கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுபமங்களா
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 7,686 
 
 

அம்மா சொன்னது. பழனிக்கு சந்தோஷம் தந்தது:

“ஏண்டா பழனி ராசிபுரம் வரைக்கும் போயி உங்கக்காகிட்ட இந்தத் தொகையைக் குடுத்துட்டு வந்துடறியா? உங்க மாமா வேற வெளியூரு போயிருக்குதாம். சொன்ன தேதிக்கு வாங்கனவங்களுக்குத் திருப்பித் தரணுமில்ல…”

அவனுக்கு ராசிபுரம் பிடிக்கும். ருக்மணியக்காவையும் பிடிக்கும். ஏன் பிடிக்காது? அவளுக்குத்தான் தம்பி மீது எவ்வளவு பிரியம். பழனி பரீட்சையில் பாஸ் செய்து பள்ளிக்கூடப் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டான் என்பது தெரிந்ததும் அவள் வேலை மெனக்கெட்டு ஊருக்கு ஓடி வரவில்லையா? பள்ளிக்கூடக் கடைசிப் பரீட்சை வரை படித்துப் பாஸ் பண்ணுவதென்பது எத்தனை பெரிய சாதனை என்று சொல்லிச் சொல்லிப் பாராட்டவில்லையா? அந்த ஊரைப் பொறுத்தவரை பழனியும் அவனுடைய சின்ன அக்காளும் தான் இந்த வருஷம் பரீட்சைக்குப் போய் பாஸ் பண்ணியவர்கள். அதிலும் சின்னக்கா பரீட்சை எழுதுவது இது மூன்றாவது தடவை. இதனால் பழனிக்கே கூட தன் சாதனையின் பிரம்மாண்டம் உறைத்தது. அம்மாவாலும் சந்தோஷத்தை மறைக்க முடியவில்லை.

“இந்தாடா ரூபா, செட்டியார் கடைக்கு போய் ரெண்டு லுங்கி வாங்கிக்க.”

ஆனந்தக் கடலலைகள் மேலெழுந்து அவனை சல்லௌழுெத்துச் சென்றன. கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே லுங்கி கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவனுக்குள் கிளைத்தெழும். அவன் பெரிய ஆளாகி விட்டதாக கண்ணாடியோ, குளக்கரையோ, எதிர்ப்படும் இளம் பெண்களின் பார்வையோ உறுதி செய்யும் பல தருணங்களில் பழனி, அம்மாவிடம் போய் லுங்கி வாங்கித் தரும்படி கேட்டிருக்கிறான். அம்மா விடமிருந்து ஒரே பதில்தான் வரும். “குட்டி நாயே! போடா அந்தப் பக்கம்.”

அவளைச் சொல்லிக் குற்றமில்லை. லுங்கி என்பது வெறும் உடுப்பு இல்லை. சில குணாம்சங்களின் அடையாளம்: நிதானமாகப் பள்ளிக் கூடத்தில் சேர்ந்து ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று வருடங்கள் சாவகாசமாகப் படிக்கிற பையன்கள் தான் எட்டு அல்லது ஒன்பது வகுப்பு போனதும் லுங்கி கட்ட ஆரம்பிப்பார்கள். தம் அடிப்பார்கள். காதலிப்பார்கள். ஓடிப் போவார்கள்.

இப்போது என்னடாவென்றால் அம்மா தானாகவே முன் வந்து லுங்கி வாங்கிக் கொள்ளச் சொல்லிப் பணம் தருகிறாள். அதுவும் இரண்டு லுங்கிகள். இரண்டு லுங்கி வாங்கிய பிறகும் கூட பணம் மிச்சமிருக்கும் போல் இருந்தது. பழனி மனசுக் குள்ளாகவே ஒரு பட்ஜெட் போட்டான். நல்ல லுங்கியாக ஒன்று எடுத்துக் கொண்டு. இன்னொன்றை சுமாரான தாக எடுத்துக் கொண்டால் கூட ஒரு ரெடிமேட் ஷர்ட்டோ அல்லது டீ ஷர்ட்டோ வாங்கிக் கொள்ளலாம். டெண்ட் கொட்டகையில் சமீபத்தில் பார்த்த படத்தின் கதாநாயகன் போட்டிருந்தது போல சட்டைப்பை ஒரு நிறமாகவும், தோள்பட்டை ஒரு நிறமாகவும் கைகள் ஒரு நிறமாகவும் இருக்கிற சட்டைகள் ரெடிமேடில்தான் கிடைக்கும்.

பழனி சட்டையை வாங்கிப் போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தபோது கண்ணாடிக்குள் அவனுக்குப் பதிலாக அவனுடைய அபிமான நடிகளே நின்றான். அந்தக் கணத்தை நிலைப்படுத்துவதற்காக ஸ்டுடியோவுக்குப் போய் பழனி போட்டோ எடுத்துக் கொண்டான். ராசிபுரத்திலிருந்து வந்திருந்த ‘ருக்மணியக்காவுக்கு அந்தப் போட்டோ ரொம்பப் பிடித்துப் போயிற்று. தனக்கென்று அதில் ஒரு காப்பி போட்டு எடுத்துக் கொண்டாள்.

பழனிக்கு உச்சி குளிர்ந்தது. ருக்மணியக்கா ஊருக்குப் புறப்பட ஆயத்தமான போது, “ஏம்மா, தம்பியவும் எங்கூட அழைச்சிட்டுப் போறனே. ரெண்டு, மூணு நாளு அங்க இருந்துட்டு வரட்டுமே” என்றாள்.

“ம்… அதெல்லாமில்ல. நான் பத்து நாளு ராசிபுரத்துல தங்கிட்டுத் தான் வருவேன்” என்றான் பழனி.

அம்மா ஒத்துக் கொள்வதாயில்லை. “இப்ப என்னடி அங்க ராசிபுரத்தில விசேஷம். தேரா, திருநாளா? சின்னஞ்சிறுசுங்க குடித்தனம் பண்ற எடத்துல இரண்டுங் கெட்டானை கூட்டிட்டுப் போய் வச்சுக்கப் போறாளாமில்ல…” என்று முனகிக்கொண்டே அம்மா அடுப்பங்கரைக்குள் நுழைந்துவிட்டாள்.

ருக்மணி அக்கா ஊருக்குப் போய்விட்டாள்.

இப்போது என்னடாவென்றால் அம்மாவே முன் வந்து அவனை ராசிபுரம் போய் வரச் சொல்கிறாள். இதற்கு என்ன அர்த்தம்?

பழனி, ஜன்னல் நடுச்சட்டத்தில் மாட்டி வைத்திருந்த கையகலக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டான். மேல் உதட்டின் மேல் கருநிழலாய்த் தெரித்த அருகைத் தட்டி விட்டுக்கொண்டான். தன்னுடைய வளர்ச்சியைத் தானே பாராட்டிக் கொள்பவன் போல தோன்களையும், மார்பையும், கை முண்டாவையும் சிலாகித்து ரசித்தான். இனியும் தான் இரண்டுங்கெட்டான் இல்லை. இல்லாவிட்டால் அம்மாவே தன்னை ராசிபுரம் அனுப்பி வைப்பாளா? அதுவும் கையில் ஒரு பெரிய தொகையை வேறு கொடுத்து அனுப்புவாளா?

பழனி, ராசிபுரம் வந்து சேர்ந்த போது பிள்ளைகள் மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பள்ளிக் கூடத்தை நோக்கி தலைமேல் மாட்டிய பைகளுடன் ஓடிக்கொண்டிருந்தார்கள். ருக்மணி அக்கா குடியிருந்த தங்கநாயனார் காம்பவுண்டு ஊர் முடிந்து வயல்களும் வரப்புகளுமாய் தொடங்கும் அடுத்த கிராமத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. ருக்மணி அக்காவைப் பொறுத்தமட்டில் அதுதான் ஊர் தொடங்கும் இடம். ஒவ்வொரு தடவையும் அவள் வீட்டுக்குப் போகும் வழியை விவரிக்கும் போதெல்லாம் “லர் ஆரம்பத்திலே இருக்கற… என்று தான் அவள் தொடங்குவாள்.

அங்கவஸ்திரத்தை நீளவாட்டில் விட்டெறிந்தது போலிருந்தது தங்க நாயனார் காம்பவுண்ட் சீருடை அணிந்து விறைத்து நிற்கிற சிப்பாய் களைப் போல் ஒரே மாதிரியான ஐந்து வீடுகள். எல்லா வீடுகளின் முன் பக்கத்திலும் இடப்புறம் பப்பாளி, வலப்புறம் முருங்கை தடுவே மல்லிகைப்பந்தல். இந்த சீருடைத் தத்துவத்தை மதிக்காதது போல செடி கொடிகள் தங்கள் இஷ்டம்போல தலையைச் சாய்த்து. கை கால்களை சுதந்திரமாய்ப் பரப்பிக்கொண்டு நின்றன. காம்பவுண்டுக்குள்ளேயே கடைசி வீடு ருக்மணியக்கா விடு. அதாவது ருக்மணியக்கா கணக்கில் முதல் வீடு.

பழனியைக் கண்டதும் சாப்பாட்டுக்குப் பிறகான குட்டித் தூக்கத் கலக்கத்தில் இருந்த ருக்மணி அக்கா ரொம்பவும்தான் படபடத்துப் போய்விட்டாள். பழனிக்கு பாவமாய்க்கூட இருந்தது. பஸ் ஸ்டாண்ட் பக்கத்திலேயே எதையாவது சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாமோ என்று நினைத்துக் கொண்டான். அம்மா கொடுத்து விட்டிருந்த பழம், காய்கறி, பலகாரங்களை எடுத்து சுவர் ஓரமாக வைத்தான்.

“என்ன கண்ணு இது திடுதிப்னு வந்து நிக்கறே..”. ருக்மணி அக்காவின் முகம் மலர்ந்து மலர்ந்து பிரகாசித்தது. சோர்வும், களைப்பும் கூட தனி அழகாகத் தெரிந்தது. பழனிக்குத் தெரியும் அக்கா கர்ப்பமாய் இருக்கிறான்.

“இப்பத்தான் ஏனத்தையெல்லாம் கழுவிட்டுப் படுத்தேன்”. ருக்மணியக்கா சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். சோற்றுத்தவலையை திறந்து பார்த்தாள். “கையைக் காலைக் கழுவிட்டு உடுப்ப மாத்திக்க, இதா வந்துடறேன்” என்று ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். பக்கத்து வீடுகளில் ஏதாவது ஒன்றில் குழம்பு இரவல் வாங்கி வருவாளோ?

சற்று நேரத்தில் கருவாடு வறுவல், முட்டைத்தக்காளிப் பிரட்டல், சாம்பார், ரசம், தயிர் வத்தல், அப்பளம், ஊறுகாய் என்று பிரமாதப்படுத்தி விட்டாள். போதும் போதும் என்றாலும் கேட்காமல், “பரவால்ல…. சாப்பிடு” என்று இலையைச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஓடுகிறவரை சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தான்.

சாப்பிட்டதும் பாயை விரித்து ஹாலிலேயே போட்டு அப்படியே படுத்தான் பழனி. தூங்கிப் போய் விட்டான். பால்காரனின் சைக்கிள் மணிச் சத்தத்துக்கு விழிப்பு வந்தது. எழுத்து என்ன செய்யப்போகிறோம் என்று சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டான். அக்கா யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். கால் கொலுசு சப்திக்க தண்ணீர்க்குடம் களகளக்க அவன் படுத்திருந்த இடத்தைக் கடத்து யாரோ நடந்து போவது தெரிந்தது. குளியலறைத் தொட்டிக்குள் குடத்துத் தண்ணீர் கலக்கிற சத்தம் கேட்டது. பழனி, திரும்பிப் படுத்துக்கொண்டான். இமை உயர்த்தாத பார்வைக்குள் நடந்து போகிறவனின் பாதம் தெரிந்தது. தூய்மையான, மெல்லிய தேமாங்கொழுந்துப் பாதம். கிணற்றடியிலோ, நீர்நிலையிலோ நின்றிருந்ததால் கீழ்ப்புறம் ஊறி வெளுத்துச் சிவந்து தெரிந்தது. சேலையின் கீழ்ப்புறம் ஈரம். ஈரச் சேலை தடுக்கி விடாமல் இருக்க தூக்கி செருகியிருந்ததில் வலது கணுக்காலும், காலும் தெரிந்தன. கருப்பேறிய வெள்ளிக் கொலுசு படர்ந்திருந்தது தெரிந்தது.

கொலுசுச் சத்தமும், ஈரச் சேலையின் டமடமப்பும் ஓய்ந்தன. அக்கா சிரித்துக் கொண்டே சொல்வது கேட்டது. “யாரா? உன் கொழுந்தன்தாண்டியம்மா… போட்டோல பாத்திருக்கியே”.உள்ளே படுத்திருப்பது யார் என்று அவள் தன் திகைப்பால், பார்வையால் அல்லது சாடையால் அக்காவை விசாரித்திருக்கக் கூடும்.

விருட்டென்றது பழனிக்கு. அக்கா, ஊருக்கு வந்தபோது அக்கம் பக்கத்துக்காரர்களைப் சொல்லிக் கொண்டிருந்ததிலிருந்து புகையாய் ஒரு நினைவு வந்தது. சுற்றி வளைத்து தூரத்திலும் தூரமாய் மாமா வீட்டாருக்கு ஏதோ ஒரு சொந்தம் என்று அவள் கண்டுபிடித்திருந்த குடும்பத்துப் பெண்ணா இந்த அழகி? அடடா! என்ன அக்கா இவள்! அதென்ன முறை கொழுந்தன் முறை. கொழுந்தன் முறையாய் இருப்பவன் மாப்பிள்ளை முறையாக மாட்டானா? உனக்கு இவன் மாப்பிள்ளை முறை என்று சொல்ல மாட்டாளா ஒருத்தி, கொழுந்தனாம் கொழுந்தன்! பழனி எழுந்து வெளியே வந்தான். வாசலுக்கு முகத்தைக் காட்டிக்கொண்டு நின்றிருந்த அவள் திரும்பி ஒரு கணம் இவனைப் பார்த்துவிட்டு மறுகணம் காலிக் குடத்துடன் வெளியேறினாள். தளும்பும் மனத்துடன் அவன் அங்கேயே சற்று நேரம் நின்றான். திரும்பிப் பார்த்தான். பின்கட்டும். அதன் முன்னால் இருந்த சிறிய காம்பவுண்டுச் சுவரும் அதைத் தொடர்ந்து பச்சை அலை வீசும் வயலும் தெரிந்தன. வரப்பின் மேல் நிற்கிற கொக்குகள் வெள்ளைப் புள்ளிகளாய்த் தெரிந்தன. நீல நிற மீன் கொத்தி ஒன்று ஏற்றக் கிணற்றின் மரச்சட்டத்திலிருந்து விட்டெறிந்த கல் போல வயலுக்குப் பாய்கிற தண்ணீர்க் கால்வாய்க்குள் பாய்ந்தது.

பழனி, தன் கசங்கிய சட்டையையும் லுங்கியையும் ஒரு தடவை பார்த்துக்கொண்டான். ‘அடடா! அந்த அழகு தேவதை என்னை இப்படி ஒரு அழுக்குக் குவியலாகவா பார்த்திருப்பாள்? பிரயாணக் களைப்பில் சோர்ந்து கறுத்த முகமும், பீளை வடியும் கண்களுமாகவா என்னை அவள் பார்த்திருப்பாள்? சே!’ பழனிக்கு மனசுக்குள் உறுத்தியது. பரபரவென்று தண்ணீர்த் தொட்டியருகே போனான். நுரைக்க நுரைக்க சந்தன சோப்பை இழைத்து முகத்தையும், கையையும், காலையும், கழுவிக் கொண்டான். சுத்தமான தேங்காய்ப்பூத்து வாலையால் சரம் போகத் துடைத்துக் கொண்டான். பெட்டியைத் திறந்து சலவை மடிப்புக்கலையாத பனியனையும், சட்டையையும் எடுத்தான். புதிதாய் வாங்கிய ரெடிமேட் சட்டை. அதன் கைப்பகுதியை பிடித்து எதிரே தூரத்தில் வைத்துப் பார்த்துக் கொண்டான். நன்றாய்த் தான் இருந்தது சட்டை. அதைப் போட்டுக் கொண்டு முகத்தில் பவுடர் தடவி, தலையைச் சீவிக் கொண்டதும் தனி கம்பீரமே வந்து விட்டது போல இருந்தது. பவுடர் வாசனை ருக்மணியக்காவை எட்டியிருக்க வேண்டும். கண்ணாடி முன்னால் நின்றிருந்த பழனியைப் பார்த்து “என்னய்யா! எங்கியாவது கிளம்பிட்டியா என்ன?” என்றாள்.

பதில் பேசாமல் அவன் வாசல் அருகே போய் நின்றான். லுங்கியை ஒரு மாதிரியாய் முழங்காலுக்கு மேல்வரை அள்ளிச் செருகி முடிந்து கொண்டான். அப்பா, மாமா, தாத்தா எல்லோருமே அப்படித்தான் கட்டிக் கொள்வார்கள். அவ்வளவு ஏன்? எல்லா ஆண்களுமே அப்படித்தான் கட்டிக் கொள்வார்கள். கட்டிக் கொண்டு மேலே சட்டை போடாமல் துண்டு மட்டும் போட்டுக் கொள்வார்கள். அவன் உள்ளே போய் சட்டையைக் கழற்றி அறையில் குறுக் காக கட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கயிற்றில்

மடிப்புக் கலையாமல் ஜாக்கிரதையாய், அந்தக் கயிறு முழுவதும் தாறு மாறாய்க் கிடந்த மற்றத் துணி மணிகளுடன் கலந்து விடாதபடி தனியாய் இருக்கும்படிப் போட் டான். சற்றுமுன் முகம் துடைத்த துண்டை எடுத்துத் தோள் மேல் போட்டுக் கொண்டான். மீண்டும் கண்ணாடியில் பார்த்தான். சட்டை யைக் கழற்றியதும் கழுத்தும் மார்பும் தெரிந்தன. முகத்தின் பவுடர் பூச்சு தூக்கலாய்த் தெரிந்தது. பவுடர்பூசாத கழுத்து வேற நிறமாய்த் தெரிந்தது. முகத்துப் பவுடரை துண்டில் லேசாகத் துடைத்துக் கொண்டான். கழுத்தில் பவுடர் பூசினான். மறுபடி துடைத்தான். அதற்கு ஒத்தாற் போல படிய வாரியிருந்த தலையை சற்றே கலைத்து விட்டுக் கொண்டான். மீண்டும் வாசலுக்கு வந்தான்.

ஹாலில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த அக்கா மூக்கை உறிஞ்சியபடி அவனை ஆச்சரியமும் கண்ணீரும் ததும்பும் விழிகளுமாய் பார்த்தாள். “என்னய்யா வெளிய போவலியா?”

பழனியின் பார்வை அடுத்திருந்த நான்கு வீடுகளையும் வாசல்களையும் தொட்டுத் தடவியது. மூன்று பெண்பிள்ளைகள் ஏழாங்கல் ஆடிக்கொண்டிருந்தார்கள். பள்ளிக் கூட யூனிபாரத்திலேயே இருந்த சிறுவர்கள் இருவர் பந்தாடிக் கொண்டிருந்தார்கள். பாட்டி ஒருத்தி கையடக்கமான இரும்பு உரலில் வெற்றிலை பாக்கைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தாள். இரண்டாம் வீட்டு வாசலில் இடுப்புக் குழந்தையும் தலையில் பூச்சுமையுமாய் ஒருத்தி நின்றிருந்தாள். கணவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாளோ. அப்படித்தான் இருக்க வேண்டும். அவனையும் எதிர்பார்த்து இப்படித் தான் ஒருத்தி காத்திருக்கப் போகிறாள். அந்த ஒருத்தி யார்? ஏன். அது அந்த அழகியாக இருக்கக்கூடாது.

பழனியின் கண்ணுக்குள் வெள்ளிக் கொலுசு படிந்த அந்தத் தேமாங்கொழுந்துப் பாதங்கள்: ஒரு கணத்தில் விருட்டென அவன் பார்வையில் பட்ட மஞ்சள் முகம், மிரட்சியும் ஆர்வமுமாய்த் துள்ளிப் புரண்ட கண்கள்; எல்லாம் வந்து போயின. இதோ அவன் பார்வையில் படுகிற இந்த நான்கு வீடுகளில் ஏதோ ஒன்றில்தான் அந்த அப்சரஸ் இருக்கிறாள். எந்த வீட்டில்?

எத்தனை நேரம்தான் ஒருத்தன் நின்று கொண்டே இருப்பது. பழனிக்கு அலுப்பாய் இருந்தது. ஏன் இந்தப் பெண்கள் இப்படி இருக்கிறார்கள்? சாயங்காலம் ஆனால் என் இப்படி வீட்டுக்குள் முடங்கிக் கொண்டு விடுகிறார்கள்? பூக்கள் மலரும் இந்த வேளையில், வானம் வெண்ணிறம் மாறி தங்கமாய்க் கனியும் இந்த வேளையில், சூரியன் செம்பஞ்சுக் கிண்ணமாய் மாறு வேடம் பூண்டு மந்தகாசிக்கிற வேளையில் ஏன் இப்படி வீடுகளுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். சரி வானத்தை ரசிக்க வேண்டாம். சூரிய ஜாலங்களைப் பார்க்க வேண்டாம்; இளந்தென்றலையும், புதுப்பூ வாசனையையும் அனுபவிக்க வேண்டாம். வெறுமனே காலாற நடந்தால் என்ன? போட்டிருக்கிற கோலத்துக்கு ஓரம் கட்டினால் என்ன? தொட்டியில் இருக்கிற பழைய தண்ணீரை காலி செய்துவிட்டு புதுத்தண்ணீரால் நிரப்பினால் என்ன? தெருக்கோடியில் இருக்கிற கோயிலுக்குப் போனால் என்ன?

அலுத்துக் கொண்டவனாய் பழனி, ருக்மணியக்காவின் அருகே வந்து உட்கார்ந்தான். மசக்கைக்காரியான அவள் அவனுக்காக விழுந்து விழுந்து சமைப்பதைப் பார்க்கப் பாவமாய் இருந்தது. எவர்சில்வர் முறத்தில் அவள் எடுத்து வைத்திருந்த பூண்டை உடைத்து ஒவ்வொரு பல்லாக தோல் நீக்கி வைத்தான்.

“வேணா கண்ணு நீ போய் எதுனா படி”.

“ஆமா…யாருகிட்டக்கா என்னைக் கொழுந்தன் முறை அது இதுன்னு என்னமோ சொல்லிக்கிட்டிருந்தே…”

கோழியை சின்னத்துண்டுகளாக வெட்டிப் போட்டுக் கொண்டிருந்த ருக்மணியக்கா சொன்னாள்.

“அதுவா. அதான் நம்ப தனம். நம்ம பொம்மிடி மாமா இருக்குதே அதோட சின்னமாமியார் வகையிலே நம்பளுக்கு ஒறவுன்னு தான் அம்மா கிட்டக்கூட சொல்லிகிட்டிருந்தேனேய்யா அந்தப் பொண்ணு. பக்கத்து வூடுதான். ரொம்ப நல்ல மாதிரி. எனக்கு ரொம்ப ஒத்தாசை. இல்லேன்னாலும் இந்த உடம்பு இப்ப படுத்தற பாட்டுக்கு எனக்கு கஷ்டமாயிடும் பாரு” என்றவள் பொம்மிடி மாமா புராணத்தை ஆரம்பித்து விட்டாள். சுரைக் குடுவையை கட்டிவிட்டு பெரிய கிணற்றில் அவர் நீச்சல் பழகித் தந்ததை, கோணப்புளியங்காய் திருடிய தற்கு அடித்ததை என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டு போனாள்.

“என்னமோ பக்கத்து வூட்டு தனம் ரொம்ப ஒத்தாசை பண்ணும்னு சொன்னே. நானும் வத்தாப்புல புடிச்சி பாக்கறேன் தனியாத்தான் கெடந்து அல்லாடறே…ம்” பழனி, பேச்சை மறுபடியும் அவளை நோக்கிச் செலுத்தினான்.

“இங்கியேதான் கெடப்பா, இன்னிக்கு நீ இருக்கிறேன்னு கூச்சமோ என்னமோ தெரியல…”

பழனிக்கு இது ஒரு விதத்தில் பெருமையாய் இருந்தது. ஒரு இளம் பெண், அதிலும் அழகான பெண் அவளைப் பார்த்துக் கூச்சப்படுகிறாள் என்றால் அது பெருமைக்குரிய விஷயம்தானே? சரி! அவன் வீட்டிலேயே இருந்தால் அவள் இங்கே வர கூச்சப்பட்டுக் கொண்டு வராமல் இருந்து விடுவாள். அவன் கொஞ்ச நேரம் வெளியே போய் வருவது என்று தீர்மானித்துக் கொண்டான். போனான்.

அவனுடைய அனுமானம் சரியாகவே இருந்தது. அவன் வீட்டுக்குக் திரும்பிய போது அவள் சமையல் அறையில் அக்காவுடன் இருந்தது தெரிந்தது. அதைக் கவனிக்காதவன் போல ஏதோ ஒரு வாரப் பத்திரிகையை கையில் வைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்து கொண்டான், சாப்பாடு பரிமாறும்போதும் அவள் இருந்தாள். பழனி அவள் இருந்த பக்கம் பார்க்கவே இல்லை. சாப்பாட்டுக்குப் பிறகு அவள் அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தாள். ஒரு வேளை அவள் வீட்டில் டி.வி. இல்லையோ என்னவோ? ஏதோ ஒரு ஹிந்தி நாடகம் முடிகிறவரை பார்த்து விட்டுப் போனாள்.

“ஏங்க்கா தனத்துக்கு ஹிந்தி தெரியுமா?”

“நீ வேறே… அது ஹிந்தியை என்ன கண்டது. இன்னொன்னை என்ன கண்டது. பாவம். தலைவிதியை நொந்து கிட்டு விழுந்து கெடக்குது” ருக்மணியக்காவை ஏதோவொரு சோகம் கப்பிக் கொண்டது.

இத்தனை அழகும், இளமையும் கொண்ட ஒருத்தி விதியை நொந்து கொள்வானேன்? தனத்தின் வாழ்க்கையில் அப்படியென்ன சோகம் இருக்கும்?

இப்போதெல்லாம் அவனைக் கண்டால் ஓடி ஒளிவதில்லை. பேச்சை நிறுத்துவதில்லை. இரண்டு நாள் போனதும் ருக்மணி யக்காவும் அவனும் பேசிக்கொள்ளும் பழமைகளை, கேலிகளை தானும் பகிர்ந்து கொண்டாள். ஓரிரு சமயங்களில் இயல்பாகக் கூடப் பேசினாள். இவள் வாழ்க்கையில் அப்படி என்ன சோகம் இருக்க முடியும்?

விழித்திருக்கும் வேளைகளில், தனித்திருக்கும் பொழுதுகளில், வயல் வரப்புகளிலும் நடைபழகும் மாலை நேரங்களில், வீட்டுச் சமையலுக்கு காய்கறி வாங்கக் கடை விதிக்குப் போகும் சமயத்தில் பழனி மானசீகமாக தனத்துடன் உரையாடிக் கொண்டே இருந்தான். இதப் பாரு தனம். நீ எத்தனை அழகுன்னு தான் மொதல்ல நெனச்சேன். இப்ப நீ பழகறது. பேசறது. வேலை செய்யறது எல்லாமே எனக்குப் பிடிச்சிருக்கு. அந்த மாதிரி உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா, பிடிச்சிருக்கணும், இல்லாட்டா அந்தக் கண்ணுலே அந்தப் பளபளப்பு எப்படி வரும்? அந்த உதட்டில் அந்தச் சிரிப்பு எப்பிடி வரும். அது சாதாரணப் பார்வை இல்லியே…. அது சாதாரண சிரிப்பு இல்லியே…. தனக்கே தனக்குன்னு சொந்தமாக்கிக்கற ஆம்பளையைப் பார்த்து சிரிக்கற சிரிப்பில்லியா?

ருக்மணியக்கா ஒரு நாள் பழனியிடம் தனத்தின் கதையைச் சொன்னாள். பதின்மூன்று வயதிலேயே அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதாம். பக்கத்து ஊரில் ஒரு பள்ளிக் கூட வாத்தியாருக்குக் கட்டிக் கொடுத்தார்களாம். அவன் தீராத வயிற்று வலிக்காரனாம். புதுசாக் கட்டிக் கொடுத்த மகளைப் பார்க்கப் போன அப்பன் காதிலே மாப்பிள்ளையோட வியாதி பற்றிய செய்தி காதுல விழுந்ததாம். அவன் சின்னப் பையனா இருக்கும் போதிருத்தே இந்த வியாதி உண்டே சொல்லலியா உங்களுக்குன்னு ஊர்க்காரங்க கேட்டாங்களாம். ‘அப்பிடியா சேதி என்னை இப்படி ஏமாத்திட்டாங்களே, ஆச்சா போச்சா’ன்னு இவரு கூச்சல் போட்டாராம். வயித்துப் புள்ளைக்காரியை, ‘இந்தப் பொய்க்காரக் கூட்டத்துலே குடித்தனம் பண்ணது போதும்னு’ அழைச்சுட்டு வந்துட்டாராம். வயத்திலே இருக்கற புள்ளையைக் கலைக்க மருத்து மாயம்னு என்னென்னவோ பண்ணியிருக்காங்க. இந்தப் புள்ளை விளையாட்டுப் போக்கா அவங்க கொடுத்த மருந்துங்களை சாப்புடாம விட்டுடுச்சி. நம்ப வயத்துக்குள்ள பாப்பாவான்னு ஆச்சரியப் பட்டுகிட்டு சும்மா இருந்திடுச்சு. மாசம் கூட போனப்புறம்தான் இவங்களுக்கு விஷயம் தெரிஞ்சதாம். அதுக்கு அப்புறம் எதுவும் பண்ண முடியலை. பேசாம விட்டுட்டாங்க அப்படியாக புள்ளை ஒண்ணும் இருக்குது. அவங்க அப்பாவை விட மோசமான கோபக்காரராம் தனத்தின் சித்தப்பா. நடுவே தனத்தின் புருஷன் பல பேர் மூலமா செய்தி சொல்லி அனுப்பிச்சானாம். படுத்த படுக்கையாயிட்டானாம். பெரியவங்க பார்த்து சமாதானம் பண்ணி அனுப்புவாங்கன்னு இவ இருந்திருக்கா. சாகறதுக்கு முன்னால ஒரே ஒரு தடவை தனத்தை பாக்கணும்னு சொன்னானாம். இவங்க அனுப்பலை. அவன் செத்துட்டானாம். தனம் இப்பக்கூட அதை நெனச்சு அழுவாளாம். தப்பு பண்ணிட்டமோன்னு அவளுக்கு நெஞ்சுக்குள்ள குறுகுறுப்பு. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடப்பா. வெளியிலே வாசல்ல வரவே மாட்டா. என்னத்தை பண்ணிப்புட்டேன்னு தைரியம் சொல்லி தட்டிக் குடுத்து நானாப் பேசிப் பேசி சரி பண்னேன். அவ குழந்தையை தனத்தோட அம்மாதான் அம்மாவா இருந்து வளக்கறாங்களாம். அது இவளை அக்கான்னு தான் கூப்பிடுமாம். அவளுக்கு வேற வேற நல்ல எடத்துல கல்யாணம் பண்ணி வச்சிடணும்னு தான் பெரியவங்க சொல்றாங்களாம். இவளுக்குத்தான் அந்தப் பேச்சே பிடிப்பதில்லையாம்.

அக்கா சொன்ன கதையைக் கேட்டு பழனியின் மனசு கனத்துப் போனது. அதற்குப் பிறகு, எந்த நேரமும் அவளை தனத்தின் நினைவு ஆக்ரமித்துக் கொண்டது. பிறகு வழக்கம் போல அவளுடனான தன் மானசீக உரையாடலைக் கற்பனையிலேயே தொடர்ந்தான். ‘தனம்’ உனக்கு கல்யாணமாயிடிச்சாமே? குழந்தை கூட இருக்குதாமே. இருக்கட்டும். இதெல்லாம் என் அன்புக்கு ஒரு தடையில்லை. நம் காதலுக்கு ஒரு தடையில்லை. இன்பமான நம் எதிர்கால மண வாழ்வுக்குத் தடையில்லை. இடைவிடாமல் இந்த மௌன உரையாடல் தொடர்ந்தது. தனம் பற்றிய நினைவில் பழனியின் தூக்கம் கூட அன்று குலைத்து போனது. நீண்ட நேரம் கண் விழித்ததனாலோ என்னவோ காலையில் சற்று தாமதமாகவே எழுந்தான். அதற்குள் ருக்மணியக்கா குளித்து முடித்து பட்டுப்புடவை உடுத்திக் கோயிலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

“இந்தா தனம் தண்ணி நின்னுடப் போவுது. ரெண்டு கொடம் புடிச்சி தொட்டியில ஊத்திடு, என் தம்பி எழுந்ததும் அவனுக்கு ஒரு வாய் காப்பிப் போட்டுக் குடுத்துடு…”

ருக்மணி அக்காவின் குரல் தேய்ந்து மறைந்தது. பழனி படுக்கையில் புரண்டான். அவனும் தனமும் மட்டுமே அந்த வீட்டில் தனித்திருக்கிறார்கள் என்ற நினைவு அவன் இதயத்தில் பன்னீர் தெளித்து சிலிர்க்கப் பண்ணியது. அவனுடைய படுக்கையில் இருந்து சில அடி தூரங்களுக்குள்ளே அவள் நடமாடிக் கொண்டிருக்கிறாள். என்ன செய்து கொண்டிருப்பாள்? அவள் எது செய்தாலும் அழகாய்த்தான் செய்து கொண்டிருப்பாள். எழுந்து போய் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கலாமே என்று பழனிக்கு ஒரு கணம் தோன்றியது. போய் அவளுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கலாம். வயல் வரப்பிலும், கடை வீதியிலும், நடு இரவிலும் அவளிடம் கற்பனையில் பேசிய பேச்சையெல்லாம் நேரடியாகவே சொல்லிவிடலாம். அவ்வளவையும் சொல்லிவிட முடியுமா என்ன? ஒரு கோடி காட்டலாம்.

இல்லை. இல்லை. அவன் எழுந்துவிட்டான் என்று தெரிந்ததும் அவள் காப்பியைக் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போய் விடுவாள். எழக்கூடாது. பழனி கண்களை மூடிக்கொண்டு, படுக்கையிலேயே கிடந்தான். மனசு றெக்கை கட்டிக் கொண்டு பறந்தது. பூக்குவியல்களில் புரண்டது. மேகப் பொதிகளுள் நீந்தியது. நெஞ்சுக்குள் ஒரு ஊற்றுக்கண் சிலிரென்று திறந்தது. ஜிலுஜிலுவென அவனைத் தீண்டியது. அவனும் அவளும் தனிமையும் என்ற நினைவு சாமகானத்தில் அவனை ஆழ்த்தியது. அவனுக்குள் ஆயிரம் கனவுகளும் நினைவுகளும் கலந்து மயங்கின. சட்டென்று தலைப்புறத்தில் இருந்த ஸ்டுல் நகர்த்தும் ஓசை கேட்டது. அவள்தான்.

என்ன நினைத்தாளோ? இந்தக் கும்பகர்ணத் தூக்கத்தை எப்படிக் கலைப்பது என்று எண்ணினாளோ என்னவோ? பூவைத்தொட்டு உயரும் பட்டாம்பூச்சியாய் அவள் கை அவன் முதுகைத் தொட்டு மீண்டது. அவ்வளவுதான். விழித்த கண்களில் புதுமலராய் அவள் முகம்: மிரளும் கண்கள்; சரம் விந்த இதழ்கள்; சரிந்து இறங்கிய கன்னத்து முடி: பளி ரெனத் துலக்கிய நெற்றி வளை குலுங்கும் கைகள். அவனுக்குள் அதுவரை மெல்லிய சாமகானமாய் நடத்து கொண்டிருந்த இன்னிசைக் கச்சேரி உக்கிரம் கொண்டது. உடுக்கையும், டமாரமும். மேளமும், கணத்துக்குக் கணம் உரத்து உரத்து ஒலியை உயர்த்திக் கொண்டே போயின. ஸ்டுலின் மேல் காபித் தம்ளரை வைத்துவிட்டு நிமிர்ந்தாள். என்ன செய்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாதவனாக அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தான். எரியும் பெருந்தியின் மையத்திலிருந்து விளிம்புக்கு பிரயாணம் செய்தது அவன் உயிர். அவன் உயிருக்குள்ளும் உடலுக்குள்ளும் அந்தத் தீ புருந்து அவளானது. அவன் தெற்றியிலும், கன்னத்திலும், கண்களிலும், காது களிலும், கழுத்திலும் அவனது ஆவேசத் தகிப்பு முத்தங்களாய் சிந்தின. எல்லாம் ஒரு கணம்தான். எப்படியோ அவன் பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு அவள் வெளியேறி விட்டாள்.

பழனி அப்படியே படுத்துக் கிடந்தான். உயிரும் ஜ்வலிப்பும் கொண்ட தீக்கங்கு அணைந்து செயலற்ற கரிக்கட்டையாய் கிடப்பது போலக் கிடந்தான். மின்னலை தரிசித்தவன் போல, நண்பகல் குரியனின் கண் பதித்தவன் போல அப்படியே கிடந்தான். அது மிரட்சியா? பயமா? குப்பென்று வேர்த்தது. உடம்பு நடுங்கியது. கையும் காலும் காற்றில் கலப்பது போல உடம்பே மெல்லக் கரைவது போல உணர்ந்தான். மனம் ஓலமிட்டது. பழனியின் மனதுக்குள் ருக்மணியக்காவும். மாமாவும், அம்மாவும் வந்து போனார்கள். அவனுக்கு அவமானமாய் இருந்தது. நடுக்கமாய் இருந்தது.

தனம் என்ன செய்வாள்? வீட்டுக்குப் போய் அவளுடைய அம்மாவிடம் சொல்வாளோ? அப்பா விடம் சொல்வாளோ? அனைவரிலும் முரடனான அவளுடைய சித்தப்பாவிடம் சொல்வாளோ? அவனை என்ன செய்யப் போகிறார்களோ? அவன் நடுங்கிப் போனான். கண்களை இறுக மூடிக்கொண்டான், இன்னும் கொஞ்ச நேரத்தில் பெரிய கூச்சலும் சண்டையுமாக அவன் மானம் போகப் போகிறது. தலையணையில் முகம் புதைத்துக் குப்புறப்படுத்துக் கொண்டான் பழனி.

ஏன் அவள் இன்னமும் யாரையும் அழைத்து வரவில்லை. ஒரு வேளை கடைக்குப் போயிருக்கும் அப்பாவின் அல்லது சித்தப்பாவின் வருகைக்காகக் காத்திருக்கிறாளோ? ஒருவேளை அக்காவின் முகத்துக்காக தாட்சண்யம் பார்க்கிறாளோ? அக்காவின் முகத்திற்காகத் தன் வீட்டில் சொல்லத் தயங்கினாலும் நிச்சயம் அக்காவிடம் சொல்லி விடுவாள். அக்கா என்ன நினைப்பாள்? மாமா என்ன செய்வார்? ஏன் இப்படி ஒரு கேவலத்தை வர வழைத்துக் கொண்டேன்? பழனி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். இனிமேல் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்கக் கூடாது. உடனே கிளம்பி வாருக்குப் போய்விட வேண்டும் என்று தோன்றியது. மளமளவென்று தன் துணி மணிகளை எடுத்து மடித்து வைத்தான். கோயிலில் இருந்து திரும்பி வந்த அக்கா திடுக்கிட்டாள்.

“என்னய்யா, காப்பி அப்படியே இருக்குது குடிக்கலியா?”

“நான் ஊருக்குப் போறேன்.”

“ஏன்ய்யா ?”

“போறேன்.”

“மூணு நாளு இருய்யான்னு சொன்னப்ப என்னமோ இன்னும் பத்து நாளு இருப்பேன்னே இப்ப என்ன இத்தனை அவசரம்…”

“சும்மா தொணதொணங்கா தக்கா, நான் வந்து ஒரு வாரமாகுது. அம்மா திட்டும்”.

அக்கா ஆச்சர்யம் தீராதவளாக அவனைப் பார்த்தாள்.

“சரி கொஞ்ச நேரம் இரு. சாப்பிட்டுட்டுப் போகலாம்.”

எதையோ சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு அவன் அரக்கப் பரக்கத் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளிவாசலுக்கு வந்தான்.

தனம் எதையோ எடுத்துக் கொண்டு வந்தாள்.

“என்னன்னு தெரியல இப்பிடி திடும்னு கெளம்பறான்…” என்று தனத்திடம் நியாயம் சொல்பவள் போலத் தொடங்கிய ருக்மணி அக்கா தனத்தின் கையில் இருந்த பாத்திரத்தை வாங்கித் திறந்து பார்த்தாள்.

“என்னடி இது பாயாசம்? இன்னிக்கு ஒரு விசேஷமும் இல்லியே” என்றாள்.

“விசேஷம்தான்” என்றாள் தனம் மெல்லிய குரலில். கண்களில் அதே பளபளப்பு. உதட்டில் அதே புன்னகை.

அத்தனை ‘அவசரப்பட்டுப் புறப்பட்டிருக்க வேண்டாமோ’ என்றிருந்தது பழனிக்கு.

– அக்டோபர் 1992

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *