இப்படித்தான் மலர்கின்றன ஊதாப் பூக்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 13,685 
 

“மாப்ளெ சீக்கிரம் எழுந்திரிடா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் இயர் அட்மிஷன், நிறைய கலருங்க வரும் எல்லாருக்கும் நாமதான் ஆரத்தி எடுக்கணும்”, எழுப்பினான் சேகர், புரண்டு படுத்த கவிதாஞ்சனுக்கு இவற்றில் அவ்வளவாக ஆர்வம் இல்லை, “நல்ல கனவைக் கலைச்சுட்டியே…, போடா…”, மறுபடியும் போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டான் கவி.

கல்லூரி வளாகம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. சில மாணவர்கள் முதலாண்டு மாணவர்களை, வெற்றுத் தரையில் கொடியேற்றச் சொல்லியும், இரயில் ஓட்டச் சொல்லியும், புற்தரையில் நீச்சல் அடிக்கச் சொல்லியும் ராகிங் என்ற பெயரில் விளையாடிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சுடிதார்களையும், தாவணிகளையும் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். இது கல்லூரி ஆரம்ப நாட்களின் கோலாகலம்.

அன்றைய தினம் நண்பர்கள் குழு எதிரே வந்த புதுமுகங்களைக் கமெண்ட் அடித்துக் கொண்டே வகுப்பறைக்குச் சென்றனர், நூலகத்திலிருந்து வெளியே வந்த சேலைகளையும், தாவணிகளையும் சுட்டிக்காட்டிக் கவிதாஞ்சனிடம் ஒவ்வொருவரின் பெயரும் வகுப்பும் சொல்லிக்கொண்டிருந்தான் சேகர், “… அந்தப் பொண்ணு பேரு வந்தனா, B.A. தமிழ், பக்கத்திலிருந்தாளே அவதான் லேகா…”, லேகாவின் அழகு யாரையுமே உடன் மீண்டும் பார்க்கத் தூண்டும் அழகு, அவளைக் காணும் காதல் வயப்பட்டவர்களுக்கு பிரம்மனின் கற்பனைக்கு எல்லையே இல்லை என்று கூட நினைக்கத் தூண்டும். அவளைக் கண்டது முதல் கவிக்கு மனம் எதோ பாரமாக இருப்பது போல் தோன்றியது. அவள் அழகை அவளிடமே பாராட்ட வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

இன்று காலையிலிருந்தே கவியின் மனதில் எதோ ஒரு உறுத்தல், காரணம் காலையில் லேகாவை ஒருவன் பைக்கில் கொண்டுவந்து இறக்கி விட்டுவிட்டுச் சென்றான். இந்த நிகழ்ச்சி அவன் மனதை ஏன் சஞ்சலப் படுத்த வேண்டும்?

காலை வகுப்புகள் நிறைவு பெற்று மதிய உணவு வேளை, மாணவர்கள் உணவுக் கூடம் செல்வதும், சிலர் வீட்டிற்குச் செல்வதுமாக கல்லூரி வெளி வளாகம் கலகலப்பாக இருந்தது, கவியும் சேகரும் விடுதி மாணவர்கள் தானே, உணவுக் கூடம் விரைந்தனர். உணவைப் பெற்றுக்கொண்டு இருக்கை தேடி நடந்து வருகையில் அருகில் இருவர் பேசிக் கொள்வது தற்செயலாகக் கவியின் காதுகளில் விழுந்தது, “மச்சான் காலேஜ் டாப் ஃபிகர் அல்ரெடி கமிட்டேட் டா, பார்ட்டி பேரு சிவாவாம்”, “அட போடா எவ்வளவோ வேலை இருக்கு… இதைப்போய் மெனக்கட்டு வருத்தப்பட்டு சொல்லுற, ரெகார்ட் சப்மிட் பண்ணிட்டியா…”. உரையாடும் வாலிபர்களைக் கடந்து இருக்கையில் உணவுடன் அமர்ந்த கவியின் முகம் சற்று வித்தியாசமாக இருப்பது கண்டு சேகர், “என்னடா திடீர்னு டௌன் ஆயிட்ட மாதிரி இருக்கு…” செயற்கையாகப் புன்னகையை வரவழைத்த கவி “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல…” என்று சமாளித்தான்.

விடுதியின் எதிரே உள்ள பேருந்து நிலையத்தில் லேகாவும், வந்தனாவும் நிற்பதைக் கவி கவனித்தான், பேருந்தில் இருவரும் கூட்ட நெரிசலில் சிரமப்பட்டு ஏறுவதையும் கவனித்தான். அடுத்தநாள் எப்படியும் லேகாவைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் அவனிருந்தான்.

மதிய உணவு நிறைவேறியதும் முதலாண்டு மாணவர்களைக் கிண்டல் செய்யச் சீனியர்கள் அவர்களின் வகுப்பறைக்குள் நுழைவது ஆரம்ப நாட்களின் கொண்டாட்டம். என்றும் இல்லாமல் புதிதாக கவி தன் கூட்டாளிகளிடம், “டேய் நானும் உங்ககூட ஃபர்ஸ்ட் இயர் சாட்டிங் வரேண்டா…”, ஆச்சரியமாய்ப் பார்த்தனர் சகாக்கள், “நல்ல முன்னேற்றம் கவி…, லேட் அஸ் ஸ்டார்ட்… ” எல்லோரும் முதலாம் ஆண்டு வகுப்பறைகள் நோக்கி மாடி ஏறினர்… கூட்டத்தோடு கலந்த கவி … வந்தனாவின் வகுப்பறை நோக்கி நகர்ந்தான்… இதயத் துடிப்பு சற்று அதிகமாகவே லப் டப்பியது… இது புதுசுதான் கவிக்கு… கொஞ்சம் பயம்… யாரும் ஏதேனும் சொல்வார்களோ… சே சே எத்தனையோ பேர் நடமாடிப் பேசிக் களிக்கும் இடத்தில் தன்னை மட்டும் யார் குறை சொல்லப்போகிறார்கள்… தன்னைத் தேற்றிக் கொண்டு வகுப்பறைக்குள் நுழைந்து… விழிகளை அங்கும் இங்கும் அலையவிட்டு… அதோ.. அங்கே தனியாக அமர்ந்திருக்கிறாள் வந்தனா…. தயங்கித் தயங்கி மெல்ல அவளிருக்கை அருகே சென்றான்… அந்த வகுப்பறையில் பல மாணவர்கள் அங்கும் இங்கும் கூடிப் பேசிக் கேலி செய்து மகிழ்ந்திருக்கும் தருணத்தில் வந்தனா மட்டும் தனியாகப் புத்தகத்தில் விழிகளைப் படரவிட்டுக்கொண்டு அமர்ந்திருப்பது கவிக்கு சற்று சாதகமாகவே இருந்தது… லேகாவைப் பற்றி பேசித் தெரிந்துகொள்ள இதுதான் சரியான தருணம்… இன்னும் சற்று முன்னேறினான் கவி… அருகில் யாரோ வருவது கண்டு புத்தகத்தை புரட்டிய பக்கத்தோடு மேசையில் கவிழ்த்து வைத்து தலையை நிமிர்த்தினாள் வந்தனா, மெல்லிய புன்னகையோடும், நேசம் கலந்த பார்வையோடும் “ஹை…”

“ஹெலோ…, என் பேரு கவி…. கவிதாஞ்சன்…. ஃபைனல் இயர் தமிழ்…,”

“கேள்விப் பட்டிருக்கேன்…, நல்லாக் கவிதை எழுதி… பரிசெல்லாம் வாங்குவீங்கன்னு… ப்ரோபெஸர் சரவணன் எங்க கிளாஸ்ல இலக்கியம் நடத்தும் பொழுது அப்பப்ப உங்க வரிகள் எடுத்துக்காட்டா சொல்லுவார்… கிரேட்…”

“நன்றி…”

“இப்போ என்ன பண்றீங்க… அதாவது புதுசா எதாவது எழுதறீங்களான்னு கேட்டேன்..”

“ம்…. அப்பப்ப எதாவது மனசில படும் ஆழமான சம்பவங்களை மைய்யப்படுத்தி கொஞ்சம் ஜோடனை செய்து வாசிக்க வசீகரமா இருக்கணும் இல்லையா… அப்படி எழுதுவது உண்டு… ஆனா இப்போ…. சொல்லும்படியான எதுவும் ஆரம்பிக்கல… ஆரம்பிக்கும்போது கண்டிப்பா உங்ககிட்ட சொல்றேன்… நீங்கதான் என் வாசகி ஆயிட்டீங்களே..”

சற்றே புன்னகை கூட்டிய வனிதா, ” நான் அப்படி சொல்லலையே…”

“மன்னிக்கணும்… கொஞ்சம் அவசர பட்டுட்டேன்…”

“அடடா… எதுக்கு மன்னிப்பு… நானும் விளையாட்டாத்தான் சொன்னேன்….”

“நன்றி…”

“ஆனா நீங்க ரொம்ப கூச்ச சுபாவம் உடையவர்ன்னு சரவணன் சார் சொல்லுவார்…, கிளாஸ் முடிஞ்சா கான்டீன் இல்லன்னா ஹாஸ்டல்ன்னு இருப்பீங்க வெளில ரொம்ப பாக்க முடியாதுன்னு சொல்லுவார்…”

“அ…ஆமா…. ஆனா இன்னிக்கு எதோ ஒரு வேகம்… அதான் வந்து உங்கள பாத்து பேசலாம்னு…”

“ஓ… என்னைப் பாக்கத்தான் வந்தீங்களா… என்ன உங்களுக்கு முன்னாடியே தெரியுமா… சொல்லுங்க… என்ன பேசணும்…”

“…இல்ல ஒண்ணு ரெண்டு தடவ நீங்க கிளாஸ் விட்டுப் போகும்போது…, லைப்ரரி கிராஸ் பண்ணும்போது…. பஸ்ஸ்டாண்ட்லன்னு… பாத்திருக்கேன்… உங்களையும் உங்ககூட லேகாவையும்… அவ்வளவுதான் மத்தபடி எதுவும் தெரியாது…”

சிறு புன்னகையுடன் வனிதா, “… பரவால்ல… கவிஞர் காரணமில்லாம வந்திருக்கமாட்டீங்க… சொல்லுங்க…”

“… வந்து…. லேகா உங்க பிரெண்ட் தானே…”

“ஆமா…”

“… அவுங்க இங்க சேர்ரதுக்கு முன்னாடி எங்க படிச்சாங்க….?”

வந்தனா எதிர்பாராத கேள்வி. இருந்தும் கவியின் தேடல் என்ன என்று அவளால் ஓரளவு யூகிக்க முடிந்தது, “கவி… இத நீங்க லேகாவிடமே கேட்கலாமே….”

“..வந்து…. மன்னிக்கணும்… உங்ககிட்டையே இப்போதான் முதன் முறையாய் பேசுறேன்…. பொதுவா பெண்கள்கிட்ட என்ன பேசுறது எப்படிப் பேசுறதுன்னு எனக்குப் பழக்கமில்லை…. தப்பா கேட்டிருந்தா மன்னிச்சுக்குங்க… நான் கிளம்புறேன்…”

“…ஹெலோ… ஹெலோ…. நில்லுங்க கவி…. நீங்க எதுவும் தப்பா கேட்கல… முன் பின் அனுபவமில்லாமல் நீங்க பேச வர்றது என்னன்னு ஓரளவு புரிஞ்சுக்க முடியுது… சொல்லுங்க… நீங்க லேகாவைப் பத்தி தெரிஞ்சுக்கணுமா…?”

பதட்ட நிலையில் மௌனமானான் கவி, “… ”

“… பாருங்க கவி, நீங்க ஒரு சிறந்த படைப்பாளி, சரவணன் சார் முதல் தடவை சொல்லும்போதே எனக்கு உங்ககிட்ட என்னை அறிமுகப் படுத்திக்கணும்ன்னு இருந்துச்சு… இப்படி ஒருத்தர்கிட்ட தன்னை அறிமுகப் படுத்திக்கிறதுக்குக் காரணம் அவங்கமேல உள்ள ஒருவித தனித்தன்மைகொண்ட ஈர்ப்பு… அப்படித்தான் நான் பாக்குறேன்… எனக்கு உங்க படைப்புகளின் மேல் ஈர்ப்பு… உங்களை லேகாவின் தனித்தன்மை எதுவோ ஈர்த்திருக்க வேண்டும்…”

“இல்ல… லேகாவிற்கு சிவான்னு ஒருத்தரோட திருமண நிச்சயம் ஆகியிருப்பதா….”

“கவி… லேகா எனக்கு ஒரு கல்லூரித் தோழி… ஜஸ்ட் ஃபிரண்ட்… அவளோட பர்சனல் பகிர்ந்துக்கற அளவுக்கு இன்னும் நெருங்கிப் பழகல.. மேலும் மத்தவுங்க பர்சனல் தெரிஞ்சுக்கறது நாகரிகம் இல்ல… ” தன் தலையைக் குனிந்தவள் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை நிமிர்த்தினாள்… படித்துக்கொண்டிருந்த பக்கம் சரிதானா என்று பக்கத்தின் எண்ணைச் சரிபார்த்தாள் விட்ட இடத்தில் இருந்து படிக்கத் தொடர்வதற்கு…

பட்….டென அறைந்ததுபோல் இருந்தது கவிக்கு. அங்கே இன்னும் சற்று நிற்பதற்குக்கூட அவன் மனது அனுமதிக்க வில்லை.

“நான் கிளம்புறேன் வந்தனா…. நான் வந்து பேசினதை மறந்துடுங்க…. மன்னிக்கணும்…” அவனால் இன்னும் வந்தனாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க இயலவில்லை.

ஒரு எதார்த்த மனிதனின் இயல்பு புரிந்தவள் வந்தனா. கவியின் தடுமாற்ற நிலையை உணர்ந்தாள். பொதுவாக ஆண்களை விடவும் பெண்கள் வயதில் இளமையாக இருந்தாலும் மனதளவில் முதிர்ந்த தெளிவு பெற்றவர்களாகவே இருப்பது உண்டு. அந்த வகையில் வந்தனாவினால் கவியின் மழலைத்தனத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

குனிந்த தலையை நிமிர்த்தாமல் புத்தகத்தில் வைத்த கண்களை எடுக்காமல் வந்தனா தொடர்ந்தாள் “கவிஞரே… நீங்க எதுவும் தப்புப் பண்ணல… நம்மளோட முதல் சந்திப்பு இது…. உங்க படைப்புகளை இன்னும் இன்னும் நாம பேச வேண்டியிருக்கு… நீங்க இன்னும் இன்னும் சாதனைகள் படைக்க வேண்டியதிருக்கு…. ” அவள் சொல்லிக்கொண்டே தொடர…. கவி சின்னப்ப புன்னகை ஒன்றை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு…

“…என் நிலையைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு மகிழ்ச்சி…. நன்றி…. ” என்று கூறி தன் கால்ச்சட்டைப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை உருவி நெற்றி முத்துக்களை ஒற்றி மடித்து மீண்டும் கால்ச்சட்டைப் பைக்குள் நுழைத்துக்கொண்டு வகுப்பறை விட்டு வெளியேறினான்… மீண்டும் தன்னை யாரும் பார்த்துவிடவில்லையே… என்று ஒருவித அச்சம்….. விடுவிடுவென தன் வகுப்பறை நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்தான்…. இன்னும் இதயத்தின் லப் டப் வேகத்தடைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் பறக்கும் மோட்டார்வாகனமாகப் பறந்துகொண்டிருந்தது…..

பாடங்களைக் கவனிக்க இயலாமல் எங்கேயோ கத்தும் ஒரு பூனைக்குட்டி அவனது சிந்தையைக் களவாடியது… எந்த மரத்திலிருந்து அந்த மைனா தன் துணையை அழைக்கிறது என்று அவனால் சரியாகக் கணிக்க முடிந்தது… முட்டிக்கொண்ட மேகங்கள் முத்துதிர்க்கும் சத்தம் அவனது மூளைக் கோடுகளில் வயலின் வாசித்ததையும் அவனால் உணரமுடிந்தது ஆனால் ஆசிரியர்கள் வந்துபோனதைத் தவிற பாடக்குறிப்புகளை அவனால் கவனிக்க இயலவில்லை. வகுப்புகள் நிறைவடைந்து விடுதி திரும்பிய கவிதாஞ்சன் ஒரு புது உலகத்தைப் பார்ப்பது போல ஒவ்வொன்றையும் பார்த்தான்…. அவனது விடுதி அறை, பொருட்கள், கண்ணாடி, தலைவாரும் சீப்பு, வெளி வராண்டா, மரங்கள், செடிகள், புல்வெளி, மண்தரைகூட இதுவரை மங்கலாகத் தெரிந்து இப்போது பிரகாசமாகத் தோன்றுவதுபோல் ஒரு பிரமை…. இது ஏன் என்று அவன் சற்று கண்ணை மூடிப் பார்த்த பொது அங்கே வந்தனா அவனது இமைத்திரைகளை ஆக்ரமித்து நின்றாள்…!

சன்னல் வெளியில் நிலவு கவியை அழைத்தது… இரவு உறக்கம் தொலைந்தது… அந்த இரவில் அவனது கவிதைக்குள் மலர்ந்து நின்றவள் வனிதா….

கவிதாஞ்சனை வாட்டிய நிலா வனிதாவின் கனவுகளையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்க மறக்கவில்லை…

அடுத்த முறை வனிதாவிடம் தன் வளரும் படைப்பினைக் கவி பேசப்போவதையும்… அந்தப் படைப்பின் கரு வனிதா எனச் சொல்லப்போவதையும்… வனிதாவின் முகம் நாணக் கவி எழுதப்போவதையும்… அன்று அந்த சன்னல் வெளி நிலா அறிந்துவைத்திருந்தது…!

– Aug-19-1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *