இருபது நாட்களாக யோசித்து இறுதியில் முடிவு செய்து இதை எழுதுகிறேன். மூன்று வாரங்களாக உன்னை சந்திப்பதைத் தவிர்த்து உன்னை இனியும் அலைய வைப்பது தகாது என்ற முடிவில்தான் இந்தக் கடிதத்தை… இல்லை.. பிரிவு மடலை உனக்கு எழுதுகிறேன்.
பிரிவு என்ற சொல்லை வாசிக்கும்போது உனக்குள் எவ்வளவு பெரிய எரிமலை வெடிக்கும் என்பது எனக்கு இப்போதே புரிகிறது. சில விஷயங்கள் கசப்பாக இருந்தாலும் மரிந்து குடிப்பதுபோல விழுங்கி விட வேண்டிய சூழ்நிலை வரும்போது மறுக்க முடியாமல் போய்விடுகிறது.
முதலில் நீ என்னை மன்னித்து விடு. நாம் கனவு கண்ட வாழ்க்கைக்கு இவ்வளவு எளிதில் முற்றுப்புள்ளி வைப்பேன் என்று எனக்கு ஒரு மாதம் முன்னால் வரக்கும் தெரியாமல் போனது.
நாம் வானத்தின் விளைம்பில் தொடுவானம் வரைக்கும் போய் வந்தோம். உனக்கு நினைவிர்ய்க்கிறதா? பீச்சில் பொழுது சாயும் முன் சந்தித்தால் தொடுவானில் அருகில் இருப்பதாய் கனவு கண்ட நாட்கள் என்னால் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாதவை.
அது நம் வாழ்க்கையில் ஒரு கனவு என்றால் கூட அதைத்தாண்டி நாம் அக்கரைக்கு ஒரு நாளும் போனதில்லை. ஆனால் இப்போது நான் தொடுவானத்தையும் தாண்டிப் போகிறேன். அதை எவ்வாறு உனக்குப் புரிய வைப்பது என்றுதான் புரியவிலை.
பூங்காக்களில் சந்திக்கும் போடு கண்ணதாசன் வரிகளை நினைவு படுத்துவாயே… உனக்கு நினைவிருக்கிறதா? “இந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும். நம் காதலில்ன் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்” என்று அன்று ஆமாம் என்று உன் வாசகங்களுக்கு தலையாட்டிய நான் நம் காதலும் கூட வசந்தம் தீர்ந்ததும் கசந்ததுபோல கருகிய மலாராய் மாறிப்போனதை உணர்ந்து எனக்குள் எரிந்து போகிறேன்.
காலையில் பூத்து மாலையில் வாடும் மலர்களைப் போல நம் காதலும் ஆகி விட்டதே என்று நினைக்கும் போது எனக்கும் கூட இந்தக் காதல் உணர்ச்சிமேலே கோபம்தான் வருகிறது. ஆனால் சில விஷயங்களை பிராக்டிக்கலாக முடிவு எடுக்க வேண்டியதிருப்பதான் இந்தப் பிரிவின் தருணம் நேரிட்டது.
நீ மோட்டார் மெக்கானிக்காக இருந்த போதும், காக்கி உடையில் ஆயில் திட்டுகளோடு உன்னைப் பார்க்கும் போதும், நீ ஒரு சாதரண ஆட்டோ காரேஜியில் வேலை செய்கிறவன் என்று தெரிந்த பிறகுக் கூட உன்னை விரட்டி விரட்டி காதலித்தவள் நான்.
இனியா நான் ஒரு சாதாரண மோட்டார் மெக்கானிக். நீ ஆபீஸிலே வேலை செய்பவள். கொஞ்சம் யோசித்துப் பார். உன்னோடு அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அழகாக சுத்தமாக உடுத்திக் கொண்டு ‘டை’ கட்டிக் கொண்டு வரும் சூழலில் வேலை செய்பவள் நீ என்று என்னை எத்தனை முறையோ கழற்றி விட நினைத்த போது கூட வேலை செய்வது நம் வயிற்றுக்காக. நீ மோட்டார் மெக்கானிக்காக இருந்தால் வேலை செய்யும் இடத்தில் மற்ற நேரங்கலில் அழகாக உடுத்திக் கொண்டு உலவும் இளைஞந்தானே. என உன்னை சமா தானப்படுத்திய இந்த இனியாதான் உன்னை விட்டுப் போகிறேன். மன்னித்து கொள்.
“சீ! சிகரெட் குடிக்கத் தெரியாதவன் எல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? என்று உன்னைச் சீட்டி விட்டு நீ புகைக்கும் போது உள்ளேயிருந்து வெளியே விடும் போது அந்தப் புகையின் சுகத்தைக் கொஞ்சம் அனுபவித்தவள் தான் நான். சே! நல்ல பிள்ளையாக இருந்த உன்னை ஒரு செயின் ஸ்மோக்கராக மாற்றியதற்கு நாந்தான் கரணம் என்று நினைக்கும்போது எங்கோ நெஞ்சில் ஒரு சிறு வலி தோன்றத்தான் செய்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் சிகரெட்டிற்கு உன்னை அடிமையாக்கியவள் மட்டுமல்லாமல் உன்னை அளவிற்கதிகமாய் செலவழிக்கப் பழக்கப் படுத்தியவளும் நான்தான். ஒருமுறை நான் உனக்கு நாநூறு ரூபாய்க்கு வெள்ளையில் ஸ்ட்ரைப் போட்ட பீட்டர் இங்கிலாந்து சட்டை வாங்கித் தந்து, இனி நீ காஸ்ட்லியில்யான அழகான சட்டைகள் போட்டுக் கொள்ள வேண்டும் என்று உன்னைக் காஸ்ட்லியான ஆளாக ஆக்கிய நான் காலியாக்கி விட்டுப் போவதில் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. வேறு வழி இல்லை. ஒருவேளை உன்னை அளவிற்கு அதிகமாக செலவழிக்க வைத்துப் பார்த்த என்னால் உன்னோடு வாழ்க்கைச் சக்கரத்தை இழுத்து வர முடியாது என்ற சந்தேகத்தில்தான் இடைவழியில் விட்டுப் போகிறோனோ எனச் சதேகமாகக் கூட இருக்கிறது.
வசந்த நீதான் இந்த இனியாவின் வாழ்க்கை என்று முடிவு பண்ணியிருந்த என்னால் எப்படி இப்படி ஒரு முடிவிற்கு வர முடிந்தது என்பது கூட வாழ்க்கையின் அடிப்படையில் வெறும் அன்பும் பாசமும் போதாது. அதற்கு பணமும் மிகப் பெரிய அவசியமும் என்பதை உணர்ந்து கொண்டதால்தான் இந்தப் பிரிவிற்கு பெரிய காரணம்.
உன்னோடு வாழ்க்கையில் இணைந்திருந்தால் மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் என மூன்று நான்கு மாதங்கள் முடிந்த உடனே வாழ்க்கையின் அடிப்படை ஆதாரங்கள் பணம் என்னும் பூதத்தால் நம்மை ஆட்டிப் படைக்க நேரும் போது ஒருவருக்கொருவர் கொண்டு வர முடியாத செல்வத்திற்காக உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டு எப்போது வெடிக்குமோ என பயந்து போய் ஒருநாள் எரிமலையாய் வெடித்துச் சிதறி விட இத்தனை நாள் காதலித்து சுகித்திருந்த நமக்குள் அன்று ஏற்படும் மனக் கசப்பை உணர்ந்த ஒரே காரணத்தினல்தான் இந்த பிரிவு மடல்.
நான் இன்னும் சஸ்பென்ஸாகவே எழுதிக்கொண்டிருப்பது உனக்கு எரிச்சலாக கூட இருக்கலாம். ஸாரி, என் கம்பெனி அதிகாரியின் மகன் என்னை மணந்து கொள்ள முன் வந்த போது நம் காதலை நினைத்து உடனடியாக மறுத்து விட்டேன்.
நான் வேலைக்கு வருவதற்கு நீங்கள் சம்பளம் கொடுக்க்கிறீர்கள். அதோடு நம் சம்பந்தம் முடிந்து விட்டது என்று எகிறி திட்டி விட்டு வந்து விட்டேன். அதன் பிறகு உன்னை சந்தித்தபோது கூட சொல்ல வேண்டும் என்று பலமுறை யோசித்தபோது நீ முரட்டுத்தனமாக எங்கள் அலுவலகத்தில் வந்து ஏதாவது கலாட்டா செய்து விடுவாயோ என்ற பயத்தில் உன்னிடம் சொல்லாமலே தவிர்த்தேன்.
ஆனால் யோசித்த போது மகாராணி வாழ்க்கை கிடைக்கும் போது இல்லை நான் எப்போது சேவகியாகத்தான் இருப்பேன் என்று சொல்வது தவறு, கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவ விடுவது முட்டாள் தனம் என்று தோன்றியது. வாழ்க்கை என்னும் நாடகத்தில் நடிக்க வந்திருக்கும் போது சேவகி வேடம் கிடைத்ததாக மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
இப்போது திடீரென்று மகாராணியாக நடிக்கிறாயா என்று ஒரு பெரிய அதிர்ஷ்ட தேவதை வந்து அழைக்கும் போது இல்லை நான் சேவகியாக நடிக்கிறேன், ஏனென்றன் இங்கு இருக்கும் சேவகனைக் காதலிகிறேன் என்று சொல்வது முட்டாள் தனம் என தோன்றியதால் நான் இந்த வாழ்க்கையைப் பொறுத்தவரை மகாராணியாகவே இருந்து விட்டுப் போகிறேன் என்ற முடிவோடு நான் கிளம்புகிறேன்.
இனி என்னோடு தொடர்பு கொள்ளவொ, என்னைச் சந்திக்கவோ முயற்சி செய்ய வேண்டாம்.
நான் ஏதாவது தவறு செய்திருந்தால் (நிறைய செய்திருக்கிறேன்) மன்னித்துக் கொள். வருகிறேன்.
இப்படிக்கு,
உன்னிடமிருந்து பிரிந்து போகும் முட்டாள் காதலி
‘இனியா’
கடிதத்தை வாசித்து முடித்து விட்டு பெரிய மூச்சு விட்டான் வசந்தன். அவன் வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கிய லில்லி உள்ளே வந்து “என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய்” என்று கேட்டாள்.
“ஒன்றுமில்லை லில்லி. இவ்வளவு உயர்ந்த வாழ்க்கை உன்னோடு எனக்குக் கிடைக்கப் போகிறது என்பதை எனக்குத் தெரிந்த ஒருவரிடம் எப்படி சொல்வது எனத் தவித்துக் கொண்டிருந்தேன். இப்போது அந்தப் பிரச்சினை தீர்ந்து விட்டது” என்றான் வசந்தன்.