(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘அணுவைப்பிளந்து சக்தியைப் பெற்றோம். யதார்த்தம். சக்தியை ஒடுக்கிச் சிவத்தைத் தரிசிக்க முடியாதா? தவிப்பு’.
வயிற்றிலே பசி. நெஞ்சிலே உரம். மூளையிலே சுறு சுறுப்பு. அவன் மகாசிந்தனைவாதி. ஞானவானுங்கூட, மனித சமுதாயத்தின் ஈடேற்றமே அவன் நோக்கம்.
மனித குலத்தின் ஈடேற்றம் குறித்துப் பேசும் மதங் களை ஆராய்ந்தான். அவை அனைத்தும் இறை பக்தி பற்றி யும், இறை அச்சம் பற்றியும் போதித்தன. மறுவுலக வாழ்க்கைப் பற்றி ஆசை வார்த்தைகள் ஊட்டின. இவற்றை எல்லாம் நம்பிய மனிதன், அபினி உட்கொண்ட ஒரு போதையிலே, உழைத்து உழைத்து இவ்வுலக வாழ்க் கையிலே ஓடாகி உருக்குலைவதைக் கண்டான். கற்றவற் றையும் கண்டவற்றையும் அவன் மோதவிட்டான். கருத்துவமும் கருத்துவமும் மோதுகின்றன. மோதுதலிலே சிதைந்து அழிந்தவை ஒழிய, மிச்சில் புதிய கருத்துவமாக உயிர்க்கின்றது. புதிய மதத்தின் உயிர்ப்பு.
புதிய மதத்திற்கு ஒரு தளம். எண்ணம் வாதத்தின் முதலல்ல. பொருளே வாதத்தின் முதல். இம்மை வாழ்க் கையின் சுகம் பொருள். பொருளின் யதார்த்தம் கவர்ச்சி யானது. பொருளே மூலதனம். மூலதனம் என்றால் என்ன? அது தொற்றியும் ஆராய்வுகள். சேமிக்கப்பட்ட உழைப்புச் சக்திதான் மூலதனம். உழைப்புச் சக்தி கைவரப்பட்ட வர்கள் பாட்டாளிகள். அவர்கள் உபரி. அவர்கள் சுரண் டப்படுகிறார்கள். இதனால் பட்டினி என்னுஞ் சிறையிலே மெலிகிறார்கள். சிறையிலிருந்து விமுக்தி பெறும் மார்க்கம் கம்டனிஸம். புதிய மதத்திற்கு அநுட்டான கிரியைகளும் குறியீடுகளும் தேவை. செங்கொடி, அரி ரளும் சுத்தியலும் என்று பலப்பல. கொலையிற் கொல்லாமை என்ற யுக்தியிலும் அவனுக்குச் சம்மதம். இந்த யுக்தி ‘புரட்சி ஓங்குக’ என்ற மந்திரத்தில் அடக்கப்படுகின்றது.
பாட்டாளிகளின் பொருளாதார விமுக்திக்கு ஏற்ற புதிய மதமாக கம்யூனிஸம் பரம்புகின்றது. மதம் என்று கூறக் கூச்சம். விஞ்ஞான சாஸ்திரம் என்று பேசப்படுகின்றது.
கம்யூனிஸத்தின் விஞ்ஞானத் தளம் நின்று பிடிக்க வில்லை. அதன் விமுக்தி மகத்துவம் நிரூபணமாகி நிலைத் தது. எந்த மதத்திலும் இன்னொரு மகத்துவம் உண்டு. அந்த மகத்துவம் ஒரு மதத்திற்குப் பல மத்ஹபுகள் தோன் றுவதுதான். அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்ற உட்பிரிவுகள் மட்டுமா? பின்னர் தோன்றிய மதங் களான கிருஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களிலும் மத்ஹபுகள். கம்யூனிஸத்திலே லெனினிஸம், ட்ரொஸ்சிஸம், ஸ்டாலினிஸம், ஜிலாயிஸம், மாசேதுங்கிஸம்,… மத்ஹபுகள் விஷயத்தில் பிரிவினைப் போட்டியின் உச்சம். பொது எதிரியான பூர்ஷுவா வர்க்கத்தையும் முதலாளித்துவத்தையும் ஏகாதி பத்தியத்தையும் கம்யூனிஸ மத்ஹபுகள் மறந்துவிட்டன. உள் பிணக்குகளை எதிர்க்கும் மூர்க்கம்.
மார்க்ஸ் என்ற சிந்தனைவாதி யோகியுங்கூட. புதிய மதத்தினைத் தோற்றுவித்துவிட்டு, மத்ஹபுகளுக்கிடையிலான பிணக்குகளைப் பார்க்காது கல்லறையிலே நிம்மதியாகத் தூங்குகின்றார்.
தூக்கமில்லை சிவனுக்கும் சக்திக்கும். அவர்களுக்கிடையில் ஊடல்.
‘சக்தியின்றிச் சிவனில்லை’ எனச் சாடினாள் சக்தி.
‘சிவனின்றிச் சக்தியில்லை’ என்று ஒற்றைக் காலில் நின்றான் சிவன்.
‘சக்தியே சிவன்!’
‘சிவனே சக்தி’
பள்ளிச் சிறார் வாக்கில் மாறி மாறிக் கத்தினார்கள்.
கணக்குப் பண்ண அவர்களுக்குச் சித்தமில்லை. ஊடல் உச்சம் அவர்களின் நத்துதல்.
சக்திக்கு ஒரு சமன்பாடு இயற்றும் விசித்திரக் கணக்கு ஒன்றிலே சிரத்தை ஊன்றினான் ஒரு ஞானி. அவன் பரம விஞ்ஞானி. ஒளியின் வேகத்தை இழுத்தடிக்கும் சமன்பாடு ஒன்று பளிச்சிட்டது.
E=MC2
சக்தி = திணிவு = ஒளி வேகத்தின் வர்க்கம்.
திணிவு தர ஒளிவேகத்தின் வர்க்கம் சிவனா?
திணிவு தர ஒளிவேகத்தின் வர்க்கம் மூலதனமா?
இது சீட்டுக் கூட்டத்தை மீண்டும் பிரித்துப் போட்டுச் சோடி சேர்க்கும் விவகாரம்.
விளையாட்டிற்கு அப்பாற்பட்ட யதார்த்தம்.
அணுக்கருவைப் பிளந்து அளப்பரிய சக்தி பெறப்படு கின்றது. ஜடப்பொருளின் ஓர் அணுவுள் இவ்வளவு சக்தி உறைந்து கிடந்ததா? விந்தை. ஆனாலும், அந்த சக்தியை அதற்குள் புகுத்தி வைக்கவில்லை என்பதும் உண்மை.
நாலு ஹைட்ரஜன் அணுக்களை இணைத்து ஒரு ஹீலியம் அணுவினைப் பெறும் ‘ரசவாத’ விந்தை. இந்த மாற்றத்தின் போது அழிக்கமுடியாத 032(தசம் சைபர் மூன்று இரண்டு) கிராம் திணிவுக்கு என்ன நேர்ந்தது? அஃது அதிசக்தியானதா?
விஞ்ஞானத்தின் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தும் மீள் பார்வைக்கு உட்படுத்தப்படுகின்றன.
மார்க்ஸ் தாம் நிறுவிய மதத்தின் விஞ்ஞானத் தளத் தினை மீள்பார்வை செய்யாமல் கல்லறையில் நிம்மதியாகத் தூங்கினார். சிவனுக்கும் சக்திக்குமிடையில் ஊடல் நீடித்தது.
அணுவைப் பிளந்து சக்தியைப் பெற்றோம். யதார்த்தம். சக்தியை ஒடுக்கிச் சிவத்தைத் தரிசிக்க முடியாதா? தவிப்பு. தவிப்பிலே சஞ்சலமுங் கவிந்து கொள்ளுகின்றது. சாந்தி மார்க்க நிறுவகரின் நினைவும் நடுவில்.
படைக்கப்பட்ட பொழுது பூமி நடுங்கிற்று.
இறைவன் மலைகளைப் படைத்து வைத்து அதன் நடுக்கத்தைப் போக்கினான்.
மலை பலம் மிக்கது.
இரும்பு மலையைப் பிளக்கும்.
இரும்பு மலையிலும் பலம் மிக்கது.
தீ இரும்பை உருக்க வல்லது.
தீ இரும்பிலும் பலம் மிக்கது.
நீர் தீயை அவிக்க வல்லது.
நீர் தீயினும் பலம்மிக்கது.
காற்று நீரின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
காற்று நீரிலும் பலம்மிக்கது.
காற்றிலும் பலம் மிக்கது?
அந்த ஏகாந்த வெளியிலே அவன் நிற்கின்றான். அவன் வயிற்றிலே பசியில்லை. நெஞ்சிலே உரம் இல்லை. மூளையிலே சுறுசுறுப்பில்லை. அவன் மகா சாமானியன். சௌகரியத்திற்காக எஸ்.பொ. என்று அழைக்கப்படுவனுங்கூட. தத்துவக் கடைசல் அவன் நோக்கமும் அல்ல. எல்லாமே இற்றுவிட்ட சுகநிலை. காற்று வாலைக் குமரியின் பட்டுடலின் மிருதுத் தயையுடன் தழுவுகின்றது. தவ நிலை என்றும் கூறலாம். அந்தக் காற்றிலே கீதாசிரியனின் புல்லாங்குழல் இசை மிதந்து வராதா என்ற தாகத்தினை மட்டும் அந்தத் தவம் விழுங்கவில்லை.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.