அணையா நெருப்பு

 

வேறு ஒரு கதை விவாதத்தில் பிறந்த கிளைக் கதை இது. இது கிளைகூட இல்லை; வேறு, வேறு விதை.

“விவசாயிகளின் தளம் போல வானம் பார்த்த பூமி இல்லை நமது விளைநிலம்” என்றார் கதை விவாதிக்க வந்த ஒரு நண்பர்.

“ஆம்! இது பூமி பார்த்த பூமி” என்றேன்.

“சில சமயம் வானமும் பார்க்குமே?” என்று சிரித்தார். “பார்க்கும், எங்கேயும் பார்க்கும். பார்வைதானே கதையே! என் கோணம், என் கதை.”

“சரி, கதைக்கு ஒரு துப்பு கொடுங்க, துலக்கறேன்” என்றேன்.

“துப்பு என்ன… தலைப்பே தர்றேன்.”

“ம்…?”

நான் சற்றும் எதிர்பாராத தலைப்பு தந்தார்.

“நான் கற்பிழந்த நாள்.”

“ஓ! கதையின் நீளம்?”

“சிறுசு” என்றார்.

“கதாநாயகனா? நாயகியா?”

“நாயகிதான் யதார்த்தமாய் இருக்குமோ?”

“உண்மைதான். காலம்?”

“பகலா, இரவான்னு கேக்கறீங்களா?”

“இல்லை. நேற்றா, இன்றா, நாளையான்னு கேக்கறேன்?”

“முந்தானேத்து” என்றார் வீம்புக்காக.

சிரித்துவிட்டு, “How about முன்பு ஒரு காலத்துல?”

“Why not?” என்றார் விட்டுக் கொடுப்புடன்.

“உங்க தலைப்புக்கு ஏத்த மாதிரி ஒரு கதைச் சுருக்கம்… ‘சீதையின் வாழ்வில் ஒரு நாள்’ – எப்படி?”

“அம்மாடியோவ்!”

“ஏன்?”

“Why not?”

“கலவரம் வர ஒரு கதை காரணமா இருக்கணுமா?”

“கலவரம் வர நம்மூர்ல காரணம் வேணுமா என்ன?” என்றேன்.

“Agreed. சீதை என்ன சொல்றா? ஏன் அப்படிச் சொல்றா? அவ அப்படிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம்?”

“ஓ! கதையின் கால், ரிஷியின் மூலம் எங்கேன்னு கேக்கறீங்க? சொல்றேன்.ஆதாரம் கேட்டீங்கன்னா, கையில ஒண்ணுமில்ல. ஆனா, இது அக்னி சாட்சியா உண்மை.”

“அப்பிடின்னா?”

“இது எனக்கு அக்னிதேவன் சொன்ன கதை.”

“ஓ! சீதை சொல்லவில்லையா?” என்றார் சுவாரஸ்யம் இழந்தவராக.

“இல்ல… சீதை எனக்குப் பழக்கமில்லை. ஆனால், அக்னி வேறு விஷயம்.”

“ஓஹோ! அக்னிதேவன் உங்க நண்பரா?”

“ஆமாம்! ஆனா, ரொம்ப நெருக்கமில்ல. தூரத்து உறவு. அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்துக்கற அளவுக்கு நட்பு. ஒரு தலைக் காதலர்கள் சங்கத்துல என்னைப் போல் அவரும் சில காலம் உறுப்பினரா இருந்தாரு.”

“Wow! hot gossip?”

“No, a warm tale” என்றேன்.

துவங்கினேன்… “அக்னி தேவன் சொன்னபடி அதிக புனைவில்லாமல் சொல்றேன்.”

“ராமன், சீதையின் கற்பைச் சோதிக்க முடிவு செய்த நாள். ராவணன் போரில் செத்துப்போனான். என் போன்ற ஒருதலைக் காதல் ராவணனுக்கும் இருந்தது சீதையின் மேல்” என்று கதை சொல்லத் தொடங்கினான் அக்னிதேவன்.

“இரவெல்லாம் அசோக வனத்தில் குளிருக்காக ராவண சேவகிகள் என்னை எண்ணெயூட்டி, மட்டை விறகூட்டி வளர்ப்பர். என் கதகதப்பில் காவலாளிகள் உறங்கினாலும் சீதை உறங்க மாட்டாள். நானும்தான்.

சில சமயம் அனைவரும் உறங்கிய பின் என்னையே வெறித்துப் பார்ப்பாள் சீதை. நான் படபடத்துப் போவேன். சங்கோஜத்தில் நெளிவேன், உறக்கம் இன்றி.

விடிந்ததும் காமுற்ற என் மனதை நனைத்து அவிக்கும் பகலும், காற்றும்!

ஒரு முறை ராவணன் மேல் பொறாமையில், ராவணனின் அரண்மனைக்குத் தூது வந்த ராமதூதன் வாலைப் பிடித்துக்கொண்டு இலங்கையையும் ராவணனையும் அழிக்கக் கூடத் துணிந்தேன். கைகூடவில்லை. வீணாக நிறைய அரக்கு உருகியதுதான் மிச்சம்…”

“சரி! கதையின் தலைப்புக்குக் காரணமான காரியமென்ன? இது சிறுகதை, ஞாபகமிருக் கட்டும்” என்று ஞாபகப் படுத்தினார் நண்பர்.

தடங்கலின் எரிச் சலைக் காட்டாமல் அக்னிதேவன் தொடர்ந்து பேசலானான்…

“காரண காரியம் காதல் தான். சீதையின் கற்புக்கு நானே சாட்சி! ராவணன் அவளைச் சந்தித்த இரவுகளில், நானும் கூடவே இருந்தேன். அந்தத் தூதுவன் கணையாழி கொண்டு வந்து நீட்டியபோது அடி வயிறு பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தேன். என்ன பிரயோஜனம்? சீதை கணையாழியை இன்னும் தெளிவாகப் பார்த்தாள்… என் வெளிச்சத்தில்.

சீதை ராவணனோடு மட்டுமல்ல, என்னுடனும் பேச மறுத்தாள். அவள் நல்லவள். ஒரு வார்த்தைகூட என்னுடன் பேசாதவள்.

அன்று ராமன் அவளை ஊரறியச் சோதிக்க முற்பட்டபோதுதான் என்னுடன் முதன்முதலாகப் பேசினாள்.

“ராமனன்றி யாருடனும் சேராதவள், நினையாதவள் இன்று மனமொடிந்தேன்! நிதம் பார்த்து ஏங்கினாயே! காத்துவைத்த இந்தக் கற்பு உனதாகட்டும். எனை ஆட்கொள்” என்றாள்.

காதல் ஓர் விநோத நோய். தேரைக்கும் பாறைக்கும் ஏற்பட்ட காதல் போல யாரும் அறியாது நிகழ்ந்த இந்தக் காதல் சங்கமத்தில், என் காமச் சூட்டைவிட காதல் வண்ணம் மேலோங் கியது.

என் முதல் காதல் நாசமாய்ப் போனதே… அதுபோல் இதுவும் ஆகும் என்று தோன்றியது.

அவளை எனதாக்கிக் கொள்ளும் அவசரத்தில், அவளையே கரிக்கிச் சாம்பலாக்கிவிடுவேன் நான். தெரியும் எனக்கு. தோற்ற என் முதல் காதல் தந்த அனுபவம் இது.

‘முதல் காதல் யாருடன்?’ என்று நண்பர் கேள்வியைக் கேட்கும் முன், சுடச்சுட வந்தது பதில்.

“முதல் காதல் காட்டுடன், வனமோகினியுடன். நான் அப்போது மலைமகன். விடலை. என் காதலைச் சொன்னவுடன் வெகுண்டு வெடித்தார் தந்தையார். என்னை வீட்டைவிட்டு வெளியேற்றினார். குழம்பிப் போனேன்.

காதலியைத் தேடிப் போனேன். பல நாள் கனவிலே செய்ததை அன்று நினைவில் செய்தபோது, காதலி கரிந்துபோனாள். என் காதலும்தான்! என் காதல் தோற்ற கோபத்தில் காதல், காமம் என்ற வார்த்தை களைக் கேட்டாலே எரிந்து விழுந்தேன். சிவனின் மகன் மாறன் கரிந்ததும் என்னால் தான். அந்நிலை இன்று இவளுக்கும் ஆகும். தெரியும் எனக்கு. இவளுடன் ஒன்று சேருவதை விட இவளைக் காப்பதே என் கடமை என்றது காதல்.

என் கைக்குள்ளே வந்த சீதையிடமோ குரோதமும் ஆதங்கமுமே தெரிந்தது. மோதியழ ஒரு தோள் நான். அவ்வளவே!

அவள் என் மேல் அன்று பொழிந்தது காதல் மழையல்ல, கருணை மழை! உதட்டளவில் தானமாகக் கொடுத்தாள் காதலை.

“உன்னுடன் வருகிறேன் என்றவளை ஏன் வேண்டாம் என ஒதுக்குகிறாய். ஏற்க என்னை!” என்றாள்.

“சீதா! காதல் ஒன்று சேருவதில் மட்டுமே வருமெனில், ராமனின் காதல் இந்நேரம் வெகுவாகக் கூடி இருக்க வேண்டுமே! கூடியபின் குறையும் குணம் உள்ளது காதல்.

என்னருமை சீதா! காமத்தில் நான் குளித்து நனைந்தால், யாருக்கும் இன்றி அவிந்தேபோவேன். நீ அயோனிஜா, மீண்டும் உன் தாய் வீட்டுக்கே போவாய். மற்றவர்போல், கடைசியிலேனும் என் கைவசப்படுவாய் என்ற நம்பிக்கையும் இல்லை எனக்கு.

என்னைப் போல் நீயும் நியதிகளுக்கு அப்பாற்பட்டவள். உன் கற்பும் கலையாமல், நம் காதலும் கரையாமல் இருக்க, நாம் கூடவே கூடாது.

என்னைக் கடந்து செல், உன் சுயநல ராமனிடம்! இந்தக் கூடாத கூடலில், நியதிகளுக்குள் அடங்காத நானே கருத்தரிப்பேன்! நம் காதலின் நினைவாக உன் வடிவில் ஒரு குமாரத்தி யைப் பிரசவிப்பேன்! அவளுக்கு திரௌபதை என்று பெயரிடுவேன். சம்மதமா?” என்றேன்.

சீதை என் காதல் கேட்டுக் கண்கலங்கினாள். ‘இத்தகைய காதலை நான் அனுபவித்ததே இல்லை. இத்தகைய ஆணையும் நான் சந்தித்தது இல்லை. இனியும் அது நிகழாது.

உன் இந்த அன்புச் சூட்டில் உன் கை தவழ்ந்து வெளியேறிய பின், உன் நினைவாகவே இருப்பேன். என் கற்பு, ராமன் போன்றவர் வாழும் பிரதேசத்தில் அழுகித்தான் போகும். என் கற்பு உன்னிடமே இருக்கட்டும். அதை, பிறக்கப்போகும் நம் மகள் திரௌபதைக்கு திருமணச் சீராக விட்டுச் செல்கிறேன்” எனக் கூறி விடைபெற்றாள்.

அவள் கண்ணீரும் காதலும் என்னை நனைக்க, என் கைகள் தளர்ந்து போயின.

அன்று கைவிட்டுப் போனவள்தான், பிறகு பார்க்கவில்லை. என் மகள் திரௌபதையின் வாழ்வில் இத்தகைய சந்தேகக் கணவர் யாரும் வாய்க்காமல் காப்பேன். கற்பு என்ற சிறையில் சீதைபோல் அவள் சாகாமல் காப்பேன். என் மேல் ஆணை!”

தன் தலையையே சத்தியத்தின் சாட்சியாக்கினான் அக்னி என்று முடித்து, என் குரலை மாற்றிக்கொண்டு நானானேன்.

விவாதம் தொடர்ந்தது.

- மே 2006 

அணையா நெருப்பு மீது 13 கருத்துக்கள்

 1. Nandhini says:

  nice

 2. நரேஷ் says:

  மட்டமான கதை

 3. Manimehalai Prabhakaran says:

  எப்படி இப்படியெல்லாம் வித்தியாசமாக அற்புதமாக யோசிக்க முடிகிறது??????

 4. ச. இராஜசிம்மன் says:

  முதல் முறையாக என் வாத்தியாரின் கதையை படித்தேன். இராமாயணத்தின் முடிவில் இப்படி ஒரு கிளைகதையை யாராலும் எழுதமுடியாது. அற்புதம்.

 5. kumar says:

  கமலின் கற்பனை திறனின் எடுத்துக்காட்டு வித்தியாசமான சிந்தனை ,எண்ணங்களின் எல்லை நல்ல படைப்பு

 6. Lemurian says:

  புல்லரித்தது! கமலுக்கு ‘சிந்தனை அருவி’ என்று பெயர் சூட்டலாம். உணர்வுகளின் நுணுக்கங்கள் எத்தனை இந்த சிறு கதையில். இதுதான் ‘அவுட் ஆப் தி பாக்ஸ்’ சிந்தனை. காதலின் பரிமாணங்களை கற்றுக்கொடுக்க கமலை விட சிறந்தவர் எவரும் உண்டோ?

 7. நிலாமகள் says:

  என்ன ஒரு கம்பீரமான கற்பனை!

  தனக்குக் கொடுக்கப்பட்ட ‘பாரதி சின்னப் பயல்’ என்ற ஈற்றடியை ‘பார் அதிசின்னப் பயல்’ என்று மாற்றி யோசித்த பாரதி மறுபடி மனசில்….

  படைப்பாளியின் திறனறி சான்று.

 8. Ron says:

  மிகவும் வித்தியாசமான கோணத்தில் சீதையின் அக்னிப்ரவேசம். படிக்கையில் நெருடலாக இருந்தது உண்மைதான். கமல்ஹாசன் அல்லாது வேறு யார் இதை எழுதி இருந்தாலும் பிரச்னை ஆகியிருக்கும்.

 9. somasekar says:

  அயோனிஜா – தேடிப்பிடித்தது எங்கே ? இராமாயணத்தில் மகாபாரதமா ? கற்பனை கதைகளில் மேலும் ஒரு அருமையான கற்பனை!!

 10. Sankar Kottar says:

  யாருக்கும் தெரியாத புதுகோணத்தில் ராமாயணத்தை அலசியவிதம் அலாதியானது. உண்மையிலேயே நடிகர் கமல் தான் கதாசிரியரா?

 11. இராமாயணக்கதையை கமல்ஹாசன் மொழியில் வாசிக்கும் வாய்ப்பு. கமல்ஹாசனின் கதையை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். பகிர்விற்கு நன்றி.

 12. T. SETHURAMALINGAM says:

  ஒரு கதையில் ஓராயிரம் ராமன் – சீதை வந்து சென்றனர்.

  • C.Guruswamy says:

   அட!!கமல் தன் பாணியில் கதை சொன்ன விதம் அருமை.
   இப்படி இன்னும் பல கமலின் கதைகளை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்.
   நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)