அவளும் அவனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 8,189 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவள் அழகாகவே இருந்தாள். பார்த்தவுடன் மனதை வசீகரிக்கின்ற புன்னகை. மல்லிகை மொட்டுகளாய் பல் வரிசை எப்போதுமே முகத்தினிலே மணக்கிறது. அந்தப் பளீச்சென்ற புன்னகை. கூரான மூக்கு. சீராயமைந்த ரோஜா உதடுகள். நடந்து வருகின்ற போதே மற்றவர் களிடமிருந்து தனியாகத் தெரிகின்ற கம்பீரம். எந்த வண்ணத்திற்கும் பொருந்திப் போகின்ற ஒருவித மஞ்சள் வண்ணமான உடல் நிறம். கண்ணுக்கு எப்போதுமே சற்று அதிகமாகத்தான் மையிட்டுக் கொள்வதால் புன்னகைக்கு அடுத்ததாயோ சமமாகவோ எவரையும் தொடுகின்ற கண்கள் அவளுக்கு.

பஸ்ஸிலிருந்து இறங்கி ஒவ்வொரு நாளும் அவள் ஐந்து நிமிஷ தூரத்திற்கு நடந்து சென்றே வேலை செய் கின்ற இடத்தை, அந்த டிப்பார்ட்மெண்டல் ஸ்டோரை’ அடையவேண்டும். ‘எலக்ரானிக்ஸ்’ சம்பந்தப்பட்ட விற்பனை நிலையம் அது. கடுமையான சட்ட திட்டங் கள் அங்கே. எல்லாவற்றையும் விட மிகவும் முக்கிய மானது அங்கே மிக வசீகரமாகத் தோற்றங் கொடுக்க வேண்டுமென்பதுதான்.

கமலாதான் அவளிற்கு அந்த ‘சேல்ஸ்கேர்ள்’ வேலையினை வாங்கிக் கொடுத்தவள். தற்செயலாக ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம், கமலாவை தேவிகா சந்தித்தபோது பழைய நட்பின் தொடர்புகள் மீண்டும் அரும்பி மலர்ந்தன. தேவிகா தன்னுடைய அன்றாடக் கஷ்டங்களையும், எதிர்காலம் பற்றிய அச்சத்தையும் கமலாவிடம் விபரித்தாள். கமலா மிகப்பரிவோடு அவள் சொல்லியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ பொறுத்துக்கொள்…. எங்களுடைய ஸ்டோரில் சிலர் தேவைப்படுகிறார்கள். ஆனால் ஒன்று, சில கட்டுப்பாடுகள் அவர்களிடமுண்டு. மிகக் கச்சிதமாகத் தோற்றமளிக்கிறவர்களைத்தான் அவர்கள் வேலைக்கு எடுத்துக் கொள்ளுவார்கள். உன்னைப்பொறுத்தவரையில் அதிலொன்றும் பிரச்சினை இல்லை . நீ மிகவும் அழகானவள். ஆனால் முதல் சில மாதங்களிற்கு உனது ‘டிரஸ்’சுக்கு நீ கொஞ்சம் அதிகம் செலவழிக்க வேண்டும். மற்றது உன்னை யாரும் வேலை நேரங்களில் இங்கே வந்து சந்திக்கக்கூடாது. அடிக்கடி நீ லீவு எடுக்கக்கூடாது. எந்நேரமும் வேலை செய்யத் தயாராயிருக்க வேண்டும். தொழிற்சங்கம் அது இதென்றால் உடனேயே டிஸ்மிஸ்…”

மூச்சை இழுத்துக் கொண்டே தொடர்ந்தாள் கமலா.

ஆனால் தேவி… இன்றைக்கு நாங்கள் எங்கேதான் வேலை தேடிப்போனாலும், இதைவிட மோசமான நிலைமைகள் தான் உள்ளன. கையிலே சம்பளத்தை எங்களுக்கு தருகிற வேளையிலேயே, எங்களை தங்களுடைய அடிமைகள் போல நினைக்கிற நிலைமை தான் எங்குமே உள்ளது. அவற்றோடு ஒப்பிடுகிறபோது இங்கே நல்ல சுதந்திரம் இருப்பதாகவே எனக்குப் படு கின்றது…எதற்கும் யோசித்து உன்னுடைய முடிவைச் சொல்லு…”

தேவிகா தீர்மானமாக கமலாவைப் பார்த்தாள்.

“இல்லை கமலா… நீ சொன்னதற்குப் பிறகு நான் இதைப் பற்றி யோசிக்க ஒன்றுமில்லை. என்ன கஷ்டமான வேலையாக இருந்தாலுங்கூட, இப்போது எனக் குள்ள நிலைமையிலை அதை நான் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்…”

கமலா நிறைவோடு அவளைப் பார்த்தாள்: “நல்லது… நீயும் என்னோடு வேலைக்கு வந்தாயானால் எனக்கு மிகச் சந்தோஷமாயிருக்கும். நான் உன்னை இன்னும் சில நாட்களுக்குப் பிறகு வந்து சந்திப்பேன்…”

சொல்லிவைத்து பத்து நாட்களின் பின்னர், ஞாயிற் கிழமை காலை-கமலா, தேவிகாவை அவளது வீட் டிலே வந்து சந்தித்தாள்… கமலாவைக் கண்டதும் திகைத்துப் போய்விட்டாள் தேவிகா. சாதாரண நேரத்திலேயே அவளது குடிசை அலங்கோலமாயிருக் கும். மூன்று தினங்களாய் பெய்த மழை குடிசையை இன்னும் மோசமாக்கியிருந்தது. முன்புறத்திலே ஆடுகள் குட்டிகளோடு எவ்வித இடையூறுமின்றிப்படுத்திருந்தன. அவற்றை “சூசூ” வென்று கலைத்தபடியே கமலாவை அழைத்து உள்ளே கூட்டிச் சென்றாள் தேவிகா.

“நிலமெல்லாம் தண்ணீர் ஊறிவிட்டது. இந்த சின்ன ஸ்டூலில் நீ உட்கார்ந்துகொள். உனது சேலை கசங்கிப்போய்விடும். சேலையைக் கொஞ்சம் உயர்த்திக் கொண்டு உட்கார்…. நீ ஒரு ‘கார்ட்’ போட்டிருந்தால் நானே உன்னை வந்து சந்தித்திருப்பேன்…. இங்கே யெல்லாம் நீ வந்து…”

தேவிகாவிடம் பரபரப்பு. வருத்தம். மெலிதான கோபம்.

புன்னகையோடு அவளை ஏறிட்டாள் தேவிகா.

“இப்போது என்ன?… நீ ஏன் இவ்வளவு பதட்டப் படுகிறாய்? எல்லா இடத்திலுந்தான் மழை பெய்திருக் கிறது. இப்படித்தானிருக்கும்… அதெல்லாம் சரி. இப்போது நீ என்னோடு புறப்பட்டு வரப்போகிறாய்…”

கையிலிருந்த பார்சலைப் பிரித்தவாறே சொன்ன கமலாவை வியப்போடு பார்த்தாள் தேவிகா.

“எங்கே போக?”

“டெய்லர் கடைக்கு…” சொன்னவாறே பார்சலினுள் இருந்த மூன்று பிளவுஸ் துணிகளை வெளியே எடுத் தாள் கமலா. “உனக்கு பிளவுஸ் தைக்க வேண்டும். இந்தக் கலர்கள் உனக்குப் பிடித்திருக்கிறதா பார்?… உனக்கென்ன… உன்னுடைய நிறத்துக்கு என்ன “கலரா’யிருந்தாலும் அது நன்றாக மாட்ச்’ ஆகும்… ஏன் இப்பிடித் திகைத்துப்போய் நிற்கிறாய்? கையில் தான் வாங்கிப்பாரேன்… பிடி…”

திடீரென்று இதயத்துள் நெகிழ்வு பொங்கிற்று தேவிகாவுக்கு. தொண்டை அடைத்து வார்த்தைகள் நெஞ்சினுள்ளேயே அமுங்கிப்போயின. பொட்டென்று கண்களில் கண்ணீர் உடைந்தது. அந்தப் பிளவுஸ் துணிகளை கையில் வாங்கியபடியே கணங்களாய் பேச்சற்று நின்றாள்.

“என்ன கமலா … இதெல்லாம் எனக்கு; எனக்குத் தானா ?…..”

கமலா புன்னகை செய்தாள்.

“உனக்கே…. இதோ…. இந்த இரண்டு ஸாரிகள் கூட உனக்கே… ஏன் தெரியுமா? இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை இருபத்தெட்டாந்திகதி. நீ முதலாந் திகதியிலிருந்து என்னுடைய ஸ்டோருக்கு வேலை செய்ய வருகிறாய்….அதற்கான முன்னேற்பாடு இது….இதையெல்லாம் பெரிதாக எடுக்காதே… இந்தப் பொருட்களுக்கான பணத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக எனக்கு நீ திருப்பித் தந்துவிடு… அதுவும் அவசரமா யில்லை…. அதையெல்லாம் பிறகு பேசிக் கொள்ள லாம்… இப்போது நீ புறப்படு…”

தேவிகாவின் தாய் அப்போதுதான் தண்ணீர்க் குடத்துடன் அவசர அவசரமாக உள்ளே வந்தாள். எதிரே ஸ்டூலில் வண்ணப்பூவாய் உட்கார்ந்திருக்கிற கமலாவைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள். பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டே தண்ணீர்க் குடத்தை குடிசை மூலையிலே வைத்துவிட்டு அவசர மாகவே வெளியே போனாள். வெளியே அவளுடைய இரண்டு பெண்களும் ஒதுக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதனைக் கண்ணுற்றாள். உள்ளே வெகு நேர்த்தியாக உடை உடுத்தி அழகாக உட்கார்ந்திருக் கின்ற அந்தப்பெண் யாரென்று அவர்களைப் பார்த்து மௌனத்தாலேயே வினவினாள் தாய்.

அந்தப் பெண், அக்காவைத் தேடிக்கொண்டு வந்திருக்கிறாள். என்ன அழகான ஸாரி உடுத்திருக் கிறாள் பார்த்தாயா? அசப்பிலே பார்த்தால் ஸ்ரீதேவி மாதிரி இருக்கிறாள்….”

தாய்க்கு உள்ளே போவதா வெளியே நிற்பதா என்று முடிவினுக்கு வரமுடியவில்லை. தீர்மானத்துக்கு வர இயலாமல் நின்றவளை வெளியே வந்த தேவிகா சுய நினைவிற்கு கொண்டுவந்தாள். வந்திருந்தவள் யாரென் பதைக் கூறிவிட்டு, பின்பக்கத்திலே- காயப்போட்ட துணி அரைகுறையாகத் தான் காய்ந்திருக்குது. இப்போது கமலாவோடை வெளியே போகவேணும்… என்ன செய்கிறது இப்போது?” என்றாள் தேவிகா.

தாய் தெளிவோடு அவளைப் பார்த்தாள்: “உன்னுடைய சீலை ஒன்று பெட்டிக்குள்ளே இருக்க வேணும்… எனக்கு நன்றாக நினைப்பில் இருக்கிறது…”

தேவிகாவிற்கு தலையிலிருந்த குழப்பம் பாதி குறைந் தாற் போலிருந்தது. “அப்படியிருந்தாலும் அது கசங்கிப் போய்த்தானிருக்கும். அதுக்கு ஏற்ற பிளவு சும் வேணுமே….”

“நான் உள்ளே போய்ப் பார்க்கிறேன்… எதுக்கும் நீ முதலில் போய் அந்தப் பெண்ணோடு பேசிக் கொண்டிரு…”

பதினைந்து நிமிஷங்களில் மங்கிப்போன அந்த நீல நிற ஸாரியையும், பிளவ்சையும் இஸ்திரி போட்டுக் கொண்டு வந்துவிட்டாள் தாய். அவற்றை அணிந்து கொண்டு கமலாவோடு புறப்பட்டபோது தேவிகாவுக்கு கொஞ்சம் வெட்கமாகவே இருந்தது.

முதல் நாளன்று புதிய ஆடைகளை அணிந்து கொண்டு வேலைக்குப் புறப்பட்ட மகளைப் பார்த்ததும் திகைத்து ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள் தாய். மெல்லிய நீலவர்ணப் புடவையினுள் பளீச்சென்று தோன்றிய மகளின் அழகை அன்றுதான் கண்டாற்போல பரவசமடைந்தாள் அவள்.

“என்னுடைய கண்ணே பட்டுவிடும் போலிருக்குது… ராசாத்தி மாதிரி இருக்கிறாய்… வீட்டிலை இனி கொஞ்சம் பெரிய கண்ணாடியாய் வாங்கி வைக்க வேணும்…”

மகளின் அருகே போய் அவளது நெற்றியிலே துளிர்த்திருந்த வியர்வையை மெல்லத் துடைத்து விட்டாள் தாய்.

தங்கள் பகுதியிலே வந்து குதித்த தேவதையைப் போல இப்போது தேவிகாவைப் பார்த்தார்கள் அந்தப் பகுதிப் பெண்கள். அவளோடு வலிந்து பேசினார்கள். சிரித்தார்கள். நேயங்கொண்டார்கள். தங்களையும் அவளைப் போலவே வேலையில் சேர்த்துவிடும்படி மெல்லிய குரலிலே இறுதியாகக் கேட்டுக் கொண்டார்கள், தேவிகாவின் கைகளைப் பற்றியபடியே.

2

தேவிகா இரண்டு நாட்களாக அவனை அவதானித்திருக் கின்றாள். பஸ்ஸிலிருந்து இறங்கி அவள் நடக்கத் தொடங்கியதும் அவனும் சொல்லிவைத்தாற்போல அவளைப் பின்தொடர்கின்றான். திரும்பிப்பார்த்தால் வேறெங்கோ பார்வையைத் திருப்பிக் கொண்டு நடந்து வருகின்றான். காலையிலும் மாலையிலும் இப்படித்தான். ஸ்டோர்சிலிருந்து பஸ் நிலையம். பஸ் நிலையத்திலிருந்து ஸ்டோர்ஸ் வரை. சந்தேகமில்லாமலே தன்னை அவன் தொடர்கிறானென்பதனை தேவிகா நன்றாக உறுதிப் படுத்திக் கொண்டாள்.

மூன்றாவது நாளும் அவன் அப்படியே அவளைப் பின் தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தபோது திடுமென அவனை அவள் திரும்பிப் பார்த்தாள். அவன் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதனை அவனுடைய திகைத்துப்போன முகம் தெளிவாகவே எடுத்துச் சொல்லிற்று.

“என்ன விஷயம்? எந்த நாளுமே என்னைப் பின் தொடர்கிறாயே… உனக்கு வேறை எந்த வேலையும் இல்லையோ ?…”

அந்த வார்த்தைகள் அவனை உதைத்த கடுமையில் என்ன செய்வதென்றே தெரியாமல் அவன் அசைவற்று நின்றான். அந்தக் கணங்களிலேதான் அவனுடைய முகத்தினை அவள் நன்றாகவே கண்டு கொண்டாள்.

அவன் அழகாகவே இருந்தான். சுருள் முடி. பார்த்தாலே உடனே மனதில் பதிந்துவிடுகிற முக அமைப்பு. கம்பீரமான உடல்வாகு. பளீச்சென்று தோன்றினான்.

தேவிகா அதே வேகத்தில் திரும்பி, மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். கொஞ்ச தூரம் நடந்தவளுக்கு திரும்பிப் பார்க்க வேண்டும் போல மனம் உன்னியது. திரும்பி னாள். ஆச்சரியமாயிருந்தது. இன்னமும் அவன் நின்ற இடத்திலேயே-அதே நிலையில் நின்றிருந்தான்.

தான் இவ்வளவு கடுமையாக யாரோடும் இதுவரை காலமும் நடந்ததில்லையே என்று நினைத்த போது இவளுடைய மனதில் இலேசான துயரம் கீறிட்டது. அவனை ஒருமுறை உறுத்துப் பார்த்ததோடு நிறுத்தி யிருக்கலாம். மிக ஆத்திரத்தோடு ஏக வசனத்திலே திட்டியிருக்கத் தேவையில்லையே என்று மனம் அங்கலாய்த்துக் கொண்டது.

ஸ்டோர்ஸில் ஆள் நடமாட்டம் குறைந்தபோது இவள் சாவகாசமாக நாற்காலியில் உட்கார்ந்து கொண் டாள். வெளியிலே இருந்து குளுகுளுவென்று காற்று வீசிக் கொண்டு உள்ளே நிறைகையில் உடலுக்கு மிகவும் இதமாயிருந்தது. எதிரேயுள்ள சடைத்துச் சிலிர்த்த வேப்பமரத்தின் உபயமே அந்தத் தென்றல். காற்றினைப் போலவே மனதினை நிறைக்கின்ற கரும் பச்சையான வேப்பிலைகளில் இப்போது துணுக்குகளாய் தலை நீட்டுகின்ற மஞ்சட் பூங்கொத்துகள். வெளியே சென்ற அவளது பார்வையிலே இப்போது மீண்டும் அவன் தோன்றினான் திடுமெனவே.

தேவிகா திகைத்துப் போனாள்.

இவன் வெய்யிலுக்காகத்தான் வேப்பமரத்தின் கீழே வந்து நிற்கின்றானா, அல்லது தன்னைப் பார்ப்பதற்காகவா?

தேவிகா யோசனையோடு பெருவிரலால் முன் பற்களை லேசாகத் தட்டியவாறே, வேப்பமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் பார்வை இப்போது தன்னை நோக்கிப் பரவு வதை அவள் உணர்ந்தவறே நினைத்தாள். காலையில் இவனுக்கு கொடுத்த திட்டுதல் போதாமலிருந்தாலே தான் இப்படி இவன் வந்து நிற்கிறானா? இவனுக்காக இரக்கப்பட்டதே தவறுதான் போல இருக்கிறது…சரி. சரி… இனி அப்படி நடக்கட்டும், பார்ப்போம்…!

கமலா உலுப்பிய போதுதான் மீண்டும் சுய நினைவிற்கு வந்தாள் தேவிகா: “என்ன தேவி… சாப்பாட்டைக் கூட மறந்து போய் உன் பாட்டுக்கு யோசனையிலே அப்படி மூழ்கிப் போய்விட்டாய்… என்ன விஷயம்? எனக்குச் சொல்லு… ஏதாவது அப்படி இப்படியா?…”

வெட்கமுற்ற பார்வையோடு தேவிகா அவளைப் பார்த்தாள்.

“இல்லை… அப்படியொன்றுமேயில்லை …”

கமலா அவளை ஊடுருவினாள்.

“இல்லை தேவி…. நீ எதையோ எனக்கு மறைக்க நினைக்கிறாய்…ஆனால் அதைப் பற்றி ஒன்றுமில்லை….என்னவானாலும் நீ என்னிடம் சொல்லலாம். எதைப் பற்றியும் கூச்சப்படாதே…ஏன் உனது வீட்டில் ஏதேனும் கஷ்டமா?…”

தேவிகாவிற்கு மனதினுள் என்னவோ கனத்தது. நன்றியோடு கமலாவைப் பார்த்து, ”இல்லை… அப்படி ஒன்றுமே இல்லை …” என்றாள். பிறகு இருவரும் சாப்பிடுவதற்காக டிபன் காரியர்களுடன் உள்ளே சென்றார்கள். போய்க் கொண்டிருக்கையில் தேவிகாவைப் பார்த்து இளவரசி ஆச்சரியமான குரலிலே, “என்ன தேவி…. முகம் வாடிப்போயிருக்கிறாய்” என்று கேட்டாள்.

கமலா அர்த்தபுஷ்டியோடு தேவிகாவைப் பார்த்து, “இதற்கு என்ன பதிலினைச் சொல்லப் போகிறாய்?” என்று கேட்டாள். தேவிகா எதையும் பேசாமலே டிபன் காரியரைத் திறந்தாள்.

மீண்டும் அதட்டுகிறாற்போல ஆனால் தணிந்த குரலிலே, “நீ ஏன் கையலம்பவில்லை ?” என்று கேட்டாள் கமலா. அவளைப் பார்க்கவே சங்கட மாயிருந்தது தேவிகாவுக்கு இப்போது. கையை அலம்பிக் கொண்டே நினைத்தாள். நான் இதை அப்போதே கமலாவுக்கு சொல்லியிருக்கலாம்… இவன் என்னைப் பின் தொடர்ந்து வந்தானென்பதை சொல்ல நான் ஏன் தயங்கினேன்… அதுவும் இப்படியான ஒரு நல்ல சினேகிதிக்கு…..’

சாப்பிட்டு முடிந்து ‘கவுண்டர்’ பக்கமாக வந்ததும் வேப்பமரத்தடிக்குத்தான் பார்வை சென்றது. இன்னும் அவன் நின்றிருந்தான். கவுண்டர் பக்கமாகவே பார்த்த படி நின்றிருந்தான். இவள் பார்த்ததும் அவசரமாக மறு பக்கமாகத் திரும்பி நின்று கொண்டான். இவளுக்கு சிரிக்க வேண்டும் போலிருந்தது அவனது அவசரத்தைப் பார்த்து. தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

3

பஸ்ஸிலிருந்து இறங்கியதும் வழமையாகவே அவன் நிற்குமிடத்திலே தேவிகாவின் பார்வை விழுந்தது. கடந்த இருபது நாட்களிலும் இன்றுதான் அவன் அந்த இடத்திலே காணப்படவில்லை. எவ்வளவோ திட்டின பிறகும் அவளை அவன் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தான்.

இன்றைக்கு அவன் எங்கே போயிருப்பான்? நேற்றும் அவனை அவள் திரும்பிப் பார்த்தாள். முகம் நன்றாகத் தானிருந்தது. ஆகையால் ஏதும் சுகவீன மாயிருக்க நியாயமில்லை. எங்காவது அவசரமாகப் போயிருக்க லாம். அவன் எங்கு போனால்தான் எனக்கென்ன என்று தன்னையே இப்போது கடிந்து கொண்டாள் தேவிகா. அவளைத் தாண்டிக்கொண்டு ஒருவன் வேகமாகச் சைக்கிளில் சென்றதைப் பார்த்தாள் தேவிகா. இது போல துளிர் நீல ஷேர்ட்டை அடிக்கடி அவன் அணிந்து வந்ததை – அவள் கண்டிருக்கின்றாள். சைக்கிளில் போனவன் திரும்பிப் பார்க்காமலே வேகமாகப் போய்க் கொண்டிருந்தான். இவளையறியாமலே மனதினுள் ஏமாற்றம் பெருமூச்சு விட்டது.

அவனாயிருந்தால் நிச்சயம் திரும்பிப் பார்த்திருப்பான் என்று தேவிகாவின் மனம் கூறிற்று. பின்னர் அலுத்தும் கொண்டது. இன்றைக்கு அவளும் துளிர் நீலத்திலேதான் ஸாரி அணிந்திருந்தாள்.

தங்கச்சி பவளமணி, சம்பளம் எடுத்ததும் இதே போல ஸாரியொன்று தனக்கு வாங்கித் தரும்படி கேட்டி ருந்தாள். அது மட்டுமில்லை. ஒவ்வொருநாளும் அக்கா விற்கு அவள் தான் தேநீர் கலந்து கொடுப்பவள். அக்கா வின் துணிமணிகளை எல்லாம் அலம்பிப் போடுவது, இஸ்திரிக்கை போட்டு வந்து கொடுப்பது எல்லாமே அவள் தான். முன்பை விட இப்போது குடிசையையும் நல்ல துப்புரவாக அவளே கூட்டிப் பெருக்குகின்றாள். முந்தா நாள்க் காலையில் தேவிகாவுக்கு அருகாக வந்து காதோடு கிசுகிசுத்தாள் பவளமணி.

“அக்கா, எனக்கும் உன்னைப் போல வேலைக்குப் போக விருப்பமாயிருக்கிறது, என்னை உனது ஸ்டோரிலே சேர்த்து விடுகிறாயா?”

திகைத்துப் போய் அவளைப் பார்த்தாள் தேவிகா. பவளமணி அசப்பில் அப்படியே தேவிகாதான். நிறம் மட்டும் மங்கலாக.

“வீட்டுக்குள்ளேயே இருக்க அலுப்பாய் இருக்கிறது. வேலைக்குப் போனால் சந்தோஷமாயிருக்கலாம்…. அக்கா, வேலைக்குப் போகத் தொடங்கினதுக்குப் பிறகு நீ எல்வளவு அழகாகிவிட்டாய். உன்னைப் போல வர நான் ஆசைப்படுகிறதிலை என்ன தவறிருக்கிறது?”

தேவிகா திகைப்பிலிருந்து மீண்டாள்: “நீ என்னவோ நினைத்துக் கொண்டு என்னவோ பேசுகிறாய்….”

“இல்லை அக்கா…. அம்மாவும் இதை உன்னோடு பேசும்படிதான் சொன்னவ…”

நிறுத்திவிட்டு, தேவிகாவைப் பார்த்தபடியே தொடர்ந்தாள் பவளமணி.

“அக்கா… நான் அதிகமாகப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். உண்மையாகச் சொன்னால் இந்தப் பக்கத்திலை உள்ள எல்லாப் பெண்களுமே உன்னைப் போல இருக்கவே விருப்பப்படுகிறார்கள். உன்னைப் பற்றி இதனாலே எங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கிறது தெரியுமா? நீ வேலைக்குப் போனதுக்குப் பிறகு என்னென்ன பொருட்களை யெல்லாம் வாங்கித் தீரவேண்டுமென்று அம்மா கணக்குப் போட்டு வைத்திருக்கிறா என்று உனக்குத் தெரியுமா… உன்னோடை சேர்ந்து நானும் வேலைக்கு வரத் தொடங் கினால் இன்னும் எவ்வளவு நன்றாக நாங்கள் இருக்கலாம்…*

சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, பவளமணியின் முகத்தில் எல்லையில்லாத பரவசம்.

“சரி இதைப்பற்றி பிறகு பேசலாம்” என்று கதை யினை அவ்வளவோடு முடித்தாள் தேவிகா. இந்த மாதம் சம்பளத்தை எடுத்ததும் என்னென்ன செய்ய வேண்டும் என்ற பட்டியலை முதன் முறையாக மனதினுள்ளே கொண்டு வந்தாள் தேவிகா. ஆயிரத்து இருபது ரூபாவுக்கு கணக்கு வந்தது. இவள் திகைத்தே போனாள், இவ்வளவுக்கும் அவளது மாதச்சம்பளம் முன்னூற்றி இருபத்தைந்து ரூபா.

திடீரென்று கேட்ட சைக்கிள் மணி ஓசை அவளது யோசனைகளை நிறுத்திற்று. எதிரே சைக்கிளில் அந்த துளிர் நீல ஷேர்ட்காரன் வந்துக்கொண்டிருந்தான். இவனை அவள் முதற்பார்வையிலேயே அறிமுகமில்லாத வனாகக் கண்டாள். இவன் ஏதோ அவசரத்திலே விரைந்து அவளைத்தாண்டிச் சென்றான். இப்போது மீண்டும் அவனைப் பற்றிய நினைவு தேவிகாவின் மனதிலே அடியெடுத்துவைத்தது.

அவனைப் பற்றி ஒரு நாள் கமலாவும் அவளிடம் மிகவும் நாசுக்காகக் கேட்டிருக்கின்றாள்.

“என்ன தேவி… நானும் சிலநாளாக கவனித்துப் பார்த்தேன். யாரோ ஒருவன், நீ வேலை முடிந்து போகிற போது உன்னையே பின் தொடர்ந்து வருகிறான்…”

தேவிகா மனதினுள்ளே, உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு சாதாரணமாகச் சொன்னாள்: “அப்படியோ… நான் கவனிக்கவில்லையே…”

அந்தப் பதில் கமலாவைத் திருப்திப்படுத்தவில்லை.

“என்னவோ எனக்குத் தெரியாது. இந்தக் காலத்திலை எங்களை இலேசாகவே ஏமாற்றி விடுவார்கள், கவனமாக இருந்து கொள். அவசியம் ஏற்பட்டால் உன்னுடைய செருப்பையே நீ உபயோகித்துக் கொள்ள லாம்… அல்லாவிடில் பிறகு வருத்தப்படவேண்டி வரும்…”

தேவிகாவுக்கு கமலாவின் வார்த்தைகளிலுள்ள முரட்டுத்தனத்தைக் கேட்க என்னவோ போலிருந்தது. ஆனால் அப்போது அதையிட்டு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. புன்னகையோடு அவளைப் பார்த்தாள்.

“சரி கமலா… இனிமேல் நான் அவனைக் கவனித்துக் கொள்கிறேன்…” என்றாள் தேவிகா, “சும்மா தமாசுக் காகத்தான் கேட்கிறேன். அவன் எப்படியிருப்பான்?”

இப்போது கமலா சத்தம் போட்டுச் சிரித்தாள். “அவனா? அவன் அழகாகத்தான் தோற்றமளிக்கிறான். சினிமா நடிகனைப் போல… ஆனால் உள்ளுக் குள்ளை இப்படியானவர்களெல்லாம் பச்சை அயோக்கியன்களாகவே இருப்பார்கள்…”

சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவளையறியா மலே கமலாவின் குரல் உடைந்து தளும்பியதை அவதானித்தாள் தேவிகா. இருக்கலாம். இவளும் யாரிட மாவது ஏமாற்றமடைந்திருக்கலாம். தோல்வியடைந்திருக்கலாம்.

… நினைவுகளை உடைத்து வெளியேறியவாறு எதேச்சையாக பின்னே திரும்பிப் பார்த்தாள் தேவிகா.

அவளது நெஞ்சு திடீரென அதிர்ந்ததை உணர்ந்தாள். அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள் அவள்.

அவன் அவசர அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால், பாவம். நெற்றியில் பெரிய கட்டுப் போட்டிருந்தது.

தேவிகாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன்னைச் சுதாரித்துக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். நிறையப் பேர் இப்போது அவளின் கண்களிலே தோன்றினார்கள். ஒவ்வொரு வரும் தன்னையும், அவனையும் விஷமத்தனமாகப் பார்த்துச் சிரிக்கிறாற்போல அவளுக்கு உணர்வு தட்டிற்று. குப்பென்று வியர்த்தது. முடிவுக்கு வராமலே திடீரென்று ஸ்டோர்சை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கவுண்டரில் போய் உட்கார்ந்தவளுக்கு வேலையில் கவனம் வரவில்லை. 18 ரூபாவையும் 23, ரூபாவையும் 31 ரூபா எனக் கூட்டினாள். 79 ரூபாவையும், 280 ரூபாவையும் 369 ரூபா எனக்கூட்டி ரஸீதை எழுதினாள் காஷியர் தன்னுடைய கவுண்டருக்கு அவளைக் கூப்பிட்டு கடுமையாக, மெதுவான குரலிலே திட்டினான். காஷ்யர் சிவசம்பு நல்ல மனிதன். சிவசம்பு வராமல் கணேசன் இன்று காஷியராக இருந்தால் விஷயம் அவ்வளவுதான். வீட்டிற்குப்போக வேண்டி வந்திருக்கும். தேவிகா தன்னைச்சுதாரித்துக் கொண்டு அவன் நிற்பதைப் பார்க்கமுடியாவண்ணம் சிறிது தள்ளியுள்ள ‘கவுண்டர்’ பக்கமாக நகர்ந்தாள்.

மாலையில் ஸ்டோர்ஸிலிருந்து அவள் புறப்பட்ட போது வேப்பமரப்பக்கமாகப் பார்த்தாள். அவன் இன் னொருவனுடன் எதையோ பேசிக் கொண்டு நின்றான். அவனிடமிருந்து கழன்று வர இவன் பகீரதப்பிரயத் தனம் செய்து கொண்டிருந்தானென்பதை, அவனது அலைந்த கண்கள் தெரிவித்தன. மற்றவன் தாடியும் மீசையுமாய் கண்கள் சிவந்திருந்தான். சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தான்.

தேவிகா கொஞ்சத்தூரம் சென்ற பின்பு திரும்பிப் பார்த்தாள். இன்னமும் தாடிக்காரன் அவனோடு பேசிக் கொண்டிருந்தான். இப்போது மிகுந்த அந்நியோன்னிய மாக அவனது கையைப் பற்றியவாறே பேசிக் கொண் டிருந்தான் அந்தத்தாடிக்காரன். இவளுக்கு மன தினுள்ளே லேசான எரிச்சல்.

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டே வீதியைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. கீழே நின்ற ஒருவன் தன்னை உறுத்துப்பார்த்தவாறு நிற்பதனை அப்போதுதான் அவள் கண்டாள். தனது உடல் முழு வதிலும் அவனது பார்வை புரள்வதை உணர்ந்த போது மனம் அருவருப்புற்றாள். உள்ள எரிச்சல் முழுவதையும் ஒன்றாக்கி வெளியே காறித்துப்பினாள். பஸ் புறப் பட்டதும் மீண்டும் வீதியைப்பார்த்தாள். அவனைக் காணவேயில்லை. தேவிகாவுக்கு எரிச்சல் ‘தாள’ முடியாமல் போயிற்று.

4

அவன் அவளோடு இப்போதுதான் முதன் முதலாகப் பேசினான். குரலிலே கண்ணியம் தொனித்திட அன்போடு அவளை நோக்கியபடியே தயங்கித்தான் பேச்சைத் தொடங்கினான்.

“மிஸ்… ஒரு விஷயம்…”

அவன் தனக்குப் பின்னாலே வருவதை உணர்ந்த வாறே, அவன் குரலைக் கேட்டதும் உடனேயே திரும்பி னாள் தேவிகா.

“என்ன?”

“இன்றைக்கு உங்களின் கடைப்பக்கம், எல்லாக் கடைகளும் பூட்டியிருக்கிறார்கள். ஏதோ போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக கடை அடைப்பாம். இன்னமும் நிலைமை சரிவரவில்லை…. கல்லெறி, சோடா போத்தல் வீச்செல்லாம் நடந்திருக்குதாம்…”

அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.

“உங்களுக்கு ஏதும் கஷ்டம் வராமல் இருக்க வேண்டுமென்றுதான் இதைச் சொல்ல வேண்டுமென்று இங்கேயே உங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். தவறாக எடுக்க வேணாம்..”

அவளின் மனதிலே பயம் ஊர்ந்தது. சுற்று முற்றும் பார்த்தாள். அவளை யாருமே கவனிக்கவில்லை.

“நானும் இது போலதான் ஒரு கலாட்டாவுக்குள்ளை அகப்பட்டு தலையிலே நல்ல காயம். மூன்று இழை. தையலை அவிழ்க்க இரண்டு கிழமை ஆகுமாம்….”

அவள் தன்னை மறந்து பரபரப்போடு கேட்டாள்:

“மூன்று இழை…. தையலா போட்டார்கள்?”

கேட்ட பின்னர் தான் அவளுக்கு மனதினுள் என்னவோ போலிருந்தது. மீண்டும் சுற்றுமுற்றும் பார்த் தாள். பரபரப்பு முகத்திலே பரபரத்தது.

“ரொம்ப தாங்ஸ்…. நான் அடுத்த பஸ்ஸிலேயே வீட்டுக்குப் புறப்படுகிறேன்…”

ஏக்கத்துடன் நிற்கின்ற அவனைப் பார்க்காமல் மீண்டும் பஸ்ஸிலே ஏறி உட்கார்ந்து கொண்டாள் தேவிகா. யன்னல் வழியாக வெளியே பார்த்தாள். அவன் இன்னமும் நின்று கொண்டிருந்தான். அவனோடு இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமே என நினைத்து கழிவிரக்கப்பட்ட தேவிகா முதன் முறையாக அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள்.

முதலில் அவன் தான் அவளுக்கு கடிதம் எழுதினான். புத்தகம் ஒன்றினுள் வைத்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தான். அந்தப் புத்தகத்தை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டபோது இவளின் கைகளும் உடம்பும் சட்டென நடுங்கிற்று.

அந்தக் கடிதத்தை அவள் எத்தனை முறை வாசித் திருப்பாள். எண்ணிக்கையிலடங்காது, புத்தகத்தினுள் வைத்து எத்தனை முறை வாசித்திருப்பாள். வாசிக்க வாசிக்க திகட்டவில்லை அந்தக் கடிதம். கடிதத்தை மெல்லிய நீலவண்ணத்தாளிலே அவன் எழுதியிருந்தான். என் இனிய அன்பே என்று தொடங்கி, உங்கள் பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆருயிர்க் கண்ணன் என்று கடிதத்தை முடித்திருந்தான் அவன்.

அவனைப் போலவே அவனது பெயரும் வசீகரமாயி ருந்தது தேவிகாவுக்கு. தனது பெயரையும் அவனது பெயரையும் சேர்த்து மனதினுள்ளே சொல்லிப் பார்த் தாள். அதுவும் கவர்ச்சியாயும் இனிமையாகவுமிருந்தது. ஐந்தாறு தடவைகள் சொல்லிப் பார்த்துவிட்டு மனதி தினுள்ளே சந்தோஷம் பூத்து மலர்ந்திடச் சிரித்தாள்.

அடுத்து இரண்டு நாட்களாக அவள் மிகவும் கவன மாக தன்னை அலங்கரித்துக் கொண்டாள். கண்ணாடி யின் முன்பு நெடுநேரமாக நின்று பார்த்து விதம்வித மாகச் சிரித்துக் கொண்டாள். பாயினில் கிடந்தவாறு கண்களை மூடிக்கொண்டு அவனைப் பார்த்தாள். ஓரக் கண்ணால் பார்க்காது நேராகவே நோக்கினாள். மான சீகமாக அவனது கன்னத்தில் தொட்டபோதே தனது உடல் சிலிர்ப்பதை உணர்ந்தாள்.

“என்னக்கா நித்திரையிலேயே சிரித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று பவளமணி கையிலே தொட்டதும் உடனேயே பாயிலிருந்து எழுத்தாள் தேவிகா.

மறுநாள் அவன் தேவிகாவுக்கு பக்கத்திலே வந்து. “எனது லெட்டருக்கு பதில் தரமாட்டீர்களா?” என்றாள். இவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. சுற்று முற்றும் பார்த்தாள், அவனை முந்தி நடந்தவாறே, “ஆட்கள் பார்க்கிறார்கள்… நாளைக்கு” என்றாள் பதறுகிற குரலில்.

இப்படி ஒரு மாதம் போக அவளிடமும் இவனிட மும் நாற்பது கடிதங்கள் சேர்ந்தன. சிலவேளை காலை யிலும் மாலையிலும் கூட கடிதங்கள் பரிமாற்றமாயின. ஒவ்வொருநாளும் எத்தனை விதமான சாக்லெட்டுகள்.

கடைசிக்கடிதத்திலே தேவிகாவை மிகவும் அன்போடு வேண்டி, சினிமாப் படம் பார்க்க அவன் அழைத்திருந்தான்.

‘…உங்களோடு தனியாக நிறையப் பேச விரும்பு கிறேன். ஞாயிற்றுக்கிழமை பகல்காட்சிக்கு கட்டாயம் நீங்கள் என்னோடு வரவேண்டும். பஸ் நிலையத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். என்மீது நீங்கள் வைத்துள்ள அன்பை இதன் மூலமே நான் அறிந்து கொள்ளுவேன் … ஆசை…..ளுடன் கண்ணன்…’

தேவிகாவுக்கு மனதினுள் நடுங்கிற்று. கடிதத்தை திரும்பவும் படித்தாள்… அவனே இப்போது எதிரே வந்து நின்று கெஞ்சுகிறாற்போல உணர்ந்தாள். மீண்டும் அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மடித்து பத்திரமாக வைத்தாள். அவனது வார்த்தைகள் நெஞ்சுக்குள் கெஞ்சுகிறாற் போல மீண்டும் ஒலித்தன.

பின்பக்கமாகப் போனாள். அணிற்பிள்ளைகள் அங்குமிங்குமாய் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு அணில், பழமொன்றைக் கொறித்து வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. தேவிகா அவைகளைப் பார்த்தவாறே, ‘கண்ணா… கட்டாயம் சினிமாவுக்கு நான் வருகின்றேன்…’ என்று மனதினுள்ளே முணுமுணுத்துக் கொண்டாள்.

5

தேவிகாவுக்கு அவன் தன்னுடைய வீட்டு முகவரியைக் கேட்டதும் மிகுந்த சங்கடமாகி விட்டது. தன்னுடைய குடிசையை, அதன் சுற்றுப்புற அலங்கோலங்களை உடனேயே மனம் நினைத்துக் கொண்டே அருவருப்பும் வெட்கமும் அடைந்தது. தன்னுடைய வீட்டுக்கு அவன் வந்தால் எப்படி வரவேற்பது, யாரென்று அறிமுகப் படுத்துவது… அது பெரிய சங்கடமாகி விடும். அவை யெல்லாவற்றையும் விட அந்த அயலில் உள்ளவர்கள், வாயினாலேயே அவளுக்கும் அவனுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கப் போவார்கள்.

“என்ன… பேச்சு மூச்சையே காணேல்லை …?”

கண்ணன் அவளது சிந்தனையைக் கலைத்தான்.

“இல்லை… ஒன்றுமில்லை…” புன்னகையை வருவித்துக் கொண்டே பதில் கூறினாள் தேவிகா. “அட்ரஸ் தானே கேட்டீங்க?”

“ஆ….. அதேதான்…”

“ஒவ்வொரு நாளுமே சந்திக்கிறோம்… பிறகேன் உங்களுக்கு அட்ரஸ்?”

அவன் அவளை வசீகரமாகப் பார்த்தான்.

“இல்லை, தேவி… நான் உங்கள் வீட்டுப் பக்கமாக ஒரு முறை வந்து பார்க்க வேணும்… அதுதான். ப்ளீஸ்…”

தேவிகாவுக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை. ஏதோ சொல்ல அவள் வாயெடுத்த போது, அவளைப் பேசவிடாமல் குறுக்கிட்டான் கண்ணன்.

“ஞாயிற்றுக்கிழமை தேவியைப் பார்க்காமல் இருக்கிறபோது பைத்தியமே பிடித்து விடும் போல இருக்கிறது. அந்த ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் வீட்டுப் பக்கமாக வந்து பார்க்க வேணும் போல இருக்கிறது தேவி…”

வாஞ்சை பொங்க அவளைப் பார்த்தான் கண்ணன். தேவிகாவுக்கு நெஞ்சினுள் வாத்ஸல்யம் தளும்பிற்று. ஆர்வத்தோடு அவனையே கண்களினுள்ளே பார்த்தாள்.

“அதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம்”

“தேவி என்ன கல்நெஞ்சு உமக்கு? நான் எவ்வளவு சொன்னாலும் கேட்கவே மறுக்கிறீர்? என்னுடைய என்ன விருப்பத்தைத்தான் …” அவன் வார்த்தைகளை தொடராமல் நிறுத்தினான். பின்னர் அவளுடைய சம்மத மான பதிலிற்காக தேவிகாவை உறுத்துப் பார்த்தான்.

“என்ன நீங்க? யாராவது கண்டால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்க…”

“ஓ!” கொஞ்சம் மிகைப்படுத்தலோடு சிரித்தான் அவன். “யார், என்ன நினைக்கப் போகிறார்கள்? அதுவும் நாளைக்கு கல்யாணம் ஆகப்போகிற எங்களைப் பற்றி….”

தேவிகாவுக்கு அவனது வார்த்தைகளில் அவ்வளவு ஈடுபாட்டோடு மனம் படியவில்லை. இதற்கு முன்னர், அவன் அவளிடம் எறிந்த வார்த்தைகள் முட்களாய் அவளது நெஞ்சினில் விழுந்து உறுத்திக் கொண்டிருந்தன.

“…என்னுடைய என்ன விருப்பத்தைத்தான் … என்னுடைய என்ன விருப்பத்தைத்தான் … என்னுடைய….”

அவனது வார்த்தைகள் திரும்பத்திரும்ப தேவிகாவின் மனதிலே உழுது புரண்டு கொண்டிருந்தன.

அன்றைக்கு சினிமாத் தியேட்டரில் நடந்த சம்பவத்தை வெவ்வேறு வார்த்தைகளில், வெவ்வேறு விதங்களில் எத்தனை தரங்கள் இவன் கூறிவிட்டான். அப்படியானால் அதை இன்னமும் இவன் தவறென்று உணரவில்லைத்தானே…..’ஐ ஆம் ஸோ ஸாரி’ என்று சொன்னதெல்லாம் ஒப்புக்குத்தானே, பொய்க்குத்தானே, பாசாங்கிற்குத்தானே…

தேவிகாவின் நெஞ்சினுள் என்னவோ உடைந்தாற் போல உணர்ந்தாள். மனந்தளும்பிட அவனைப் பார்த்தாள்.

“என்ன தேவி… ‘மூட்’ டாகி விட்டீங்க…”

தலையை அசைத்தவாறே “ஒன்றுமில்லை…..” என்றாள் தேவிகா. “எனக்குள்ள கஷ்டங்களை நீங்கள் கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டும்…”

அவள் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

“கொஞ்சம் யோசித்துப் பாருங்க… நான் வேலையிலே சேர்ந்து இன்னமும் இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளே இப்படியெல்லாம் என்றால் வீட்டிலை என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்? அதை விட எனக்கென்றும் கொஞ்சம் கடமைகளும் உண்டல்லவா?….. என்ன, சொன்ன உடனேயே உங்களுக்கு முசம் இப்படிச் சுருங்கிப் போச்சுது?…”

அவன் வலிந்து புன்னகை செய்தான். “தேவி… அப்படியொன்றுமில்லை. உமக்கு இஷ்டமில்லை என்றால் விட்டு விடுகிறேன். நீர் அட்ரஸ் தரவேணாம்…”

“ஏன் அதை நல்லாகச் சிரித்துக் கொண்டு சொல்ல வேண்டியது தானே….” என்று தேவிகா சிரித்தவாறே அவனைப் பார்த்துக் கூறினாள். கண்ணன் அவள் சொன்னதைப் பற்றி அக்கறைப்படாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.

பாயில் படுத்திருந்தபடியே அவன் சொன்ன வார்த்தைகளைப் பற்றித் திரும்பத்திரும்ப யோசித்துக் கொண்டிருந்தாள் தேவிகா. அவனைப்பற்றி யோசிக்கின்றபோது இப்போது மனதினுள் லேசானதோர் அவநம்பிக்கை முளைகொண்டெழுவதனை அவள் உணர்ந்துக் கொண்டாள்.

… சினிமாத் தியேட்டருக்குள் இருவருமே ஒருவருக் கொருவர் தெரியாதவர்போல தலையைக் குனிந்தவாறு ஒருவர் பின்னொருவராய் சென்று அருகருகாக உட்கார்ந்து கொண்டனர். தலையைச் சாய்த்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணனைப் பார்த்து முணுமுணுத்தாள் தேவிகா:

“இப்படிப் பார்த்துக் கொண்டிருக்காதீங்க…என்ன அப்படி இதுவரையுமில்லாத பார்வை…? நிறையக் கதைக்க வேண்டுமென்றுதானே கூட்டிக் கொண்டு வந்தீங்க…”

அவன் பதிலே சொல்லாமல் மெல்லிய புன்முறுவலோடு, அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“நான் சொன்னதொன்றும் உங்களுக்கு காதிலை விழவில்லையா?”

அவன் அப்படியே பார்த்தவாறு பதில் சொன்னான். “கோபம் வருகிறபோது கூட; தேவிகா… நீர் அழகாக, நல்ல அழகாக இருக்கிறீர்….சுவீட் லிப்ஸ்….”

இப்போது தேவிகாவுக்கு முகம் சிவந்தது. எரிச்சலோடு அவனைப் பார்த்தாள். அவன் பார்வையைத் திருப்பிக் கொண்ட போது விளக்குகள் அணைந்து சினிமா தொடங்கிற்று.

காதல் கதை. கதாநாயகன், நாயகியை பாட்டுப் பாடியபடியே பூந்தோட்டத்தினுள் விட்டுத் துரத்திக் கொண்டிருந்தான்.

“தேவீ…”

அவன் குரல், தேவிகாவின் அருகே தளதளத்தது. “ஸ்ஸ்….தேவீ…”

அவள் தன் அருகே அவனது மூச்சுக் காற்றை உணர்ந்ததும் சங்கடத்துடன் கழுத்தை அசைத்தாள்,

“என்ன நீங்க ?…”

அவளது கையை திடீரென அவனது விரல்கள் தகிப்போடு தொட்டதும் இவள் மூளையினுள் எரிச்சல் அவிழ்ந்தது. கையை விலக்கிக் கொண்ட போது பின்னாலிருந்து ‘க்ளுக்’ என்ற பெண் சிரிப்பு மெல்ல எழுந்து கரைந்தது. இவளுக்கு உடலெல்லாம் கூசிற்று.

கண்ணனின் பெருமூச்சு இவளின் மனதை ஏதோ செய்தது. பிறகு அவளால் படம் பார்க்க முடியவில்லை . தனக்கு அருகே திரும்பினாள். இருளிற்குப் பார்வை பழகியதும் அவனும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதனை அறிந்தவளாய் மீண்டும் படத்தைப் பார்த்தாள். கதாநாயகியை வில்லன் துகிலுரியத் தொடங்கியிருந்தான். அதைப் பார்க்க அருவருப்புற்ற போது இடைவேளை வந்து விளக்குகள் எரிந்தன.

வெளிச்சத்தில் – பின்னே திரும்பிப் பார்க்கவோ, கண்ணனை நோக்கிடவே இவளுக்கு சங்கடமாயிருந்தது. சில கணங்கள் தனது கால்களைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தன்னைச் சுதாரித்துக் கொண்டே கண்ணனைப் பார்த்தாள்: “எதையாவது பேசலாந் தானே …”

அவளை வெறுமையாகப் பார்த்தான் கண்ணன்.

“என்ன கோபமா?”

“……”

“இதற்காகத்தான் சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு வந்தீர்களா?…”

அவன் மௌனமாகவே உட்கார்ந்திருந்தான். முகம் வாடியிருந்தது. அவனைப் பார்க்க தேவிகாவுக்கு இரக்கமாயிருந்தது. மெதுவாக அவனது கையைத் தொட்டாள். அப்போதும் பேசாமலிருந்தான். பின்னர் அவனது கையில் மெல்லக் கிள்ளினாள் தேவிகா.

“என்ன பேசமாட்டீங்களா?”

மெதுவாக விளக்குகள் அணைய மீண்டும் படந் தொடங்கிற்று. அவனிடமிருந்து பேச்சுக் குரலே இல்லை. மனதிற்குள் சிரித்துக்கொண்டே அவன் கையிலே இறுக்கிக் கிள்ளினாள் தேவிகா.

“என்ன வேணும் உங்களுக்கு?”

அவ்வளவுதான்.

தன் தோளிலே படர்ந்த அவனது ஒரு கையை அவள் மெதுவாக தட்டிவிட்ட போது, மறுகை முரட்டுத் தனமாக அவளது கழுத்தடியைத் தொட்டது. பின்னர் உடனே இவளின் குரல் கோபத்தோடு உலுக்கிற்று அவனை.

“கைகளை எடுங்க. அல்லாவிட்டால் இங்கிருந்து போய் விடுவேன். எடுங்க கையை…”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

படம் முடிந்த பின், அவனைப் பார்க்க முடியாமலிருந்தது தேவிகாவுக்கு, தலைவலித்துக் கொண்டிருந்தது. எரிச்சல் மனதிலும் முகத்திலும்.

“ஸாரி…. ஐ ஆம் ஸோ ….”

அவளது பார்வை அவனை வார்த்தைகளை விழுங்க வைத்தன. மௌனமானான்.

வெய்யில் இவளின் கன்னத்தில் சுரீரிட்டது.

மறுநாள் அவனோடு அவள் எதுவுமே பேச வில்லை. அதற்கு மறுநாள் அவன் கொடுத்த புத்தகத்தை வாங்கினாள். ஏழுபக்கத்தில் கடிதம் எழுதி யிருந்தான். எழுபத்திரெண்டு முறை, ‘அன்பே, நீர் என்னை மன்னித்தேன் என்று சொன்னால்தான் நான் நிம்மதியடைவேன்’ என்று அக்கடிதத்திலே எழுதி அடிக்கோடு இழுத்திருந்தான்.

‘கவுண்டரி’ல் இருந்து வெளியே பார்த்தாள். அவன் நின்றிருந்தான். அவனைப் பார்க்க தேவிகாவுக்கு. இரக்கமாயிருந்தது. அவனோடு, தான் முரட்டுத்தனமாக நடந்து விட்டேனோ என்று கூட வருந்தினாள்.

மாலையில் அவனை மன்னித்தாள். தனது மனதிலிருந்து அந்தச் சம்பவத்தை உரித்தெடுக்க முயன்றாள்.

ஆனால் அவன் மறுபடியும் மறுபடியும் அதை நினைவூட்டிக் கொண்டேயிருக்கின்றானா?…

அவனை நினைத்துக்கொண்டே கண்ணயர்ந்து போனாள் தேவிகா.

6

மீண்டும் அவளை அவன் சினிமாவுக்கு வரும்படி அழைத்தான். அவன் உடனேயே பதில் சொல்லாமல் தட்டிக் கழித்தாள்.

“நான் கேட்கிற எல்லாவற்றையும் ஏன்தான் நீர் மறுக்கிறீரோ தெரியவில்லை …ஏன் இப்படி?….”

“என்னவோ எனக்கு சினிமாவுக்கு போகவே பிடிக்க வில்லை. சின்ன வயதிலேயிருந்து அப்படித்தான். வேறையொரு காரணமும் இல்லை… நீங்கள் வீணாக ஒன்றுக்குள்ளை இன்னுமொன்றை தொடர்புபடுத்தி குழப்பாதீங்க…”

“என்னுடைய விருப்பத்திற்காக ஒரே முறை, ஒரே. யொருமுறை சினிமாவுக்கு வரக்கூடாதோ?…..”

அவன் குரல், அவளது கால்களில் மண்டியிட்டது. இரங்கினாள். பின்னர் புன்முறுவல் செய்தாள்.

“என்ன படம்?”

“ஹேமாவின் காதலர்கள்?…”

“என்ன?”-குரலிலும் கண்களிலும் அதிசயம் மலர்ந்திடக் கேட்டாள் அவள்: ”ஹேமாவின் காதலர்கள்?…. ஹேமா, காதலர்கள்?… ஒரு மாதிரியான படமோ?”

“இல்லை… அப்படியான படமாயிருக்காது. தியேட்டரில் கூட்டமே இல்லை, யாரும் காணாமல் இருந்து பார்க்கலாம். நிறையவே பேசலாம்…”

“பேசலாம்?…” விஷமமாகச் சிரித்தாள் தேவிகா. பின்பு அதே விஷமக்குரலில் தொடர்ந்தாள். “ஒரு நிபந்தனையோடுதான் வருவேன். பிராமிஸ் செய்ய வேண்டும்…”

“என்ன?”

“இரண்டு கைகளையும் இறுக்கிக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்- படம் முடியும்வரை. முடியுமா?”

“முடியும்…”

“என்ன நிபந்தனை; திருப்பிச் சொல்லுங்க…”

அவனும் விஷமமாகச் சிரித்தான். “இரண்டு கைகளையும் இறுக்கிக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். அவ்வளவேதான்…. பேச்சு மாறக் கூடாது…”

ஹேமா கீழ் நடுத்தரவர்க்கப் பெண். அம்மா. டிராபிக் கான்ஸ்டபிளான அண்ணன். மனைவி. வீணை யோடு வாழ்கின்ற தங்கை. எதற்கும் அடிவாங்கவுள்ள கண்ணாடி அணிந்த தம்பி. குடிகார அப்பா. ஹேமா கஷ்டப்பட்டு வேலை தேடிக் கொள்கிறாள். அலுவல கத்திலே வேலை செய்கிற தடிப்பயல் ஒருத்தன் இவளைத் துரத்தோ துரத்து என்று துரத்துகிறான். அவளைப் புகழு கிறான். நம்பிக்கை கொடுக்கிறான். கடைசியில் அவள் அண்ணனின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு ஓடி வந்து அவனோடு வாழ்க்கையைத் தொடங்குகிறாள். திருமணமானதும் அவளை வேலையிலிருந்து நிறுத்தி விடுகிறான் அவன். இவளுக்குரிய சுதந்திரங்களைப் பறித்தெடுக்கிறான். குடித்து விட்டு வந்து திட்டுகிறான். இவளுக்கு ஆறுதல் கூறுகிற தொழிற் சங்கவாதியான நண்பரோடு சேர்த்துப் பேசுகிறான் இவளோடு வேலை செய்த இன்னொருவன்-இவள் மேல் மனதினுள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன் மீண்டும் இவளோடு தொடர்பு கொள்ள விரும்புகிறான். தொழிற் சங்கவாதியிடம் இவள் தனது கஷ்டங்களைக் கூறிய போது, கிராமத்திற்குப் போய் ஏழைகளின் நல்வாழ் விற்குப் பணியாற்ற இவளை அழைக்கின்றான். ஒருநாள் இரவு கணவனால் சந்தேகப்பட்டு முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்ட அவள் வீட்டிலிருந்து தப்பியோடி தொழிற் சங்கவாதியின் அறைக்குள் அடைக்கலமாகிறாள். இரவு, தொழிற்சங்கவாதி சிலரால் கொலை செய்யப்பட்டதாய் செய்தி வருகிறது. அவளைப் பற்றிய சந்தேகத்தை மாற்றிக் கொண்டு கணவன் தன் னோடு வாழ அழைக் கிறான். இவள் மறுக்கின்றாள். மனதுக்குள் ஆசைப் பட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், மிகச் சாதாரண தொழிற்சங்கவாதிக்கும் இவளுக்கும்தொடர்பு இருந்ததா இல்லையா என்பதை அறிந்து கொண்டு அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். இவள் குமுறிக் குமுறி அழுகிறாள். ஆண் மேலாதிக்க சுபாவங்களை வெறுத்து அங்கிருந்து வெளியேறி கிராமத்திற்குப் புறப்படுகின்றாள்….

ஹேமாவிற்காக பலமுறை அவளையறியாமலே தேவிகா கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன்னை ஹேமாவில் கண்டு கொண்டாள் அவள். இப்போதுதான் காதலைப் பற்றிய சந்தேகங்கள் அவளின் மனந்தனிலே அரும்பத் தொடங்கின… வெறும் உடற்பசியைத் தீர்த்துக் கொள்வதற்குத்தானா பெரும்பாலான ஆண்கள் பெண்களைத் துரத்திக் கொண்டு திரிகிறார்கள்? அது, அது ஒன்றிற்காகத்தானா காதல் என்ற போர்வையை இவர்கள் போர்த்திக் கொள்கிறார்கள்? சீ….

படத்தில் இவள் ஒன்றிப்போயிருந்தபோது தன் னுடைய காலை அவனது கால் தொட்டவுடன் இவள் அருவருப்போடு இரண்டு மூன்று முறை தனது கால்களை தள்ளி வைத்து ஒதுங்கியிருந்தாள்.

“லூஸ் படம், நல்லதாக ஒரு பாட்டுக்கூட இல்லை. அறு அறு என்று அறுத்து விட்டார்கள். தேவி இல்லா விட்டால் நான் முதல் சீனிலியே எழுந்து போயிருப்பேன்…” என்றான் வெறுப்போடு கண்ணன்.

தேவிகா பதில் சொல்லவில்லை. “என்ன தேவி, பேச்சையே காணவில்லை. நான் தான் கைகளைக் கட்டிக் கொண்டிருந்தேனே. அது எவ்வளவு சங்கடமான வேலை தெரியுமோ?”

தேவிகா மௌனமாக அவனைப் பார்த்தாள். “என்ன… எதையாவது பேச வேண்டியதுதானே…”

“எனக்கு படம் நல்லாகவே பிடித்திருக்கிறது…” –சொல்லிவிட்டு அவனைப் பார்த்தாள் தேவிகா. “ஹேமாவைப் போல ஒரு நிலைமை நிச்சயமாக இன் னொரு பெண்ணுக்கு வரக் கூடாது….”

ஹேமாவின் காதலர்களை’ப் பற்றி கமலாவிடம் சொன்ன போது அவள் கொஞ்ச நேரம் பேசாமலிருந்தாள். கவலை முகத்திலே படர அவளைப் பார்த்தாள் கமலா. விரக்தியோடு சிரித்தாள்.

7

“நீ திருமணமான ஹேமாக்களைப் பற்றிக் கவலைப் படுகிறாய். ஆனால் திருமணமாகாமலே துயரப்படுகிற ஹேமாக்களை நீ அறிய மாட்டாய்..”

“என்ன கமலா, புரியும்படி சொல்லேன்….”

“படத்திலே அவன் ஹேமாவைத் திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்தினான். ஆனால் காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றப்பட்டு எத்தனை ஹே மாக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் தெரியுமா?…”

தேவிகா மௌனமாயிருந்தாள்.

“தேவி உனக்கு நான் சொல்வது அதிர்ச்சியையும் சில வேளை என் மீது வெறுப்பையும் தரக்கூடும்… அதனாலென்ன?…. நானும் அப்படியொரு ஹேமா தான்…”

“….”

திகைத்துப்போன தேவிகாவின் கையை போஞ்சையோடு பற்றிக் கொண்டாள் கமலா.

“அதெல்லாம் முடிந்துபோன கதை. அதனால் தான் நான் அடிக்கடி உம்மை எச்சரிக்கை செய்து கொண்டிருப்பேன்… “

தேவிகாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

அன்று மாலை அவனைப் பார்த்தபோது தேவிகாவுக்கு நெஞ்சு கனத்தது. இயல்பாகச் சிரிக்க முடியவில்லை .

அவன் அவளின் அருகாகவந்தான். புன்னகையோடு அவளைப் பார்த்தான். “தேவிக்கு இரண்டு செய்திகள் நான் சொல்லப் போகிறேன்… அவை ஆச்சரியமான செய்திகள்…”

தேவிகா இலேசாகப் புன்னகை செய்தாள்.

“எனக்கு அப்பா ஒரு ஸ்கூட்டர் வாங்கித் தந்திருக்கிறார்…”

சொல்லிக் கொண்டே அவளைப் பார்த்தான் கண்ணன்.

“மற்றது?”

“வருகிற ஞாயிற்றுக்கிழமை-தேவியும், நானும் இதே ஸ்கூட்டரிலே மகாபலிபுரம் போகிறோம்…”

“என்ன?” அதிர்ந்து போய் நின்றாள் தேவிகா: “என்ன சொன்னீங்கள்?”

அவளது அதிர்வில் இவன் திடுக்கிட்ட போதும், மறு நிமிஷமே அவன் சுதாரித்துக் கொண்டான்.

“மகாபலிபுரத்துக்கு இருவரும் போகலாம் என்றேன். இதிலென்ன தப்பு? எல்லா இளசுகளும் இப்படித்தான் செய்கிறார்கள்…”

வெடுக்கென்று பதில் சொன்னாள் தேவிகா: “நான் ஒன்றும் அப்படியான பெண்ணில்லை…”

அவனது முகம் சுருங்கிற்று. அழுந்திய, கோபம் தொனிக்கின்ற குரலினிலே அவளைப் பார்த்து, “நன்றாக யோசித்து எனக்கு நாளைக்குப் பதிலைச் சொல்ல வேணும்…” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று அவளைப் பாராமலே திரும்பி நடந்தான்.

அவன் அப்படி நடந்து கொள்வானென்று தேவிகா எதிர்பார்த்திருக்கவில்லை. திரும்பிப் பார்த்தாள் – அவன் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.

இரண்டு நாட்களாய் மகாபலிபுரம் போவது பற்றி அவளிடம் அவன் கேட்டான், வற்புறுத்தலோடு கேட்டான், திரும்பத் திரும்பக் கேட்டான்.

“இப்போதைக்கு வேண்டாம் இன்னொரு நாளைக்கு….”

அவள் சொன்னதுதான் தாமதம் அவன் கோபம் சீற அங்கிருந்து திரும்பிப் போய் விட்டான்.

மறு நாள் ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்து விட்டு உடனேயே அங்கிருந்து போய் விட்டான் கண்ணன்.

8

பஸ்ஸிலிருந்து இறங்கியவள் பழக்கதோஷம் காரணமாக அயலெல்லாம் பார்வையால் தடவினாள். அவன் இல்லை. அவன் இனி வரமாட்டான் என்று தெரிந்திருந்தும் திரும்பிப் பார்த்தமைக்காக தன்னைத்தானே கடிந்து கொண்டாள். மனதிலிருந்த கவலையை உதறித் தள்ளியவாறு அமைதியாக நடந்து கொண்டிருந்தாள்.

அவன் தந்த கடிதம் மீண்டும் நினைவிலே வந்து தொற்றிக் கொண்டது.

“தேவி, எனது உணர்ச்சிகளை கொஞ்சமும் உன்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்னைப் புண்படுத்துகிறாய். உனது வீட்டுப்பக்கம், உனக்கு தெரியாமலே நான் வந்திருக்கிறேன், நீ குடிசையிலிருந்தாலும் உன்னைக் கோபுரத்தில் வைக்க நினைத்தேன். நீ அதற்கு அருகதையற்றவள். நான் உன்னை மறப்பதற்கு முடிவு செய்து விட்டேன். மறந்தும் விட்டேன் இனி மேல் உனக்குப் பின்னாலே நான் எக்காரணங் கொண்டும் வரமாட்டேன். இது உறுதி. உன்னை மறந்து விட்ட கண்ணன்.”

அந்தக் கடிதத்தை இப்போதும் கைப்பையினுள் வைத்திருப்பது நினைவிற்கு வந்தது. எடுத்தாள், சுக்கல் சுக்கலாகக் கிழித்தாள். நடுவீதியிலேயே அதை வீசியெறிந்தவாறு நடந்தாள் தேவிகா.

அவளுக்கு ஓவென்று அழவேண்டும் போல தோன்றிற்று. தன்னைச் சமாளித்துக் கொண்டாள், கமலாவை நினைத்தாள். கமலாவோடு பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் நினைவிலே வந்தன. யோசிக்க வைத் தன. வாழ்க்கையில் எத்தனை ஏமாற்றங்கள் வந்து போகின்றன. அது போலவேதான் இதுவும் ஒன்று. இதற்காக அழுவதே தனக்கு ஒரு அவமானமென்ற எண்ணம் மனதிலே அரும்பிற்று. லேசான சந்தோஷமும் உண்டாயிற்று. முழுமையாகவே இவனிடம் ஏமாந்திருந் தால்?… அந்த நினைவே இவளுக்கு புதியதான தொரு தெம்பினையும் கொடுத்தது. நிம்மதியாகவே பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

பின்னால் மணிச்சத்தம் கேட்டது. திரும்பினாள். சைக்கிளில் ஒருவன் வந்து கொண்டிருந்தான். இவள் திரும்பியதும், சொல்லி வைத்தாற் போலச் சிரித்தான். தேவிகாவுக்கு எரிச்சல் தாள முடியவில்லை . அவனுக்கு எதிரிலேயே காறித்துப்பினாள். அவனுக்கு கேட்கின்ற குரலிலே, “பொம்பிளைப் பொறுக்கிகள்” என்று கூறியவாறு மீண்டும் காறித்துப்பினாள்.

– 1985

– அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *