வீதி நாயும் விலைபோகாத ஃபிரிட்ஜும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 4,265 
 
 

அந்தத் தெருவில் அந்த நாய்க்குக் கொஞ்சம் திமிர் அதிகம் என்றே நினைக்கிறேன். ஆயிரம் இடம் படுக்க இருந்தாலும் என் வீட்டில் சைடில் ஓரமாய் ஒதுக்கிப் போட்டிருந்த அந்த சிவப்புக்கலர் ஃபிரிட்ஜ் பக்கத்திலேயே வந்து படுக்கும். அந்த நாயின் நிறம் அலாதியானது, கருப்பு நாய்களைப் பார்த்திருப்பீர்கள்., வெள்ளை அல்லது செந்நிற நாய்களைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு சாம்பல் நிற நாய்.

ஃபிரிட்ஜ் அருகில்வந்து, வந்து படுப்பதைப் பார்த்தால், அது பூர்வத்தில் எந்த பணக்காரன் வீட்டிலோ பவனி வந்திருக்க வேண்டுமென நினைக்கத் தோன்றும். பிரிட்ஜ் அருகில் படுப்பது அதற்கு ஏசி குளிரில் இருப்பதுபோல் இருக்கும் என்றே நினைக்கிறேன். நிறத்தைப் பொருத்தவரை அஸ்தி சாம்பலில் ஆகுதி செய்யப்பட்டு வைத்த தோற்றம் அதன் தோற்றம். அதன் தனி நிறமே அதன் கர்வத்திற்குக் காரணமாயிருக்கும்.

எத்தனை துரத்தியும் எங்கும் போவதில்லை. வீட்டுக்குக் காவலும் காப்பதில்லை. கர்ம வினைத் தொடர்போ என்னவோ, படுக்க மட்டும் பயன்படுத்தாத பிரிட்ஜ் அருகில் வந்து படுத்து விடும்.

பிரிட்ஜ் ரிப்பேர் என்றதும், பழைய விலைக்குப் போட பழைய இரும்புக்காரனைக் கூப்பிட்டால், இசக்கி வந்தான், லாவகமாய் கம்பிரசரை மட்டும் கழற்றி லவட்டீட்டுப் போய்ட்டான். பிரிட்டஜை எடுன்னா.. இதோ வர்றேன்., அதோ வர்றேங்கறான்., வர மட்டும் மாட்டேங்கறான். எடமில்லையாம்! கம்பிரஷர் மட்டும்தானே பழைய பிரிட்ஜில் காசாகும்.?!

ஒருநாள் கோபம் வந்து அசிங்கம் பண்ண, என் பிரிட்ஜ்தானா உனக்குக் கிடைத்ததுன்னு ஒரு கல்லை எறிந்து துரத்தினா.. அது, காச்சு மூச்சுன்னு ஒரு கத்து…! ஊரே ரெண்டுபட, ஊதாகிராஸ் உதறல் உள்ளுக்குள் எடுத்தது.

‘என்ன என்னைப் பெரிசா அடிக்க வர்றே?!! ‘வேண்டாம்னு வச்ச ஒருவார சாம்பார், ரசம் ஊசிப்போனபொரியல், கூட்டு இதெல்லாம் உள்ளே இருக்கலாம் நான் அருகில் இருக்கக் கூடாதான்னு கேட்டாப்ல இருந்துச்சு!. நாய் பாஷை உனக்கெப்படி புரிஞ்ச்சுதுன்னுதானே நினைக்கிறீங்க?!

வேண்டாததை வைக்கத்தான் பிரிட்ஜுன்னா, யாரோ வேண்டாம்னு தள்ளினதுதானே அந்த தெரு நாய்?! நாய் பாஷை புரிய நாயா இருக்கணும்னு இல்லே…! நாணயத்தின் ரெண்டு பக்கமும் பார்க்கற பார்வை போதும்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *