(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வீணா, கை வளையல் ஒலிக்க, உடைகளைக் களைந்து கொண்டிருநதாள். ‘இதுதான் இப்ப ஷூட்டிங்குக்குப் போட்டுக்க வேண்டிய ட்ரெஸ்’ என்று உள்ளாடைகள் மட்டும் கொண்ட ஒரு பாலிதீன் பையை நீட்டிவிட்டு, சிகரெட் புகைத்தபடியே அவளது கணவன் ராஜா அறையை விட்டு வெளியேறினான்.

வெளியே பேச்சுக் குரலை வீணா அவதானித்தாள். அவர்கள், அவளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த உள்ளாடை தயாரிக்கும் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வந்திருக்கிறாராம். ஷூட்டிங்குக்கு முன்னால் அவளது உருவப் பூரிப்பு அவர்களுடைய விளம்பரத்துக்கு எடுப்பானதாக உள்ளதா என்று பார்க்கத்தான் அந்த எம்.டி.யின் வருகை, ‘தாராளமாய் பாருங்க; அந்த ரூம்ல இருக்கா’ என்று கணவனின் குரல் துல்லியமாய் ஒலித்தது. ‘அட்வான்ஸ் எங்கே’ என்று அந்தக் குரல் தொடர்ந்தது.
சற்று நேரத்தில் உள்ளாடையில் மட்டுமே இருந்த வீணாவை இரண்டு ஜோடிக் கண்கள் மொய்த்தன.
தாவணியை இழுத்து இழுத்துச் செருகி வனப்பை மறைத்துக் கொண்ட பருவம் நினைவுக்கு வந்தது.
அவள் உதட்டில் வெற்றுப் புன்னகை தோன்றியது.
ஆனால், அவர்கள் கவனம் அவளது புன்னகையில் இல்லை.
– நவம்பர் 1995, குடும்ப நாவல்.