கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் சரித்திரக் கதை  
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 42,314 
 
 

அன்று சோழர் தலைநகரமான புகார் விழாக்கோலம் பூண்டிருந்தது. கற்பக கோட்டத்தில் வெள்ளை யானை கொடி ஏற்றப்பட்டு, அமரர் கோன் இந்திரனுக்காக எடுக்கப்பட்ட விழா தொடங்கியது. விழாவின் போது சமயக்கணக்கர்களும் , அமயக் கணக்கர்களும் , பல்வேறு மொழி பேசும் மக்களும், ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் புகாரில் ஒருங்கே நிறைந்திருந்தனர்.

வச்சிர கோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த போர் முரசு, பட்டாடை அணிந்த யானையின் பிடரியின் மேல் ஏற்றப்பட்டது. முதுகுடிப் பிறந்த முரசு அறைவோன் வீதி வீதியாகச் சென்று மன்னனின் விழா கோள் செய்தியை அறிவித்தான். வீதிகளில் தோரண மாலைகள் கட்டப்பட்டன. இல்லங்கள் தோறும் தலை வாயில்களைக் காய்த்துத் தொங்கும் கமுகும், வாழையும், கரும்பும் ,பூக்கள் நிறைந்த வல்லிக் கொடியும் அலங்கரித்தன. மகளிர், தங்கள் இல்லங்களில் விழாத் தலைவன் ஆயிரம் கண்ணோனுக்குப் பூரண கும்பம் வைத்து, பாலிகையோடு வழிபாடு செய்தனர்.

முக்கண்ணோன் கோயில் முதல் பல்வேறு கடவுளர்களின் கோயில்களில் புதுப்பந்தல்கள் போடப்பட்டு , புது மணல்கள் பரப்பப்பட்டன; கொடிகள் ஏற்றப்பட்டன ; பல்வேறு சமயச் சான்றோர் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையுடன் கூடினர். அவர்கள் விழாவின் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் நடக்கும் பட்டிமன்றங்களில் அதன் பாங்கறிந்து ஏறி, தன் கருத்துக்களை முன்வைத்து வாதாடி மக்களுக்கு எழுச்சியை ஊட்டினர் .விழா நாட்களில் மக்கள் தேவர்களைப் போன்று உடை அணிந்து நகரில் உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாக இனித்தது.

ஆடலும் பாடலும் அழகும் நிறைந்த மாமலர் நெடுங்கண் மாதவி, காதலன் கோவலன் இறப்புக்குப் பின் ஐவகைச் சீலத்து அமைதி காட்டிய அறவண அடிகளின் அடிமிசை வீழ்ந்து பௌத்தத் துறவி ஆனாள். முற்றா இளமுலை மகள் மணிமேகலையையும் தன்னோடு துறவியாகினாள்.

மாதவி, மணிமேகலையைத் தன் மகள் என்று கூற ஒரு போதும் விரும்பியதில்லை. தன் கணவன் கோவலன் ‘கள்வன்’ என அநியாயமாகப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு இறந்தான் என்பதை அறிந்து, பாண்டிய மன்னிடம் நீதி கேட்டுச் சென்று , அவனை வீழ்த்தி, மதுரையை எரித்து, உயிரோடு கணவன் சென்ற இடத்திற்குத் தேவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட ,கற்புக்கடம் பூண்ட கண்ணகியின் மகளாகவே அவளைப் பாவித்தாள். அதனால், மாதவி தன் குலத்தொழிலை வெறுத்தாள். கண்ணகியின் மகளாக மணிமேகலை வாழ்க்கையில் சிறப்புற வேண்டும் என்று உறுதி பூண்டாள்.

அழகு மகள் மணிமேகலையோ உலகம் அறியாத இளம்பெண்; கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எண்ணும் பெதும்பை பருவத்தள்; அப்பருவத்திற்கான ஆசையை அறியாதவள் ;அதே சமயம் துறவறத்தின் தாத்பரியத்தையும் அளவிட இயலாதவள். தன் தாய் காட்டிய தவ நெறியில் செல்லத் துணிந்தவள்.

இந்திரா விழாவின் போது நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் , மாதவி தன் மகள் மணிமேகலை யுடன் கலந்து கொண்டு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவாள் எனப் புகார் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க, அவளோ மகளுடன் துறவறம் பூண்டாள் என்ற செய்தியை அறிகின்றனர் . அதனால் கோபமுற்ற ஊர்மக்கள் மாதவியைப் பழி தூற்றுகின்றனர். இதை அறிந்த மாதவியின் தாய் சித்திராபதி, செய்யும் வழிவகை அழியாது தவிர்க்கின்றாள். பின் மாதவியின் தோழி வயந்தமாலையை அழைத்து, மாதவியையும் பேத்தி மணிமேகலையையும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைத்து வருமாறு ஆணையிட்டாள். வயந்தமாலையும் , தன் தோழி மாதவியைக் காண , அவள் தங்கியிருந்த மண்டபத்திற்குச் சென்றாள். அங்கு ஆடிய சாயல் கொண்ட மாதவியின் வாடிய மேனி கண்டு உள்ளம் வருந்துகிறாள். அவளின் தவக் கோலத்தைக் கண்டு அதிர்ந்த வயந்தமாலை, கண்ணீர் மல்க அவளைத் தழுவிக்கொண்டாள் தோழியை வரவேற்று உபசரித்த மாதவி, அருகே தன் தோழி சுதமதியுடன் மலர் தொடுத்துக் கொண்டிருந்த மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்தாள் . அவளும் தவக்கோலத்தில் இருந்ததைக் கண்டு அப்படியே உறைந்து நின்றாள் வயந்தமாலை; தான் வந்தக் காரியத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டாள் ; இருந்தும் வேறு வழி அறியாது, மாதவியிடம் அவள் தாயின் விருப்பத்தைத் தெரிவித்தாள்.

சிறிது நேரம் அமைதி காத்தாள் மாதவி. பின் வயந்தமாலையிடம், “என் பிரிய சகியே! . காதலன் கோவலனைப் பிரிந்த நான், அவன் இறப்புக்குப் பின் துறவறம் பூண்டேன். மணிமேகலையை என் மகள் என்று கூறுவதை விட , அந்தப் பொற்புடைத் தெய்வமான கண்ணகி நல்லாளின் மகள் என்று கூறுவதே சாலப் பொருந்தும். அதனால் இவள் மறந்தும் தீத்தொழில் படாள். இதைச் சென்று, நீ என் தாயிடம் சொல்” என்றாள். வயந்தமாலையும் வேறுவழியின்றி வருத்தமுடன் மாதவியிடம் விடைபெற்று, அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

தன் தாய், வயந்தமாலையிடம் பேசிய பேச்சினைச் செவிமடுத்த மணிமேகலை ,தன் தந்தையும் அவன் பொருட்டு கண்ணகியும் மாதவியும் அனுபவித்த துன்பங்களை அறிந்து, கண்ணில் நீர் மல்க கலங்கி நின்றாள். அவள் உதிர்த்த கண்ணீர் , தொடுக்கும் மலர் மாலையில் மீது பட்டுத் தெறித்தது. அதனைக் கண்ட மாதவி, “இம்மாலை உன் கண்ணீரால் தூய்மை இழந்தது. எனவே இறைவனுக்குச் சாத்துவதற்கு இம்மாலை பயன்படாது. வேறு மாலை கட்டுவதற்காக நீ மலர்களைப் பறித்து வா ” என்று மணிமேகலையிடம் கூறுகிறாள். உடன் இருந்த தோழி சுதமதி மேகலையின் கண்ணீர் கண்டு வருந்தினாள். அவள் தனியே மலர் கொய்ய செல்வதற்கு அஞ்சினாள். மணிமேகலை துறவு பூண்டாலும் , அவள் அழகு சிறிதும் குறையவில்லை. அவளைப் பார்ப்பவர்கள் உறுதியாக அவளை விட்டு அகன்று செல்ல மாட்டார்கள். எனவே அவள் சென்று மாதவியிடம், “தாயே, உன் மகளோடு மலர் பறிக்க யானும் உடன் செல்கிறேன் ” என்று கூறிவிட்டு சுதமதி, தேர் ஓடும் அகன்ற வீதியில் தோழியுடன் சென்றாள்.

மணிமேகலையைத் தவக் கோலத்தில் பார்த்த ஊர்மக்கள் அவளைச் சுற்றி நின்று,” இத்தனை அழகான பெண்ணைத் தவக்கோலம் புனைய வைத்த இவள் தாய் மிகக் கொடியவள்; தாய் என்று சொல்வதற்கே அருகதையற்றவள்” என்று கூறிப் புலம்புகின்றனர். மணிமேகலை எதுவும் செய்ய இயலாது திகைத்து நிற்க , உடனே சுதமதி சுதாரித்துக்கொண்டு, தன் தோழியின் கரம் பிடித்து இழுத்து , அருகிலிருக்கும் உவவனத்தில் மலர் கொய்வதற்காகப் புகுந்தாள்.

தோழியர் இருவரும் உவவனத்தின் அழகு கண்டு அயர்ந்து நின்றனர். மயிலும் குயிலும் மணிச்சிரலும் அன்னமும் கம்புட் சேவலும் மந்தியும் செங்கயலும் வண்டும் தாமரையும் தாழையும் குருத்தும் கொன்றையும் மஞ்சாடியும் வகுளமும் புன்னையும் செம்முல்லைக் கொடியும் செண்பகமும் என்று விலங்குகளும் செடிகொடிகளும் நிறைந்த பொழிலும் பொய்கையும் கண்டு மகிழ்ந்து நின்றனர்.

அப்பொழுது புகார் நகர இளவரசன் உதயகுமரன் நகர் உலா வந்து கொண்டிருந்தான். அவன் வரும் வழியில் கால வேகம் என்னும் பெயருள்ள களிற்று யானை மதம் பிடித்து ஓடி வந்தது. அருகிலுள்ள மக்கள் அதனை அடக்க இயலாமல் ஆரவாரித்துக் கூக்குரலிட்டனர் . உதயகுமரன் தன் வீரத்தால் அதனை அடக்கி, பின் தன் தேரில் ஏறி, அதன் கொடிஞ்சி பற்றி நின்று, மக்களுக்குக் கம்பீரமாகக் காட்சி தந்தான். அவனைப் பார்த்து மகிழ்ந்த மக்கள் அவன் முருகனா ?அல்லது சோழ இளவரசனா ? என்று அறியாது திகைத்து நிற்கின்றனர்.

அப்பொழுது, எட்டி குமரன் என்ற இளைஞன் ஒருவன், உதயகுமரனை வணங்கி, அவன் உள்ளம் கவர்ந்த மணிமேகலை உவவனம் காண, தன் தோழியுடன் இங்கு வந்துள்ளாள் என்ற செய்தியைக் கூறுகின்றான். அதனைக் கேட்ட உதயகுமரன் மனது பெருமகிழ்ச்சி கொள்கின்றது. தான் பார்த்து மகிழ மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த மணிமேகலையை எதிர்பாராது இங்கு சந்திக்க நேரிடும் என்று அவன் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. “பிரிய நண்பனே! என் உள்ளம் குளிரும்படி நற்செய்தி சொன்னாய். என் உள்ளம் கவர் செல்வியைக் கண்டு, என் நெடுந்தேரில் அவளை யாவரும் காண ஏற்றி வருவேன் . இது உறுதி” என்று அவனிடத்துக் கூறிவிட்டு, தேரோட்டியிடம் உவவனம் நோக்கி தேரைச் செலுத்தும்படிச் சொன்னான்.

உவவனத்தில் தோழி மேகலைக்கு இயற்கையின் பேரழகை காட்டிக் கொண்டிருந்த சுதமதியின் செவிகளில் உதயகுமரனின் தேரொலி கேட்டது. அவள் திடுக்கிட்டாள். தன் தோழியின் கரங்களைப் பிடித்து இழுத்து, அருகிலுள்ள பளிக்கறை மண்டபத்தில் சேர்த்து, அவளை மறைந்திருக்கும்படி. வேண்டினாள். பின் அவளிடம் உள் தாளிட்டு இருக்கும்படிக் கூறினாள் . மணிமேகலையும் உதயகுமரன் வரவு அறிந்து மனதுள் வருந்தினாள். தன்பாட்டி சித்திராபதியின் தூண்டுதலினால், சோழ நாட்டு இளவரசன் உதயகுமரன் தன்மீது பெருவிருப்பம் கொண்டு தன்னை அடைய ஆவல் கொண்டுள்ளான் என்பதை வயந்தமாலை தன் தாய் மாதவியிடம் உரைத்ததை ஒரு முறை அவள் கேட்டுள்ளாள். அதனால் மணிமேகலையும், உதயகுமரன் தன்மீது வைத்த தீரா மோகத்தை அறிந்திருந்தாள். அதை நினைத்து அவள் உள்ளம் நடுக்குற்றது. சுகமதி பளிக்கறையின் வெளியே சற்று தள்ளி நின்றிருந்தாள்.

உவவனத்தின் வாயிலில், தேரை நிறுத்திவிட்டு உதயகுமரன் கடும் விரைவுடன் மலர்வனம் புகுந்து பொழிலுள் மணிமேகலையைத் தேடலுற்றான். பளிக்கறை வாயிலில் சுதமதி நிற்பதைக் கண்டு அவள் அருகில் வந்தான். “பெண்ணே! உன் உடன் வந்த அழகு தேவதை எங்கே?” என்று வினவினான். “மன்னன் குமரனே! துறவு பூண்ட ஒரு பெண்ணைத் தேடி வந்தது எப்படி உமக்குத் தகும் . அறிவும் சால்பும் அரசியல் வழக்கும் தெரிந்த தங்களுக்கு என் போன்ற வளையல்களை அணிந்த மகளிர் அறிவுரை கூற இயலுமா? என்று வினவினாள். ” இளவலே! இந்த உடம்பு முன் செய்த வினையால் உருவானது. புறந்தே இருக்கும் ஆடைகளைக் களைந்தால் புலால் நாற்றம் வீசுவது” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே, அதனைச் செவி மடுக்காத உதயகுமரன், உள்ளிருப்பவர்களை வெளிக்காட்டும் பளிக்கறை சுவர்களில் தன் கண்களை ஓடவிட்டான். அப்பொழுது இளங்கொடி மணிமேகலை பளிக்கறை சுவர்களின் உட் புறத்தே நிழலாகத் தோன்றினாள்.

பளிக்கறைக்குள் இருந்த மணிமேகலையும் தன்னைத் தேடி வந்திருக்கும் அரசிளங்குமரனைக் காண ஆவல் கொண்டாள் . மெதுவாக பளிக்கறை சுவருக்கு அருகில் வந்தாள். உதயகுமரனைப் பார்த்தவுடன் அவள் மனதில் ஒரு சிறு சலனம் ஏற்பட்டது. எத்தனையோ காலமாக அவனோடு வாழ்ந்தது போன்ற ஒர் உணர்வினையும் உந்துதலையும் பெற்ற மணிமேகலை, அப்படியே வைத்த கண் அகலாது வெளியில் நிழல் போல் தெரிந்த உதயகுமரனைப் பார்த்தாள். அவள் உள்ளத்தில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒருசேர துள்ளிக் குதித்தாடியது.

வெளியில் நின்ற உதயகுமரன் சுதமதியிடம், “நான் தேடி வந்த என் காதல் கண்மணி இவளா கூறுக ” என்று ஆவலுடன் வினவினான். சுதமதியோ, “வேந்தனே! நீயும் நின் கண்ணியும் வாழ்க ! இவள் ஊழ் தரு தவித்தள்; சாப சரத்தி ; காமம் கடந்த வாய்மையள். இவள் மீது நீ காமம் கொள்வதற்கு அர்த்தம் இல்லை” என்று அறிவுறுத்தி நின்றாள்.

“பெண்ணே ! வெள்ளம் பெருக்கெடுத்து வரும் பொழுது அதனை அணைகட்டித் தடுக்க இயலுமா ? பெருகி வரும் காமத்தை அடக்குகின்ற திறம் என்னிடத்தில் இல்லை” எனப் பதில் உரைத்த உதயகுமரன், பளிக்கறைக்குள் புகுவதற்கு முயற்சித்தான். அதன் உள்ளே புகும் வழியறியாது திகைத்து நின்ற அவன், சுதமதியைப் பார்த்து, ” உன் தோழி மணிமேகலை இப்பொழுது கிடைக்காவிட்டால் என்ன? நான் அவளை சித்திராபதியின் மூலம் அடைவேன். இது உறுதி” என்று கோபமாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

உதயகுமரன் அவ்விடத்தை விட்டுச் சென்றதை உள்ளிருந்து பார்த்த மணிமேகலை பளிக்கறை கதவினைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள். தன் தோழி சுதமதியினை ஆரத் தழுவிக் கொண்டு , “என் ஆருயிர் தோழியே! சோழ இளவல் உதயகுமரன் இவனா? இவனை கண்டு என் நெஞ்சம் ஏனோ நெகழ்ந்தது . ஏதோ ஒரு உணர்ச்சி உந்தித் தள்ளியது . அன்னாய்! இதுதான் காதலா? யான் அறியேன். இது காதல் ஆயின் இந்தக் கணமே , இந்தக் காதல் என் நெஞ்சை விட்டு அகலட்டும். நான் என் தாய் காட்டிய துறவற வழியில் உறுதியாக நிற்பேன். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறிய மணிமேகலையை அப்படியே அரவணைத்துக் கொண்ட சுதமதி கண்ணில் நீர் மல்க ” மேகலை! உன்னை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன். வா, முதலில் இவ்விடத்தை விட்டு உடனே அகலுவோம்”என்றாள். தோழியின் கைகோர்ந்து அவ்விடத்தை விட்டு அகன்ற மேகலையின் நடையில் மனவுறுதி தெரிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *