அலுவகத்தின் உள்ளே உம்மென்று நுழைந்த திவ்யா… இவளை ஏறெடுத்தும் பார்க்காத அபிஷேக்கைக் கண்டும் காணாமல் சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள்.
தூரத்தில் அமர்ந்திருந்த தீபன் இவளைக் கண்டதும் புன்னகைத்தான்.
இதுதான் இவளுக்கு எரிகிற தீயில் எண்ணையை விட்டது போலிருந்தது.
வரட்டும்! இன்னைக்கு எதிரே உட்கார்ந்து ஆள் பேச வாய்ப்பே வைக்கக் கூடாது. அபிஷேக்கோடு மனமுறிவு, சண்டை, பேச்சுவார்த்தை இல்லை இருவருக்கும் காதல் முறிவு. என்பது தெரிந்து வலிய வந்து பேசி வழிந்து கவிழ்க்கப் பார்க்கிறான்.! என்னை அவன் வசம் இழுக்கப் பார்க்கிறான்!!
இவன் போனால் அவன்! அவன் போனால் இன்னொருத்தன் என்கிற ஆள் இல்லை நான். எங்கள் காதல் முறிவு நிரந்தரமாகி ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரிந்தாலும்… திருமணம் முடிக்காமல், கன்னி கழியாமல் கடைசி வரை அபிஷேக்கை நினைச்சு வாழ்வேனேத் தவிர மறந்தும் மற்றவனை நினைக்க மாட்டாள் இந்த திவ்யா. ” நினைப்பில் பல்லைக் கடித்துக் கொண்டு வேலையைப் பார்த்தாள்.
இவள் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.
அரை மணி நேரம் கழித்து…
“மேடம்..!” அழைத்து எதிரில் வந்தான் தீபன்.
“வாங்க தீபன்.! என்ன உதவி, சந்தேகம்..?” முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு கேட்டாள்.
“எந்த உதவி, சந்தேகமும் இல்லே..”
“அப்புறம் இங்கே வந்தீங்க..??”
எதிர்பாராத வார்த்தை, முகபாவனைகள!’ துணுக்குற்றான்.
“மன்னிக்கனும். வார்த்தைகள் காட்டமாய் வருது. கோபமாய் இருக்கீங்கன்னு நினைக்கிறேன்!” தன் ,மனதில் பட்டத்தை மறைக்காமல் சொன்னான்
“ஆமாம்!”
“சரி. நான் அப்புறமா வர்றேன்.”
“மன்னிக்கனும் வராதீங்க. வீண் பேச்சு வேணாம்!!”
“திவ்யா..!!!” திடுக்கிட்டான்.
“நான் உங்கள் சக ஊழியை. என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் உரிமை உங்களுக்குக் கிடையாது!”
“ஓகே. நீங்க ரொம்ப கோபமா இருக்கீங்க. இருந்தாலும் நான் சொல்ல வந்ததைச் சொல்றேன். நான் உங்களிடம் பேசினால் அபிஷேக் தன் கோபம் மறந்து… என்னை, அவன் காதலுக்கு எதிரியாய் நினைச்சு உங்கள் சண்டையை மறந்து சீக்கிரம் சமாதானம் ஆவான், உங்கள் சண்டையையும் சரி செய்யலாம் என்கிற கணிப்பில்தான் நான் நான்கு நாட்களாய் உங்களிடம் வந்து வலிய பேசினேன். இது உங்கள் பார்வைக்குத் தப்பாப் பட்டு தவறாய் நடக்குறீங்க.. மன்னிச்சுக்கோங்க. வர்றேன். ” சொல்லி நகர்ந்தான்.
திவ்யா உறைந்தாள்.