சங்கவிக்கு தன் அம்மாவைப்போலவே தீபாவளிக்கு முறுக்கு சுட வேண்டும் என்கிற ஆசை மேலோங்கி மனதுள் தீவிரப்புயலாக மாறியது. தன் அம்மா சீதனமாகக்கொடுத்த முறுக்கு புடியிலேயே சுட வேண்டும் எனும் பிடிவாதமும் அதிகரிக்க தேடினாள், தேடினாள் காலையிலிருந்து மாலை வரை தேடினாள்.
“என்னங்க கொஞ்சம் ஒதவிக்கு வாரீங்களா? இந்த ஊட்டுக்கு குடி வந்து பத்து வருசமாச்சு. ஊடு புண்ணியாச்சினைக்கு எங்கம்மா எனக்கு நம்ம வள்ளி விலாஸ் பாத்திரக்கடைல வேணும்ங்கற பாத்திரம் வாங்கிக்கொண்டு வந்து சீதனமா கொடுத்தாங்களே…. அதுல முறுக்குப்புடியும் இருந்துச்சுங்க. இப்ப தேடித்தேடிப்பார்த்தும் கிடைக்கலே. நீங்க ஏதாச்சும் பாத்தீங்களா?” தன் கணவன் சரவணனிடம் கேட்டாள்.
“ஆமா. எனற தங்கச்சிக்கு உனக்குத்தெரியாம எடுத்துக்கொண்டு போயி கொடுத்துட்டு வந்துட்டேன்” என கோபமாக கேட்ட கணவனை முறைத்துப்பார்த்து விட்டு, “சும்மா கேட்டதுக்கு சுர்ருனு கோபம் பொத்துட்டு வருது. பாத்தீங்களான்னு தான் தானே கேட்டேன்?” என்று சொல்லி விட்டு இரண்டாவது முறையும் தேட ஆரம்பித்தாள்.
“இத பாரு சங்கவி சும்மா காலேஜ் வரைக்கும் போயி படிச்சா மட்டும் போதாது. அடிப்படை அறிவு கொஞ்சமாச்சும் இருந்தாத்தான் பொளைக்கவே முடியும். அந்த முறுக்குப்புடிலியேதான் முறுக்குச்சுடோணுமா? இல்லே சுடோணுமான்னு கேக்கறேன். அடுத்த வீதில பாத்திரக்கடை இருக்குது. ஒரு முன்னூறு ருபாயக்கொடுத்து வாங்கீட்டு வந்தா புதுசா வந்திருக்கிற டிசைன்ல முறுக்கு சுட்டுப்போடலாம். முறுக்குப்புடிய நீ தேடிட்டு மத்தியான சாப்பாடே செய்ய மறந்துட்டே. இப்ப நானும் பொண்ணும், பையனும் போயி கடைல சாப்பிட்டு உனக்கும் வாங்கீட்டு வந்திருக்கோம்” என பார்சலை நீட்டியதும், கவருக்கு உள்ளே கைவிட்டு என்ன உணவு எனப்பார்க்காமல் பில்லை எடுத்துப்படித்ததும், “என்னங்க இது? உங்களுக்கு மட்டும் படிச்ச அறிவு எங்க போச்சு…? ஆயிரம் ரூபாய் பில் போட்டிருக்கு….? முறுக்குப்புடிய நீங்க தேடி எடுத்துக்கொடுக்காட்டி பரவால்ல. மொதல்ல போயி இந்த தீபாவளி லீவுல கம்முனு ரெஸ்ட் எடுங்க. நாலாயரத்துக்கு பட்டாசு வாங்கி வெச்சிருக்குது. பக்கத்து ஊட்டுக்காரங்க வெடிக்கிறதப்பாத்துட்டு நம்ம கழுதைகளும் ஒன்னம் வாங்குலாம்னு கேட்டுத்தொல்லை பண்ணுங்க. நீங்க கேட்டறாதீங்க. முறுக்கு புடிக்கு முன்னூறு கொடுக்கப்படாதுன்னு நாஞ்சிரமப்படறேன். நீங்க பணத்த தண்ணியாக்கரைக்கறீங்க. நா ஒருத்தி இல்லீன்னா குடும்பம் என்னாயிருக்கும்னு தெரியுமா…?” என கேட்டவள் டைனிங் டேபில் மேல் அதன் இருக்கையை எடுத்து வைத்து அதன் மீது ஏறி லாப்டில் ஒவ்வொரு பாத்திரமாகத்தேடினாள்.
காலையிலிருந்து சாப்பிடாமல், கணவன் வாங்கி வந்த உணவையும் சாப்பிட மறந்தவளாய் மாடி வீடு, கீழ் வீடு என தேடியதில் உடல் சோர்வாகி கண்கள் பசியால் பூத்து போக மயங்கி கீழே சரிந்தாள்.
மருத்துவ மனையில் கண்விழித்த போது சங்கவி தன் கணவன் சரவணனிடம் கேட்ட முதல் கேள்வி ‘ஆஸ்பத்திரி பில் எவ்வளவு?’ என்பது தான். ‘மூன்று லட்சம்…’ என்றதும் மறுபடியும் மயக்க நிலைக்குப்போனாள்!