2050-ம் எதிர்பாராத திருப்பமும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 2,203 
 
 

1970-ல் தான் சொந்த ஊரை விட்டு வெளியூருக்கு வேலைக்கு செல்லவேண்டும், தான் தோட்டத்தில் வாழும் ஓலைக்குடிசை வீட்டை விட நகரத்தில் உள்ள கான்கிரீட் வீட்டில் வசிக்க வேண்டும், ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என பரந்தாமன் ஆசைப்பட்டது நிறைவேறியது. 

2000-த்தில் தன் மகன் தற்போது இருக்கும் வீட்டை மாடி வீடாக மாற்றி, குடியிருந்து, கார் வாங்கி  வாழ வேண்டும், அதற்கு பெரிய நகரத்துக்கு வேலைக்குப்போக வேண்டும் என பரந்தாமன் விரும்பியதும் நிறைவேறியது.

2025ல் தன்  பேரன் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வேலைக்குச்சென்று வேலை பார்த்து அங்கேயே குடியுரிமை வாங்கி, வீடு வாங்கி ஆடம்பரமாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும், அடிக்கடி விமானத்தில் பறக்க வேண்டும் என பரந்தாமன் ஆசைப்பட்டதும் நிறைவேறியது.

2050 -ல் தனது பேரன் மகனாகிய கொள்ளுப்பேரன் வேறு கிரகத்துக்கு ராக்கெட்டில் சென்று, அங்கேயே வீடமைத்து வாழ வேண்டும் என பரந்தாமன் நினைத்ததற்கு மாற்றாக விடுமுறையில் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்த  கொள்ளுப்பேரன் தலைகீழாகப்பேசுவான் என கனவிலும், கற்பனையிலும்  கூட நினைக்கவில்லை.

“கொள்ளுத்தாத்தா நீங்களே சொல்லுங்க. உங்களுக்கு இப்ப வயசு நூறு. நீங்க கிராமத்துல பிறந்து வளர்ந்து, நல்ல காற்று சுவாசிச்சு, உரம் போடாத, மருந்து அடிக்காத தானியங்களை சமைச்சு சாப்பிட்டதனாலதான் இத்தனை வருடங்கள் ஆயுளோட மட்டுமில்லாம, ஆரோக்யத்தோடவும் வாழ்ந்திருக்கீங்க. இப்ப நவீனமான இந்தக்காலத்துல மாத்திரை போட்டுக்காத ஒரு ஆள உங்களால காட்ட முடியுமா? ராக்கெட்ல வேற கிரகத்துக்கு கூட்டிகிட்டு போகிற அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்திருந்தாலும், எந்திரங்களை நீண்ட காலம் உழைக்கிற அளவுக்கு நவீன தொழில் நுட்பத்த கண்டு பிடிச்ச அதே மனுசனோட சராசரி ஆயுள் நாளுக்கு நாள் குறைஞ்சிட்டு வந்திட்டிருக்குது. இந்த பூமில என்ன இல்லை. எதுக்கு இன்னொரு கிரகத்துல வசிக்க நான் போகனம். எங்க போனாலும் நல்ல உணவு வேணும். அது இங்கேயே விளையுது. அதனால நான் போகப்போறது ராக்கெட்ல இன்னொரு கிரகத்துக்கு இல்லை, ராகி விதைச்சு சாப்பாட்டுக்கு எடுக்க நீங்க பிறந்து வளர்ந்த நம்ம நாட்டுல இருக்கிற தோட்டத்துக்கு…..” என பேச்சு மொழியில் பேசாமல், சுத்தமான எழுத்து மொழியான தமிழில் மிகவும் இனிமையாகப் பேசினான்.

கொள்ளுப்பேரனின் பேச்சைக்கேட்டு அவனது அமெரிக்கா வாழ் பெற்றோர் அதிர்ச்சியடைந்தாலும், நூறு வயதைத்தொட்டு விட்ட பரந்தாமனுக்கு உடலும், உள்ளமும் பரவசத்தால்  பூரித்துப்போனது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *