கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 2,865 
 
 

“ஏண்டி, வனிதா…இப்போ வந்திருக்க இந்த போட்டோவுல இருக்க பையன் உனக்கு பொருத்தமா இருப்பான்னு நானும் அப்பாவும் நினைக்கிறோம்…ஆனா, நீ என்னடன்னா இதை பாக்கக்கூட மாட்டேன்னு அடாவடி அடிக்கிறயே?”  அம்மாவின் குரலில் ஆதங்கம், எரிச்சல், கோபம் என்று உணர்ச்சிகள் சேர்ந்தே ஒலித்தது வனிதாவுக்கு புரிந்தது.

வனிதாவின் பதினேழாம் வயதில் அவள் இருதயம் மிக பலவீனமாகி உயிர் போகும் ஆபத்து ஏற்பட்டது. “ஏதோ ஒரு புண்ணியவதி உனக்கு இருதயத்தை தானமா கொடுத்தா…இல்லேன்னா நீ புழைச்சிருப்பியா?” அப்பாவும் கலந்துகொண்டார். 

வனிதாவாக்கு இப்போது வயது இருபத்தி எட்டு.  ஐ.டி.யில் வேலை, ‘கை நிறைய சம்பளம்’ (எவ்வளவு என்று நான் எழுதுவது அநாகரீகம்), பார்ப்பதற்கு ‘லட்சணமாக’ (அழகு, கவர்ச்சி, என்றெல்லாம் சொல்வதும் சற்று அநாகரீகம்) இருப்பாள், ரொம்ப சோஷியலாக பழகுவாள், சமையல் செய்யப் பிடிக்காது, டெஸ்டாரண்டில் சாப்பிட பிடிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மியூசிக் என்றால் உயிர், நெட்ஃப்ளிக்ஸில் சீரியலாக வரும் ஹிந்தி படைப்புகள் பார்ப்பது ஒரு டைம்பாஸ்…

“அம்மா, நீ எவ்ளோ சொன்னாலும், எத்தனை போட்டோ காட்டினாலும், எனக்கு கல்யாணம் வேண்டாம்…” வனிதாவின் பிடிவாதக் குரல். 

அப்பா குறுக்கிட்டு பேசினார்.  “சரி…போட்டோவும் வேணாம், நாங்க பாக்கற பையனும் வேணாம்…நீயே உனக்கு பிடிச்ச பையனை லவ் பண்ணு வனிதா…எங்களுக்கு சம்மதம்”

“என்னங்க இது…நான் சொல்ல நினைச்சதை நீங்க சொல்லிட்டீங்களே…” அம்மா.

“நம்ம 43 வருஷ தாம்பத்திய வாழ்க்கையில எவ்ளோ ஒத்துமை பாத்தியா?” அப்பா.

வனிதா மனசுக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள். பெற்றோரிடையே எத்தனையோ முறை நடந்த காரசாரமான விவாதங்களை பார்த்தும் கேட்டும் இருக்கிறாள். இப்போது தன் கல்யாண விஷயத்தில் அவர்கள் ஒரே கட்சி.  இது வீட்டு அரசியல். இங்கேயும் வசதியானபோது கட்சி மாற்றம் நடக்கிறது.

“இந்த வனிதா லவ் பண்றதா!? என்ன விளையாட்டா? எப்படி முடியும்?” வனிதா.

“ஏன் முடியாது?”  பெற்றோர் ஒரு கோரஸ் குரலில் கூவினர்கள். பிறகு, “உன் பிரண்ட்ஸ் எத்தனையோ பேர் லவ் பண்ணிதானே கல்யாணம் பண்ணிகிட்டாங்க…” அம்மா பெரிய பாயிண்ட் சொன்னாள்.  

“நீ வக்கீலா போயிருக்க வேண்டியவ…” அப்பா.

“அவசர அவசரமா உங்களுக்கு என்னை கல்யாணம் செஞ்சு வைச்சிட்டாங்களே…அப்புறம் எப்படி நான் வக்கீலுக்கு படிக்கிறது…” இந்த அம்மாவின் பதிலடி அவர்களுக்கிடையே ஒரு விவாதமாக விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டியது…ஆனால், அது தள்ளிப்போடப்பட்டது.  இப்போது வனிதா லவ் பண்ணுவது பற்றியல்லவா பேச்சு.

“லவ், ரொமான்ஸ் இதெல்லாம் இதயத்தைப் பொறுத்த மேட்டர்னு நீங்க கதையில, சினிமாவுல, பாட்டுல, கவிதையில, இலக்கியத்துல…இன்னும் எத்தனையோ விதத்துல தெரிஞ்சுகிட்டு இருப்பிங்க. அதனாலே…”

“அதனாலே…” எதிர் தரப்பின் கோரஸ்.

“எனக்கு இதயம் கொடுத்த பொண்ணோட வாழ்க்கையில நடந்த காதல் விவரம் நமக்கு தெரியாது இல்லையா?”

“அதனாலே…” மீண்டும் அதே கோரஸ்.

வனிதா தொடர்ந்தாள்.

“எனக்குள்ளே இருக்கிறது இரவல் இதயம்.  இதுக்கு லவ் பண்ணபிடிக்கலை…இது என் தப்பில்லை. இனிமேலாவது ‘லவ் பண்ணு வனிதா’ அப்படின்னு சொல்லவேணாம்.”

இன்றைய கேஸ் முடிந்தது.  நாளை பார்ப்போம்.

பிறப்பு: உத்திரன்மேரூர், தமிழ்நாடு வசிப்பு: வாஷிங்டன் டி.சி. அருகில் விழுப்புரத்தில் உயர்நிலைப்பள்ளி முடித்துவிட்டு, சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை, முதுகலை பட்டங்கள் பெற்றபின், அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் வேதியிலில்முனைவர் பட்டம் பெற்றார். ஐந்து ஆண்டுகள் வேதியியலில் ஆராய்ச்சி முடிந்தபின், பால்டிமோர் வட்டாரத்தில்கல்லூரியிலும் பல்கலைக் கழகத்திலும் வேதியியல் பேராசிரியராக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன்வேலை ஓய்வு பெற்றார். வாஷிங்டன் - பால்டிமோர் வட்டாரத் தமிழச்சங்கத்தின் பொறுப்புகள் ஏற்று, பிறகு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *