அந்த கால சினிமா காதல் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 18,702 
 
 

“ராஜேஷ்” எங்கஅம்மாவுக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுல எந்த ஆட்சேபணையும் இல்லை, அப்பா மட்டும்தான் இப்ப நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறாரு. வருத்தத்துடன் சொன்னா மாலா அடுத்த வாரம் யாரோ ஒரு பையன் என்னை பொண்ணு பாக்க வர்றானாம்.

உங்கப்பாதான் அவர் வசதிக்கு தகுந்த மாப்பிள்ளை நான் இல்லைன்னு முடிவு பண்ணி வச்சிருக்கறாரே, என்ன பண்ணறது.?

பேசாம நான் உன் கூட வந்துடறேனே, மாலா சொல்லவும் பதட்டமான ராஜேஷ் இங்க பாரு எங்க குடும்பத்துல வசதி மட்டும்தான் கம்மி, ஆனா ஊருக்குள்ள எங்க குடும்பத்துக்குன்னு ஒரு மரியாதையை காப்பாத்தி வச்சிருக்கறோம்.அதைய கெடுத்துடாதே.

அப்புறம் என்ன பண்ண சொல்றே?

கண்டிப்பா நம்ம கல்யாணம் நடக்கும், கவலைப்படாதே. உன்னைய பாக்க வர்றது யாருன்னு எனக்கு தெரியும். பேசாம நான் சொல்றபடி செய் அது போதும். அவள் காதில் ஏதோ முணு முணுக்கிறான்.

இவர்கள் இப்படி இங்கு பேசிக்கொண்டிருக்க மாலாவின் அப்பா, தன் மனைவியிடம் காரசாரமாய், ராஜேஷ் குடும்பத்தை கடித்து குதறிக்கொண்டிருந்தார்.“இங்க பாரு” கண்டிப்பா என் பொண்ணை அவங்க குடும்பத்துக்கு கொடுக்க மாட்டேன். போதும், எங்க அக்காவை கொடுத்துட்டு நாங்க பட்ட பாடு போதும், அது மட்டுமில்லை நம்ம வசதிக்கு அவங்க ஏணி வச்சாலும் எட்ட மாட்டாங்க.மனைவியிடம் சொன்னவர், அடுத்த வாரம் வர்ற பையனோட குடும்பம் நம்ம தகுதிக்கு சரியான குடும்பம், பையனும் நல்ல மாதிரியாம், எல்லாம் விசாரிச்சுட்டேன்.மூச்சு விடாமல் பேசினார் நகைக்கடை அதிபர் நாராயணன்.

அந்த ஊரில் ஒரளவுக்கு செல்வாக்காகவும் வசதியாகவும் வாழ்ந்து வருகிற குடும்பம் நாராயணன் குடும்பம். சொந்தமாக இரண்டு நகைக்கடைகளும்,ஹோட்டல் ஒன்றும் அந்த ஊரில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அவருக்கு பிறந்த மூத்த மகனுக்கு இவரை போலவே அந்தஸ்திலும், வசதியிலும் சமமாய் உள்ள குடும்பத்தில் பெண் எடுத்து கல்யாணம் செய்து வைத்து விட்டார். பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கும்போதுதான் அக்காளின் உருவில் இடைஞ்சல் வந்து தொலைத்து விட்டது.

ஒரு நாள் நாராயணனின் அக்கா தயங்கி தயங்கி இவர் வீட்டுக்கு வந்தாள்.

“வா” என்று ஒற்றை வார்த்தையில் கூப்பிட்டு நிறுத்திக்கொண்டார் நாராயணன். நாராயணனின் அசட்டையை கண்டு கொள்ளவில்லை அவர் அக்கா, ஏனென்றால் அவள் வந்த நோக்கமே வேறு. எப்படியும் அண்ணன் பெண்ணை தன் பையனுக்கு கேட்கவேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறாள்.அவளுடைய குடும்பம் இவர் அளவுக்கு வசதி இல்லை என்றாலும், கொஞ்சம் நிலம், புலம் உண்டு, ஒரே பையன், நன்கு படித்திருக்கிறான். நல்ல வேலையிலும் இருக்கிறான்.கண்டிப்பாக பெண்ணை கொடுப்பார் என்ற நம்பிக்கை வைத்து தன் தம்பியை பார்க்க வந்திருக்கிறாள்.

நாராயணன் அக்காவின் இந்த கோரிக்கையை கேட்டவுடன் அவர் உள்ளம் எரிய ஆரம்பித்தது. தன் அக்காவை கொடுக்கும்போதே இவர்களின் அப்பா நிறைய துன்ப பட்டுவிட்டார். அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது கூட இவருக்கு நினைவுக்கு வந்தது.

“ரொம்ப பேராசை புடிச்சவங்களா இருக்காங்க, எப்படியோ வாக்கு கொடுத்துட்டோம், அதனால பொண்ணை கொடுக்கறோம். இல்லையின்னா இந்நேரம் இதை விட நல்ல இடத்துல கொடுத்திருக்கலாம்” அக்கா அந்த குடும்பத்துக்கு போன பின் இவர்களை அதிகமாக துன்ப படுத்தவில்லை என்றாலும், பழைய ஞாபகமே இவர் மனதை விட்டு மறைவில்லை.

அதெல்லாம் முடியாது, ஒற்றை வார்த்தையில் அக்காவிடம் சொல்லி விட்டார். அப்பொழுது பதில் எதுவும் பேசாமல் வந்து விட்ட அக்கா, தன் மகனிடம் சொல்லி சொல்லி புலம்பினாள். அவன் இளைஞனல்லவா. கொஞ்சம் கோபம் வந்தது, மாமாவிடம் கேட்கிறேன் என்று கிளம்பியவனை தடுத்து நிறுத்திவிட்டாள் அவன் அம்மா.

யதேச்சையாக ஒரு நாள் மாலாவை சந்திக்கும்போது இவன் தன் அம்மாவை மாமா இப்படி பேசி விட்டார், என்று சொன்னவன், இங்க பாரு மாலா, உன்னை உங்கப்பா எங்களுக்கு கட்டி கொடுக்க விருப்பமில்லையின்னா கூட கொஞ்சம் இங்கிதமா பேசி அனுப்பிச்சிருக்கலாம், என்று ஆதங்கப்பட்டுக்கொண்டான்.

இதை பற்றி எதுவும் தெரிந்திராத மாலா உண்மையில் வருத்தப்பட்டாள். சாரி ராஜேஷ், எனக்கு எதுவும் தெரியாது, எனக்கு உன்னய கல்யாணம் பண்ணிக்கறதுல எந்த ஆட்சேபனையும் இல்லை,அம்மாகிட்ட பேசி பாக்கிறேன். சொன்னவள் மறு நாளே இவனுக்கு போன் செய்து அம்மா கூட நீ மாப்பிள்ளையா வரதை பத்தி ஒண்ணும் சொல்ல்லை. ஆனா அப்பாவுக்கு பயப்படுறாங்க,என்ன பண்ண சொல்றே?

நாராயணனின் நண்பர் அன்று ஒரு ஜாதகத்தை எடுத்து வந்திருந்தார், பையன் அப்பா நல்ல பணக்கார்ர், உன் அளவுக்கு வசதி இருக்கு, அதை விட பையன் நல்லா படிச்சுட்டு இப்ப அமெரிக்காவுல இருக்கான், நீ எங்கிட்ட கொடுத்திருந்த பொண்ணோட ஜாதகத்தையும் அவனே பொருத்தம் பார்த்தான், எட்டு பொருத்தம் இருக்கு. எதுக்கும் உன்னைய ஒரு தரம் பார்த்துக்க சொன்னான்.அப்புறம் உன் அபிப்ராயத்தை சொல்ல சொன்னான்.

அவங்க பாத்துட்டாங்கல்ல அப்புறம் சொல்றதுக்கு என்ன? பையன் எப்ப வந்து பொண்ணை பார்ப்பான் அதை கேட்டு சொல்ல சொல்லு?

அடுத்த வாரத்தின் ஒரு நல்ல நாள் குறிக்கப்பட்டு மாப்பிள்ளைக்கு அமெரிக்காவுக்கு தகவல் சொல்லப்பட்டது.

அங்கே அமெரிக்காவில் இருந்த மாப்பிள்ளைக்கு இந்த கல்யாணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை, அவன் அதே ஊரை சேர்ந்த பெண் அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருக்கிறாள், அவளை விரும்புகிறான்.இப்பொழுது அம்மா அப்பா அவனை ஊருக்கு வந்து பெண்ணை பாரு என்று சொல்கிறார்கள், என்ன செய்யலாம என்று யோசித்தவன் தன்னுடன் படித்த நண்பனுக்கு போன் போட்டான்.

பெண் பார்க்கும் படலம் முடிந்தது. திருமணம் உடனே வைத்து விடலாம் என்று முடிவு செய்த நாராயணன், அடுத்து வந்த இரு வாரங்களில் ஒரு முகூர்த்த நாளை கல்யாணத்துக்கு குறித்தார்கள்.பையன் வீட்டாரும் சம்மதித்தார்கள்

கல்யாணம் நடைபெற போகும் நாளுக்கு முன் தினம் நாராயணன் பரபரப்பாய் மண்டபத்தை பார்வையிட கிளம்பிக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது பணியாள் ஒரு உறையை அவரிடம் கொண்டு வந்து கொடுத்தான். உறையை வாங்கி பார்த்தவருக்கு ஒன்றும் புரியவில்லை.அந்த உறைக்குள் துண்டு சீட்டு ஒன்று இருந்த்து. அதை எடுத்து படித்தவருக்கு, இடியே தலை மீது விழுந்தது போல் இருந்தது.

“என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை”, என் தந்தையிடம் ஏற்கனவே சொல்லி விட்டேன். இருந்தாலும் அவர் வற்புறுத்தலுக்காவே இந்த பெண் பார்க்கும் சடங்கிலெல்லாம் ஒத்துக்கொண்டேன். இனியும் காலம் தாழ்த்தினால் உங்கள் பெண்ணின் வாழ்க்கை தொல்லையாகிவிடும் என்றுதான் இக்கடிதம் எழுதியுள்ளேன். என்னை மன்னியுங்கள். என்று எழுதி இருந்தது.அப்படியே பிரமை பிடித்த்து போல் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

அப்பொழுது அங்கு வந்த அவர் மனைவி அவர் உட்கார்ந்திருந்த கோலத்தை கண்டு ஓடி வந்தவள், இவர் கையில் வைத்திருந்த உறையை பார்த்து அதை பிடுங்கி என்ன எழுதி இருக்கிறது என்று வாசித்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். அடுத்த நிமிடம் சுதாரித்து கொண்டு “ஏங்க எந்திரிங்க”அவரை எழுப்பினாள்

இதுக்கெல்லாம் மனசு விடுவாங்களா? வாங்க உங்க அக்கா வீட்டுக்கு போலாம். நடந்ததை சொல்லி, நம்ம பொண்ணை ராஜேசுக்கு கட்டி வைக்க முடியுமான்னு பாக்கலாம், சொன்னவளிடம், இவர் நான் எப்படி இதை சொல்லி என் பொண்ணை கட்டிக்குவியான்னு கேப்பேன், குற்ற உணர்ச்சியுடன் முணங்கினார். சொந்தத்துக்குள்ள என்னங்க இந்த மாதிரி எல்லாம், நீங்க வாங்க நான் பேசறேன், அவரை இழுத்துக்கொண்டு காரை நோக்கி விரைந்தாள் அவர் மனைவி.

கல்யாணம் சுபமாய் நடந்தது. மாப்பிள்ளையும்,பெண்ணும் எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கினார்கள் அடுத்து மனைவியை கூட்டிக்கொண்டு, அந்த அமெரிக்க நண்பனை பார்க்க சென்று நீ எனக்கு போன் பண்ணி என்ன பண்ணணும்னு கேட்காட்டி இந்த ஐடியாவே வந்திருக்காது. தன் நன்றியை தெரிவித்துக்கொண்டான்.

நான் தான் உனக்கு நன்றி சொல்லனும், நீ தைரியம் கொடுத்ததனால, இந்த சமயத்துலயாவது எங்க அப்பா,அம்மாகிட்ட, நான் விரும்பின பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்ல முடிஞ்சுதே. என்றான் அந்த நண்பன்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *