ஈசாக்கின் காதல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 4,924 
 
 

“அய்யா…!”

“ம்…!”

“காதலர் தின பிரசங்கம் கேட்டு மீடியாவுலேந்து வந்திருக்காங்கய்யா…!”

“அப்படியா.. உள்ளே வரச்சொல்..”

“சரிங்க அய்யா…!” என்று சொன்னப் பணியாள், “ஹால்ல உட்காருங்க. இப்ப வந்துருவார்…!” என்று அமரவைத்துவிட்டு, அவசரமாக வெளியேறி விட்டான்.

வரவேற்பறையில் அருட்தந்தை ஆல்பர்ட் பல்வேறு நிகழ்வுகளின் பங்குகொண்டபோது எடுக்கப்பட்டு, சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த நிழற்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சோஃபியா.

1517 ல் இறையியல் பேராசியராக இருந்த ஜெர்மன் பாதிரியாரும், மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான, மார்டின் லூதர் கிங் அவர்கள் விட்டன்ஸ்பர்க் தேவாலயத்தில் பதிப்பித்த 95 அறிக்கைகளின் வாயிலாகச் சீர்திருத்தமடைந்த லுத்தரன் திருச்சபையின் அங்கத்தினரான பங்குத் தந்தை தேவசகாயகம். அவரின்ஒரே வாரிசான ஆல்பர்ட், தன் ஆற்றல் மிக்க இறையியல் தொண்டால், மகன் தந்தைக்காற்றும் நன்றியை நவின்று கொண்டிருக்கிறார்.’ என்பதை நினைத்தபோது பெருமையாக இருந்தது சோஃபியாவுக்கு.


முகத்தைத் துடைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு வந்தார் அருட்தந்தை ஆல்பர்ட்.

அவர் வருகையை அறிந்ததும், அவர் முன் வந்து வணங்கினாள் சோஃபியா.

கையில் கையடக்கக் கேமராவுடன், எதிரில் கும்பிட்டு நின்ற மங்கையைப் பார்த்தவுடன், ஆல்பர்ட்டின் தலைக்குள் விளக்குப் பிரகாசித்தது.

“நீ… ஸோஃபியாதானே?” – விழி உயர்த்திக் கேட்டார்.

“ஆமாம் ஐயா..!” – என்றாள் சோஃபி.


“பத்து வருஷங்களுக்குப் பிறகு, இந்த ஊரில், தேவாலயக் குடியிருப்பில் உன்னை எதிர்பார்க்கவேயில்லை ஸோஃபி.

“கர்த்தரின் கருணை அது. நீங்க இந்த தேவாலயத்திற்கு வந்த ஒரு மாசமா, தினம் தினம் உங்கப் பிரசங்கங்களை நாள் தவறாமக் கேட்டுக்கிட்டுதான் இருக்கேன் ஐயா…!”

“அப்படியா?”

“ஆமாம் அய்யா. இந்தப் பத்து வருஷத்துல வானளாவ உயர்ந்து நட்சத்திரங்களாகப் பிரகாசிக்கிற, உங்களோட உன்னதமான மாற்றங்களையும், உங்க முகத்தில் பிரதிபலிக்கும் தெய்வீக ஒளியையும் பார்த்துப் பார்த்து ஒவ்வொருநாளும் வியந்திருக்கேன் அய்யா…!” – அவள் முகத்தில் உண்மையான வியப்புப் பிரதிபலித்தது.

“நான் உன்னை ஒரு நாள் கூட அரங்கத்தில் பார்த்ததேயில்லையே..?”

“ஓரமா தூண் மறைவுல உட்கார்ந்து பிரசங்கம் கேட்பேன., முடிஞ்ச கையோடப் புறப்பட்டுப் போயிருவேன். இன்னிக்கு நான் தொழில் முறையா உங்க எதிர்ல நிற்க வேண்டியதாப் போச்சு…!” – என்று சொல்லி முறுவலித்தாள் சோஃபியா.


“…………………”

ஒரு இறுக்கமான அமைதியுடன் நின்றார் ஆல்பர்ட்.

தான் பணியுரியும் மீடியாவைச் சொன்னாள்.

தான் வந்திருக்கும் காரணத்தையும் சொன்னாள் ரிப்போர்டர் சோஃபியா.

“சோஃபியா, நீ இருக்கறது..?”

“இதே ஊர்லதான். உள்ளன்போட இறைத்தொண்டு செய்கிற உயரிய பணியில் இருக்கும் தங்களை, நீங்க இந்த தேவாலயத்துக்கு வந்த முதல் நாளே நான் அடையாளம் கண்டுக்கிட்டேன்.”

“அப்படியா? சோஃபி! ஒரு விண்ணப்பம்.”

“சொல்லுங்க…!”

“என்னை நீங்கனு சொல்லவேண்டாமே, நீ..னு ஒருமையிலேயே பேசலாம்…!”

“நீங்க என் வகுப்புத் தோழனா இருக்கலாம். இன்றைய நிலைல நீங்க ஒரு பாதிரியார். வணங்கப்வேண்டிய இடத்துல அருட்தந்தையா, இருக்கீங்க இப்போ.”

“……………” – ஆல்பர்ட் தடுமாறினார். இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

சோஃபியே தொடர்ந்தாள். “அது மட்டுமில்லை. உங்களுக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டு இருக்கறதும், திருமண ஏற்பாடுகள் நடப்பதும் எனக்குத் தெரியும். ஆல் த பெஸ்ட்.”


“ஐ லவ் யூ ஸோஃபி..” – பதினோரு வருடங்களுக்கு முன் +2 படிக்கும்போது சோஃபியாவிடம் சொன்னது, பசுமரத்து ஆணியாக, நினைவில் தெரித்தது, அருட்தந்தை ஆல்பர்ட்டுக்கு.

“ஆல்பர்ட்.. இன்னும் பொதுத் தேர்வுக்கு ஒரு மாசம் கூட இல்லை. படிப்புல கவனம் செலுத்தாம இப்படி ‘லவ் கிவ்’னு பேசறியே..?”

“மனசுலப் பட்டதைச் சொன்னேன்.. ஸோஃபி. ‘வாலன்டைன் டே’ நாளில் நாம ரிங் மாத்திக்குவோமா..? வீட்டுக்குத் தெரியாம வர்றியா? முக்கொம்பு பார்க்ல என்ஜாய் பண்ணுவோம்..”

“ஆல்பர்ட், இது அடலஸண்ட்ல வர்ற மனச் சலனம்தான். உண்மையான காதல் இல்லை. பரமபிதாவின் சித்தம் அப்படி இருந்தா பிற்காலத்துலப் பார்க்கலாம். இப்போ படிப்புல கவனம் வை..” – பொறுப்பாகப் பேசினாள் சோஃபியா.

அதற்கு மேல் எதுவும் பேசவில்லை ஆல்பர்ட். “எத்தனை காலம் ஆனாலும் உனக்காகக் காத்திருப்பேன் ஸோஃபி..” – என்று முற்றுப் புள்ளி வைத்தான்.

“சந்தோஷம் ஆல்பர்ட்.. மீண்டும் மீண்டும் சொல்றேன். படிப்புல கவனம் செலுத்து.!” – என்று சொன்ன ஸோஃபி +2 தேர்வு முடியும் வரைக்கும் ஆல்பர்ட் கண்களில் படவேயில்லை.


ஆல்பர்ட் ஆண்கள் பள்ளியிலும், சோஃபி பெண்கள் பள்ளியிலும் பயில்வதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பும் இல்லை.

தேர்வுகள் முடிந்த கையோடு, ஆல்பர்ட்டை அவன் தந்தை ஒரு மாதம் ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் சென்றுவிட்டார். ஒரு மாதம் கழித்துத் திரும்பி வந்தவுடன், சோஃபியாவின் வீட்டை நோக்கி ஓடினான் ஆல்பர்ட்.

வீட்டில் பூட்டுத் தொங்கியது.

வீட்டை காலி செய்துகொண்டு வேற்றூருக்குச் சென்றுவிட்டதாகத் தகவல் அறிந்தான் ஆல்பர்ட்.


ஆல்பர்ட்டின் ஆன்மீகத் தேட்டை, அவனை ஆகமக் கல்லூரிக்கு அனுப்பியது.

அதன் பிறகு ஒன்பது ஆண்டு காலம் கிறித்தவ ஆகமப் படிப்புகளில் மூழ்கி விட்டார் ஆல்பர்ட்.

பைபிள் வாசித்தல், மனோதத்துவம் அறிதல், பிரசங்கம் செய்தல், மதம் பரப்புதல், என அறிவை விரிவு செத்து அகண்டமாக்கியதில், பள்ளிக் காலக் காதலி, ஸோஃபியின் நினைவு அறவே எழவில்லை.

இதோ இப்போது எழில் மங்கையாக, எதிரில் நிற்கிறாள் சோஃபி. பத்தாண்டுகளுக்கு முன் உனக்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் காத்திருப்பேன்.” என்று சொன்னது குற்ற உணர்வைத் தூண்டத் தலை குனிந்தார் அருட்தந்தை ஆல்பர்ட்.


ஏன் தலை குனியறீங்க. பிரசங்கி 8:5 ல் சொல்வதைப் போல– கற்பனையைக் கைக் கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான் அல்லவா?

நீதி 17:20 ன்படி, மாறுபாடான இதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லைங்கற வசனமும் உங்களுக்குத் தெரியாததல்ல.

“…………….” சோஃபியாவின் பைபிள் அறிவை எண்ணி வியந்து நின்றார் ஆல்பர்ட்..

“பதின்ம வயசுல ‘எதிர்பாலரின்’ ஈர்ப்புல சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு இப்போ நீங்க வருந்தறது நல்லதில்லேன்னு தோணுது.”

“………………” சோஃபியாவின் மனமுதிர்ச்சியைக் கண்டு மேலும் வியந்தார் அருட்தந்தை.

“சோஃபியா. டீன் ஏஜ்ல சொல்லியிருந்தாலும், அந்தச் சொல்லை காப்பாத்தியிருக்கணும் நான். அது தவிர, நான் ஆகமக் கல்வியின் ஒரு பகுதியா, உலகம் பூராவும் உள்ள தேவாலயங்களுக்கெல்லாம் களப்பயணம் சென்ற நேரத்துல என் பெற்றோர் எனக்குத் திருமணம் நிச்சயம் செய்துவிட்டனர்..” – குரலில் லேசாக வருத்தம் இழையோடியது.


“வேதத்திலே பல திருமணங்களைப் பற்றிக் குறிப்புகள் இருப்பதும், அதில் இரண்டே இரண்டு திருமணங்கள் மட்டுமே தேவனால் ஒழுங்குபடுத்தப்பட்டவை என்பதும் உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை;

ஆதாமுடையதில் என்னவாயிற்று?; தன் வேலைகளில் நாள்பூராவும் ஈடுபாட்டுடன் மூழ்கிய ஆதாம், இரவில் தன்னை மறந்து ஓய்வு கொண்ட வேளையில்தான் பரமபிதா, ஏவாளை சிருஷ்டி செய்து ஆதமிற்கு ஈந்தார்.

இரண்டாவது ஈசாக்கின் திருமணம். ஈசாக்கு கர்த்தரின் திருப்பணிகளில் கருத்தாய் இருக்கும்போது ரெபெக்காளை, அவன் பெற்றோர்கள் ஈசாக்கிற்குப் பொருத்தியதும் தேவனுடைய தெரிந்தெடுப்புத்தான் அல்லவா..?”.

“……..” சோஃபி சொல்லச் சொல்ல பிரமித்து நின்றார் ஆல்பர்ட். இன்னும் சொல் என்பதுபோல் கவனமாகக் காது கொடுத்தார்.

“ஜனங்கள் என்னிடத்தில், “நிச்சயிக்கப்பட்டத் திருமணங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?” எனக் கேட்பதுண்டு. அதற்கு நான், “ஆம், தேவனால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் எனக்கு நம்பிக்கை உள்ளது!” – எனப் பதிலளிக்கிறேன்;

தேவனால் ஒருவருடைய பெற்றோர் மூலமாகவோ (ஈசாக்கின் சம்பவத்தைப் போல) அல்லது பெற்றோரின் தலையீடு ஏதுமில்லாமலோ (ஆதாமைப் போல) திருமண ஏற்பாடு செய்ய முடியும். திருமணமானது தேவனால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.”னு நீங்க நேற்று கூட பிரங்கம் செய்தீங்களே. நீங்களே இப்படி மனம் தடுமாறலாமா..?”

பத்தாண்டுகாலம் படித்த ஆகமப்படிப்பின் சாராம்சத்தைப் பிழிந்து பத்து நிமிடத்தில் சோஃபியா தனக்குள் புகட்டியதாகத் தோன்றியது ஆல்பர்ட்டுக்கு.


சோஃபியா கொடுத்த ‘பித்தான் மைக்’கை அங்கியில் க்ளிப் செய்துகொண்டார் அருட்தந்தை ஆல்பர்ட்.

ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக் கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக் கொண்டு, அவளை நேசித்தாள் என்கிறது ஆதியாகமம் 24:67.

திருமணமானவர்களுக்கும், திருமணம் ஆக உள்ளவர்களுக்கும். ‘வாலன்டைன் டே’ என்று சொல்லப்படும் காதலர் தின வாழ்த்துக்கள்.” – என்றார்.

பள்ளிப் பருவத்தில் வரும் இன்ஃபாட்சுவேஷன் எனும் எதிர்பாலர் ஈர்ப்பை காதல் என்று எண்ணி ஏமாறாதீர்கள். குழந்தைகளே! படிப்பில் கவனம் செலுத்துங்கள்.

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் பள்ளியிருதிப் பொதுத்தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில், பிப்ரவரி 14ல் வரும் காதலர் தினத்தில், மனம் தடுமாறி, பள்ளியிறுதித்தேர்வில் தோல்வியுற்றோ, குறைந்த மதிப்பெண்கள் பெற்றோ, இலக்கை அடையமுடியாதவர்களாய்த், தங்கள் எதிர்காலத்தை இருளில் போட்டுப் புதைத்துவிடும் அபாயம் உண்டு.

மாணவர்களே.. படிப்பது, வாழ்வில் ஒரு இலட்சியத்தை நோக்கி நகர்வது இவையே மாணவர்களின் ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆதாம், ஈசாக் போன்றவர்களைப் போல குறிக்கோளை நோக்கி நகர்வோருக்கு, இயற்கையாகவே பொருத்தமான காதலர்கள் அமைவார்கள். கடமையைச் செய்யுங்கள் ..

அருட்தந்தை ஆல்பர்ட்டின் காதலர் தின வாழ்த்தை உலகம் பூராவும் கேட்டுக் கொண்டிருந்தது.

– 14.02.2024, விகடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *