இரண்டு இட்லியும் ரத்னா கபேயும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 11,320 
 
 

எழிலகம் பஸ் நிறுத்தத்தில் இறங்கினான் சுந்தர்.

இந்த எழிலகக் கட்டடம் பின்புறமுள்ள பழங்கால அரசு கட்டடத்தில் தான் விஜி வேலை பார்க்கும் அலுவலகம் உள்ளது.

விஜி தான் வரச் சொல்லியிருந்தாள் சுந்தரை.

சுந்தரும் விஜியைப் பார்க்கும் ஆவலில் இருந்தான். அதற்காகவே முகநூலிலெல்லாம் அவள் பெயரைத் தேடி, ஒருவழியாக அவளது முகநூல் அடையாளம் கண்டறிந்து அவளது உட்பெட்டியில் செய்தி அனுப்பியிருந்தான்.

“சுந்தர்…..ஓ மை காட்…..எங்கேடாபோயிட்டே….. உன்னை எங்கெல்லாம் தேடி….அப்பா ஈஸ்வரா….நல்ல வேளை….நீயே தொடர்பில் வந்திட்டே……சரியா வெள்ளிக்கிழமை வந்திரு….நான் அதே அலுவலகத்தில் தான் இருக்கேன். பதினோரு மணிக்கெல்லாம் வந்திருவேன். உன்னைப் பாப்பேன். அன்னிக்கு
அலுவலகத்திற்கு விடுப்புக் கொடுத்து முழுநாளும் உன்னோட கழிப்பேன். தவறாம வந்திடுடா….”

அந்த அழைப்பு கட்டளையாகவும் கொள்ளலாம், அன்பான வேண்டுதலாகவும் கொள்ளலாம்.

சுந்தருக்கு எப்போதுமே அது கட்டளைஆகவே தோன்றும். அதனால் எப்போதும் அவள் பேச்சை மீறியதில்லை.

ஒரு முறை அப்படித்தான்…..கண்ணகி சிலை அருகே
வந்து காத்திருக்கச் சொல்லியிருந்தாள். அலுவலகத்தில் கூடுதல் பணி காரணமாக அதை மறந்து விட்டிருந்தான். அவன் செல்லவில்லை. நேராக பணி முடித்து மேன்ஷனுக்குத் திரும்பியிருந்தான்.

எட்டு மணி வரை காத்திருந்த விஜி, அங்கிருந்து நடந்தே நேராக சுந்தர் தங்கியிருந்த முருகேச நாயக்கர் மேன்ஷனுக்கே வந்து அவனது அறையின் கதவைத் தட்டியபடி திறந்தாள்.

திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் உள்ள மேன்ஷன். நூற்றுக்கணக்கானோர் தங்கியிருக்கும் விடுதி அது. பெரும்பாலும் அலுவலகங்களில் பணிபுரியும் கல்யாணாகாத பிரம்மசாரிகள் தங்கும் விடுதி. பேச்சிலர்ஸின் சொர்க்கமாக அப்போது திருவல்லிக்கேணி திகழ்ந்தது.

அருகருகே விதவிதமான உணவு விடுதிகள், மெஸ், ரத்னா கபே, பொழுது போக்க அருகிலேயே திரையரங்குகள், காசில்லாத போது காற்று வாங்க மெரினா கடற்கரை, பக்தி செலுத்த பார்த்தசாரதி திருக்கோவில், இப்படி பலவிதங்களில் சந்தோசப்படுத்தும் திருவல்லிக்கேணி, ஒரு சொர்க்கமாகத் தான் விடுதிகளில் தங்கி வேலை பார்க்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களுக்குத் தெரிந்தது.

அந்த சொர்க்க அறையைத் தான் விஜி தட்டியபடி திறந்தாள்.

சுந்தர் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, விஜி அவன் கண்களுக்கு ஒரு கண்ணகியாகத் தெரிந்தாள்.

“ஏன்டா…என்னை என்ன நெனச்சிக்கிட்டு இருக்கே…உனக்காக நான் அங்கே கால் கடுக்க காத்துகிட்ருக்கேன்…போறவன் வர்றவன் எல்லாம் என்னை ஏதோ கேஸ் மாதிரி,பாத்துட்டுப் போறான்…நீ என்னடான்னா…இங்கே வந்து ஹாயா வந்து உக்காந்திட்ருக்கே…..ஒரு பொண்ணு தனியா இவ்வளவு நேரம் நின்னா…என்னென்னவோ பேசிட்டுப் போறான். நான் சொன்னதையே மறந்து நீ இங்கே வந்து வெட்டி முறிச்சிட்டு இருக்கே…இல்லே….”

இதற்குள் சத்தம் கேட்டு அக்கம்பக்க அறைகளில் இருந்தவர்கள் வெளியே வந்து ஒருமாதிரியாக எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

“ப்ளீஸ்…விஜி…ஸாரி…விஜி…உண்மையாவே மறந்துட்டேன்…ப்ளீஸ்…ப்ளீஸ்…”

“என்னைய மறக்கற அளவுக்கு அப்படியென்னடா உனக்கு வேலை…..” என்றவாறே முதுகில் ஓங்கி அடித்தாள்.

சுந்தர் வலிப்பதாக பாவனை காட்டினான்.

“சரி…சரி….இனிமே மறக்கவே மாட்டேன். நீ என்ன சொன்னாலும் செய்றேன்….எங்கே கூப்டாலும் வர்றேன்…..”

” இந்தப் பசங்களே இப்படித் தான்டா…..கொஞ்சம் மொறச்சா போதும்….பொத்துன்னு கால்லே விழுந்துடுவீங்க….. எங்கே கூப்டாலும் வர்றேங்கறியே…..நான் நரகத்துக்குக் கூப்பிட்டா
வந்திருவியா……என்ன சொன்னாலும் செஞ்சிருவியா…..”

“ஓ…வந்திருவேன் நரகத்துக்கு…..நீ பக்கத்திலே இருக்கும் போது, அது எப்படி நரகமாகும்……சொர்க்கமாகத் தானே இருக்கும்……..”

” இந்தப் பேச்சுத் தானேடா என்னைய உன் கிட்டே ஈர்த்தது” என்றவாறே நெருங்கி வந்து சுந்தரின் தலைமுடியைக் கோதியபடி அவன் முகத்தை நெருங்கி அவனது உதடுகளில் அழுந்த ஒரு முத்தமிட்டாள். க்ஷண நேரம் தான்.பின் விலகி ஒன்றும் நடக்காதது போலப் பார்வையை எங்கோ செலுத்தினாள்.

பின் இயல்பாக, “வா…ரத்னா கபேயில் இரண்டு இட்லியும் ஒரு மக் சாம்பாரும் வாங்கிக் கொடு” என்று கேட்க சுந்தர் சிரித்துவிட்டான். அவளும் சேர்ந்து கொண்டாள்.

அதன் பின் ரத்னா கபேயில் இட்லியும் சாம்பாரும் உண்டார்கள்.

இரண்டு இட்லி தான்…..சாம்பார் ஊற்ற… ஊற்ற….. அப்படியே உறிஞ்சிக் கொள்ளும் இட்லி, மீண்டும் கொஞ்சம் சாம்பார் ஊற்று எனக் கேட்கும் விதம் இருக்கும்.

“வாலியும், நாகேசும் காசில்லாத நேரங்களில் அவர்களது பசிபோக்கிய உணவே இந்த இட்லியும் சாம்பாரும் தான். இட்லியை விட அதிகமாக உண்டது சாம்பாராய்த் தான் இருக்கும். அவ்வளவு
பேமஸ் இந்த இட்லி சாம்பார்…..ஆனா எனக்கென்ன தோணுதுன்னா, நீ இட்லின்னா நான் சாம்பார். அப்படியே வைஸ் வெர்சா” என்றபடி கண் சிமிட்டினாள்.

ஒன்றும் புரியாமல் சுந்தர் இருக்க, “போடா மக்கு…உன்னோட எப்படி நான் குடும்பம் நடத்தப்போறேனோ…இப்ப விஜி இட்லின்னா…இந்த இட்லி, சுந்தர் சாம்பாரை இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்னு கேட்கும்டா…அதே மாதிரி இந்த சுந்தர் இட்லின்னா…விஜி யை இன்னும் வேணும், இன்னும் வேணும்னு கேட்டுக்கிட்டே இருக்கணும்டா…என்ன…”

விஜியின் அதட்டலில், அவளது கண் சிமிட்டலில் மிளிர்ந்த காதலைக் கண்டு பரவசமான சுந்தர், அவளது கைகளை மென்மையாகப் பற்றி அவளது காதுகளில் கேட்கும் வண்ணம், “விஜி…ஐ லவ் யு வெரி மச்” என்றான்.

காலம் தான் எவ்வளவு கொடுமையானது…..ஒரு நொடிநேரத்தில் எப்படியெப்படியோ புரட்டிப் போட்டு விட்டு ஒன்றும் நடக்காதது போல் நழுவிவிடுகிறது.

அப்படித் தான் விஜியையும் சுந்தரையும் நழுவ விட்டது.

அவர்களை ஒவ்வோர் இடத்திற்குத் தள்ளி விட்டு கண்டும் காணாமல் சென்றது. காதலைப் பிரித்தது. கனவைக் கலைத்தது.

ஆயிற்று. இருபத்தைந்து வருடங்களை நகர்த்தி விட்டது.

அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடை அருகே, பூவரச மர நிழலில் சுந்தர் நின்றிருந்தான்.

“ஹே…சுந்தர்..ப்பா…அப்படியே இருக்குடா உன் முகம். மறக்கவே முடியாது. மறக்கக் கூடிய முகமா இது. ஆனாலும் இவ்வளவு வயசானாலும் அந்த சார்ம் அப்படியே இருக்குடா சுந்தர். என்ன இந்தக் குட்டியூண்டு தொப்பை தான் இடிக்குது இல்லே…”

இயல்பாய் பேசிய விஜி மட்டும் என்ன….கொஞ்சம் பூசினாற் போல பழைய அழகு மாறாமல் வயதுக்குப் பொருந்தும் முதிர்ச்சியோடு தென்பட்டாள்.

“விஜி…விஜி…”

சுந்தர் தவிக்க, “இந்தக் குரல் தான்……இந்த விஜிங்கற அழைப்பு தான், இன்னிய வரைக்கும் நான் யார் கிட்டேயும் கேட்டதில்லே…..என் ஹஸ்பண்ட் கூட என்னை விஜயான்னு ஒரு மாதிரியான கரகர குரலில் கூப்பிடுவார். ஒரே நாராசமா இருக்கும் பாரு” என விஜி நிலைமையைச் சகஜமாக்க முயன்றாள்.

“மேடம்…..குட் மார்னிங் மேடம்…..” என ஒன்றுக்கு இரண்டு முறை வணக்கம் வைத்துவிட்டுப் போனான் ஒரு பணியாளன்.

“இந்த எழிலக வளாகத்திலேயே என்னை அராத்துன்னு தான் சொல்வாங்க. அதனாலேயே என் மேலே பயம் எல்லாருக்கும்…”

அதற்குள் ஏதோ அலைபேசி சிணுங்க….

“ஏங்க, நான் தான் சொன்னேனே. இன்னிக்கு முழுசா வேலை இருக்கு. லேட்டாத் தான் வீட்டுக்கு வருவேன்னு காலையிலேயே சொன்னேனே.சரி..சரி..வர்றேன்…”

“வீட்டுக்காரர் தான் சுந்தர்.வா, நாம ஆட்டோ பிடிச்சி நேரே காந்தி சிலைக்குப் போறோம். அங்கே கொஞ்ச நேரம் உக்காந்திட்டு காலாற பீச்சுக்குப் போயி கால் நனைக்கிறோம்…”

சொன்ன மாதிரியே காந்தி சிலை அருகே உள்ள சிமெண்ட் பலகையில் உட்கார்ந்தனர்.

சுந்தர் எப்படி ஆரம்பிப்பபது என்று தெரியாமல் தடுமாற, “ஹே சுந்தர். கம் ஆன் யார். இந்த வயசிலே யாரும் தப்பாப் பேச மாட்டாங்க.சும்மா பக்கத்திலே உரசினாப்போல உக்காருடா. இவ்வளவு வருசம் கழிச்சி வந்து என்னைப் பாக்கறே..படவா…..எனக்கு என்ன கொண்டு வந்திருக்கே…..” என்று விஜி எடுத்துக் கொடுத்தாள்.

விஜியே சுந்தரின் பக்கத்தில் நெருங்கி அமர்ந்தாள்.

“விஜி, உனக்காக என்னையே கொண்டு வந்திருக்கேன்னு இப்ப சொல்ல முடியுமா. இதோ உனக்காக இந்தப் பட்டுப்புடவை, நாம விரும்பிக் கேப்போமே அந்தப் பழைய பாடல்களோட
மெமரி கார்டு. இதிலே ஒரு ஐநூறு பாட்டாவது இருக்கும். டி.எம்.எஸ். பி. சுசீலா. பி.பி.ஸ்ரீநிவாஸ்.பி.சுசீலா…முழுக்கமுழுக்க இவங்க பாடல்கள் தான்.இதைத் தான் நான் கேட்டுக்கிட்டே இருப்பேன்.அத உனக்குக் கொடுக்கலாம்னு தான் கொண்டு வந்தேன். நீ அடிக்கடி முணுமுணுப்பியே…..

“குயிலாக நானிருந்தென்ன
குரலாக நீவரவேண்டும்
பாட்டாக நானிருந்தென்ன
பொருளாக நீவரவேண்டும்…..”

அந்தப் பாட்டும் இதிலே இருக்கு.

“டேய்.ஸர்ப்ரைஸ்டா.பட்டுப் புடவ ஓ.கே.இந்தப்பாட்டு ஐடியா எப்படி.அது சரி. நான் முணுமுணுத்த உடனே நீ எனக்குக் கேக்கற மாதிரி சத்தம் போட்டு பாடுவியே. அத இப்பப் பாடேன்.எனக்குக் கேக்கணும் போல இருக்கு…”

“அப்ப, நீ முதல்லே பாடு விஜி…”

விஜி முணுமுணுத்தாள். குயிலாக நானிருந்தென்ன…

விஜி குரல் முடிந்ததும் சுந்தர் சுற்றுப்புறம் மறந்து.

‘பாட்டோடு பொருளிருந்தென்ன
அரங்கேறும் நாள் வரவேண்டும்
உன்னோடு அழகிருந்தென்ன
என்னோடு நீவரவேண்டும்……வர வேண்டும் ‘

என்று விஜியைப் பார்த்தவண்ணம் உரத்துப் பாடினான்.

கடற்கரை நோக்கிச் செல்வோர் கூட ஒரு கணம் நின்று கேட்டுவிட்டுச் செல்ல சுந்தருக்கு வெட்கமாகி விட்டது.

விஜி தன்னை மறந்து கை தட்டினாள்.

“ப்பா.அதே குரல்டா. அன்னிக்கிப் பாடின மாதிரியே இருக்குடா.என்னா, அப்போ எந்த நிலையிலே பாடி ரசிச்சோமோ.இப்ப அது மாதிரி செய்ய முடியாதில்லே. அப்றம் நாம டி எம் எஸ் வீட்டைத் தேடிக் கண்டுபிடிச்சி, அவரோட பேசி ஆட்டோகிராப் எல்லாம் வாங்கினோமே, நினைவிருக்கா. வா, பீச் பக்கம் போவோம். சாயந்தரம்னா மிளகா பஜ்ஜி சுடச்சுட வாங்கி காரசாரமா கடிக்கலாம். கடல் காத்துக்கும் காரத்துக்கும் சரியான கெமிஸ்ட்ரியா இருக்கும்…”

“இல்லே விஜி. இந்தச் சுனாமி வந்ததிலேர்ந்து எனக்குக் கடல் மேலே ஒரே வெறுப்பாப் போயிருச்சி. எத்தினி உயிர்களை மண்ணை முழுங்கியிருச்சி.டி.வி.யிலே பாத்து மூணு நாள் சாப்பிடாம உக்காந்திருந்தேன். அதனாலே வேணாம். எனக்கு பசிக்குது. எங்கே சாப்பிடலாம்…”

“ராதாகிருஷ்ணன் சாலையிலே இருக்கற சரவண பவன் ஹோட்டலுக்குப் போயிடுவோம்….”

“ஆமா. இங்கே கம்பீரமா நிக்கிற சிவாஜி கணேசன் சிலையிலேயும் அரசியல் பண்ணிட்டாங்களே இல்லே விஜி…”

“ஆமாடா. நடிப்புககே ஒரு பல்கலைக்கழகம் மாதிரி. அவருக்கான மரியாதையை இப்படிக் காட்றது நமக்குத் தான் தலைக் குனிவு. ஆமா. அவர் மாதிரியே நின்னு,

“உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தினாலும் தொடமாட்டேன்”னு என்னைப் பாத்துப் பாடுவியே. இப்ப எப்படிடா சுந்தர்…”

“பசிக்குது விஜி” என சுந்தர் பேச்சை திசை திருப்பினான்.

சரவணபவனில் மதிய உணவு முடித்தனர்.

“அப்றம் எங்கே..ஏதாவது சினிமாக்கா…”

“ச்சே. சினிமால்லாம் சுத்த வேஸ்டடுடா..”

“இத நீ சொலறே. அப்ப என்னடான்னா சித்ரா தியேட்டர்லே ஏதோ பழையபடம் ஓடுது. போயிப்பாப்போம்னு கூட்டிட்டுப் போயி, பாத்தாதேவதாஸ் படம். பாத்தே ஆகணும்னு முரண்டு பிடிச்சே. நாகேஸ்வரராவையும், சாவித்ரியையும் மாஞ்சி மாஞ்சிப் பாத்துக் கண்ணீர் விட்டோமேநினைவிருக்கா…”

“எல்லாம் மாயை தானா. பேதை எண்ணம் யாவும் வீணான்னு நான் பாட, நீ உலகே மாயம், வாழ்வே மாயம்னு சோகமாப் பாடினியே…”

“ஆமா விஜி. எல்லாமே மாயமா, மாயையாப் போச்சில்லே…”

“சரி. சரி. சுந்தர் மூட் அவுட் ஆகாதே. வா மவுண்ட்ரோடு ஹிக்கின்பாதம்ஸ் போவோம். உனக்குப் பிடிச்ச புத்தகமா வாங்கித் தாரேன். எவ்வளவு வேணுமோ வாங்கிக்க…”

ஹிக்கின்பாதம்ஸில் இருந்தனர்.

ராபின் ஷர்மாவின் ஹூவில் க்ரை வென் யு டை என்ற புத்தகம் கேட்டான். விஜி அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள்.

இறையன்பு எழுதிய சில புத்தகங்கள், நாஞ்சில் நாடனின் சூடிய பூ சூடற்க, இப்படி மானாவாரியா இருபது புத்தகங்கள் மேல் எடுத்துவிட்டான்.

“மை காட்.எப்படிடா கொண்டு போவே…”

“கொரியர்லே அனுப்பச் சொல்லிடலாம்…”

பணம் செலுத்திவிட்டு விவரம் சொல்லிவிட்டு வெளியே வந்தனர்.

“இப்ப நேரே பார்த்த சாரதி கோவில் போறோம். நூத்தி எட்டிலே ஒண்ணு திவ்யதேசம். பெருமாள் கம்பீரமா முறுக்கு மீசையிலேருப்பார். பார்த்தசாரதியாய் முகமண்டலத்தில் பாரதப் போரில் அர்ச்சுனனுக்காகப் பட்ட அம்புத் தழும்புகள். முன்னாடியே நாம சேந்து பாத்ததுதான். இப்பவும் இதெல்லாம் பாக்க கொடுத்துவைக்கணும்டா சுந்தர்…”

“நாம தான்…” சுந்தர் இழுக்க,

“கொடுத்து வைக்கலேன்னு சொல்றியா. பாஸ்ட் இஸ் பாஸ்ட். இப்ப நிகழ் காலத்துக்கு வா. இந்த்க் கணம் இருத்தலோடு வாழு. ஒரு ஜென் நிலையில் எல்லாம் நல்லதுக்கே…வா…”

பார்த்தசாரதி கோவிலை சந்நிதி விடாமல் தரிசித்தனர்.

அடுத்து, பாரதியார் நினைவு இல்லம்.

பாரதி சிலை முன்பு ஒரு செல்பி எடுத்துக் கொண்டு ஒரு நிமிடம் நிற்க, சுந்தர் ‘தேடிச் சோறு நிதம் தின்று..” என்ற பாரதி பாடலை கம்பீரமா நின்று பாடினான். சூழல் மெய்மறக்க வைத்தது.

” அடுத்து……”

“உன் பேவரைட் ரத்னா கபே. அந்த இரண்டு இட்லி, சாம்பார் தான்” விஜி சிரித்து விட்டாள்.

பார்க்க அழகாக இருந்தது.

அங்கிருந்து நடந்தே வந்தனர் ரத்னா கபேக்கு.

அந்த ஹோட்டலின் தோற்றம் மாறியிருந்தாலும், பழமையின் வாசம் மாறாதிருந்தது.

ஒரு மூலையில் இருவரும் அமர்ந்தனர்.

“ஆளுக்கு ஒரு ப்ளேட் இட்லி…..ரெண்டு மக் சாம்பார்…”

சுந்தர் ஆர்டர் பண்ண, விஜி சிரித்து விட்டாள்..

சர்வரோ ஒரு மாதிரியாய்ப் பார்த்தபடி சென்றார்.

மேசையில் இட்லியும் சாம்பாரும் வைத்தபடி சர்வர் நிற்க, எதுனா வேணும்னா கூப்பிட்றேன்பா எனச் சுந்தர் சொன்னதும் நகர்ந்தார்.

“விஜி, இந்த இட்லி நீன்னா. நான் சாம்பார். இட்லிக்கு இன்னும் சாம்பார் வேணும் வேணும்னே இருக்கும் இல்லே…”

சுந்தர் சொல்ல, விஜியின் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

சாப்பிட இயலாமல் தவித்தாள்.

“சுந்தர்…ப்ளீஸ்…ப்ளீஸ்…சும்மாச் சாப்பிடேன்…”

சுந்தரை நெருங்கி வந்த விஜி, அவன் இடது கையை மெதுவாகப் பற்றினாள்.

இதற்கு மேல் தாளாது சுந்தர் தன் வயதையும் மீறி, பொது இடம் என்பதையும் பொருட்படுத்தாமல், விஜியின் உதட்டில் அழுந்த முத்தமிட்டு விலகி அமர்ந்தான். யார் கண்ணிலும் படவில்லை.

“இந்த ஜென்மத்துக்கு இது போதும்டா சுந்தர். இதுக்குத் தான் இவ்வளவு வருடம் காத்திருந்தேனோ என்னவோ. இனிமே உன்னைப் பாக்கலேன்னாலும் பரவால்லே. அந்த மேன்சன்லே நான் கொடுத்தது, இன்னிக்குத் திருப்தியாத் திரும்பக்கொடுத்திட்டே. இட்லியும், சாம்பாருமாத்தான். இன்னும் வேணும்னா இந்த நினைவே என்னிக்கும் இனிக்கும்டா…சுந்தர். பை டா. நான் வர்றேன் சுந்தர்…”

விஜி செல்வதையே கண் சிமிட்டாது பார்த்துக்கொண்டிருந்தான் சுந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *