கதைத்தொகுப்பு: காதல் சமூக நீதி சரித்திரக் கதை
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,062 
 
 

அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அமிர்தா தந்தையைத் திரும்பிப் பார்த்தாள்.

அவர் புன்னகைத்தார். ‘‘கவலைப்படாதே. இன்னும்அரை நாழிகையில் கண் திறப்பான். அவன்
உண்பதற்கு ஏதாவது கொடு. யார், என்ன என்றுவிசாரித்து வை.’’

அவர் தன் மருந்துப் பேழையோடு அவசரமாய் கிளம்பிச் சென்றார்.

அமிர்தா மீண்டும் அவனைப் பார்த்தாள்.

அவர் சொன்னாற்போல் அரை நாழிகையில் அவனிடம் அசைவு தெரிந்தது. கண் விழித்து சற்று நேரம்மலங்க மலங்கப் பார்த்தவனின் அருகில் சென்றாள்.

‘‘நான் எப்படி இங்கு…?’’

‘‘காட்டில் மயங்கிக் கிடந்தீர்கள். நானும் என் தந்தையும் இங்கே கொண்டு வந்து சிகிச்சைசெய்தோம். என் தந்தை அரண்மனை வைத்தியர் என்பது உங்கள் அதிர்ஷ்டம். நீங்கள் யாரெனஅறியலாமா?’’

‘‘மேலைச் சாளுக்கியத்தைச் சேர்ந்த ஒரு வீரன். தங்கள் மன்னரை ராஜாங்க விஷயமாகக்காண்பதற்காக வந்திருக்கிறேன். நெடுந்தொலைவிலிருந்து வருவதால் சரியான உறக்கமில்லை.உணவில்லை. மயக்கமடைந்திருக்கிறேன்.’’

‘‘தங்களை அனுப்பியது யார்? உங்கள் மன்னரா?’’

‘‘மன்னித்து விடு பெண்ணே. அரசாங்க விஷயத்தை இதற்கு மேல் சொல்ல இயலாத நிலையில்இருக்கிறேன். நான் உடனே கிளம்ப வேண்டும்.’’

‘‘நீங்கள் மிகவும் களைத்திருக்கிறீர்கள். நாளை செல்லலாமே. என் தந்தையும் வந்து விடுவார். மேலும்மன்னரை நீங்கள் சந்திக்க அவரே அழைத்துச் செல்வார்.’’

அவன் மறுக்கவில்லை.அன்று முழுக்க அவளோடு நிறையப் பேசினான். அவளது அழகும், பரிவும், நிதானமும் அவனைக்கவர்ந்தது. அன்றிரவு அவளது தந்தை திரும்பி வருவதற்குள் அவன் மனம், அவளை காதலிக்கத் துவங்கியிருந்தது.

இரவு வைத்தியர் வந்தார்.

‘‘எப்படியிருக்கிறார் நமது விருந்தாளி?’’

‘‘தங்கள் கருணையில் மிகவும் நன்றாகவே உள்ளேன்.’’ அவன் வெளியில் வந்து கரம் குவித்து அவரைவணங்கினான்.

‘‘வெகு தூரத்திலிருந்து வருவது போல் தெரிகிறது. இங்கு எதற்கேனும் என் உதவி தேவைப்பட்டால்கூறுங்கள்.’’

‘‘மிக்க நன்றி. நான் மன்னரைக் காண வேண்டும். இந்த ஓலையை மன்னரிடம் கொடுத்து உதவமுடியுமா?’’

அவன் முத்திரையிட்டு கட்டிய ஓலை ஒன்றை எடுத்து அவரிடம் நீட்டினான்.மறுநாள் வைத்தியர் கிளம்பிச் சென்ற பிறகு, கிடைத்த தனிமையில் அவள் அவனை வம்புக்கு இழுத்தாள்.

‘‘மன்னருக்கு மட்டும்தான் ஓலை அனுப்புவீர்களா?’’

‘‘அதில் உனக்கென்ன வருத்தம்?’’

‘‘நீங்கள் தூதுவர்தானே?’’

அவன் புன்னகைத்தான்.

அப்போது வாயிற்புறம் குதிரைக் குளம்பொலிகள் கேட்க, அவன் வேகமாய் வாயிலுக்குச் சென்றான்.

‘‘இங்கு சோமேஸ்வரன் என்பது…’’

‘‘நான்தான்.’’

‘‘வணங்குகிறேன். மன்னர் உங்களைக் கையோடு அழைத்து வரக் கூறினார் குதிரை தயாராகஉள்ளது.’’

அவன் மகிழ்ச்சியோடு கிளம்பினான், தாவி குதிரையில் ஏறியமர்ந்து அதன் சேணத்தைப் பிடித்துசெலுத்தியவனிடம் தெரிந்த அசாத்திய கம்பீரத்தை வியப்போடு கவனித்தாள் அமிர்தா.

‘‘சாளுக்கிய மன்னனை இந்த நிலையில் நான் எதிர்பார்க்கவில்லை.’’

சோழ மன்னர் ராஜராஜன் அவனை வரவேற்று அமர வைத்தபடி வருத்தத்தோடு கூறினார்.

‘‘நடந்ததைக் கூறுவீர் சோமேஸ்வரரே.’’

‘‘களசூரியன் பிஜ்ஜலனின் பிடியில் இப்போது மேலைச்சாளுக்கியம் உள்ளது மன்னா. பிஜ்ஜலனால்விரட்டப்பட்டு, அனைத்தையும் இழந்து உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன். நீங்கள் மனம்வைத்தால் என் நாடு மீண்டும் எனக்குக் கிடைக்கும்.’’

‘‘நிச்சயமாக. உதவிநாடியோரை ராஜராஜன் கைவிட மாட்டான். நீங்கள் தனியாக வந்துள்ளீரா?அல்லது சிறிய படைபலமாவது உள்ளதா உங்களிடம்?’’

‘‘இல்லை மன்னா.’’

‘‘கவலை வேண்டாம். எனக்கு கொஞ்சம் கால அவகாசம் மட்டும் கொடுங்கள். மேலைச்சாளுக்கியத்தைமீட்டு, உங்களுக்கு மீண்டும் முடிசூட்ட வேண்டியது என் பொறுப்பு. அதுவரை என் விருந்தினராகஇந்த மாளிகையில் தங்கியிருங்கள்.’’

‘‘நன்றி மன்னவா… அதற்குமுன் நான் நேரில்போய் வைத்தியரிடம் விடைபெற்று வருகிறேன்.’’

‘‘நீங்கள் யாரென்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்பது என் அபிப்ராயம். சென்று வாருங்கள்.’’

சோமேஸ்வரன் மீண்டும் வைத்தியர் வீட்டுக்கு வந்தான். அமிர்தா மூலிகை அரைத்துக்கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் முகம் மலர வந்தாள்.

அவன் விடைபெற்றபோது, அவள் முகம் வாடிப்போயிற்று.

‘‘என்னைப் பிரிவதில் வருத்தம்தானே உனக்கு?’’அவள் கண்கலங்கினாள்.

சோமேஸ்வரன் அவளருகில் வந்து தன் சுட்டு விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி, அவளை உற்றுப்பார்த்தான்.

‘‘நான் வருவேன். வந்து உன்னை அழைத்துச் செல்வேன். இந்தப் பிரிவு நிரந்தரமல்ல புரிகிறதா…?’’

அவன் வெளியில் வந்து குதிரையில் ஏறிச்செல்ல, அவள் துக்கமும் சந்தோஷமும் கண்களை நிறைக்க,அவன் செல்வதையே பார்த்தாள்.

இரண்டாம் ராஜராஜன் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான். அவன் முகம் தீவிரசிந்தனையிலாழ்ந்திருந்தது. அவன் முன்னால் படைத்தளபதிகள் அவன் உத்தரவுக்காகக் காத்திருந்தனர்.

‘‘நான் சோமேஸ்வரனுக்கு வாக்களித்துவிட்டேன். மேலைச்சாளுக்கியத்தை நாம் வெற்றிகொண்டேயாக வேண்டும். கல்யாணபுரத்தில் சோமேஸ்வரனுக்கு பட்டாபிஷேகம் நடத்தி வைக்கும்வரை எனக்கு ஓய்வில்லை.’’

‘‘ஆனால் நமது படைபலம் இப்போது போதிய நிலையில் இல்லை மன்னா. பாண்டியனின் வளர்ச்சி ஒருபுறம் ஓங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலைச்சாளுக்கியத்திற்கு நமதுபடைகளை அனுப்புவது சாத்தியமல்ல. சரியுமல்ல.’’

‘‘அதுவும் சரிதான். நான் இதைப்பற்றி யோசிக்காமல் இல்லை. நான் உடனே வேங்கி மன்னனைச்சந்திக்க வேண்டும். பழையாறைக்கு வேங்கி மன்னனை உடனே புறப்பட்டு வரச் சொல்லி தூதுவன்ஒருவரை அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள்.’’

இரண்டொரு நாட்களில் வேங்கி மன்னனை பழையாறை அரண்மனையில் சந்தித்து ஆலோசனைநடத்தினான்.

‘‘சோழ மன்னர் கட்டளையிட்டால் இந்த க்ஷணமே கல்யாணபுரத்தின் மீது படையெடுக்கத் தயாராகஉள்ளேன்.’’

‘‘எடுத்த எடுப்பில் போர் என்பது இப்போதைய நிலையில் அவ்வளவு சரியல்ல வேங்கி மன்னா.பாண்டியனின் கை ஓங்கிக்கொண்டு வருகிறது. நமது படையெடுப்பு பற்றிக் கேள்விப்பட்டால், அவன்பிஜ்ஜலனுடன் சேர்ந்து கொண்டு நம்மை எதிர்க்க வாய்ப்பிருக்கிறது. எனவே, சாதுர்யமாகத்தான் நாம்நமது அடிகளை எடுத்து வைக்க வேண்டும். நீ எனது தூதுவனாக கல்யாணபுரம் செல். பிஜ்ஜலனைச்சந்தித்து நியாயங்களைக் கூறி மேலைச் சாளுக்கியத்தை சோமேஸ்வரன் வசம் ஒப்படைத்து விடச்சொல். அதற்கு மறுத்தால்?’’ என்று நிறுத்திய ராஜராஜன், வேங்கி மன்னனை அருகில் அழைத்துமிகச்சிறிய குரலில் அவனுக்கு சில உத்தரவுகளைப் பிறப்பித்தான். அடுத்த இரு தினங்களில் அவன்ராஜராஜனின் தூதுவனாக, கல்யாணபுரம் நோக்கிப் புறப்பட்டான்.

பிஜ்ஜலன் ஏளனமாகச் சிரித்தான். அவன் கண்களில் நரியும் புலியும் நர்த்தனமாடின.

‘‘உயிரேபோனாலும் இந்த கல்யாணபுரத்தை சோமேஸ்வரனுக்கு விட்டுத் தந்து, விலகமாட்டேன் என்றுராஜராஜனிடம் போய்ச்சொல்.’’

‘‘இதுதான் உன் முடிவா…?’’

‘‘ஆம்.’’

‘‘இதன் விளைவுகள் மோசமாகவும் இருக்கக் கூடும்.’’

‘‘மிரட்டல் வேண்டாம் வேங்கியரசே. ராஜராஜன் நிலையே இப்போது ஆட்டம் கண்டிருக்கிறது.பாண்டியனின் வளர்ச்சியைக் கண்டு சோழ தேசம் நடுங்கிப்போயிருப்பதும் தெரியும். அவரிடம்போதிய படைபலம் இருந்திருந்தால், இந்நேரம் பேச்சுவார்த்தையா என்னோடு நடத்திக்
கொண்டிருப்பார் உன் மூலம்…? போய் உமது மன்னனிடம் இந்த வேண்டாத வேலையை நிறுத்திவிட்டுசோழ தேசத்தை கவனிக்கச் சொல்.’’

வேங்கியரசன் அவனை உற்றுப் பார்த்து விட்டு, எழுந்தான். எதுவும் பேசாது திரும்பி நடந்தான்.அவன் சென்ற சிறிது நேரத்தில், வீர சைவன் ஒருவன் பிஜ்ஜலனைச் சந்தித்தான்.

‘‘கோச்சர்ல கோட்டாவில் மிகப்பெரும் அளவில் யாகம் நடத்தி தேவி வழிபாடு செய்ய இருக்கிறோம்.முதல் மரியாதையை மன்னர் ஏற்றுக் கொண்டு யாகத்தை நடத்தித் தர வேண்டும்’’ அவன் கூற,பிஜ்ஜலன் முகம் மலர்ந்தான்.

‘‘அதற்கென்ன நடத்தி விட்டால் போகிறது. தேவியின் அருள் எனக்குத் தேவைதான்.’’

பிஜ்ஜலன் ஒப்புக்கொண்டான். அதற்கடுத்த சில தினங்களில் கோச்சர்ல கோட்டாவுக்குத் தன்மெய்க்காப்பாளர்களோடு சென்றவனை அங்கிருந்த வீரசைவர்கள் வரவேற்றனர். அடுத்த சிலமணித்துளிகளில் வீரசைவர்களின் வேடத்திலிருந்த வேங்கி நாட்டுப்படை, பிஜ்ஜலனை மிகச்சுலபமாகமுறியடித்து மேலைச்சாளுக்கியத்தைத் தன் வசம் கொண்டது.

ராஜராஜனின் தலைமையில் நான்காம் சோமேஸ்வரனுக்குச் சிறப்பாக முடிசூட்டும் விழா நடந்தது.

சோமேஸ்வரன் இரண்டாம் ராஜராஜனை அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியையும் நன்றியையும்தெரிவித்தான்.

‘‘என் நன்றியை எந்த விதத்தில் நான் செலுத்த வேண்டும் சொல்லுங்கள் ராஜராஜரே?’’

‘‘எனக்கு எதுவும் தேவையில்லை சோமேஸ்வரா. வேங்கி நாட்டின் இளவரசியை நீ மணந்துகொண்டால், மேலைச்சாளுக்கியமும் கீழைச்சாளுக்கியமும் இதன் மூலம் தன் உறவைப் புதுப்பித்துக்கொண்டு பலம் பெறும். சாளுக்கிய மன்னர்கள் ஒருவருக்கொருவர் நட்போடு இருக்க வேண்டியதுஅவசியம் என நான் நினைக்கிறேன்’’ ராஜராஜன் கூற, சோமேஸ்வரன் அதை ஆமோதித்தான்.

‘‘மகிழ்ச்சியோடு சம்மதிக்கிறேன் மன்னா’’ என்றான்.

நடந்தது எதுவும் தெரியாமல், வைத்தியரின் அப்பாவி மகள், அவன் வருவான் என்ற நம்பிக்கையோடு தினமும் உறங்கி, தினமும் விழித்து தன் தந்தைக்கு மூலிகை அரைத்துக் கொடுத்தபடி அவன் வரவுக்காகக் காத்திருந்தது சோமேஸ்வரனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

1 thought on “அமிர்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *