அவள் வாழ்வு நீ தந்தவரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 12, 2024
பார்வையிட்டோர்: 1,549 
 
 

“ரதி! கண்டேன் உன் மன்மதனை !”என்று வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தாள் தீப்தா,

அண்மையில் பன்னாட்டு எழுத்தாளர் மகாநாட்டுக்காகதென்னிந்தியாவின் சார்பில் சென்னையிலிருந்து அமெரிக்காவில் நியூயார்க்கிற்குப்புறப்படும்போது தோழி ரதியையும் அழைத்தாள்.

“ரதி! நீ மட்டும் உன் சங்கீதத்தைக் கைவிடாமலிருந்திருந்தால் அமெரிக்காஎன்ன உலகமேஉன்னை ஒருஇசை மேதையாய் கைநீட்டி அழைத்திருக்கும். ஒரு எழுத்தாளராய் என்னைப்போல் உனக்கும் வெளிநாட்டுப் பயணம் வாய்த்திருக்கும். ஒரே பார்வையில் ஒரே நாளில் காதலித்த காதலனுக்காக கச்சேரி பண்ணுவதையே ஏன் வாய்விட்டுப்பாடுவதையே நிறுத்திய பைத்தியம் நீதான்! போகட்டும் ஒரு மாறுதலுக்கு பாங்க்கில் லீவ் கேட்டு நீயும் என்னோடு அமெரிக்காவுக்கு வாயேன்.. இரண்டுவாரம் தான். நியூயார்க் டைம்ஸ்கொயர், சுதந்திரதேவி சிலை, ஐநா சபை, நயாகரா எல்லாம் சுத்திட்டும் வரலாம்.” என்றாள்.

“அங்கே என் மன்மதன் கிடைப்பாராடி?” என்று ஆர்வமாய் கேட்டாள் தீப்தா. எத்தனை வயதானால் என்ன எத்தனை படித்திருந்தால் என்ன காதல் வயப்பட்டுவிட்டால் பெண்களின் புத்தி தடுமாறித்தான் போகிறது.

“இன்னமும் அவன் நினைவேதானா?”

“என்றும் மன்மதன் நினைவுதான் தீப்தா” என்ற ரதி, தீப்தாவுடன் அமெரிக்காவிற்குப் பயணமானாள்.

நியூஜெர்சியில் தீப்தாவின் உறவினர் வீட்டில் அவர்கள் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் இருவரும் தங்கிக்கொண்டனர்.

”முகநூலில் மன்மதன், மதன் என்றெல்லாம் பெயரைத் தேடி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை., அந்தப் பெயரில் உன் காதலனைத் தவிர மீதி பேரெல்லாம் இருந்தார்கள்.அமெரிக்காவில்தான் இனிமேல் உன் காதலன் கிடைக்கப் போகிறானா என்ன?” என்று தீப்தா விமானப்பயணத்தில் அருகில் உட்கார்ந்திருந்தபோது கிண்டலாகவே கேட்டாள்.


ரதியின் காதல் வினோதமானது.

இது கால்நூற்றாண்டைத் தாண்டிய தேடல் என்றால் கண்டிப்பாக பலர் வியந்துபோவார்கள் அல்லது ‘இப்படி என்றோ தொலைந்துபோனவனுக்காக காத்திருப்பதுபைத்தியக்காரத்தனம் என்பார்கள். அதனால்தான் ரதி , அந்தரங்கத் தோழிகள் சிலரிடம் மட்டும் மன்மதனைப்பற்றி தெரிவித்திருந்தாள்.’ ஆண்டாள் உறுதியாக சொல்லலையா ‘மானிடவரக்கென்று வாழகில்லேன்’ என்று? கண்ணனைத்தேடி ப்ருந்தாவனம் முழுக்க பார்க்கிறவர்களிடம் எல்லாம்,

‘மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை,
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே?-’

என்று தேடித்தேடி அலைந்தாளே. கண்ணன் உடனே காட்சிதந்தானா என்ன! கடைசியில்கண்ணன் அவளை கண்டு கொண்டானே ஏற்றுக் கொண்டானே.. நானும் அப்படித்தான் தேடுகிறேன். எனக்கும் என் கண்ணன் ஒரு நாள் கிடைப்பான். என்னை ஏற்பான்..” என்பாள்.

அவள் தன் கண்ணனை சந்தித்து எப்போது?


சென்னையில் அனைத்திந்திய கல்லூரி நாடகவிழாவில் சிறந்த தமிழ் நாடக நடிகைக்கான பரிசினை ரதியும், சிறந்த மராத்தி நாடக நடிகருக்கான பரிசினை மனமதனும் பெற்றுக்கொண்டபோது இருவரையும் மேடையில் ஜோடி பொருத்தம், பெயர்ப் பொருத்ததிற்குப் பலரும் புகழ்ந்தனர்.

மன்மதன் புனா கல்லூரியிலிருந்து அந்தக் கல்லூரி சார்பில் நடித்ததால் அவனை மராத்தியன் என நினைத்தவர்கள் மேடையில் அவன் அழகுத் தமிழில் பேசியபோது அரங்கமே அதிர்ந்தது.

‘நான் தமிழன் தான். அப்பா தன் பணிகாரணமாக அங்கே இருப்பதால் நானும் எனது இரண்டு அக்காக்கள், தம்பி என அனைவரும் அங்கே வசிக்கிறோம். எங்களுக்கு பூர்வீகம் காரைக்குடி. அடிக்கடி காரைக்குடிக்கும் பிள்ளையார்ப்பட்டிக்கும் வந்துடுவோம். வீட்டில் தமிழ்தான் பேசுகிறோம். அங்கே நான் படிக்கும் பொறியியல் கல்லூரி சார்பாக மராத்தி நாடகத்தில் பிரதான பாத்திரம் ஏற்று அகில இந்திய நாடகப்போட்டிக்கு வந்தேன். என் மண்ணில் பரிசும் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி!” என்று முடித்தான்.

ரதியிடமும் சென்று அவள் பரிசு வாங்கியதற்குப் பாராட்டினான்.

“ரதி! மன்மதன்! ஆகா என்ன பொருத்தம்! இருவரும் பரிசு பெற்றதில் வியப்பே இல்லை!” என்றார் நிகழ்ச்சிக்கு தலை தாங்கியவர். ‘இருவருமே தேவலோகத்திலிருந்து நேராய் இங்கே வந்தமாதிரி அழகாகவும் ஜோடிப் பொருத்தமாகவும் தெரிகிறார்கள்’ என்று பாராட்டினார்.

ரதிக்கு மனம் வானில் பறக்க ஆரம்பித்தது. ‘முதன்முதலில் பார்த்தேன் காதல் வந்தது‘ என்று பாடலாம் போல ஆசையானது. விடைபெறு முன்பாக அவளை தனிமையில் சந்தித்த மன்மதன் “பாராட்டுக்கள்” என்றான்.

ரதி வெட்கம் கலந்த புன்னகையுடன் அவனை ஏறிடவும் “பேரழகியை இன்னிக்குப் பார்த்த பரவசம் எனக்கு” என்றான். “எனக்கும் மகிழ்ச்சி. நம்முடைய ஜோடிப் பொருத்தத்தை தான் மேடையிலேயே எல்லாரும் புகழ்ந்தார்களே” என்றாள் வெட்கம் விலகாமல்.

“ரதிக்கு இது எந்த ஆண்டு?”

“பி காம் செகண்ட் இயர்! நீங்க?”

“நான் பி ஈ மெகானிகல் கடைசிவருஷம் . எல்லா செமஸ்டரும் ஆச்சு ரிசல்டுக்கு காத்திருக்கேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா போன் நம்பர் கொடுங்கள். வீட்டில் யாரும் தவறாய் நினைக்கமாட்டர்கள் தானே??”

“உண்மையில் என் அம்மா உங்களைப்பார்த்தால் குளிர்ந்து போய் விடுவாள். அம்மா அழகை ரசிப்பவள். ஆராதிப்பவள். உங்களைக் கொண்டாடுவாள்.என் வீடும் அருகாமையில்தான் வாருங்களேன்”

“அடடா இப்படி ஒரு அழகுச் சிலையை இங்கே சந்திப்பேன் என்று முன்கூட்டி தெரிந்திருந்தால் ரயிலுக்கு இன்றைக்கே டிக்கட் வாங்கி இருக்க மாட்டேனே.. அதனால் என்ன, உங்கள் அம்மாவின் மனம் நீடித்து மகிழ்ச்சியுடனேயே இருக்கிற மாதிரியான நிலையை ஏற்படுத்துவோமே! என்ன சொல்கிறேன் புரிகிறதா!
என்னவோ தெரியவில்லை உங்களைப்பார்த்ததும் என் எதிர்கால மனைவி நீங்கதான்னு மனசில் ஒரு நம்பிக்கை வந்துவிட்டது.”

“நிஜமாவா?”

“ஆமாம்”

“நானும் காத்திருப்பேன்”

“காலம் கனியும் ரதி! ஐ லவ் யூ”

மன்மதன் இரவு ரயில் ஏறும்வரை அவனுடனேயே இருந்தாள். அவனுக்குப் பிடித்தமான பாரதியின் பாயுமொளி நீ எனக்கு பாடலை இனிமையாய் பாடிக்காட்டினாள். “இந்தக் குரலை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்” என்று புகழ்ந்தான் மன்மதன். அவனுடன் கழித்த அந்த சிலமணி நேரங்களில் ரதி அவனுக்கு மானசீகமாய் மாலையிட்டாள். ரயிலடியில் அவனைப் பிரிய மனமில்லாமல் கண்கலங்கினாள்.

“ரதி.. உன்னோடு போனில் பேசுகிறேன். சீக்கிரம் வீட்டில் சொல்லி உன்னைப் பெண் பார்க்க வருகிறேன்” என்றவனிடம் ரயில் புறப்படும் சமயம் நினைவுக்கு வந்தவளாய் சட்டென கைப்பையைத் திறந்து கோயில் விபூதி மடித்திருந்த தாளை உதறி அதன் பின்பக்கம் பேனாவால் தன்வீட்டு லாண்ட் லைன் நம்பரை எழுதிக் கொடுத்தாள். அவனிடம் பதிலுக்கு போன் நம்பரைக் கேட்பதற்குள் வண்டி புறப்பட்டு விட்டது.

“கவலைப்படாதே ரதி. நான் புனா போனதும் உனக்கு போன் செய்து நம்பர் தருவேன்” என்று ஜன்னல் வழி கூவினான் மன்மதன். அவன் கை அசைவு மறையும் வரை பார்த்துவிட்டு வீடு திரும்பினாள் ரதி.


புனாவிற்குப் போனவன் பிறகு போன் செய்யவுமில்லை. வேறெந்தவிதத்திலும் அவளுடன் தொடர்பு கொள்ளவுமில்லை.

ரதிக்கு ஏமாற்றமாகிவிட்டது. மனமாறுதலுக்கு தாய்மாமாவின் வீட்டிற்கு பெங்களூருக்குப் போனாள்.

மறுபடி சென்னை வந்தாள்.

பட்டப்படிப்பை முடித்து வங்கிப்பணிக்கு தேர்வு எழுதி தேர்வான ரதிக்கு சென்னையில் பிரபல வங்கியில் வேலை கிடைத்தது. சில வருடங்களில் ஆபீசர் தேர்வு எழுதி ஆபீசராகிப் போனாள். பணி காரணமாய் பல இடங்களுக்குச் செல்லும் போதெல்லாம் கண்கள் மன்மதனையே தேடிக்கொண்டிருந்தது. இன்னமும் தேடி கொண்டே இருகிறது.


நாற்பத்தி நான்கு வயதுக்கு சரி பாதி வயது குறைத்து சொல்லலாம் போன்ற உடல்வாகும் முக அழகும் பலருக்கு அவள் திருமணம் ஆகாத முதிர்கன்னி என்பதே தெரிவதில்லை.

“ஒருவிதத்தில் இது வசதி தீப்தா. இல்லேன்னா சமூகத்தின் பார்வையையும் பேச்சையும் தாங்கிக் கொள்ளவே முடியாது “ என்பாள் ரதி.

“ஆனா ரதி, உன்னைக் கைவிட்டுப் போனவனுக்காக இனியும் காத்திருக்கப் போகிறாயா?”

“என்ன செய்றது. அவன் மனசில் பிம்பமாய் பதிந்துவிட்டானே.”

“தேன்குரல் தேவின்னு உனக்கு 10வயசிலேயே பட்டம் கொடுத்தும் நீ பாடறதை விட்டது சங்கீத உலகத்துக்கு பெரிய நஷ்டம்..அதிருக்கட்டும்..ஒருவேளை மன்மதன் வேற ஒருத்தியை கல்யாணம் செய்திருந்தால்?”

“அவர் மனசில் எப்போதும் நாந்தான் இருக்கமுடியும்..பாரதியின் பாட்டு இப்போ சொல்லட்டுமா?”

“ஏன் பாடட்டுமா என்று கேட்கமாட்டியோ? உன் கானமெல்லாம் உன் காதலனுக்குக் காத்திருக்கிறதோ?”

“ஆமாம்…”

‘நேர முழுதிலுமப் பாவிதன்னையே – உள்ளம்
நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்;
தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்
தெய்வமிருக்குதடி தங்கமே தங்கம்.’

“அந்த தெய்வம்தான் உங்க ரெண்டு பேரையும் சேர்க்கணும் மனிதப்ரயத்தனத்தில் இதுவரை எதுவும் நடக்கவில்லையேடி”


தீப்தாவிடம் மனம்விட்டுப் பேசியதை ரதி நினைத்துப் பார்த்தாள்.

தெய்வம் இருக்கிறது உண்மைதான்.. ஆமாம். மன்மதனைப் பார்த்துவிட்டாள் தீப்தா! எங்கே எப்படி என்று கேட்டு வாட்ஸ் அப்பில் கேள்விக்கணைகளாய் அனுப்பினாள்.

அதற்குள் தீப்தா ‘வெயிட் வெயிட் அழகுச்சிலையே! இந்த விஷயத்தை தெரிவிக்கலைன்னா எனக்கே தலை வெடிச்சிடும்போல இருக்கு. அதான் மெசேஜ் அனுப்பினேன். இப்போ போனில் பேச இயலாது தாயே.. எழுத்தாளர் மாநாடு முடிந்ததும் விவரம் போனில் சொல்கிறேன். உன் ஆளு நீ எனக்குக் காண்பித்த நாடகவிழா போட்டோவில் பார்த்த மாதிரியே நேரில் இருக்கிறார்.. வயசானதே தெரியவில்லை. அதனால்தான் நான் அடையாளம் கண்டு விஜாரிச்சேன். உன் பெயரைச்சொன்னதும் அவர் கண்களில் மின்னல்.. என்னை ரதியின் பலநாள் தோழின்னும் சொல்லிக் கொண்டேன்” என்று வாட்ஸ் அப்பில் மறுபடி செய்தி அனுப்பி இருந்தாள்

ரதிக்கு இருப்பேகொள்ளவில்லை.. நியூ ஜெர்சியில் அவளும் தீப்தாவும் தங்கியிருந்த வீட்டில் இருந்த இருவரும் எழுபது வயதைக் கடந்த முதியவர்கள். அவர்களிடம் தன் நிலையை சொல்லவும் முடியாமல் பரவசத்தில் தவித்தாள்.

’வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு’ என்றார் ரதியின் போனில் உன்னிக்ருஷ்ணன். ரதி சட்டென போனைக் கையிலெடுத்தாள்..

தீப்தாதான்! சட்டென போனை எடுத்து, ”தீபு! மன்மதனைப்பார்த்தியா? எப்படிடி இருக்கார்? நான் அவரைப் பார்க்க முடியுமா? எனக்கு உடனே அவரைப் பார்க்கணும் போல இருக்குடி” என்றாள் தாபத்துடன்.

“அவசியம் பார்க்கலாம் ரதி…ஆனா மன்மதன் ரொம்ப பிசியா இருக்கார். அமெரிக்காவின் சின்னத்திரையின் பிரபல வசனகர்த்தாவாம், நான் உன் பெயரைச் சொன்னதும் அவர் கண் மலர்ந்ததை எப்படி சொல்வேன்.. ரதியோடு நாளைக்கே வீட்டுக்கு வாங்கன்னு அட்ரஸ் விவரம் போனில் கொடுத்தார். நியூஜெர்சில ப்ரிட்ஜ் வாட்டர் கோயில்பக்கம் தான் அவர் வீடாம். நமக்கு பத்து நிமிஷப் பயணம்தான். நேர்ல நிறையப் பேசணும்னார்..தமிழை மறக்காமல் இருக்கிறார் ரதி”

“தமிழை மட்டுமா என்னையும் தான் மறந்திருக்கமாட்டார்”

மனசுக்குள் பூரித்துப் போனாள் ரதி.


அமெரிக்கா புறப்பட தன் தாயிடம் அனுமதி கேட்டபோது அவளுடைய அம்மா சொன்னதை நினைத்துப் பார்த்தாள்.

“எந்த வயசானால் என்னடி ரதி? மனசுக்குப்பிடிச்சவனோட கல்யாணம் நடக்கணும் எனக்குத்தான் அந்தக் கொடுப்பினை இல்லாமல் வளர்த்தவர்கள் நிர்ப்பந்தத்தில் பணம் மட்டும் இருந்து அழகென்பதே கொஞ்சமும் இல்லாத ஒருவனுக்கு கழுத்தை நீட்டினேன். முதலில் பிறந்த பையன் அப்பாவைக் கொண்டு பிறந்ததாலோ என்னவோ பிறந்த ஒரே வாரத்தில் போய்விட்டது. இரண்டாவதாக நீ அழகுச்சிலையாய் பிறந்ததைப் பார்த்த நிம்மதியிலோ என்னவோ உன் அப்பாவும் கண்மூடிப் போய் விட்டார். அப்போதே எனக்குள் ஒரு வைராக்கியம். என் பொண்ணூக்கு ஏத்த அழகனுக்குத்தான் கட்டிக்கொடுக்கணூம்னு. இப்போ உன் மன்மதனும் கிடைச்சிட்டான். உடனே அமெரிக்கா புறப்படு” என்றாள் ரதியின் தாய் மனோகரி.

அன்றே தீப்தா கேட்டாள்.

“உன் வைராக்கியத்துக்கு வித்து உன் அம்மா தானா? இதை நீ இத்தனை நாளாய் சொல்லவே இல்லையே?” என்றாள்.

“ஆமாம் என் அப்பா ஏமாற்றியதை அவளால் இன்னமும் தாங்கிக்கொள்ள முடியவே இல்லை. அதுவும் நியாயம் தானே ?


“வாங்க! வாங்க!” என்று வீட்டு வாசலுக்கே வந்து வரவேற்ற மன்மதனைக் கண் கொட்டாமல் பார்த்தாள் ரதி.

“அடேயப்பா! வயசானாலும் உங்க இளமையும் அழகும் உங்களை விட்டுப் போகவே இல்லை” என்று மனம் வியந்து கூவியது.

“ரதி! அப்படியே இருக்கீங்க நீங்க! “ என்று மென்மையாய் சிரித்தபடி சொன்னான் மன்மதன். ரதிக்குக் கன்னம் சிவந்தது. மனதுக்கு அணுக்கமானவர்களின் பாராட்டு உடலையும் பரவசப்படுத்துவது இயல்பு.

வீடு அமெரிக்கபாணியில் இருந்தாலும் இந்தியக்கலை அழகுடன் காணப்பட்டது. தஞ்சாவூர் ஓவியங்கள் சுவரை அலங்கரிக்க, மலையாள விளக்குகளும், விவேகானந்தர் பாரதி மராட்டிய சிவாஜி போன்றோருன் சிறு சிலைகளும் அதைவிட வீட்டில் நுழைந்ததும் வந்த தசாங்க வாசனையும் சூழ்நிலையை ரம்யமாக்கின.

“வீட்டில் யாரும் இல்லையா?” என கேட்க நினைப்பதற்குள் “தீப்தா! ரதி ! உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் “ என்று அமெரிக்க ஆங்கிலத்தில் கூறியபடிசமையல் அறையிலிருந்து வெளியே வந்தாள் நாற்பத்தி ஏழு வயது மதிக்கத்தக்கலாம் போலிருந்த ஒரு பெண்மணி.

சற்றே குட்டையான உடல்வாகு. மாநிறத்திற்கும் குறைவான உடல்நிறம். ஒரு காலை விந்தி விந்தி நடந்து காலுக்கு வந்தவளை ஓடிச்சென்று கைகொடுத்து அழைத்து வந்த மன்மதன், “நிர்மலா! என் மனைவி” என்றான்.

ரதிக்கு அப்படியே பூமி பிளக்காதா என்றிருந்தது. அவள் முகம் மாறியதை மன்மதன் கவனிக்காமலில்லை.

“நீங்கள் பேசிக்கொண்டிருங்கள், அவசியம் சாப்பிட்டுப் போகணும். நான் போய் டின்னர் வேலைகளை முடித்து வருகிறேன்” என்று நிர்மலா மறுபடி சமையல் அறைக்குப் போய் விட்டாள்.

நாணத்தில் ஏற்கனவே சிவந்து இப்போது கோபத்தில் மேலும் சிவந்துவிட்ட அவள் முகத்தைப் பார்த்த மன்மதன் “ரதி ப்ளீஸ் நான் உங்களிடம் பேசணும்! பல நாளாய் அதுக்குத்தான் காத்திருந்தேன்..” என்று ஆரம்பித்தான்.

தீப்தா சங்கடமாய் வேறுபுறம் பார்த்துக் கொண்டிருந்தாள். ரதி தலையைக் குனிந்து கொண்டு மௌனமானாள். மன்மதன் தொடர்ந்தான்.

“அன்று உங்களிடம் வீட்டு முகவரி போன் நம்பரெல்லாம் வாங்கிக் கொண்டு ரயிலடியில் உங்களிடம் பிரியாவிடைபெற்று உங்கள் நினைவாகவே ரயில் ஏறினதையும் ரயிலில் என் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டபோது உங்கள் முகவரித் தாளும் அத்துடன் காணாமல் போனதையும் முதலில் சொல்லிவிடுகிறேன்.

புனாவிற்கு எப்படியோ வந்தவன் அப்பாவுக்கு பக்கவாதம் வந்து ஆஸ்பித்திரியில் கிடப்பதைக்கண்டு ஓடினேன். அப்போது அக்காக்கள் இரண்டு பேருக்கும் பெரிய இடத்தில் அப்பா கல்யாணம் நிச்சயித்திருந்தார். மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பதுபோல காரைக்குடி குடும்ப வழக்கம் என்று சக்திக்கு மீறி கடன் வாங்கி கல்யாணத்துக்கு ஆடம்பரமாய் செலவழித்துவிட்டார், ஆனால் அப்பாவுக்குக் கடன் கொடுத்தவர்கள் ஒரே வாரத்தில் அவரை நெறிக்க ஆரம்பித்தனர். எனக்கும் உடனே வேலை கிடைக்கவில்லை. ரொம்ப கஷ்டமான நிலைமையில் வீட்டை விற்றோம். தம்பி வேறு பைக் விபத்தில் செத்துப்போனான்.

சாதாரண கம்பெனியில் கொஞ்ச சம்பளத்தில் வேலை கிடைக்க கடனையுமடைக்க முடியாமல் தவித்தேன். எனக்கு அந்த சமயம் என்ன செய்வதென்றே தெரியவில்லை..”

மன்மதன் ஆற்றாமையுடன் சொல்லியவன் சற்று நிறுத்தினான்.

“அதனால் பெரியபணக்கார வீட்டுப் பெண்ணை அவளுக்குக்கால் ஊனம் என்றாலும் கல்யாணம் செய்து அப்பாவின் கடனை அடைத்தீர்கள் அதுதானே? எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன்?” என்று கேட்க நினைத்த ரதிக்கு வார்த்தைகள் தொண்டையில் புதைந்துபோயின..

மன்மதன் தொடர்ந்தான்.

“என் அப்பாவின் விருப்பம் நான் பணக்கார வீட்டுப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு அவர்களிடம் வாங்கிய வரதட்சணை பணத்தில் தன் கடனை அடைக்கவேண்டும் என்பதுதான். வரன்கள் குவிந்தன. எனக்கு கல்யாணத்தை வியாபாரமாக்குவது பிடிக்கவில்லை..நான் அப்பாவிடம் “உங்க குறிக்கோள் சரி இல்லை இப்படிப் பணப்பேயாய் இருக்கிற உங்களுக்காகவே நான் ஒரு ஏழைப் பெண்ணைக் கட்டிக்கப் போறேன்’ என்று சபதம் செய்தேன். தாமத்தித்தால் எனக்குத் தெரியாமல் பெண்ணைப் பெற்ற யாரிடமாவது வரதட்சணை என லட்சக்கணக்கில் பணம் வாங்கிவிடுவாரோ என்று பயந்தேன். அப்போதும் ரதியைத்தான் நான் நினைத்தேன்..சென்னைக்கும் வந்தேன்..நீங்கள் ஊரை விட்டுப் போய் விட்டதாய் அரசல்புரசலாய் தகவல் கிடைத்தது, உங்களை கண்டு பிடிக்க முடியவில்லை. மனம் நொந்து போய் புனா திரும்பினேன். அப்போது தான் குடும்ப நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டபடி கால் ஊனமாயிருந்த நிர்மலாவின் ஏழ்மைக் குடும்பத்துக்கு நான் உதவ நினைத்தேன். அனாதையாய் இருந்த நிர்மலாவை கல்யாணம் செய்தேன்.. நிர்மலா புனாவில் ஒரு அரசு ஆஸ்ப்பித்திரியில் நர்சாக இருந்தாள். பெரிய படிப்பெல்லாம் கிடையாது. ஆங்கில அறிவும் இல்லை. எங்கள் இருவரின் வருமானம் குடும்பம் நடத்தவும் போதவில்லை. அப்பாவுக்கு வைத்தியசெலவு வேறு. கடன் கொடுத்தவர்கள் வந்து கழுத்தை நெறிக்க ஆரம்பித்தார்கள். அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் நர்சுகளை சிவப்பு கம்பளம்போட்டு அழைப்பார்கள். அப்போதுதான் நிர்மலா மாமனாரின் கடன் அடைக்க அமெரிக்காவிற்கு நர்ஸ் பணிக்காக தனியாகப் போனாள். எனக்கு விசாவெல்லாம் அப்போது கொடுக்கவில்லை. நிர்மலா அமெரிக்கா சென்ற இரண்டு வருஷம் கழித்து அவள் பணிபுரிந்த ஆஸ்பித்திரியின் நல் இதயம் ஒன்றின் உதவியால் எனக்கும் வேலை கிடைத்து நானும் வந்தேன். அப்பாவின் கடனை இருவருமாய் பத்துவருஷம் இங்கே உழைத்து அடைத்தோம். அப்பாவும் காலமாகிப்போனார். எங்கள் மகளுக்கு உன் பெயர்தான் வைத்திருக்கிறேன். அவள் வாஷிங்டன் யூனிவர்சிடியில் படிக்கிறாள். ஹாலிவுட். சின்னத்திரையின் பிரபல ஸ்க்ரிப்ட் ரைட்டர் ’மன்’ நான்தான். ஆக சந்தர்ப்ப சூழ்நிலையால் என் வாழ்க்கை திசைமாறியது ரதி. இப்போது எதிர்பாராவிதமாக நேற்று எழுத்தாளர் தீப்தா உங்களைப்பற்றி சொன்னதும் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.” என்று மன்மதன் மென்மையான குரலில் பேசிமுடித்தபோது சில கணங்களுக்கு அங்கு மௌனம் பேசியது.

விவரம் கேட்டு தீப்தா சகஜமாகி விட்டாலும் கடைசிவரை வரை ரதி ஒரு வார்த்தை கூட மன்மதனிடம் பேசவில்லை.

மன்மதனும் சங்கடமாய் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான். நிர்மலா உள்ளிருந்து ஒரு தட்டில் பழங்களை எடுத்து வந்தாள். டீபாய் மீது வைத்தபடி, ”மன் உங்களைப்பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். நீங்கள் இனிமையாய் பாடுவீர்களாமே எனக்காக ஒரு பழைய தமிழ் சினிமாபாட்டு பாடமுடியுமா?” என்று வேண்டுவது போலக் கேட்டுக்கொண்டாள்.

தீப்தாவிற்கு நிலைமை சங்கடமாகிவிட்டது. ரதி, ”சரி புறப்படு போகலாம்” என்று சொல்லப் போகிறாள் என நினைத்தபோது, ’என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..’ என்று பாட ஆரம்பித்துவிட்டாள். ’எந்நாளும் அவளோடு மகிழ்வாய் ஐயா’ என்று வேண்டுமென்றே அழுத்தம் திருத்தமாய் பாடி முடித்தாள்.

முடித்ததும் நிர்மலாவும் மன்மதனும் கைதட்டிப்பாராட்டினர்.

அதிகம் பேசாமல் விடைபெற்றுவெளியே வந்த ரதியைப் பார்க்கவே தீப்தாவிற்கு கலவரமானது.

“ரதி… மனசு கலங்கிபோய் இருக்கிறாயாடி?” தயக்கமுடன் கேட்டாள்.

“இல்லை..தெளிவாக இருக்கிறேன்.. சென்னை கின்னர கான சபா மானேஜருக்கு போன் போட்டு இந்த வருஷம் மார்கழி சீசனில் முழுக்கச்சேரி பண்ணப் போவதாய் சொல்லப் போகிறேன்.” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *