மொதல்ல அந்த பால்காரன் கணக்கைத் தீர்க்கணும்!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 3,077 
 
 

‘பென்சன் கிரிடிட் ஆயிடுச்சு…! மொதல்ல அந்தப் பால்காரன் கணக்கை ஒழிக்கணும்’ என்று மனசுக்குள் கணக்குப் போட்டான் பாஸ்கரன். மனைவி மல்லிகாவைப் பார்த்துச் சொன்னான். ’மல்லி, பால்காரனுக்கு இந்த மாசம் பால், தயிருக்கு எவ்வளவு வருது?! சொல்!’ என்றான்.

அவள் சுறுசுறுப்பாக கால்க்குலேட்டரில் கணக்குப் போட ஆரம்பித்தாள்

‘இந்த மாசம் முப்பத்து ஓர்நாள்…! இடையில நாலுநாள் ஊருக்குப் போயிட்டோம்! வெங்கி வீட்டு கல்யாணத்துக்கு! நாலு நாளைக் கழிக்கணும்…! முப்பது ஒண்ணுல நாலு போச்சுன்னா…’ கால்க்குலேட்டரைத் தட்ட… ‘க்ளுக்’ கென்று சிரித்தான் பாஸ்கரன்.

‘என்ன சிரிப்பு வேண்டி கிடக்கு?’ எரிந்து விழுந்தாள் மல்லிகா.

‘பால்காரன் கணக்குக்கு பால்பாயின்ட் பேனா போறாதோ…? கால்க்குலேட்டரும்.. சரி பார்க்க காகிதமும் வேணுமாக்கும்?!’ என்றான் பரிகாசமாக!

‘சும்மாவா…? பால்கணக்கில்லே…?! வீட்டு நிவாகியாக்கும் நான்!. என கணக்குத் தப்பானா எல்லாம் தப்பாப் போயிடும்!’

‘சரிசரி… அமவுண்டைச் சொல்ல…!’

ஜீபே பண்ன செல்லை எடுத்தான் பாஸ்கர். அமவுண்ட் அடிக்கும் நேரத்தில் அவசர அவசரமாக தடுத்த மல்லிகா, ‘அனுப்பீடாதீங்க.. கணக்கு தப்பாயிடுச்சு!’

‘என்ன தப்பு?’ எரிச்சல் வந்தது பாஸ்கரனுக்கு

‘டெலிவரி சார்ஜஸ் சேர்த்தலை…! ஒருநாள் அரைலிடார் அதிகம் இன்னொருநாள் தயிர் வாங்கலை!’ அமவுண்ட் சொல்லத் தடுமாறினாள்.

‘எங்க அம்மா மாதிரி வராது!’ என்றான். ஏன் சொன்னான் தெரியவில்லை!

‘என்ன பெரிய அம்மாவைக் கண்டுட்டீங்க?

‘இல்லை மாலு..! அம்மா பால் கணக்கை காலண்டர்ல கூட குறிச்சு வைக்க மாட்டா.. வாங்காத தேதிக்கு ஒரு இண்ட்டூ!! வாங்கின தேதிக்கு ஒரு வட்டம்..,. மனசிலயே கணக்குப் போடுவா… அப்போ கால்க்குலேட்டர் செல்லெல்லாம் இல்லை.. கணக்கு தப்பாது! கரெக்டா இருக்கும்! ஆனா ஒண்ணு, அவ காலத்துல நாளுக்கு நாள் வாங்கும் பாலின் அளவு மாறவே மாறது! ஒறவுக்காரங்க வந்தா பால்ல தண்ணி சேர்ப்பாளே ஒழிய, வாங்கும் அளவைக் கூட்டமாட்டாள்!’

‘அதான் கணக்கு சரியா போட்டிருக்காங்க!’ என்றாள் இளக்காரமாக மல்லி!

‘ஆனா.. அவ ஐஞ்சாங்கிளாஸ்தான் படிச்சிருந்தா.. நீ பிஎஸ்சி மாத்ஸ், ஆனால் அம்மா அஞ்சு பாஸ்… நீ பிஎஸ்சி பெயில்!’

முறைத்தாள் மல்லி!

‘எப்படிம்மா இப்படி கரெக்டா கணக்குப் போடறேன்னா, ‘கண் அளக்காததையாடா கை அளந்துடப் போகுதும்பா!’

‘ஓல்டீஸ் கோள்டுதான் மல்லீ!’ என்றான் பெருமையாக!. அம்மா புராணத்துக்கு எப்படி ஆப்பு வைப்பதுன்னு யோசிட்டிருந்த மல்லி.

‘கோல்டுன்னதும் நியாபகம் வருது, வளை வாங்கணும்… அட்சய திருதியை எப்ப வருது?’ என்றாள்.

அவன் அதிர்ந்து போய் அம்மா படத்தைக் கை எடுத்துக் கும்பிட்டான்.

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *