கி.பி 1560 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாநகரையும் சுற்றியிருந்த சிறு கிராமங்களையும் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தனர் அரசர் செவப்பாவும் அரசி மூர்த்திமாம்பாவும். அரசரை மிகவும் நேசித்த மக்கள், அரசருக்கு வேண்டிய அறிவுரைகளை தவறாமல் அளித்து வந்த புத்தி கூர்மை வாய்ந்த மந்திரிகள், போருக்கு அழைக்காத அண்டை மாநில அரசர்கள் என்று எல்லா வகையிலும் நிறை இருந்தாலும் அரச தம்பதிகளுக்கு பெரும் குறை ஒன்று இருந்தது. பல ஆண்டுகளாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தங்கள் பாரம்பரியத்தைத் தொடரவும், அரசாங்கத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் ஒரு வாரிசு இல்லையே என்று அவர்கள் ஏங்காத நாட்கள் இல்லை. அரண்மனையில் இரு பிஞ்சு பாதங்கள் ஓடி விளையாடாதா என்று அவர்கள் கண்ட கனவு வெறும் கனவாகவே இருந்து மறைந்து விடும் போலிருந்தது.
விரக்தியின் உச்ச கட்டத்தில் தம்பதியினர் தங்கள் குறையை தெய்வத்திடம் முறையிட தீர்மானம் செய்தனர். சிவ பெருமானின் மகனான முருகனுக்கு ஒரு பெரிய பூஜை செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். பூசாரிகள், இசைக்கலைஞர்கள், மந்திரிகள் மற்றும் பொது மக்கள் என்று எல்லோரும் ஒரு நல் நாளில் திரள அரண்மனை விழாக் கோலம் பூண்டது. மாலை சூரியனின் தங்க ஒளி அரண்மனையின் மீது வீச, அரசர் செவப்பாவும் அரசி மூர்த்திமாம்பாவும் வேல் ஏந்திய முருகனின் விக்கிரகத்தின் முன் மண்டியிட்டனர். தூபத்தின் வாசனை மற்றும் மந்திரங்களின் தாள உச்சரிப்புகளுக்கு மத்தியில், முகங்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய, அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை அளிக்குமாறு முருகனிடம் மனம் உருகி வேண்டினர்.
இரவு கடந்தது. பொழுது விடிந்து வானில் இளஞ்சிவப்பு படர ஆரம்பிக்கையில் அரண்மனையில் ஒரு அசாதாரண நிகழ்வு நடந்தது. அரசி மூர்த்திமாம்பாவின் திடீர் அலறல் அரண்மனை மண்டபங்களில் எதிரொலித்தது. காவலர்களும் அரசு ஊழியர்களும் அரசர் செவப்பாவும் குரல் வந்த திசை நோக்கி ஓடினார்கள். அரண்மனை நுழைவாயிலில் அமர்ந்திருந்த அரசியின் அருகில் ஒரு சிறிய மரப் பேழை. தங்க இழைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட பட்டுத் துணியில் சுற்றப்பட்ட பிறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகாத குழந்தை ஒன்று பேழையில் சிணுங்கிக் கொண்டு கையையும் காலையும் உதைத்துக் கொண்டிருந்தது.
குழந்தையின் பால் வடியும் முகத்தைப் பார்த்த அரச தம்பதிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களின் உருக்கமான பிரார்த்தனைக்கு முருகப் பெருமான் அளித்த பதிலா இது? அவர்களின் கரங்கள் வாஞ்சையுடன் குழந்தையை அள்ளிக் கொள்ள அவர்களின் மனங்கள் முருகப் பெருமானுக்கு உருக்கத்துடன் நன்றி செலுத்தின.
இதற்கிடையில், சென்னை மாநகரில், கி.பி 2145ல் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் இருவருக்கு இடையே நடந்த ஒரு உரையாடல்:
“நான் செய்ய வேண்டும் என்று நினைத்ததை செய்து விட்டேன், ஸ்ரேயா. தீர யோசித்த பிறகே செய்தேன்.”
“அப்படியா, ரவி? நிஜமாகத் தான் சொல்கிறீர்களா?”
“ஆமாம். மிகச் சிறந்த, துல்லியமாக வேலை செய்யும் கால இயந்திரங்கள் இப்போது வந்து விட்டன. அவற்றால் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல முடியும். நான் விரும்பியதை செய்யாமல் இருப்பதற்கு இனி மேல் எந்த சாக்கும் என்னால் சொல்ல முடியாது.”
“நான்… எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை… அவன் உங்கள் மகன், பிறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. அவனை எங்கு விட்டு வந்தீர்கள்?”
“1560-ம் ஆண்டில். என் மகன் இப்போது பத்திரமாகவே இருக்கிறான். குழந்தை இல்லாத அரச தம்பதிகள் அவன் மீது அன்பைப் பொழிந்து வளர்க்கிறார்கள்.”
“இருந்தாலும் ரவி, இது நீங்கள் செய்த மிகப் பெரிய தியாகம்!”
“அறிவியல் இந்த தியாகத்தை வேண்டுகிறது, ஸ்ரேயா. ஒரு மனிதனின் வெற்றிக்கு பிறப்பு காரணமா அல்லது வளர்ப்பு காரணமா என்று நாம் செய்யும் ஆராய்ச்சிக்கு என்னுடைய இந்த தியாகம் பெருமளவில் உதவி செய்யும் என்று நான் நம்புகிறேன்.”