அந்த அதிகாலை சர்வதேச விமான நிலையத்தில் ஃப்ளைட்டிலிருந்து இறங்கிய யூகி தன் தம்பி விஷாலை செல்போனில் அழைத்தான். ஏர்போர்ட்ல வெயிட் பண்றேன் நீ கார் எடுத்துட்டு உடனே வா விஷால். அப்புறம் ஒரு ஹேப்பி நியூஸ். நீ வர்ற வரைக்கும் வெயிட் பண்ண முடியாது.
அக்கம்பக்கம் பார்த்தபடி மெல்லிய குரலில் தொடர்ந்தான் யூகி.. நான் இன்னிக்கு உலகத்தோட உச்சியில இருக்கிற மாதிரி உணர்றேன் விஷால். அர்னவ் கம்பெனி கம்ப்யூட்டர் சர்வரை ஹேக் பண்ணிட்டேன். மால்வேர் வைரஸ் அவன் நெட்வொர்க்கை ஸ்தம்பிக்க வெச்சிடுச்சு. ஆடிப்போயிருப்பான் அர்னவ். பத்து கோடி டீல்… க்ரிப்டோ கரன்ஸி கிடைச்சாச்சு.
மறுமுனையில் இடைமறித்த விஷாலில் பேச்சைக் கேட்டு சிரித்தான் யூகி. ஏன் நான் செஞ்சது தப்புன்னு சொல்றே. நீதி நியாயம்னு என்னை இன்சல்ட் பண்ணி வேலைய விட்டு தூக்கி எறிஞ்சான் இல்ல, அவனை என்னோட வைரஸ் வெச்சு முடக்கி அழிச்சிட்டேன். சரி.. டயர்டா இருக்கு, நேர்ல பாக்கலாம் என்று பேச்சை முடித்து நடந்தான் யூகி.
நிமிடங்கள் கரைய, செல்போனில் புது நம்பரிலிருந்து அழைப்பு வரவும் காரை ஓரமாக நிறுத்தினான் விஷால்.
மறுமுனையில், பதட்டமான குரல். சார் ஏர்போர்ட்லேர்ந்து பேசறோம். பேசஞ்சர் யூகி, கொஞ்ச நேரம் முன்னால் இந்த செல்நம்பருக்கு பேசியிருக்காரு. இப்ப அவர் திடிர்னு மயங்கி விழுந்திட்டாரு. இங்க முதலுதவி கொடுத்து வெச்சிருக்கோம். உடனடியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகணும். ஏர்போர்ட்ல எடுத்த டெஸ்ட்ல அவர் வைரஸ் பாசிட்டிவ்.. சீக்கிரம் ஏர்போர்ட் அவசர உதவி மையத்துக்கு வாங்க என்று தொடர்பு துண்டிக்கப்பட அதிர்ச்சியில் உறைந்தான் விஷால்.