மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் சிறுகதை ’பரிசு’, 1972-ல், ‘செம்மலர்’ இதழில் வெளியானது. ஆசிரியராக இருந்த கே.முத்தையா பொன்னுச்சாமியைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ‘தீக்கதிர்’, ‘குங்குமம்’, ’குமுதம்’, ‘வாசுகி’, ‘கல்கி’, ’தாமரை’, ’இதயம் பேசுகிறது’ ‘சுபமங்களா’, ’அமுதசுரபி’, ‘இந்தியா டுடே’, ’தமிழரசி’, ’தினமணி கதிர்’, ‘மகுடம்’, ‘ஜனரஞ்சனி’, ‘தேவி’, ‘ராணி’, ‘ஓம்சக்தி’, ’விழிப்பு’, ‘புதிய பார்வை’, ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ எனப் பல முன்னணி இதழ்களிலும், இலக்கியச் சிற்றேடுகளிலும் சிறுகதை, தொடர்கள் எழுதினார். ஆனந்த விகடன் இதழின் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன், மேலாண்மை பொன்னுச்சாமியை ஊக்குவித்தார். சிறுகதை, தொடர்கதை என்று பல படைப்புகளை விகடன் இதழில் வெளியிட்டார்.
மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ’மானுடம் வெல்லும்’ 1981-ல் வெளியானது. பதிப்பகங்கள் எதுவும் அத்தொகுப்பை வெளியிட முன் வராததால் தானே தன் வீட்டில் வளர்த்த ஆட்டுக்குட்டிகளை விற்று வந்த தொகையில் அந்த நூலைப் பதிப்பித்தார். தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன.
300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல், குறுநாவல்களைத் தந்துள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. இவரது படைப்புகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் மாணவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இள முனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது ‘மின்சாரப் பூவே’ என்ற சிறுகதை தொகுப்பிற்கு 2008-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
மேலாண்மை பொன்னுச்சாமி, அக்டோபர் 30, 2017 அன்று, தனது 66-ம் வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழக அரசால் மேலாண்மை பொன்னுச்சாமியின் நூல்கள், அவரது மறைவுக்குப் பின், 2018-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
சிறுகதைத் தொகுப்புகள்
- மானுடம் வெல்லும்
- சிபிகள்
- பூக்காத மாலை
- மானுடப் பிரவாகம்
- காகிதம்
- கணக்கு
- தழும்பு
- தாய்மதி
- விரல்
- உயிர்க்காற்று
- என்கனா
- ஒரு மாலை பூத்து வரும்
- அன்பூ வாசம்
- மனப் பூ
- பூச் சுமை
- வெண்பூ மனம்
- மானாவாரிப் பூ
- மின்சாரப் பூ
- பூ மனச் சுனை
- ராசாத்தி
நாவல்கள்
- உயிர் நிலம்
- முற்றுகை
- இனி…
- அச்சமே நரகம்
- ஆகாய சிறகுகள்
- ஊர் மண்
- முழுநிலா
குறு நாவல்கள்
- ஈஸ்வர…
- பாசத்தீ
- தழும்பு
- கோடுகள்
- மரம்
நன்றியுரை – சிபிகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1987, கங்கை புத்தக நிலையம், சென்னை.
முதற்தொகுப்பு ‘மானுடம் வெல்லும்’ இரண்டாவ தாக வந்தாலும், சிபிகள் தொகுப்பு, தர அடிப்படையில் முதலாவது.
ஜனரஞ்ஜனி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வென்ற ‘சுயம்’ – கல்கி இதழ் (1986) சிறுகதைப் போட்டியில் முதற் பரிசையும், விரிந்து பரந்த வாசகர்களின் பாராட்டையும் பெற்ற ‘சிபிகள்’ – இலக்கியச் சிந்தனை பரிசையும், எழுத்தாளர் இந்துமதியின் பாராட்டையும் பெற்ற ‘ஜீவிதத்தின்உள்வட்டம்’ – போக்குவரத்துத் தொழிலாளிகளின் உயர் பண்பை யதார்த்தமாய் கண்டுணர்ந்து சித்தரித்த ‘உள் மனிதன்-‘
இத்தொகுப்பின் மீது எனக்கு இப்போதும் தீராக்காதல். ஒரு வட்டத்திற்குள் மட்டுமே அறியப்பட்ட எழுத்தாளனாக இருந்த என்னை, பரந்த தமிழ் வாசகப் பரப்பிற்குள் அழைத்துச் சென்ற தொகுப்பு இது. பெருமையும் கௌரவமும் பெற்றுத் தந்த இந்தத் தொகுப்பின் மீது… ஒரு தாய்க்கு தலைப்பிள்ளை மீதுள்ள பாசம், எனக்கு.
வாழ்க்கை என்னைப் போதுமான அளவுக்கு வறுத் தெடுத்திருக்கிறது; வாட்டி வதைத்திருக்கிறது. மனிதச் சந்தடியில் அடையாளமற்று புதைத்துவிட தாட்சண்ய மற்று எத்தனித்திருக்கிறது.
வாழ்க்கையோடு நான் நடத்திய முடிவில்லாத மல்லுக் கட்டில் என் அடையாளத்தை கண்டெடுத்து நிரூபணம் செய்து நிலைநாட்டுகிற போராட்டத்தில் – இன்னும் நான் நம்பிக்கையுடன் களத்தில் இருக்கிறேன்.
பலவிதமான பரிசுகளையும், விருதும் பெற்று, ‘கல்கி’, ‘ஆனந்தவிகடன்’ போன்ற கௌரவமிக்க பிரபல இதழ்களில் தொடர்கதைகள் எழுதுகிற அளவுக்கு அடையாளம் பெற்றிருக் கிறேன்.
எனது உண்மையும் சத்தியமுமான இலக்கியக் கொள்கையையோ – அதை நிர்ணயித்த மார்க்ஸீய தத்துவ நோக்கையோ – மக்கள் நலன் சார்ந்த பொதுவுடமை இயக்கத்துடனான நேசமிக்க உறவையோ மூடி மறைத்துக் கொள்ளவுமில்லை; ஒதுக்கிவைக்கவுமில்லை.
இன்றும் நான் நம்புகிறேன்; மோசமாகிப் போன இன்றைய சமூகச் சூழலிலும் உறுதியுடன் நம்புகிறேன்; ‘கலைத்தன்மை குன்றாத மக்கள் விடுதலைக்கான முற்போக்கு இலக்கியப் படைப்புகள், வெற்றி பெறுவது நிச்சயம்; இதுவே சரித்திரத்தின் விதி’ என்று.
மிகவும் பின்தங்கிய கிராமச் சூழலிலுள்ள வாழ்க்கை யில் – மிகக் குறைந்த கல்வி வாசனையில் – ஏழ்மையான குடும்பத்தில் தேங்கி நின்ற எனக்குள்… ஓர் இலக்கியப்படைப் பாளி தோன்றி மலர்வதற்கான எத்தகுதியும் இருந்ததாகத் தோன்றவில்லை.
ஆயினும்,
வாழ்க்கையின் உள்-வெளி மர்மம் நிறைந்த அனுபவங் களையும், கிராமத்துப் பாமர விவசாயிகளின் ஈரவலிமையும், சத்திய பலமுமிக்க மொழி வளத்தையும் நான் கற்றுத் தேர்வதற்கு எனக்குக் கற்றுத் தந்த முற்போக்குச் சிந்தனை தான்… நிகழ்வாழ்வின் கொடூரங்களை எதிர்த்துப் போரிடு வதற்குரிய ஆத்ம பலத்தையும், போர்க் குணத்தையும் வழங்கியது.
இந்தச் சின்னஞ்சிறு விதைக்குள் ஒரு விருட்சம் இருக்கிற நிஜத்தைப் புரிந்துகொண்டு, எனது ஆரம்ப காலப் படைப்பு முயற்சிகளுக்கு நீரூற்றி… சோர்வடைந்து துவள்கிற போதெல்லாம் தைர்யமூட்டி, சுதாரித்து துள்ளுகிற போதெல்லாம் லகான் போட்டு என்னை நெறிப்படுத்தி பாசத்தோடும் தோழமையோடும் என்னை வார்த்தெடுத்த தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களை என்னுயிருள்ளளவும் மறக்க இயலாது.
எனது சிறுகதைகளை துவக்க நாளிலிருந்து பிரசுரித்து பாதுகாத்துப் போற்றிய ‘செம்மலர்’ ஆசிரியர்’கே. முத்தையா, ஓவியர்தி. வரதராசன், மீராபதிப்பகத்தார், கவிஞர்கந்தர்வன், முத்துநிலவன், கி. ராஜநாராயணன், கவிஞர் பாலா, வணக்கத்துக்குரியவர்கள்.
சிபிகள் நூலைத் தேடிக் கண்டுபிடித்து கொடுத்துதவிய காமராசர் மாவட்ட த.மு.எ.ச. செயலாளர் எழுத்தாளர் ச. வெங்கடாசலத்திற்கு விசேஷ நன்றிகள்.
எனது படைப்புகளையெல்லாம் தோளில் போட்டு நாடெல்லாம் விற்றும் – படித்துவிட்டு உடனுக்குடன் விமர்சனமும், பாராட்டும் வழங்கி – தன் சொந்தப் படைப்பாளனாக என்னை மதிக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நண்பர்கள் சகலருக்கும் எனது அன்பும் தோழமையுமான வணக்கங்கள்.
நன்றி!
மேலாண் மறைநாடு – 626 127
காமராசர்மாவட்டம்
என்றும் உங்கள்
மேலாண்மை. பொன்னுச்சாமி.