அன்புள்ள காதலிக்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 8, 2020
பார்வையிட்டோர்: 20,484 
 
 

காலை 9 மணி 22 நிமிடம். நாள்: 15.11.1999.

‘லவ் லட்டர்!’- ஐ கொடுக்க, அந்தச்சிறுவன் சென்று, இந்த நிமிடத்துடன், பன்னிரெண்டு நிமிடமும் முடிந்து விட்டது!

அவன் வயதுக்கு ஒரே ஓட்டமாக ஓடிப்போய், ஓடிவந்தால், ஐந்தாறு நிமிடங்களே கூட தேவைப்படாது! அப்படியிருக்க, அவன் இன்னும் வந்து சேரவில்லை!

நான் மிகுந்த பரபரப்புடன், பஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தேன்.

அவசரத்தில், அந்தப் பொடியனின் பெயரைக்கூட கேட்டுக்கொள்ளாமல், அவன் அணிந்திருந்த பச்சை நிற சட்டையை அடையாளம் வைத்துக்கொண்டு, அசட்டுத்தனமாக லட்டரை கொடுத்து அனுப்பிவிட்டேன்.

தேவைக்கு அதிகமாக நேரமாகிவிட்டதால், எனக்குள் ‘தாறுமாறான’ எண்ணங்கள் தோன்றி, எனது இரத்த அழுத்தம் குளறுபடியானது.

‘அவன் வந்து சேருவதற்குள்ளாகவே, எனது கல்லூரிச் செல்லும் பஸ், வந்து தொலைந்துவிட்டால் என்னாவது?’ என்று மிரட்சியுடன் மேற்கு திசையை நோக்குவதும்,

‘சிறுவன் சீக்கிரம் வந்துவிட வேண்டுமே!’ என்ற ஏக்கத்துடன், தெற்கு திசையில் அவனை எதிர்பார்ப்பதும்,

இடையிடையே நிமிடத்துக்கு பல முறை எலட்ரானிக் கைக்கடிகாரத்தில், நொடியையும் நிமிடத்தையும் கவனிப்பதும்,

போதாகுறைக்கு எனது விரல் நகங்களை கடித்து துப்புவதுமாக, நான் பரபரப்பாக நின்று கொண்டிருந்தேன்.

என்ன செய்யலாம்? என்ன செய்யலாம்?

கடிகாரத்தில் பதினான்காம் நிமிடம் தொடங்கிட, ஒரு வழியாக, பச்சை சட்டை சிறுவன், இரண்டு மின் கம்பங்களுக்குஅப்பால், குறுக்குத் தெருவின் திருப்பத்தில், ஓடி வந்துக்கொண்டிருந்த திருக்காட்சி, என் கண்களில பட்டது! அப்பாடா!!

‘ஓடியாடா! ஓடியாடா!!’ என்பதாக, கைகளை வீசிக் காட்டினேன்.

இதனால், அவன் ஓட்டத்தை இன்னும் அதிகமாக்கிக் கொண்டு, விரைந்து வந்து, அருகில் நின்று, மூச்சிரைத்துக் கொண்டே அவசரமாக, “ரெண்டு ரூபா குடு! சீக்கிரமா ரெண்டு ரூபா குடு!!” என்றான்.

நான் படபடப்பாக, “என்னடா, ரெண்டு ரூபாங்கறே? ஒரு ரூபாய் குடுக்கறேன்!-னு தானே பேச்சு? சரி, அது இருக்கட்டும்! ஏன்டா, இவ்வளவு லேட்டு? சரி..சரி, நான் சொன்னது போல, மஞ்சள் கலர் புடவை கட்டிகிட்டிருந்த ‘அந்த’ அக்காகிட்டதானே குடுத்த?”

அவன் மழுப்பலாக, “மொதல்ல ரூவா குடுண்ணே! சொல்றேன்!”என்றான்.

இப்போழுது அவன் பார்வையே சரியில்லை. ஏதோ விபரீதம் நடந்து விட்டது!

“என்னடா ஆச்சு? அத சொல்லுடா மொதல்ல!” என்றேன், குரலை உயர்த்தி.

அவன் கொஞசம் மிரண்டு போய், சற்று விலகி நின்று கொண்டு, ‘அ..ந்..த’ அக்காகிட்ட குடுக்கறத்துக்கு முந்தியே, வாசல்லயே, வேற ஒரு அக்கா கூட ஆட்டோவுல வந்து இறங்கின, ‘யானை’ மாதிரி குண்டா இருந்த மாமா பேப்பரை புடுங்கிகிட்டாரு!” என்று காதில் அமிலம் ஊற்றினான்.

என்னது!! யானை மாதிரியான மாமா ஆட்டோவுல வந்து விட்டாரா! அடப்பாவி! ‘நினைத்தது ஒன்று, நடந்தது வேறு ஒன்று!’ என்றாகிவிட்டதே?

போயிற்று! போயிற்று! என் மானம், மரியாதை அத்தனையும் போயிற்று!

ஊரிலிருந்து வந்திருக்கும் அவளுடைய அண்ணன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிடுங்கி கொண்டு விட்டானாம்!

என் முகம் போன போக்கை கண்டு, சிறுவன் ஓட்டம் எடுத்தான். சற்று தூரத்தில் நின்று, “ஒரு ரூவாயாச்சும் தரூவியா? மாட்டியா?” என்றான்.

கோபமாக, சுற்றும் முற்றும் பார்த்து, காலருகே தரையில் கிடந்த கல் ஒன்றினை எடுக்க குனிந்ததும் ஓடியே போனான்.

அவன் ஓட ஓட, எனக்கு ஆத்திரம் அதிகமாகி, அவனை நோக்கி அவசியமில்லாமல், “உன் பேரு என்னடா? பேமானி!” என்று கூச்சலிட்டேன்.

அவன் எதையும் காதில் வாங்காமல், பின்னங்கால் பிடரியில் பட ஓடி மறைந்தான்.

‘கடிதத்தை ‘அவளிடம்’ தான் கொடுக்க வேண்டும்!’ என்று கண்டிப்புடன் கூறி, எச்சரித்து தான், அவனை அனுப்பி வைத்தேன்.

இருந்தும், இப்படி சொதப்பிவிட்டான், பச்சை சட்டை பிசாசு!

எனக்கு அந்த ஆசையே வந்திருக்க கூடாது!

லவ் லட்டர் எழுதும் ஆசை! எழுதியாயிற்று! மாட்டிக்கொண்டாயிற்று! இன்னம் என்னென்னவோ?

‘கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே!’ என்பார்களே, அப்படி, மதி கெட்டுப்போய், காதல் கடிதம் எழுதிவிட்டேன்.

இன்று காலை சலூனில் முடி வெட்டிக்கொள்ள காத்திருக்கையில், அங்கு இருந்த வார பத்திரிக்கை ஒன்றில், ‘உங்கள் காதல் வளமும் பலமும் பெற சில வழிகள்!’ என்ற கட்டுரையின் தலைப்பால் கவரப்பட்டேன்.

ஊன்றி வாசித்தேன். அதில் காணப்பட்ட, ‘கடிதப் பரிமாற்றம், காதலை மிகவும் பலப்படுத்தும்!’ என்ற வாக்கியம் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து கொண்டது.

நான் அழைக்கப்பட்டு, சுழல் நாற்காலியில் அமர வைக்கப்பட்டு, எனக்கு சிகை அலங்காரம் நடைபெறத் தொடங்கிட, எனது, ‘லவ் லட்டரில்’ ஆரம்ப வரிகளை எப்படி ஆரம்பிக்கலாம்? என்னென்ன எழுதலாம்? என்ற தீவிர யோசனையில் ஆழ்ந்து விட்டமையால், முடிவெட்டுபவர், தமக்கு வசதியாக அமைத்துக் கொண்டிருந்த, எனது தலையை, அடிக்கடி அசைத்து, அவரின் அதிருப்திக்கு ஆளானேன்.

அப்பா, அம்மாவுக்கும், அண்ணனுக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றாலே, பல தடவைகள் வார்த்தைகளை யோசிக்கின்ற எனக்கு, எனது போதாத காலம், சுழல் நாற்காலியில் இருந்து இறங்குவதற்குள், லட்டர் ஒரு தினுசாக மனதில் வடிவம் பெற்றுவிட,

பக்கத்து பெட்டிக்கடையில் வெள்ளைப் பேப்பர் வாங்கி, சலூன் மரநிழல் சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து, இந்த லவ் லட்டரை எழுதி தொலைத்து விட்டேன்.

என் அன்பே அருணா! என் இனிய காதல் தேவதையே!

உன் ‘இதயம் திருடியவன்!’ எழுதும் லவ் லட்டர்!

உன்னிடம் மனம் விட்டுப் பேசாமல், தூக்கமே கெட்டுவிட்டது, எனக்கு!

ஊரிலிருந்து உனது அண்ணன் குமரன் (குமரனா அவன்? குண்டோதரன்!) வந்தது முதல், ஏன் பாராமுகமாக இருக்கிறாய்?

நான் உன்னுடன் ‘பேச’ சந்தர்ப்பம் அமைக்கும் போதெல்லாம் அந்த குரங்குகள், (அது தான் குண்டோதரன் வாரிசுகள்!) கெடுத்துவிடுகின்றன.

அத்தையாம், அத்தை! சொத்தை!!

இனியும் எந்நிலைப் பொறுக்காது! அவசியம் இன்று இரவு மொட்டை மாடிக்கு வரவும்! மறக்காதே!

அங்கே மனம் விட்டு பேச முடியாவிட்டாலும் கூட, ஏதோ கொஞ்சம், சுமாராக, என்ற அளவிலாவது ‘பேசி’ ஆக வேண்டும்.

இல்லாவிட்டால், எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலிருக்கிறது.

என் வாழ்வின் நம்பிக்கை நட்சத்திரமே! விடிவெள்ளியே! ஒளி விளக்கே! பொன்னே! மணியே! முத்தே!

உனக்கு என் ஆசை முத்தங்கள்! இச்! இச்! இச்! (கன்னங்களிலும் இன்ற பிற இடங்களிலும்)

இப்படிக்கு, உன் ராஜா.

(ராஜா ராமன்)

லட்டரை எழுதி, கையெழுத்திட்டப் பின், ஒரு முறைக்கு சில முறை, அதனை படித்துப் பார்த்து சந்தோஷப் பட்டுக்கொண்டேன்.

யாருமே இதுவரையில் செய்திராத ஓர் அருஞ்சாதனையை இப்போது நான் செய்துவிட்டதைப்போல உற்சாகம் கொப்பளித்தது!

இந்தக் கடிதத்தினால் எங்கள் காதல் மேலும் வலுவடைந்து விட்டதாக கற்பனை விரிந்தது!

காதலுக்கு பேருதவி செய்திடும், அந்த அற்புதமான கட்டுரையை வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியருக்கு, நன்றியும் பாராட்டும் தெரிவித்து, மடல் ஒன்று எழுதிட வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டேன்.

‘அந்தக் கட்டுரையில் காணப்படும் இன்னும் வேறு எந்த வழி முறைகளையெல்லாம் உடனடியாக நடைமுறைப் படுத்தலாம்?’ என்பதை அசைப் போட்டுக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டேன்.

மிதித்துச் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கின்ற, எனது தாத்தா தன் உபயோகத்தில் வைத்திருந்து, தற்போது எனது புழக்கத்தில் இருக்கின்ற, எல்லா பாகங்களும் கலகலத்துப்போய், எந்நேரத்திலும் என்னை கர்ணம் போட வைக்க தயாராக இருக்கின்ற சைக்கிளை, அதன் தகுதிக்கு மீறிய வேகத்தில் மிதித்துக்கொண்டு, உல்லாசமாக வந்து சேர்ந்தேன். இம்முறை கால்வலியே தெரியவில்லை!

காம்பவுண்ட் கேட் அருகே இறங்கிக்கொண்டேன்.

அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் தரைதளத்தில் இருக்கும் எனது இருப்பிடத்தை நோக்கி, சைக்கிளை தள்ளிக்கொண்டு நடக்கும் பொழுது,

பக்கத்து வீட்டிலிருக்கும் கிளார்க் நமச்சிவாயம், “பிரதர்! நீங்க காலேஜ் போய் சேர்ந்த உடனேயே, மறக்காம, எங்க பாஸ்கிட்ட, ‘நான் ஒன்னவர் பர்மிஷன்ல வந்துடறேன்!-னு சொல்லிடுங்க! மறந்துடாதீங்க! தோ, இவளை இந்தக் கல்யாணத்துக்கு அங்கே அழைத்துக்கொண்டு போய் பார்த்துட்டு, திரும்ப இங்கேயே கொண்டு வந்து விட்டுட்டு, காலேஜ்க்கு வந்துடுவேன்!” என்றார்

“சரிங்க, சார்! நிச்சயமாக சொல்றேன்.” என்றேன்.

அவர் தன் மனைவியுடன் ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றார்.

மேல் வீட்டுக்காரர் மகனுக்கு, பக்கத்து ஊரில், இன்று காலை திருமணம். இதற்காக, அங்கு, இந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகளில் ஏறக்குறைய எல்லோருமே போயுள்ளனர்.

அருணாவும், காலையிலேயே, தனது பரிவாரங்களுடன் இந்த திருமணத்திற்கு சென்று விட்டாள்.

‘இந்தக் கடிதத்தைப் படித்ததும் அவளின் மன ஓட்டம் எப்படியிருக்கும்?’ என்று யோசித்தவாறு கதவை திறந்து சைக்கிளை ஹாலில் நிறுத்தினேன்.

நுழைந்தவுடன் சிறிய ஹால். அடுத்து சமையலறை. அதன் எதிரே வலப்புறம் குளிலறை, டாய்லட்! புறாக்கூண்டு போல, இது தான் மொத்த வீடும்!

சட்டையை நனைக்கும் முன், எச்சரிக்கையாக, லட்டரை எடுத்து, எனது பேக்கினுள் மறைத்து வைத்தேன்.

‘அருணாவிடம், எப்போது, எப்படி கடிதத்தை சேர்த்தால், அதிக நலம் பயக்கும்?’ என்னும் யோசனையுடன் குளித்து முடித்தேன். குழப்பமாகவே இருந்தது. ஒன்றும் தெளிவாகவில்லை.

சீருடை அணிந்து கொண்டேன்.

காம்பவுண்ட் கேட் அருகே, ஆட்டோ ரிக்சா வந்து நிற்கும் சப்தம் கேட்டது. ஆவலுடன் வெளியில் வந்து பார்த்தேன். ஏமாற்றம்! அருணா குழுவினர் இல்லை! வேறு எவரோ!

உள்ளே வந்து, மேசை மீது வைத்திருந்த கைக்கடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன்!

மணி 9.03 காட்டியது.

அட கடவுளே! நேரமாகிவிட்டதே!

இப்போது நடக்கத் தொடங்கினால் தான், பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போய் சேர்ந்து, அங்கே நாயர் டிபன் சென்டரில் காலை உணவை முடித்துக்கொண்டு, பஸ்ஸைப் பிடிக்க நேரம் சரியாக இருக்கும்.

‘கல்லூரிக்கு செல்லும் முன்பாகவே, அருணாவை ஒரு முறை தரிசித்துவிடலாம்!’ என்று நான் கொண்டிருந்த நம்பிக்கை வலுவிழந்துக்கொள்ள தொடங்கியது.

மாலை அங்கிருந்து வந்த பின் சந்தர்ப்பம் பார்த்து செயல் பட வேண்டியது தான்.

உடன் அவசர அவசரமாக தயாராகிக்கொண்டு, அப்பாவின் பீரோவினை திறந்து, அதிலிருந்து இருநூறு ரூபாயினை எடுத்து, உள்பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, பீரோ சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு, வீட்டு வாசல் கதவைப் பூட்டி, சாவியை பேக்கினுள் போட்டுகொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

மணி 9.05

நடக்கும் நேரம் 5 நிமிடம். சாப்பிடும் நேரம் 15 நிமிடம். 9.25 மணி பஸ்ஸை பிடித்துவிடலாம்.

‘காதலர்கள் நேரடியாக கடிதத்தை பரிமாறிக்கொள்வதைக் காட்டிலும், நம்பகமான தூதர் மூலம் சேர்ப்பித்துவிட்டு, காத்திருந்து, பின்னர் இருவரும் அதனைப் பற்றி உரையாடுவதில். இரட்டிப்பு சந்தோஷம் உண்டாகும்!’ என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்த இன்னொரு வழிமுறையினையும், இன்றே கையாளலாமா? என்ற சிந்தனையாக, ரோட்டின் மிக ஓரமாக நான் நடந்துகொண்டேயிருக்க…

திடீரென்று, பலத்த ஹாரன் ஒலியுடன் கார் ஒன்று, என்னை அரைத்து தள்ளிவிடுவதைப் போன்ற, அசுர வேகத்துடன் பாய்ந்து வந்து, எனக்கு பின்னால் சில அங்குல இடைவெளியில், கடைசி நொடியில். அவசர கதியில் நிற்க…

இதனால், நான் நடுநடுங்கிபோய், சாலையோர மண் பரப்பிற்கு தாண்டி குதித்து, தற்காத்துக்கொண்டு விழிக்க,

அந்தக் கார் கதவின் கருப்புக் கண்ணாடியை அவசரமாக இறக்கி, ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து, “என்னடா? இதுக்கு போயி இந்த தாவு தாவுறே?” என்ற கேட்ட மனித உருவத்தை திட்டுவதற்கு வாயெடுக்கும் முன், “அட! இவன் நம் பள்ளித்தோழன் பரத்!” என்று மூளையில் உறைத்துவிட, “ச்சே! பயந்தே போயிட்டேன்டா, எருமை மாடு!” என்றேன்.

அவன் என்னுடைய பயத்தை பொருட்படுத்தாமல், “சரி, வந்து உட்கார்ரா! அப்படியே ட்ராப் பண்ணிட்டு போறேன்!”

“காலேஜ் பக்கமா போறே?”

“இல்ல! அந்த மெயின் ரோடு பஸ் ஸ்டாப்ல விட்டுடறேன். வா!! எப்பவும் நீ அங்கிருந்து தானே பஸ் ஏறுவே?”

நான் அமர்ந்து கொண்டதும், கார் புறப்பட்டது.

“மச்சி விஷயம் தெரியுமில்ல? நம் அம்பிகாபதி தியேட்டர்லே ஓடற இங்கிலிஷ் படத்துல, துணியில்லாத சீனெல்லாம் காட்டறாங்களாமேடா!” என்றான் பரத், தடாலடியாக.

இவன் சமய சந்தர்ப்பம் பாராமல், எப்போதும் நண்பர்கள் வட்டாரத்தில், இதே ரகமான பேச்சுக்களையே பேசி, எதிராளி மண்டையைக் காய செய்துவிடுவான்.

தொலைவில் இவனை காணும் போதே பதுங்கிக்கொண்டு விடுவேன். இன்று பிடித்துக்கொண்டுவிட்டான்.

“ப்ச்! தெரியலைடா!” என்று ஒதுக்கிவிட்டு, இந்த பேச்சை மாற்றிடுவதற்காக, “நீ முன்னாடி வெச்சிருந்தது வேற வண்டிதானடா?” என்றேன்.

“வண்டியும் வேற தான்; குட்டியும் வேறதான்! ஏற்கனவே ஒன்னை தொரத்திட்டிருந்தேன்னு சொன்னம் பாரு! அதுக்கு லவ் லட்டரெல்லாம் குடுத்து அசத்தி, அதை அந்த வண்டியிலே வச்சிதான் முகூர்த்தம் பண்ணேன். இப்ப வடக்கு திசையிலே வாழ்க்கைப்பட்டுட்டா!”

அத்தெருவின் முனையில் கார் திரும்பி, குறுக்கு சாலையில் பிரவேசித்திட, எங்களுக்கு முன்னால், ஒரு ஜீப் அந்த குறுக்கு சாலையில் சென்று கொண்டிருந்ததை காண நேர்ந்தது.

அதனைக் கண்ட பரத், “அது எவன்டா, என்னை விட முன்னால் போறவன்?” என்று ஒரு கெட்ட வார்தையை உதிர்த்து, “விடலாமா அவனை?” என்று இக்காரின் வேகத்தை திடீரென்று அதிகரித்துக்கொண்டு, அந்த ஜீப்பை முந்துவதில் முழு கவனம் வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்க…

அச்சாலையோர மர நிழலில், தனது அண்ணன் குழந்தைகளுடன், தகதகக்கும் மஞ்சள் நிற பட்டுப்புடவையும், தங்க நகைகளும் அணிந்தவளாக, தேவதை போல அருணா நடந்து வந்துக்கொண்டிருந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டேன்.

அவளின் அண்ணன் அண்ணியை உடன் காணவில்லை!

கார் அவர்களை கடந்து சென்றது.

அண்ணன் அண்ணி ஏன் இவர்களுடன் வரவில்லை?

எங்கே அவர்கள்?

பரத் ஜீப்பை முந்திவிட்டு, “அடுத்தாப்பல தெற்கே வாழ்க்கைப்படற குட்டி ஒன்ன ட்ரை பண்ணலாம்னு பார்க்கறேன்!” என்றான்.

“என்னடா பைத்தியம் மாதிரி பேசறே?”

“ஆமா எனக்கு பைத்தியம் தான்! வயசு பொண்ணுங்க மேலேல்லாம் ரொம்ப பைத்தியம்!” என்று கண் சிமிட்டினான்.

கார் பஸ் ஸ்டாப்பை நெருங்கிக்கொண்டிருக்க, “நீ எப்ப தாண்டா திருந்துவே? நிறுத்து… நிறுத்து…. ஸ்டாப்பிங் வந்திருச்சி… நிறுத்து!!”

கார் நிற்கவும் இறங்கிகொண்டேன்.

பரத் , “என்னா ஒரு தொன்னூறு வயசுல திருந்திடலாம்ன்னு இருக்கேன். பரவாயில்லையா?” என்று சிரித்துவிட்டு, தேவையில்லாமல் ஹாரன் அடித்துக்கொண்டு போனான்.

மணி 9.07

அருணா இப்போது தான் சென்று கொண்டிருக்கின்றாள். அவளது அண்ணனும் அண்ணியும் உடன் வரக் காணோம். இது நல்ல சந்தர்ப்பமே!

அவர்களுக்கு அந்த டவுனிலேயே வேறு ஏதோ வேலையும் உள்ளது போலும்! அதனால் இவர்களை முதலில் அனுப்பி வைத்து விட்டனர். அவர்கள் இனிமேல் தான் புறப்பட்டு வருவார்கள். வரட்டும்! பொறுமையாகவே வரட்டும்! நந்திகள்!

அதற்குள், அருணாவை பின் தொடர்ந்து சென்று கடிதத்தைக் கொடுத்து விடலாம்! ஓட்டமாக போய் வந்தால் 9.25 மணி பஸ்ஸை பிடித்துவிடலாம்!

என்ன! காலை உணவு சாப்பிட முடியாமல் போய்விடும்! போகட்டும். சாயங்காலம் கூட சாப்பிட்டுக்கொள்ளலாம். சாப்பாடா முக்கியம்? போய் வரலாம்!

தீர்மானத்தை செயல்படுத்த துவங்கும் விநாடிகளில், ‘தூதர் மூலம் கொடுப்பதில் உண்டாகும் திரில்’ நினைவுக்கு வந்து விட்டது.

‘இரட்டிப்பு சந்தோஷத்தையும் அடையலாமே!’ என்னும் எண்ணம் மேலோங்கிவிட, பின் தொடர்ந்து செல்லும் ஆவலை கைவிட்டேன்.

‘கூரியர் சர்வீஸ் டெலிவரி பாய் குமார் மூலம் அனுப்பிக்கொடுத்திடலாம்!’ என்ற அருமையான யோசனை பளீரென்று தோன்றியது. அது தான் சரியான வழி! பிரச்சனை ஏதும் ஏற்படாமல் குமார் சிறப்பாக செயல்படுவான். கில்லாடி!

‘லவ் லட்டரை’ இட்டு அனுப்பிட, காகித உறை ஒன்று வாங்கிடுதற்காக, அங்கிருந்த பெட்டிக் கடையை நோக்கி நடக்க, “என்னண்ணா! இன்னிக்கு சூப்பரா கார்ல வந்து எறங்கறீங்க?” என்ற குரல் கேட்டு நிமிர்ந்தேன்.

சுமார் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன், குச்சி ஐஸ் சப்பியவாறு எதிரில் நின்று கொண்டிருந்தான்.

“என்னைத் தெரியுமா உனக்கு?” என்றேன்.

“தெரியுமே! தெனம் வேக்குவேக்குன்னு நடந்து வருவீங்க! இன்னிக்கு சம்முன்னு கார்ல வந்தீங்க! நாளைக்கு என்னையும் கார்ல ஒரு ரவுண்ட அடிக்கிறீங்களா? ஆசையா இருக்கு!”

“நீ எங்கேடா இருக்கே?”

“’எம்’ பிளாக்குல!”

‘இச்சிறுவனை தூதராக பயன்படுத்திக் கொள்ளலாமா?’ என்றொரு ஆவல் எனக்குள் அவசரமாக எழுந்தது.

“அப்ப சி பிளாக் தெரிஞ்சிருக்கணுமே, உனக்கு? என்றேன்.

“ம்! நல்லா தெரியுமே!”

“நான் நாளைக்கு கார்ல வந்தேன்னா, உன்னை அதுல ஒரு ரவுண்ட் அடிக்கிறேன். இப்ப நீ எனக்கு ஒரு வேலை செய்வீயா?”

“செய்யறேன்! என்னா வேலை சொல்லுங்கோ!” என்றான் மிக உற்சாகமாக!

அவனது உற்சாகத்தால் ஈர்க்கப்பட்டு, ‘சரி, இச்சிறுவனையே தூதராக பயன்படுத்திக் கொள்ளலாம்!’ என்று நான் முடிவு செய்த விநாடி, சனி பகவான் என்னை கூர்ந்து பார்த்த விநாடி போலிருக்கிறது!

விபரம் சொல்லி, கூலி பேசி, எச்சரிக்கை விடுத்து, அவனிடம் கடிதத்தை கொடுத்தனுப்பினேன்.

‘சி’ பிளாக்கை நோக்கி சிறுவன் சிட்டாக பறந்தோட, ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தேன்.

அப்போது மணி 9.10

இப்போது 9.25 மணிக்கான பஸ் சற்று தூரத்தில் வந்து கொண்டிப்பது தெரிந்தது.

என் மதி முன்னதாகவே கெட்டுப் போனதால், அருணாவிற்கு கொடுத்தனுப்பிய லவ் லட்டர், அவளுடைய சப்-இன்ஸ்பெக்டர் அண்ணனிடம் சிக்கிகொண்டுவிட்ட விஷயத்தில், இனி பின்னதாக வர இருக்கின்ற, அவமான கேடுகளை பற்றி எண்ணியெண்ணி மனம் நொந்தவாறு, பஸ் ஏறி கல்லூரிக்கு சென்றேன்.

ஐயோ! லட்டரில் குண்டோதரன்! குரங்குகள்! என்றெல்லாம் வேறு எழுதித்தொலைத்துவிட்டேனே!

மாலை இந்த தொகுதிப்பக்கமே, சாரி, அந்த தெருப்பக்கமே திரும்பும் எண்ணமில்லை.

கல்லூரியில் அலுவலக பணிகளில் கவனமே செல்லவில்லை. கடிதங்களை தப்பும் தவறுமாக தட்டச்சு செய்தேன். கோப்புகளில் குளறுபடி செய்து, எச்சரிக்கப்பட்டேன். தடுமாற்றமாகவே பொழுதை ஓட்டினேன்.

‘வருமா?… லவ் லட்டர் எழுதும் ஆசை வருமா?’ என்றது, உள்மனம்!

‘இனியும் எழுதுவேனா? எழுதினாலும், இடைத்தரகரிடம் கொடுப்பேனா?’

சாயங்காலம் கல்லூரியிலிருந்து புறப்பட்டப் பின், வழக்கத்துக்கு மாறாக, இருட்டும் வரை, எங்கெங்கோ அலைந்து விட்டு, மாற்று வழியே புலப்படாமல், உதறலுடன் எனது இருப்பிடம் திரும்பினேன்.

ஹாலில் அமர்ந்து நாவல் படித்துக்கொண்டிருந்த, அருணா, என்னைக் கண்டதும் எழுந்து,

“வாருங்கள்! என் இனிய காதலரே, வாருங்கள்! தங்கள் காதல் கடிதம், இலக்கியம் விரும்பும் இந்தக் காதல் மனைவிக்கு, இனிதே கிடைத்தது!

வாசித்து, மிக பரவசம் அடைந்தேன்! தங்கள் இமாலய காதலுக்கு. என்றும் ஏற்புடையவளாக. நடந்து கொள்வேன்!

‘கணவன் மனைவிக்கு இடையே நிகழும் காதல் கடிதப் பரிமாற்றம், அன்பை மென்மேலும் அதிகரித்து, உறவை இனிமையாக்கிடும்!’ என்ற உண்மையை, இன்று நானும் அனுபவித்து அறிந்து கொண்டேன்.

வளரட்டும், என் இதய தேவனின் கடிதப்புலமை!” என்று ஏற்ற இறக்கத்துடன் நாடக பாணியில் பேசியவள், கேலியாக சிரித்துக்கொண்டு, “இந்தாங்க துண்டு! முகத்தை நல்லா அழுத்தி தொடச்சிக்குங்க! ரொம்ப அசடு வழியுது!” என்றாள்.

வீட்டில் வேறு எவரும் காணப்படவில்லை!

“எங்கே அருணா? ஒருத்தரையும் காணோம்?” என்று கதவினைத் தாளிட்டேன்.

“ஏங்க உங்களுக்கு புத்தி இருக்கா? பெரியவங்கள்லாம் வீட்டிலே இருக்காங்களேன்னு, கொஞ்சம் ஒதுங்கியிருந்தா, அசட்டுப்பிசட்டுன்னு லட்டர் எழுதறது! லவ்வ்வ் லட்டர்!! அண்ணன் படிச்சிட்டு, கோபிச்சிட்டு, ஊருக்கு போயிட்டார்! ஏன்? உங்க பரம்பரையிலே யாரும் குண்டாவே இல்லையா? ரொம்ப கொழுப்பு உங்களுக்கு!” என்று நொடித்துவிட்டு, “எங்க ஊர் பக்கம் வரட்டும், புடிச்சி ரெண்டு நாளைக்கு ஸ்டேஷன் லாக்கப்பிலே போட்டுடறேன்-னு சொல்லிட்டுப் போனார்!” என்று சிரித்தாள்.

“நான் அஞ்சிகொண்டிருந்த அளவுக்கு. அவமானம் இங்கே காத்துக்கொண்டிருக்கவில்லை; தலைகுனிவை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டுவிட்டேன் என்பதைப் புரிந்துகொண்டதும், வெகு நிம்மதியடைந்து கொண்டு, உல்லாசமாக, “அம்மாடியோவ்!! யானை அப்படியா சொல்லிச்சி?? ஆனா, அப்படியெல்லாம் செய்ய மாட்டாரு, தொந்தி மச்சான் ரொம்ப நல்ல மாதிரி!! என்று நான் காட்டாற்று வெள்ளமாக அவளை நெருங்கி…

“என்னது! யானையா! ம்ம்? ஹும்ம்!! ஸ்ஸ்ஸ்!! ப்பா! மெல்ல, ஐயோ, மெல்லங்க!!”

ஓர் ஆலோசனை குறிப்பு: ‘லவ் லட்டர் எழுத என் வாழ்க்கையில் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே!’ என ரகசியமாக ஏங்கிக்கொண்டிருக்கும் கல்யாணமானவர்கள், தங்கள் அருமை மனைவிக்கு எழுதியனுப்பி, உள் மன ஏக்கத்தை பாதுகாப்பாக தீர்த்துக்கொள்ளலாம்.

ஓர் அவசர குறிப்பும்: தோசைத்திருப்பி, அப்பளக்கட்டை பயமுள்ளவர்கள், தேவியாரிடம் முன் அனுமதி பெற்றுவிடுவது, உத்தமம்!

– நெய்வேலி புத்தக கண்காட்சி 2012, குமரன் பதிப்பகம், நெய்வேலி எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு புத்தகத்தில் வெளியான சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *