம் பிள்ளை பரதேசம் போவதற்குப் பதி லாக அந்தக் கட்டழகி பீச்சுக்கோ ஸினிமாவுக்கோ போகிறாள். அங்கே மூன்று முறுவலிப்புகளையும் பத்துப் புன்னகைகளையும் தெளித்துவிட்டு, சரி யான ரமணனை மயக்கி, கழுத்தில் கயிற்றைக் கட்டி வீட்டிற்குக் கொண்டுவந்துவிடுகிறாள்.
“நாம் இங்கே அறுபது பேர்கள் இருக்கிறோமே, எவருடைய அநுபவத்திலாவது இம்மாதிரி நேர்ந்த துண்டா? அது போகட்டும்; ‘கண்டதும் காதல்’ என்று வெகு சுலபமாகச் சொல்லிவிடுகிறார்களே, அந்த ஒப்பற்ற காணிக்கைக்குத் தகுதியான ஒரு ஸ்திரீயைக் கண்டதாவது உண்டா? அந்தக் காதல் வெள்ளம், கதைகளுக்கு வெளியிலே ஒரு வயலுக்கும் பாயாதோ?
“மற்றொரு ஞானி, ஒருபெரிய விதுஷி, சொல்லியிருக்கிறாள் – அதை எவரும் ஒப்புக் கொள்ளுவர் – ஸ்திரீகள் எல்லோரும் பதினே ழாம் வயதில்தான் பிறக்க வேண்டும், முப்பதாம் வயதில் இறக்க வேண்டும் என்று.”
கொனஷ்டை: இறக்காத போனாலோ?
நான்: “தாமே இறக்காத போனால், தூங்கும் பொழுது, மற்றவர்கள் க்ளோரபார்ம் கொடுத்து விட வேண்டும். அவ்வளவுதானே? நம்முடைய ஆசிரியர்கள் அந்த விதுஷியைக் காட்டிலும் கண்டிப்பாய் இருக்கிறார்கள். வெவ்வேறு கதா நாயகிகளின் சாமர்த்தியமும் இதர குணங்களும் பலவிதமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோ ருக்குமே, வயது பதினேழுக்கு மேல் இருபதுக் குள்ளேதான் இருந்து தீரவேண்டும் போலும்! நாயகர்களின் வயது சஞ்சாரம் இருபதிலிருந்து இருபத்தைந்து வரைதான்.
“இதில் என்ன நியாயம், என்ன உண்மை இருக்கிறது? எனக்குப் பாருங்கள், முப்பது வயது ஆய்விட்டது—”
கொனஷ்டை: அப்படி ஆனது எத்தனை வருஷங்களுக்கு முன்போ?
நான் : ஐயா, நான் வள்ளிசாகச் சொன்னேன். ஒரு வீட்டின் விலையை விசாரித்தால், ரூபாய், அணா, பைசா, எல்லாமா சொல்லுகிறார்கள்? ஸ்தூலமாக, இத்தனை ஆயிரம் ரூபாய் என்று சொல்லுகிற மாதிரியில்தான் ஜனங்கள் வயதைச் சொல்லுகிறதைப் பார்த்திருக்கிறேன். ஜாதக ரீதியாகப் பேசவேண்டுமென்றால், எனக்கு இன்னும் நாலைந்து வருஷங்களைக் கூட்டிக்கொள்ளுங்களேன், ஆக்ஷேபமில்லை. எப்படியோ, எனக்கு முப்பது வயது ஆய்விட்டது என்பது வாஸ்தவந்தானே? நான் வாதிக்கப்போனது என்னவென்றால், ஆசிரியர்களின் சம்பிரதாயப்படி, என்னைப் போல் முப்பத்தைந்து முப்பத்தாறு வயது நிரம்பினவர்களுக்கு, ஒரு காதல் விவாகம் சித்திக்க இடமே கிடையாது! எலியைப் பிடிப்பதற்கு எலிப்பொறி. மனிதனைப் பிடிப்பதற்குக் கல்யாணம். இந்த மானிடப் பொறியில் அகப்பட்டுக்கொள்ள இஷ்டமும் எனக்கு இல்லை, அகப்பட்டுக்கொள்ளப் போவதுமில்லை. ஆனால் அது வேறு விஷயம். நானே இஷ்டப்பட்டு, ஒரு ஸ்திரீயும் இஷ்டப்பட்டாலும், ஆசிரியர்கள் சம்மதியார்கள்போல இருக்கிறதே!
இதற்குள், மார்க்கண்டேயர், “ஐந்து நிமிஷம் கெடு தீர்ந்துவிட்டது” என்றார். நான் விட்டுக் கொடுத்துவிடவில்லை. “தொடரும்” என்று ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டே உட்கார்ந்தேன் (நீடித்த சிரிப்பும் கரகோஷமும்.)
அதன் மேல், மார்க்கண்டேயரின் சொற்படி, பாக்கி இருந்த பையிலிருந்து அவருடைய பெண் ஒரு கடிதத்தை எடுத்து, ‘ஸ்ரீமதி அமிர்தவல்லி அம்மாள்’ என்கிற பெயரை வாசித்தாள்.
மார்க்கண்டேயர், “ஸ்ரீ வேங்கடரமண ஐயர் துவரை பேசின தற்குத் தக்க பதிலை, தயவு செய்து அளிக்கும்படி, ஸ்ரீமதி அமிர்தவல்லி அம்மாளைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.
அப்பொழுது வேறொரு மேஜையில் உட்கார்ந் திருந்த ஒரு மாது (நேற்றைக்கு முன் நான் அவளைக் கண்டதில்லை, கண்டிருந்தால் இவ்வளவு அழகாக இருப்பவளை மறந்திருக்க மாட்டேன்) எழுந்து, மதுரமான குரலில் பேசினாள்.
அமிர்தவல்லி அம்மாள் : ஸ்ரீ வேங்கடரமண ஐயருடன் வாதாடுவதற்குத் தக்க சக்தியும் எனக்கு இல்லை, தைரியமும் இல்லை. தவிர, அவருடைய அபிப்பிராயங்களை அநேகமாக நான் ஆமோதிக்கிறேன். விவாக விஷயத்தில் அவர் தெரிவித்த வெறுப்பை, ஸ்திரீகள் சார்பிலே, நான் முற்றும் புகழ்கிறேன்.
கொனஷ்டை : அப்படி யென்றால் என்ன அர்த்தம்? இரண்டு அர்த்தமாகிறதே!
அமிர்தவல்லி அம்மாள்: “ஆனால் எங்களிருவருடைய காரணங்களில் சுவல்ப பேதம் இருக்கலாம்.
“எல்லா ரஸங்களையும் அறிந்த பர்த்ருஹரி என்ன சொல்லுகிறார்? ‘நான் ஸ்திரீயாகப் பிறக் காமல் புருஷனாகப் பிறந்ததைக் குறித்து, தினம் சந்தோஷப்படுகிறேன். ஒரு ஸ்திரீயாக இருந்தால், போயும் போயும், ஒரு புருஷனை அல்லவா, நான் விவாகம் செய்யவேண்டியிருக்கும்!” என்று. இந்தச் சங்கடத்தை உத்தேசித்துத்தான், எங்களில் சிலருக்கு விவாகத்தில் இஷ்டமில்லை.”
நான் : இது அக்கிரமம். பர்த்ருஹரி அவ்விதம் சொல்லவில்லை. இந்த அம்மாள் தாமாகக் கட்டி உண்டாக்குகிறார்கள்.
கொனஷ்டை: இந்த மாதிரியில் யாராவது கல்பனைகள் செய்து பேசுவதானால், இன்று முழுவதும் உட்கார்ந்து கேட்க மற்ற எல்லோருக்கும் சம்மதம்.
அமிர்தவல்லி அம்மாள்: “ஸ்ரீவேங்கடரமண ஐயர் முதலில் எடுத்துச் சொன்ன ஞானியின் வசனத்தை நான் படித்திருக்கிறேன். ஆனால் நான் படித்த பாடத்தில் இன்னும் கொஞ்சம் விவரமாக எழுதியிருந்தது.
“புருஷர்களும் ஸ்திரீகளும் கப்பல் பிரயாணம் செய்யக் கூடும். ஆகையால், கப்பல் ஏறு முன் தெய்வத்தை வேண்டிக் கொள் என்று சொன்ன புத்திமதி இரு ஜாதியார்க்குமே. புருஷர்கள் மாத்திரமே யுத்தத்திற்குப் போவார்களாகையால், இரண்டாவது புத்திமதி அவர்களுக்கு மாத்திரம் உபதேசித்தது. அதே மாதிரி, ஸ்திரீகளுக்குப் பிரத்தியேகமாய், அவர் ஒரு போதனை அளிக்க வேண்டுமல்லவா? அவ்விதம் கொடுத்த உபதேசந் தான், ‘விவாகத்திற்கு முன்பு மூன்று தெய்வங் களுக்கு வேண்டிக்கொள்’ என்பது. ஆனால் இவ விஷயத்தில், ஸ்திரீகளுக்கு ஏற்படும் கொடிய அவசி யத்திற்குத் தகுந்த உதவியளிக்கும் சக்தியுள்ள தெய்வங்கள் எவர் என்று அந்த ஞானிக்கே அகப் படாததனால்தான் பெயர்களைக் குறிப்பிடவில்லை. (கரகோஷம்.) (மார்க்கண்டேயரை நோக்கி எனக்கு வீதம் விதித்த காலத்தில் இன்னும் பாக்கி இருக்கிறதா?”
மார்க்கண்டேயர் : தாராளமாக இருக்கிறது.
அமிர்தவல்லி அம்மாள் : அதிகம் வேண்டாம். ஒரே விஷயத்தில் பலத்த சந்தேகம் இருக்கிறது. அதைச் சொல்லிவிட்டு உட்கார்ந்துவிடுகிறேன். சந்தேகத்தை ஸ்ரீ வேங்கடரமண ஐயர் கிருபை கூர்ந்து நிவர்த்தித்தால் போதும்.
“அது என்னவென்றால், க்ளோரபார்ம் எங்கே கிடைக்கும்? அதை ஒருத்தி தனக்குத் தானே கொடுத்துக்கொள்ள முடியுமா? எதற்காகக் கேட்கிறேன் என்றால், அவர் இப்பொழுது சொல்லி விட்டார்; ஒவ்வொரு ஸ்திரீயும் முப்பதாம் வயதில் பரலோகத்திற்குப் புறப்பட வேண்டுமென்றும், அவளுக்கு வழி தெரியாதபோனால், வீட்டிலிருப்பவர் அவளுக்கு க்ளோரபார்ம் கொடுத்தாவது காரியத்தைச் சாதிக்கச் செய்யவேண்டுமென்றும். இந்த வேதவாக்கை ஒரு ஸ்திரீயும் மீறி நடக்கப் போவதில்லை. ஆனால் வேண்டிய உதவியைச் செய்யக்கூடியவர் வீட்டில் இல்லாத போனால் நாங்கள் என்ன செய்கிறது? அதற்காகத்தான் இப்பொழுதே கேட்டுக்கொள்ளுகிறேன் ஒருத்தி தனக்குத் தானே க்ளோரபார்ம் கொடுத்துக் கொள்ள முடியுமா? முடியுமானால் அந்தக் கல்பம் எங்கே கிடைக்கும்? இந்தக் கவலை என்னை இப்பொழுதே சூழ்ந்து விட்டது.” (பலத்த கரகோஷமும் சிரிப்பும். )
இவ்விதம் முடித்து, அந்த அம்மாள் உட்கார்ந் ததும், நான் எழுந்து பதில் சொல்வதற்கு முன், கொனஷ்டை எழுந்து எவரும் அவரைப் பேசக் கூப்பிடாமல், தாமே ஒரு பிரசங்கத்தைத் தொடங்கிவிட்டார்.
கொனஷ்டை: “சபையோர்களே, நான் சுருக்கமாய்ச் சொல்லப் போவது இரண்டே விஷயம். முதலில், ஸ்ரீமதி அமிர்தவல்லி அம்மாளுக்கும், ஸ்ரீ வேங்கடரமண ஐயருக்கும், அவர்களுடைய அதியானந்தப்பேச்சுக்களைக் கேட்டுக் களித்த நம்முடைய மனப்பூர்ணமான வந்தனத்தை, ஸ்ரீ மார்க் கண்டேயருடைய வேண்டுகோளின்படி, உங்களுக்குப் பிரதிநிதியாய் நான் செலுத்துகிறேன்.
“இரண்டாவது விஷயம்: அதே சம்பந்தமாக, உங்களுடைய வந்தனத்தை நானும் அபேக்ஷிக்கிறேன். அவசரக்காரர்கள், ‘உனக்கு எதற்காக வந்தனம்?’ என்று கேட்கலாம். அதைத்தான் சொல்லப் போகிறேன். இந்தப் பெரிய பையிலுள்ள முப்பத்தாறு ‘கடிதத்துண்டுகளுள் ஒவ்வொன்றிலும் ஸ்ரீ வேங்கடரமண ஐயருடைய பெயரொன்றையே நான் எழுதியிராத போனால் அவருடைய பெயரே பொறுக்கப்படுவதற்கும், அவருடைய பேச்சை நீங்கள் இன்று கேட்கவும் என்ன ஹேஷ்யம் இருந்திருக்கும்? (கரகோஷமும் சிரிப்பும்) இதே மாதிரி தான் மற்ற இரண்டு பைகளிலும் நான் முன் யோசனையாகக் காரியம் செய்ய வேண்டியிருந்தது. (கரகோஷ்ம்.) ஸ்ரீ மார்க்கண்டேயர், பாவம், இதொன்றும் அறியார். எல்லாம் தனக்குத்தானே சரியாக நடந்துவிடும் என்று நம்புகிறவர் அவர். ஆகையால், பொறுப்பை நான் வகித்து, இவ்விதம் உங்களுடைய விநோதத்திற்கும் ஆனந்தத்திற்கும் ஏற்பாடு செய்தேன். அதன் மூலம் நான் சம்பாதித் திருக்கும் உங்களுடைய வந்தனத்தை விநயத் துடன் பெற்றுக் கொள்ளுகிறேன்”.
இவ்விதம் அவர் முடித்தவுடன், மிக்க ஆர வாரத்துடன் சபையோர் கலைந்து, அவரவர் இஷ் டப்படி, இரண்டு பேர்களாகவும் மூன்று பேர் களாகவும் கூடி, நடைபெற்ற பிரசங்கங்களைக் குறித்துத் தர்க்கித்துச் சில்லறைச் சம்பாஷணை யைத் தொடங்கினார்கள். நான் நேராக ஸ்ரீ அமிர்த வல்லி அம்மாளிடம் சென்று, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்கார்ந்தேன்.
நான் : நாம் இனி அறிமுகமாக்கப்பட்டவர்களில் சேர்ந்தவர்கள் தாமே? ஆகையால் இவ்விதம் நேரே பேசத் துணிகிறேன். உங்களுடைய உபந் நியாசம் வெகு ரஸமாக இருந்தது. ஆனால் பர்த்ரு ஹரியின் பெயரை இழுத்திருக்கலாமா? மாடம் டெஸ்டஎல் என்கிற பிரெஞ்சு மாது அல்லவா சொன்னது, ‘நான் புருஷனாகப் பிறக்கவில்லை என்று எனக்குச் சந்தோஷம்; ஏனென்றால், அப்பொழுது ஒரு ஸ்திரீயை விவாகம் செய்துகொள்ள வேண்டியிருக்கும்’ என்று?
அமிர்தவல்லி அம்மாள் பதில் பேசாமல் சிரித்தாள். ஆனால் கண்களால், “அப்படியே இருக்கட்டுமே! அதனால் என்ன? என் இஷ்டப்படி நான் மாற்றிக்கொண்டேன்” என்கிற அர்த்தத்தைத் தெரியப்படுத்திவிட்டாள். சிரிக்கும் பொழுது அவளுடைய கன்னத்தில் ஒரு குழி விழுந்தது. அதன் அழகை நான் ரஸித்து முடிப்பதற்குள், அவள் பேச்சில் முந்திக்கொண்டாள்.
அவள் : உங்களுடைய உபந்நியாசம் மாதிரியே இருக்குமோ, உங்களுடைய கதைகளும்? விறுவிறுவென்று ஏதாவது வந்துகொண்டே இருந்ததே?
நான்: (ஆவலுடன்) நீங்கள் அதைக் கவனித்தீர்களா? ரொம்ப ஸந்தோஷம். அப்படி இருக்க வேண்டுமென்றுதான் என்னுடைய கொள்கை. சிலர் பேசினாலும், எழுதினாலும், தரையில் கொஞ்சம் தண்ணீரைச் சிந்தினமாதிரியே இருக்கும். அந்த ஜலம், இங்கே போகவா, அங்கே போகவா என்று தயங்கிவிட்டு, முடிவில் எங்கேயும் போகாமல், ஊற்றின இடத்திலேயே ஊறிப் போய்விடும். இம்மாதிரி தத்தளிப்பும் தயக்கமும் எனக்குப் பிடிப்பதில்லை. இன்னொரு விஷயம் பாருங்கள், என்னுடைய கதைகளிலே-
அச்சமயத்தில், அருகில் போன கொனஷ்டை என் காதில் ஏதோ ரகசியம் சொல்லப் போகிற மாதிரி நெருங்கி, ‘ஏய், குடுகுடுப்பாண்டி!’ என்று சற்றுத் தெளிவாகவே முணுமுணுத்துவிட்டுப் போனான்.
அவள் (சிரித்துக்கொண்டு) அதென்ன, உங்களுடைய சிநேகிதர் இப்படி உங்களைப் பரிகாசம் செய்கிறார்!
நான் : பரிகாசம் எங்கே செய்தார்?
அவள்: பின்னே என்ன? நீங்கள் குடுகுடுப் பாண்டி மாதிரி வாய் ஓயாமல் பேசுகிறீர்களா, என்ன? எப்பொழுதாவது மூச்சு வாங்கத்தானே செய்கிறீர்கள்!
நான் : பார்த்தீர்களா! இப்பொழுது நீங்கள் என்னைப் பரிகாசம் செய்கிறீர்கள். அது எனக்குப் புரியாதென்று நினைக்க வேண்டாம். ஆனால் குடுகுடுப்பாண்டி மாதிரி என்றால் நான் ரொம்பச் சுறு சுறுப்பாக இருக்கிறேனென்றுதானே அர்த்தம்?
அவள் : இல்லை. அந்த அர்த்தம் கொடுக்க வேண்டுமென்றால் குடுக்கைக் கறுப்பு மாதிரி என்று சொல்லியிருப்பார். உங்கள் சிநேகிதரையே கேட்டுப் பாருங்களேன்.
நான் : நான் ஒன்றும் அவனைக் கேட்கப் போவதில்லை. கேட்டால், இதுதான் சமயமென்று “ஆமாம், நீ ஒரு குடுக்கைக் கறுப்புத்தான்” என்று சொல்லிவிட்டு, நான் கறுப்பாயிருக்கிறேன் என்று இன்னும் நாலு வசவைக் கூடச் சேர்த்துவிடுவான்.
அவள்: நன்றாயிருக்கிறது! உங்களை யார் கறுப்பு என்று எண்ணுவார்கள்? விரோதிகள்கூட உங்களை மாநிறம் என்றுதானே சொல்லுவார்கள்? உங்களுக்கு வேண்டியவர்களும், உங்களுடைய பேச்சை ஒரு தரம் ரஸித்தவர்களுமோ-அது இருக் கட்டும். இன்றைக்கு உங்கள் வாயால் வந்திராத போனால், உங்களுக்கு இன்னும் விவாகம் ஆகவில்லை என்று நான் நம்பவே மாட்டேன். பெண்ணைப் பெற்றவர்கள் எப்படி உங்களை வெறுமே இருக்க விட்டிருக்கிறார்கள்?
நான் : அப்படிக் கேட்பதானால், நீங்கள் மாத்திரம் ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ள வில்லை?
அவள்: என்னுடைய விஷயமே வேறு. இதற்குச் சரியான உபமானமாகாது. நீங்கள் வாஸ்தவத்தைச் சொல்லுங்கள், நீங்கள் எப்பொழுதாவது விவாகத்தைக்கோரி, பெண் வீட்டுக்காரர்கள் மாட்டோம் என்று சொன்னதுண்டா?
நான்: அப்படி நேர்ந்ததில்லை. ஆனால் சில தடவைகளில் பெண்ணுக்கு இஷ்டம்போல் தோன்றியும் நான் மேலே தொடராமல் விட்டிருக்கிறேன்.
அவள்: பார்த்தீர்களா! அப்படித்தான் நான் ஊகித்தேன். ஆனால் நீங்கள் செய்தது நியாயமா? ஸ்திரீகளுக்கு ஒரு வரனோ, ஒரு சாபமோ, சொல்ல முடியாது-ஆனால் இம்மாதிரி விஷயங்களில் புருஷர்களைக் காட்டிலும் அவர்களுக்குத்தான் மனோபாவங்களின் சுறுசுறுப்பு அதிகம். இருந்தாலும் உலக சம்பிரதாயப்படி, விவாகப் பேச்சைப் புருஷர்கள் தாம் துவக்க வேண்டியது. ஆகையால் நீங்கள் ஒரு ஸ்திரீயின் மனசைச் சஞ்சலப்படுத்தி விட்டு, பிறகு பேச்சை முறித்துவிடுவது, ஒரு பாவமென்றே சொல்வேன்-என் மேல் கோபித்துக் கொள்ளக் கூடாது-.
இவ்விதம் சம்பாஷணை ஸ்வாரஸ்யமாய் வளர்ந்து வரும் சமயத்தில், ‘பார்ட்டி’ முடிந்துவிட்டதாக எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பவே, நானும், அசம்மதமாகவே, எழுந்திருக்க வேண்டியிருந்தது.
நான் : இனி நான் உங்களை எப்பொழுது பார்க்கலாம்?
அவள் : பார்க்க நேரிடுகிறதோ, இல்லையோ, ஒரு தீர்மானம் செய்திருக்கிறேன். நான் திரும்பி ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ஒன்று விடாமல் உங்களுடைய கதைகளெல்லாம் வாங்கிப் படிக்கப் போகிறேன்.
நான் : நீங்கள் விலை கொடுத்து வாங்க வேண்டாம். நானே அனுப்புகிறேன். தயவு செய்து அங்கீகரிக்க வேண்டும். பட்டணத்தில் எங்கே தங்கி யிருக்கிறீர்கள்? அதை மாத்திரம் சொல்லுங்கள்.
அவள்: திருவல்லிக்கேணியில், -தெருவில், -நம்பர் வீட்டில் என்னுடைய சிறு தாயாருடன் இருக்கிறேன். நாளைச் சாயங்காலம் ஊருக்குப் புறப்படுகிறேன்.
இத்துடன் நான் அவளை விட்டுப் பிரிய வேண்டியிருந்தது. நேற்றிரவு நான் தூங்கவேயில்லை என்றால் அது வாஸ்தவமாயிராது. ஆனால் பெரும்பாலும் விழித்திருந்து சிந்தனையில் கழித்துவிட்டு, இன்று காலையில் ஒரு முடிவுக்கு வந்தேன்.
அவளுக்கு இன்னும் விவாகமாகவில்லை என்பதை நான் சாதுரியமாய்க் கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்ட உடனே, என் மனசில் ஓர் எண்ணம் உதித்தது. நான் ஏன் அவளை விவாகம் செய்து கொள்ளக்கூடாது?
படிப்பிலும் புத்தியிலும் அவள் எனக்குத் தாழ்ந்தவளல்ல. அழகோ, அபரிமிதம். கண்ட தும் காதல்’ என்றால் அறியாத்தனத்தினால் சிலர் இகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் அவளைக் காண நேரிடும் ஒரு புருஷன் உடனே காதலில் அகப்பட்டுக் கொள்ளாமல், எப்படித் தப்பித்துக்கொள்ள முடியுமென்று எனக்குத் தெரியவில்லை.
அவளுக்கு இப்பொழுது வயது சுமார் இரு பத்துநாலு இருபத்தைந்து இருக்கலாம். தம்பதிகளுக்கிடையில், பத்துப் பன்னிரண்டு வருஷ வித்தியாசம் இருப்பதுதான் சிலாக்கியம். தனித் தனியாகப் பார்த்தாலும் எங்களுக்கு வயது அதிகமாய்விடவில்லை. ஸ்திரீகளும் புருஷர்களும் என்ன, ஸப் போட்டாப் பழங்களா, முழுக்கப் பழுத்தவைகளைக் காட்டிலும் முக்கால் பழுத்தவைகள் தாம் ருசி அதிகமென்று சொல்ல? ஆகையால் எங்கள் இருவருக்குமே, இப்போது தான் சரியான காலம், விவாக ஏற்பாடு செய்ய.
ஒரு விஷயந்தான் பாக்கி. அவள் ஹிருதயத்தின் நோக்கம் எப்படி இருக்குமோ ? நேற்று நான் பிரசங்கத்தில் பேசினதை ஆமோதிப்பதாகவே ஒரு முகவுரையைச் சொல்லிவிட்டு, பிறகு ஒவ்வொரு விஷயத்திற்கும், பளீர், பளீர் என்று பதில் கொடுத்திருக்கிறாள்.தெய்வத்திற்கு வேண்டிக்கொள்வதைப் பற்றி நான் பேசினேனே, நான் படித்ததெல்லாம், அந்த மாதிரி ஒரு சிறு பழமொழியைத் தான். அதைச் சற்று விரிவாக்கி, யாரோ ஒரு ஞானியின் வசனமென்று கௌரதைப்படுத்திச் சொன்னேன். உடனே, அதற்காக எழுதப்பட்ட ஒரு நீள வியாக்கியானத்தைத் தான் படித்திருப்பதாக இட்டுக்கட்டி விட்டாள். ஆனால் இதெல்லாம் அவளுடைய புத்தி கூர்மையையும் ஹாஸ்யச் சுவையையுந்தான் வெளிப்படுத்துகின்றன. இந்தக் குணங்கள் இல்லாமல், வெறுமனே ஒரு காப்பேஜ் மாதிரி உருட்டி விட்ட இடத்தில் அப்படியே கிடக்கிற பார்யையை என்னால் அரை நாழிகைகூடச் சகிக்க முடியாது.
என்னுடன் அவள் தனித்துச் செய்த சம்பாஷ ணையில் ஒவ்வொரு வார்த்தையையும் திரும்ப நினைவு மூட்டிப் பார்த்தால், தன்னை அறியாமலே அவள் என்னிடம் அநுகூலமாகவாவது இருக்கிறாள் என்றே காட்டுகிறது. ஒருவேளை, வெறும் அநுகூலத்திற்கு மேலாகவே இருக்கலாம், அவளுடைய மனநிலை. ஆனால் அதைக் காட்ட மாட்டாள். ஸ்திரீ அல்லவா? அவள் சொன்ன மாதிரி, இந்த விஷயங்களில் முதற் பேச்சு, புருஷனிடத்திலிருந்து தான் வரவேண்டும்.
ஆனால் என்னுடைய ஆசை ஒன்றையே நம்பி, நான் ஏமாந்து போகக் கூடாது. நான் என்ன முட்டாளா? அவசரப்பட்டும் காரியத்தைக் கெடுத் துக் கொள்ளக்கூடாது. சாமர்த்தியமாய் நடந்து கொள்ள வேண்டும்.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நான் நேரில் போகாமல் ஒரு கடிதத்தை எழுதிவிடுகி றேன். அப்படிச் செய்தால், வார்த்தைகளைப் பொறுக்கி உபயோகிப்பது சௌகரியம். அவள் இஷ்டப்பட்டால் அதிலிருந்தே என்னுடைய காதலை ஊகிக்க இடம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல், அவளுடைய மனசு இன்னும் தயாராயில்லை என்றால், அதற்கும் பொருந்தும்படி, வெறும் சிநேக பாவத்தையே தொனிக்கிற மாதிரியும் இருக்க வேண்டும், அதனுடைய வசனம்.
இம்மாதிரி எல்லாம் ஆலோசித்து,என் கடிதத்தில் ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு மூன்று தடவை திருத்தி, கடைசியில், இவ்விதம் தயார் செய்து, ஆள்வசம் கொடுத்தனுப்பினேன்:
“எனக்கு மாத்திரம் வயது முப்பத்தேழு ஆகியிராத போனால், நேற்று நான் கண்ட ஒரு ஸ்திரீரத்தினத்தை இப்போதே விவாகத்திற்குப் பிரார்த்திப்பேன். ஆனால் எனக்கு வயது அதிகமாய்விட்டது என்று ஸ்திரீகள் எண்ணுவார்களோ, என்னவோ? இந்த விஷயத்தில் உங்களுடைய அபிப்பிராயத்தில்தான் எனக்கு நம்பிக்கை. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”
அதற்கு உடனே அவளுடைய பதில் கிடைத்தது:
“எனக்கு மாத்திரம் ஏற்கனவே கல்யாணம் ஆகியிராத போனால், உங்கள் கடிதத்தை நம்பி, நீங்கள் சொன்ன அந்த ஞானியின் உபதேசப்படி, மூன்று தெய்வங்களிடம் போய் வேண்டிக்கொள்வதற்கு நான் இப்பொழுதே புறப்பட்டிருப்பேன். ஆனால் என் அகத்துக்காரர் ரொம்பக் கோபிஷ்டர். எது சொன்னாலும் நாலு ஆக்ஷேபங்களைக் கொண்டு வருகிற சுபாவம். நான் உங்களைக் கல்யாணம் செய்துகொள்வதாகச் சொன்னால், கட்டாயம், பிரமாதமாய் ஆக்ஷேபிப்பார் என்றே எனக் தோன்றுகிறது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?”
கேட்டீர்களா, இந்த ஸாஹஸத்தை! கல்யாணம் ஆய்விட்டதாம்; எடுத்ததற்கெல்லாம் சண்டை பிடிக்கிற ஒரு குண்டன் புள்ளியான அகத்துக்காரர் ஜீவனோடு இருக்கிறாராம். இந்த அவஸ்தையில் அவள் இன்னொரு கல்யாணம் செய்து கொள்வதைக் குறித்து, எனக்கு என்ன தோன்றுகிறது என்று நான் இப்பொழுது அவளுக்குச் சொல்லி ஆகவேண்டுமாம்! என்ன நெஞ்சழுத்தம்! என்ன கபடம்! முதலிலிருந்தே, நான், என் பேச்சு, என் கடிதம், எல்லாம் அவளுக்குப் பரிகாசமாயிருந்திருக்கின்றன. என்னுடைய பிரசங்கத்தில், ஸ்திரீகளையும் காதலையும் கண்டித்து இரண்டோர் உண்மைகளை வெளியிட்டேனென்று தானே அவளுக்கு என்மேல் இவ்வளவு ஆத்திரம்! உள்ளுக்குள்ளே அந்த ஆத்திரம், வெளியிலே பாசாங்கு! நான் மாநிறந்தான் என்று ஒப்புக் கொள்வதுகூட தனக்குத் தாங்காதது போல் அத்தனை பிரியமாகப் பேசுவது, தனக்குக் கல்யாணம் ஆகவில்லை என்று நான் நினைக்கும்படியாக இரட்டை அர்த்தமாகச் சொல்லி வைக்கிறது, படிப்படியாக என்னை மலைமேல் கூட்டிக்கொண்டு போகிறது, எல்லாம் எதற்காக? அங்கிருந்து என்னைத் தொப்பென்று கீழே விழும்படி தள்ளுவதற்காகத்தானே! என்னை என்னவோ ஒரு முட்டாள், ஒரு படித்த முட்டாள் என்றுதானே எண்ணிவிட்டாள்! ஆனால் ஸ்திரீகளைப்பற்றி நான் படித்திருப்பது முழுவதும் வாஸ்தவமென்று இதிலிருந்தே நன்றாய்த் தெரிகிறதே!
“கண்டதும் காதலு’க்கா மருந்து வேண்டும்? அவளை ஒரு தடவை கண்டதோடு கண்களை இறுக்கி மூடிவிட்டுப் பிறகெல்லாம் உன்னுடைய கல்பனையையே நம்பித் திரியாமல், கண்களை நன்றாய் விழித்துக்கொண்டு, அவளை இன்னும் நாலைந்து தடவை காணுவதே போதுமான வைத்தியம்.”
“‘பார்யா ரூபவதீ சத்ரு’ என்று பழைய வசனம். ஏனென்றால் தன்னுடைய அழகை அவள் ஒவ்வொரு தடவை நினைத்துக் கொள்ளுகிற போதும், புருஷனைத் திருணமாக எண்ணித் தூக்கி எறிந்தே பேசுவாள். எந்த ஸ்திரீயும் தன்னுடைய அழகை, தினம் சராசரி, இருபத்துநாலு தடவை நினைத்துக்கொள்ளுவாள்.”
“ஒரு ஸ்திரீயிடம் வாக்குக் கொடுப்பதற்கு முன், ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக ஆலோசித்துக்கொள். அப்படி ஆலோசித்த பிறகும், உன்னுடைய மனசுக்குள்ளேயே பேசிக்கொள்”.
நாசமாய்ப் போக! இந்தக் கல்வி யெல்லாம் சற்று முன்பே ஞாபகத்திற்கு வராமல் எங்கே போயிருந்தது? இப்போது வந்து எனக்கு என்ன பிரயோசனம்? மரத்தின் நிழல்மாதிரி, பிறருக்குத் தான் உபயோகம். அப்படியாவது நன்மை செய்யட்டுமென்றுதான், இந்தச் சம்பவத்தை நடந்தது நடந்தபடியே, உடனே எழுதிவிட்டேன். அவளுடைய சுபாவத்தையும் என்னுடைய சுபாவத்தையும் உலகத்தார் அறியட்டும். அவர்களே தீர்ப்புச் சொல்லட்டும். எனக்குச் சம்மதம். ஆனால் எவர் என்ன சொன்னாலும் சரி, ‘கண்டதும் காதல்’ என்பதை மாத்திரம் இனி என் ஜன்மாயுசுக்கு நான் நம்பப் போவதில்லை. அது சுத்த மோசம்.
குறிப்பு: இது இந்த வாரத்து ‘மலய மாருத’த்தில் வெளிவந்துவிடும். என்னுடைய கதைகளை எல்லாம் வாசிக்கப் போவதாக அவள் சொன்னாளல்லவா? முதல் முதலில் இதையே படிக்கட்டும்!
– கொனஷ்டையின் கதைகள், முதற் பதிப்பு: மே 1946, புத்தக நிலையம், திருச்சி.