வள்ளி வள்ளி என வந்தான்..!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 16, 2024
பார்வையிட்டோர்: 4,837 
 
 

நம்ம பண்ணின பாவமோ புண்ணியமோ தெரியலை., தினமும் எவனோ ஒருத்தன் வந்து வகையா மாட்டிக்கறான். நமக்கு ஞானம் கொடுக்க..!

‘நானேயோ தவஞ் செய்தேன் சிவாய நம எனப்பெற்றேன்
தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்குஞ்சிவபெருமான்
தானே வந்து, எனதுள்ளம் புகுந்து அடியேற்கு அருள் செய்தான்’

என்பது போல, என்னை நாடி தானே ஒவ்வொருவரும் தகவல் தரவே வருகிறார்கள்!. சரி, கதைக்கு வருவோம்…

மூன்றாம் பிறையில் ஸ்ரீதேவி ஒரு குட்டி நாயை ‘சுப்ரமணி சுப்ரமணி’ன்னு கொஞ்சினா மாதிரி எங்க தெருவில் ஒரு குட்டிப் பூனை. அதுக்கு என்ன பேர் வைக்கலாம்?! ‘வள்ளி’னே வைப்போமே!? அதை சில வீடுகள் தள்ளி இருப்பவர், அன்பாக் கொஞ்சுவார். எல்லாரும் பார்த்திருக்கிறோம்.

‘நீங்க கேட்கலாம். நாய் சுப்ரமணி சரி!. பூனை எப்படி வள்ளியாகும்னு?!’

இது மாதிரி கேள்வியெல்லாம் பாலு மகேந்திரா சார் கிட்டதான் கேட்கணும்.

புருஷனும் பொண்டாட்டியும் நாயும் பூனையுமா நாட்டில சில இடங்களில் இருப்பதில்லை?!. அப்படிப் பார்த்தா நாய் சுப்ரமணினா பூனை வள்ளிதானே?! அதுனாலதான் அந்தப் பூனைக்கு வள்ளினு நாமகர்ணம் சூட்டினேன். இப்ப, பிரச்சனை பெயரில் இல்லை..!

ஒரு படத்தில், நாய்க்கு ‘சீசர்னு’ பேர் வச்சிருக்கேன்னதும், நாகேஷ் கேட்பார் ‘பேர் வச்சயே! சோறு வச்சயா?!’ ன்னு. நெறைய பேருக்கு நாயும் பூனையும் பிடிக்கும். ஆனா, அதுக்கும் பசிக்குமேன்னு நினைக்கத்தான் மாட்டாங்க.

ஏன் சிலர் தெரு நாய்களுக்குச் சோறுகூட வைப்பதில்லை தெரியுமா?! அவையும் சும்மா இருக்காது. நம்ம வீட்டுச் செருப்பைக் கவ்வீட்டுப்போய் நாலு வீடு தள்ளி, நமக்கு ஆகாதவன் வீட்டுல போட்ரும்.. அதான்.

அந்தப் பூனை என்னைக்குச் சோறு தின்னதோ தெரியலை. தெருவிலிருந்த அப்பார்ட்மெண்டின் டிரான்ஸ்பார்மரில் எதையோ பசியில பிடிக்கத் தாவி, ‘ஷாட்டாகி’ பொத்துனு கீழ விழுந்து பரலோகம் போய்ச்சேர்ந்துடுச்சு!

ஊரே கூடீட்டுது! ஊர்வலம் நடத்தப்போறா மாதிரி. காரணம் கருணை இல்லை!! கரண்ட் இல்லை!! அதான்

அந்த அபிமானி, ‘செத்த பூனையை அள்ளிக் கொண்டுபோய் அந்தப் பக்கம் போடு!’ என்று தன் வேலைக்காரனை விளித்தார்.

வேலைக்காரரோ விழித்தார். ‘பூனையைச் சாகடிச்சாத்தான் பாவம்., செத்த பூனையை குப்பையில் போட்டால் என்ன பாவம்?!’ என்றார் அபிமானி.

வள்ளி மீதான வாஞ்சை அந்த தெரு முழுக்க ஒரு ஃபேன் கூட ஓட முடியாதபடி செஞ்சு, செத்துப்போனதுக்காகக் கோபமாக மாறியது. இத்தனை நாள் அதுக்குப் ஃபேனா இருந்தோர் கூட இப்படி மாறுவர்னு யாரும் நினைக்கலை!

‘பக்கத்துல போடாதீங்க, நாறுமே..?’ என்றபோது,

அபிமானி பதில் சொன்னார்… ‘கரண்ட்ல அடிபட்டுச் செத்தா நாத்தம் வராதுன்னு!’

அது வருமோ வராதோ தெரியலை..! ஆனா, ஒண்ணு தெரிஞ்சது! எலக்ரிக் கிரிமேஷன் இந்த ஞானத்தில்தான் உருவாக்கப்பட்டதோ என்னமோ?!

மனுஷனாகட்டும், விலங்காகட்டும் உபத்திரம் பண்னாம இருக்கறவரைக்கும்தான் ஊருக்குள்மரியாதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *