உனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு என்று லோகேஷைப் பார்த்து கேலியாக சிரித்தான் கணேஷ். காலேஜ் கேன்டினில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் நிமிர்ந்தான்.

இதுல என்ன கிறுக்குத்தனம் இருக்குடா.. நம்ம க்ளாஸ்ல பக்கத்தில இருக்கிறவங்களோட ப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கிறதில்லையா. அக்கம்பக்கம் வீடுகள்ல பழகறதில்லையா.. ட்ரெயின்ல, பஸ்ல நமக்கு அடுத்த சீட்ல உட்காரவங்களோட பேசறதில்லையா. அதுபோல என் செல்நம்பருக்கு முன்னால பின்னால இருக்கிற நம்பருக்கு கால் பண்ணி பேசி அவங்களோட ப்ரெண்ட்ஷிப் வெச்சுக்கப் போறேன் என்றபடி தன் செல்நம்பரின் முன்னால் உள்ள நம்பரை டயல் செய்தபடி நகர்ந்தான் லோகேஷ்.
சிறிது நேரத்தில் வந்தவன் சூப்பர்டா… கணேஷ். என் செல்நம்பருக்கு முன்னால் இருக்கிற செல்நம்பர் ஒரு பொண்ணோடது. புதுமையான முயற்சினு பாராட்டுனா. நாளை மறுநாள் சந்திக்கும் போது பரிசு தர்ரேனு சொல்லியிருக்கா.
என் செல் நம்பருக்கு அடுத்த நம்பர் வெச்சிருக்குற ஆளூ சரியான சிடுமூஞ்சிடா. கடுப்பா பேசி காலை கட் பண்ணிட்டான். இந்த ரெண்டு பேரும் வாட்ஸ் ஆப், சோஷியல் மீடியாவில இல்ல. ஆனாலும் ப்ரெண்ட்ஷிப்பை தொடரப் போறேண்டா என்று குதுகலித்தான் லோகேஷ்.
அடுத்த நாள் அழுது வீங்கிய முகத்துடன் போலீஸ் ஸ்டேஷனில் நின்றிருந்தான் லோகேஷ்.
எதிரே வந்த இன்ஸ்பெக்டர் மதியழகனிடம், கான்ஸ்டெபிள் கந்தசாமி, சார்.. நகைக்கடை கொள்ளை கேசுல நாம தேடுற பொண்ணுக்கு கடைசியா கால் பண்ணினவன் இவன்தான். இப்போ அந்த பெண்ணோட செல்நம்பர் நாட் ரீச்சபிள். இதோ பாருங்க சார் கால் லிஸ்ட் என்று நீட்ட வாங்கிப் பார்த்தார் மதியழகன்.
கூட்டுக் களவாணி சார். எப்படி விசாரிச்சாலும் இவனோட செல்போன் நம்பருக்கு முன்னால பின்னால இருக்குற செல்நம்பருக்கு விளையாட்டா கால் பண்ணினேன்னு கிறுக்கன் மாதிரி சொல்லிட்டே இருக்கான் என்று சலிப்புடன் பேசினார் கந்தசாமி.
அது உண்மைதான் கந்தசாமி. இவன் நேத்து என்னிடமும் பேசினான். ஏன்னா இவனோட செல்நம்பருக்கு அடுத்த நம்பர் என்னோடதுதான் என்று மதியழகன் சொல்ல போன உயிர் வந்தது போல் பெருமூச்சு விட்டான் லோகேஷ்.