அந்த ஆலமர குளக்கரை பேருந்து நிலையம் , எங்கள் கிராமத்தின் பிடித்த பகுதிகளில் முக்கியமானது, மேலும் அவளால் அதி முக்கியத்துவம் பெற்றது, ஏனென்றால் அவளை நான் வேறெங்குமே கண்டதில்லை, காலையில் 8.30 மணியளவில் அந்த பேருந்து எங்கள் ஊரை கடக்கும் என்பதால் அந்த நேரம் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பல்வேறு பயணிகளுக்கு தேவையான நேரம் என்பதால் எப்போதுமே கூட்டமாகத்தான் இருக்கும்.
எத்துனை நாளாக அவள் அங்கு பஸ் ஏறினாளோ எனக்கு தெரியாது, அன்று தான் முதலில் பார்த்தேன், அந்த கூட்டத்தில் “ஆழ விழுதில் பூத்த தாமரை மலராய்” என் கண்ணில் தனித்து ததும்பினாள். கண் இமைத்து கூர்ந்து பார்த்தேன், என்னை தான் பார்த்தாளா இல்லை அவள் கண் ஈர்ப்பு விசையால் அப்படி தோன்றியதா என்று தெரியவில்லை.
அந்த இடத்தை பைக்கில் கடக்கும்போது இவ்வளவுதான் முடியும், பெருமூச்சுடன் பணிக்கு பயணித்தேன், இருப்பினும் அவ்வப்போது அவள் ஞாபகம் அனிச்சையாய் மலரும். இப்படிதான் ஒவ்வொரு நாளும் அந்த பேருந்து கடக்கும்முன் என் காதலும் கடக்கும்.
எதேச்சையாக அன்று தாமதமாகி விட்டது, வேகமாக வந்து தூரத்தில் வரும்போதே எனது பார்வை , மனம் அலை மோதியது, பஸ் வரவில்லையாம் கூட்டமும் குறைவு, அவளையும் காணவில்லை, மலர்ந்த மலர் மீண்டும் மொட்டுக்குள் சென்றதுபோல் என் மனதில் எதோ ஒரு ஏமாற்றம், வழக்கம்போல் பஸ் ஸ்டாண்டை கடந்து சென்று கொண்டிருந்தேன், எப்போதும் ஆமை வேகத்தில்தான் செல்வேன் அன்று முயல் வேகத்தில் செல்ல முற்பட்டபோது, தூரத்தில் நான் பார்த்த காட்சி என் மூளையை முடுக்கிவிட்டது.
அந்த அவள் என் கண் முன்னே ரோட்டில் நடந்து கொண்டிருக்கிறாள், அவள் முன்னே செல்கிறாள் நான் அவள் பின்னே செல்கிறேன் ஆனால் என் சிந்தனை அவளை அழைத்துகொண்டு முன்னே செல்கிறது, பல கோணங்களில் யோசித்து “எப்படியாவது இன்று பேசி விட வேண்டும், ஏன் விருப்பமிருந்தால் கூடவே அழைத்து சென்றிட வேண்டும், அய்யோ எதும் தப்பா நினைத்துவிட்டால் என்ன செய்வது”, பதட்டத்தில் வலது கால் கியர் போடுகிறது, அவளை நெருங்க போகிறேன், எனக்கு கையும் முறுக்கல காலும் அமுக்கல,
சட்டென திரும்பி அவளே கையசைவில் லிப்ட்டே கேட்டுவிட்டாள், அந்த நிமிடத்தை எப்படி விவரிக்க… “கொல்ல வந்தவன் குலோப்ஜாமூன் குடுத்த மாதிரி இருந்தது”. ஆனாலும் நான் ஏன் பயந்தேன் என்று எனக்கே தெரியவில்லை, திடீரென்று அனிச்சையாய் அவளை கடந்துவிட்டேன் திரும்பிகூட பார்க்காமல்…, அட கடவுளே! எவ்ளோ பெரிய முட்டாள் தனம் செய்துவிட்டேன் எனக்கு மிகவும் பிடித்த என் உற்ற நண்பனான என் ஸ்ப்ளென்டர் பிளஸ் பைக்கை வெகுவாக கோபித்துகொண்டேன், என்ன செய்வது ஆற்றாமை.
கண்ணை மூடி தியானித்துவிட்டு திரும்பி அவளை நோக்கி பயணித்தேன், அந்த நிமிடங்கள் கடிகாரத்திற்கு கௌரவமூட்டின என்றாலும் அவளை தேடிக்கொண்டே நமது பஸ் ஸ்டாண்டு வரை வந்து விட்டேன், எப்போதும்போல் எனது மாற்றங்கள் அனைத்தும் ஏமாற்றின, அவளை மீண்டும் காணவில்லை..மாறாக ஒரு பெரியவருக்கு வேண்டாவெறுப்பாய் லிப்ட் கொடுத்தென்.
இத்தனை நாளாக, அவள் அந்த தருணங்களில் அதாவது இருவரும் பஸ் ஸ்டாண்டை கடக்கும்போது, என்னை அவள் பார்த்தாளா இல்லை என்பது தெரியாது ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு ஒருநாள் பாக்கி இல்லாமல் என்னை பார்வையால் எரித்தாள், வெறுத்தாள், கிட்டத்தட்ட என் மனசாட்சி போல.
அவளை நினைக்கும்போதெல்லாம் என்மேல் எனக்கு வெறுப்பு அதிகமானது, அந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் எப்டியாவது கிடைக்குமா என ஏங்கினேன். ஆனால் சொந்த கிராமம் , சிறுவயதில் இருந்தே என்னை நன்கு பழகிய மக்கள், யாரும் ஏதும் தவறாக நினைச்சுடுவாங்க , என அந்த பெண்ணிடம் நானாக பேச நிறைய மனத்தடைகள் தினமும் மன உளைச்சல் ஏற்படுத்தின.
அன்று ஞாயிற்றுக்கிழமை கிழமை, நான் எதச்சையாக பைக்கில் பஸ் ஸ்டாண்ட் பக்கம் வந்தேன், எப்போதும்போல் இல்லாமல், அதாவது கூட்டத்தில் ஒருத்தியாகவே பார்த்துவிட்டு திடிர்னு தனித்து பார்க்கும்போது, என் பார்வையில் அவள் பாதுகாப்பு பறிபோனது , குறிப்பாக அவளால் அந்த ஆலமர நிழற்குடையே, தாமரை மலரை குப்புற வைத்ததுபோல் தோற்றம் அளித்தது. அந்த நேர பேருந்து அன்றும் எனக்கு வாய்ப்பு கொடுத்தது,
இந்த முறை சற்றும் தாமதிக்கவில்லை, நேராக அவளிடம் சென்று நின்று உறுமியது நம் வண்டி, பைக்கில் இருந்தபடியே அவள் முகத்தை நேருக்கு நேர் பார்த்து தைரியமாக கேட்டே விட்டேன் அழைத்து போவதாக, அவள் பதிலேதும் கூறவில்லை, ஒருவேளை என் திடுக்கிடும் செயல் மற்றும் அழகில் அதிர்ந்து அமைதியாக இருந்து விட்டாள் போல அதனால் மீண்டும் அமைதியாக தெளிவாக லிப்ட் தருவதாக அழைத்தேன்.
அதுவரை பஸ் ஸ்டாண்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தவள், நான் கேட்ட பின் உள்ளே சென்று அமர்ந்துவிட்டாள், எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரு மாதிரி தோன்றியது, ஒரு வேளை காது கேக்காதோ என்று கூட தோன்றியது, இருந்தாலும் அன்று நடந்ததை மனதில் வைத்து இன்று பழி வாங்குகிறாளோ என்றுகூட தோன்றியது, மனதில் பல முரண்களுடன் முயற்சியை கைவிடாமல் நானும் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று எதிரே அமர்ந்து, அன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டு ஏதேதோ பேசி கொண்டிருந்தேன், ஆனால் அவள் பாட்டுக்கு வெளியே வந்து நின்றுவிட்டாள்.
மிகுந்த கோவம் வந்தது ஆனால் எனக்கு என்னமோ அந்த பெண்ணிற்கு என்னை பிடிக்கவில்லையோ என தோன்றி , அந்த பெண்ணை தொந்தரவு செய்வது போல் தோன்றியது. அதனால் மனதை கல்லாக்கி கொண்டு ஏதும் பேசாமல் திரும்பி கூட பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினேன்.
நாட்கள் கடந்தது, தினமும் நடப்பது நடந்தது, கொஞ்ச நாளில் அவளை காணவில்லை அவள் அவங்க ஊருக்கு சென்று விட்டதாக கேள்வி பட்டேன், லேசாக பாதித்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு, அந்த நேர பேருந்து நேரம், ஒரு அம்மா, ரோட்டில் போன என்னை அழைத்து நலம் விசாரித்தார்கள், பெற்றோர் பற்றியும் விசாரித்தார்கள் எனக்கு யாரென தெரியவில்லை, என் முக சுழிப்பை அவங்க முகத்தில் பார்த்தேன், அவங்களுக்கு நெருடலாய் இருந்தது என்னை பாதித்தது, பின்பு சமாளித்து தெரிந்ததுபோல் பேசினேன், அவங்க ஒரு பெண் பெயரை சொல்லி “என் பொண்ணு உங்கள பத்தி நேத்து வரை பேசிட்டு இருக்கா, நீங்க இப்டி சட்டுன்னு மறந்துடீங்கலே தம்பி” வருத்தமாக சொன்னங்க. எனக்கு வேற எங்கயோ ஞாபகம் போனது, மேலும் அவங்க “அடிக்கடி பஸ் வராதபோதெல்லாம் நீங்கதான் உதவி பண்ணீங்கனு சொன்னாள்” னு சொல்லும்போதே பஸ் வந்தது அவங்களும் சொல்லிட்டு அவசரமாக கிளம்பிட்டாங்க.
அவங்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பலவித வினாக்களுடன் வீடு வந்தேன். அந்த அம்மா வேறு யாருமில்லை அந்த பெண்ணின் தாயார்தான் என உணரும்போது ஏற்பட்ட சுவாரஸ்யத்திற்கு அளவே இல்லை, மேலும் அவங்க எங்க அம்மாவோட பழைய சிநேகிதியாம்.
நான் தயங்கி தயங்கி அம்மாவிடம் அந்த பெண்ணை பற்றி சொல்ல முயலும்போது, என் அம்மா குறுக்கிட்டு “டேய், டேய்! ரொம்ப தினராதே அவ நம்ம வீட்டுக்கு வந்துட்டுதான் போறா” னு சொன்னதும் நான் இந்த உலகத்துலேயே இல்ல, கற்பனையில் தனிக்குடித்தனம் போய்டேன் தனி கிரகத்துக்கே.., அம்மா சொல்லிகிட்டே, அந்த பத்திரிகையை எடுத்து போட்டாங்க, அத பாத்ததும் அந்த தனி கிரகத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டேன் பூமியில், அது அந்த பொண்ணோட திருமண பத்திரிக்கை.
அந்த நேர பேருந்தை பார்க்கும்போதெல்லாம் அவள் ஞாபகம்…
ஆஹா கதைதான்! பத்திரிக்கையும் பஸ்ஸும்தான் மனசை நெருடுகின்றன! லென்ஸ்