அவள் பெயர் வசந்தம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 14, 2024
பார்வையிட்டோர்: 1,758 
 
 

வசந்தகாலத்தின் தொடக்க நாளில் நான் பிறந்தேனாம் அதனால் அம்மா எனக்கு’வசந்தம் ‘என்று பெயர் வைத்ததாக அப்பாதான் சொன்னார்.

வாய் நிறைய ‘வசந்தம்! வசந்தம்!’ என்று என் அம்மா அழைக்க, அதைக் கேட்டு மகிழும் பேறினை நான் ஒருவயதிலேயே இழந்துவிட்டேன்.

வசந்தம்! எத்தனை அழகான பெயர்! அம்மாவிற்கு இந்தப்பெயர் வைக்க எப்படித் தோன்றியது? பிற்காலத்தில் தன் பெண் இந்தப் பெயரை மிகவும் நேசிப்பாள் என்று அம்மாவுக்கு அப்போதே தெரிந்திருக்குமோ?

எத்தனை பேருக்கு அவர்களின் பெயர்கள் பிடிக்கும்? என்னுடன் படித்த பல பெண்களுக்கு அவர்களின் பெயர் பிடித்ததாய் சொன்னதே இல்லை. ஏதோ ஒரு குறை அதில் இருப்பததயும் பெற்றோர் இன்னும் தனக்குப் பொருத்தமாய் வைத்திருக்கலாம் என்றும் புலம்புவார்கள். அப்படியே தங்கள் பெயரை விரும்பும் சிலரோ அந்தப் பெயரை முழுமையாய் அழைக்காமல் குறுக்கி வெட்டி அல்லது நீட்டி அழைப்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள்.

ஆனால் எனக்கு அப்படி இல்லை. என் பெயரை யாராவது அழகாய் வசந்தம் என்று அழைத்தால் செவியும் நெஞ்சும் குளிர்ந்துதான் போகிறது. மிகச் சிலரே வசந்தம் என்று அழைக்கின்றனர். பலருக்கு வசந்தா அல்லது வசந்தி அல்லது வசி.

அம்மா மட்டும் இருந்திருந்தால் தினமும் வசந்தமான பொழுதுகளாயிருந்திருக்கும்.

அம்மாவைப்பற்றி அப்பா சொல்லியதிலிருந்தும், அம்மாவின் பழைய டைரிக் குறிப்புகளிலிருந்தும் அவள் அன்பும் பண்பும் அதிகம் கொண்ட ஒரு அபூர்வப் பெண்மணி என்று உணரமுடிகிறது.

எழுத்தும் இசையும் அம்மாவுக்கு இரு கண்களாக இருந்திருக்கின்றன.

டைரியின் பலபக்கங்களில் கவிதைகளாய் எழுதித் தள்ளி இருக்கிறாள். அப்பாவின் ஊக்குவிப்பினாலும் ஆதரவினாலும் அம்மாவின் சில படைப்புகள் அந்த நாளில் பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றன.

சங்கீதத்தைப்ப ற்றி அம்மா எழுதிய ஒருகுறிப்பு இது.

 “நம்மை மறந்து நாம் லயிக்கும் கலை இசை. இசை கேட்கத்தான் செவிகள் திறந்தே இருக்கின்றனவோ? மற்ற எந்த அவயங்கள்மூடிக்கொண்டாலும் திறந்த செவிகளின் வழியே மனதில் இறங்கி ஆத்மாவைத் தொடுவது இசை என்றால் அது மிகை இல்லை. சில நேரங்களில் இந்த மானிட ஜீவிதமே ஒரு தொடர்ந்த இசை போலத் தோன்றுகிறது”

அம்மாவின் கவிதைகளும் ஆத்மாவைத்தொடுபவை.

“இப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறது
ஏலத்தில் வீடு கைமாறியபோது
கூடத்தில் சிறகடித்துக்கத்திய
குருவிகளின் கூக்குரல்”

என்பதுபோல பலகவிதைகள் அச்சிலும் கையெழுத்துப்பிரதியிலும்!

வல்லமை நிறைந்தவர்களை தன் வசம் இழுத்துக்கொள்வது இறைவனுக்குப் பிடித்த ஒன்றாக இருக்க வேண்டும். பாரதி விவேகாநந்தரைப் போல என் அம்மாவும் அவர்களைவிடவும் இளம் வயதிலேயே விபத்து ஒன்றில் இறந்துவிட்டாள்.

அப்புறம் அப்பா என்னை வளர்க்க வேண்டுமே என்றுதான் மறுமணம் செய்துகொண்டார்.

சித்தி ராதிகா அம்மாவின் குணங்களுக்கு நேர் எதிராய் அப்பாவிற்கு வாய்த்திருக்கிறாள் என்பதிலிருந்தே என் நடைமுறை வாழ்க்கை எப்படி இருக்கிறது என நீங்கள்புரிந்து கொண்டிருக்க வேண்டும்

சித்தி மூலம் எனக்குக் கிடைத்த தங்கைகள் மீனாவும் ஜனனியும் தம்பி அச்சுதனும் என் மேல் பிரியமாகவே இருக்கிறார்கள்.

ஆனால் பொம்மலாட்டத்தில் பொம்மைகளின் நூல்களைப் பிடித்துஆட்டுவிக்கும் சூத்திரதாரியாய் சித்தி இருக்கும்போது அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலமை.

இப்போதும் தோட்டத்தில் பூப்பறித்துக்கொண்டிருந்தவளை அச்சுதன் ஓடிவந்து, “வசந்தக்கா உங்கள அம்மா கூப்பிட்றாங்க. சமையல் செய்யாம காலைல என்ன தோட்டத்துல செய்றா? அப்படீன்னு கண்டபடி கத்றாங்கக்கா” என்றான் பதட்டத்துடன்.

“அதிருக்கட்டும் அச்சுதா என்னை நீ ‘வசந்தம் அக்கா’ன்னு சொல்லவே மாட்டியா?”

“வசந்தம் ரொம்ப கர்னாடகப் பேருக்கா. வசந்தக்காதான் சொல்வேன்”

சிரித்தபடி போய்விட்டான் அச்சுதன்.

“இதென்ன பேரு வசந்தம்னு? வசந்தி வசந்த் வசு வசந்தா இப்படி இல்லாமவசந்தம்னு சகிக்கல,,” என்று சித்தி இருபத்தி அஞ்சுவருஷம் முன்பு அப்பாவைக் கை பிடித்த போதே கிண்டலாய் சீறினாள்.

சித்திக்கு நான் துக்கிரிதான்.பெத்ததாயை முழுங்கிய துக்கிரிப் பெண்ணாம். அதனால்

“ஏய் துக்கிரி பாத்திரம் தேய், ஏ துக்கிரி துணி துவச்சி போடு” என்றே அதட்டுவாள்.

அப்பாவுக்கு வசந்தம் என அழைக்க ஆசை இருந்தும் சித்தியின் கண்டிப்பினால் வசி என்றழைக்க ஆரம்பித்து விட்டாராம்.

இதை எனது ஏழாவது வயதில் சொல்லி விசும்பினார்.

பள்ளியில் கல்லூரியிலும் என் பெயரை வசந்தம் என்று கொடுத்திருந்தும் யாருமே அழைக்கவில்லை. வசந்தி என்றே சுருக்கிவிட்டனர்

ஆசிரியர் பயிற்சி முடித்து எங்கள் கிராமத்தில் ஆசிரியை பணிக்குப் போன பள்ளிக்கூடத்தில் சக ஆசிரியர் எழிலன் என்னை ‘வசந்தம் டீச்சர்’ என அழைத்த போது பரவசமாகிப் போனேன். எழிலன் சேலத்திலிருந்து புதிதாக பள்ளியில் வேலைக்கு சேர்ந்தவர்.

“வசந்தம்! ஆஹா! அழகான் பெயர்!”…என்றார். முப்பது வயது இருக்கும் எழிலான இளைஞர் தான் பெயருக்கு ஏற்றமாதிரி.

எழிலனுக்கு இசையிலும் கவிதை எழுதுவதிலும் மிகவும் ஆர்வமாம். “அப்படியே எங்கம்மாவின் குணங்கள் உங்ககிட்ட இருக்கு!” நெகிழ்ந்தேன் நான்.

என்ன செய்வது மனதின் இயல்பு அது. அன்பை மழையாய்பொழிபவர்களிடம் அடிமையாகித்தான் போகிறது. அதிலும் ஏச்சும் பேச்சும் மட்டுமே கேட்டுக் கிடந்த வறண்ட பாலை வாழ்க்கைக்கு அன்புச்சுனை எங்கிருந்தாலும் அது அமுதமாகிவிடுகிறது.

“காலங்களில் அவள் வசந்தம்!” என்ற பாடலை பள்ளி ஆண்டு விழாவின் போது எழிலன் பாடிய காரணத்தை நான் மட்டுமே அறிவேன். அவர் பார்வை அப்போது என் மீதே பதிந்திருந்தது. ‘ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதல் நான் தான் என்று அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்’ என்று பாடியபடி மறுபடி என்னை எழிலன் பார்த்தபார்வை..அப்பப்பா…. இப்போது நினைத்தாலும் கன்னம் சிவக்கிறது. நெஞ்சு பூரிக்கிறது.

ஆனாலும் என் விருப்பத்தை எழிலனிடம் நான் சொல்லத் தயங்கினேன். சித்தியின்பிடிவாதமும் அரக்ககுணமும் அனைவரும் அறிந்த கதைதான். எழிலனுக்கும் என் குடும்பக் கதை தெரிந்திருந்தபடியால் இருவருமே காதலை வற்புறுத்திச் சொல்லிக் கொள்ளவில்லை.

காதலைச் சொல்ல வார்த்தைகள் வேண்டுமா என்ன கண்களின் வார்த்தைகள் போதாதா?

தம்மை விரும்புகிறவர்களோடு வாழ பலருக்குக் கொடுத்துவைப்பதில்லை. அதனாலேயே வந்த வாழ்க்கையை வேறு வழியின்றி விரும்பி ஏற்கிறார்கள்.

“வசந்தம்! உங்களுக்காக என் இதயக்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். அது மட்டும் உறுதி. எல்லாரையும் பகைத்துக்கொண்டு நாம் வாழமுடியாதுதான். ஆனால் உங்க நலனுக்காக என் மனம் வேண்டிக்கொண்டே இருக்கும் வசந்தம்!”

எழிலன் அண்மையில் இப்படிச் சொன்னபோது என்னையுமறியாமல் என் கண்கலங்கித் தான் போனது.

பூக்களை கைபறித்தாலும் மனசு எங்கங்கோ போய் ஏதேதோ எண்ணங்களைப் பறித்துப் போட்டது. திக்கற்றவர்களின் எண்ணங்கள் கூட உதிரிப்பூக்கள் தான்.

“ஏ துக்கிரி எங்கடிதொலைஞ்சே?”

சித்தியின் கூப்பாடு என்னைக்கலைத்துப் போட பின் கட்டு தோட்டத்திலிருந்து உள்ளே கூடத்துக்கு ஓடிவந்தேன்.

“ஏய்..இப்போ அரைமணில.உன்னைய ஓமலூரிலேந்து பொண்ணு பாக்கவராங்க…டவுனுக்காரங்க..பையனுக்கு பாங்குல ப்யூன் வேலையாம்..ஒரே பையன் , நாலு தங்கச்சியாம். காலு கொஞ்சம் ஊனமாம் பையனுக்கு. நான் பரவால்லன்னுட்டேன். அதனால சீர்வகைகள் நமக்கு கணிசமா குறையுதே அதான்.”

 அப்பா ஏதோ பேச வாய் திறந்தார், ஆனால் சித்தியின் உஷ்ணப் பார்வையில் மௌனமானார்.

 பலி ஆடு போல நான் பெண் பார்க்க வந்தவர்கள் முன்பு வந்து நின்றேன்.

“பொண்னைபிடிச்சிருக்கு எங்களுக்கு” என்று பையனின் தாயார் சொன்னதும் சித்தி வாயெல்லாம் பல்லானாள்.

“எதுக்கும் பொண்னையும் கேட்டு சொல்லுங்க”

“அவளை என்ன கேக்கறது? எல்லாம் பிடிச்சிருக்கும். எங்களுக்குப் பிடிச்சா போதும்”

“அதுக்கில்ல பையனுக்கு கால் ஊனம்..”

“அது பரவால்லீங்க”

“பொண்ணு நல்ல சிவப்பு. பையன் கறுப்பு”

“ஐய ஆம்பிளங்களுக்கு அளகே கருப்புதான்”

“பையனுக்கு நாலுதங்கச்சிங்க,கல்யாணம் ஆகணும்.. தனிக்குடித்தனமெல்லாம்  நடக்காது. எல்லாரும் சேந்துதான் இருக்கணும்”

“அட அதுக்கென்ன, அவ இருப்பா உங்க கூடத்தான்”

“பையனுக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு, அதனால வீட்டைகவனிக்காம இருக்க மாட்டான்.”

“அது அப்டித்தான் இளவயசுல்ல…பொறுப்புவந்தா எல்லாம் சரியாகும்”

“அப்றோம் ராதிகாம்மா…?”

“என்ன சொல்லுங்க.. கல்யாணத்தேதி குறிக்கறது பத்தி தானே கேக்கப்போறீங்க?”

“அதுக்குமுன்னாடி…. உங்க வீட்டுப் பொண்ணு பேரு வசந்தம்னு இருக்கில்ல, அதே பேர்ல எங்க மாமியார் பேரும் இருக்கு..எங்க மாமியார் பேரை நான் முகத்தில அடிச்ச மாதிரி கூப்பிட ஆவாது. அவங்க 94வயசுல வீட்டோட கிடக்கறாங்க.. அதனால பொண்ணு பேரை மாத்திடணும். வசந்தம் என்கிறது பழங்காலப்பேரு வேற..என் மகனுக்குப் பிடிச்ச மாதிரி மாடர்னா புதுசா வர்ஷான்னு மாத்திடலாம். கல்யாணப் பத்திரிகைல இந்தப் பேருதான் போடணும். என்ன இதுக்கு சம்மதமா?”

“ஆஹா வெறும் பேருதான மாத்தணும்? மாத்திட்டாப்போச்சி..வசந்தம் எனக்கும் பிடிக்காத பெயருதான். வர்ஷா நல்லாருக்…”

சித்தி இப்படிச்சொல்லும்போது நான் ஆவேசமாய்குறுக்கிட்டு கத்த ஆரம்பிக்கிறேன் “என்ன! பேரை மாத்தறதா? அதுக்கு என்கிட்ட அனுமதி கேட்டீங்களா? நான் இதுக்கு சம்மதம் தருவேன்னு நினச்சீங்களா?”

சித்தி என்னை எரிப்பதுப்போல பார்க்கிறாள். பிறகு, “நீ என்னடி அனுமதியும் சம்மதமும் தர்ரது? பொறந்த ஒரே வருஷத்தில பெத்தவளை முழுங்கின துக்கிரி அதிர்ஷ்டக்கட்டை! உனக்கு இத்தனை வயசாகி இந்த வாழ்க்கை கிடைக்க நாந்தான் காரணம். அதை மறந்து நடுச்சபைல கூச்சலாபோடற?” என்றாள் வெறுப்போடு.

நான் ஒருக்கணம் அமைதியாய் நிற்கிறேன், பிறகு அனைவரையும் நோக்கிகைகுவித்தபடி, “எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன்..மனிதர்கள் முதலில் தன்னை, தன் பெயரை நேசிக்கணும். அப்போ தான் மத்தவர்களையும் மற்றவர்களின் பெயர்களிலும் ஒர் அபிமானமும் மரியாதையும் இருக்கும். நான் என் பெயரை நேசிக்றேன். செத்துப்போன என் அம்மா எனக்கு வைத்த பெயரை நான் எதுக்காக மாத்திக்கணும்? என் பெயரையும் என்னையும் மதிக்கிற ஆத்மா எனக்காக காத்திட்டிருக்கு, என் வாழ்க்கை இனி இங்கே தொடராது அங்கேதான்…” என்று பேசிவிட்டு அப்பாவை ஏறிட்டேன். அவர் கையசைத்து விடைகொடுத்தார்.

மௌனமாய் நான் வெளியேறியபோது சித்தியின் காட்டுக்கூச்சல் தெருக்கோடிவரை தொடர்கிறது.

 எப்போதோ வாசித்த கவிதை ஒன்று அடிமனசிலிருந்து கீறிக்கொண்டு வருகிறது.

“நெடுந்தூரக்கனவில் நலிந்து
உடைந்ததென் கண்ணாடி
சிதறிய சில்லுகளில் தெறிக்கும்
தூரங்களில் சரிந்து செல்லும்
நினைவுகளின் ஆங்கார ஓசை
எதிரொலிக்கும் எல்லாதிசைகளிலும்
கனவுகளின் குரல்கசியும்”

கூர் அலகைவைத்துக்கொண்டு குருவி ஒன்று இதயத்தைக் குத்துவது போல வேதனை.

அன்புச்சுனையில்தான் என் வேதனைகளை கழுவிக்கொள்ளவேண்டும்.

வாழ்க்கையின் வசந்தப்பாதையை அறிந்துவிட்டது போல கால்கள் எழிலனின் இருப்பிடத்தை நோக்கி வேகமாய் நடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *