முடிவில்லாத கனவு சுழல்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல் புனைவு
கதைப்பதிவு: July 4, 2024
பார்வையிட்டோர்: 2,451 
 
 

அன்புள்ள வாசகரே,

இந்த இமெயிலை ஒரு மோசடி என்று நினைத்து டெலிட் செய்து விடாதீர்கள். எனக்கு உங்கள் பணம் தேவையில்லை, உதவி தான் தேவை.

நம்முடைய தேவைக்கேற்ப விதவிதமான கனவுகளை உருவாக்கும் CAS நிறுவனத்தின் சர்வீஸை நான் பயன்படுத்தி வருகிறேன். தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன், CAS நிறுவனத்தின் வலைக்குள் (createashortfilm.com) நுழைந்து, எனது கனவில் எந்த மாதிரியான குறும்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்கிறேன். CAS ஒரு குறும்படத்தை உருவாக்கி, நான் அணிந்திருக்கும் தலைக்கவசத்தின் மூலம் எனது கனவில் அந்த குறும்படத்தை காட்டுகிறது. இது ஒரு அருமையான சர்வீஸ். இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, இங்கே செல்லுங்கள் – https://www.sirukathaigal.com/அறிவியல்/தினம்-ஒரு-குறும்படம்/

இன்றிரவு என் கனவுக்கான கதையை createashortfilm.com வலைக்குள் தேர்ந்தெடுக்கும்போது, நான் இதுவரை பார்த்திராத ஒரு செக்பாக்ஸைக் (checkbox) கவனித்தேன். ‘ஒரு கனவுக்குள் இன்னொரு கனவு இருக்கலாம்’ என்று பெயரிடப்பட்ட செக்பாக்ஸ். முழுமையாக சோதிக்கப்படாத ஒரு அம்சம் அது. அதை நான் செலக்ட் செய்து இருக்கக் கூடாது. நான் சரியாக கவனிக்கவில்லை.

இப்போது, ஒரு கனவுக்குள் இன்னொரு கனவு என்று போய்க் கொண்டேயிருக்கும் முடிவில்லாத கனவுகளின் சுழலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான ஒரு கனவில் இருந்து தான் இதை எழுதுகிறேன். இதை உங்களால் படிக்க முடிகிறதா என்று தெரியவில்லை.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான். CAS நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆதரவை அழைத்து, என் நிலைமையை விளக்கி, என்னை இந்த முடிவில்லாத கனவு சுழலில் இருந்து மீட்டெடுக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள், உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

நன்றி,
நஞ்சப்பன் ஈரோடு
ஆகஸ்ட் 22, 2088

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *