எப்போதோ நடந்தது. ஆனால், ரவியால் எப்போதும் மறக்கமுடியாதது.
அது நடந்தபோது அவனுக்கு வயது பதினாலு இருக்கும். தன்னுடைய கிரிக்கெட் மட்டையை முதல் நாள் இரவு மொட்டை மாடியில் வைத்துவிட்டான்; அதை எடுக்க மாடிக்கு போனான். அப்போது…
ரவி மாடிப்படி ஏறினான். கடைசி படியிலிருந்து அவன் அடுத்த மொட்டை மடியில் பார்த்த கட்சி அடி வயிற்றை புரட்டியது. அதிர்ச்சியால் உறைந்து நின்றான். கிரிக்கெட் மட்டையைக் கூட மறந்தான்.
ஆறு வாடகை வீடுகள் நீண்ட வரிசையில் இருந்தன. முதல் நான்கு வீடுகளுக்கு மேல் ஒரு மொட்டை மாடி. அடுத்து இரண்டுக்கு இன்னொரு மொட்டை மாடி; இந்த இரண்டில் ஒன்றுதான் ரவியின் குடும்பத்தார் இருப்பது. இரண்டு மொட்டை மாடிகள் எதிர்த்தாற் போல் இருந்தன. இரண்டு மாடி அமைப்புகளுக்கும் இடையே ஒரு கிணறு; கிணற்றை ஒட்டி குளியலறை. தனியாக இருந்த இரண்டு வீட்டாரும் குளிப்பதும் அந்த குளியலறையில்தான். வீட்டு முதலாளி ஒரு கஞ்சன். முக்கிய வசதிகள் செய்து கொடுக்கக்கூட பைசா எண்ணுபவன். குளியலறைக்கு மேல் ஒரு தகடு கூரைகூட போடாதவன்.
குளியலறையிலிருந்து அண்ணாந்து பார்த்தல் ஆகாயம் தெரியும். குளிக்கும்போது மழை வந்தால் கிணத்துத் தண்ணி மிஞ்சும்.
கிணற்றை நோக்கி நின்று மொட்டை மாடி மேலிருந்து பார்த்தால் குளிப்பது யார் என்று தெரியும்… நான்கு வீட்டு மாடியிலிருந்து ஓர் ஆண் கீழே குளியலறையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரையே பார்த்து எதிர் மாடியில் உறைந்து நின்ற ரவியை அவர் பார்க்கவில்லை. சில நிமிடங்களில் அவர் உருவம் மறைந்தது. ரவியை பார்த்திருக்க வேண்டும் அந்த மனிதர் – முற்பகுதி நான்கு வீட்டுப் பகுதி ஒன்றில் வசித்த அறுபத்தி இரண்டு வயதான கண்ணன். அடப்பாவி…மனைவி, ஐந்து குழந்தைகளுடன் அவர் குடும்பம். கண்ணனுடைய மனம் முழுக்க அப்பட்டமான, அழுக்கான சபலம். அழுகின எண்ணங்கள்.
ரவி விரைந்து மாடியிலிருந்து இறங்கினான். குளியலறையிருந்து அவனுடைய பத்தொன்பது வயது அக்கா வெளியே வந்தாள். மொட்டை மாடியிலிருந்து கண்ணன் அவள் குளிப்பதை ரசித்தருப்பார் என்ற சந்தேகம் கூட அவளுக்கு ஏற்படவில்லை. கீழ்ப்படியில் அப்படியே சரிந்து உட்கார்ந்தான். அன்று அவனுடைய அக்கா…அதற்கு முன்னால், அதற்கும் முன்னால்… எத்தனை முறையோ…அம்மா, தங்கைகள்…ஒட்டியிருக்கும் அடுத்த வீட்டு பெண்கள்…ரவியின் முகம் கடும் கோபத்தால் சிவந்தது. உடல் நடுங்கியது.
சுமார் இருபது நாட்களுக்குப் பிறகு…
கண்ணன் ஒரு மருத்துவ மனையில் அதிக நினைவின்றி படுத்துக் கிடந்தார். அவருடைய கண்கள் ஓரளவு தெரியும்படி தலையில் பெரிய கட்டு. ‘இவருக்கு பின் தலையில் மிக பலமான அடி…குணமாக ஏழு மாசமாவது ஆகும்…இனிமே கண் பார்வை திரும்பறது சந்தேகம்தான்.’ டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். பாவ புண்ணிய படி விதி அமையும் என்பதை நம்பலாமா?
“அப்பா, எனக்கு புதுசா ஒரு கிரிக்கெட் பேட் வாங்கணும். என்னோட பழைய பேட் யாரோ திருடிட்டாங்க…” ரவி மனு போட்டான். அந்த ரத்தக்கறை படிந்த பழைய பேட் என்னவாயிற்று என்பது நமக்கும் ரவிக்கும் இடையே உள்ள ரகசியம்.
அவர்கள் குளியலறையின் மேலே புது தகரக் கூரை பளபளத்தது.