“ஏம்பா தம்பிகளா, ரோட்டுல இருக்கிற பிச்சக்காரன சரிசமமா ஒக்கார வெச்சு சாப்பிடுறீங்களே நா எப்படி ஏவாரம் செய்யீரது?”
“ரூவா சரியா இருக்கானு பாருங்கண்ணே”
‘கையேந்தி பவன்’-என்றாலும் உள்ளூர் கறை வேட்டிக்காரர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்.
இன்று எதிர்கட்சிகள் நடத்தும் மாபெரும் கண்டனப் பொதுக் கூட்டம். மக்கள் பெருந்திரளாய் கூடக்கூடும். வழக்கத்துக்கு மாறாக வியாபாரம் அதிகமிருக்கும். முன் தயாரிப்புகளுடன் கடைகாரர்கள்.
“நாலு இட்லி ஒரு வடை பத்து பேருக்கு”- கடையை சூழ்ந்து கொண்டனர் காக்கி உடுப்புக்காரர்கள்.
சாப்பிட்டு வெளியேறும் போது கடைசி கான்ஸ்டபிள் நூறு ரூபாயை கொடுத்தார்.
“சார்! நாலு பேருக்குத்தான் குடுத்திருக்கிறீங்க?”
“ரோட்ல கடைய போட்டுக்கிட்டு வாய் பேசாதய்யா?”
பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்று சட்ட ஒழுங்கை சமன் செய்வது அவர்கள் கடமை. லேசான தூறலும் தணுத்த காற்றும் வீசிக் கொண்டிருந்தது.
“வேண்டாம் சார், மழையும் குளிருமா கிடக்கு”
செவ்விளனியும் பச்சையிளனியும் குவிக்கப்பட்டிருந்த இடம் நோக்கி நகர்ந்தது காவல் கூட்டம்.
வெட்டுக்கிளிகளைப் போல….!