கதையாசிரியர்:
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 30,387 
 
 

அவள் ஓட்டிச் செல்லும் காரை எப்படியும் வருகின்ற சிக்னலில் பிடித்துவிடுவது என்ற முனைப்பில் இட வலம் என வெட்டி ஓட்டினேன். பொதுவாக யாரிடத்தும் அவ்வளவு ஈர்ப்போ ஈடுபாடோ ஏற்படாது எனக்கு.

ஆனால் அவள் ஓட்டிச் சென்ற விதம் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனால்தான் இந்த சேஸிங். நினைத்தது போலவே அந்த சிக்னலில் அவளுடைய கார் நின்றிருந்தது. கவனமாய் அருகில் சென்று அவளுடைய காருக்கு அருகில் சொருகினேன்.

அந்தாதி

புளூ டூத்தில் யாரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்பதை பிறருக்கு புரியவைக்க அவ்வப்போது காதைத் தொட்டுக் கொண்டாள்.
ஜன்னலை இறக்கி, கவனம் என் பக்கம் படும்படி அவள் காரின் ஜன்னல் கண்ணாடியைத் தட்டினேன்.

தன்பக்கம் இருந்த கண்ட்ரோலை உபயோகித்து இந்தப் பக்கம் இருந்த கண்ணாடியை சரேளென இறக்கி, புருவம் உயர்த்தினாள், “என்ன?’ என்பது போல். “நான் திரும்பக் கால் பண்றேன்’ எனச் சொல்லி புளூடூத்தை விடுவிக்கும் பொழுது, கூந்தலை ஒருமுறை சிலுப்பிக் கொண்டாள்.

“நீங்கள் ஸ்ரீபிரியா ரசிகையா?’

“எக்ஸ்கியூஸ் மீ?’

அந்த, “எக்ஸ்கியூஸ் மீ’ சரியாகக் கேட்கவில்லை என்ற அர்த்தத்தில் இல்லை. சிக்னல் விநாடி 86, 85 என குறைந்து கொண்டிருந்தது.

“இல்ல, பாம்பு டான்ஸ் ஆடுற மாதிரி கார் ஓட்டுறீங்களே? அதான் கேட்டேன். ஒரே லேன்ல போங்க மேடம்’

கலகலவெனச் சிரித்தாள் ஸ்ரீபிரியா, “நீயா’ பட பாம்பு டான்ஸ் எல்லாம் தெரிந்திருக்கிறது கூடவே, ஸ்லீவ்லெஸ் கரங்களில் அம்மை ஊசித் தழும்பும் பத்துக் காசு வட்ட வடிவில் 80க்கு முன்னர் பிறந்தவள் என்பதை யூகிக்கும் பொழுது சிக்னல் விநாடி 26, 25….

“ஓ ஸாரி, ஷ்யூர்.’

சிக்னல் சிவப்பில் 5 விநாடிகள் இருக்கும்பொழுதே விருட்டென்று கிளப்பிக் கொண்டு போய்விட்டாள்.

பச்சை ஒளிர்ந்ததும், விரட்டினேன், லெங்கிங்ஸ் கால் காதலிகள் பற்றலில் குதிரை வீரர்களைப் போல் பறந்து கொண்டிருந்தார்கள்.
இன்று மிகவும் பெருமையாக இந்தப் பெண்கள் உணரும் லெங்கிங்ஸை புரட்சித் தலைவர்தான் முதன் முதலில் அறிமுகப் படுத்தினார் என்று இவர்களிடம் எப்படியாவது சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஆம். “நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலில் எம்.ஜி.ஆர். லெங்கிங்ஸில் பட்டையைக் கிளப்புவார்.
கேஎல் ரெஜிஸ்ட்ரேஷனாக இருக்க வேண்டிய முன் அமைப்பு அவளுக்கு என்றாலும் டிஎன் ஆகத்தான் இருந்தது. அடையாறு சிக்னலில் எப்படியும் பிடித்துவிடலாம் என விரட்டினேன். பிடித்தேன்.
இம்முறை அவளின் வலப்பக்கம் சென்று நிறுத்தினேன். கவனம் கவர பாட்டை சத்தமாய் வைத்து ஸ்டீயரிங்கில் விரல்களால் மிருதங்கச் சக்கரவர்த்தியைப் போலத் தட்டினேன். மேற்கூரையை முட்டினேன். சுவிங்கம் இல்லாமலே, மெல்வது போல் பாவனை செய்தேன். ம்ஹூம். 5, 4, 3, 2, 1 பச்சை ஒளிர்ந்ததும் பின்னால் இருந்த பாம்ப்ப்ப்கள் முழங்க விருப்பமில்லாமல் வண்டியை நகர்த்தினேன். நகர்ந்த பின்னும் ஒரே ஹாரன் சத்தம். கண்ணாடியில் பார்த்தால் அவளுடைய கார் நகராமல் நிற்க, சுற்றிலும் இருந்து ஹாரனை ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

சாதாரண வேளைகளில் நான் கொஞ்சம் தத்தியாக செயல்பட்டாலும் அன்று சட்டென்று முடிவெடுத்து லெஃப்ட்டில் ஓரங்கட்டினேன்.
பரபரவென நடந்து, அவளை சமீபித்து, சைகை மூலம் அவளை வெளியே வரச்சொன்னேன். இறுதி முயற்சியாக ஒரு முறை ஸ்டார்ட் செய்து பார்த்துவிட்டு, ஸ்டியரில்கை ஓங்கித் தட்டினாள். “டேமிட்’ இறங்கியவளை பின்னால் உட்காரச் சொல்லிவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தேன்.

“என்ன ஆச்சுன்னு தெர்ல… எப்பவும் இப்பிடி ஸ்டார் ஆகாது… ஷிட், இப்பத்தான் ஃப்யூல் கூட ஃபுல் பண்ணேன்.’

“கூல். ஏர் லாக் ஆகி இருக்கும்’ என்று சொல்லிவிட்டேன் என்றாலும், “எப்படியாவது ஸ்டார்ட் ஆக வேண்டும்’ என்று வேண்டாத தெய்வமுமில்லை. ஆறேழு முறை சாவியை ஆன் செய்து ஆஃப் செய்வது போல் செய்தேன். ஹாரன் சத்தமும், சாவு கிராக்கி வசவுகளும் அதிர, வண்டி உறுமியது. “தேங்க் காட்’ என்று பின் சீட்டில் சாய்ந்தாள். அதற்குள் மீண்டும் சிக்னல் சிவப்பில் விழுந்திருந்ததால் காத்திருந்தேன். காத்திருந்தோம்.

“தேங்க் யூ… மிஸ்டர்…’

“ரகு..’பச்சை விழுந்ததும் மெதுவாக நகர்த்தி என் காருக்கு பின்னால் நிறுத்தினேன்.

“தேங்க்யூ ர… ரகு ரைட்?… ரகு..’

சொல்லிக்கொண்டே காரை விட்டு இறங்கி நளினமாய் நின்றாள்.
“வெல் கம்’ சொல்லிவிட்டு வண்டியை நோக்கி நடந்தேன்.

“எக்ஸ்கியூஸ் மீ.’

திரும்பியதும் கேட்டாள். “என் பேர் கேட்க மாட்டீங்களா?’

“கேட்டா, ரெண்டு லெட்டர்ஸ்ல வர்ற மாதிரி ஏதாவது பொய்ப் பேர் சொல்லுவீங்க. உங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட போய், வழிஞ்சான்னு சொல்லிச் சிரிப்பீங்க… பேர்ல என்ன இருக்கு?’

சொல்லிவிட்டு தோளைக் குலுக்கி, இரண்டு கைகளையும் விரித்து, அதனால்தான் கேட்கவில்லை என்பதை உணர்த்தி விடைபெற்றேன்.
அந்த வார இறுதியில் அலுவலக நண்பர்களோடு ஈசிஆர்ல் இருக்கும் பார் ஒன்றில் பார்ட்டி. உலகின் “சுவாரஸ்யமற்ற,’ கடுப்பேற்றும் பொழுதுகள் என்று பட்டியலிட்டால், அலுவலக நண்பர்களோடு தண்ணி அடிப்பதற்குத்தான் முதல் இடம் தருவேன். ஒருவித நாகரிக இறுக்கத்தை கடைசிவரை கையாள வேண்டும். அங்கு வராத ஒருவரைப் பற்றி குமுறி எடுப்பார்கள். நாமும் ஆங்காங்கே “மானே தேனே’ போடவேண்டும். பெண்கள் பற்றி பேச்சு வந்தால், எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜெண்ட்டிலாக பேச வேண்டும். இந்த எழவிற்காக தண்ணி, பார்ட்டி எல்லாம்?

இதுவே பால்ககால நண்பர்களாக இருந்தால், பாட்டிலைத் திறக்கும்போதே பால்யமும் திறந்து கொள்ளும். ஆறாவதில் காந்திமதி டீச்சரிடம் அடிவாங்கியதைப் பற்றி எவனாவது ஆரம்பித்து மெதுவாக முன்னேறி, ப்ளஸ்டூவில் முத்துலட்சுமியை காதலித்தவர்களின் லிஸ்ட் வரை விஸ்தாரமாகப் பேசி, சண்டையிட்டு சமாதானமாகி சரிவதே பார்ட்டி என்பதன் சிறுகுறிப்பு. மற்றபடி அலுவலக நண்பர்களோடு அடிப்பதெல்லாம் நகர வாழ்வின் நாகரிக மிச்ச சொச்ச எச்சமே.

“பாய் டூட். டேக் கேர்’ அவ்வளவுதான். எறும்பு கடித்தது போன்று இருக்கும்பொழுதே பார்ட்டி முடிந்துவிட்டது. அவனவன் வீட்டில் இருந்து கால் வரத் துவங்க ஒவ்வொருத்தனாக அங்கிருந்து பிடுங்கிக் கொண்டார்கள். ஒருவேளை எனக்கும் வீட்டில் ஆள் இருந்து, இப்படி அழைப்பு வந்தால் நானும் போயிருப்பேன் என்ற எண்ணம் கொண்டுபோய்விட்டது. அடுத்த ரவுண்டில் பொதுவாக சுயகழிவிரக்கம் கொள்ளாதவன் அன்று முதன் முறையாக தனியாக இருப்பதன் சோகத்தை உணர்ந்தேன். தனிமையை நாமாக தேர்ந்தெடுத்தால் அதைப் போன்றதொரு சொர்க்கம் வேறில்லை. தனிமைக்குத் தள்ளப்பட்டால் அதைவிட நரகமும் இல்லை. “எங்கு இருக்கிறாய்’ எனக் கேட்க ஒருவரும் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து, வேறு டேபிளைத் தேடி அமர்ந்தேன். புன்னகைத்து ஆர்டர் கேட்ட பேரரிடம் “உனக்கு பிடிச்ச அயிட்டமா கொண்டுவா’ என்றேன். தயங்கியவனை தலையசைத்துச் சிரித்து உறுதிப்படுத்தினேன்.
அந்த பேரரை முழுதாய் நம்பியதன் பயனை அடைந்தேன். வோட்காவில் ஒரு சிட்டிகை உப்பு, எலுமிச்சை மற்றும் நீண்ட, பச்சை மிளகாயை குறுக்குவெட்டாக அரிந்து மிதக்கவிட்டு எடுத்து வந்தான். தேவாம்ருதம். உப்பும் காரமும் தனிமை எண்ணமும் கிரங்கடித்து. அவனுக்கு நன்றி சொல்லி டிப்ஸை தாராளமாய் கொடுத்துவிட்டு, பார்க்கிங் வந்து என் வண்டியை அடைந்து, சாவகாசமாய் சாய்ந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தேன். இடைவிடாது வந்த ஹாரன் சத்தத்தில் திடுக்கிட்டுத் திரும்பினால், அவள், எனக்காகத்தான் ஹாரனை அப்படி அடித்திருக்கிறாள். பார்த்ததும் சிரித்து சைகையால் அருகில் அழைத்தாள். அனிச்சையாக முன்னேறின கால்கள்.
“ரகு தானே?’ என்ன வீக் எண்ட் பார்ட்டியா?

யெஸ் நீங்க எங்க இங்க? கார் கரெக்ட்டா ஓடுதா?

“ஹைல்லோ, நக்கலா? இட்ஸ் ப்ராண்ட் நியூ கார் டியர்.’

அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் காரைச் சுற்றி வந்து அவளுடைய இருக்கைக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். அவள் ஸ்டியரிங்கை இறுகப் பற்றியவாறே என்னைப் பார்த்து, தன் மணிக்கட்டை அசைத்து, “இட்ஸ் 12. வீட்டுக்குப் போகலியா?’ என்றாள்.

“நாலு சுவர். அவ்ளோதானே… மெதுவா போய்க்கலாம்.’

“ஓ… யாரும் இல்லியா?’

“ம். ஆமா நீ… ஸாரி நீங்க 12 மணிவரைக்கும் மஸ்த் பண்றீங்களே… உங்க வீட்ல?’

“இருந்தாரு… ரு என்ன ரு… இருந்தான். இப்போ இல்ல. சாடிஸ்ட்… ஐயம் செப்பரேட்டட். தனியா இருக்கேன்னு சொல்றதை விட சுதந்திரமா இருக்கேன்னு சொல்றது பிடிச்சிருக்கு.’

“வாவ்… சூப்பர்ப்., ஹெவ் அபெட் எ டிரிங்க்?’

“நீங்கதான் பேரக்கூட கேட்கமாட்டீங்களே, சர்ப்ரைஸிங். எங்க ஆஃபீஸ்ல என் நம்பர் கிடைக்காதான்னு எவ்ளோபேர் சுத்துறாங்க தெரியுமா?’

வோட்காவில் இருந்த பச்சைமிளகாயின் ஒரு பகுதி கடவாய்ப்பகுதியில் சிக்கி இருந்தது, நாக்கின் தொடர் முயற்சியின் பலனாக வெளிவந்தது. எதையோ அடைந்து விட்ட திருப்தியாக இருந்தது. அதே ருசியில் இருந்தது அந்த பல்லிடைப் பச்சைமிளகாய்.
மீண்டும் கேட்டேன். “டின்னர் சாப்பிடலாமா?’

“ஹே இட்ஸ் ஆல்ரெடி 12. சம் அதர் டே.’

நாகரிகமாக மறுக்கிறாள். எனக்கும் அப்படி ஒன்றும் ஈடுபாடோ ஈர்ப்போ இல்லை. தோளை குலுக்கி, “ஃபைன்’ என்று சொல்லிவிட்டு இறங்கினேன்.

விரல்களை காற்றில் அசைத்துவிட்டு காரைக் கிளப்பினாள். மெதுவாக நடந்து என் காரை எடுத்தேன்.

அரை வட்டமடித்தவள் என் அருகே நிறுத்தி “பாய் ரகு… பை த வே.. ஐம், முத்துலட்சுமி, கால் மி சுமி’.

ஒரு நொடிதான். சட்டென சுதாரித்து காரைக் கிளப்பி விரட்டினேன். இந்த முத்துலட்சுமியின் நம்பர் வாங்க வேண்டும். இந்த முத்துலெட்சுமியோடாவது வாழ வேண்டும்.

ஏதோ பிறந்தநாள் பார்ட்டி அப்பொழுதுதான் முடிந்திருக்கும் போல. பலூன்கள் பறந்தன. பலூனில் பிறந்தநாள் குழந்தையின் பெயர் அழகாக அச்சிடப்பட்டிருந்தது.

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *