விபரமானவர்களை விட விசுவாசமானவர்களைத்தான் வேலைக்கு சேர்க்க வேண்டும். அதிலும் முக்கிமாக வீட்டில் சமையல் வேலை செய்பவர்களையும், கார் ஓட்டுனர்களையும் விசாரித்துத்தான் சேர்க்க வேண்டும் என்பது அப்பா ரகுவரனிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.
விசுவாசமானவர்களை எப்படிக்கண்டு பிடிப்பது? என பல வகையான யோசனையில், சில யோசனைகள் எனக்குக்கை கொடுத்தன. உடன் பிறப்பாகவே இருந்தாலும் எதிரி போல் நடந்து கொள்வது, எதிரான செயல்களைச்செய்வது உண்டு. அவர்களோடு நாம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் எங்கேயோ இருந்து வந்த ஒரு மனிதன் நாம் கொடுக்கும் வேலைகளைச்செய்வதோடு, பணிவோடும், சூழ்ச்சி இல்லாமலும் வேலை செய்வதைக்கண்டு திரும்பவும் வேலைக்கு வரச்சொல்கிறோம்.
உள்ளூரிலிருந்து வேலைக்கு வந்த ஒருவர் நான்கு நாட்கள் செய்த வேலையை இரண்டு நாட்களில் மற்றவர் செய்யும் போது பணம் மிச்சம், நாள் மிச்சம் என கணக்குப்போட்டு தொடர்ந்து, விரைந்து அதே சமயம் நன்றாக வேலை செய்பவர்களையே வேலையில் வைத்துக்கொள்கிறோம். விபரம், ஒழுக்கம், விசுவாசம் இவை சேர்ந்திருந்தால் சிறப்புதான்.
விபரமானவர்களை விட விசுவாசத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று அப்பா கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொண்டாலும், விபரத்தோடு சேர்ந்த விசுவாசமே எனக்கு சரியெனப்பட்டதால் அப்படிப்பட்டவர்களை வேலைக்கு வைத்துக்கொண்டேன்.
“நந்தினி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குங்கிறதை விட உன்னை நல்லாப்பார்த்துக்கனம்ங்கிற அக்கரை தான் அதிகமா இருக்கு….”
“அதுக்காக எனக்கு கணவனா நீ எப்பவும் வர முடியாது. அந்தக்கனவுல மட்டும் மிதந்தராதே… என்னோட அப்பா என்னையும், உன்னையும் சேர்த்தே கொன்னு போட்டுருவார். அவருக்கு சமமான வசதியான மாப்பிள்ளை முக்கியம். திருப்பூர்ல ஆயிரங்கோடி ஏற்றுமதி நிறுவன சொத்துக்கு நான் மட்டுமே சொந்தமானவள். என்னை நீ பார்த்துட்டே இருக்கனம், எனக்கு நல்லதும் செய்னம்னா ஒரு வழி இருக்கு..”
“என்ன வழி? சொல்லு….சொல்லு….சீக்கிரமா சொல்லு….”
“என்னோட கார் டிரைவரா வேணும்னா வந்திடு….”
“தேங்க்யூ நந்தினி….” என்று சம்மதித்தவனை விசுவாசமானவனாக தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.
பத்து வருடமாக என்னையும், என்னுடைய பென்ஸ் காரையும் பத்திரமாகப்பார்த்துக்கொள்கிறான், மிகுந்த ஒழுக்கத்துடனும் நடந்து கொள்கிறான் வெள்ளந்தியான சிவு.
“வேணும்னா ஒரு பொண்ணப்பார்த்து கல்யாணம் பண்ணிக்க” காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பேச்சைத்தொடங்கினேன்.
“சொந்தமா ஒரு வீடு கூட இல்லை. எனக்கெல்லாம் யாரு பொண்ணுக்கொடுப்பா….?”
“நா வேணும்னா வீடு கொடுத்திடறேன். கல்யாண செலவையும் நானே பார்த்துக்கறேன். என்னை ஒரு தலையா காதலிச்ச நீ, கல்யாணம் பண்ண முடியலைங்கற ஏக்கத்துல பிரம்மச்சாரியா இருக்க வேண்டாம். அப்புறம் தேவையில்லாம மனசுல என்னை மனைவியா நெனைச்சு வாழத்தோணும். அது ரொம்ப, ரொம்ப ஆபத்து. ஒரு நாள் இல்லேன்னாலும் ஒருநாள் எனக்கு பிரச்சினை பண்ணத்தோணும். உனக்காக பண்ணாட்டியும், எனக்காகவாது பண்ணிக்க…” என்றேன்.
“நீ சொல்லறது சரிதான். அப்பப்ப மனசால உன்னை மனைவியா நெனைச்சு சந்தோசப்பட்டுக்குவேன். வாழ்ந்தும் இருக்கேன். அங்கே உன்னோட அப்பாவோட எதிர்ப்பு கொஞ்சங்கூட நமக்கு இருந்ததில்லை. நம்மைப்பார்த்து சிரிச்சிட்டுத்தான் போவாரு…”
“குழந்தைகள் இருக்கா…?”
“ஆமா…. பையன் ஒன்னு, பொண்ணு ஒன்னு….”
“ச்சீ…. இதச்சொல்ல உனக்கு வெட்கமா இல்லே…? நீ இது வரைக்கும் போயிருப்பேன்னு நானே யோசிச்சது சரியா இருக்கு பார்த்தியா...? இதுக்குத்தான் நிஜமா ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக்கோணும்னு சொல்லறேன்…”
“சாரி நந்தினி. உன் கூட கற்பனைல குழந்தை பெத்துக்கிற அளவுக்கு வாழ்ந்ததுக்கு என்னை மன்னிச்சுடு. சரி, வீட்ல சொல்லி பொண்ணுப்பார்க்கச்சொல்லறேன். இனி மேல் கற்பனைல கூட உன்னை முதலாளியா, ஒரு நண்பியா மட்டும் தான் நெனைப்பேன், மனைவியா நெனைக்க மாட்டேன், சரியா…?” என்றான் சிபு.
வேலைக்காரங்க மட்டும் நமக்கு விசுவாசமா இருக்கனம்னு நெனைக்கிறதோட, அவங்களுக்கு நாமும் விசுவாசமா இருக்க வேண்டாமா…? என நினைப்பேன். எல்லாமே பண்ட மாற்றுதான். விசுவாசத்தை அவங்க நம்ம கிட்ட காட்டறதே திருப்பி விசுவாத்த நம்ம கிட்ட இருந்து வாங்கிக்கிறதுக்குத்தான்கிற ரகசியத்த நாங்கண்டு பிடிச்சதுனால பத்துப்பேரோட ஆரம்பிச்ச என்னோட எக்ஸ்போர்ட் கம்பெனில இப்ப பத்தாயிரம் பேர் வேலை பார்க்கிறாங்க.
விசுவாசமானவங்களோட தான் மனசுல இருக்கறதையும் பேச முடியும். என்னோட கம்பெனில வேலை செய்யற அத்தனை பேருக்கும் என்னோட மனசுல என்ன இருக்குன்னு அவங்களுக்குத்தெரியும். அவங்க மனசுல இருக்கிறது எனக்கும் தெரியும். நான் இப்பெல்லாம் ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ன்னு விளம்பரம் கொடுக்கிறதில்லை. ‘விசுவாசிகள் தேவை’ ன்னுதான் கொடுக்கறேன்.