கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 1,073 
 
 

‘அந்தப் பானையை நானே வனைத்தேன்; வேக வைத்தேன். எனவே, அஃது என் சொத்தாகியது.’ 

அவனும் அவன் கருமமும். 

சக்கரம் சுழல்கின்றது. அதிலிருக்கும் களி மண்ணில் அவன் விரல்கள் வித்வம் பயில்கின்றன. அவன் பணியே யானான். அருகில் வந்த சித்தரைக் கவனிக்கவில்லை. 

தனக்குரிய கெளரவத்தை அவன் தரவில்லை என்ற முனிவு சித்தரின் உள்ளத்தில் திரண்டு விளைந்தது. 

சந்தைக்குச் செல்லத் தயாராக இருந்த பானைகளுள் ஒன்றைக் கால்களால் இடறினார். 

பானை உடைந்தது; சித்தரின் சினமும் உடைந்தது! 

குயவன் நிமிர்ந்தான். சக்கரம் தரித்தது. சித்தர் பானை மீது உரிமை பாராட்டியிருப்பதை உணர்ந்தான், கோபம் குயவன் மாட்டு இடம் பெயர்ந்தது. 

‘ஏன் பானையை உடைத்தாய்?‘ 

‘என்றாவது உடைந்து போகும் மட்பாண்டம். அதற்காக ஏன் இத்தனை கோபம்?’ சித்தர் சிரித்தார். 

‘இது என் பானை. விலை கொடுத்து வாங்கிய பிறகு நீ அதனை உடைத்திருந்தால் எனக்குக் கவலையில்லை’. 

‘அப்படியா? மண்ணேயான மண்ணேயான பானைக்கு எப்படி விலை விளைந்தது?’ 

‘அந்தப் பானையை நானே வனைந்தேன்; வேக வைத்தேன். எனவே, அஃது என் சொத்தாகியது. விலையை செலுத்துபவனுக்குப் பானையின் சொத்துரிமையை விற்கிறேன். அப்பொழுது பானையை உடைக்கும் அதிகாரம் வாங்கியவனைச் சார்கின்றது. இப்பொழுது செய்யத் தக்கது இதுதான்…’ 

‘எது?’ 

‘பானையை உடைத்தபடியானால், நீ பானையின் உரிமையை அநுபவித்தவனாகி விட்டாய். எனவே, நீ பானையின் விலையை எனக்குத் தருவதுதான் உகந்தது; அதுவே தர்மம்.’ 

குயவனின் கூற்றில் தொனித்த நெறி சித்தரின் அறிவுப் பிடிக்குட் சிக்கவில்லை. அகந்தையின் பசளையுண்ட சித்தரின் முனிவு மீண்டும் மதாளித்தது. 

‘குயவா! பானை உன்னுடையது எனச் சொத்துரிமை பாராட்டுகின்றாய். நீ வனைந்ததினாலும், வேகவைத்ததி னாலும் வந்தடைந்த அதிகாரம் என்கிறாய்! பானையை எதிலிருந்து செய்தாய்?’ 

‘மண்ணிலிருந்து….’ 

‘முதலில் நீ சூனியத்திலிருந்து மண்ணை உருவாக்கிக் காட்டு. அஃது உன்னாற் சாலுமாயின், நீ கோரும் விலையை நான் தருகிறேன்….’ 

குயவன் ஒரு கணம் சிந்தனையில் ஆழ்ந்தான். அவனை மடக்கியதான பூரிப்பில், சித்தரின் முகத்தில் ஏளனச் சிரிப் புக்கள் பூத்தன. 

சக்கரம் சுழல்கின்றது. பானை வனையும் பணியின் தொடர்…. 

சித்தர் ஏமாப்புடன், ‘நான் சொன்னதன் தத்துவம் புரிந்ததா?’ எனக் கேட்டார். 

‘நான் எப்படித்தான் வழக்குரைத்தாலும், நீ பானைக்கான விலையைத் தரப்போவதில்லை. குயுக்தி வாதத்திலே விரயமாகும் நேரத்தில் இன்னொரு பானையை வனைந்தெடுப்பேனே யாகில், நீ உடைத்த பானையை ஈடு செய்யலாம்’ எனக் கூறிய குயவன் வனைதற் பணியில் ஒன்றலானான். 

குயவன் ஏதோ மகாதத்துவம் பேசிவிட்டதான மலைப்பு சித்தரின் மனத்தினைக் குடையலாயிற்று.

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *