கரையெல்லாம் செண்பகப்பூ
கதையாசிரியர்: சுஜாதா
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 16,608
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4
அத்தியாயம் – 1

‘காடெல்லாம் பிச்சி
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல
நல்ல மகன் போற பாதை’
-தமிழர் நாட்டுப் பாடல்கள் (நா.வானமாமலை தொகுப்பிலிருந்து)
பாஸஞ்சர் போனால் போகிறது என்று திருநிலத்தில் நின்றது. ஒரு பெண் ஓடி ஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீல நிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தில் காமிரா மாலை. அந்தப் பிரதேசத்தில் மிகவும் விநோதனாக, அன்னியனாக நின்றான். வெயில் கண்ணாடி அணிந்து சுற்றிலும் பார்த்தான்.
சின்ன ஸ்டேஷன், கச்சிதமான ஓர் அறை. அதனுள் சுவரில் பதிந்த வாய்திறந்த, புராதன டெலிபோனில் ஸ்டேஷன் மாஸ்டர் பேசிக் கொண்டிருந்தார். பிளாட் பாரத்திலேயே கைகாட்டி இறக்கும் லீவர்கள் இருந்தன. தண்டவாளத் துண்டு, மணியாக சரக்கொன்றை மரத்தில் தொங்கியது. அதை இரு தடவை மஞ்சள் மலர்கள் உதிரத் தட்டிவிட்டு அந்த நீலச் சட்டைக்காரன், அன்னியனை ஒரு வஸ்துவைப் போல் பார்த்துக் கொண்டே சாவியுடன் என்ஜின் திசையில் நடந்தான். கருங்கல் கட்டடடம்; சற்றே தூரத்தில் மூன்றே மூன்று வீடுகள். ஸ்டேஷனிலிருந்து ஒரு மண் பாதை புறப்பட்டு எங்கேயோ மாயமாய்ச் சென்றது. ஓர் ஆலமரம்- ஏறக்குறைய ‘ஸ்டேஷனே என்னுடையது’ என்று அணைத்துக் கொண்டிருந்தது.
ரயில் ‘ழே’ என்று கூறிவிட்டு உபரி நீராவியைக் கக்கி விட்டுக் கிளம்பியது. அந்தப் பெண் ரயிலுடன் ஓடினாள். காசு கொடுக்காத அந்தப் பிரயாணி அவள் மார்பு குலுங்க ஓடி வருவதை ரசித்துக் கொண்டே சில்லறையை விட் டெறிந்தான். அவள் காசைப் பொறுக்கிக் கொண்டு, வீசி எறிந்தவனை நோக்கி, ‘தத்’ என்று துப்பினாள்.
கடமை முடிந்த அந்த நீலச்சட்டை அவனை நெருங்கி ஆராய்ந்தான். தூரத்தில் மறுபடி ‘ழே’.
“இறங்கிட்டீங்களா?”
“மேம்பட்டிக்குப் போகணும்” என்றான் அவன். அவன் பெயர் எஸ்.வி.கல்யாணராமன். “எத்தனை தூரம்?’ என்றான்.
“இருக்குங்க… அஞ்சு மைல் தொலைவு. என்ன விசயம்?”
“அங்கே ஒரு ஜோலி.”
“மேம்பட்டியிலா?”
“ஆமாம். ஏதாவது பஸ் போகுமா?’
“பஸ்ஸா?”- சிரித்தான்.
“என்னம்மா வெள்ளரிப் பிஞ்சு, உங்க ஊருக்குத்தான் போறாராம் இவரு.”
“அஞ்சி காசு கொறச்சுப் போட்டுட்டுப் போறான். மாரியாயி வாரிக்கிட்டு போக! குட்மார்னிங்ஸார்! என்னைப் போட்டா புடிக்கிறிகளா?”
அந்தப் பெண் ‘ஸல்யூட் அடித்தது வினோதமாக இருந்தது. பதினெட்டு வயசிருக்கும். கொஞ்சம் அலம்பினால் அழகாக இருப்பாள் என்று தோன்றியது. கரிய முகத்தில் ஒரு மூக்கில் சிவப்புக்கல். காதில் ஓலை. கட்டம் கட்டமாக சுங்கிடிப் புடவை. பஞ்சு மிட்டாய் வர்ணத்தில் ரவிக்கை. கழுத்தில் பிளாஸ்டிக் மணி மாலை. வெள்ளை வெளேர் என்று பற்கள். உழைப்பின் உத்வேகம் தேகத்தின் அமைப்பில் தெரிந்தது. இளமையுடன் சேர்த்து ஓர் உற்சாக ராகம் போல இருந்தாள். கல்யாணராமனுக்கு பீத்தோவனின் ஸிம்ஃபனி ஞாபகம் வந்தது. டி.மேஜர் ஓப்பஸ் 61.
‘உள்ளே வாங்கோ’ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். சென்றான். அவர் இடுப்பில் வேஷ்டியும், ஒப்புக்கு வெள்ளைக் கோட்டும் அணிந்திருந்தார். மேஜை மேல் சாப்பாடும் இலையும் தயாராக இருந்தன. முள்ளம் பச்சையில் கொடி சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
“த்ரீ நாட் ஒன்ல வந்தீங்களா?”
“வேற வண்டி இருக்கா, என்ன?”
“மேம்பட்டிக்கும் போறாராம் அய்யா!”
“அங்கே என்ன?”
“அங்கே கொஞ்ச நாள் தங்கப் போறேன். பஞ்சாயத்துக்காரர் ஒருத்தர் ஸ்டேஷனுக்கு வர்றதா ஏற்பாடு. யாராவது வந்தாங்களா?”
“இல்லையே, நீங்கள் மெட்றாஸா?”
“ஆமாம்.”
“இஞ்சினியரா?”
“ம்ஹும். நான் ஒரு ரிஸர்ச் பண்ண வந்திருக்கேன். ஒரு ‘க்ரான்ட்’டிலே.”
“அப்படியா, என்ன ரிஸர்ச்?”
“நாட்டுப் பாடல்கள்.”
“அப்படின்னா?”
“ஃபோக்லோர் தெரியாது?”
“எனக்கு ‘த்ரீ நாட் ஒன், அப்பு, டவனு’ இவ்வளவு தான் தெரியும். ஆம்படையாள், குழந்தைகள் எல்லாம் எஜுகேஷனுக்காக தாம்பரத்தில் இருக்கா. ஒண்டிக்கட்டை. டிரான்ஸ்ஃபருக்கு மனுப் போட்டிருக்கேன். டிவிஷனல் ஆபிசில தயவு பண்ணனுமே? உங்களுக்கு ரெயில்வேல யாரையாவது தெரியுமா?”
‘தெரியாது. இங்கேயிருந்து எப்படி மேம்பட்டிக்குப் போறது?”
“நடந்துதான்! ஏ குட்டி! நீ அங்கேதானே போறே?”
“ஆமாங்க?”
“டிராக்டர் போவுங்களே. மருதமுத்து இப்ப போவானா புள்ளே?”
“பொளுது சாயத்தான் வருவாரு.”
“இவரை அளைச்சுக்கிட்டுப் போறியா?”
“சரிங்க. பொட்டியைத் தூக்கியாரணுமா, காசு தருவாரா?”
“தரேன்!”
“எத்தினி?”
“மூணு ரூபா” என்றான், அந்தப் பிரதேசத்துப் பொருளாதாரம் தெரியாமல்.
நீலச் சட்டை, “நான் தூக்கியாறேனுங்க” என்றான்.
“அடப் போடா! உனக்கு ட்யூட்டி இருக்கு. எக்ஸ்பிரஸ் கடக்கற நேரம்” என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.
அதற்குள் அவள் மூன்று ரூபாய் உற்சாகத்தில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு, அதன் மேல் வெள்ளரிக் காய் மூட்டை வைத்துக் கொண்டு, “வாங்க போகலாம்’ என்றாள். கிளம்பினான்.
“மூணு ரூவா சாஸ்திங்க. முக்கா ரூவா கொடுங்க, போறும்” என்றான் நீலச்சட்டை, அழுக்காறுடன்.
“அ! எம்புட்டு தொலைவு இருக்குது; நீங்க வாங்க, குட்மார்னிங் ஸார்!”
அவள் முன்னே நடக்க, அவன் பின்தயங்கி நடந்தான். வயலில் பாய்ந்தாள். காலில் கொலுசு தெரிந்தது. வரப்பில் நடந்தாள். நீர் நிறைந்த வயலில் அவள் பிம்பம் அவளுடன் தலைகீழாக நடந்தது. எதிரே மாமரச் சோலையில் ஒரு பச்சை ரகசியம். அருகே பம்ப்செட் பாரிபோல் நீரிறைத்துக் கொண்டிருந்தது. பனைமரங்கள் வரப்புக் காவல் நின்றன. வான நீல நிறத்தில் அங்கங்கே பஞ்சு ஒத்தடங்கள். ‘டிர்ரிக் டிர்ர்ரிக்’ என்றும் ‘ச்யூ ச்யூ’ என்றும் பறவைக் குரல்கள். கறுப்பு வெல்வெட் குருவி ஒன்று வாலைத் தூக்கித் தூக்கி எழுப்பிய தொனித் துளிகள் எஃப் ஷார்ப்பில் இருந்ததாகப் பட்டது கல்யாண ராமனுக்கு. அவன் மனத்தில் வயலின்கள் ஒலித்தன.
அவள் திரும்பிப் பார்த்தாள். “மெள்ள நடக்கறிகளே” என்றாள்.
“இரு, இரு,ஓடாதே” என்றான். சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். அவளை அடைந்தான்.
“நீங்க, என்ன சாதி! செட்.டிமாருங்களா?’
“பாப்பான்” என்றான்.
“பாப்பாரவருங்க சிகரெட் பிடிக்கிறிகளே, முடி வெட்ட மாட்டிகளா?”
சிரித்தான்; “உன் பேரென்ன?”
“வெள்ளையம்மான்னு பேரு. வெள்ளின்னு கூப்பிடுவாக. அது என்னங்க?”
“வாத்தியம்.”
“பாட்டுப் பாடுமா?”
“வாசிச்சாப் பாடும். உனக்கு பாட்டுத் தெரியுமா?”
“சினிமாப் பாட்டா?”
“இல்லே, உங்க ஊர்ல பாடற பாட்டு?”
“தெரியுங்க, எப்பனாச்சியும் பாடுவேன். பாடினா சிரிப்பாரு.”
“யாரு?”
“அதாங்க அவரு. டேசன்ல சொன்னாங்களே. டாக்டரு ஓட்டி வருவாருன்னு.”
“மருதமுத்து?”
“அவருதாங்க டாக்டரு ஓட்டுவாரு. கரண்டு கம்பி இளுப்பாரு. பாப்பாரப்பட்டி சந்தையிலே உங்க மாதிரி சிகரெட் பிடிப்பாரு- களுத்தில குட்டை கட்டிக்கிட்டு.”
“உம் புருசனா?”
“இல்லிங்க. குறிச்ச பொண்ணுங்க நான்.”
அவள் சேற்றில் இறங்கி ‘சளக் சளக்’ என்று நடந்தாள். இவன் சுற்று வழி தேடிக் கொண்டிருந்தான்.
“வாங்க, இதான் வழி.”
பூட்ஸைக் கழற்றிக் கொண்டு காலை வைத்தான். வழுக்கென்று விழுந்து பழுப்பாக எழுந்தான். சர்க்கஸ்காரன் போல் நடந்தான். காமிரா தப்பித்தது. சிரித்தாள்.
“கால்சராய் எல்லாம் சேறாயிடுச்சில்ல?”
தேங்கியிருந்த நீரில் கழுவிக் கொண்டான். இப்போது பாதை சுமாராக இருந்தது. செருப்பில்லாமல் எப்படி நடக்க முடிகிறது இவளுக்கு? அவள் நடக்கையில் அவள் இடுப்பு அசைவதில் மருதமுத்துவின் மேல் பொறாமையாக இருந்தது.
காமிராவை எடுத்துச் சுத்தமாக ஃபோகஸ் செய்தான்.
“வெள்ளி!” என்றான்.
திரும்பினாள்.
“க்ளிக்”
கலர்ஃபிலிம். பச்சைப் பசேல் என்ற பின்னணியில் ஒரு கறுப்புத் தேவதை திரும்பிப் பார்க்க – சிறைப்பிடித்த ‘அப்பெர்ச்சர்’ சரியாக இருக்க வேண்டுமே என்று கவலைப் பட்டான்.
“போட்டோ புடிச்சயளா?”
“ஆமாம்.”
“என்னையா?”
“ஆமாம்.”
“காட்டுங்க!”
“இப்பவே போட்டோ வராது. கொஞ்ச நாளாகும்.”
“என்னையும், அவரையும் வெச்சு எடுக்கறியளா?”
“யாரை?”
“அவருதாங்க!”
மறுபடி மருதமுத்து.
மேம்பட்டி எங்கே ஆரம்பித்தது? அரசமரத்தடியில் கருங்கல் திண்ணை போலிருந்தது. அதில் நான்கு பேர் உட்கார்ந்து அவன் வரவை, பேச்சை நிறுத்திவிட்டுப் பார்த்தார்கள்.
“வெள்ளி! எங்க கூட்டிப் போறே?”
“நம்ம கிராமத்துக்குத்தான்.”
கல்யாணராமன் அவர்களிடம் சென்று, “பஞ்சாயத்துக்காரர் ஒருத்தரைப் பார்க்கணுங்க” என்றான்.
நாற்பத்தைந்து வயது ஆசாமி ஒருத்தன் பேசினான். அவன் மீசையில் நரை தெரிந்தது. மிளகாய்ப் பழம் போன்ற மூக்குடன் காமராஜ் சட்டை அணிந்து. பையில் பற்பல அழுக்குக் காகிதங்களை கிளிப் குத்தி வைத்திருந்தான். “நான் தாங்க வி.எம். என் பேரு பிச்சைப் பிள்ளை. பட்டாரிக்கார்டு ஏதாவது பார்க்க வந்திகளா?”
“இல்லிங்க, இங்க தங்கப் போறேன். பஞ்சாயத்துக் காரர் ஒருத்தருக்கு லெட்டர் எழுதியிருக்குங்க! பி.டி.ஓ. எழுதியிருக்கார். “
“அண்ணே தங்கராசு சொல்லிட்டிருந்தார்… பட்டணத்தில் இருந்து யாரோ வர்றதா.”
“தங்கராசு! அதான் அவர் பேரு. இப்ப ஞாபகம் வருது. எங்கே அவர்?”
“த வரான் பாருங்க. ஏண்டா டேய்!”
“வாங்க வாங்க! வெள்ளிக்கிளமையில்ல வரதா எழுதியிருந்தாரு!”
“இன்னிக்கு என்ன கிழமை?” என்றான்.
அவன் யோசித்து, “ஆமா! வெள்… ளி. அட! செத்த சவம் நானு விசாளன்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்!”
“கட்ன பொஞ்சாதியைக்கூட மறந்து போய்ருவான்” என்று வி.எம். சிரித்தார். தங்கராசு அவரைக் கோபித்துப் பார்த்து உடனே சிரித்தான்.
“எப்படி வந்தீங்க?”
“நடந்து. அந்தப் பொண்ணு எங்கே?”
“ஏய் வள்ளி! அங்கேயே நில்லு. மோர் சாப்பிடறியளா?” வெள்ளி நின்று கொண்டிருந்தாள். தங்கராசு படிய வாரி யிருந்தான். இளந்தொந்தியின் மேல் பெல்ட் அணிந்திருந்தான். சட்டை, டவுனில் வாங்கியிருக்க வேண்டும். மெலிதான பையினூடே பர்க்லி சிகரெட் பாக்கெட்டும், ரூபாய் நோட்டுக்களும் தெரிந்தன.
“நாட்டுப்பாடல் ஏதோ கேக்கணும்னு வந்திருக்கிகளாக்கும். பெரியாத்தாகிட்ட சொல்லி வெச்சிருக்கேன். ஒப்பாரி நால்லா எடுக்கும்!”
வெள்ளி அங்கேயிருந்தே சிரித்தாள். ஒரு சிறுவன் அவன் எதிரே வந்து நின்று வெறித்துப் பார்த்தான். காமிராவைத் தொட்டுப் பார்த்தான்.
“தங்கராசு! இவரு எங்க தங்கப் போறாரு?”
“சமீன் வீட்டில ஒளிச்சு வெச்சிருக்கேன், போயேன்.”
“தாவாரம் முளுக்க நெல்லு கொட்டியிருக்குது.”
“சினிமா காட்டுமா இது?” என்றான் சிறுவன்.
“சமீன் வீட்டுக்குப் போய் அளைச்சிக்கிட்டுப் போறியே?”
“ஏன்? அங்கே என்னங்க?” என்றான் கல்யாண ராமன்.
“ஒண்ணுமில்லிங்க. நீங்க நடங்க பிச்சைப்புள்ளை! சும்மா பொரளி பண்ணிக்கிட்டே இருங்க. பட்டணத்துக்காரரு. உயரமா இருக்காரு. தங்கறதுக்கு நம்ம வீடெல்லாம் வசதிப்படுமா? காத்தோட்டமா இருக்குது சமீன் வீடு. பக்கத்தில கம்மாயி. மருதமுத்து பல்ப்பு விளக்கு இளுத்திருக்கான். சவுகரியமா இருக்கட்டும்னு அங்கதான் போட்டிருக்கேன். வாங்கய்யா”
கிளம்பியதும் அவர்கள் முணுமுணுப்பது கல்யாண ராமனுக்குக் கேட்டது. “என்ன சொல்கிறார்கள்?”
“ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பானுக.. நட புள்ளே!” “எங்கேங்க?”
“சமீன் வீட்டுக்கு!”
“அங்கேயா?”
“ஆமாம், மருதமுத்து எங்கே?”
“உரம் வாங்கப் போயிருக்காரு.”
கிராமத்தின் ஒரே தெருவினூடே நடந்தார்கள்.
தென்னை ஓலை வேய்ந்த தழைத்த வீடுகள். ஒவ்வொன்றின் உள்ளேயும் சின்னச் சின்ன இருட்டு. வாசல்களில் பெண்கள் நீரிறைத்துப் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். தேய்த்துத் தேய்த்து உன்னதப் பளபளப்பில் பித்தளைப் பாத்திரங்கள்! ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் பச்சையில் ஒரு சுத்த சதுரம் இருந்தது. அதற்கப்புறம் குழந்தைகள் மண்ணில் வெளிக்கிருந்து கொண்டிருந்தார்கள்.
“வெட்டவா குத்தவா, வென்னித் தண்ணி ஊத்தவர் என்று சிறுவர்கள் மரத்தினருகில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மீசை வைத்த சிப்பாயும், காரைக் குதிரைகளும் அருகில் நிற்க, கையில் கத்தி வைத்துக் கொண்டு வெற்றிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அய்யனார் காளி கோயில். சூலத்தில் சிவப்பு. நாகர், பிள்ளையார் மற்றும் ஏதோ ஒரு சில்லறைக் காத்தவீரியன். இரண்டு கிணறுகள், குளம். பச்சை நிழலில் இலைகள் மிதக்க, அந்தக் கட்டடத்தின் மறுபதிப்பு அந்தக் குளத்தின் கனவுடன் அசைந்தது.
கட்டடம் அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கிராமத்தின் எளிமையுடனும் ஏழ்மையுடனும் ஒத்துவராத மிகப் பெரிய வீடு. ஏறக்குறைய மாளிகை.
“இவ்வளவு பெரிய வீடா! இங்கே யார் கட்டினாங்க?”
ஜமீந்தாருங்க. இதெல்லாம் பாப்பாரப்பட்டி வரைக்கும் ஜமீன் நிலமா இருந்திச்சு. சர்க்கார் எடுத்துக் கிட்டாக. அந்தக் குடும்பம் வடக்கே போயிருச்சு. பெரியவரு இறந்துட்டாரு. மவனுக எளுத்துப் படிச்சுட்டு உத்யோகம் பார்க்கறானுக. சம்சாரம், வப்பாட்டி எல்லாம் காணாமப் போய்ட்டாங்க. வித்துறலாம்னு பாக்கிறாக. இந்தக் கிராமத்தில வந்து யாரு வாங்குவாக? நான்தான் வாங்கிப் போடலாம்னு நாப்பது கேட்டேன். லெச்சம் சொல்றாக. சாவி என்கிட்டதான் இருக்குது. நீங்க வாங்கிறியளா?”
“நானா?”-சிரித்தான்.
“முன்னூறு ரூம்பு இருக்குதாமில்ல… நான் பாத்ததில்ல” என்றாள் வெள்ளி.
“அதெல்லாம் பொரளிங்க..”
“அப்புறம் புளிய மரத்தில…”
“த! சும்மா இரு புள்ளே!”
உயரமான சுவர்களில் காட்டுச் செடிகள் பீறிட்டு வளர்ந் திருந்தன. பெரிய மரக் கதவு. நுழைந்ததும் முள்ளும் புல்லும் கல்லும் அடர்ந்து ஓர் ஒற்றையடிப் பாதை மட்டும் தப்பித்துச் சென்றது. 1926 என்று கல்லில் எழுதியிருந்தது. கலசம் வைத்த போர்ட்டிகோ; எட்டு படிகள் மேல் செல்ல அகலமான முன் தாழ்வாரம்; மூன்று மிகப் பெரிய கதவுகள்! பச்சை, சிவப்புக் கண்ணாடிகள் அரை வட்டமாகப் பதிக்கப்பட்ட அலங்கார வாசல்கள்! மாடி; மாடிமேல் மாடி உச்சாணியில் ஒரு மண்டபம்.
சிதிலமான தோட்டத்தில் ஓர் இத்தாலியப் பெண் சிலை. அவள் மார்பகத்தில் காக்கை எச்சம். ஒரு ஃபவுண்டன் 1947-ல் நின்று போயிருந்தது. மூன்று சக்கரங்களுடன் ஒரு சாரட்டு வண்டி சாய்ந்திருந்தது. அதனுள் ஒரு நாய் படுத்திருந்தது.
“ச்ச்ச்ச்… மணி மணி மணி” என்றாள் வெள்ளி. கிராம நாய்களின் பொதுப் பெயர் கொண்ட மணி, வாலாட்டிக் கொண்டு வந்தது.
இடப்பக்கத்து அறையைத் திறந்தான் தங்கராசு; “கொஞ்சம் கூட்டிப் பெருக்கிடலாம். நாளை வர்றதா நினைச்சுக்கிட் டிருக்கேன். பெஞ்சி போட்டிருக்குது. லைட்டு இருக்குது.”
உள்ளே நுழைந்த கல்யாணராமன் ‘சில்லென்று உணர்ந்தான். ஏதோ ஓர் உணர்வு அவனைத் தாக்கியது.
அத்தியாயம் – 2
“அப்ப. நான் வரட்டுங்களா?” என்றான் தங்கராசு.”
“சரி…”
“ராத்திரி சாப்பிட என்ன செய்விங்க?”
“ரொட்டி பிஸ்கெட் எல்லாம் வெச்சிருக்கேன். கொஞ்சம் பால் மட்டும் அனுப்பிடுங்க”.
“தினப்படிக்கு?”
“பார்க்கலாம். கொஞ்சம் ஸெட்டில் ஆகட்டும்.”
வெள்ளி, “நான் கொண்டு வருவேனுங்க. ஆனா பாப்பாரவரு கறிக் கொளம்பெல்லாம் திங்க மாட்டாரு” என்றாள்.
“பரவாயில்லை. நான் பார்த்துக்கறேன். இந்தா!” என்று மூன்று ரூபாயை அவளிடம் கொடுத்தான்.
“மூணு ரூவாயா! காசைக் கொடுத்துக் கெடுக்காதிங்க”
“சே…! எவ்வளவு தூரம் தூக்கி வந்திருக்கா, தங்கராசு…! நாளைக்குக் காலையில வாங்க கிராமத்தில் சிலவங்களைச் சந்திக்கணும்; குறிப்பா பாட்டுத் தெரிஞ்சவங்களை!”
“கூட்டியாரேங்க. வரேங்க!”
“வரேங்க.”
இருவரும் நடந்து செல்வதைப் பார்த்தான். வெள்ளி ஏறக்குறைய உற்சாகமாகத் துள்ளி ஓடினாள். அவள் கால் கொலுசு சற்று நேரம் கேட்டது.
கல்யாணராமன் பிரமித்து உட்கார்ந்தான். “மை காட்! நாகரிகத்திலிருந்து இத்தனை தூரம் வந்து இந்த ஜமீன் வீட்டில் ஏறக்குறைய சிறைப்பட்டு விட்டேன். புதிய முகங்கள், புதிய சூழ்நிலை. நாட்டுப் பாடல்களின் கவர்ச்சியில், அவற்றின் பொருளமைப்பையும் சங்கீத வடிவங்களையும் தேடி, வரப்பு களைத் தாண்டி வந்து விட்டேன். எத்தனை நாள்?”
கல்யாணராமன் எல்லா இளைஞர்களையும் போலில்லை, மிகவும் மனத்தில் வாழ்பவன். இண்ட்ரோவர்ட். எல்லோரும் இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் என்று படித்தபோது அவன் ஆங்கில இலக்கியம் படித்தான். எல்லோரும் ஐ.ஏ.எஸ்., பாங்க் பரிட்சை என்று எழுதும்போது அவன் சங்கீதம் படித் தான். எல்லோரும் கல்யாணம் செய்து கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டபோது, அவன் தமிழ் இலக்கியம் படித்தான். மேற்கத்திய சங்கீதத்தை ஒரு ஆங்கிலோ இந்தியரிடம் பயின்று, அதன் டெலிஸெமிக்வேவர்களிலும் மேஜர் மைனர் ஸ்கேல் களிலும் ஈடுபட்டான்.
நாட்டுப் பாடல் ஒன்றைத் தற்செயலாகச் சென்னை பிளாட்பாரத்தில் சந்தித்தான். பிழைக்க வந்த சிவகிரிப் பெண் ணொருத்தி பின்னிரவில் தன் மகவைக் குப்புறக் கவிழ்த்து முதுகில் தட்டித் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள், பெரிதாகப் பாடிக் கொண்டு;
‘என் அரசே என் கனியே என் ஐயா
இது நாளும் எங்கிருந்தாய்?
மாசி மறைவிருந்தேன்
மழைமேகம் சூழ்ந்திருந்தேன்
மாதம் சென்றவுடன்
மாதாவைப் பார்க்க வந்தேன்!’
அந்தப் பாட்டில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டான். அதன் உத்வேகம், கவிதை, இயல்பு, வாய் மொழிப் பரவல், அது காட்டிய வெகுஜன உணர்ச்சி, எளிமை, சந்தம்…
அவனுடைய ஆடிஸ்ஸி துவங்கிவிட்டது. அடையாற்றில் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்திற்குச் சென்று விசாரித்தான். அங்கே ஒரு பேராசிரியர் யுனெஸ்கோ பொருள் உதவியில் நாட்டுப் பாடல்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அவரைச் சந்தித்துப் பேசினான். அவருக்கு உதவியாளன் தேவைப்பட்ட நேரம்; சரியாக இருந்தது. ஏற்றுக் கொண்டார். இதோ பாடல்களைத் தேடி முதற்பயணம் வந்து விட்டான்.
பெட்டியைத் திறந்தான். காஸெட், டேப்ரிக்கார்டர், சவர சாதனங்கள்; எல்லா உபாதைகளுக்கும் பட்டைப் பட்டையாக மாத்திரைகள்; படித்துத் தள்ளப் புத்தகங்கள்; பற்பசை; அவன் தங்கையின் புகைப்படம் (இறந்துவிட்டாள்); ஒரு சில பாத்திரங்கள் (ஒரு ஸ்டவ் அடுப்பு- வாங்கிச் சொந்தமாகச் சமைப்பதாக உத்தேசம்); ஒரு சிறு காஃபி ஃபில்டர்! காஃபி பொடி; பவுடர் பால்; சாக்லேட்டுப் பட்டைகள்… “அட! வெள்ளிக்கு சாக்லேட் கொடுத்திருக்கலாமே! அவன் வயிற்றில் மறுபடி வெள்ளியை உணர்ந்தான்.
‘க்ளிக்!’ அவள் திரும்பிப் பார்த்த பார்வையில் தன் அழகைப் பற்றிக் கவலையில்லாத ஆர்வம். அவள் மார்பின் வளைவு. உள்ளுடையில்லாததால் நடக்க நடக்க அசைந்த மார்பகங்கள்… யார் அந்த மருதமுத்து?
வெகு நாட்களுக்கு அப்புறம் அவன் நினைவுகளில் செக்ஸ் வருகிறது. மூன்று ரூபாய் கொடுத்தபோது கையைத் தொட்டுப் பார்த்திருக்கலாம்.
“சட்! நான் வந்த வேலை வேறு!”
கித்தாரை எடுத்து வைத்தான். அதன் ஜி கம்பியைச் ற்று முறுக்கேற்றித் தட்டினான்.
“டங்!” வெள்ளி ஒலித்தாள்.
அந்த பெஞ்சியைத் தூசி தட்டிவிட்டு உட்கார்ந்து ஒன்றிரண்டு கார்டுகளை நிரடினான்.
ஜி, ஏ7,ஜி,ஏ7 என்று அந்த ஒலிப்பின்னல்கள் அந்த அறையை நிரப்பின. நிமிர்ந்தான். திடுக்கிட்டான்.ஜன்னலில் ஒரு முகம். அவனைப் பார்த்ததும் அந்தச் சிறுவன், “லேடியோப் பொட்டி டோய்!” என்று ஒரே ஓட்டமாக ஓட, கல்யாணராமன் பயம் கலைந்து சிரித்துக் கொண்டான்.
அறையை விட்டு வெளியே வந்தான். ஹால் தெரிந்தது. பழங்காலத்துப் பச்சை நாற்காலிகள் தெரிந்தன. சலவைக் கல்லில் ஸ்வஸ்திக் கோலம் தெரிந்தது.
“மகா… ஸ்ரீ பாப்பாரப்பட்டி மேம்பட்டி வெம்பட்டி ஜமீன்தார் அவர்கள் சமூகத்திற்கு வாசித்தளித்த வரவேற்புப் பத்திரம். அறுசீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்… ஃப்ரேம் போட்டு மாட்டியிருந்த அந்தப் பத்திரத்தில் காலஞ்சென்ற ஜமீன்தாரைக் காலஞ்சென்ற கவிஞன் ஒருவன் இந்திர சந்திரனாக வருணித்திருந்தான். மாடிப் படிகள் தெரிந்தன. அருகில் சென்றான். வௌவால் நாற்றமடித்தது. குப்பை. மெதுவாகப் படியேறினான். ஒரு பால்கனி வந்தது! மறுபடி படிகள் தெரிந்தன. மற்றொரு மாடி. அதன் தலைமேலிருந்த மண்டபத்து மரப்படிகள் அவனை வரவேற்றன. ஏறிப் பார்க்கலாமே!
“க்றீச் க்றீச்” என்று சப்தமிட்டுச் சற்று ஆடின படிகள். மேலே வந்துவிட்டான். சிறிய மண்டபம். காற்று பிய்த்து வாங்கியது. தூரத்தில் குட்ஸ் வண்டி போவது தெரிந்தது. மேம்பட்டி முழுவதும் தெரிந்தது. குளம். அந்தக் காத்தவீரியன் கோயில். அந்த ஆலமரம் தூரத்தில் புழுதி வாலணிந்து ஒரு டிராக்டர் வருவது தெரிந்தது. மண்டபத்தின் உள்ளே ஆராய்ந்தான். பஞ்சகோண வடிவத்தில் மண்டபம். உட்கார இடம். தரையில் கல் பதித்த கோலங்கள். இது என்ன? சில சிகரெட்டுத் துண்டுகள் கிடந்தன. அவற்றில் ஃபில்டர் நீளம் பரிச்சயமற்றதாக இருந்தது. என்ன சிகரெட் இது? ஒரு துண்டை எடுத்துப் பார்த்தான். ஸ்டேட் எக்ஸ்பிரஸ்!
இது யார் குடிக்கிறார்கள்? கிராமத்தில் சிதிலமான ஜமீன் வீட்டில் மேல்மாடியில் ஸ்டேட் எஸ்க்பிரஸ் சிகரெட் துண்டு! வினோதமாக இருந்தது. அந்த டிராக்டர் அவனை நோக்கி வருவதாகப் பட்டது! கீழே இறங்கி வந்து விட்டான். வீட்டுக்கு வெளியே வந்தான். சூரியன் மறைவதற்கான ஆயத்தங்கள் அடிவானத்தில் தெரிய, படபடவென்று மெஷின் பறவை சிறகடிப்பது போல குதித்துக் குதித்து டிராக்டர் வந்தது. அருகில் வர, அதில் இருவர் வருவது தெரிந்தது. டிராக்டரின் பக்கெட் ஸீட்டில் அந்த இளைஞனைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பின் பக்கத்துப் பெரிய டயர் மேல் அமைந்திருந்த மட்கார்டில் உட்கார்ந்து கொண்டு வெள்ளி! கல்யாணராமன் உற்சாகப்பட்டான்.
டிராக்டரை நிறுத்திவிட்டு அந்த இளைஞன் குதித்து இறங்கி, வெள்ளியை இடுப்பைப் பிடித்துத் தூக்கிப் பூப்போலக் கீழே வைத்தான். அவள் முழங்காலுக்கு மேலே உடை ஒரு தடவை உயர்ந்ததைக் கல்யாணராமன் கவனித்தான்.
“மறுபடி வந்துட்டியா?” என்றான் வெள்ளியைப் பார்த்து.
“கும்பிடறேனுங்க.. என் பேரு மருதமுத்து.”
“நீதானா?”
“வெள்ளி சொல்லிச்சு, நீங்க வந்திருக்கிகன்னு.”
மருதமுத்து வெள்ளியின் உயரம்தான் இருந்தான். நல்ல கறுப்பு மயிரிழைகள் நேர்த்தியாகவும் சுருட்டையாகவும் இருந்தன. எடுப்பான குழிந்த மூக்கு. பிடரியிலிருந்து உயர்ந்த முகட்டையுடைய தலை. புஜங்களில் தசைக் கட்டு உழைப்பால் இறுகியிருந்தது. கதவு போல் மார்பு. மார்பில் பனியன் அணிந்து சிவப்பில் மேல் துண்டு போட்டிருந்தான். வேட்டிக் கரையில் மயில் கண்கள் தெரிந்தன. நேராகக் கல்யாண ராமனைப் பார்த்தான்.
“அய்யா இங்கேதான் தங்கப் போறியளா?”
“ஆமாம்.”
தாழ்வாரத்துப் புளிய மரத்தைப் பார்த்தான். “எத்தினி நாளு…?”
“அய்யா பாட்டுக் கேக்க வந்திருக்காரு. தங்கராசண்ணன் பெரியாத்தா கிட்ட சொல்லிக்கிட்டிருந்தது. பாட்டுப் பாடினா அய்யா காசு குடுக்கறாகளாம்.” என்றாள் வெள்ளி.
“அடிசக்கை! நான் பாடட்டுங்களா?”
“அய்யே? பாடுவ!”
“எனக்கு நாட்டுப் பாட்டு வேணும். உங்க சமூகத்தில் பாடற பாட்டு. வயலில, கோயிலில, திருவிழாவில் தாலாட்டு, ஒப்பாரி…இதெல்லாம்…”
“அட! இதெல்லாம் யார் பாடுறாக இப்ப! லைட்டு எரியுதுங்களா?”
“பார்க்கலை.”
“பார்த்துறலாம் வாங்க! நான்தான் கரண்டு இளுத்தேன்” அவன் முன்னே ஆர்வமாகச் சென்று விளக்குப் போட்டு, ‘பாத்தியா புள்ள! என்று இரண்டு மூன்று தடவை ஸ்விட்சை * அணைத்து ஏற்றினான். “மோட்டார் மராமத்துச் செய்வங்க. வயிண்டிங்கூட டவுன்ல சுத்தியிருக்கன். ஃபீஸ் போனாப் போட்டுறுவங்க. டிராக்டரை பூராக் களட்டிப் போட்டுறுவங்க என்று தன் இன்ஜினியரிங் சாதனைகளைச் சொன்னான்.
“எனக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாதுப்பா. மிஷின் களைக் கண்டா எனக்கு பயம். நீ இங்க வெவசாயம் பார்க்கிறியா?”
“ஆமாங்க, குத்தவைங்க. இப்பதான் சொந்தம் நெலம் வாங்க இருக்கேன். அதுக்குள்ள சைக்கிள் மோட்டார் ஒண்ணு வாங்கிப்பிடலாம்னு தோணுது! மேவாரத்துக் காரங்க பங்களூர்ல இருக்காங்க. உங்க மாதிரி பாப்பாரவருங்க. கவனிக்கிறதே இல்லை. தை மாசம் மட்டும் வந்துட்டு நெல் அளன்னா எப்படிங்க?”
“இந்தப் பொண்ணை நீ கல்யாணம் செஞ்சுக்கப் போறியாமே…?”
“அப்படியா சொல்லிச்சு! அடிங்கொக்கா! அதான் என்னைக் கட்டிக்கிடக்கணும்னு ஒத்தைக் கால்ல நிக்குது” என்று அவளை அசிங்கமாகத் திட்டினான்.
“அ! ஆ!” என்றாள் வெள்ளி பொய்க் கோபத்துடன். ‘கல்லெடுத்துப் போட்டன்னா தெரியும்; நாசமத்துப் போயிருவ! என்றாள்.
“இவளுக்கு மாவன் மவன் இருக்கான். இடுப்புயரம் இருக்கான். இவதான் என்மேல் வந்து விளுதா. எனக்கு முத்தையாபுரத்தில, பாண்டியாபுரத்தில் எல்லாம் கேட்டிருக்காங்க”.
“பொரளிங்க.நான் இந்தப் பேயனுக்கு வாக்கப்பட மாட்டங்க!”
அவன் அட்டகாசமாகச் சிரித்து, “அதுக்குள்ள எவ்வளவு கோவம் பாருங்க. துரை சத்தியம் பேசறன். அறுப்பு முடிஞ்சதும் இவளைத்தான் கட்டிக்கப் போறேனுங்க. இவ எனக்குத்தாங்க! மாரளவுத் தண்ணியில நிக்க வெச்சு சத்தியம் வாங்கிக் கிட்டிருக்கா… ஹை! இது என்னங்க?”
“வாத்தியம்”
“சைஸா சல்லிஸா இருக்குதே! பலா மரங்களா?” கித்தாரை மருதமுத்து தூக்கிப் பார்த்து, அதன் கம்பியைத் தட்டி, ‘பாடுதுங்களே! என்றான். “நீங்க வாசிங்க?”
“இது என்னங்க?”
“டேப் ரிக்கார்டர்”
“டவுன்ல பார்த்திருக்கிறேன். பேசினா திரும்பிப் பேசும் இல்லை? வள்ளி, இதப் பாரு!”
“அய்யா என்னைப் போட்டா புடிச்சாக!”
“அப்படியா! என்னையும் எடுப்பிகளா?”
“இரண்டு பேரையும் சேத்து வெச்சி எடுக்கறதா சொல்லியிருக்காக!”
“ஆத்தாடி! அப்படியே சொல்லுதே சொன்னதை! பொட்டிக் குள்ளே யாருங்க?” -ஆச்சரியத்தில் வெள்ளியின் விழிகள் பிரகாசமாயின.
“யாருமில்ல களுத! த பார்… நாடா இருக்குது பாரு, அதுல பேச்சு ஒட்டிக்குது. அப்படித்தானுங்க?”
“அப்படித்தான்… வெள்ளி! ஒரு பாட்டுப் பாடு பார்க்கலாம்.”
“இது நம்ப ஊர்ல செய்றாகளா?”
“செய்யறாங்க. அவளைப் பாடச் சொல்லு!”
“பாடு புள்ளே!”
“ம்ம்… தெரியாதுங்க.”
“அட பாடுன்னா? அய்யா கேக்குறாக. சந்தைக்குப் போறப்ப பாடுனியே, அதைப் பாடு!”
“சிரிப்பிங்க நீங்க!”
“நான் அந்தால நிக்கறேன்; பாடு. நிறையத் தெரியுங்க இதுக்கு. பெரியாத்தா சொல்லிக் குடுத்திருக்குது.”
வெள்ளி மிகவும் தயங்கி, மிகவும் வெட்கப்பட்டு, மிகவும் கீழ்ப் பார்வை பார்த்துக் கொண்டு, மிகவும் சன்னமான குழந்தைக் குரலில் பாடினாள்:
“ஏடு படிச்சவரை
எழுத்தாணி தொட்டவரை
பாரதம் படிச்சவரை
பார்த்து வெகு நாளாச்சி!”
“சபாஷ்!” என்றான் கல்யாணராமன். வெள்ளி முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டாள். அவள் பாடலின் ராகத்தில் நாதநாமக்கிரியாவின் சாயல் இருந்தது. சுருதி விலகாமல் பாடினாள். “குரல் நல்லா இருக்கு!” கித்தாரின் கம்பியைத் தட்டி, “இத பார், இந்த சுருதியில் பாடு, பார்க்கலாம்” என்றான். இயல்பாக அந்த மைனர் கார்டில் ஒட்டிக் கொண்டாள்.
“பல்லில இடை காவி
பணத்தில செலவாளி
மேவரத்து நெல்லளக்க
மெத்தச் செலவாளி!”
“ப்யூட்டிஃபுல்! திஸ் இஸ் இட்!” என்றான்.
“மருதமுத்து! உன்னைப் பத்தித்தான் பாடுறா!” என்றான். அவன் உள்ளே வந்து, “கேட்டாங்க! நான் சொல்றன் கேளுங்க” என்று வசனத்தில்.
“மஞ்சக் கிழங்கு தாரேன்
மார்புக் கேத்த ரவிக்கை தாரேன்
கொஞ்சி விளையாடு உனக்கு
குழந்தை கையிப் புள்ள தாரேன்.”
என்று அட்டகாசமாகச் சிரித்தான். வெள்ளி வெட்கப் பட்டு ஒரே ஓட்டத்தில் ஓடி விட்டாள்.
காஸெட்டை நிறுத்திவிட்டுக் கல்யாணராமன், “ஏன்யா விரட்டிட்ட நல்ல சமயத்துல?” என்றான்.
“நான் பாடறங்க? எடுத்துக்கங்க! என்னடி மீனாச்சீய்!”
“ஷட் அப்! போய்ட்டு அப்புறம் வா!”
“ராத்திரி தனியாப் படுப்பிகளா? துணைக்கு வாரட்டுமா?”
“வேண்டாம்.”
“வரேங்க! அடியோய்!” என்று கத்திக்கொண்டே நடந்தான் – “வட்ட வளவிக்காரி, வளத்தட்டு சீலக்காரி நில்லுடி!”
வெள்ளி டிராக்டரின் அருகில் காத்திருந்தாள். மருத முத்து அவளருகில் சென்று அவளை அணைத்து ஏற்றி விடுவதைப் பார்த்தான். வயிற்றில் ஒரு சின்ன கத்திக் குத்துபோல் உணர்ந்தான்.
இரவு மருதமுத்துவின் ஒற்றை பல்பு எரிந்து கொண்டிருக்க, ரொட்டியில் மிக்ஸெட் ஜாம் தடவிச் சாப்பிட்டான். வெளியே அடர்ந்த இருள். தவளைகள் சப்தம். பூச்சிகள் திருகித் திருகி எழுப்பும் ஒலிகள்.
‘ஓ’ என்ற அது இரைச்சலா, மௌனமா? கல்யாண ராமன் அந்த காஸெட்டைப் போட்டுப் பார்த்தான்.
“அய்யா என்னைப் போட்டா புடிச்சாக… “ஏடு படிச்சவரை எழுத்தாணி தொட்டவரை”
வெள்ளியின் குரலை மூன்று தடவை போட்டுக் கேட்டான். வரிகளை நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொண்டு, மருதமுத்து பேசிய பகுதியை மட்டும் ஓவர் ரிக்கார்ட் செய்து அழித்தான். மற்றொரு காஸெட்டை எடுத்துப் பொருத்தினான். தட்டினான். சங்கீதம் கேட்டது.
“Money Money Money
It’s kind of funny
In a Rich man’s World!”
ரிச் மான்! மகராஜ ஸ்ரீ ஜமீன்தார். அவர் வீட்டு மேல் மாடியில் ஒரு ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட் துண்டு. “த்ரீ நாட் ஒன்ல வந்திங்களா?” “குறிச்ச பொண்ணுங்க.” ‘வெள்ளி’ ‘க்ளிக்! மெதுவாக அவள் கட்டம் கட்டமான புடவை விலக ‘க்ளிக்! க்ளிக்! க்ளிக்’ ‘கொஞ்சம் படுத்துக்க வெள்ளி, க்ளிக்!
“கொஞ்சி விளையாடு உனக்கு
குழந்தை கையிப் புள்ள தாரேன்.”
‘இங்க வா வெள்ளி! அந்தக் கருப்பன் கிட்ட போகாதே!’
-சட்!
எண்ணங்களைக் கலைத்துப் புத்தகத்தில் ஆழ்ந்தான்.
‘தற்போது செவிவழிப் பரவலுக்குக்கூட முன் நிபந்தனையாக எழுத்து வடிவம் இருக்கிறது. கொலைச் சிந்து என்றொரு பாடல் வடிவம் தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் உள்ளது. இது ஒரு வாழும் மரபாகும். கொலைகள் சமூகப் பின்னணியில் நடைபெறுகின்றன…’
எப்போது தூங்கப் போனான்? எப்போது விழித்துக் கொண்டான் திடுக் என்று?
மின் விசிறி இல்லாது தூங்கிப் பழக்கமில்லை. உடம்பு பூரா வியர்த்திருந்தது.
அந்தத் தவளைகள் இன்னும் ஓயவில்லை.
அந்தத் திருகுப் பூச்சிகள் இன்னும் ஓயவில்லை. ஆனால் இது என்ன சப்தம்?
மாடியில் நாற்காலிகளை நகர்த்துவது போல சப்தம்.
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.