மாலினி அரவிந்தன்

 

யாழ்ப்பாணத்தில் வேம்படி மகளிர் பாடசாலை, சுண்டுக்குளி மகளிர் பாடசாலை ஆகியவற்றில் கல்விகற்ற இவர் கொழும்பில் உள்ள மகாராஜா இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தில் கணக்காளராகத் தொழில் புரிந்தார். கனடா நாட்டுக்குப் புலம் பெயர்ந்த இவர் சிற்ரிக்குறூப் நிறுவனத்தில் கணக்காளராகவும், பீல் பிராந்திய கல்விச் சபையில் சர்வதேச மொழித்திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றுகின்றார்.

தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் சிறுகதைகள், சிறுவர் கதைகள், கட்டுரைகள் போன்றவற்றை இதுவரை எழுதியிருக்கின்றார். இவரது சிறுகதை கனடா உதயன் சிறுகதைப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கின்றது. லண்டனில் இருந்து வெளிவரும் புதினம் நடத்திய சிறுகதைப் போட்டியிலும், இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியிலும் பரிசுகள் பெற்றிருந்தன. ஜேர்மனியில் இருந்து வெளிவரும் வெற்றிமணி இதழில் இவரது சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. இவரது கட்டுரைகள் தினக்குரல், தமிழர் தகவல், இனிய நந்தவனம் ஆகிய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. இதைவிட இணையத்தளங்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம், சொப்கா பீல்பிரதேச குடும்ப மன்றம், ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆயுட்கால உறுப்பினராக இருக்கின்றார். புலம்பெயர்ந்த கனடா மண்ணில் முதலாவதாக வெளிவந்து சாதனை படைத்த 16 தமிழ் பெண்கள் எழுதி வெளிவந்த ‘நீங்காத நினைவுகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இவரது கதையும் இடம் பெற்றிருக்கின்றது. சிறுவர் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் கனடாவில் இருந்து வெளிவரும் தூறல் இதழின் சிறுவர் பகுதி ஆசிரியராக இருந்தார். தூறல் இதழில் வெளிவந்த ‘மர்மமலை’ என்ற தொடரில் 20 அத்தியாயம் கொண்ட சிறுவர் தொடரில் 18 அத்தியாயங்களைக் கனடிய தமிழ் சிறுவர்களைக் கொண்டே எழுதச் செய்து அவர்களின் எழுத்தற்றலை வெளிக் கொண்டு வந்திருந்தார்.

இவர் கனடாவில் வெளிவந்த சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் அடங்கிய ‘தமிழாரம்’ ஒளித்தட்டின் இணைத்தயாரிப்பாளராகவும் செயற்பட்டார். சிறந்த பாட்மின்டன் விளையாட்டு வீராங்கனையான இவர், விளையாட்டுப் போட்டிகளில் உள்ள ஆர்வம் காரணமாக மகாஜனக்கல்லூரி கனடா பழையமாணவர் சங்கத்தின் பெண்களுக்கான வலைப்பந்தாட்டக் குழுவின் பயிறுணராகவும் கடமையாற்றினார்.

இவரது சிறுகதைகள் ‘பறவைகள்’ என்ற பெயரில் திருச்சி, இனிய நந்தவனம் பதிப்பகத்தால் தொகுப்பாக வெளியிடப் பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *