என் கணவர்க்கு வீடு என்றால் நிறைய புத்தகங்கள் இருக்கணும்.
எனக்கு நிறைய பூனைகள் இருக்கணும்.
இப்போ ஓரளவுக்கு புத்தகங்கள் இருக்கு….
ஆனால் இன்னும் பூனைகள் இல்லை.
அவருக்கு ஜாலி…. எனக்கு அவர் சொன்னது
சாரி…….!?(எங்கோ படித்தது)
நாங்கள் அறிமுகமானதே புத்தகத்தின் மூலம்தான். பெருநகரத்தின் பிரதான சாலையில் இயங்கும் குளிரூட்டப்பட்ட அறைதான் அந்த நூலகம்.
என் அருகருகே பல பேரும், என் முன் நாற்காலிகளில் சில பேர்களும் அமர்ந்து படிக்கும் பெரும் நூலகம்தான்.
எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கமில்லை.!?
நான் சென்றது ஒருநாள், ஒரு புத்தகத்தை தேடி… “பூனை வளர்ப்பு” பற்றிய புத்தகம் ஏதேனும் இருக்குமா? எனச் சென்றேன்.
அவரைப் பார்த்தேன்… தினமும் வந்தேன்… !!
என்ன புக் தேட்றீங்க… ம் அது வந்து….?
அப்போது என் கண் முன் பட்ட “நிர்வாண நகரம்” என்றேன்.
இதோ இங்க இருக்கே.. சுஜாதா சார் எழுதுனது நல்லா இருக்கும்.
புத்தகங்கள் பற்றிய எங்கள் பேச்சு… இல்லை அவரின் பேச்சு மணிக்கணக்கில் நீடித்தது..
பதிலேதும் பேசாது மண்டையை மட்டும் ஆட்டியதில் புரிந்திருக்கும் என் புத்தக புலமை…
ஏலியட்,நெரூடா,தஸ்தாவ்யேஸ்கி, புதுமைபித்தன்,ஜெயகாந்தன் …. அய்யோ அவர் படிக்காத புத்தகமே இல்லை என நினைக்கிறேன்.
அவரால் நான் புத்தகப் பிரியை ஆனேன்…
என்னால் அவர் என் பிரியை ஆனார்…
தினமும் நான் “பூனை வளர்ப்பு” புத்தகம் தேடப் போவேன்?.
அப்படித்தான் ஒருநாள்,
வேதம் படித்திடுவோம் வெறுங்கை முழம்
போட்டிடுவோம்…
சாதத்துக்காகச் சங்கரனை விற்றிடுவோம் !
அத்தனைக்கும் மேலல்லோ அஹிம்சை கதை பேசி
வித்தகனாம் காந்தியினை விற்றுப் பிழைக்கின்றோம்.
இந்தியா தேசம் – அது
இணையற்ற தேசம்…. என நெஞ்சு பட படக்க நான் சொல்லி முடித்து பாரதியார் கவிதை என்று சொல்லி வாங்கினேனே ஒரு மொக்கை.
அமைதியும், ஆச்சர்யமுமாய் பார்த்தவர் செல்லமாய் தலையில் கொட்டி புதுமைபித்தன் என்றார். சரியான புத்தக பித்தன்.
உண்மையா நீ புக் படிக்கதான் லைப்ரரி வரியா தனா.. என்றார்.
பெரிய மழுப்பலுக்கு பின் பூனை வளர்ப்பு பற்றி சொன்னேன்.
நூலகமே திரும்பி பார்த்தது அவர் சிரிப்பதை…..
எனக்கு எரிச்சலாய் வந்துவிட்டது.
நான் கெளம்புறேன்..
என் சொல்லாக் கோபம் அவருக்கு புரிந்திருக்கும்..
மறுநாள் நான் நூலகம் சென்றபோது அவரில்லை.. எனக்கு கோவமாயிற்று.
ஒரு பிளாஸ்டிக் கூடையோடு வந்தார்.
உள்ளே சாம்பல் நிறத்தில் ஒரு பூனை..
ஆசையாய் ஓடி…
வெடுக்கென பிடுங்கினேன் கூடையை..!
கண்ணால் பேசினேன், புத்தக அலமாரி பக்கம் வரச்சொல்லி…
நச்சென்று ஒரு முத்தம்..!?
பூனைக்கு கொடுத்தேன்… அவர் முகத்தை திருப்பிக்கொண்டார்.
திரும்பிய கண்ணத்தில் முத்தமிட்டு,
கூடையை தூக்கிக்கிட்டு,
ஓடிப்போனேன் வீட்டுக்கு.
அன்று முதல் சங்கரை விட நான் அதிகம் நேசித்தது பூனையைத்தான்..
இரவு தூக்கம் பூனையோடு
காலை தேநீர் பூனையோடு.
இரண்டு வருடத்தில் சங்கர் என் கணவர் ஆனார். திருமணத்திற்கு பிறகு புத்தகம் பற்றி நாங்கள் பேசுவதேயில்லை.
அவர் படிக்கும்போதெல்லாம் எனக்கு எரிச்சலாய் வரும்.
நான் ஏன் புத்தகம் படிப்பதை நிறுத்தினேன்.?
ஏன் அவரோடு புத்தகம் பற்றி பேச மறுக்கிறேன்.?
திருமணத்திற்கு முன்பு,
நான் உனக்கு பூனையே வாங்கிக் கொடுத்திருக்க கூடாதுடி..
என்ன கண்டுக்கவே மாட்ற…
உன்ன பாத்ததுல இருந்து நான் சரியா படிக்கிறதில்ல…
உனக்கு பூனை வாங்கிக் கொடுத்ததுலேர்ந்து நீ என்ன நெனைக்கிறதேயில்ல…
அவர் சொல்லும்போது நான் அழுதேவிட்டேன்.
அப்படி பேசாத சங்கர்…
“பூனை எனக்கு பிடிக்கும் – அதைவிட
உன்ன நிறைய பிடிக்கும்”.
பூனை உன்ன எனக்கு கொடுக்கல
நீதான் பூனைய எனக்கு கொடுத்த.
உனக்கு புத்தகம் மாதிரி
எனக்கு பூனை…
என்னை இப்படி நினைக்கிற மாதிரி இருந்தா நாளைக்கு நான் பூனைய எடுத்துட்டு வரேன்… வாங்கிக்கோங்க..
ஏய் தனா… சாரி டி சாரி டா செல்லம்…
மறுநாள், நூலக வாசலில் நான் பூனையோடு நின்றேன்.
அவர் புன்முறுவலோடு வந்தார்.
என்ன தனா உண்மையா எடுத்துட்டு வந்துட்டியா ?
எனக்கு நீதான் முக்கியம் பூனை இல்ல…
இனிமேல் அப்படி பேசக்கூடாதுன்னுதான் திருப்பி தரேன்…
பூனையை கொண்டு வந்த பெட்டியை அவரருகில் வைத்துவிட்டு கிளம்பி சென்றேன். அதுதான் அந்த பூனையை கடைசியாய் பார்த்தது.
பூனைமேல் எனக்கு இன்னமும் தீராத பாசம் இருக்கத்தான் செய்கிறது.
அதன் வழு வழுப்பான கேசம், நம்மோடு ஒட்டிக்கொள்ளும் அதன் நேசம்..
அய்யோ… வர்ணிக்க வார்த்தை இருக்கு…
வளர்க்க பூனை இல்லையே.?
அன்று முதல் இன்று வரை பூனையைப் பற்றி அவரிடம் நான் பேசியதில்லை. இது நாள் வரை நான் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு கேட்க தயங்கியது.
நான் அன்று அவரிடம் கொடுத்த பூனை இன்று எங்கிருக்கும்.?
அவர் எங்கு விட்டிருப்பார்.?
கூவம் ஆற்றில் வீசியிருப்பாரோ.?
கடலில் தூக்கிப் போட்டிருப்பாரோ.?
சங்கர் மென்மையானவர்… அதுவும் மேன்மையானவர்… அப்படி செய்திருக்கமாட்டார்.
நான் அதைப்பற்றி கேட்டால், இன்னமும் அதே ஞாபகம்தானா? என கோவமடைவார் என்று நான் கேட்பதில்லை.
மனிதனுக்குள் இருக்கும் நாள்பட்ட ஆசைகளும், தீராப்ரியங்களும், எப்படித்தான் நிறைவேற்றுவது.
தடங்கலுக்கு யாரேனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
“என் பூனை வளர்ப்புக்கு, என் புருஷன் மாதிரி”…
எப்போதும் என் ஆழ்மனதில் நெருடலாய் சில கேள்விகள் கோபமாய் தோன்றும்.
*அடுத்த பிறவி உண்டெனில் சங்கரே என் கணவராகவும், ஆனால் அவர் பூனை வளர்க்க ஆசைப்பட வேண்டும். நான் புத்தகம் படிக்க வேண்டும்.
*நான் அன்று கொடுத்த பூனை என்னவாயிற்று? என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
*அவர் பூனை வளர்க்க ஆசையுடையவராக இருந்தால், சிறிது நாள் நானும் மனசு மாறி, “வெள்ளை நிறத்திலொரு பூனை, சாம்பல் நிறமொரு குட்டி, கருஞ்சாந்து நிறமொரு குட்டி, பாம்பின் நிறமொரு குட்டி”… என ஆசையாய் வளர்ப்போம்.
அழகான பதிவு. பூனை என்றால் மிகவும் பிரியம். வாழ்த்துக்கள்