அவனுக்கு மன்மத மயக்கம் அவளுக்குக் கண்மத மயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 29, 2022
பார்வையிட்டோர்: 12,249 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜான்சிராணி லட்சுமிபாய் மிகவும் அழகாக இருப்பாளாம். அவள் முகம் உருண்டையாகவும், கண்கள் பெரிதாகவும், பேரொளி மிக்கதாகவும் இருக்குமாம்.

ஜான்சிராணியைப் போலவே, பூங்கோதை என்ப வளும் அழகாகத்தான் இருந்தாள். அவளது முகமும் அம்பு விழிகளும் அப்படித்தான் இருந்தன.

அந்த ஜான்சிராணி, நடுத்தர உயரமுடையவளாம். பூங்கோதையும் அப்படித்தான் இருந்தாள்.

இந்தியப் பெண்கள் கல்வி கற்று முன்னேறவும், பூவும் பொட்டுமிழந்து வேதனைப்படும் விதவைகளின் துயர் தீரவும், தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பண்டிதை ராமாபாய் அம்மையார் மிகவும் வியக்கத் தக்க நினைவாற்றல் உடையவராம். அவ்வம்மையார் தம்முடைய பன்னிரண்டாம் வயது முடிவதற குள்பாகவே பதினெட்டாயிரம் பாடல்களை மனப்பாடடாக ஒப்புவித்து வந்தாராம். அவ்வம்மையாரைப் போலவே பூங்கோதையும் பல்லாயிரக்கணக்கான செந்தமிழ்ப் பாடல்களைச் சின்னஞ்சிறு வயதிலேயே மனப் பாடமாக ஒப்புவித்து வந்தவள்.

ஆட்டனத்தி என்பவன், மன்னன் கரிகாற் சோழனின் மருமகன். ஆதிமந்தி என்பவளின் கணவன். அவன், பரந்த மார்பும், உயர்ந்த தோளும், சுருண்ட குழலும், இருண்ட விழிகளும் உடையவனாம். பூங்கோதையின் காதலனாகிய பொய்யா மொழி என்பவனும் அப்படித்தான் இருந்தான்.

அவனுக்கு அவள் தான் ஆதிமந்தி

அவளுக்கு அவன் தான் ஆட்டனத்தி

ஆட்டனத்தியோ ஆடற்கலையில் வல்லவன்பொய்யா மொழியோ அடுக்களைக்கலையில் வல்லவன். அதாவது, ஆசுகவி காளமேகத்தைப் போலவும், பழங் காலப் புலவராம் பகழிக் கூத்தரைப் போலவும் சமைப் பதில் வல்லவன்.

ஆதிமந்தியோ, ஊடத் தெரிந்தவள். கவிதை பாடத் தெரிந்தவள்.

பூங்கோதையோ, உடுக்கத் தெரிந்தவள், மாலை தொடுக்கத் தெரிந்தவள்.

தமிழ்நாட்டின் பெருமைக்கும், தமிழ்கலைக் வளர்ச் சிக்கும், மறுமலர்ச்சி ஊட்டி மாண்புறச் செய்தவரும்; இசைக் கலைக்கும், மருத்துவக் கலைக்கும், விவசாய வளர்ச்சிக்கும் அரும்பெருந் தொண்டாற்றி வந்தவரும், ‘கருணாமிர்த சாகரம், என்னும் அரியதோர் நூலைத் தமிழிசை உலகுக்கு வழங்கியவருமாகிய தஞ்சை ராவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதரின் மூத்த மகளாகிய திருமதி அன்ன பூரண வல்லி என்பாரைப் போன்று பூங்கோதையும் வீணை வாசிப்பதில் வல்லவள்.

ஆடவரைச் சேர்வதில்லை என்று விரதம் பூண்டிருந் தவளாகிய சுரமஞ்சரி என்பவள். சீவகனின் இசையைக் கேட்டு மயங்கி, அவனுக்கு மாலையிட்டது போல், பூங்கோதை என்பவளும், பொய்யா மொழியின் இன்னிசையைக் கேட்டு மயங்கி, அவனைக் காதலித்து, அவனது பருவசுகத்திற்குப் பாத்திரமானவள்.

அன்று சனிக்கிழமைக்கு அடுத்த நாள். அதாவது கீழே இற்று விழாமல், மேலே நாள் தோறும் இயங்கிக் கொண்டிருக்கும் ஞாயிறென்னும் சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமை.

மலராய்ந்து பூத்தொடுக்கும் மாலை நேரம்

ஒரு பக்கமாகச் சாய்ந்தபடி நடந்து செல்லும் நண்டைப் போல, மகர மாதத்துச் சூரியன் சிறிது சாய்ந்தபடி வானத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, பொய்யாமொழி பூங்கோதையைப் பார்த்து “இந்தச் சூரியன் மேற்கே போகும் வெயில்! நாம் கிழக்கே போகும் ரயில்!” என்று சொன்னான்.

“இந்த ரயிலுக்கு நம் பருவக் காதல்தான் அன்றா டம் பச்சைக் கொடி காட்டி வருகிறது” என்றாள் பூங்கோதை.

வெளிநாட்டிலிருந்து நம்நாட்டு நம்நாட்டு மயில் வரவில்லை. ஓடும் ரயில்தான் வந்தது. புதிதாக நம்நாட்டுக்கு வந்த புகைவண்டி என்னும் ரயிலைப் பற்றிப் பூவை கலியாண சுந்தர முதலியாரும், அவருடைய மாணவராகிய பேறை சகந்நாதபிள்ளை என்பவரும்தான் முதன் முதலாகப் பாடல் பாடினர்” என்று கூறினான் பொய்யாமொழி.

“அப்படி என்றால், அவர்களது காலத்தில் வாழ்ந்த மகாவித்துவான்களும் மற்றவர்களும்”…என்றாள் பூங்கோதை.

“வழக்கம் போலவே மயிலைப் பற்றியும், குயிலைப் பற்றியும், ஆண்டவனைப் பற்றியும், தில்லைத் தாண்ட வனைப் பற்றியுமே பாடல்கள் எழுதிக் கொண்டிருந்தனர்” என்றான் பொய்யாமொழி.

“அப்படியா! அப்படியென்றால் அவர்களெல்லாம் கண்ணிருந்தும் குருடர்கள்! காலிருந்தும் முடவர்கள்.” என்றாள் பூங்கோதை.

“அவர்களைப் போலவே இக்காலத்திலும் பலர் இருக்கின்றனர்” என்றான் அவன்.

“அதிருக்கட்டும், புகை வண்டியைப் பற்றி அப்புலவர்களிருவரும் பாடிய அந்தப் புதிய பாடலை எனக்குச் சொல்லுங்களேன்” என்று அவள் அவனைக் கேட்க, உடனே அவன்,

பாருங்கள் ஓர்கொடியில் பன்னுமிடம் போய்வரலாம்
வாருங்கள் என்னதடை மாநிலத் தீர்– நீருங்கள்
காலால் நடவாமல் காசு மிக நல்காமல்
மேலாக வாழவினி மேல்.

என்னும் பாடலை அவளிடத்தில் கூறினான். அவ்வெண்பாவைக் கேட்ட அப்பெண்பாவை அப்புதிய பாடலையும, அப்பழைய புலவர்களையும் பாராட்டினாள்.

அந்திவானம், அப்போது சேரன் செங்குட்டுவனின் முன் கோபத்தைப் போல் சிவந்து கொண்டிருந்தது மதுவிலக்கை விரும்பாத வண்டுகள் மலர்களைச் சந்திப்பதற்குச் சென்று கொண்டிருந்தன.

“போவோம் புறப்படுங்கள்” என்றாள் பூங்கோதை.

“எங்கே? குளிர் தூங்கும் குற்றாலத்திற்கா?” என்று கேட்டான் பொய்யா மொழி.

“கோடை வரட்டும், குற்றாலத்திற்குப் போகலாம். நாமிருவரும் இப்போது காற்று வாங்க கடற்கரைக்குப் போகலாம்” என்றாள் பூங்கோதை.

காதலி அழைத்தாள். அவள் கண்களும் அழைத்தன.

அதனால், பொய்யா மொழி உடனே கடற்கரைக்குப் புறப்பட்டான். பூங்கோதையும் அவனோடு புறப்பட்டாள்.

ஒற்றையடிப் பாதை வழியாக இருவரும் நடந்து சென்றனர். செல்லும் வழியில், அவன் அவளைப் பார்த்து,

“நீ இட்ட அடி நோகிறதா?
எடுத்த அடி கொப்பளிக்கிறதா?” என்று கேட் டான்.

“நான் இட்ட அடியும் நோகவில்லை; எடுத்த அடியும் கொப்பளிக்கவில்லை!” என்றார் பூங்கோதை.

“அம்பிகாபதியின் காதலியாகிய அமராவதி என்பவள், இட்ட அடி கொந்ததாமே! எடுத்த அடி கொப்பளித்ததாமே” என்றான் அவன்.

“அமராவதி என்பவளோ ஒரு மன்னன் மகள். நானோ, மண்குடிசையில், வாழ்பவனின் மகள். அவளெங்கே? நானெங்கே? அவளோ மெத்தையில் படுத்திருந்தவள், நானோ, அன்றாடம் செத்தையில் படுத்திருப்பவள் தானே! என் போன்ற ஏழைப் பெண்களுக்கு இட்டஅடிதான் நோகுமா? எடுத்த அடிதான் கொப்பளிக்குமா?” என்றாள் பூங்கோதை.

அவன் சிரித்துக் கொண்டே நடந்தான்.

அவள் அவனைத் தொடர்ந்தாள்.

நீங்காத நீரும் –

தூங்காத அலைகளும் உடைய கடற்கரைக்கு இரு வரும் வந்து சேர்ந்தனர்.

ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த மத வாதிகளைப்போலவும்; இன்றைய இருபதாம் நூற்றாண் டில் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் அரசியல்வாதிகளைப் போலவும் அந்தக் கருங்கடல் ஓயாமல் கத்திக் கொண்டே இருந்தது.

அவள் – அக்கடலின் அலைகளைப் பார்த்தாள்.

அவன் – அக்கடலில் செல்லும் கப்பலைப் பார்த்தான்.

அவள்- மீன்களைப் பார்த்தாள்.

அவன்-மீனவர்களைப் பார்த்தான்.

அவள் – அங்கிருந்த மணல்மேடுகளைப் பார்த்தாள் .

அவன் – மணல்மேடுகளைப் பார்க்காமல் – அந்த மங்கையின் மேடுகளைப் பார்த்தான்!

அவ்வாறு பார்த்தவனை அவள் பார்த்தாள்.

அதற்குப்பிறகு, இருவரும் அந்தக் கடலைப் பார்த்தனர்.

“கடல் மிகவும் ஆழமுடையது” என்றாள்.

“ஆழமுடையதாக இருப்பதால்தான், கடலுக்கு ‘ஆழி’ என்னும் பெயர் வந்தது.” என்றான்.

“கடலில் ஆயிரம் சிப்பிகள் சேர்ந்த இடத்தில் ஓர் இடம்புரிச் சங்கும்; ஆயிரம் இடம்புரிச் சங்குகள் கூடிய ஓரிடத்தில் வலம்புரிச் சங்கும்; ஆயிரம் வலம் புரிச் சங்குகள் கூடிய இடத்தில் ஒரு பாஞ்ச சன்ய மும் இருக்கு மென்று சொல்லுகிறார்கள். கிடைத்தற்கரிய பாஞ்சசன்யம் என்னும் சங்கைத்தான் கிருஷ்ணபக வான் தன் கையில் வைத்திருந்தாராம்” என்றாள் அவள்.

“அப்படியா! அப்படியென்றால் அந்த மகாவிஷ்ணு கடத்தல் மன்னனாகிய மஸ்தானைக் காட்டிலும் மிகப் பெரிய கடத்தல் மன்னனாக இருக்கவேண்டும்” என்றான் அவன்.

“பாற் கடலில் மகாவிஷ்ணு பள்ளிகொண்டிருந் தாராமே! உண்மையில் பாற்கடல் என்பதாக ஒன்று இருந்திருக்குமா?” என்று கேட்டாள் அவள்.

“பாற்கடல், தயிர்க்கடல் முதலிய ஏழுவகைக் கடல்கள் இருந்ததாக எழுதி வைத்திருப்பதெல்லாம் புராணிகரின் புரட்டாகும். எழுகின்ற கடலைத்தான் இவர்கள் எழுகடல் என்றும்; ஏழுகடல் என்றும் சொல்லி ஏமாற்றி வருகின்றனர் எழு கடல் உண்டேயன்றி உலகில் ஏழுவகைக் கடல்கள் இருந்ததில்லை.” என்றான் அவன்.

கடல்,
இந்த உலக உருண்டையின்
முகத்தில் தோன்றிய
முதற் பள்ளத்தில் தவறி விழுந்து
விழுந்த நாளன்று முதல்
இன்று வரை
ஓயாமல் அழுதுகொண்டே இருக்கும்
ஓர் ஆதிவாசி.
மரியாதைக்குரிய மகரமீன்களும்,
திமிர் பிடித்த திமிங்கிலங்களும்,
வாடகை கொடுக்காமலே
வாழ்ந்து வரும் ஒரு வீடு!
கன்னியின் அழுகை இருக்கிறதே
அது..
ஒரு கண்ணீர் விளம்பரம்.
இந்தக் கடல் இருக்கிறதே
இது,
மிகப் பெரிய தண்ணீர் விளம்பரம்.
மண்ணால் அமைந்த தீவுகளே
இதன் மீதுள்ள மச்சங்கள்.
உப்பும் பவளமும்,
முத்தும் சங்கும்.
ஈரக்கடலின் எச்சங்கள்.
சிந்தாமணி, சிலப்பதிகாரம், பெரிய புராணம்
ஆகிய மூன்று காவியங்களின் சரக்கும்
கம்பராமாயணத்தில் கலந்திருக்கிறது.
ஆகவே,
கம்பராமாயணம் ஒரு கலப்படம்.
ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர்
ஆகிய மூவகை நீரும் கடலில் கலந்திருக்கிறது.
ஆகவே,
கடல் தண்ணீ ரும் ஒரு கலப்படம்” என்றாள் அவள்.

இது, பாடும் பாட்டு
பத்துப் பாட்டல்ல,
இது, சேர்க்கும் தொகை
எட்டுத் தொகையல்ல,
இது, பார்க்கும் கணக்கு
பதினெண்கீழ்க் கணக்கல்ல
கண்வழியாகத்தான் காதல் பிறக்கிறது,
மடல் வழியாகத்தான் வண்டு நடக்கிறது,
கடல் வழியாகத்தான் கப்பல் செல்கிறது.
இந்தக் கடல்,
கப்பல்களையும் தடுப்பதில்லை,
கயவர்களையும் தடுப்பதில்லை,
ஆரவாரம் செய்யும் கடல்
அன்றே அன்னியரைத் தடுத்திருந்தால்,
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்திருப்பானா?
பூனைக்கண் வெள்ளையன் தான் நாட்டில் புகுந்திருப்பானா?
வீங்கிப் பொங்கும்
கடலிடத்தில்
வீரமிருக்கிறது!
இதனிடம் ஈரமிருக்கிறது.
ஆனால், இதன் இதயத்தில்
இரக்கந்தான் இல்லை!
இருந்திருந்தால்
அநியாயக் காரர்களையும்,
அக்கிரமக் காரர்களையும்
விழுங்காமல்,
தன்மீது தவறி விழுந்த
இளம்பெருவழுதி என்னும் வேந்தனை
இது விழுங்கியிருக்குமா?
அழகுராணி காமதை என்பவளும்,
ஆங்கில மகாகவி
ஷெல்லியும்தான் செத்திருப்பார்களா? என்றான் அவன்.

அப்போது அக்கடலோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞன் ஒருவன், அலைகளின் ஆரவாரத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்கி ஓடிக் கொண் டிருந்தான். அதனைக் கண்ட பொய்யாமொழி சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டாள் பூங்கோதை.

“அலைகளைக் கண்டஞ்சி அவ்விளைஞன் ஓடுவதைப் பார்த்தாயா?” என்றான் அவன்.

“பாம்பைக் கண்டு பயப்படாத சேனையோ,
நெருப்பைக் கண்டு பயப்படாத யானையோ உண்டா?”

“நீருக்கும் நெருப்புக்கும் அஞ்சாதவர்கள் இவ்வுலகில் யாருமே இல்லை” என்றாள் பூங்கோதை.

“அப்படிச் சொல்லிவிடாதே! பஃறுளியாற்றை ஒழுங்குபடுத்தியவனும், மிகப்பெரிய வள்ளலுமாகிய பாண்டியன் ஒருவன், அலைகடலின் ஆரவாரத்தைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், அசையாமல் அப்படியே நின்றானாம். அவனது அஞ்சாமையைக் கண்ட பேரறிஞர்களும், புலவர் பெருமக்களும் அவனை ‘வடிம் பலம்ப நின்ற பாண்டியன்’ என்று பாராட்டினராம்.

மேலைக் கடலின் நடுவே, சில தீவுகளில் வாழ்ந்த சிற்றரசர்களை அடக்க வேண்டி, கடலின் ஆழத்தையும், அதன் பரப்பையும், ஆர்ப்பாட்டம் செய்யும் அலை களையும் கண்டஞ்சாமல், அவை தன் பின்னே செல்ல கடலில் முன்னேறி பகைவர்களை வென்று திரும்பினானாம். சேரன் செங்குட்டுவன், கடலை பிறக் கிடும்படி ஓட்டியவன் என்பதால் சான்றோர்கள் அவனை கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் என்று பாராட்டினராம். நானும் அலைகளின் ஆரவாரத்தைக் கண்டு அஞ்சுவதில்லை என்றான் அவன்.

“அப்படியென்றால், நீங்களும் ஒரு சேரன் செங்குட்டுவன் என்று சொல்லுங்கள்” என்றாள் அவள்.

“நான் ஒரு சேரன் செங்குட்டுவன் மட்டுமல்ல! அன்றாடம் உன்னைச் சேரும் செங்குட்டுவனும் நான் தான்” என்றான் அவன்.

அவள் சிரித்தாள்.

பிறகு இருவரும் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு தாழை மரங்கள் மிகுதியாக வளர்ந்திருந்த இடத்தில் வந்தமர்ந்து, உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்தனர்.

அவன் அவளைப் பார்த்து,

சூரியனைக் கண்டால் தாமரை மலரும்
சந்திரனைக் கண்டால் அல்லி மலரும்
மின்னலைக் கண்டால், தாழை மலரும் என்றான் அவன்.

உங்களைக் கண்டால் என் முகம் மலரும் என்றாள் அவள்.

அப்போது, அவன் அவளது கையைத் தொட்டான். அவளோ, அருகில் தொங்கிக் கொண்டிருந்த தாழங்காயைத் தொட்டாள்.

“மக்களால் கொள்ளப்படாமல் தள்ளப்படும் இத் தாழங்காயை நீ ஏன் தொடுகிறாய்?” என்று கேட்டான் அவன்,

“நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்! தாழங்காய் மக்களால் தள்ளப்படும் காயா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம், தாழங்காய் மக்களால் ஒதுக்கித்தள்ளப் படும் காய்தான்! நாவுக்கு மிகுந்த சுவை தராத பழத்தை நாவற்பழம் என்று சொல்லுவது போல, சாரமற்ற காயான இத்தாழங்காய் மக்களால் கொள்ளப்படாமல் ஒதுக்கித்தள்ளப் படுவதால்தான் இதனை எல்லோரும் தாழங்காய் என்று சொல்லுகிறார்கள்”, என்றான் அவன்

“அப்படியா?” என்றாள் அவள்.

“ஆமாம்!
காய்த்தும் பயன்படாத காய் – தாழங்காய்!
கனிந்தும் பயன்படாத பழம்-எட்டிப்பழம்.
நீயோ, காய்த்தும் பயன்படுகிறாய், என் கரங்களுக்கு.
கனிந்தும் பயன்படுகிறாய், என் இதழ்களுக்கு”

என்று கூறிக்கொண்டே அவனைத் தழுவியபடி “பெண்ணமுதே! பித்ததேகம் உடையவர்களுக்குத்தான் கடைக்கண் சிவப்பாக இருக்குமென்றும்; உடல் எப்போதுமே வெப்பமாக இருக்குமென்றும் சொல்லுவார்கள். உன்கடைக்கண் சிவப்பாகவும் உன்னுடல் எப்போதும் வெப்பமாகவும் இருக்கிறதே உன்னுடைய தேகமும் பித்ததேகந்தானோ?” என்று அவன் அவளைக் கேட்டான். உடனே அவள் அவனைப் பார்த்து,

“ஒரு மருத்துவரிடம் கேட்கவேண்டிய கேள்வியை, இந்த மங்கையிடம் கேட்கிறீர்களே?” என்றாள் அவள்.

“அதிருக்கட்டும்! அடிக்கடி என்னை நீ அத்தான் அத்தான் என்று அழைப்பாயே! இன்று நீ என்னை ஒரு முறைகூட அத்தான் என்று அழைக்கவில்லையே அது ஏன்?” என்று கேட்டான் அவன்.

அவள் சிரித்துக் கொண்டே, “இன்று ஒரு பாடல் மூலமாகவே உங்களை அத்தான் அத்தான் என்று அழைக்கப் போகிறேன். நான் எத்தனை முறை உங்களை அத்தான் அத்தான் என்று அழைக்கிறேன் என்பதை விரல்விட்டு எண்ணிப் பாருங்கள்” என்று கூறி

கல்லைத்தான்
மண்ணைத்தான்
காய்ச்சித்தான்
குடிக்கத்தான்
கற்பித்தானா?
இல்லைத்தான்
பொன்னைத்தான்
எனக்குத்தான்
கொடுத்துத்தான்
இரட்சித்தானா?
அல்லைத்தான்
சொல்லித்தான்
ஆரைத்தான்
நோவத்தான் – ஐயோ வெங்கும்
பல்லைத்தான்
திறக்கத்தான்
பதுமத்தான்
புவியிற்றான் – பண்ணினானே

என்று பாடிக்காட்டி “இந்தப் பாடலில் எத்தனை அத்தான்கள் இருக்கின்றன பார்த்தீர்களா அத்தான்” என்று கேட்டாள் பூங்கோதை.

“அடேயப்பா, ஒரே பாடலில் இத்தனை அத்தான்கள் அமையும்படியாக முதன் முதலில் பாடிய இராமச்சந்திர கவிராயரை நான் பாராட்டுகிறேன்” என்றான் பொய்யா மொழி.

உடனே அவள் அவனை நோக்கி, “இவ்வாறு அத்தான் அத்தான் என்று முதன் முதலாகப் பாடியவர் நல்லூர் கவிராயரல்ல? நெல்லையில் பிறந்த வேதநாயக சாத்திரியார் என்பவரே இவ்வாறு முதன்முதலில் பாடியவர். அவர் இயற்றிய ‘ஞான தச்சன் நாடகம்’ என்னும் நூலில்,

ஒப்பத்தான் உண்மைமிகுஞ்
செப்பத்தான் தீவினைகள்
தப்பத்தான் அடியவர்க்குத்
துப்புத்தான் தூதருக்கும்
பொற்புத்தான் ஏதனென்ற
வெற்புத்தான் சொன்னபடி
மெய்ப்பித்தான் மானிடரைக்

கற்பித்தான் என முதன் முதலில் பாடிய வேதநாயக சாத்திரியாருக்குப் பிறகு,

கல்லைத்தான்,

மண்ணைத்தான் என்று நல்லூர் இராமச்சந்திர கவிராயரும், அவரையடுத்து

சீரைத்தான்
கோரித்தான்
தேரிற்றான்
ஏறித்தான் என்று பாவேந்தர் பாரதிதாசனும் பாடினார். அவர்களைப் பின்பற்றித்தான்,

இன்றைய திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர்

“அத்தான் என் அத்தான் – அவர்
என்னைத்தான் அதை எப்படிச் சொல்வேனடி”

என்ற பாடலையும் எழுதியிருக்கிறார். பெரியமட்டு பு.ஆரோக்கிய நாயகர் என்பவரால் இயற்றப் பெற்று 1857-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ள “தேம்பாவணிக் கீர்த்தனைகள்” என்னும் நூலில்,

“ஞானத்தி லேஞான ஸ்கானத்திலே-ஜெபத்
தியானத்தி லேவருங் கியானத்திலே வேத
மானத்தி லேசொன்னிதானத்திலே தருந்
தானத்தி லேதின்மை யானத்திலே நின்று”

எனவரும் அடிகளைப் பின்பற்றித்தான் தேசியகவி பாரதியும்,

“ஞானத்தி லேபர மோனத்திலே – உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானகத்தி லேஅமு தாகநிறைந்த
கவிதையி லேஉயர் நாடு”

என்று எழுதியிருக்கிறார்” என்றான் அவன். உடனே அவள், அவனை நோக்கி,

“ஒரு மகாகவியைத்தான் மற்றவர்கள் பின்பற்றுவார்கள். மகாகவி என ஒருசிலரால் அழைக்கப்படும் பாரதியே மற்றொரு கவிஞரைப் பின்பற்றி எழுதலாமா?” என்று கேட்டாள்.

“வளரும் நிலையிலிருப்பவர்கள், பெருங்கவிஞர்களைப் பின்பற்றி எழுதுவதில் தவறில்லை. ஒருவன் எவ்வளவு பெரிய கவிஞனாக இருந்தாலும் அவனைப் பின்பற்றி எப்போதுமே மற்றொருவன் எழுதிக் கொண்டிருப்பதுதான் தவறு” என்றான் அவன்.

“இதுவும் தவறுதான்; என்னை நீங்கள் அடிக்கடி வற்புறுத்துவதும் தவறுதான்”என்றாள் அவள்.

“ஆம்! இதற்குரிய தண்டனை முத்தம் கொடுப்பதாக இருக்குமானால், இதனை நான் இப்போதே ஏற்றுக் கொள்கிறேன்” என்றான் அவன்.

தருவது
பெறுவது
மனம்விட்டுப் பேசுவது
கேட்பது
விருந்துண்பது
படைப்பது

ஆகிய இவை ஆறும் அன்புக்கும் நட்புக்கும் உரிய அடையாளங்கள் என்றாள் அவள்.

உருவம்
பருவம்
வண்ணம்
வனப்பு
அச்சம்
நாணம்

ஆகிய இவை ஆறும் அழகுக்கும் உன் அடக்கத்துக் கும் உரிய அடையாளங்கள்” என்றான் அவன்.

“இளமை என்பது” என்றாள் அவள்.

“ஓர் இன்பச் சுனை” என்றான் அவன்.

“முதுமை என்பது” என்றாள் அவள்.

“எல்லா நோய்களையும் ஏற்றுக்கொள்ளும் ஓர் மருத்துவமனை” என்றான் அவன்.

அவள் ஏதோ அவனிடம் சொல்ல நினைத்தாள், சொல்ல முடியவில்லை.

அவன் ஏதோ ஒன்றைக் கொடுக்க நினைத்தான், கொடுக்க முடியவில்லை.

அப்போது, அவனுக்கு மன்மத மயக்கம்!
அப்போது, அவளுக்குக் கண்மத மயக்கம்!
அரும்பு மௌனம் சிறிதுநேரம் அங்கே வளர்ந்தது.
அதற்குப் பிறகு, அவன் அவளைப் பார்த்து –

“நமது நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் 1712-ம் ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடி என்னும் ஊரில் தான் நிறுவப்பட்டதாம். ‘முத்தம்’ என்னும் அச்சுக்கூடமோ, ஆதிமனிதன் தோன்றிய காலத்திலேயே நிறுவப்பட்டுவிட்டது” என்று கூறிக்கொண்டே நெருங்கினர். அவளும் நெருங்கினாள்! இடைவெளி குறைந்தது. பிறகு இருவரும் ஒன்றாக ஒட்டிக்கொண்டனர். மிக நன்றாக ஒட்டிக் கொண்டனர்.

மன்மத மயக்கம் தீரும் வரையில் –

உதடுகள் ஓய்வெடுத்துக் கொள்ளவே இல்லை!
முதலில் மேட்டிலும்
பிறகு பள்ளத்திலும்
எச்சில் விளையாட்டு
இனிதே நடைபெற்று முடிந்த பிறகு, அவள் அவனைப் பார்த்து –

“ஒரு காரியத்தை தொடங்குமுன்
இத்தாலியன் புத்திசாலியாம்;
செய்து முடிக்கும்போது ஜெர்மானியன் கெட்டிக்காரனாம்;
முடிந்த பிறகு,
பிரஞ்சுக்காரன்
மேதாவியாம்!

அத்தான்! நீங்களும் ஒரு மேதாவிதான்” என்றாள் அவள்.

“நான் மேதாவியோ என்னவோ அது எனக்குத் தெரியாது. ஆனால் நான் எப்போதும் “உன் மேல் தாவி தான்” என்றான் அவன்.

அப்போது அவர்கள் மீது தாழைமரமொன்று தண்ணீரைத் தெளித்தது. “இத்தாழைமரம் எதற்காக நம்மீது தண்ணீரைத் தெளிக்கிறது?” என்று அவள் கேட்டாள்.

“எதற்காகத் தெரியுமா? 1497-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமா என்ற போர்த்துக்கீசியன் பல்லக்கிலேறிக் கள்ளிக் கோட்டை வழியாகச் செல்லும் போது, அவ்வூரின் ஆலயத்திலிருந்து கொண்டுவரப் பட்ட தண்ணீரால் அவனையும் அவனோடு வந்தவர்களையும் கோயில் குருக்கள் சிலர் பரிசுத்தப்படுத்தினார்களாம்! அதே போன்று இத்தாழை மரமும் தண்ணீரால் நம்மைப் பரிசுத்தப்படுத்துகிறது” என்றான் அவன்.

“இப்போது நம்மீது தண்ணீர் தெளிக்கும் இத்தாழைமரம் நம் திருமணத்தன்று பன்னீர் தெளிக்க வருமா?” என்று கேட்டாள் அவள்.

“சாட்சி சொல்வதற்காக வன்னிமரமொன்று நீதி மன்றத்திற்கு வந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுவது உண்மையானால், திருமணத்தன்று நம்மீது பன்னீர் தெளிக்க இத்தாழை மரமும் நிச்சயமாக வரும்” என்றான் அவன்.

அவள், தாழை மரத்தைப் பார்த்தாள்.

தாழம்பூ அவளைப் பார்த்தது.

அவன், அந்த முள் மலரைப் பார்க்காமல்,

அவளது முகமலரைப் பார்த்துக்கொண்டே இருந்தான்!

– எச்சில் இரவு, முதற் பதிப்பு: ஜனவரி 1980, சுரதா பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *